(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)

14

     ஆடி மாசத்திலே ஆண்டுக்கொருமுறையே வரும் அம்மன் விழா. கண்கள் கரிக்க உருக்கி எடுக்கும் வெம்மை சூட்டில் சில்லென்று பன்னீர்த்துளிகள் போல் அவர்கள் அனுபவிக்கும் 'கொடை' நாட்கள். 'பனஞ்சோலை' அளத்தில் இந்தக் கொடை நாளில் வேலை கிடையாது. 'கண்ட்ராக்ட்' தவிர்த்த அளக்கூலிகளுக்குப் பதினைந்து ரூபாய் 'போனஸ்' எனப்படும் சம்பளம் உண்டு.

     பொன்னாச்சிக்கு வேலைக்குச் சேருகையில் செங்கமலத்தாச்சி 'போனஸ்' என்ற சொல்லை உதிர்த்ததும் தான் ஆவலோடு அதை நினைத்து மகிழ்ந்ததும் நினைவிருக்கிறது. ஆனால் அவள் 'கண்டிராக்ட்' கூலியாதலால் அந்தச் சலுகை கிடையாது என்று கூறிவிட்டார்கள்.

     மருதாம்பாளின் அளத்தில் விடுப்பும் கிடையாது; உபரிப் பணமும் கிடையாது. அவள் வழக்கம் போல் வேலைக்குப் போய்விட்டாள்.

     அறைவைக் கொட்டடிச் சிறுவர்களுக்கு ஐந்தைந்து ரூபாய் கொடுத்திருக்கின்றனர். பச்சைக்கு மிகவும் மகிழ்ச்சி.

     அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள தொழிலாளர் தெருவிலுள்ள முத்தாலம்மன் கொடை அந்தப் பக்கத்தில் பிரசித்தம். அந்தக் குடியிருப்பின் வீடுகள், பொருளாதார நிலையில் அடிமட்டத்திலுள்ள மக்கள் உப்பு மணற்காட்டில் வாழுவதற்கான நிழலிடங்கள் என்பதைச் சொல்லாமல் விள்ளும் திறனுடையவை. ஆனால் வேப்ப மரத்தினடியில் சதுரக் கட்டிடமாக விளங்கும் முத்தாலம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கும் செய்நேர்த்திகள் நடந்தேறும். இந்த ஆண்டும் கோயிலின் சுவர்களில் பச்சை வண்ணமும், சிவப்பு வண்ணமும், மஞ்சள், நீல வண்ணங்களும் கொண்டு பிச்சைக்கனி தன் கை வண்ணத்தைச் சித்திரம் தீட்டிக் காட்டியிருக்கிறான். அம்மன் கொடைக்கு, எப்படியேனும் காசு பிரித்து விடுவார்கள். தொழிலாளிகள் அதை மட்டும் கொடுக்கத் தவற மாட்டார்கள்.

     இந்த நாட்களில் பெண்கள் சீவிச் சிங்காரித்துக் கொண்டு மஞ்சளும் பசுமையுமாக மணலில் பாடிக் களிப்பார்கள். பொரி கடலை, சிறு தீனிகள் காணும் மகிழ்ச்சியில் பிள்ளைகள் கொண்டாட்டமாக மகிழ்வார்கள்.

     பெட்ரோமாக்ஸ், மைக்செட்டு என்று சுற்றுப்புறம் விழாக்கோலத்தில் முழுகிப் போகும். தோரணங்கள் கட்டப்பெற்ற பந்தலின் பக்கங்களில் பொங்கல் அடுப்புக்களில் மஞ்சளும் குங்குமமுமாகப் பானை ஏறும். கிடாவெட்டு, கோழிக்காவு என்று சக்திக்கேற்ப பிரார்த்தனைகளை நிறைவேற்ற அந்த எளிய மக்கள் கூடுவார்கள். சந்தனமும் மல்லிகையும் அரளியும் அம்மன் சந்நிதியில் கலகலக்கும். வேலையும் கூலியும் உண்டு என்றாலும் இந்தக் கொடை நாளில் அளத்துக்குச் செல்லாமல் 'விழா மகிழ்ச்சிக்கு' வரும் ஆண்கள் அதிகமானவர் உண்டு. ஏனெனில் இந்த நாட்களில் 'தாகந் தீர்த்துக்' கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகம். அதுவே விழா.

