(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)

6

     அந்த ஆண்டுக்கான முதலுப்பை வாரி எப்போதோ அம்பாரம் குவித்து விட்டார்கள். ஆனால் கங்காணி தொழிலாளர் கூலிக்கு முதலுப்பு வாரும் பூசை இன்னமும் போடவில்லை. ஆயிரமாயிரமாகப் பரந்து கிடக்கும் ஏக்கர் பாத்திகள் எல்லாவற்றிலும் செய்நேர்த்தி முடியவில்லை என்று கணக்குப்பிள்ளை பூசை என்ற ஆயத்தை இன்னும் நிகழ்த்தவில்லை. நான்கு மூலைகள் கொண்ட சிறு சதுரமேடு போல் கட்டப் பெற்றிருக்கும் பூடத்துக்கு வெள்ளையடித்து அழகு செய்வது கண்டு பேரியாச்சி, "பூடத்துக்குப் பூசை போடுறாக போல இருக்கு..." என்று ஆறுதல் கொள்கிறாள்.

     அவர்களுக்கெல்லாம் இனி முழுக்கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

     பொன்னாச்சிக்கு அதைப் பற்றிய ஆர்வமும் ஆவலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவளும், பச்சையும் 'கண்ட்ராக்ட்' கூலிகள். அவர்களுக்கு நாச்சியப்பன் மனமுவந்து கொடுப்பது தான் கூலி. பொது நிர்ணயக் கூலி முறையில் அவர்கள் அளத்தில் பணியெடுக்கவில்லை.

     பூடத்தின் முன் வாழையிலை விரித்து, உப்பை அள்ளி வைத்து, கற்பூரம் காட்டிக் கும்பிடுகிறான் பிச்சைக்கனி. அந்த முதலுப்பு, முதலாளிகள் வீட்டுக்குப் போகும் உப்பு. விளைச்சலைப் பற்றியோ, இலாப நட்டங்களைப் பற்றியோ நினைக்க அவர்களுக்கு உரிமையுமில்லை ஒன்றுமில்லை.

     காலையில் எங்கோ ஆலைச்சங்கு ஒலிப்பதைக் கணக்கு வைத்துக் கொண்டு எழுந்து, சின்னம்மாவும், அவளும், தம்பியும், அலுமினியம் தூக்குப் பாத்திரங்களில் பழைய சோற்றையோ, களியையோ எடுத்து வைத்துக் கொண்டு அதையே கொஞ்சம் கூழாகக் கரைத்துக் காலை நேரத்துக்கு அருந்தி விட்டு, பாத்திக் காட்டில் நடப்பதற்கான பன ஓலை மிதியடிகளைக் கோத்து வாங்கிக் கொண்டே நடப்பார்கள். அந்த மிதியடிகள் ஒரு நாளைக்கு ஒரு சோடி போதாமல் பகலுடன் கிழிந்து விடுகின்றன. நறநறவென்று தெரியும் உப்புக்கு ரப்பர் செருப்பு ஈடு கொடுக்காது. வெட்ட வெளியில் பெண்களான அவர்களுக்கு இயற்கைக் கடன் கழிக்க ஓர் மறைவிட வசதிகூடக் கிடையாது. சூலியான அன்னக்கிளி தவித்துப் போகிறாள். எங்கோ கடற்புரத்தை நாடி அவர்கள் நாலைந்து பேராக நடக்கின்றனர்.

     "ஆச்சி, அடிவயிறு கல்லா நோவு..." என்று கிழவியான பேரியாச்சியிடம் அன்னக்கிளி கரைகிறாள். அவள் கண்கள் குழியில் எங்கோ கிடக்கின்றன. கன்னத்தெலும்புகள் முட்டியிருக்கின்றன. நான்கு குழந்தைகள் பெற்றிருக்கிறாள். இது ஐந்தாவது பிள்ளைப்பேறு. புருசன் ஐந்தாறு மாசங்களுக்கு முன் இவளை விட்டு ஓடிப்போய் விட்டானாம். அவளைப் பற்றி 'ஒரு மாதிரி'யானவளென்று அழகம்மா, பொன்னாச்சியிடம் கிசுகிசுக்கிறாள்.

