உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்) 7 அன்று நாச்சப்பன் பொன்னாச்சியையும் அன்னக்கிளியையும் கசடு கலந்து கிடக்கும் உப்பை, ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குக் கொண்டு போடப் பணிக்கிறான். அவை யாரேனும் கருவாடு போடவோ, தோல் பதனிடவோ வாங்கிப் போவார்களாக இருக்கும். அன்னக்கிளியைப் பார்க்கையில் பொன்னாச்சிக்கு அச்சமாக இருக்கிறது. அவளுடைய கன்னத்து எலும்புகள் முட்ட, கண் விழிகள் சதையில் ஒட்டாமல் தெரிய, வயிறு குவிந்து இருக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவள் குனிந்து 'மாங்கு' எனப்படும் அந்தக் கசடை வாளியில் வாரிப் பெட்டியில் போடுகிறாள். குனிந்து நிமிர்ந்து அதை அவளால் செய்ய இயலவில்லை. "நானே பெட்டியில எடுத்துப் போடுறேன் அக்கா..." என்று பொன்னாச்சி அவள் வேலையை இலகுவாக்க முற்படுகிறாள். அன்னக்கிளி தலையில் பெட்டியைச் சுமந்து கொண்டு ஒரு நடை கொண்டு போய் கொட்டு முன் பொன்னாச்சி இரண்டு முறைகள் பெட்டியை நிரப்பிக் காலி செய்து விடுகிறாள். வெயில் உச்சிக்கு ஏறிக் காய்கிறது. அன்னக்கிளிக்கு மூச்சு வாங்குகிறது. நஞ்சோடையின் அருகே கூடையுடன் கீழே உட்கார்ந்து விடுகிறாள். "ஏனக்கா?... உடம்புக்கு என்னேனுமா?..." "இல்லே... எனக்கு தாவமாயிருக்கு. தண்ணி... தண்ணி வேணும்..." என்று மூச்சிரைக்க அவள் சாடை காட்டுகிறாள். பொன்னாச்சிக்கு அவளைக் காணவே நடுக்கமாக இருக்கிறது. தனது பெட்டியை வைத்துவிட்டுத் தொலைவில் இருக்கும் கொட்டடிக்கு ஓடுகிறாள். கொட்டடியில் இப்போது குழாயில் தண்ணீர் விடுவார்களா? அவள் ஓடி வருவதை நாச்சப்பன் பார்த்து விடுகிறான். "செறுக்கிவுள்ள. ஏண்டி ஓடியார? வேலயப் போட்டுட்டு..." என்று நாக்கூசும் சொற்களால் வசைபாடுகிறான். "தண்ணி வேணும்... தாவத்துக்குத் தண்ணி. அன்னக்கிளி அக்கா தண்ணி கேக்கா." "அதுக்கு, அவ என்ன ராணிமவ ராணியா? ஒன்ன அனுப்பிச்சி வய்க்கா?... கண்ட களுதங்களுக்கும் படுக்க விரிச்சிட்டு வயித்தச் சாச்சிட்டு வாரா! ஒருநாக் கூட ஒளுங்கா வேல செய்றதில்ல!..." வசைகள் உதிருகின்றன. ஆனால் 'ஐட்ரா' ராமசாமி அங்கு கறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு உப்பு வாருகிறான். அவன் அவள் நீர் வேண்டி வந்ததறிந்து வாரு பலகையைப் போட்டுவிட்டு எங்கிருந்தோ தண்ணீர் கொண்டு வருகிறான். "ஆருக்குத் தண்ணி வேணும்?" "குடுங்க. பிள்ளத்தாச்சி... அன்னக்கிளியக்கா, மயக்கமா உக்காந்திட்டா..." வாளியும் குவளையுமாக அவனும் அவளுடன் செல்கிறான். அன்னக்கிளி கவிழ்ந்தாற் போல் உட்கார்ந்தபடியே முதுகு சரியக் கிடக்கிறாள். முட்டியை