     பொன்னாச்சியின் அப்பன் முதல்நாள் மாலையே பச்சையைக் கூட்டிச் சென்றுவிட்டான். டீக்கடைக்காரருக்கு நல்ல தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பதில் அவனுக்குக் கையில் 'துட்டு'க் கிடைக்குமாம். சின்னம்மா அன்று காலையில் வேலைக்குச் செல்லுமுன் அவள், ஏமாற்றமும் நிராசையுமாக, 'மொதல்ல சொன்னா போனசு உண்டுன்னு. இப்ப ஒண்ணில்ல... எனக்கும் ஒங்கபக்கமே சோலி இருந்தாப் பாரும்..." என்று கூற வந்தவள் நாவைக் கடித்துக் கொண்டாள்.

     'அட்வான்ஸ்' பெற்ற தொகை, துருப்பிடித்த ஆணியாகக் கூர்முனையைப் பதித்து வைத்திருக்கிறதே? அதை உருவித் தள்ளினாலல்லவோ சிக்கல் விடும்?

     ராமசாமியை அவள் ஒரு வாரமாகப் பார்க்கவில்லை. ஆனால் சோலை எப்போதும் போல குடித்துவிட்டுத் திரிகிறான். நாச்சப்பனோ சிறிதும் அச்சமின்றிச் சொற்களைக் கொட்டுகிறான். அழகு மட்டும் சாடையாக முதல் நாள் தான் அவன் வேலையை விட்டு நின்றுவிட்டதாகக் கூறினான். அவளுக்கு ஆதாரமே போய்விட்டாற் போல் ஓய்ந்து போனாள். எப்போதேனும் வாயைப் பிடுங்கும் பேரியாச்சி கூட முத்துக் கொறிக்கவில்லை.

     அவனில்லாமல், அந்த அளத்தின் ஈரமற்ற தனிமையில் எவ்வாறு மடை தாண்டப் போகிறாள்? அவள் சந்தையில் வைத்து 'அதைச்' சொல்லிவிட்ட பிறகே அவன் பழைய ஆளாக இல்லை. அவளே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாளோ? அவனது முக மலர்ச்சிச் சூரியனில் அவள் ஊசியைக் குத்தி இருளச் செய்து விட்டாள்...

     உள்ளம் தன்னைத் தானே பிடுங்கிக் கொண்டு ரணகளரியாகிறது. இந்த ஆடி மாசத்தில் எல்லா ஊர்களிலும் அம்மன் கொடை வரும். அவர்கள் ஊரில் கூடக் 'கொடை' சித்திரையில் அமர்க்களப்படும். "ஊர்க்காரனுவளுக்குத் தண்ணி போட்டு ஆடுறதுக்குக் கொடை!" என்பார் மாமா. "சாமி பேரைச் சொல்லிக் கடனை உடனை வாங்கிக் குடிச்சித் தொலைக்கறானுவ" என்பார்.

     பாஞ்சாலி, சரசி எல்லோரும் பிற்பகலே விழாவுக்குப் போய்விட்டார்கள். சின்னம்மாவும் இல்லை. சொக்குவும் வேறெங்கோ கடை போட போய் விட்டாள். வளைவே அமைதி படிந்து மௌனத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. பொன்னாச்சி சேலைக் கிழிசல் ஒன்றைத் தைத்துக் கொண்டிருக்கிறாள்.

     நைந்த குரல் ஒன்று ஆதாரமற்ற மெல்லிழையாய் அலைந்து கொண்டு அவள் செவிகளில் விழுகிறது.

     "தும்பப்பூ வேட்டியுடுத்து..." என்ற குரல் ஒப்பாரி, செங்கமலத்தாச்சியின் குரல் தான்.

