உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்) 17 தட்டு வண்டியில், தகரப் பெட்டி, கரியேறிய சருவம், சுளகு, நார்ப்பெட்டி, சில பழுப்பு தாள் புத்தகங்கள், தட்டு முட்டுச் சாமான்கள், பாய், சாக்கு, ஒரு பனநார்க் கட்டில், எல்லாச் சாமான்களுடனும் ராமசாமியின் தாய் பாக்கியத்தாச்சி அமர்ந்திருக்கிறாள். ராமசாமியே வண்டியை ஓட்டிக் கொண்டு வருகிறான். வண்டி மூன்றாந் தெருவினூடே செல்கிறது. ஞாயிற்றுக் கிழமை காலை நேரம்; சிறுமியர் தலையில் எண்ணெய் வழிய மண்ணில் குந்திப் புளிய விதையாடுகின்றனர். கிழவிகள் நீர் வடியும் கண்களைச் சரித்துக் கொண்டு ஆங்காங்கு புகையிலையின் சுகத்தில் ஆழ்ந்தவராகக் குந்திக் கிடக்கின்றனர். பூவரச மரம் ஒன்று நிழல் தரும் கிளைகளால் அவர்களுக்கு ஆதரவு காட்டுகிறது. அதனடியில் இளந் தாயார் சிலர் மடியில் குழந்தைகளுடன் சாவகாசமாக வம்பளந்து கொண்டிருக்கின்றனர். ஒரு வீட்டில் ஒருத்தி குழந்தை குளிப்பாட்டுகிறாள்; புருசன் நீரூற்றுகிறான். இன்னொரு வீட்டில் அவள் அம்மியில் அரைக்க, அவன் கூரை செப்பம் செய்கிறான். இன்னோர் வேப்பமரம். அதன் அடி முண்டு அமர்ந்து சில ஆண்கள் ஏதோ பேசுகின்றனர். ஒரு பெண் பன ஓலை சீவிக் கொண்டு யாரையோ திட்டிக் கொண்டிருக்கிறாள். "பனஞ்சோலை அளத்துல மாசச்சம்பளம் பார்த்த பைய, போன்னிட்டாவ; ஆத்தாளும் மவனும் இங்க வாரா...!" "மின்ன சங்கக்காசு பிரிச்சிட்டுப் போவ வருவானே, நோட்டீசு கொண்டு குடுக்கல? தொழிலாளியல்லாம் ஒண்ணு சேரணுமின்னு சேப்பு நோட்டிசு குடுத்தான். அளத்துல சீட்டக் கிளிச்சிட்டாவ!" "பனஞ்சோல அளத்துல அதெல்லாம் பேசப்படாது. ஊரே கெடந்து வேலக்கிப் போவாம நின்னாக்கூட, பனஞ்சோல அளத்துள மூச்சுப்பரியக்கூடாது. அங்கதா போனசு, கண்ணாடி, செருப்பு, அல்லாம் குடுக்கறாவளே?... மானோம்புன்னா புள்ளயளுக்குப் பத்து ரூவா காசு குடுப்பா?" நாலைந்து பெண்கள் இவ்வாறு பேசுவது அவன் செவிகளில் விழுகிறது. வண்டியிலிருந்து கீழே குதித்து நடந்து வருகிறான். மரத்தடியில் குந்தியிருந்தவர்களிலிருந்து ஒருவன் எழுந்து அந்தப் பெண்களிடம் சென்று ராமசாமியின் காது கேட்கப் பேசுகிறான். "ஏ, பொண்டுவளா? இளவட்டம் வாரான்னு பல்ல இளிச்சிட்டுப் போயி நிக்காதிய! அவன் நோட்டீசு குடுத்தாலும் வாங்காதிய! பனஞ்சோல அளத்துல சின்ன முதலாளிய எதித்துப் பேசி மூக்கு உடபட்டு இங்க வந்திருக்கா. ஒங்க சோலியுண்டு, நீங்க உண்டுன்னிரிம்! பொறவு நாம குடிக்கிற கஞ்சில மண்வுழும்..." என்று எச்சரிக்கிறான். ராமசாமிக்கு இது புதிய அநுபவமல்ல. இருட்டுக்குள் இருப்பவன் இருட்டே பாதுகாப்பு என்று வெளிச்சத்துக்கு அஞ்சுகிறான். உப்பின் வெண்மையைப் பார்த்துக் கூசி வெளிச்சமே இல்லாத உலகுக்குள் அழுந்திவிட்டார்கள். 