ஊன்றினாற் போல் மடித்துக் கொண்டு குப்புற வீழ்ந்து கிடக்கிறாள். "முருகா... முருகா!" என்று அவள் மனசுக்குள் கூவிக் கொள்கிறாள். கீழே அமர்ந்து அவள் முகத்தை மெல்லத் தூக்கி, "இத தண்ணி, அன்னக்கிளியக்கா?... தண்ணி கேட்டியே?" என்று அவள் தலையைத் தூக்குகிறாள். முகத்தில் வியர்வைப் பெருகுகிறது. கைகள் இரண்டையும் வயிற்றில் கோத்தாற் போல் வைத்துக் கொண்டிருக்கிறாள். சற்றே நகருகையில், கீழே உப்பு மிதிலாடும் மண்ணில் அவளது நிணநீர்... கறுப்புச் சீலைத் துண்டை நனைத்துக் கொண்டு... அவளுக்கு நெஞ்சு ஒட்டிக் கொள்கிறது. பேரியாச்சி இருக்குமிடம் தேடி ஓடிப் போகிறாள். "ஆச்சி...! ஆச்சி? அங்க வந்து பாரும்... அன்னக்கிளி அக்கா... உதரமாச் சரியிது..." கிழவி கொத்து பலகையைப் போட்டுவிட்டு விரைகிறாள். இன்னும் வேறு சில பெண்களும் ஆண்களும் திரும்பிப் பார்த்து வருகின்றனர். "இவளுவ வெக்கங்கெட்ட வேசிக. வகுத்துப்புள்ள கீளவுளற வரயிலும் ஏன் சோலிக்கு வரணம்?" "மாசமாவலன்னான்னாலும் மானக்கேடில்ல? வூட்ட கெடந்தா என்ன?" "நாலு புள்ளிய, இவ என்னேய்வா? இருந்தாலும் தயிரியம், அளத்துல வந்து வுளுந்து கெடக்கலாமா?" ராமசாமி சற்று எரிச்சலுடன், "ஏன் தலைக்கித்தலை பேசுறிய? பலவை எதானும் கொண்டிட்டு வந்து கொட்டடிக்குத் தூக்கிட்டுப் போகலாம் வாங்க!" என்று அங்கு வேடிக்கை பார்க்க நிற்கும் வார்முதல் கங்காணி செல்வராசை அழைக்கிறான். "ஏலே, நீ புள்ளப் பேறு பார்க்க வாரே! போலே! பொண்டுவ இளுத் தெரிவாளுவ. இந்தச் சிறுக்கியளுக்கு நெஞ்சுத் தகிரியம். மொதலாளி காருல ஆசுபத்திரிக்கிக் கூட்டிப் போவார்னு கூட வுழுவாளுவ." ராமசாமி அந்த செல்வராசை ஒரு மோது மோதித் தள்ளுகிறான். "ஒரு ஆத்தா வயித்துல பொறக்கல நீ? அக்கா தங்கச்சி தெரியாது ஒனக்கு? உசுருக்கு அவ மன்னாடுதா... இவெ பேசுதா!" அவன் சந்தனசாமியைக் கூட்டிச் சென்று அலுவலகக் கொட்டடியில் கிடக்கும் ஒரு பெஞ்சியை எடுத்து வருகிறான். தலையில் சுற்றிய துண்டை எடுத்துப் போடுகிறான். இன்னும் அதைப் பின்பற்றிப் பல தலை துணிகள் விழுகின்றன. கொட்டடியில் பேரியாச்சியும், அழகுவும், வடிவாம்பாவும் அவளைச் சுற்றி இருக்கின்றனர். நாச்சப்பன் எல்லா வசைகளையும் பொல பொலத்துத் தீர்த்துவிட்டான். அன்று திட்டமிட்டபடி வேலை நடக்கவில்லை. பகலுணவுக்கு அவர்கள் திரும்பும் நேரத்தில் கொட்டடியிலிருந்து பச்சைச் சிசுவின் குரல் கேட்கிறது. அந்தக் கரிப்பு வெளியில் உயிர்த்துவத்தை எதிரொலித்துக் கொண்டு அதன் முதல் அழுகையின் ஒலி கேட்கிறது. "பொட்டவுள்ள!" என்று அழகுதான் முதலில் அறிவிக்கிறாள். பொன்னாச்சி கொட்டகை ஓரத்தில் எட்டித்தான் நின்று