(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)

16

     அம்மன் கொடை என்று குடித்துவிட்டு ஆடும் ஆட்டக்காரர்களிடம் அருணாசலத்துக்கு வெறுப்பு உண்டு. ஆனால், ஆடி அமாவாசைக்கு ஓடையில் மூழ்கிச் சங்கமுகேசுவரரை வழிபடாமலிருக்க மாட்டார். கோயிலுக்குச் செல்ல நல்ல பாதை கிடையாது. முட்செடிகளும் புதருமாக நிறைந்த காட்டில் ஒற்றையடிப் பாதையில் தான் கோயிலுக்கு நடந்து வரவேண்டும். அவரைப் போன்ற பக்தர்களும், பரதேசிப் பண்டாரங்களும் அக்கம் பக்கங்களிலிருந்து அந்நாளில் அங்கு வருவார்கள்.

     கோயங்காடு கதிரேசம் பிள்ளை, சண்முகபுரம் வீராசாமி நாடார் ஆகியோர் அந்தப் பக்கம் நிலச் சொந்தக்காரர்கள். பாலம் வந்து சாலையுடன் தொடர்பு ஏற்பட்டால் அவர்களுடைய நிலத்துக்குக் கிராக்கி ஏறும். அந்தக் குடும்பத்தினரும் சங்கமுக ஓடையில் முழுகி ஈசுவரரை தரிசிக்க வருவார்கள். முன்பெல்லாம் குடும்பத்துடன் அதிகாலையில் அங்கு வந்துவிடுவார்கள். சிவந்திப் பெண் சுருசுருவென்று அங்கே பெட்டி நிறைய இட்டிலியுடன், இலைக்கட்டுமாகக் கடை போட்டுவிடுவாள். அவளைப் போன்ற சுறுசுறுப்பு யாருக்கும் கிடையாது. வழிபாட்டுக்கு வந்தவர் அனைவரும் இட்டிலி வாங்கித் தின்று வயிறு குளிரத்தான் திரும்புவார்கள்.

     கைலாசக் குருக்கள் அதிகாலையில் வந்து, சிவனாருக்கு அபிடேகம் செய்து வில்வமும் அரளியும் கொய்து வந்து பூசை செய்திருக்கிறார். கூட்டமே இல்லை. பத்துப்பேர் கூட நீராடுவதற்கும் சுவாமி தரிசனத்துக்கும் வரவில்லை. காரும் பஸ்ஸும் எங்கெங்கோ கடற்கரைகளுக்கு மக்களைக் கூட்டிச் செல்கையில் இந்த மூலைக்கு நடந்து யார் வருவார்கள்!

     அவர் நீராடி, ஈசனை வழிபடுகிறார். ஒவ்வொரு ஆண்டிலும் "கூட்டுறவு உப்புத் தொழிலாளிகள் உற்பத்தி, விற்பனைச் சங்கம் நல்லபடியாகச் செயல்பட, அடுத்த ஆண்டுக்குள் பாலம் வந்து விட வேண்டும் எம்பெருமானே!" என்று நினைத்து வேண்டிக் கொள்வார்.

     பையன் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். எல்லா நம்பிக்கைகளுமே நிறைவேறும் என்ற தைரியம் ஆட்டம் கண்டுவிட்டாற் போலிருக்கிறது. ஆனால், மனிதன் நம்பிக்கை இழக்கக் கூடாது.

     இப்போது நீராடிக் கும்பிட்டுத் திருநீற்றுப் பிரசாதம் வாங்கிக் கொண்டு அருணாசலம் திரும்புகிறார். பசி எரிச்சல் கிளர்ந்து வருகிறது. வீட்டில் அவள் ஒரு வேலை ஒழுங்காகச் செய்வதில்லை. வாயைத் திறந்தால் குதர்க்கமும் சண்டையும் மிஞ்சுகின்றன. பொன்னாச்சியும் அந்தப் பையனும் சென்ற பின்னர் இங்கே இன்னமும் தரித்திரம் தான் கூடியிருக்கின்றன. இரண்டு பேர் குறைந்ததால் வளமை மிஞ்சிவிடவில்லை. துண்டை உடுத்துக் கொண்டு ஈரவேட்டியை விரித்துப் பிடித்தவராய் அவர் அளத்துக்கு நடக்கிறார். வானம் பளிச்சென்று நீலமாக இல்லை. ஆடி அமாவாசைக்குச் சிறிது மூட்டம் போட்டாற் போல் தானிருக்கும்.