'வித்து மூடை'க் கங்காணி ஆறுமுகத்துக்குச் சொந்தமான வீடு அது. மண் பரிந்து, கூரை பந்தலாக நிற்கும் அந்த வீட்டுக்கு அவன் பத்து ரூபாய் 'அட்வான்சு' கொடுத்திருக்கிறான். தனது சைக்கிளை அடகாக வைத்துவிட்டு அவன் இந்தச் சரிவைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஆறுமுகத்தின் கூலியாட்களில் ஒருவனாகவே அவனும் வேலைக்குச் சேர்ந்து இருக்கிறான். உப்பளத்தில் லாரி வந்து நிற்கும் பொது, பெண்கள் சாக்கை விரித்து உப்பை நிரப்ப இவர்கள் மூட்டைகளைத் தைத்து, லாரியில் அடுக்க வேண்டும். வீட்டின் முன் சாமான்களை இறக்கிவிட்டு, மாட்டை அவிழ்த்துக் கட்டுகிறான். வண்டிச் சொந்தக்காரன் வந்ததும் அவனுக்குப் பத்து ரூபாய் கொடுக்க வேண்டும். இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரு பக்கம் இருந்த வீட்டைத் துறந்து அவனுடைய தாய் இங்கே புதிய இடத்துக்கு வந்திருக்கிறாள். அன்னக்கிளி, அழகம்மை, பேரியாச்சி என்ற தொடர்புகளையெல்லாம் விட்டுவிட்டு வேறு புதிய பழக்கங்களைக் காண இந்தக் குடியிருப்புக்கு நகர்ப்புறத்துக்கு வந்திருக்கின்றனர் அவர்கள். தாய் கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தட்டிப் பெருக்குகையில் அவன் கயிற்றையும் வாளியையும் எடுத்துக் கொண்டு தெருக் கோடியில் இருக்கும் உறைக்கிணற்றுக்கு வருகிறான். கிணற்றில் வனப்பும் வாளிப்புமாக ஒருத்தி நீரிறைத்துக் கொண்டிருக்கிறாள். சற்றுத் தள்ளி ஒரு ஆண் குளித்துக் கொண்டிருக்கிறான். "தண்ணி நல்லாயிருக்குமா?" என்று ராமசாமி கேட்கிறான். அவள் ஒரு மயக்குச் சிரிப்பை நெளிய விடுகிறாள். "வாரும் மாப்பிள? புதிசா வந்திருக்கியளா?... தண்ணி ரெண்டு டிகிரிதா...!" "சருவத்தை இப்படி வையும்..." என்று இழுத்து நீரை ஊற்றுகிறாள். ராமசாமி வாயில் விட்டுப் பார்த்துக் கரிப்பை உடனே துப்புகிறான். "எப்பிடி இருக்கு?..." அவள் சிரிக்கிறாள். "அண்ணாச்சி இதுல குளிக்கிறாரேன்னு பார்த்தே!" "பின்னென்ன சேய? வண்டித் தண்ணி அடிப்பா. அம்பது கொடம் இருக்கும். இந்தத் தாவுல எம்பது வூடு இருக்கு. அடிபிடின்னு மோதிக்கவா. அதும் இப்ப சுத்தமா பத்து நாளாச்சி! முனிசிபாலிடிக்காரனயே காணும்!" என்று குளித்துக் கொண்டிருப்பவன் தெரிவிக்கிறான். "ஆமா, இந்த ஆம்புளிய ஆரு போயிப் பாக்கா, கேக்கா? பொம்பிளயளுக்கு என்ன தெரியுது...?" "குடிக்க நீரு?" "இதா போவாங்க இன்னிக்கு. மேக்கே போனா கோயில் கேணி. தண்ணி பஷ்டாயிருக்கும். நாலு கல் போனா வண்ணாந்துறை இருக்கு, துணி தப்பி அலசிட்டு வரலாம்..." "வோட்டு வாங்கிட்டுப் போவ அல்லாம் வருவா, பொறவு