அதைக் கேட்கிறாள். "பொட்டவுள்ள... பொட்டவுள்ள..." யாரோ அறைந்து அறைந்து கூறுவது போல் பொன்னாச்சியின் நெஞ்சில் அந்த ஒலி மோதி எதிரொலிக்கிறது. "பொட்டவுள்ளயா?..." என்று, ஏதோ உச்சக்கட்டத்தை எதிர்ப்பார்த்திருந்தாற் போல் நின்றவர் சப்பிட்டவராகச் சாப்பாட்டுத் தூக்குடன் செல்கின்றனர். ராமசாமி தான் சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்கோ வெளியே சென்று, தேநீரோ காப்பியோ வாங்கி வருகிறான். பிறகு உப்பு எடுத்துச் செல்ல வந்த லாரியிலோ, எதிலோ பிள்ளை பெற்றவளைத் தூக்கிவிட்டு, ஆசுபத்திரிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்கிறான். கங்காணி செல்வராசுவுக்கு ஒரே ஆத்திரம். செல்வராசுவும் படிக்கத் தெரிந்தவன். டிகிரி பார்க்கும் வேலைக்காரனுக்கு மாசம் சம்பளம். டிகிரி பார்த்து தொழி திறந்து மூடி வேலை செய்வது, உப்பு வாருவதை விடக் கொஞ்சம் 'கௌரவ' வேலை என்று நினைப்பு. சட்டை போட்டுக் கொண்டு 'ஐட்ரா மீட்டரும்' அளவைக் குழாயுமாகத் தான் வளைய வரவேண்டும் என்று அந்தப் பணிக்காக கணக்கப்பிள்ளை தங்கராசுவை எப்படி நைச்சியம் செய்யப் பார்த்தான்! ஒவ்வொரு வாரமும் சம்பளத்தில் பத்து ரூபாய் பிடித்துக் கொள்ளச் சம்மதித்தான். பஸ்தர் மிட்டாயும், ஆரஞ்சியும் வாங்கிக் கொண்டு சென்று வீட்டில் வைத்தான். கடைசியில் 'ஐட்ரா' வேலை அந்தப் பயலுக்கு ஆகிவிட்டது. அந்தப் பயல், அறைவைக் கொட்டடியில் உப்பு பொடி சுமக்க வேலைக்கு வந்து சேர்ந்தவன் தான். அரசியல் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறான். "கணக்கவுள்ள, என்ன இப்படி ஏமாத்திட்டீரே..." என்றான் மனத்தாங்கலுடன். "அந்தாளு பெரிய இடத்து சிவாரிசு. நா பொறவு என்ன சேய?" என்றான் கணக்கப்பிள்ளை. இதற்குப் பிறகு அட்டி கிடையாது. செல்வராசு இப்போது ஆத்திரத்துடன் பொன்னாச்சியின் செவிகளில் விழும்படி, "...இவனுக்கு அந்தப் பொம்பிள வாய்ப்பு..." என்று கூறித் தனது அவமானத்துக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறான். அன்று நாச்சப்பன் 'அத்தனை மாங்கை'யும் வழித்துப் போட்ட பின்னரே அவர்கள் வேலை முடிந்து போகலாம் என்று கட்டளை இடுகிறான். அவர்கள் வேலை முடிக்கும் போது மணி ஏழாகி விடுகிறது. தம்பி, பாவம் அவனுக்குப் பசி எடுக்கும்; தூக்கம் வந்து விடும். அவன் அக்காளுக்காகக் காத்திருக்கையில் ராமசாமி அவனிடம், "நீங்க எங்கேந்து வாரிய?" என்று விசாரிக்கிறான். "தூத்தூடி... ஆரோக்கியமாதா கோயில்ல அதுக்குப் பின்னால போவணும்..." "ஒங்க கூட ஆரும் வாரதில்ல?" "இல்ல..." "அப்பச்சி, அம்மா இருக்காவ?" "அப்பச்சிக்குக் கண் தெரியாது. அம்மா செத்துப் போச்சு. சின்னாச்சி