முதல் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 5 ...

1.41. திருப்பாம்புரம்

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

437  சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்
              திரிபுர மெரிசெய்த செல்வர்
       வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்
              மான்மறி யேந்திய மைந்தர்
       காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்
              கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
       பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
              பாம்புர நன்னக ராரே. 1.41.1

438  கொக்கிற கோடு கூவிள மத்தங்
              கொன்றையொ டெருக்கணி சடையர்
       அக்கினொ டாமை பூண்டழ காக
              அனலது ஆடுமெம் மடிகள்
       மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்
              விண்ணவர் விரைமலர் தூவப்
       பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
              பாம்புர நன்னக ராரே. 1.41.2

439  துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
              சூறைநல் லரவது சுற்றிப்
       பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்
              பித்தராய்த் திரியுமெம் பெருமான்
       மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
              மாமலை யாட்டியுந் தாமும்
       பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
              பாம்புர நன்னக ராரே. 1.41.3

440  துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச்
              சுடர்விடு சோதியெம் பெருமான்
       நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர்
              நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
       மஞ்சுதோய் சோலை மாமயி லாட
              மாடமா ளிகைதன்மே லேறி
       பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்
              பாம்புர நன்னக ராரே. 1.41.4

441  நதியத னயலே நகுதலை மாலை
              நாண்மதி சடைமிசை யணிந்து
       கதியது வாகக் காளிமுன் காணக்
              கானிடை நடஞ்செய்த கருத்தர்
       விதியது வழுவா வேதியர் வேள்வி
              செய்தவர் ஓத்தொலி ஓவாப்
       பதியது வாகப் பாவையுந் தாமும்
              பாம்புர நன்னக ராரே. 1.41.5

442  ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர்
              ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்
       மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல்
              மான்மறி யேந்திய மைந்தர்
       ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய
              அலைகடல் கடையவன் றெழுந்த
       பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர்
              பாம்புர நன்னக ராரே. 1.41.6

443  மாலினுக் கன்று சக்கர மீந்து
              மலரவற் கொருமுக மொழித்து
       ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி
              அனலது ஆடுமெம் மடிகள்
       காலனைக் காய்ந்து தங்கழ லடியாற்
              காமனைப் பொடிபட நோக்கிப்
       பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள்
              பாம்புர நன்னக ராரே. 1.41.7

444  விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க
              மெல்லிய திருவிர லூன்றி
       அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள்
              அனலது ஆடுமெம் மண்ணல்
       மடக்கொடி யவர்கள் வருபுன லாட
              வந்திழி அரிசிலின் கரைமேற்
       படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்
              பாம்புர நன்னக ராரே. 1.41.8

445  கடிபடு கமலத் தயனொடு மாலுங்
              காதலோ டடிமுடி தேடச்
       செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந்
              தீவணர் எம்முடைச் செல்வர்
       முடியுடையமரர் முனிகணத் தவர்கள்
              முறைமுறை யடிபணிந் தேத்தப்
       படியது வாகப் பாவையுந் தாமும்
              பாம்புர நன்னக ராரே. 1.41.9

446  குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்
              குற்றுவிட் டுடுக்கையர் தாமுங்
       கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்
              கையர்தாம் உள்ளவா றறியார்
       வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
              வாரணம் உரிசெய்து போர்த்தார்
       பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
              பாம்புர நன்னக ராரே. 1.41.10

447  பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த
              பாம்புர நன்னக ராரைக்
       கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக்
              கழுமல முதுபதிக் கவுணி
       நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான
              சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
       சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்
              சிவனடி நண்ணுவர் தாமே. 1.41.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பாம்புரேசர், பாம்புரநாதர் என்றும் பாடம்
தேவி - வண்டமர்பூங்குழலம்மை, வண்டார்பூங்குழலி என்றும் பாடம்.

1.42. திருப்பேணுபெருந்துறை

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

448  பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை
              பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
       செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச்
              செய்தொழில் பேணியோர் செல்வர்
       அம்மா னோக்கிய அந்தளிர் மேனி
              அரிவையோர் பாக மமர்ந்த
       பெம்மான் நல்கிய தொல்புக ழாளர்
              பேணு பெருந்துறை யாரே. 1.42.1

449  மூவரு மாகி இருவரு மாகி
              முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
       பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி
              பல்கணம் நின்று பணியச்
       சாவம தாகிய மால்வரை கொண்டு
              தண்மதில் மூன்று மெரித்த
       தேவர்கள் தேவர் எம்பெரு மானார்
              தீதில் பெருந்துறை யாரே. 1.42.2