     "ஏட்டி. நீர்க்கோவயின்னா, பெருஞ்சீரவம் வெந்தியம் ரெண்டயும் வெடிக்கவுட்டுக் கிழாயம் வச்சிக் கருப்பட்டியப் போட்டுக் குடிக்கிறதில்ல? நாலு புள்ள பெத்தவதானே?" என்று பேரியாச்சி இரைந்து பேசுகிறாள்.

     பொன்னாச்சிக்கும் கூடச் சில நாட்களில் இட்டுப் போகிறது. கண்களிலிருந்து தாரையாக நீர் வழிந்து பார்வையை மறைக்கிறது. அதைத் துடைக்கக் கூட முடியாமல் இயந்திரம் போல் வரப்புக்கும் தட்டு மேட்டுக்குமாக உப்புப் பெட்டி சுமக்கிறாள்.

     அப்பனைக் காணும் போது அவளுக்கு இப்போதெல்லாம் கசிவு தோன்றுவதேயில்லை. அவர் அவள் புறப்படும் போதெல்லாம் படுத்திருக்கிறார். மாலை நேரங்களில் எங்கோ தேநீர்க் கடையில் அரசியல் பேசிவிட்டு சுடுசோறு தின்பதற்கு வந்து விடுகிறார்.

     அன்று பெட்டியைத் தலையில் வைத்து அவள் நடக்கையிலே மாமனின் நினைவே தோன்றுகிறது. "பெண் குழந்தைங்க புறா போல, நம்ம வீட்டு பாதுகாப்பை விட்டு வெளியே அனுப்பக் கூடாது..." என்று வாய்க்கு வாய் பேசுவார். மாமா எத்தனையோ நாட்கள் தூத்துக்குடிக்கு வருபவர் தாம். கயிறு வாங்கணும், இரும்பாணி வாங்கணும், தாசில்தாரைப் பார்க்கணும், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பஸ் ஏறுவாரே, அவர் வரக்கூடாதா!

     "அப்பனைப் பார்த்தாச்சில்ல? கிளம்பு?" என்று சொல்ல மாட்டாரா? சின்னம்மாவின் மக்கள் அவளிடம் ஒட்டவேயில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அவளுக்கும் நெருங்கி உறவாட நேரம் இருக்கிறதா?

     வள்ளிக்கும் குஞ்சரிக்கும் அவள் தான் சடை பின்ன வேண்டும். ஓடைக் கரையிலிருந்து மாமா, தாழம்பூக் குலை கொண்டு வருவார். அவ கத்தி கத்தியாக வெட்டித் தைத்து விடுவாள். ஞானம் அவள் தட்டினால்தான் உறங்குவாள். வேலு முன்பு வந்திருந்த போது கூட அவனுக்குப் புத்தகமெல்லாம் தட்டி வைத்தாள். அவனுடைய சட்டையையும் சராயையும் குளத்தில் சோப்புப் போட்டு அலசிக் கொண்டு வந்து, மூங்கில் கழியை நுழைத்துக் காயப் போடுவாள்.

     "பொன்னம்மா தோச்சா பொட்டியே போடவாணாம்!" என்பான். அவன் பொன்னம்மா என்று தான் அவளைக் கூப்பிடுவான்.

     அவன் பரீட்சைக்குப் படிப்பதற்கு அவளைத் தான் தேநீர் போட்டுத்தரச் சொல்லுவான்.

     அந்த மாமன் வீட்டை விட்டு அவள் அவர் இல்லாத போது வந்திருக்கலாமா?

