உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்) 21 அப்பன் இறந்தாலும் அம்மை இறந்தாலும் வெகு நாட்களுக்குத் துயரம் கொண்டாடுவதற்கில்லை. ஏனெனில் வயிற்றுக் கூவலின் முன் எந்த உணர்ச்சியும், மான - அபிமானங்களும் கூடச் செயலற்றுப் போய்விடும். உயிர் வாழ்வதே உழைப்புக்கும் அரைக் கஞ்சியின் தேவைக்கும் தான் என்றான பிறகு மென்மையான உணர்ச்சிகள் ஓடி ஒளிந்து கொள்கின்றன. பளிங்குச்சில்லும் மணலும் களியும் கொண்டு மண்ணின் உயிர்க் கண்களைத் துப்புரவாகத் துடைத்த பின்னர், அதில் பசுமையை எதிர்பார்க்க முடியுமா? அந்தப் பாத்தி கரிப்பு மணிகளுக்கே சொந்தமாகி விட்டதால் பசுமை துளிர்க்கும் மென்மையான உணர்ச்சிகளைப் பாராட்டுவதற்கில்லை. பொன்னாச்சியும் பச்சையும் வேலைக்கு வருகின்றனர், ஒரு வாரம் சென்றதும். "பாவம், சின்னாத்தா, அப்பன் ரெண்டு பேரும் ஒன்னிச்சிப் போயிட்டா..." என்று பேரியாச்சி இரங்குகிறாள். "இந்த வுள்ளியளுக்கு ஆத்தான்னு கொடுப்பினயில்லாமலேயே போயிடிச்சி... அந்தப் பய்யனப் போலீசில புடிச்சிட்டுப் போனப்ப, சின்னாத்தா தா ஆனவாடும்பட்டான்னு சொல்லிச்சி பாவம்..." என்று இறந்தவளின் மேன்மையைக் கூறுகிறாள் அன்னக்கிளி. "இப்பிடிக்கும் நல்லவிய இருக்காவ. சக்களத்தி வுள்ளியளக் கொல்லுறவியளும் இருக்கிறாவ. ஏதோ ஒலவம்" என்றெல்லாம் தங்கள் உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்கையில் கண்ட்ராக்ட் வந்து விட்டார். வாயை மூடிக் கொள்கின்றனர். வழக்கம் போல் அவனது அதிகாரம் தூள் பறக்கிறது. அறைவை ஆலையில் எட்டும் பத்துமான குஞ்சுகள் மூன்று ரூபாய்க் கூலிக்குக் கண்ணிதழ்களிலும் செவியோரங்களிலும் மூக்கு நுனிகளிலும் மாவாகப் பொடி அலங்கரிக்கத் தலைக்கொட்டை கட்டிக் கொண்டு பொடி சுமக்கிறார்கள். தட்டு மேட்டில் அம்பாரங்கள் குவிந்து, நண்பகலின் உக்கிரமான ஒளியில் பாலைவன மலைகளைப் போன்றும் கறுப்பும் வெளுப்புமாக ஓடும் குன்றுகளைப் போன்றும் பிரமைகளைத் தோற்றுவிக்கின்றன. மாளய அமாவாசை நெருங்கி வருகிறது. ராமசாமிக்கு நிற்க நேரமில்லை. கோரிக்கைகளைத் தயாராக்கி விட்டார்கள். அவனுடைய மனக்கண்ணில் எல்லா அரசியல் கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கக்காரர்களும் சேர்ந்து அவற்றை எல்லா முதலாளிகளுக்கும் கொடுப்பதும், அமாவாசையன்று மழை மணி விழுவதும், பின்னர் தட்டு மேடுகளில் அம்பாரங்கள் வாருவாறின்றிக் கிடப்பதும், நிர்வாகங்கள் இறங்கி வருவதுமான சாத்தியக் கூறுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. பதிவு