ஒருத்தரும் கண்டுக்கறதில்ல. தலைவர் வூடு கட்டுறாருன்னு கச்சிக்காரங்கிட்ட ஆளுக்கு ஒரு ரூவா பிரிச்சானுவ..." என்று அந்தப் பெண் வயிற்றெரிச்சலை எடுத்துரைக்கிறாள். "நீ சும்மாருவுள்ள. இப்ப இவெ வந்திருக்கா. நாம போயித் தண்ணி வேணுன்னு அந்த ஆள 'கேரோ' செய்யிவம்!" என்று அவன் உடலைத் துடைத்துக் கொண்டு கூறுகிறான். "கிளிச்சிய. நீரு அந்தத் 'தண்ணி'யப் போட்டுட்டு ஆடுவிய!" என்று கூறிவிட்டு அவள் ஆத்திரமாகச் செல்கிறாள். அந்தக் கூட்டு வீட்டை விட்டு இங்கே விடுதலை பெற்று வந்தாற் போல் ராமசாமி உணருகிறான். பொன்னாச்சியை விரைவில் மணந்து கொண்டு இங்கே கூட்டி வந்துவிட வேண்டும் என்று நினைக்கையில் ஆனந்தமாக இருக்கிறது. தாய் புதிய வீட்டில் கல்லைக் கட்டிச் சோறு பொங்குகிறாள். மாலையில் அவன் சீவிச் சிங்காரித்துக் கொண்டு சண்முகக் கங்காணியைப் பார்க்கக் கிளம்புகிறான். தொழிலாளர் குடியிருப்புகளைத் தாண்டித் தேரியில் நடக்கிறான். ஞாயிறன்றும் வேலைக்குச் சென்ற சில தொழிலாளர் திரும்பி வருகின்றனர். பல பல உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர் அனைவரும் சாலையிலிருந்து மணலில் கால் புதைய அந்தக் காட்டில் திரும்பித்தான் நடந்து செல்ல வேண்டும். பொன்னாச்சியும் இப்படித்தான் வரவேண்டும்... ஆனால் முன் போல் குறித்த நேரத்தில் வேலைக்குச் சென்று வந்து குறித்த இடத்தில் அவனால் அவளைச் சந்திக்க முடியாது. எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு வேலைக்குப் போக வேண்டியிருக்கும். லாரி எப்போது வரும் என்பதைச் சொல்ல முடியாது. எழுபத்தைந்து கிலோ மூட்டைகளைச் சுமந்து லாரியில் அடுக்க வேண்டும்... மாசம் இருநூறு ரூபாய் தருவதாக அவர்கள் அவனை வளைக்கப் பார்த்தார்கள். அவனுடைய எதிர்ப்பாற்றலில் அவர்களுக்கு அச்சம் தோன்றியிருக்கிறது. அதுவே அவனுக்கு வெற்றி. பனஞ்சோலை அளத்திலிருந்து அவனுக்குத் தெரிந்த முகங்கள் வருவதைப் பார்க்கிறான். கைக்குழந்தையுடன் நஞ்சாயி... பண்டாரம் பிள்ளை... "என்ன அண்ணாச்சி? இங்க நிக்கிறிய?" என்று அவள் விசாரிக்கிறாள். "ஆமாம், இந்த வளவுக்கு வந்திட்டே. ஞாயித்துக்கிழம வேலையா?" "ஆமா, கொடயின்னு ஆறு நா நின்னிட்டம். இப்ப சோலியிருக்குன்னா கங்காணி, பொறவு என்னேய?..." "என்னவோ கேளுவிப் பட்டம்? நெசமா அளத்துல இப்ப சோலியெடுக்கல...?" "இல்ல அண்ணாச்சி. மீனுக்கு எரை வைக்கிறாப்பல கூட்டு இருநூறு ரூவா சம்பளமின்னா. எனக்குச் சம்சயம் தட்டிச்சி, என்ன வெலக்கி வாங்க முடியாது... இல்ல?" என்று ராமசாமி சிரிக்கிறான். அவர்கள் பிரமித்துப் போய் நிற்கின்றனர். "பொன்னாச்சி சோலிக்கு வருதா?..." என்று கேட்டு அவர்களைச் சுய