     பகலில் உணவு கொள்ளும் நேரத்தில், ராமசாமி என்ற அந்த ஐட்ரா பார்க்கும் ஆள் அவளைப் பார்த்துக் கொண்டு அங்கே தான் உணவு கொள்கிறான்.

     அவன் அவளிடம் எதுவும் பேசுவதில்லை. ஆனால் அவனுடைய பார்வை, "பயப்படாதே, நான் இருக்கிறேன்" என்று சொல்வது போல இருக்கும்.

     அவன் தண்ணீர்க் குழாயில் நீரருந்துகையில் பச்சையிடம், "தண்ணி குடிச்சிக்கோ?" என்று குழாயை ஒப்படைப்பது வழக்கமாகிறது.

     "அவரு மாசச் சம்பளக்காரரா அக்கா! மொதலாளிக்கு வேண்டியவியளா!" என்று பச்சை பொன்னாச்சியிடம் கிசுகிசுக்கிறான்.

     அதனால் தான் மற்றவர் யாரும் சகஜமாக அந்த ஆளிடம் பேசிப் பழகுவதில்லையோ?

     "ஒனக்கு ஆரு சொன்னா?"

     "அந்த 'டைவர்' சொன்னா! அந்தாளோட அப்பச்சி முன்ன பெரிய முதலாளியக் கொலை செய்யறதுக்கு இருந்தான்னு போலீசு கண்டுபிடிச்சி செயிலுக்குக் கொண்டு போயிட்டாவளாம். அப்ப இவிய ஆத்தா அளுதிச்சாம். மொதலாளி எரங்கி இவரை வேலைக்கு வச்சாளாம். அப்பா இப்ப செத்துப் போச்சாம். இப்பம் மாசச் சம்பளமாம் அதாம் பவுருன்னு கருவிட்டுப் போறா அந்த டைவரு..."

     "நீ அந்தக் குடிகாரச் சவத்துங்கூடப் பேசாதே..." என்று அவள் பச்சையை எச்சரித்து வைக்கிறாள்.

     அந்தச் சனிக்கிழமை மாலையில் சின்னம்மா கூலி வாங்கி வருகையில் கருவாடு வாங்கி வந்திருக்கிறாள்.

     சுடுசோறு வடித்து நிமுர்த்து முன் பச்சை சில நாட்களில் படுத்துவிடுகிறான். அவசரமாக வடித்து எடுத்து, ஒரு துவையலை அரைத்து அப்பனுக்கும் குழந்தைகளுக்கும் பொன்னாச்சி சோறு போடுகிறாள்.

     "கருவாடா? வறக்கலியா?" என்று நா ருசிக்க உண்ணும் ஆவலில் அப்பன் கேட்கிறார். சின்னம்மா பட்டென்று பதில் கொடுக்கிறாள்.

     "தலைப்புரட்ட, காலுக்குக் குழச்சிப் போட எண்ணெயில்ல. எண்ண என்ன வெல தெரியுமா?"

     அப்பச்சி பேசவில்லை. தட்டில் கைகழுவிவிட்டு, நகர்ந்து கொள்கிறார். தம்பி வாசல் திண்ணைக்குப் போய்ச் சுருண்டு கொள்கிறான். சரசுவும் நல்லகண்ணுவும் வாசலுக்கு ஓடி ஆச்சி வீட்டில் ரேடியோப் பெட்டி பாடுவதைக் கேட்கப் போகின்றனர்.