கூலி - ஓய்வு நாளயச் சம்பளம், மழைக் காலங்களில் மறுவேலை அல்லது அரைச் சம்பளம் - முதுமைக்கால ஊதியம் - மருத்துவ உதவி, பெண்களுக்குச் சமவேலை, சம கூலி நிர்ணயம் - பேறு கால உதவி, ஓய்வு, பிள்ளை காக்கும் பால் வாடிகள், உப்பளப் பாதிப்பினால் வரும் நோய்களுக்குத் தக்க மருத்துவப் பாதுகாப்பு, எல்லாம் கேட்கிறார்கள். கூடுமான வரையிலும் எல்லோரையும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்த அவனும் மற்றவர்களும் ஓயாது அலைகிறார்கள். அவனுக்குத் திருமணத்தைப் பற்றிய நினைப்பு இப்போது இல்லை. அருணாசலத்துக்குக் கால்கை பிடிப்பு மாதிரி வந்து ஒரு வாரம் காய்ச்சலும் நோவுமாகப் படுக்கையில் தள்ளிவிட்டது. மரணச் செய்தி கேள்விப்பட்டு வந்து குழந்தைகளை ஊரில் கொண்டு போய் ஒரு வாரம் வைத்திருக்கவும் கூட இயலாமல் படுத்து விட்டார். மாமி தான் வேலுவைக் கூட்டிக் கொண்டு வந்து இரண்டு நாட்கள் இருந்து சென்றாள். அவருக்கு இப்போது உடல்நிலை குணமாகியிருக்கிறது. தூத்துக்குடி ஆஸ்பத்திரிக்கு வந்து உடலைக் காட்டிச் செல்கிறார். ஆஸ்பத்திரிக்கு வந்து திரும்புகையில் ஆச்சியைப் பார்க்கப் படி ஏறுகிறார். ஊமை வெயிலின் துளிகளை மேல் துண்டால் ஒத்திக் கொள்கிறார். சரசி பன ஓலை கிழிக்கிறாள். செங்கமலத்தாச்சி ஓலைப் பெட்டி முடைந்து கொண்டிருக்கிறாள். மூக்குக் கண்ணாடி மூக்கில் தொத்தி இருக்கிறது. "வாரும், வாரும் - இரியும்? ஆசுபத்திரிக்கு வந்தியளா?" "ஆமா, எல்லா வேலைக்குப் போயிருக்காவளா?" "போயிருக்கா. நோட்டீசு குடுத்தா, பொறவு வேலை இருக்காது. மொதலாளிய அம்புட்டெல்லால எறங்கி வருவாகளா? கருக்கல் விடியிதுன்னா லேசா?" என்று கூறிக் கொண்டு பெட்டியை வைத்து விட்டு மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கொள்கிறாள். "ஓலை கெடக்கிதா? முன்னல்லாம் ஆடி மாசம் வாங்கி வச்சிப்ப. இப்ப ஒண்ணும் சேயாம இருந்திட்ட, நேத்துப் போயி திரிஞ்சி வாங்கியாந்தே. மழக்காலம் வந்திட்டா கடனுக்கு வருவாக. வேலய விட்டு நின்னாலும் கையில காசுக்கு என்னேயுவா?" "இப்பத்தான் வாரியளா? சாப்பாடு ஏதும் வக்கச் சொல்லட்டா?" "எல்லாம் ஆச்சு... காலமேயே வந்திட்ட, வட்டுக் கடன் வாங்கி சுசய்ட்டிக்குத் தீர்வை கட்டிட்டு இப்ப பிரிக்கற. இந்தத் தரகன் பயலுக்குக் காசா இல்ல? பத்து ரூவாக்கி இப்ப வா, அப்ப வான்னுறா. அட, லீசைக் கான்சல் பண்ணிட்டுப் போறா. நீ ஏன் இத்தக் கட்டிட்டு அழுவுறியன்றா. ஒரு மனுசன் பேசற பேச்சா இது? நாமெல்லாம் மனுசங்களா இல்லியான்னு இப்ப எனக்கே