     பொன்னாச்சி திடுக்கிட்டாற் போல் கூர்ந்து செவிமடுக்கிறாள். அவள் மிடுக்காகப் பேசியே இதுவரை கேட்டிருக்கிறாள். யாரும், எதுவும் பொருட்டில்லை என்ற அலட்சியப் பாவத்தையே அவள் முகத்தில், பேச்சில், பொன்னாச்சி கண்டிருக்கிறாள். வந்த புதிதில் அவள் மிகவும் இளகிய மனம் கொண்டவள் என்று பொன்னாச்சி மதித்திருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் அது மெய்யில்லை என்று தூக்கியெறிந்து பேசுவதை அறிந்து கருத்தை மாற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் ஒரு கருவக்காரி - ஆணவம் கொண்டவள் - 'பவுர்' உள்ளவள். மகன் செத்தது கூடத் தெய்வம் தந்த கூலி என்ற பொருள்பட, சொக்குவும் மற்றவர்களும் கருத்துரைத்து அவள் மறைவாகக் கேட்டிருக்கிறாள். ஆனால் முகத்துக்கு முன் எல்லோரும் அந்த ராணிக்குக் குழைவார்கள்.

     அவள் நீட்டி நீட்டி ஒப்பாரி வைக்கிறாள்? அவளுக்குச் சொந்த பந்தம் என்று யாரேனும் இறந்து போய்ச் செய்தி வந்திருக்கிறதா என்ன?

     ஊசி நூலை வைத்துவிட்டு, கதவைச் சாத்திக் கொண்டு பொன்னாச்சி முற்றத்துக்கு வருகிறாள். சன்னல் வழியாக அவள் நார்க்கட்டிலில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள்.

     செங்கமலத்தாச்சி சிவப்பு, அல்லது கறுப்புச் சேலை தான் முக்காலும் உடுத்தி அவள் பார்த்திருக்கிறாள். அன்று கறுப்புச் சேலை உடுத்தியிருக்கிறாள். பாம்படக் காது தொங்க, அள்ளி முடிந்த கூந்தலின் பிசிறுகள் தொங்க, ஆச்சி சோகக் குடம் உடையப் புலம்புகிறாள்.

     "பறக்கும் பறவைகளே... பாதை போகும் மானுடரே...!
     இறப்போர்க்கு உயிர் கொடுக்கும் எம்மவனைக் கண்டதுண்டோ..?
     ஒ... ஒ... ஒ...
     பாவி பயல் பாம்பனாறு பாவோட்டம் இல்லையா
     பாய் போட்டா மல்லாந்தா படுத்தாப்பல ஒறங்கிட்டா...!"

     கடைசியில் அடிவயிற்றை அள்ளிக் கொண்டு வரும் சோகம் ஆதாரமற்ற பெருவெளியின் இழையாக உயர்ந்து அலைந்து பாய்கிறது. பொன்னாச்சியை அந்தச் சோக அலைகள் தொட்டசைத்து நெஞ்சுருகச் செய்கின்றன.

     "சிவத்தாச்சி" என்று ஊரும் உலகமும் குறிப்பிடும் இந்தப் பெண் பிள்ளைக்கு மற்றவர்களோடு என்ன தொடர்பு? இங்கே வந்து குந்தி வெற்றிலை போடும் முத்திருளாண்டி, பிச்சைக்கனி ஆகியோருக்கும் இவளுக்கும் என்ன உறவு? ஆச்சி ஊர்க்காரர் செம்பையும் பித்தளையையும் வாங்கி வைத்துக் கொண்டு வட்டி வாங்கி யாருக்காகத் தொழில் செய்கிறாள்? யாருக்காகப் பெட்டி முடைகிறாள்.

     "பாய் போட்டா மல்லாந்தா...
     படுத்தாப்பல ஒறங்கிட்டா...
     படுத்தாப்பல ஒறங்கிட்டானே...!"

     ஆச்சி புலம்பிப் புலம்பிக் கைகளை விரித்து விரித்து அந்தப் படத்தைப் பார்த்துக் கண்ணீர் பெருக ஓவென்று அழுகிறாள். பொன்னாச்சிக்கு நெஞ்சு குழைய, நா ஒட்டிக் கொள்கிறது. அவள் வாயில் வழியே உள்ளே செல்கிறாள்.

     "போயிட்டானே... போயிட்டா..."

     நெஞ்சம் துடிக்க, சோக அலைகள் புகைந்து புகைந்து எழும்புகின்றன. பொன்னாச்சி அவள் கவனத்தைக் கவரும் வண்ணம் முன்னே போய் நிற்கிறாள். அவள் கைகளைப் பற்றி கொள்கிறாள்.

     "வாணாச்சி... அழுவாதிய... வாணா..."

     "இன்னைக்கித்தா அவெ போனா. நாலு வருசமாச்சி. அம்மன் கொடை, மைக்கு செட்டுக் கொண்டாரணுமின்னு போனா... வாரவேயில்ல..."