450  செய்பூங் கொன்றை கூவிள மாலை
              சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்
       கொய்பூங் கோதை மாதுமை பாகங்
              கூடியோர் பீடுடை வேடர்
       கைபோ னான்ற கனிகுலை வாழை
              காய்குலை யிற்கமு கீனப்
       பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்
              பில்கு பெருந்துறை யாரே. 1.42.3

451  நிலனொடு வானும் நீரொடு தீயும்
              வாயுவு மாகியோ ரைந்து
       புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த
              புண்ணியர் வெண்பொடிப் பூசி
       நலனொடு தீங்குந் தானல தின்றி
              நன்கெழு சிந்தைய ராகி
       மலனொடு மாசும் இல்லவர் வாழும்
              மல்கு பெருந்துறை யாரே. 1.42.4

452  பணிவா யுள்ள நன்கெழு நாவின்
              பத்தர்கள் பத்திமை செய்யத்
       துணியார் தங்கள் உள்ள மிலாத
              சுமடர்கள் சோதிப் பரியார்
       அணியார் நீல மாகிய கண்டர்
              அரிசி லுரிஞ்சு கரைமேல்
       மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்
              மல்கு பெருந்துறை யாரே. 1.42.5

453  எண்ணார் தங்கள் மும்மதில் வேவ
              ஏவலங் காட்டிய எந்தை
       விண்ணோர் சாரத் தன்னருள் செய்த
              வித்தகர் வேத முதல்வர்
       பண்ணார் பாடல் ஆடல றாத
              பசுபதி ஈசனோர் பாகம்
       பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்
              பேணு பெருந்துறை யாரே. 1.42.6

454  விழையா ருள்ளம் நன்கெழு நாவில்
              வினைகெட வேதமா றங்கம்
       பிழையா வண்ணம் பண்ணிய வாற்றால்
              பெரியோ ரேத்தும் பெருமான்
       தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்
              தண் *அரி சில்புடை சூழ்ந்த
       குழையார் சோலை மென்னடை யன்னங்
              கூடு பெருந்துறை யாரே. 1.42.7

* அரிசில் என்பது ஒரு நதி. அது அரிசொல்ல வந்ததினால் அரிசொல் நதியென்று கும்பகோணப் புராணத்திற் சொல்லப்படுகின்றது.

455  பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த
              பொருகடல் வேலி இலங்கை
       மன்ன னொல்க மால்வரை யூன்றி
              மாமுரண் ஆகமுந் தோளும்
       முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த
              மூவிலை வேலுடை மூர்த்தி
       அன்னங் கன்னிப் பேடையொ டாடி
              அணவு பெருந்துறை யாரே. 1.42.8

456  புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட
              பொருகடல் வண்ணனும் பூவின்
       உள்வா யல்லி மேலுறை வானும்
              உணர்வரி யான்உமை கேள்வன்
       முள்வாய் தாளில் தாமரை மொட்டின்
              முகம்மல ரக்கயல் பாயக்
       கள்வாய் நீலம் கண்மல ரேய்க்குங்
              காமர் பெருந்துறை யாரே. 1.42.9

457  குண்டுந் தேருங் கூறை களைந்துங்
              கூப்பிலர் செப்பில ராகி
       மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு
              மிண்டு செயாது விரும்பும்
       தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்
              தாங்கிய தேவர் தலைவர்
       வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை
              மல்கு பெருந்துறை யாரே. 1.42.10

458  கடையார் மாடம் நன்கெழு வீதிக்
              கழுமல வூரன் கலந்து
       நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்
              நல்ல பெருந்துறை மேய
       படையார் சூலம் வல்லவன் பாதம்
              பரவிய பத்திவை வல்லார்
       உடையா ராகி உள்ளமு மொன்றி
              உலகினில் மன்னுவர் தாமே. 1.42.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சிவாநந்தநாதர்
தேவி - மலையரசியம்மை

1.43. திருக்கற்குடி

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

459  வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்
       தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்
       இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங்
       கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே. 1.43.1

460  அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும்
       பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்
       சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக்
       கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே. 1.43.2

461  நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத்
       தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
       போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில்
       காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே. 1.43.3

462  ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண்
       டிருங்கள மார விடத்தை இன்னமு துண்ணிய* ஈசர்
       மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக்
       கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே. 1.43.4

* துன்னிய

463  போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப்
       பார்மலி வேடுரு வாகிப் பண்டொரு வர்க்கருள் செய்தார்
       ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி யெங்குங்
       கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே. 1.43.5

464  உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி
       விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார்
       நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே
       கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே. 1.43.6