அளத்து சோலி பாக்குது..." என்று பச்சை விவரங்கள் தெரிவிக்கிறான். பொன்னாச்சி வந்த பிறகு அவனும் அவர்களுடன் பாலம் வரையிலும் சைக்கிளுடன் நடந்து வருகிறான். செவந்தியாபுரத்தில் தான் இருப்பதாகவும், தெரிக்காட்டைத் தாண்டும் வரையிலும் உடன் வருவதாகவும் கூறி வருகிறான். அங்கு ஒரு கடையில் அவர்களுக்குத் தேநீர் வாங்கித் தருகிறான். பொன்னாச்சிக்கு முதலில் தயக்கமாக இருக்கிறது. யாரும் எதுவும் பேசுவார்களோ என்று அஞ்சுகிறாள். அவளையும் இணைத்துச் செல்வராசு பேசிய சொற்கள் மென்சதையில் உப்பாய் வருடுகின்றன. "வாங்கிக்கம்மா, ஏ, பயமாயிருக்கா? தம்பி, நீ சொல்லு, ஒன் அக்காளுக்கு! நா ஒண்ணுஞ் செஞ்சிர மாட்டே..." அவள் பிறகு தேநீரை வாங்கி அருந்துகிறாள். தனது ஆயுளில் அத்தகைய இனிமையை அநுபவித்ததில்லை என்று தோன்றுகிறது. அவள் வீட்டுப்படி ஏறியதும் மாமன் வந்திருக்கும் குரல் கேட்கிறது. "இப்பதா வாரீங்களா? இந்நேரமா ஆவுது? எட்டடிக்கப் போவுது?" "இன்னைக்கு அளத்துள ஒரு பொம்பிள, புள்ள பெத்திட்டா" என்று செய்தியவிழ்க்கிறான் பச்சை. "அப்புறம்?..." என்று மாமா வியந்து பார்க்கிறார். "எல்லாரும் வேலையவுட்டுப் போட்டு வேடிக்கை பாத்திட்டு நின்னிட்டா. கண்டிராக்ட் வரப்பு உப்பு தட்டு மேட்டுக்குப் போவாம வுட மாட்டேனிட்டா" என்று கூறும் பொன்னாச்சிக்கு சட்டென்று நினைவு வருபவளாக, "நீங்க எப்ப வந்திய மாமா, மாமி, பிள்ளையள்ளாம் சொவமா? ஞானத்தைதன்னாலும் கூட்டி வரப்படாதா?" என்று வினவுகிறாள். அவள் பரபரப்பாகப் பேசியே கேட்டிராத மாமாவுக்கு அவள் முற்றிலும் மாறிப் போயிருப்பதாகத் தோன்றுகிறது. "நானிங்க சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்தேன். யாரும் இல்ல. பெறகு வீட்டுக்கார ஆச்சி சொன்னாவ, நீங்க வர ஆறு மணியாவுன்னு. ஒங்க மாமி சொன்னா, அவப்பச்சிக்கு ஒடம்பு சரியில்லன்னு கூட்டிப் போனான்னா. சரி, ஒடம்பு நல்லானதும் வந்திடுவீங்கன்னு இருந்தேன். பிறகு இன்னிக்கு இங்க வர சோலி இருந்தது. சுசய்ட்டி விசயமா வந்தா நீங்க வேலய்க்கிப் போயிருக்கிய..." பொன்னாச்சிக்குத் தான் குற்றவாளியாக நிற்பதாகத் தோன்றுகிறது. "நீங்க தப்பா நினைச்சுக்க வேண்டாம் மாமா. இங்க சின்னம்மாக்கும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. எத்தினி காலந்தா ஒருத்தருக்குப் பாரமா இருக்க? பொறவு இந்த வீட்டுக்கார ஆச்சிதா பனஞ்சோல அளத்துல அட்வான்சு, போனசு எல்லாம் கெடய்க்கும்னு வேலைக்கு சேத்து விட்டா..." "அட... பொன்னாச்சியா இம்புட்டுப் பேச்சுப் பேசுறா?" என்று அவர் கேட்பது உண்மையில் பாராட்டா, அல்லது இடக்கா என்று புரியவில்லை. "இப்படியேதான் ஆள