     "ஆசைக்கிளி வளர்த்தே... அக்கரயா நாய் வளர்த்தே..." உள்ளம் குலுங்கக் குரல் சோகச் சுவர்களை உடைத்துக் கொண்டு முடிவில்லாமல் பரவுகிறது.

     பொன்னாச்சிக்கு நா எழவில்லை. மேலே படம் இருக்கிறது. பால் வடியும் குழந்தை முகம். வளைத்து வாரிய கிராப்பு. பட்டுக் குஞ்ச மாலையணிந்து பார்க்க வருபவர்களை எல்லாம் பார்க்கும் முகம்.

     "பாவம்... ஒடம்பு சொகமில்லாம இருந்துதா ஆச்சி?"

     "ஒண்ணில, பூமலந்தாப்பல என்னய்யா கெடந்தா, தேரி மண்ணில. காத்துக் கருப்பு எப்பிடி அடிச்சிச்சோ. என்னய்யா, ஈயக்கூட நசுக்கமாட்டா..."

     கண்ணீர் முத்துக்கள் கன்னங்களை, சதையின் பற்று விட்டுச் சுருங்கிய தோலில் இறங்கிக் கீழே சிதறுகின்றன.

     அங்குள்ள கடிகாரம், அவன் கல்லூரி வாழ்வின் படங்கள், அவன் புத்தக 'ஷெல்ஃப்' மேசை விளக்கு, இப்போது 'ரிப்பேராகி' விட்ட அந்த 'டிரான்சிஸ்டர்' எல்லாமே அந்தச் சோகத்தின் மௌனக் கூட்டாளிகளாக விளங்குகின்றன. அந்த மௌனப் போர்வையை விலக்க மனமில்லாமலே அவள் நிற்கிறாள். எத்தனை நேரமாயிற்றென்று தெரியவில்லை. சிறையை விட்டு வெளி வரவும் இயலாமல் உள்ளிருக்கவும் இயலாமல் அவள் குழம்பித் தவிக்கையில் வாயிலில் நிழல் தட்டுகிறது. அடியோசை கேட்கிறது.

     "யாரு?"

     அவள் வெளியே எட்டிப் பார்க்கிறாள்.

     நெஞ்சம் குபீரெனப் பால் சொரியப் பூரிக்கிறது.

     "நீங்க இங்கத்தா இருக்கிறியளா?"

     "ஆமா..." என்ற பொன்னாச்சி அவனை நோக்கும் விழிகளில் மத்தாப்பு ஒளி சிந்த நிற்கிறாள். பிறகு சட்டென்று தன்னுணர்வுக் கிறங்கி, உள்ளே திரும்பி, "ஆச்சி, ஆரோ வந்திருக்காவ!" என்று அறிவிக்கிறாள்.

     ஆச்சியும் கட்டிலிலிருந்து திரும்பி வாயிற்படியில் அவன் நிற்பதைப் பார்க்கிறாள்.

     "யாருல...? வா... வந்து உட்காரு? யாரத் தேடி வந்தேல...?" என்ற சொற்களால் அவனை வரவேற்பவள் அவனை விழிகளைச் சுருக்கிக் கொண்டு கூர்ந்து நோக்குகிறாள்.

     அவன் புன்னகையுடன் மீண்டும், "நீங்க இங்கத்தா இருக்கியளா?" என்று கேட்டுக் கொண்டு சிவத்தாச்சி காட்டிய பெஞ்சியில் அமர்ந்து கொள்கிறான்.

     "யாரு? என்னியா கேக்கே? நா எம்புட்டு நாளாவோ இங்கத்தா இருக்கே. நீ எந்தப் பக்கம்...?"

     "செவந்தியாபுரம்... சாத்தப்பன்னு இருந்தாவளே தொழில் சங்கக்காரரு, கேள்விப்பட்டிருக்கியளா? அவரு மகன்... ராமசாமி..."

     மந்திரச் சொல்லால் கட்டுண்டாற் போல் செங்கமலம் அசையாமல் அமர்ந்திருக்கிறாள். மௌனம் மீண்டும் தன் கனத்த திரையைப் போட்டு விடுகிறது.