465  மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார்
       ஊனிடை யார்தலை யோட்டில் உண்கல னாக வுகந்தார்
       தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்திக்
       கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே. 1.43.7

466  வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை யின்கீழ்த்
       தோளமர் வன்றலை குன்றத் தொல்விர லூன்று துணைவர்
       தாளமர் வேய்தலைப் பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க்
       காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே. 1.43.8

467  தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை அளந்து
       கொண்டவ னும்மறி வொண்ணாக் கொள்கையர் வெள்விடை யூர்வர்
       வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல்
       கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே. 1.43.9

468  மூத்துவ ராடையி னாரும் *மூசு கருப்பொடி யாரும்
       நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமி லராமதி வைத்தார்
       ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவரிட ரெல்லாங்
       காத்தவர் காமரு சோலைக் கற்குடி மாமலை யாரே. 1.43.10

* மூசு கடுப்பொடி

469  காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை
       நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன்
       பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள்
       பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே. 1.43.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - முத்தீசர்
தேவி - அஞ்சனாட்சியம்மை.

1.44. திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

470  துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
              சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
       பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
              வாரிடமும் பலி தேர்வர்
       அணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி
              லாச்சிரா மத்துறை கின்ற
       மணிவளர் கண்டரோ மங்கையை வாட
              மயல்செய்வ தோயிவர் மாண்பே. 1.44.1

471  கலைபுனை மானுரி தோலுடை யாடை
              கனல்சுட ராலிவர் கண்கள்
       தலையணி சென்னியர் தாரணி மார்பர்
              தம்மடி கள்ளிவ ரென்ன
       அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி
              லாச்சிரா மத்துறை கின்ற
       இலைபுனை வேலரோ ஏழையை வாட
              இடர்செய்வ தோயிவ ரீடே. 1.44.2

472  வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை
              வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
       நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக
              நண்ணுவர் நம்மை நயந்து
       மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி
              லாச்சிரா மத்துறை கின்ற
       செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
              சிதைசெய்வ தோவிவர் சீரே. 1.44.3

473  கனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக்
              கனல்தரு தூமதிக் கண்ணி
       புனமலர் மாலை யணிந் தழகாய
              புனிதர் கொலாமிவ ரென்ன
       வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி
              லாச்சிரா மத்துறை கின்ற
       மனமலி மைந்தரோ மங்கையை வாட
              மயல்செய்வ தோவிவர் மாண்பே. 1.44.4

474  மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி
              வளர்சடை மேற்புனல் வைத்து
       மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை
              முதிரவோர் வாய்மூரி பாடி
       ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி
              லாச்சிரா மத்துறை கின்ற
       சாந்தணி மார்பரோ தையலை வாடச்
              சதுர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.5

475  நீறுமெய்பூசி நிறைசடை தாழ
              நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி
       ஆறது சூடி ஆடர வாட்டி
              யைவிரற் கோவண ஆடை
       பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி
              லாச்சிரா மத்துறை கின்ற
       ஏறது ஏறியர் ஏழையை வாட
              இடர்செய்வ தோவிவ ரீடே. 1.44.6

476  பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ
              டாமைவெண் ணூல்புனை கொன்றை
       கொங்கிள மாலை புனைந் தழகாய
              குழகர்கொ லாமிவ ரென்ன
       அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
              லாச்சிரா மத்துறை கின்ற
       சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்
              சதிர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.7

477  ஏவலத் தால்விச யற்கருள் செய்து
              இராவண னை*யீ டழித்து
       மூவரி லும்முத லாய்நடு வாய
              மூர்த்தியை யன்றி மொழியாள்
       யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி
              லாச்சிரா மத்துறை கின்ற
       தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்
              சிதைசெய்வ தோவிவர் சேர்வே. 1.44.8

* இராவணன் றன்னை

478  மேலது நான்முக னெய்திய தில்லை
              கீழது சேவடி தன்னை
       நீலது வண்ணனு மெய்திய தில்லை
              எனவிவர் நின்றது மல்லால்
       ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி
              லாச்சிரா மத்துறை கின்ற
       பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்
              பழிசெய்வ தோவிவர் பண்பே. 1.44.9

479  நாணொடு கூடிய சாயின ரேனும்
              நகுவ ரவரிரு போதும்
       ஊணொடு கூடிய உட்குந் தகையார்
              உரைக ளவைகொள வேண்டா
       ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி
              லாச்சிரா மத்துறை கின்ற
       பூண்நெடு மார்பரோ பூங்கொடி வாடப்
              புனைசெய்வ தோவிவர் பொற்பே. 1.44.10

480  அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
              ஆச்சிரா மத்துறை கின்ற
       புகைமலி மாலை புனைந் தழகாய
              புனிதர்கொ லாமிவ ரென்ன
       நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
              நற்றமிழ் ஞானசம் பந்தன்
       தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச்
              சாரகி லாவினை தானே. 1.44.11

முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின் மகளுக்குக் கண்டிருந்து இந்தத் திருப்பதிகம் ஓதியருளினவளவில் தீர்ந்தது.