     பாத்தியில் மேல் தண்ணி திறந்துவிட வேண்டுமென்ற நினைப்புடன் அவர் ஓடைக்காலில் இறங்கிக் கடந்து மேலேறுகிறார். வெள்ளைத் துணிகளைக் காயப் போட்டாற் போன்று அவரது அளம்தான் முழுதுமாக உப்பளமாக இருக்கிறது. வரப்பிலேறிப் பாத்திகளைப் பார்த்துக் கொண்டு வருபவர் ஒரு பாத்தியில் வந்ததும் திகைக்கிறார். உப்பு குருணைச் சோறாகப் பூக்கவில்லை. பருமனாக இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கோடைக்கால மழை மணிகள் போல் இறங்கி இருக்கின்றன. இவ்வாறு உப்புப் பூத்தால் மழை வருவதற்குக் கட்டியம் என்பார்கள். மழை ஆடியிலேயே விழுந்து விடுமோ? மழை மணி கண்டால் உப்பு விலை ஏறும். ஆனால் மழை பிறந்து விட்டால் உப்புக் காலம் போய் விடுமே?

     அப்போது சடையாண்டி, கிணறு செப்பம் செய்பவன் மண்வெட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு வருகிறான்.

     "கும்பிடறே மொதலாளி..."

     "ஆடி மாசம், மழை மணி எறங்கியிருக்குப் பாரு சடையா!"

     "இது ஒண்ணில்ல மொதலாளி. காத்து சூள்ச்சி. கர்போட்டாந்தா; மளை வராது... தூத்தூடி முத்தாலம்மன் கொடைக்கிப் போயிருந்தே மொதலாளி, பிள்ளயப் பாத்தே, போலீசில இட்டுப் போயிட்டாவ...?"

     திடுக்கிட்டாற் போல் அருணாசலம் அவனைக் கூர்ந்து நோக்குகிறார். பிள்ளை... ஆரு... வேலுவா? அவ எங்கே தூத்துக்குடிக்குப் போனான்?

     "....."

     "ஆரு? வேலுவா?"

     "நம்ம புள்ள இல்ல மொதலாளி, செவந்தியாச்சி மவெ, பச்சை. சாராயம் கொண்டிட்டுப் போனான்னு வளச்சிட்டுப் போனாவ. ராவுல திருவிழாக் கும்பல்ல, ஆட்டக்கார, மேளக்காரனெல்லாம் வந்து ஜேன்னு இருக்கையில இவனமட்டும் தலையில செமந்திட்டு வாரயில கண்டிட்டா. இவெக்கு ஓடி ஒளியத் தெரியல. தகரத்தில 'சரக்கு' இருக்கு. போலீசின்னு தெரியாம கும்பலோடு கும்பலா வந்திருக்கா. முதுகில் குத்தித் தள்ளிட்டுப் போயிட்டாவ..."

     "அட... பாவி? எத்தினி நாளாச்சி? அவப்பன் சின்னாத்தா எல்லாம் கொடக்கி வந்திருந்தாவளா?"

     "நா கண்டுக்கல மொதலாளி. பையனிங்க தண்ணி இறைக்குமில்ல? பாத்த மொகமாயிருக்கேன்னு கவனிச்சே. நம்ம புள்ள பச்சை; போன வெள்ளிக் கிளமதா..."

     மாமன் மழை மணியை மறந்து போகிறார். மேல் தண்ணீர் பாய்ச்சலையும் மறக்கிறார். விருவிரென்று வீட்டைப் பார்க்க நடக்கிறார்.

     நீராடியவுடன் கிளர்ந்த பசி எரிச்சலுடன் பல்வேறு உணர்வுகளும் குலுங்குகின்றன. இப்படி எத்தனையோ பசி எரிச்சல்கள் கிளர்ந்து கொண்டுதானிருக்கின்றன. அவை அனைத்தும் ஒன்று திரண்டு விட்டால் பத்து நூறு அணுகுண்டுகளுக்குச் சமமாகும் என்று அவருக்குத் தோன்றுகிறது. ஆனால் ஒன்று திரளும் நிலையில் இல்லாததால் மத்தாப்புப் புகையாக மட்டுமே ஆங்காங்கு கரிந்து போகிறது. பசி எரிச்சலுக்குப் பீடி, புகையிலை, டீத்தண்ணி என்று மாற்றுத் தேடிக் கொள்கின்றனர். பசியை ஆரோக்கிய ரீதியில் போக்கத் தேவையான உணவு, இரத்தத்தில் கலந்து உயிரூட்டும் தெம்புக்கான அன்னசாரம் போதிய அளவு கிடைப்பதேயில்லை.