     சின்னாச்சியும் அவளும் சோறு வைத்துக் கொண்டு அமருகின்றனர். கருவாடு நன்றாக இல்லை. வீச்சம் குடலைப் புரட்டுகிறது. முகம் முகத்துக்குத் தெரியவில்லை. உயிர் பிழைக்க மட்டுமே அன்ன ஆகாரம் கொடுக்கும் கூலியைப் போன்று ஓர் சிம்னி விளக்கு. அந்த மஞ்சள் ஒளியில் விவரம் காண முடியாது. ஒரு குழம்பு வைத்துச் சுவை காணக்கூட முடிவதில்லை. மாமன் வீட்டிலும் வறுமை தான் என்றாலும், நிதமும் இந்த வேகாச் சோறு இல்லை. இந்த நூல் பிடித்த வரைகள் அங்கு இல்லை. இந்த ஒளியில் முகம் சுளித்தாலும் கண்டு கொள்ள முடியாது. அது அவசியமும் இல்லை. அவர்கள் உழைப்பின் பயனான உணவைக் கொண்டு பசி எரிச்சலைப் புதைக்கின்றனர்.

     பொன்னாச்சிக்கும் தம்பிக்கும் அந்தச் சனிக்கிழமையில் கூலி போடவில்லை. ஞாயிறன்று காலையில் தம்பியைக் கூட்டிச் சென்று அளத்தில் ஆபீசில் போய் வாங்கிக் கொள்ள வேண்டும். "நேரமாகி விட்டது. நாளைக்கு வா!" என்று கண்ட்ராக்ட் கூறினான். எல்லோரும் வருவார்கள் என்றாலும் அவளுக்கு நெஞ்சம் அச்சத்தினால் கட்டிக் கிடக்கிறது. அதை நினைத்தால் சோறும் இறங்கவில்லை.

     "சின்னாச்சி... எனக்கு இந்தப் பனஞ்சோலை அளம் ரொம்பப் பயமா இருக்கி..."

     மன ஆற்றாமையின் சுமைகளில் மோதுண்டு சொற்கள் மெல்லப் பிரிகின்றன. சின்னம்மாவோ, முத்துக் கொறிக்கவில்லை. பீடி புகைக்கும் அப்பன், உணர்ச்சியை விழுங்கிக் கொள்வது போல் "அஹம்" என்று கனைக்கிறார்.

     "ஒங்க கங்காணியிட்டச் சொல்லி, எனக்கும் ஒங்க கூட அளத்துல வேல வாங்கித் தாரும் சின்னாச்சி. ஒங்க கூட இருந்தா பயமில்லாத பதனமாயிருக்கும்."

     இதற்குமேல் தனது சங்கடத்தைச் சூசகமாக உணர்த்த முடியாதென்று அவள் நினைக்கிறாள். இதற்கும் சின்னாச்சி எதிரொலி எழுப்பவில்லை.

     அப்பன் பீடிக்காரல் பாய்ந்தாற் போன்று கனைத்து, தொண்டையைச் செருமிக் கொள்கிறார். மெள்ள எழுந்து சென்று வெளியே காரித் துப்புகிறார். பிறகு வந்து உட்காருகிறார். இத்தனை நேரமும் சின்னம்மா வாய் திறக்கவில்லை.

     பொன்னாச்சி, "அந்தக் கண்டிராக்டு, மோசமா நடக்கா. நாளக்கி ஆபீசில போயிக் கூலி வாங்கிக்கணுமா" என்று சங்கடத்தை வெளியிடுகிறாள்.

     "ஆரு, நாச்சப்பனா? சவத்துப்பய, அவன் முழியப் புடுங்கித் தேரில போடணும். அந்தப்பய, ஒரு நேரக் கஞ்சிக்கு வக்கில்லாம இருந்தவ, பொண்டுவள கணக்கபிள்ளமாருக்குக் கூட்டிக் குடுத்துக் கொடுத்துத் திரியிறான். ஒம்மேல மட்டும் அவெ கய்ய வய்க்கட்டும்..."

     அவர் முடிக்கவில்லை, பூமி பிளந்து குருதி கொப்புளித்தாற் போன்று சின்னம்மாவின் குரல் ஆங்காரமாக வருகிறது.