ஏமாத்தறானுவ. ஏத்தா ஆடு நனயிதுண்ணு ஓநாய் அழுமா? அட்வான்சாம், அட்வான்ஸ்? படிக்கிற பருவத்துப் பிள்ளைய எல்லாம் ஆசைக்காட்டி மடக்கிப் போட்டு உப்புச் செமக்க வைக்கிறானுவ. காது குத்து, கண்ணாலம் காச்சி, மொதலாளி பணம் கொடுப்பான்னு கங்காணிய குழையடிப்பானுவ. இந்தத் தொழிலாளி யாரானும் முன்னுக்கு வந்த கதை எங்கயானும் உண்டா? செந்திலாண்டவ அளத்து முதலாளி, நாங்க கூட்டுறவு ஏக்கருக்குப் பட்டா வாங்கையிலே அவனும் கட்டுக்குத்தவை நூறு ஏக்கர் வாங்கினா, அப்பமே தெரியல எங்களுக்கு. அவன் வாக்கா, ஓடைக்கு அப்பால வாங்கினா. இப்ப, அவன் ஆயிரம் ஏக்கருக்கு மேல சேத்துட்டான்; வார்முதல் தொழில் பண்ரா. குத்தாலத்துல பங்களா, கொடைக்கானல்ல பங்களா, செந்தியாண்டவனுக்கு சேவை பண்ணப் போனா அங்க ஒரு பங்களா... பொண்ணு பிள்ளயெல்லாம் அமெரிக்காவுக்கும் ஜர்மனிக்கும் போறா, ஊரில இருக்கிவ தொழிலையெல்லாம் வளச்சிப் போட்டுக்கிறான். இப்ப உப்புத் தொழிலாளி நீரு - நீருன்னுதா வெச்சுக்குவமே. ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு தான் பதம்? கண்ணு வெள்ளப்பட வழிஞ்சி ஒண்ணில்லாம உக்காந்திருக்கீரு..." மாமாவுக்கு ஆவேசம் வந்துவிட்டதென்று பொன்னாச்சி நினைக்கிறாள். அவர் பேசத் தொடங்கினால் இப்படித்தான் பேசிக் கொண்டே போவார். ஆனால் வீட்டில் மட்டும் அவர் பேச்சு எடுபடாது. "சொம்மா கெடந்து சலம்பாதீம், மொதலாளி தொழிலாளிண்டு. அவிய மொதலாளியா இருந்து இத்தினி பேருக்கும் கூலி கொடுத்துத்தா காக்கஞ்சிக்கின்னாலும் அடுப்பு புகையிது. ஒங்களுக்குள்ள ஒத்துமயில்லாதப்ப அதப் பேசி என்ன பிரேசனம்? சங்கக்கார அத்தினி பேரும் அளத்துல பாடுபட்டு ஒத்துமையா நிக்கிறியளா? மூடமுக்கா ரூவாயிண்டு இங்க வாங்கி இவனுவளே மத்தவனுக்கு விக்க துரோகம் செய்யிறா" என்று மடக்கி விடுவாள். அவரால் மறு பேச்சுப் பேச முடியாது. மருதாம்பா கருப்பட்டிக் காப்பியை இறுத்து, வட்டக் கொப்பில் (வட்டக் கொப்பி - டவரா தம்ளர்) ஊற்றி மாமனுக்குக் கொண்டு வந்து வைக்கிறாள். அந்தப் பளபளக்கும் 'வட்டக் கொப்பி' வகையறா பெரியாச்சியிடமிருந்து பாஞ்சாலி கேட்டு வாங்கி வந்ததென்று பிறகுதான் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள். உறைக்கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து மேல் கழுவிக் கொண்டு மசாலை அரைத்துக் கொடுக்கிறாள் பொன்னாச்சி. மாமா இன்னும் பேசிக் கொண்டே இருக்கிறார். காப்பி குடித்தாகிவிட்டது. "அளத்துல ஒருத்தி பிள்ள பெறுறவரய்க்கும் ஏன் வேல செய்யிதா? கொஞ்சம் மனுசாபிமானத்தோட பேறு காலத்துக்கு அலவன்சு மாதிரி ஏதாவது கொடுக்கிறாவளா? இவங்களுக்கு அதனாலே