     வீட்டில் ஆச்சி இல்லை. முன்சீஃப் வீட்டுக்குப் போயிருக்கிறாளாம். அவளிடம் பணம் இருக்கும். அவர் ஈர வேட்டியைக் கொடியில் போட்டு விட்டு வேறு வேட்டி உடுக்கிறார். அமாவாசை, ஆச்சியை ஏதேனும் சில்லறைக் காரியங்களுக்குக் கூப்பிட்டனுப்பி இருப்பார்கள். அவள் குளத்தில் குளித்து விட்டுதான், இனி வீட்டுக்கு வந்து பொங்குவாள். ஒரு மணியாகும். குழந்தைகளுக்கு ஏதேனும் பத்து பைசா துட்டுக் கொடுத்திருப்பாள்.

     அவர் சட்டையைப் போட்டுக் கொண்டு முன்சீஃப் வீட்டுக்குச் செல்கிறார். ஆச்சி உள் திண்ணை மெழுகிக் கொண்டிருக்கிறாள். இவரைப் பார்த்ததும் அருகில் வருகிறாள்.

     "சர்ட்டு மாட்டிட்டு எங்க கிளம்பிட்டிய? அமாசி, கோயிலுக்குப் போய் வாரன்னு போனிய?..."

     "ஆமா. ஒரு அஞ்சு ரூவா குடு வடிவு. அவசரம், காலேஜில என்னமோ அடிதடியாம். ஒம் மவன் செலம்பம் ஆடுறானாம்..." அவள் மருண்டு திகைக்கிறாள்.

     "ஆரு சொன்னது? ஆளு வந்ததா?"

     "ஆமா... அங்கக் கோனார் பய... ஒனக்குத் தெரியாது. அவஞ் சொன்னா. சங்கமுகேசுவரக் கோயிலுக்கு வந்திருந்தா?" இதுதான் மந்திரம்.

     'பொய்ம்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்' என்று மனசோடு சமாதானம் சொல்லிக் கொள்கிறார். அவள் உள்ளே செல்கிறாள். அவர் வீட்டை விட்டு வெளியே தெருவுக்கு வந்து நிற்கிறார்.

     சற்றைக்கெல்லாம் ஐந்து ஒற்றை ரூபாய்த் தாளாகக் கொண்டு வருகிறாள்... "புள்ளயக் கூட்டிட்டு வந்திடுங்க..." என்று கவலை கனக்கக் கூறிவிட்டுச் செல்கிறாள்.

     மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தாய்ப்பாசம் குருட்டுப் பாசம். ஆனானப்பட்ட நாடாளும் அரசிகளே தாய்ப் பாசத்துக்கு அடிமையாகி விடுகின்றனர். முன்பே முன்சீஃப் வீட்டு ஆச்சி, "உதவாக்கரைப் பையனைப் படிக்கப் போட்டு ஏண்டி செலவு செய்யிறே..." என்று கேட்டாளாம். இவளுக்கு ரோசமாகிவிட்டது. அதனால் பிள்ளையைப் பற்றி ஆச்சியிடம் எதையும் கூறியிருக்க மாட்டாள்.

     அவர் பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு சென்று இறங்குகையில் மணி ஒன்று. ஓட்டலில் ஒரு தட்டு புளிச்சோற்றை வாங்கி உண்டு நீரைக் குடிக்கிறார். அவர்கள் வீட்டைத் தேடி நடக்கிறார்.

     பகல் நேரத்தில் அப்பன் குந்தியிருப்பான். அவன் கெட்டது போதாதென்று பையனைத் திருட்டுச் சாராயத் தொழிலுக்கு விட்ட கயவாளி! அவன் முகத்தில் அறைந்து பையனுக்கு வழி கேட்க வேண்டும்.

     அவர் வீட்டு வாயிலில் நுழைகையில் அந்த வளைவே அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறது. அக்கம் பக்கக் கதவுகள் சாத்தியிருக்கின்றன. இவர்கள் வீட்டில் யாருமே இல்லை. பூட்டு ஒன்று தொங்குகிறது.

     ஒருகால் இங்கிருந்து வாடகை கொடுக்கவில்லை என்று காலி செய்யச் சொல்லி விட்டார்களா?

     அவர் அந்தப் பெரிய வீட்டின் முன் வாயிலில் வந்து நிற்கிறார்.

     "வீட்ட ஆருமில்லியா?" என்று குரல் கொடுக்கிறார்.

     செங்கமலம் உள்ளிருந்து தலை நீட்டுகிறாள்.

     "ஆரு!"

     "கண்ணுசாமி வீட்டில ஆருமில்ல?"