     "ஆமா! என்னேயிவீரு! முன்னபின்னக் கண்ட்ராக்டு கங்காணிச் சவங்க செய்யாததியா செய்யிறா அவெ? நீரு என்னேஞ்சீரு? சீலயப் புடிச்சிளுத்துப் பதங்கொலய வய்க்கிறது கொஞ்சமா? வயித்துப் பசின்னு நாலு செவத்துக்குள்ளேந்து வெளியே வந்தா இந்த மிருவங்கதா. இதுங்க சீரளிக்கிறதுதா...?"

     தோலை நீக்கிச் சீழும் இரத்தமும் குழம்பும் புண்ணை வெளிக்காட்டினாற் போன்று பொன்னாச்சி விக்கித்துப் போகிறாள். மருதாம்பாளின் முகத்தில் மஞ்சள் ஒளி நிழலாடுவது தெரிகிறது; கண்கள் பளபளக்கின்றன.

     "ஏம் பேசாம இருக்கீரு? ஏ?... ஏ?..."

     சோற்றுக்கையுடன் அவள் எழுந்து வெறி பிடித்தாற் போன்று அவர் மேலே போட்டிருக்கும் துணியுடன் கழுத்தைப் பற்றுகிறாள்.

     குரூரம் கெக்கலி கொட்ட அவள் பொங்கெழுச்சி கண்டு அப்பன் அதிர்ச்சியுற்று ஆவியாகப் போகிறார். அவள் கையைப் பிடித்துக் கொண்டு, "வாணா... வாணா மருதாம்பா, என்னிய விட்டிரு..." என்று கெஞ்சும் குரல் அழுகையாகத் தழுதழுக்கிறது.

     "இருட்டில் வந்து தட்டுமேட்டுல லாரின்னு கொரல் குடுப்பா. உள்ளாற வந்து சீலயப் புடிச்சி இளுத்திட்டுப் போவா. புருசனாம் புருசன், அவ ஒடம்பில ரத்தமா ஓடிச்சி? இவ சீலயப்புடிச்சி இளுத்திட்டுப் போவையில பாத்திட்டு ஒக்காந்திருப்பா, காலம் வந்ததும் கட்டயெடுத்திட்டு அடிச்சுக் கொல்லுவான், பாவி, ஊரம்புட்டும் பாத்திட்டிருக்கும் - நாசகாரக்கும்பல்..."

     பொன்னாச்சிக்கு அந்தச் சிற்றம்மையைக் கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.

     இந்த அப்பனைக் கூட அவ்வளவுக்கு யாரும் தூற்றியதில்லை; ஏசியதில்லை. ஆனால் கண்ணால் பார்த்திராத இந்தச் சின்னம்மாவை எவ்வளவுக்கு யார் யாரோ ஏசியிருக்கின்றனர்! அப்பனின் குரல் அழுகையிழைபோல் இருட்டு குகையில் ஒன்றி மறைகையில் சின்னம்மா குரல் உடைய விம்முகிறாள்.

     இந்தச் சின்னம்மாவும் ஒரு காலத்தில் பொன்னாச்சியைப் போல் உதயத்தில் இதழ் விரிக்கும் மலராக எதிர்காலக் கனவுகள் கண்டவளாக இருந்திருப்பாளோ? வயிற்றுப் பசியுடன் போட்டி போட இயலாத கனவுகள் அவளையும் வருத்தி குலைத்திருக்கும். அவளை ஓர் ஏலாத குடும்பக்காரன் கலியாணம் என்று வளைத்துக் கொண்டிருக்கிறான்.

     பிறகு... பிறகு... இந்த அப்பன்...

     இவருக்கா அவள் இரக்கப்பட்டாள்?

     சின்னம்மா இப்போது எதற்கு விம்மி அழுகிறாள்? தன்னுடைய சுகந்த மணங்களெல்லாம் சேற்றுக் குட்டையிலும் தெருப் புழுதியிலும் சிந்திவிட்டதென்று அழுகிறாளோ?