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - மணிகண்டீசர், மாற்றறிவரதர்
தேவி - பாலசுந்தரநாயகியம்மை.

1.45. திருப்பழையனூர்-திரு ஆலங்காடு

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

481  துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
       நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்
       வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட்
       டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.1

482  கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா
       வீடு மாநெறி விளம்பினாரெம் விகிர்தனார்
       காடுஞ் சுடலையும் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோ*
       டாடும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.2

* டல்லிற்கணப்பேயோ

483  கந்தங் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி
       வெந்த பொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார்
       கொந்தண் பொழிற்சோலை யரவின்தோன்றிக் கோடல்பூத்
       தந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.3

484  பால மதிசென்னி படரச்சூடி பழியோராக்
       கால னுயிர்செற்ற காலனாய கருத்தனார்
       கோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை
       ஆலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.4

485  ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே
       பார்க்கு மரவம்பூண் டாடிவேடம் பயின்றாருங்
       கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்
       தார்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.5

486  பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
       மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
       பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
       டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.6

487  நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும்
       இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இசைந்தாரும்
       வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட்
       டணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.7

488  கணையும் வரிசிலையும் எரியுங்கூடிக் கவர்ந்துண்ண
       இணையில் எயின்மூன்றும் எரித்திட்டாரெம் இறைவனார்
       பிணையுஞ் சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந்
       தணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.8

489  கவிழ மலைதரளக்* கடகக்கையால் எடுத்தான்றோள்
       பவழ நுனைவிரலாற் பையவூன்றிப் பரிந்தாரும்
       தவழுங் கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத்
       தவிழும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.9

* தாழக்

490  பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா
       திகலும் இருவர்க்கும் எரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்
       புகலும் வழிபாடு வல்லார்க்கென்றுந் தீயபோய்
       அகலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.10

491  போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
       வேழம் வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
       கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா
       ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.11

492  சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன்
       ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை
       வேந்த னருளாலே விரித்தபாடல் இவைவல்லார்
       சேர்ந்த விடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே. 1.45.12

திருச்சிற்றம்பலம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமி - ஊர்த்ததாண்டவேசுரர்
தேவி - வண்டார்குழலியம்மை.

1.46. திரு அதிகைவீரட்டானம்

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

493  குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்
       கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
       வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
       விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே. 1.46.1

493  அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக்
       கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசிச்
       சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
       விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே. 1.46.2

494  ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப்
       பாடல் மறைவல்லான் படுதம்பலி பெயர்வான்
       மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
       வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே. 1.46.3

496  எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி
       மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
       பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்
       விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே. 1.46.4

497  கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
       திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள்
       எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ
       விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே. 1.46.5

498  துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி
       இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி
       வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்
       விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே. 1.46.6

499  பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
       பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக்
       கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
       வேத முதல்வன்நின் றாடும்வீரட் டானத்தே. 1.46.7

500  கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட
       ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
       பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
       வில்லால் எயிலெய்தான் ஆடும்வீரட் டானத்தே. 1.46.8

501  நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்
       பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக்
       கடியார் கழுநீலம் மலரு மதிகையுள்
       வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே. 1.46.9

511  அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
       சுரையோ டுடனேந்தி உடைவிட் டுழல்வார்கள்
       உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி
       விரைதோ யலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே. 1.46.10

512  ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
       வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்
       சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
       வாழுந் துணையாக நினைவார் வினையிலாரே. 1.46.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் நடுநாட்டில் கெடில நதிக்கு வடபாலுள்ளது.
சுவாமி - அதிகைநாதர், வீரட்டானேசுவரர்
தேவி - திருவதிகைநாயகி

1.47. திருச்சிரபுரம்

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

504  பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்
       வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே
       சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்
       செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே. 1.47.1

505  கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்
       அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்
       சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
       செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே. 1.47.2

506  நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
       ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே
       காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
       சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே. 1.47.3

507  கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
       மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே
       கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்
       செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே. 1.47.4

508  புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னைக்
       கரமெடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே
       மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்
       சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே. 1.47.5