     "அல்லாம் வேலைக்கிப் போயிருக்காவ, சாயங்காலம் வந்தியன்னா பார்க்கலாம். ஏட்டி சரசி? ஆருன்னு சாரிச்சிக்க, போ!"

     சரசி, பத்து வயசிருக்கும் ஒரு பெண், பித்தானில்லாத கவுனுடன் வாசலுக்கு வருகிறது.

     "ஆரு... பொன்னாச்சி, அவங்கப்பச்சி கூடவா வேலைக்குப் போயிருக்கா?"

     "ஆமா. அல்லாம் போயிருக்காவ."

     "பையன் பச்சை?"

     "அவனும் போயிருக்கா!"

     "எந்தப் பக்கம்?"

     அப்போது செங்கமலம், "யாருடீ அது..." என்று கேட்டவளாக வெளியே வருகிறாள்.

     "ஆரு...? வாங்க, பொன்னாச்சி மாமனா? உள்ளாற வாங்க வந்து இருங்க..." என்று வரவேற்று பெஞ்சியைக் காட்டுகிறாள்.

     "ஆமா... இந்தப் பக்கம் வந்தேன் பாத்துட்டுப் போவலாமின்னு. காலமே மோடமாயிருந்திச்சி, இப்ப என்ன வெயில்!" என்று வழுக்கை விழுந்த தலையைத் துண்டினால் ஒத்திக் கொள்கிறார். ஆச்சி அவிழ்ந்த கூந்தலை அள்ளிச் செருகிக் கொண்டு அவளுடைய சிம்மாசனமாகிய நார்க் கட்டிலில் அமருகிறாள்.

     "எல்லாரும் சவுரியந்தானா? கண்ணுசாமி ஒடம்பு முடியலன்னா, எந்தப் பக்கம் வேலைக்குப் போறா?"

     "அடி சரசி? செம்பில் தாவத்துக்கு நல்ல தண்ணி பானையிலேந்து எடுத்திட்டு வா... ட்டீ!" என்று ஏவிவிட்டு ஆச்சி நிதானமாக அவரது விசாரணைக்குப் பதிலளிக்கிறாள்.

     "ஒடம்பு முடியலன்னுதா ஊருக்குப் போய் அந்தப் பிள்ளகளைக் கூட்டி வந்தா. கடன் தலைக்கி மேல ஏறிடிச்சி. அந்தப் பயல போலீசு புடிச்சிப் போயிட்டாவ. இந்த ஊரு உலவத்துல இல்லாததா? போலீசுத் தடியனுவளுக்கு இதொரு பணம் பறிக்கிற சோலி. பொறவு வாக்கரிசி போட்டுக் கூட்டிட்டு வந்தாவ. நேத்துத்தா காலையில கூட்டிட்டு வந்தா. சோலிக்குப் போவல. இன்னிக்குப் போயிருக்கா. கண்ணு தெரியலன்னா எதானும் சுமடு எடுக்கலாமில்லையான்னு அவனும் போயிருக்கா. ஏங்கிட்ட ஒரு புள்ள, இவளுக்குப் பெரியவ இருந்தா. அவளையும் பொன்னாச்சிக் கூடக் கூட்டி அனுப்பியிருக்கே, பொறவென்ன? எட்டு பேர் கும்பி நனையணுமில்ல? முன்னமே இல்லாத காலத்துல வாங்கித் தின்ன கடன். சீக்கு இப்ப இந்த புள்ளய மூட்டுவார கடன், எல்லா அஞ்சு நூறுக்கு மேல போயிட்டுது, அந்தப் பொம்பிள என்னேயுவா."

     "மூட்டுட்டு வந்திட்டாவளா?... நா விசயம் கேள்விப்பட்டுதா சாரிச்சிப் போவலான்னு வந்தே. அவன் குடிக்கிறானா?"

     "ஆரு, உங்க தங்கச்சி மாப்பிளயவா கேக்குறிய? உமக்குத் தெரியாதா? தொட்டிப் பழக்கம் சுடுகாடு மட்டுமில்ல?"

     அவருக்கு நெஞ்சு காய்கிறது. சரசி கொண்டு வரும் செம்பு நீரை அருந்துகிறார். எதிரே, மாலை சாத்திய, பால் வடியும் முகம் அவர் கண்களையும் கருத்தையும் இழுக்கிறது. தண்ணீரருந்தியதில் ஆசுவாசமாக இருக்கிறது. அப்பாடா, அவர்களே மீட்டு விட்டார்கள். நல்லவேளை - மனச்சான்றின் ஒரு நரநரப்பில் புறப்பட்டு வந்து விட்டாரே ஒழிய, பணத்துக்கு என்ன செய்வதென்ற பதைபதைப்பு இல்லாமலில்லை. சின்னம்மா உண்மையில் மிக நல்லவளாகவே இருக்க வேண்டும்.