     பொன்னாச்சிக்கு நெஞ்சு கட்டிப் போகிறது. சோறு இறங்கவில்லை. வேலியும் காவலும் இல்லாமல், உயிர்ப்பும் மென்மையும் வறண்டு போகும் உப்புக் காட்டில் தன்னைப் போல் நலம் குலைய நிற்கும் ஒவ்வொரு பெண்ணையுமே நினைத்துச் சின்னாச்சி அழுவதாகத் தோன்றுகிறது.

     அன்றிரவு பொன்னாச்சிக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மாமன் வரமாட்டாரா, திரும்பிப் போய்விட அழைக்க மாட்டாரா என்று கூட நினைத்தாளே. அந்த நினைப்பு உகந்ததாக இல்லை. இங்கே இந்தக் களத்தில், கங்காணிகளும் கணக்கப்பிள்ளைகளும், 'கண்ட்ராக்ட்'களும் நச்சரவுகளாய் ஊரும் களத்தில், காவலில்லாத பூச்சிகளாய் அவர்கள் இருக்கிறார்களே. அது தொடர்ந்து கொண்டே இருக்குமா?... இதைத் தட்டிக் கேட்க ஆளில்லாமலே இருந்து விடலாமா?

     'தட்டிக் கேட்க' என்று தோன்றுகையில் ராமசாமி, அந்த 'ஐட்ரா' ஆள், முதலாளிக்கு வேண்டிய ஆள் என்று தம்பி சொன்ன அந்த... அவர் முகம் நினைவுக்கு வருகிறது. அதிக உயரமுமில்லை; பருமனுமில்லை. வெள்ளைச் சட்டையும் வெளுத்த முண்டாசும் அரும்பு மீசையும் குளிர்ந்த விழிகளுமாக அந்த ஆள்... "தண்ணீர் குடிச்சீட்டீங்களா?" என்று கேட்கும் ஆள்... அவளுடைய சங்கடங்களைப் புரிந்து கொண்டு விலக்கிய ஒரே ஆள்...

     அவரும் அந்தப் பாத்திக் காட்டில் தான் இருக்கிறார். உப்புக் கடலினால் கரிப்பு மணிகள் மட்டுமே விளையவில்லை. நல்முத்து கூட விளைகிறது. ஆனால் அது அருமையானது. அதனால் விலைமதிப்பற்றது.

     மறுநாட் காலையில் சின்னம்மா, பச்சையையும் அப்பனையும் அனுப்பி அவளுடைய கூலியைப் பெற்றுவர செய்கிறாள். ஞாயிற்றுக் கிழமையில் நல்ல தண்ணீர்க்குளம் தேடிச் சென்று துணி துவைத்து வருகிறார்கள். அன்றுதான் மாசத்துக்கொரு முறையான எண்ணெய்த் தலை முழுக்கும் வைத்துக் கொள்ள வேண்டும். கூந்தலைக் கோதிக் கொண்டு அவள் சன்னலின் அருகே நிற்கையில் ஓலை கிழித்துக் கொண்டிருக்கும் வீட்டுக்கார ஆச்சி,

     "ஏட்டி? கூலி போடலியா நேத்து?" என்று வினவுகிறாள்.

     "இல்ல. அப்பச்சியும் பச்சையும் போயிருக்கா?"

     "அதாங் கேட்டே. காலையில் சின்னாச்சி வாடவையும் சீட்டுப் பணமும் குடுத்திடுவா. காணமேன்னு கேட்டே..."

     பொன்னாச்சிக்கு அவள் வாடகைப் பணத்தை நினைவு படுத்தும் மாதிரியில் கோபம் வருகிறது. என்றாலும் எதுவும் பேசவில்லை. இவளுடைய ஒரே பையனும் மூன்று வருஷங்களுக்கு முன் இறந்து போனானாம். வட்டிக்குக் கொடுக்கும் பணத்தைக் கண்டிப்பாக வாங்கி விடுகிறாள்.