சந்தேகமாப் போயிட்டு. உங்ககிட்ட உளுமையைச் சொல்லுற..." ஆச்சி பேசவில்லை. அவருக்கு ஆற்றாமை தாளாமல் வருகிறது. "அந்தக் காலத்தில என்னென்ன லட்சியம் வச்சிட்டிருந்தம்! காந்தி கனவு கண்ட ராமராச்சியம் வரப்போறதுன்னு நினச்சம். ஒரு மனுசன் குடிக்கற கஞ்சிக்குத் தேவையான உப்பு, அதுதான் சத்தியம்னு ஒரு உத்தமமான போராட்டத்தையே அதுல வச்சி ஆரம்பிச்சாரு. இன்னிக்கு அஞ்சும் குஞ்சுமா உப்புப் பெட்டியில எட்டு மணி கருகிட்டு வருதுவ. இதுவளுக்குக் காந்தின்னா தெரியுமா, தேசம்னா தெரியுமா? பசி தெரியும். இன்னொன்னு சினிமா. இதுக்காவ எதையும் செய்யத் துணியிதுங்க. நாங்கல்லாம் படிக்க வசதியில்லாத காலத்துல பனயேறிப் பிழைக்கிற குடும்பத்துல தாம் பெறந்தம். இன்னிக்கு நினைச்சுப் பாக்கறப்ப அப்ப எங்க லட்சியம் எம்புட்டுக்கு உன்னதமாயிருந்திருக்குன்னு தெரியுது. திருச்செந்தூர் தாலுகா காங்கிரசில் இருந்த இளயவங்க எப்படி இருந்தோம்! அம்புட்டுப் பேரும் ஒரு வாப்புல கள் குடிக்கக் கூடாது, கதர் உடுத்தணும்னு பிரச்சாரம் செய்யிவம். இப்ப என்னடான்னா, காலேஜில படிக்கிற பய, பொண்டுவ பின்னாடி திரியிறா, சீண்டுறா, வெக்கக் கேடு. பாரதியார் அன்னிக்குப் பாடி வச்சாரே, பாஞ்சாலி சபதம், அதப்பத்திச் சொல்லுவாக. அவர் நம்ம தேசத்தையே பாஞ்சாலியா நெனச்சிப் பாடினாருன்னுவாக. 'பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து குழல மீதினிற் பூசி நறு நெய் குளித்தே சீவிக்குழல் முடிப்பேன்...'னு பாஞ்சாலியையா பாடினாரு? இந்தத் தேசம் நெஞ்சுல ஒரமில்லாம அடிபட்டுக் கிடக்கிறது. பொறுக்காம பொங்கி வந்துருக்கு. இன்னிக்கு எனக்கு இந்த உப்புத் தொழிலாளிய எல்லாரும் பாஞ்சாலியளா நிக்கிறாப் போல தோணுது..." தொண்டை கம்மிப் போகிறது. "சரசி! லோட்டாவில குடிக்கத் தண்ணி கொண்டாம்மா!" அவர் தண்ணீரருந்துகையில் ஆச்சி மௌனமாக இருக்கிறாள். "எனக்குத் தெரிஞ்சு அளக்கூலி நாலணாவிலேந்து நாலு ரூவா வரையிலும் உசந்தும் அரக்கஞ்சியே பிரச்சினையாகத் தானிருக்கு..." ஆச்சி உடனே கேட்கிறாள். "அதுக்காவ எதுவும் நின்னு போயிடுதா? மனுசன் வயசாகாம நிக்கிறானா? புள்ளய பெறக்காம நிக்கிதா? நீங்க காலத்துல எதானும் ஏற்பாடு செஞ்சு பொன்னாச்சிக்கும் ஒரு கலியாணங் கெட்டி வச்சிரணும். நம்ம இல்லாமயும் இருப்பும் அடிபிடியும் எப்பவுமிருக்கு. அந்தக் குடும்பத்துக்கு இப்ப ஒம்மத் தவிர ஆருமில்லாம போயிட்டா. கடல்ல அல ஓயுமா? அலயிலதா குளிச்சி எந்திரிக்கணும். அவெ ஆத்தாகிட்டச் சொல்லுலேன்ன, வாணங்கா?" "நானும் அன்னிக்குப் போனே. எங்கிட்டயும் அதாஞ் சொன்னா. நா