உணர்வுக்குக் கொண்டு வருகிறான். "வருது, அதுந் தங்கச்சியும் கூட அறவை மில்லுக்கு இன்னிக்கு வந்திருக்கு. பாவம், அந்தப் பயலப் போலீசு வளச்சிட்டாப்பல. எரநூறு ரூவா அவுராதம் கட்டி, தலவருதா மூட்டுக் கொண்டார ஒத்தாச பண்ணினாராம். வட்டுக் கடன் வாங்கிக் குடுத்திட்டு, இப்ப அக்கா தங்கச்சி, தம்பி அல்லாம் ஞாயித்துக் கிளமயும் வேலக்கி வந்திட்டுப் போறா!" அவர்கள் சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள். பொன்னாச்சி வேலை முடிந்து போய்விட்டாளா? அவனுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அவளை அந்த வழியில் செல்லும் போது மறுநாள் அவனால் காண முடியுமோ என்னவோ? அவளுக்காக அவன் தன் வேலை, வீடு போன்ற வசதிகளைத் துறக்கவில்லை என்று கொண்டாலும், அவளுக்காக, அவளை முன்னிட்டுத்தான் மொத்தப் பேருடைய துன்பங்களையும் பகிர்ந்து கொள்வதாக நினைத்து மகிழ்ச்சி கொள்கிறான். அந்த மகிழ்ச்சியில் அப்போதே மணமேடை கூட்டியாகி விட்டாற் போலிருக்கிறது. சண்முகக் கங்காணியிடம் கூறித் தூது போகச் சொல்லலாம். ஆனால் அவனுடைய ஆத்தா அளத்தில் சோலிக்குப் போகும் பெண் என்றால் நிச்சயமாக ஒப்பமாட்டாள். வட்டுக் கடனகளைத் தீர்க்கப் பொன்னாச்சி சோலிக்குப் போகிறாள். மேலும், அந்தப் பெண்பிள்ளை... அவளைப் பற்றி ஆத்தா அறிந்தால்... அவளுடைய நேயமும் அன்புமான அந்த உரையாடல் அவனுக்கு எப்போது நினைத்தாலும் உள்ளத்தைப் பரவசமாக்குகிறது. அவனுடைய ஏதேதோ இலட்சியங்களுக்கெல்லாம் அவள் உருக்கொடுக்க வந்து வாழ்வில் குறுக்கிட்டதாக நினைக்கிறான். அதற்காக ஆத்தாவை விரோதித்துக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது. மணலில் கால்கள் புதைய அவன் சாலையை நோக்கி நடக்கிறான். தொலைவில், பொட்டலில் அழகிய சில வீடுகள் எழும்பியிருக்கின்றன. தூத்துக்குடி நகரிய எல்லைகள் அகன்று அகன்று போகின்றன. மாலை குறுகி மஞ்சளில்லாமலே கருமை அவசரமாக வருகிறது. அவன் உள்ளம் துடிக்க மறந்து போகிறது. அங்கே வருபவர்கள்... பொன்னாச்சி, இன்னும் சில சிறு பெண்கள், பையன் பச்சை, ஒரு கிழவி... பொன்னாச்சி, அவள் தான்! அதே நடை...! அவன் வழி மறிக்கச் சித்தமாகிறான். முகம் புரியாமல் படரும் இருள் திரையில் அவன் அவர்களள முன்னே செல்ல விட்டுப் பின்னே சேர்ந்து கொள்கிறான். தம்பி, தங்கச்சிகள், கிழவி... சரிதான்! ஒரு கற்கோட்டை அரண் எழுப்பியிருக்கிறாள்! அவன் உள்ளூரச் சிரித்துக் கொள்கிறான். உல்லாசமாக ஒரு பாட்டை எடுத்து விடுகிறான்.