     அவளிடம் உப்பளத் தொழிலாளரின் பாத்திரங்கள், நீர் குடிக்கும் லோட்டாவிலிருந்து சருவம் வரை அடகு பிடிக்கப் பட்டவை கிடக்கின்றனவாம். அந்த முன்னறைக்கு நேராக உள்ள அறையில் இரும்பு அலமாரியும் கட்டிலும், சாமான்களும் நிறைந்திருப்பதை பாஞ்சாலி அவளிடம் சொல்லி வியந்தாள். ரோசத்துடன் சின்னம்மாவிடம் அப்பனும் பச்சையும் கூலி பெற்று வந்த உடனேயே அவள் கடனுக்காக பணத்தையும், வாடகையையும் கொடுத்து விட வேண்டும் என்று கூறுகிறாள்.

     "இப்ப வேணா... அடுத்த கூலிக்குக் குடுக்கலாம். அடுப்புக்கு வய்க்கப் பானை ஒண்ணு வாங்கணும். அவிய ஒண்ணுஞ் சொல்லமாட்டா."

     "எங்கிட்டக் கேட்டா; ஏங்குடுக்கலன்னு..."

     "பானை வாங்கணுமின்னா ஒண்ணுஞ் சொல்லமாட்டா. மேலுக்கு அப்படி வெட்டித் தெறிச்சாப்பல பேசினாலும் கெரு ஒண்ணுங் கிடையாது. பாவம் ஒரே பய... அவன் போயிட்டா... அதுலேந்து ஆச்சி முன்னப் போலவே இல்ல..."

     "ஆச்சி புருசன் எங்கேயிருக்கா?"

     "புருசனொன்னுமில்ல. அந்தக் காலத்துல அளத்துல சோலி எடுக்கறப்ப அந்தக் கணக்கவுள்ள வாரானே, அவங் கொலச்சி பெரி முதலாளி, இப்ப கெழமா படுத்த படுக்கையாயிருக்காண்ணு சொல்லிக்கிடுவா. அவனுக்குக் கூட்டி வச்சிட்டா. அவெ அந்த காலத்துல பொம்பிளன்னா பேயா அலையுறவ. ஆனா, இந்தாச்சி ஒரு கௌரவப் பட்டாப்பலவே வீட்டோடு இருந்திட்டா. பொட்டி கிட்டி மொடயும். இந்த வளவெல்லாம் அந்தக் காலத்துல அந்தக் கணக்கவுள்ள வகையா வந்ததுதா. ஒரு பையன் இருந்தா, நல்ல வாளிப்பா... அதா போட்டோ வச்சிருக்கே, வாசல்ல, அதுதா. படிச்சிட்டிருந்தா காலேசில. பொக்குனு போயிட்டா..."

     'எனக்குச் சாமில்ல. எஞ்சாமி செத்துப் போயிட்டா'ன்னு அவள் கூறிய சொற்கள் பொன்னாச்சிக்கு நினைவில் மின்னுகின்றன.

     "வயசுப்புள்ள எப்படிப் போயிட்டா? காருல கீருல அடிபட்டுப் போயிட்டானா?"