கொறஞ்சிடுமா? உப்பு நட்டம் வந்தா மீனுல லாபம் வரும். மிசின் போட்டு வாங்கிவிட்டிருக்கா. மீனுல நட்டம் வந்தா காடுகரை வச்சிருக்கா. காபித் தோட்டம் வாங்கறா. பணம் பணத்தோட சேரச் சேர சுயநலம் அதிகமாகி மனிசாபிமானம் போயிடும் போல இருக்கு. ஒரு கூலின்னு நிர்ணயம் செஞ்சா, எல்லா அளக்காரனும் அதெக் குடுக்கிறாவளா? எடயில கண்ட்ராக்டுன்றா. ஆடுமாடுங்கள சப்ள பண்ணுறாப்பல தொலாளிங்களை வளச்சிட்டுப் பணம் பண்றா. மொதலாளிக்கும் தொழிலாளிக்கும் நடுவ இவெ கமிசன். இதுக்குச் சட்டம் கெடயாது. சரிதானேம்மா?" சின்னம்மா வட்டக் கொப்பியைக் கையில் எடுத்துக் கொண்டு "அதுக்கு என்னேயலாம்? கூலி ரேட்படி குடுக்கிறவங்ககிட்ட மேக்கொண்டு முக்காத்துட்டுக் கிடையாது. மழக்காலம், தீவாளி, பண்டியல் போனசு, சீலன்னு ஒண்ணு கெடயாது. மே நாளு, சுதந்தர நாளு லீவு கூடக் கெடயாது. அதுக்கு இது தாவிலயில்ல?" என்று கேட்கிறாள். "நீங்க எந்த அளம்?" "கருவேலக் காட்டு அளம். திருச்செந்தூர் ரோடில பக்கந்தா. பாலெந்திரும்பினா வந்துடும்; இங்கதா அஞ்சு வருசமா வேல. இவியளும் செய்நத்துக்கு வந்தா. இப்பவும் லேசா தொழி (தொழி - தெப்பம் - கசடு தங்கும் முதல் பாத்தி) வார கொள்ள ரெண்டில ஒண்ணில குடுப்பா. வாருபலவை போட்டிட்டு தானிருந்தாவ. கங்காணி ஒருத்தர்னு இல்லாம மாறிட்டே இருப்பம். கால் கொப்புளம் வந்து ஒரு நா, ரெண்டு நான்னா போகாம இருந்தா ஒண்ணில்ல. போன வருசம் இந்தப் புள்ளக்கி பேதி காய்ச்சல் வந்து பத்து நா சோலிக்குப் போகல. கங்காணி ஒரு ரூவாக் கூலிக் குறச்சிட்டுக் குடுத்தா ஒரு நாளக்கி... என்ன சொல்றியே?" "என்னத்த சொல்றது? முதலாளியளுக்கு தொழிலாளிய ஒத்துமையில்லாம இருக்கிறதேதா லாபம். யூனியன் தலைவர்னு யாரானும் செல்வாக்கா தலையெடுத்திட்டா, அவனை ஒடனே வாய்க்கரிசி போட்டு, அவம் பக்கம் இழுத்திடறா. சொல்லி பிரேசனமில்ல?" சாப்பாடு ஆனதும் மாமா கிளம்பி விடுகிறார். "ரா இருந்துட்டுக் காலமே போவலாமே?" என்று அப்பச்சி மரியாதையாகக் கூறுகிறார். "இல்ல ஒரு ஆளப் பாக்கணம், ஒம்பது மணிக்குதான் வீட்டுக்கு வருவான்னா. நா வாரே... பொன்னாச்சிப் பதனமா இருந்துக்க. எல்லா இருக்காவ, இருக்கிறம்ன்னாலும் அவவ தன்னத்தானே பேணிக்கணும். தயிரியமாயிருந்துக்க. பிறகு முருகன் இருக்கிறான்!" என்று அறிவுரை கூறிக் கொண்டு நடக்கிறார். பச்சை அதற்குள் படுத்துவிட்டான். அவனை எழுப்பி வருகிறாள் பொன்னாச்சி. "லே தம்பி. ஒளுங்கா பெரியவங்க சொன்ன பேச்சைக் கேட்டு நடந்துக்க; வேண்டாத சகவாசத்துக்குப் போகாத, வாரன் மாப்பிள! வரேம்மா...!" அவர் படியிறங்கிச் செல்லும் வரையிலும் பொன்னாச்சி உடன் வந்து திரும்புகிறாள். |