ஒரு இருபத்திரண்டு நா, மாசம் கழியிட்டும்னு தானிருக்கே. அவ அம்மா தாலி இருக்கு. தாலிப் பொன் வாங்கறாப்பல கூடல்ல... இன்னிக்கு நிலைமை இல்ல! ஒரு சீல வேட்டி வாங்கி முடிச்சிடலாம்... பச்சைப் பயல் எப்படி இருக்கா?" "வேலக்கிப் போறா; சம்பளத்தக் கொண்டு பொன்னாச்சியிட்ட தா கொடுக்கா. இங்ஙனதா எல்லாம் கெடக்கும். சின்னது ரெண்டு மூணு நா ராவெல்லாம் சொல்லத் தெரியாம அளுதிச்சி. வூட்டுக்குப் போகவே பயமாயிருக்கும்பா பாஞ்சாலி; நாங்கூட ராமசாமியக் கலியாணங் கட்டிட்டா இந்த வளவிலியே வந்திருக்கட்டு முங்கே. அவெ ஆத்தா ஒப்புவாளோ என்னமோ?..." ஆச்சி முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். தூத்துக்குடி ஊர் திருமந்திர நகராம். பனமரங்கள் கூடச் சலசலக்காதாம். ஆனால் உப்பளத்துத் தொழிலாளர் சலசலக்கப் போகிறார்கள். வானிலே மேகமூட்டம் தெரிகிறது. கரிப்பு மணிகளைப் பிரசவிக்கும் அன்னை சோர்ந்து துவண்டாற் போல் கிடக்கிறாள். காலையில் தொழிதிறந்தால் பன்னிரண்டு மணிக்குக் குருணைச் சோறு இறங்கவில்லை. காற்றில் இருக்கும் வறட்சி ஓர் ஈரமணத்தைச் சுமந்து கொண்டு வந்து மெல்ல மேனியை வருடுகிறது. மாளய அமாவாசையன்று மணிகள் விழுமென்று பார்த்திருக்கிறார்கள்; விழவில்லை. "அடுத்த சம்பளம் இருக்குமோ, இருக்காதோ?" என்ற கேள்வியுடன் பெண்டிர் சாமான் பத்து வரவுக் கடையில் கூடுகின்றனர். "இந்த இருவது ரூவாய கணக்கில வச்சிட்டு இருவது கிலோ அரிசி போடும்..." என்று நார்ப்பெட்டியை நீட்டுகிறாள் ஒருத்தி. "ஏத்தா? எப்பிடி இருக்கி? இன்னும் நிலுவை அறுவது ரூவாயும் சில்வானமும் இருக்கி. அம்பது ரூவான்னாலும் தீத்துட்டா அம்பது ரூவா சாமானம் எடுத்துட்டுப் போ!" என்று கடைக்காரன் மாட்டுகிறான். "எத்தினி நாளக்கி மொடங்குவாகளோ?" "அது எப்பிடித் தெரியும்? ரொம்ப உஜாராத்தா இருக்கா. கங்காணிமாரெல்லாமும் சேர்ந்திருக்காவ, பனஞ்சோலை அளம், தொர அளம் மொத்தமும் சேந்திருக்காவ..." "ம், இதுபோல எத்தினி பாத்திருப்போம்? பிள்ள குட்டி தவிச்சிப் போயிரும், வெளியாளக் கொண்டு வருவா, இல்லாட்டி பத்து பைசா ஏத்துவா?" என்பன போன்ற பேச்சுக்கள் எங்கு திரும்பினாலும் செவிகளில் விழுகின்றன. ராமசாமியின் அன்னை வாயிலிலேயே நிற்கிறாள். அவன் வீட்டில் வந்து தங்கி மூன்று நாட்களாகி விட்டன. அவளால் கட்டிக் காக்க இயலாத எல்லைக்கு அவன் போய்விட்டான். செவந்தியாபுரத்தில் இருந்த வரையிலும் அவளுக்கு வெளிமனித உறவுகளென்ற உயிர்ச்சூடு இருந்தது. பேரியாச்சி, அன்னக்கிளி