![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
முதல் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 10 ... 1.91. திருஆரூர் - திருவிருக்குக்குறள் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 981 சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப் பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே. 1.91.1 982 பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை மறவா தேத்துமின், துறவி யாகுமே. 1.91.2 983 துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர் நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே. 1.91.3 984 உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக் கையி னாற்றொழ, நையும் வினைதானே. 1.91.4 985 பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக் கண்டு மலர்தூவ, விண்டு வினைபோமே. 1.91.5 986 பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர் வாச மலர்தூவ, நேச மாகுமே. 1.91.6 987 வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர் செய்ய மலர்தூவ, வைய முமதாமே. 1.91.7 988 அரக்கன் ஆண்மையை, நெருக்கி னானாரூர் கரத்தி னாற்றொழத், திருத்த மாகுமே. 1.91.8 989 துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே. 1.91.9 990 கடுக்கொள் சீவரை, அடக்கி னானாரூர் எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே. 1.91.10 991 சீரூர் சம்பந்தன், ஆரூரைச் சொன்ன பாரூர் பாடலார், பேரா ரின்பமே. 1.91.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - வன்மீகநாதர் தேவி - அல்லியங்கோதையம்மை 1.92. திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 992 வாசி தீரவே, காசு நல்குவீர் மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1.92.1 993 இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர் கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 1.92.2 994 செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர் பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. 1.92.3 995 நீறு பூசினீர், ஏற தேறினீர் கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 1.92.4 996 காமன் வேவவோர், தூமக் கண்ணினீர் நாம மிழலையீர், சேமம் நல்குமே. 1.92.5 997 பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர் அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 1.92.6 998 மங்கை பங்கினீர், துங்க மிழலையீர் கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 1.92.7 999 அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர் பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 1.92.8 1000 அயனும் மாலுமாய், முயலும் முடியினீர் இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 1.92.9 1001 பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார் வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே. 1.92.10 1002 காழி மாநகர், வாழி சம்பந்தன் வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே. 1.92.11 திருச்சிற்றம்பலம் இது படிக்காசு சுவாமியருளியபோது வட்டந்தீர ஓதியது. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - வீழியழகர். தேவி - சுந்தரகுசாம்பிகை. 1.93. திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1003 நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே. 1.93.1 1004 அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர் நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே. 1.93.2 1005 ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று கைகள் கூப்புவீர், வைய முமதாமே. 1.93.3 1006 ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர் வாச மலர்தூவப், பாச வினைபோமே. 1.93.4 1007 மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர் பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே. 1.93.5 1008 மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார் பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே. 1.93.6 1009 விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார் படையா யினசூழ, உடையா ருலகமே. 1.93.7 1010 பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும் அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே. 1.93.8 1011 இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே. 1.93.9 1012 தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான் நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே. 1.93.10 1013 நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன் ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே. 1.93.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம். சுவாமி - பழமலைநாதர் தேவி - பெரியநாயகியம்மை 1.94. திருஆலவாய் - திருவிருக்குக்குறள் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1014 நீல மாமிடற், றால வாயிலான் பால தாயினார், ஞாலம் ஆள்வரே. 1.94.1 1015 ஞால மேழுமாம், ஆல வாயிலார் சீல மேசொலீர், காலன் வீடவே. 1.94.2 1015 ஆல நீழலார், ஆல வாயிலார் கால காலனார், பால தாமினே. 1.94.3 1017 அந்த மில்புகழ், எந்தை யாலவாய் பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே. 1.94.4 1018 ஆட லேற்றினான், கூட லாலவாய் பாடி யேமனம், நாடி வாழ்மினே. 1.94.5 1019 அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே. 1.94.6 1020 அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல் நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே. 1.94.7 1021 அரக்க னார்வலி, நெருக்க னாலவாய் உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே. 1.94.8 1022 அருவன் ஆலவாய், மருவி னான்றனை இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே. 1.94.9 1023 ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த் தேர மண்செற்ற, வீர னென்பரே. 1.94.10 1024 அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன் முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே. 1.94.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை. சுவாமி - சொக்கநாதசுவாமி தேவி - மீனாட்சியம்மை 1.95. திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1025 தோடொர் காதினன், பாடு மறையினன் காடு பேணிநின், றாடு மருதனே. 1.95.1 1026 கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர் மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே. 1.95.2 1027 எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரை பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே. 1.95.3 1028 விரியார் சடைமேனி, எரியார் மருதரைத் தரியா தேத்துவார், பெரியா ருலகிலே. 1.95.4 1029 பந்த விடையேறும், எந்தை மருதரைச் சிந்தை செய்பவர், புந்தி நல்லரே. 1.95.5 1030 கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத் தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே. 1.95.6 1031 பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை நிறையால் நினைபவர், குறையா ரின்பமே. 1.95.7 1032 எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத் தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே. 1.95.8 1033 இருவர்க் கெரியாய, உருவ மருதரைப் பரவி யேத்துவார், மருவி வாழ்வரே. 1.95.9 1034 நின்றுண் சமண்தேரர், என்று மருதரை அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே. 1.95.10 1035 கருது சம்பந்தன், மருத ரடிபாடிப் பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே. 1.95.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - மருதீசர். தேவி - நலமுலைநாயகியம்மை. 1.96. திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1036 மன்னி யூரிறை, சென்னி யார்பிறை அன்னி யூரமர், மன்னு சோதியே. 1.96.1 1037 பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க் குழகன் சேவடி, தொழுது வாழ்மினே. 1.96.2 1038 நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச் சோதி நாமமே, ஓதி உய்ம்மினே. 1.96.3 1039 பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச் சித்தர் தாள்தொழ, முத்த ராவரே. 1.96.4 1040 நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர் மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே. 1.96.5 1041 இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர் நன்பொ னென்னுமின், உம்ப ராகவே. 1.96.6 1042 அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர் எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே. 1.96.7 1043 தூர்த்த னைச்செற்ற, தீர்த்தன் அன்னியூர் ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே. 1.96.8 1044 இருவர் நாடிய, அரவன் அன்னியூர் பரவுவார் விண்ணுக், கொருவ ராவரே. 1.96.9 1045 குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த் தொண்டு ளார்வினை, விண்டு போகுமே. 1.96.10 1046 பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால் வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே. 1.96.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - ஆபத்சகாயர் தேவி - பெரியநாயகியம்மை. 1.97. திருப்புறவம் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1047 எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச் செய்யான்வெண்ணீ றணிவான்றிகழ்பொற் பதிபோலும் பொய்யாநாவின் அந்தணர்வாழும் புறவம்மே. 1.97.1 1048 மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற நாதனென்றேத்தும் நம்பரன்வைகுந் நகர்போலும் மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப் போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே. 1.97.2 1049 வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே புற்றாடரவின் படமாடவுமிப் புவனிக்கோர் பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும் பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே. 1.97.3 1050 துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாடப் பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும் பொன்னார்புரிநூல் அந்தணர்வாழும் புறவம்மே. 