509  கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
       பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே
       எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த்
       திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே. 1.47.6

510  குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்
       பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மை* யென்னே
       இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
       சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே. 1.47.7

* மேன்மை

511  மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால்
       நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்
       துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்
       சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே. 1.47.8

512  மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
       சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
       நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்
       சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே. 1.47.9

513  புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்
       பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்
       மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே
       சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே. 1.47.10

514  தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை
       அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை
       பங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்
       சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே. 1.47.11

திருச்சிற்றம்பலம்

சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

1.48. திருச்சேய்ஞலூர்

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

515  நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
       மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
       ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
       சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. 1.48.1

516  நீறடைந்த மேனியின்கண் நேரிழையா ளொருபால்
       கூறடைந்த கொள்கையன்றிக் கோலவளர் சடைமேல்
       ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே
       சேறடைந்த தண்கழனிச்* சேய்ஞலூர் மேயவனே. 1.48.2

* வார்கழனிச்

517  ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து
       கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே
       மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே
       தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே. 1.48.3

518  வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்
       நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே
       பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
       சேணடைந்த மாடமல்கு சேய்ஞலூர் மேயவனே. 1.48.4

519  பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்
       வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
       வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்
       தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே. 1.48.5

520  காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
       வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
       கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
       சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே. 1.48.6

521  பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
       வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
       தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
       சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. 1.48.7

522  மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்
       நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
       பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யுஞ்
       சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே. 1.48.8

523  காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்
       பாரடைந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்
       சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே
       தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே. 1.48.9

524  மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி
       நேசடைந்த ஊணினாரும் நேசமி லாததென்னே
       வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வாய்த்
       தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே. 1.48.10

525  சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்
       தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
       சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
       வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே. 1.48.11

திருச்சிற்றம்பலம்

சோழநாட்டில் சுப்பிரமணியசுவாமி யினாலுண்டான தலம்.
சுவாமி - சத்தியகிரீசுவரர்
தேவி - சகிதேவிநாயகியம்மை.

1.49. திருநள்ளாறு

பண் - பழந்தக்கராகம்

(பச்சைத்திருப்பதிகம் - இது சமணர்கள் வாதின்பொருட்டுத் தீயிலிட்டபோது வேகாதிருந்தது.)

திருச்சிற்றம்பலம்

526  போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
       பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
       ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
       நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.1

527  தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
       பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
       ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த
       நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.2

528  ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
       பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
       மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
       நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.3

529  புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
       மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
       பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
       நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.4

530  ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
       ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
       நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
       நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.5

531  திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
       எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
       தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
       நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.6

532  வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
       அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
       செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
       நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.7

533  சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
       சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
       பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி
       நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.8

534  உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி
       அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
       எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
       நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.9

535  மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
       பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
       மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
       நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.10

536  தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
       நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
       பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
       உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே. 1.49.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமி - தெர்ப்பாரணியர்
தேவி - போகமார்த்தபூண்முலையம்மை.

1.50. திருவலிவலம்

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

537  ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய
       சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
       நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த*
       வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.# 1.50.1

* நாவின் நவிற்றுகின்றேன்
# வல்லவாறே நல்குகண்டாய் வலிவலம்மேயானே

538  இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநல் தேவரெல்லாம்
       பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
       தயங்குசோதி சாமவேதா காமனைக்காய்ந் தவனே
       மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.2

539  பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை
       விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலியக்
       கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக் கின்றதுள்ளம்
       வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவல மேயவனே. 1.50.3

540  மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து
       செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே
       நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
       வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.4

541  துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்றிறமே
       தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப்பணிய
       நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன்
       வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே. 1.50.5

542  புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும்
       எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும்
       கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
       வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.6

543  தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன்
       ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக் கின்றதுள்ளம்
       ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார்
       மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே. 1.50.7

544  நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை
       வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனி ராவணனைத்
       தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிர லால்அடர்த்த
       வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே. 1.50.8

545  ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய
       சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே
       ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம்
       வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.9

546  *பொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப்
       பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே
       விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்
       மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே. 1.50.10

* பொதியில் என்பது பொதிகைமலை. அது வைப்புத்தலங்களிலொன்று.

547  வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப்
       பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன
       பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும்
       மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே. 1.50.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - மனத்துணைநாதர்
தேவி - வாளையங்கண்ணியம்மை.



முதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14