எல்லோரும் பேசுவார்கள். அன்னக்கிளி குழந்தையைக் கொண்டு விடுவாள். அவள் ஆடு வளர்த்திருக்கிறாள், கோழி வளர்த்திருக்கிறாள். அவரையோ சுரையோ கொடி வீசிக் கூரையில் பசுமை பாயப் படரப் பாடுபடுவாள். இப்போது மாசச் சம்பளமில்லை. முன்போல் அவன் அவள் கையில் பணம் தருவதில்லை. அரிசி வாங்கிப் போட்டான். நல்ல தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க எதிர் வீட்டிலிருக்கும் மங்காவை மாசம் இரண்டு ரூபாய்க்கு ஏற்பாடு செய்திருக்கிறான். அவள் தான் இவளிடம் பல செய்திகளை வந்து சொல்கிறாள். "ஒம் பய்ய, அந்தப் பொன்னாச்சியத் தொடுப்பு வச்சிருக்கா. அதா, இப்ப மாலக்காரர் அளத்துல அறவைக் கொட்டடில அடிபட்டுச் செத்தாள ஒரு பொம்பிள...?" முதியவளுக்குக் காது கேட்காதென்று சத்தம் போட்டுப் பேசுகிறாள் மங்கா. "பனஞ்சோல அளத்துப் பெரிய முதலாளிக்கு வைப்பா இருந்தாளே ஒரு பொம்பிள? அவ வளவுலதா இந்தப் பொண்ணும் இருக்கு. இந்த மீட்டங்கியெல்லா அங்கதா கூடிப் பேசறாவளாம். அவக்கு ரொம்ப பவுரு..." இதெல்லாம் அவள் செவிகளில் விழுகிறதோ இல்லையோ என்ற மாதிரியில் மங்கா அவளை உறுத்துப் பார்க்கிறாள். ஆனால் அவளுள் ஒரு கடலே கொந்தளிக்கிறது. நினைவலைகள் மோதுகின்றன. பையன் எந்த வலையில் சென்று விழுந்துவிடக் கூடாது என்று அஞ்சினாளோ அங்கேயே போய் விழுந்து விட்டான். இதற்கு முன் இது போன்று வேலை நிறுத்தம் என்ற ஒலி காற்று வாக்கில் வந்ததுண்டு. ஆனால் பனஞ்சோலை அளத்தை அது தட்டிப் பார்த்ததில்லை. மேலும் ராமசாமி மாசச் சம்பளக்காரன். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்ததில்லை. சோலிக்குச் செல்வான்; வருவான். கால் புண் வ்ந்தாலும் கூடப் பாக்கை உரசி விழுதெடுத்து அப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பான். அவன் இப்போது வீட்டுக்கே பாதி நாட்கள் வருவதில்லை. "அந்தப் பொம்பிள செத்தால்ல? அதுதா இப்ப நிலம் நட்ட ஈடுன்னு அஞ்சாயிரம் கேக்கச் சொல்லி இந்தப் பொம்பிள தூண்டிக் கொடுக்களாம். அவக்கு ஒரு பய இருந்து செத்திட்டானில்ல. என்ன எளவோ சாராயங் குடிச்சி? அந்த ஆத்திரம். மொதலாளி மார எதுக்கச் சொல்லி இந்த எளசுகளத் தூண்டிக் கொடுக்கா!" "அந்த சக்காளத்தி வீடு எங்கிட்டிருக்குன்னு தெரியுமாட்டீ?" என்று கேட்கிறாள் முதியவள். மங்கா இடி இடி என்று சிரிக்கிறாள். "ஐயோ? நீ போகப் போறியா?... வாணாம். ரொம்பது தூரம் போவணுமா. உம்பய்ய ராவுக்கு இன்னிக்கு வருவா. சோறாக்கி வையி!" மங்கா போகிறாள். அந்தத் தாய் பித்துப் பிடித்தாற் போல நிற்கிறாள். |