1.97.4 1051 தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங் காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும் பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே. 1.97.5 1052 கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம் அற்றரனேநின் னடிசரணென்னும் அடியோர்க்குப் பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர் பொற்றிகழ்மாடத் தொளிகள்நிலாவும் புறவம்மே. 1.97.6 1053 எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக் கொண்டெழுகோல முகில்போற் பெரியகரிதன்னைப் பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர் புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே. 1.97.7 1054 பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத் துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழில்மேவும் அரக்கன்திண்டோ ள் அழிவித்தானக் காலத்திற் புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே. 1.97.8 1055 மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும் மூர்த்தியைநாடிக் காணவொணாது முயல்விட்டாங் கேத்தவெளிப்பா டெய்தியவன்றன் னிடமென்பர் பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே. 1.97.9 1056 வையகம்நீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான் மெய்யலதேரர் உண்டிலையென்றே நின்றேதம் கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர் பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே. 1.97.10 1057 பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து மன்னியஈசன் சேவடிநாளும் பணிகின்ற தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன் இன்னிசைஈரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே. 1.97.11 திருச்சிற்றம்பலம் திருப்புறவம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.98. திருச்சிராப்பள்ளி பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1058 நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச் சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே. 1.98.1 1059 கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான் செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே. 1.98.2 1060 மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல் செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச் சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும் எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே. 1.98.3 1061 துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச் சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக் கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம் பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே. 1.98.4 1062 கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ் சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித் தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள் நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே. 1.98.5 1063 வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார் தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில் ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே. 1.98.6 1064 வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும் சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார் பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார் தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. 1.98.7 1065 மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன் தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார் சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால் சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே. 1.98.8 1066 அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக் கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும் இரப்புள்ளீரும்மை ஏதிலர்கண்டால் இகழாரே. 1.98.9 1067 நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல் பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார் சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. 1.98.10 1068 தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த கானல்சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன் ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார் வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே. 1.98.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - தாயுமானேசுவரர் தேவி - மட்டுவார்குழலம்மை. 1.99. திருக்குற்றாலம் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1069 வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக் கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம் அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை நம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள். 1.99.1 1070 பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக் கொடிகளோடு நாள்விழமல்கு குற்றாலங் கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய் அடிகள்மேய நன்னகர்போலு மடியீர்காள். 1.99.2 1071 செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக் கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம் வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோக நல்குநம்பான் நன்னகர்போலு நமரங்காள். 1.99.3 1072 பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்றேன் கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம் அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும் நக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள். 1.99.4 1073 மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம் இலையார்சூல மேந்தியகையான் எயிலெய்த சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர். 1.99.5 1074 மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக் கொய்ம்மாஏனல் உண்கிளியோப்புங் குற்றாலங் கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம் பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள். 1.99.6 1075 நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக் கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலங் காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெஞ் சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள். 1.99.7 1076 போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழக் கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம் மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த நாதன்மேய நன்னகர்போலு நமரங்காள். 1.99.8 1077 அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம் பிரமன்னோடு மாலறியாத பெருமையெம் பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள். 1.99.9 1078 பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக் குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம் இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள். 1.99.10 1079 மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன் கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம் நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன் பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே. 1.99.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமி - குறும்பலாவீசுவரர் தேவி - குழல்வாய்மொழியம்மை 1.100. திருப்பரங்குன்றம் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1080 நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றைச் சூடலனந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில் ஆடலனஞ்சொல் அணியிழையாளை யொருபாகம் பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே. 1.100.1 1081 அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத் திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே. 1.100.2 1082 நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றைச் சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகிப் பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே. 1.100.3 1083 வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக் குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றந் தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம் நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே. 1.100.4 1084 பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத் துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே. 1.100.5 1085 கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத் தொடைநவில்கின்ற வில்லினனந்திச் சுடுகானில் புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப் படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே. 1.100.6 1086 அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால் எயில்படவெய்த எம்மிறைமேய இடம்போலும் மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப் பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே. 1.100.7 1087 மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள் பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச் சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று நித்தலுமேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே. 1.100.8 1088 முந்தியிவ்வையந் தாவியமாலும் மொய்யொளி உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும் சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே. 1.100.9 1089 குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத் தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே. 1.100.10 1090 தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன் படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத் தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே. 1.100.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமி - பரங்கிரிநாதர் தேவி - ஆவுடைநாயகியம்மை |