     பொன்னாச்சியோ கரை கட்டிய மேடெல்லாம் கரையத் தத்தளிக்கிறாள். இவர் எதற்கு வந்திருக்கிறார்...? அவளைத் தேடித்தான் வந்திருக்கிறார். கோபமில்லை, கோபமேயில்லை...

     அவள் வீட்டுக்குத் திரும்பப் பரபரத்து முயலுகையில் ஆச்சியின் குரல் அவளை இழுக்கிறது.

     "ஏட்டி? எங்கே ஓடுத? ந்தா, மூலக்கடயில போயி பத்து காசி பாக்கு வெத்தில, பொவயில, ரெண்டு வாளப்பளம் வாங்கிட்டு வா!" என்று இடுப்பில் எந்நேரமும் செருகியிருக்கும் பையை எடுத்து, ஒரு ரூபாய்த்தாளை அவளிடம் கொடுக்கிறாள்.

     அது அவளை விரட்டுவதற்காகச் செய்யும் தந்திரமா, அல்லது மீண்டும் வரவழைப்பதற்கான சாக்கா என்று புரியவில்லை.

     பொன்னாச்சி உளம் துளும்பத் தெருவிலிறங்கி நடக்கிறாள்.

     "சாத்தப்ப மவனா நீயி? பனஞ்சோல அளத்துல மாசச் சம்பளக்காரனா?"

     "தெரிஞ்சு வச்சிருக்கீங்களே?" என்று அவன் சிரிக்கிறான். அந்தச் சிரிப்பு மாறாமலே, "ஆனா இப்ப இல்ல. சீட்டக் கிளிச்சிட்டாங்க!" என்று நிறுத்துகிறான்.

     அவள் திடுக்கிடவில்லை. அதை அவள் செவிகளில் ஏற்றதாகவே தெரியவில்லை.

     "ஒன்னாத்தா சவுரியமாயிருக்கா?"

     "இருக்கு, வீட்டக்காலி பண்ணிப் போடுன்னாவ முன்னயே. இப்ப வேலயுமில்ல, இனி வேற எந்தத் தாவலன்னாலும் சோலி பாக்கணும். வீடும் இங்க எங்கனாலும் கிடக்கிமான்னும் வந்தே..."

     "பனஞ்சோல அளத்துல மாசச் சம்பளம் வாங்கினேன்னே, என்ன தவராறு? அன்னன்னு கூலின்னாதா தவராறு வரும்..."

     "நீங்க நெனைக்கிறாப்பல இல்ல ஆச்சி. இந்த உப்பளத் தொழிலாளிய, தங்க நிலைமை சீராகணும், மின்னேறணும்னுற விழிப்பு உணர்ச்சியே இல்லாம இருக்காவ. அதுவும், பொண்டுவள..."

     அவன் குரல் கம்மிப் போகிறது.

     "இப்பதா முதலாளி சீமைக்கெல்லாம் போயி வந்து தொழிலை விருத்திக்குக் கொண்டு வந்திருக்கா, 'நாகரிகமா நடக்கா'ன்னல்லாம் சொல்லிக்கிறாவ. பனஞ்சோல அளத்துல ரோடு கொட்டடி போட்டு கோயில் எல்லாம் கட்டியிருக்காவன்னு சொன்னா... நாம் பாத்தனா கொண்டனா? கேள்விதா..."

     அவளுடைய கண்கள் சூனியத்தில் நிலைக்கின்றன.

     "அதென்னமோ நெசந்தா. மொதலாளிய ரொம்ப விருத்திக்கு வந்திட்டாவ. மிசின் எல்லாஞ் செயிது. ஆனால் தொழிலாளி மிசினுக்குப் போட்டியா உப்பு வாருறா... அது இருக்கட்டும். கணக்கபிள்ள, கங்காணினு இருக்கிறவ ஆருதா பொம்பிளய கவுரமா நடத்தறா? இவனுவ வாயில செறுக்கிவுள்ளன்னுதா வரும். அம்மன் கொடையின்னுறா; ஆதிபராசத்தின்றா, அளத்துக்கு வர பொண்டுவள அக்கா தங்கச்சி, ஆத்தா போல நெனக்கணும்னு அறிவு இல்ல. வயித்துக் கொடுமை, பொஞ்சாதி புருசனும் வேல செஞ்சாக் கூட அவன் கண்ணுமுன்ன இவனுவ நாக்கில நரம்பில்லாம பேசுதா. எனக்கு ஏன் வேல போச்சி? இந்த அக்கிரமத்தைக் கேட்டேன். சீட்டைக் கிளிச்சிட்டாங்க. முதலாளிய ஆயிரம் பேராயில்ல. ஆனா, உப்பளத் தொழிலாளிய ஆயிரமாயிரமா இருக்கம். முதலாளிகளுக்கு சக்திய நாம தான் கொடுக்கிறம். இது புரியலியே யாருக்கும்? நாம எதுனாலும் போய்ச் சொன்னா 'போலே' இந்த அரவயித்துக் கஞ்சியும் கிடைக்காம போயிரும். ஏதும் சொல்லிக் குலைக்காதே'ன்னு அஞ்சிச் சாவுறா..."