"வேலை செய்யும் பாத்திக்காடு விளையாடும் தட்டு மேடு! கூலிவாங்கும் கிட்டங்கி கூட்டம் போடும் சாயாக்கடை... கூட்டம் போடும் சாயாக்கடை..." பச்சைப்பயல் குபீரென்று சிரிக்கிறான். "ஏலே, என்ன சிரிப்பு" என்று பொன்னாச்சி அதட்டுகிறாள். அவள் முகம் தெரியாது போனால் என்ன? அந்தக் குரலில் அமுதமல்லவோ பொங்குகிறது! மீண்டும் பாட்டு தொடருகிறது.
"போன நல்ல வருசத்தில ஏக்கம் புடிச்சிப் போனனடி..." "சீச்சீ! இந்தாளு ரொம்ப மோசம்" என்று பொன்னாச்சி மனசுக்குள் சொற்களைக் கோத்து விசிறிக் கொண்டு நடையில் வேகம் கூட்டுவது போல் பாசாங்கு செய்கிறாள். அதற்குள் பச்சை அவனை யாரென்று கண்டு கொண்டு விட்டான். "அக்கா? ராமசாமி அண்ணெ!" "தொணக்கி வாரியளா?" என்று பொன்னாச்சி கேட்கையில் உல்லாசம் களிநடம் புரிகிறது. "இதெல்லாம் ஆரு?" "இது என் தங்கச்சி பாஞ்சாலி, இவ தங்கம், அவ டெயிசி..." "எல்லா நாச்சப்ப வகையா?" "இன்னிக்கு எல்லாம் அறவை மில்லுல தா..." "சவாசு. ஒராள எடுத்துட்டு ரெண்டாளுக்கு வேலை குடுக்கா! வட்டிக்கடன் எந்தப் பக்கம் வாங்கினிய?" "ஆரிட்டயோ வாங்குறம். தலைவர் வாங்கிட்டாரு. போலீசுக்குப் பாதி, அவியளுக்குப் பாதின்னு செவந்தனி மாமன் சொல்லுறா." "மன்னாப்பு; அவிய தலவரில்ல." "பின்ன ஆரு தலவரு?" "தலயா எல்லா இருந்தாலும் புண்ணியமில்லை. வெறுங்கையுமாயிருந்தாலும் புண்ணியமில்ல. வட்டுக் கடன் செவத்தாச்சி குடுத்திச்சாக்கும்!" "செவத்தாச்சியிட்டவும் அம்புட்டுக்குப் பணமில்ல. அடவுல கெடந்த சோடுதவலயக் கடயில போட்டுப் பொரட்டிக் குடுத்திச்சி. பாஞ்சாலிக்கு அடுவான்ஸ் குடுத்தா. எல்லாந்தா..." "....." "அப்பச்சி என்ன பண்ணுறா?" "அவியளும் பொட்டி செமக்க்ப் போறா. கங்காணி நூறு பொட்டி செமந்தா நாலு ரூவா தருவா..." பொருளாதார நிலையை இவ்வாறு கண்டறிந்த பின் அவன் மனம் 'சீலை, தாலி, ரெண்டேனம்' வாங்கிக் கல்யாணம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பார்க்கிறது. "அடுத்த நாயித்துக்கிழமை நா அங்க வாரேன். ஒங்க மாமா வந்திருந்தாரா?" பொன்னாச்சி புரிந்து கொண்டு மறுமொழி கூறுகிறாள். "மாமா வந்து செவத்தாச்சியப் பார்த்தாராம். நாங்க ஆரும் அவிய வந்தப்ப வீட்டில இல்ல. ஆச்சியே எல்லாம் சொல்லிவிட்டாவளாம்." "ஆகா..." என்ற ஒலி அவனையுமறியாமல் அவன் கண்டத்திலிருந்து பிரிகிறது. பிறகு பேச்சுத் தொடரவில்லை. அவன் அவர்கள் பின்னே கந்தசாமியின் சாயாக் கடை வரையிலும் செல்கிறான். பிறகு அவர்கள் திரும்பி நெடுந்தொலை சென்று மறையும் வரையிலும் அங்கேயே நிற்கிறான். ஒரு 'சாயா' கேட்டுக் கொண்டு பெஞ்சியில் அமருகிறான். அப்போது ஆறுமுகமும் அங்கு வந்து சேருகிறான். "நீ இங்கத்தா இருக்கியா? லாரி ஏழரைக்கு வரும். நீ பாலத்தடியில வந்திரு!" என்று கூறிவிட்டுப் போகிறான். அன்று முதல் முதன் முதலாக ஆறுமுகக் கங்காணியுடன் மூட்டைத் தொழில் செய்ய