     "பொன்னாச்சி வேலைக்குப் போயிட்டிருக்காளா?"

     "போறா... நீ வந்திருக்கிய. உம்மகிட்ட ஒரு சேதி சொல்லிப் போடணும். அந்த வுள்ளக்கி ஒரு கலியாணம் கூட்டி வச்சிடுங்க... ஏன்னா, திருட்டுக் கையிங்க காவலிருந்தாலே நீளும்... ஒரு பையனிருக்கா. நெல்ல மாதிரி குடிகிடி ஒண்ணுங் கெடையாது. அவெ இட்டமாவும் இருக்கா. ஏதோ ரெண்டொரு ஏனம், சீல தாலின்னு வாங்கி சுவம் முடிச்சி வச்சயன்னா எக்குதப்பா எதும் நடந்து போயிராது..."

     பகிரங்கமா புருசனை விட்டு ஓடிவந்து முறையில்லாத வாழ்வு நடத்திய அந்தப் பெண் பிள்ளையின் வீட்டுப்படி ஏறவே அவருக்கு முதலில் கூச்சமாக இருந்தது. தண்ணீரும் குடித்தார். அவள் தட்டில் வெற்றிலை பாக்கு எடுத்து வைத்திருக்கிறாள். வெற்றிலையும் போடலாமோ?...

     அவளைப் பற்றி அவர் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறார். நேராக இன்று தான் பார்க்கிறார். உண்மையில் அவளுக்கு இராணிக்குரிய கம்பீரம் இருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. நீர் அதிகமாகிவிட்டதனால் தளர்ந்து போன பணியாரமாவு போல் கழுத்துச் சதை தொய்ந்தாலும், முகத்தில் சுருக்கங்கள் கீறிட்டாலும், அவளிடம் களையும் கம்பீரமும் குறையவில்லை.

     "பையன் ஆரு?"

     "முன்ன தொழிற்சங்கம் வச்சி, ஸ்ட்ரைக் பண்ணச் சொல்லி தடியும், கம்புமா அளத்துக் கூலிகளைப் பயமுறுத்தி நிக்க வச்சாரே, சாத்தப்ப - அந்த வருசங்கூடப் பெரிய புயலடிச்சி ராமேஸ்வரம் கரையே முழுகிப் போச்சே?"

     "ஏந் தெரியாது? சாத்தப்பனத் தெரியாத ஆருண்டு? சொதந்தரத்துக்கு முன்ன நாங்க ஒரு கச்சியிலிருந்தவங்களாச்சே? ஸால்ட் இன்ஸ்பெக்டர் லோன் கொலை கேசில் சிக்கினவங்கூட தலமறவாயிருக்கயில, இவ வீட்டதா ஒளிச்சி வச்சிருந்தா. பொறவு..." ஏதோ நினைவு வந்தாற் போல் தூக்கி வாரிப் போட்டாற் போல் மௌனமாகிறார்.

     அவளுடைய பார்வை உயரே எங்கோ நிலைக்கின்றன.

     "அவிய மவந்தா - ராமசாமின்னு பேரு. பனஞ்சோலை அளத்துல மாசச் சம்பளமாயிருந்தா. இப்ப வேற பக்கம் சோலிக்குப் போறதாச் சொன்னா..."

     "படிச்சிருக்கிறானா?"

     "அத விசாரிக்கல. ஆனா படிச்சவங்களுக்கு மேல படிச்ச பயலாத்தாந் தெரியிறா. நாஞ் சொன்னன்னு காட்டிக்காதீய. அவனாத்தா என்ன சொல்லுவான்னு தெரியாது. ஆனா பயனுக்கு இந்த புள்ளகிட்ட இட்டமாயிருக்கு. இவளுக்கும் இட்டந்தா. ஏதோ முன்ன பின்ன பாத்து ஏற்பாடு செஞ்சி கெட்டிப் போடணும்..."

     முன்ன பின்ன... முன்ன பின்ன என்ன இருக்கிறது?

     ராட்டினம் போட்டு இரைக்கும் உப்பு நீர்க் கிணறும் கூட மூடிப் போகிறது. அவ்வப்போது தோண்ட வேண்டியிருக்கிறது. ஆனால் உப்பை நம்பிக் கஞ்சி குடிக்கும் தொழிலாளியின் வறுமைக் குழி மூடப்படுவதே இல்லை!

     அருணாசலம் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு இறங்கி நடக்கிறார்.