     "மெய்தா. கங்காணி கணக்கப்பிள்ளையாவணும்னு நினைக்கா. கணக்கப்பிள்ளை முதலாளிக்கு ஏஜண்டு. துட்டுக் குடுத்தா சொந்த பந்தத்தையே கொலை செய்யத் துணியிறா. முள்ளுக்குள்ள சிக்கிட்டா வெளியே வார முடியறதில்ல. முள்ளுக் கிழிஞ்சாலும், ரத்தம் வந்தாலும் பூவுண்ணு நினைச்சிட்டிருக்கணும்..."

     பொன்னாச்சி வெற்றிலை பழங்களுடன் வருகிறாள்.

     கட்டிலுக்கடியில ஓரத்தில் ஒரு பனையோலைத் தட்டு, மாங்காய்த் தட்டி இருக்கிறது. அதை எடுத்து அதில் வெற்றிலை பாக்கு பழத்தை அவள் வைக்கிறாள்.

     "ஏட்டி, உள்ளாற போயி அடுப்பில ரெண்டு செத்த போட்டு காபித் தண்ணி வையி. தாவரத்தில் காபித் தூளிருக்கி, பானையில கருப்பட்டி இருக்கி, கிளாசில இறுத்துக் கொண்டா!" என்று ஏவுகிறாள்.

     "பழம் எடுத்துக்கலே..." என்று ஆச்சி தட்டை அவனுக்கு நகர்த்துகிறாள்.

     பொன்னாச்சி ஆகாயத்தில் பறக்கிறாள். இவர் இவளுக்குச் சொந்தமா? சிநேகமா? செவத்தாச்சி முட்களின் நடுவேயுள்ள இனிப்புக் கனியோ? இந்த ஆச்சியும் சின்னம்மாவைப் போல்... அவளைப் போல்... ராமசாமியைக் கண்டதும் உள்ளம் ஏன் இப்படிக் குதிக்கிறது? தேவதேவியர் பூச்சொரிவது போல் ஒரு குளிர்மை; அப்பனும் குழந்தைகளும் விழாவுக்குச் சென்ற பிறகு, சின்னம்மா வேலையை விட்டு இன்னும் வராமலிருக்கும் இந்த நேரம்...

     "இந்த வுள்ள ஒங்க உறமுறையா?"

     பழத்தை உரித்து தின்று கொண்டு அவன் கேட்கிறான்.

     "இல்ல... ஆமா. எல்லா ஒறமுறதா. எல்லா ஒறமுற இல்லதா. இந்த வளவில இருக்கா. ஆத்தா செத்துப் போயிட்டா. அப்பன் அவ இருக்கறப்பவே இன்னொருத்தியத் தொடிசி வச்சிட்டா. அவதா சின்னாத்தா. பொம்பிளக்கு ஒருமுறை எது, எது ஒருமுற இல்ல? அம்மயப்பன் அண்ணந் தம்பி பெறந்த எடம் எதும் ஒருமுற இல்லாம போயிடுது. கலியாணமுன்னு ஒருத்தன் வந்திட்டா பெறந்த இடம் நீ யாரோ நானாரோ! இந்தப் பாத்திக் காட்டு வேக்காட்டில பொம்பிளக்கி மனிச ஒறவு ஏது? எங்கியோ வாரா, யாருக்கோ பெத்து யாருக்கோ கொடுக்கா... ம், அது கெடக்கட்டும்ல, ஒனக்குக் கலியாணம் காச்சி ஆயிருக்கா?"