     "என்னென்னவோ சொல்லிக்கிறாவ. நமக்கு என்னம்மா தெரியும்? அந்தப் பய, ஆனா, மொதலாளி செறுப்பத்துல எப்படி இருந்தாவளோ அப்பிடியே இருப்பா. கெளவனுக்கு நாலு பொஞ்சாதி கெட்டி மொத்தம் பன்னண்டு ஆம்பிளப் பிள்ள இருக்கா. கடோசிக்காரந்தா வேதக்காரப் பொம்பளயக் கெட்டி, கிறிஸ்தியானியாயிட்டா. அவியளுக்கு அளத்துல செவந்தியாவரம் பக்கம் பிரிச்சிட்டாவ. அவதா துரை அளம்பா. முன்ன ஒண்ணாயிருந்த அந்தக் காலத்துல நாங்கூட செய்நத்துக்கு ஒண்ணே கால் ரூவா கூலிக்குப் போயிருக்கே. அந்தப் புள்ளயல்லாங் கூட இப்படி அச்சா மொதலாளியப் போல இருக்க மாட்டாவளாம். சொல்லிக்குவா. எனக்கென்ன தெரியும்? நடந்த தென்னன்னு கிளக்கால உதிச்சி மேக்கால போறவனுக்குத்தா தெரியும். இந்தப் பய பங்களாவுக்குப் போனானா ஒருநா. போட்டோவப் பார்த்தானாம். ஆத்தாகிட்ட வந்து, நானும் அவிய மகந்தானே, எனக்கொரு பங்கு சொத்து வாரணுமில்ல? பத்து லட்சம் பங்கில்லேன்னாலும் ஒரு லட்சம் வரணுமில்லன்னானாம். வக்கீலக் கண்டு பேசுவன்னானாம். பொறவு என்ன நடந்ததுன்னு தெரியாது... வக்கில் புரத்துல அம்மன் கொடை வரும். அன்னிக்குத்தா தேரியில இந்தப்பய அந்தால வுழுந்து கெடந்தா. நீல டௌசரு. சரட்டு எல்லாம் அந்தால இருக்கு... ஆச்சி கூத்துப் பாக்க ஒக்காந்திருக்கா. சேதி சொன்னாவ. போலீசெல்லாம் வந்தது. என்னமோ தண்ணியக் குடிச்சிட்டா. அதுதாண்ணு சொல்லி மறச்சிட்டாவ..."

     பொன்னாச்சி திடுக்கிட்டுத் திகைத்து சொல்லெழும்பாமல் அமர்ந்திருக்கிறாள். அடுப்பு திகுதிகுவென்று எரிகிறது; பானைச்சோறு பொங்குகிறது. சின்னம்மா ஒரு சுள்ளியை இழுத்து நீரைத் தெளித்துச் சிறிது அணைக்கிறாள்.

     "அப்படியா...? அப்படிக் கூடச் செய்வாங்களா சின்னம்மா? அப்ப அந்த அளத்து மொதலாளிக்குப் பன்னண்டு லச்சமா இருக்கு..."

     "நமக்கு என்னாத்தா தெரியிது. நாம லச்சத்தைக் கண்டமா, மிச்சத்தைக் கண்டமா. சொல்லிக்குவாக. உப்புத் தொழில்ல ஒரம் போடணுமா, களை எடுக்கணுமா, பூச்சி புடிச்சிடுமேன்னு பயமா? மிஞ்சி மிஞ்சி, மழை பெஞ்சாக் கொஞ்சம் கரையும். மறுவருசம் காஞ்சா உப்பாகும். இந்தத் தூத்துக்குடி ஊரிலேயே பேயறதில்லை. காயிறது பார். பேஞ்சிச்சின்னா அளத்துக்கு வேலய்க்கு வர ஆளுவ ரொம்ப இருக்கமாட்டா. காஞ்சிச்சின்னா கோயில்பட்டி அங்க இங்கேந்தல்லாம் கூலிக்கு இங்க ஆளு வந்து விழும். அதனால் மொதலாளி மாருக்கு நட்டம் எங்கேந்து வரும்? சிப்சம், (சிப்சம் - ஜிப்சம் எனப்பெறும் கூட்டுப் பொருள் சிமிட்டி உற்பத்திக்கு இன்றியமையாதது) மாங்கு (மாங்கு - மண்ணும் கசடும் கலந்த உப்பு) எல்லாம் மூடமூடயா வெல. சிமிட்டி ஃபாக்டரிக்கு அப்படியே போவுது. நாம சொமை சொமக்கிறோம்... வேறென்ன தெரியுது?..."

     பொன்னாச்சி சிலையாக இருக்கிறாள்.