வந்து நிற்கிறான் ராமசாமி. பாலத்தின் பக்கம் 'செந்திலாண்டவன்' என்ற பெயரைக் காட்டிக் கொண்டு லாரி உறுமிக் கொண்டு வந்து நிற்கிறது. ஆண்களும் பெண்களும் அந்தத் தொட்டியில் ஏறிக் கொள்கின்றனர். மண்வெட்டி, கூடை, சாக்கு, கோணி தைக்கும் ஊசிகள், சணல் கண்டு எல்லாம் இடம் பெறுகின்றன. நிலவு மூளியாகக் கிழக்கே உதித்து ஏறுகிறது. ஓட்டுபவனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் தரகனார் கையைக் காட்ட அளத்துக்குள் வண்டி செல்கிறது. "சுனா மானா அளம்" என்று யாரோ செய்தி அறிவிக்கின்றனர். அளத்துக்குள் நல்ல பாதை இல்லை. பள்ளத்திலும் மேட்டிலும் சக்கரங்கள் மாறி உருளுகையில் குடல் வாய்க்கு வந்து பாதாளத்தில் குதிப்பது போலிருக்கிறது. ராமசாமி இத்தகைய லாரி சவாரிக்குப் பழக்கப்பட்டவனல்ல. அவனருகில் ஒரு பெண்பிள்ளை அவன் மீது வேண்டுமென்று விழுவது போல் தோன்றுகிறது. விலகிப் போகிறான். அம்பாரம் பத்தெட்டில் இருக்கிறது. நிலவு ஏறியிருப்பதால் வெளிச்சத்துக்கு விளக்கொன்றும் தேவையாக இல்லை. தொலைவில் அறவைக் கொட்டடியில் விளக்கொளி தெரிகிறது. கங்காணி நிறுவைக் கொக்கியைத் தொங்கவிடுகிறான். திமுதிமுவென்று ஆண்களும் பெண்களுமாக மலையைப் புன்னி எடுத்து வாய் பிளக்கும் சாக்குகளில் கொட்டுகின்றனர். தரகனும் அளத்துக் கணக்கப்பிள்ளையும் பேசிக் கொண்டு நிற்கின்றனர். சரேலென்று கங்காணியிடம் வந்து மூட்டைகளை முக்காலாக்கி மடித்துத் தூக்கச் சொல்கிறான் தரகன். நெருப்புக் குச்சியைக் கிழித்து ஆறுமுகம் பார்க்கிறான். 50 கிலோ... சின்னமுத்து இன்னும் ஒரு பெட்டி உப்பை மூட்டையை விரித்துக் கொட்டுகிறான். சரசரவென்று கைகளைக் குத்தும் பருமணிகள். "வாணாம், கொட்டாதிய!" என்று தரகன் குரல் கொடுக்கிறான். "ஏன்?..." எல்லோருடைய குரலும் ஒன்றாக உயருகிறது. "அம்பது கிலோ மூடைதா!" "அப்ப கூலி அதேதான?" "அதெப்படி அம்பது எழுபத்தஞ்சும் ஒண்ணாவும்? அம்பதுன்னா தூக்கிப் போடுறதுக்கு அடுக்கறதுக்கு சல்லிசாவும்... விரிசா வேல முடியும்..." என்று வித்தாரம் பேசுகிறான் தரகன். "மூடை எல்லாம் ஒண்ணுதான? கூலி அதே பத்தொம்பது பைசாதான?" என்று சின்னமுத்து கேட்கிறான். "அதெப்படியாவும்? அம்பது கிலோ மூட்டைக்கு ஒம்பது பைசா கூலி, மூடை நிறையக் காணுமில்ல?" இரவின் அமைதியில் கடல் நீரில் தோய்ந்து வரும் குளிர்காற்று உடலுக்குச் சுகமாக இல்லை. அது குளிர் திரியாகப் பாய்ந்து உடலைக் குலுக்கிக் கொள்ளச் செய்கிறது. ராமசாமி குரலெழுப்புகிறான். "ஏன்வே, பச்சைப் புள்ளியளா நாங்க, விளையாடுறீம்? நூத்தம்பது கிலோ ரெண்டு மூடை முப்பத்தெட்டுப் பைசா. அம்பது கிலோ மூடை மூண்டுக்கு இருவத்தேழு பைசா! ஒங்க