     அவன் பிரமித்துப் போனாற் போல் உட்கார்ந்திருக்கிறான்.

     "ஏன்ல...? கலியாணம் கட்டியிருக்கியா?"

     "இல்ல..."

     "ஏ? ஒரு தங்கச்சி இருந்து அதும் செத்திட்டுன்னு சொன்னாவ. பொறவு ஓ ஆத்தாக்குத்தா ஆரிருக்கா! காலத்துல ஒரு கலியாணம் கெட்டண்டாமா?"

     அப்போது பொன்னாச்சி வட்டக் கொப்பியில் கருப்பட்டிக் காபி எடுத்து வருகிறாள்.

     செங்கமலம் அதை வாங்கி அவன் முன் வைக்கிறாள்.

     "குடிச்சிக்கவே..."

     அவன் அதைப் பருகுகையில் பொன்னாச்சி வாயிற்படிக்கருகில் நின்று அவனைப் பார்க்கிறாள். மாலை குறுகும் அந்த நேரத்தில் அவளை மின்னற்கொடியே தழுவியிருப்பது போல் தோன்றுகிறது.

     "வெத்தில போடுவியால?"

     "போடுறதில்ல..."

     "உங்கய்யா வெத்தில இல்லாம ஒரு நேரம் இருக்கமாட்டா..." அவள் காம்பைக் கிழித்துச் சுண்ணாம்பைத் தடவிக் கொண்டு உதிர்க்கும் அந்தச் சொற்களில்... போகிற போக்கில் மருமங்கள் பற்களைத் திறந்து உட்புறம் காட்டினாற் போல் அவன் குலுங்கிக் கொள்கிறான். அவன் ஏதும் வாய் திறக்கு முன் பேச்சு மாறி விடுகிறது.

     "இப்ப வூட்டுக்குத்தாம் போறியா? கொடைக்கிப் போவலியா?"

     "நம்ம கொட இப்ப பெரிசாயிருக்கு. மூணாந்தெருவில ஏதோ வூடிருக்குன்னாவ. வித்துமூடைத் தரகனார் வெள்ளச்சாமியிருக்காரில்ல? அவெ சொன்னா. இப்படீ வாரப்ப, இந்தத் தெருவளவுல இந்தப் புள்ள இருக்கறதாச் சொன்ன நெனப்பு வந்தது. நொழஞ்ச..."

     "ஒங்கக்கு ரொம்ப சிநேவம் போலிருக்கு..."

     அவன் மனம் மலர்ந்து சிரிப்பு பொங்குகிறது.

     "அப்படியெல்லாம் இல்லாச்சி. அவ என்னியோன்னு நினச்சிப் போடாதிய ஆச்சி? நாச்சப்ப கண்ட்ராக்டுகிட்ட செருப்புக்காலத் தூக்கி உதச்ச ஒரே பொம்பிள! இம்பட்டும் தெரிஞ்ச பெறகு ஒங்ககிட்ட சொல்றதுக்கென்ன? இவளுக்காவத்தா நா சண்ட போட்ட அவங்கூட. மொதலாளி எதிரில மோதிட்ட..."

     "அப்ப, இவளுக்காவ மொதலாளிகிட்ட மோதிட்டேன்னா, சிநேகம் ரொம்பத்தா? கெட்டிச்சிப் போடு. அவக்கும் யாருமில்ல. அப்பன் சுகமில்ல. கண்ணுவெளங்கல. சம்பாதனை இல்ல, ஆனா நப்பாசை போகல. பொட்டக்கண்ண வச்சிட்டு இப்ப கொடை பாக்கவா போயிருக்கா? குடிக்கத்தா போயிருக்கா. அவ பொம்பிள, ஆறு மணிக்கு மேல அரவமில்லுல சோலி எடுத்தா ரெட்டிப்புக் கூலி வருமேன்னு போயிருக்கா. பத்துக்கோ பதினொண்ணுக்கோ செத்துச் சுண்ணாம்பா வருவா. கலியாணத்தை முடிச்சி வய்க்கலாம்ல..."

     பொன்னாச்சிக்கு அன்றிரவு அப்பன் குடிபோதையுடன் வந்ததோ, சின்னம்மா வந்து கத்தியதோ நடந்ததாகவே நினைவில்லை. அவள் மேக மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கிறாள்.