திரியாவரமெல்லாம் இங்க செல்லாது. கொரச்ச துட்டுக்கு அதிக மூடை...! இந்தாங்க? ஆரும் உப்பத் தொடாதிய? போட்டா இத்தினி நாளும் வழக்கத்துல இருக்கிறாப்பல எழுவத்தஞ்சி கிலோ, பத்தொம்பது பைசா இல்லேண்ணா..." "இல்லேன்னா தொடாதிய, போங்க! இப்ப நேத்து முந்தா நா இதோ அம்பது கிலோ மூடை பத்து லாரி அடிச்ச. ஆளா இல்ல?" என்று தரகன் வீராப்புப் பேசுகிறான். ஆறுமுகமோ சங்கடத்துடன், "ராமசாமி, தவறாறு பண்ணாதப்பா, இப்ப இப்பிடித்தா அம்பது கிலோன்னு மூடை போடுறா. இதா வழக்கமாப் போச்சு!" என்று அவனைச் சமாதானம் செய்கிறான். கங்காணிக்கும் கூலி குறையுமே! "அண்ணாச்சி, வந்தது வரட்டும். இன்னிக்குப் போராடத்தாம் போறம். இது ரொம்ப ஏமாத்து. அப்ப மூடைக்குப் பதிமூணு காசு குடுக்கட்டும்?" "....." "அட்வான்ஸ் வாங்கிட்டு உப்பத் தொட மாட்டமுன்னா? எவுள்ளியளா? சாக்கப் புடிச்சி உப்பைக் கொட்டுங்க! நேத்து முந்தாநா அம்பதுக்கு நீங்க துட்டு வாங்கல? இந்தப் பய பனஞ்சோல அளத்துல தவராறு பண்ணிட்டு இங்க வந்திருக்கா. இவனைச் சேத்ததே தப்பும். ஆவட்டும்!" தரகன் குரல் ஓங்குகிறது. கங்காணியும் சேர்ந்து கொள்கிறான். "அளத்துல லாரி வந்து நிக்கிது; இப்ப என்ன தவராறு? அம்பதுன்னா அம்பதுதான்..." "இது அநியாயம். ஏமாத்தல்..." "ராமசாமி மொத நாளே நீ மொறச்சா போச்சு! ஒனக்கு தா நட்டம்." "அண்ணாச்சி, ஒங்கக்கே இது நாயமாத் தோணுதா? நாம ஒத்துமையா இருந்துதா இவனுவ அக்கிரமத்த முறிக்கணும். எழுபத்தஞ்சு கிலோ மூடை தானே வழக்கம், முறை? இது அநியாயக் கூலிக் குறைப்பு இல்லையா?" என்று ராமசாமி பொங்குகிறான். "இப்ப இதுதா நடைமுறை. இப்ப வேலை தொடங்கல, நான் வேற நடவடிக்கை எடுப்பேன்..." கணக்கப்பிள்ளையின் காதைக் கடிக்கிறான் தரகன். கங்காணி ராமசாமியிடம் வந்து சங்கடத்தை எடுத்துரைக்கிறான். "வளஞ்சுதாங் குடுக்கணும், என்னேய பின்ன? வீணா தவறாறு பண்றது தா மிஞ்சும். அவ இப்ப போன் பேசுவா, போலீசக் கூப்பிடுவா, தரகன் கணக்கப்பிள்ள எல்லாம் பெரியவிய பக்கம். மொதலாளிய கூட்டாயிடுவா. நமக்குத்தா கஷ்டம். ஒன்னக் கெஞ்சுத..." வேறு வழியில்லை. எழுபத்தைந்து கிலோ மூட்டையைத் தைக்க இடுப்பொடியாது. ஐம்பது கிலோ மூட்டை தைக்க இடுப்பொடிகிறது. "உலகத் தொழிலாளரே, ஒன்று படுங்கள்... ஒன்று... ஒன்று படுங்கள்..." அது நடக்குமோ? ராமசாமி குத்துப்பட்ட மென்மையான உணர்வுகளைக் கடித்துக் குதறித் தொண்டைக் குழிக்குக் கீழ் தள்ளுவது போல் விழுங்கிக் கொள்கிறான். மேலே வெண்துகில் வீசி மூளிச் சந்திரிகையை மறைக்கிறது வானம். வெண்மைக் குவியல்களை மனிதக் கூறுகள் தமது மூச்சுக் காற்றைப் பிழிந்து சாக்குப் பைகளில் நிரப்பி வண்டியில் ஏற்றுகின்றன. |