உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதல் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 3 ... 1.21. திருச்சிவபுரம் - திருவிராகம் பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம் 217 புவம்வளி கனல்புனல் புவி *கலை யுரைமறை திரிகுணம் அமர்நெறி திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரும் உயிரவை யவைதம பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே. 1.21.1 * கலைபுரை 218 மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள் நிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும் அலைகடல் நடுவறி துயிலமர் அரியுரு வியல்பர னுறைபதி சிலைமலி மதிள்சிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே. 1.21.2 219 பழுதில கடல்புடை தழுவிய படிமுத லியவுல குகள்மலி குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலம்மலி தருமுயி ரவையவை முழுவதும் அழிவகை நினைவொடு *முதலுரு வியல்பர னுறைபதி செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே. 1.21.3 * முதலுருவிய வரனுரைபதி 220 நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் குறைவில பதம்அணை தரஅருள் குணமுடை யிறையுறை வனபதி சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே. 1.21.4 221 சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொருள் நியதமும் உணர்பவர் தனதெழி லுருவது கொடுஅடை தகுபர னுறைவது நகர்மதிள் கனமரு வியசிவ புரம்நினை பவர்கலை மகள்தர நிகழ்வரே. 1.21.5 222 சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு உருவிய லுலகவை புகழ்தர வழியொழு குமெயுறு பொறியொழி அருதவ* முயல்பவர் தனதடி யடைவகை நினையர னுறைபதி திருவளர் சிவபுரம் நினைபவர் திகழ்குலன் நிலனிடை நிகழுமே. 1.21.6 * தருதவ 223 கதமிகு கருவுரு வொடு வுகிரிட * வட வரைகண கணவென மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிகழ் எயிறதன் நுதிமிசை இதமமர் புவியது நிறுவிய எழிலரி வழிபட அருள்செய்த பதமுடை யவனமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே. 1.21.7 * வுகிரிடை 224 அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவலி கொடுசிவன் இசைகயி லையையெழு தருவகை இருபது கரமவை நிறுவிய நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவ னுறைபதி திசைமலி சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிகழ் வுடையரே. 1.21.8 225 அடல்மலி படையரி அயனொடும் அறிவரி யதொரழல் மலிதரு சுடருரு வொடுநிகழ் தரவவர் வெருவொடு துதியது செயவெதிர் விடமலி களநுத லமர்கண துடையுரு வெளிபடு மவன்நகர் திடமலி பொழிலெழில் சிவபுரம் நினைபவர் வழிபுவி திகழுமே. 1.21.9 226 குணமறி வுகள்நிலை யிலபொரு ளுரைமரு வியபொருள் களுமில திணமெனு மவரொடு செதுமதி மிகுசம ணருமலி தமதுகை உணலுடை யவருணர் வருபர னுறைதரு பதியுல கினில்நல கணமரு வியசிவ புரம்நினை பவரெழி லுருவுடை யவர்களே. 1.21.10 227 திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபதும் நவில்பவர் நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள் புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர் தரநலம் மிகுவரே. 1.21.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரிநாயகர் தேவி - பெரியநாயகியம்மை 1.22. திருமறைக்காடு - திருவிராகம் பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம் 228 சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அரவது கொடுதிவி தலமலி சுரரசு ரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு கொலைமலி விடமெழ அவருடல் குலைதர வதுநுகர் பவனெழில் மலைமலி மதில்புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.1 229 கரமுத லியஅவ யவமவை கடுவிட அரவது கொடுவரு வரல்முறை அணிதரு மவனடல் வலிமிகு புலியத ளுடையினன் இரவலர் துயர்கெடு வகைநினை இமையவர் புரமெழில் பெறவளர் மரநிகர் கொடைமனி தர்கள்பயில் மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.2 230 இழைவளர் தருமுலை மலைமக ளினிதுறை தருமெழி லுருவினன் முழையினின் மிகுதுயி லுறுமரி முசிவொடும் எழமுள ரியொடெழு கழைநுகர் தருகரி யிரிதரு கயிலையின் மலிபவ னிருளுறும் மழைதவழ் தருபொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.3 231 நலமிகு திருவித ழியின்மலர் நகுதலை யொடுகன கியின்முகை பலசுர நதிபட அரவொடு மதிபொதி சடைமுடி யினன்மிகு தலநில வியமனி தர்களொடு தவமுயல் தருமுனி வர்கள்தம மலமறு வகைமனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.4 232 கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த அதிகுண னுயர்பசு பதியதன் மிசைவரு பசுபதி பலகலை யவைமுறை முறையுணர் விதியறி தருநெறி யமர்முனி கணனொடு மிகுதவ முயல்தரும் அதிநிபு ணர்கள்* வழி படவளர் மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.5 * மதிநிபுணர்கள் 233 கறைமலி திரிசிகை படையடல் கனல்மழு வெழுதர வெறிமறி முறைமுறை யொலிதம ருகமுடை தலைமுகிழ் மலிகணி வடமுகம் உறைதரு கரனுல கினிலுய ரொளிபெறு வகைநினை வொடுமலர் மறையவன் மறைவழி வழிபடு மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.6 234 இருநில னதுபுன லிடைமடி தரஎரி புகஎரி யதுமிகு பெருவளி யினில் அவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவன் இனமலர் மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.7 235 சனம்வெரு வுறவரு தசமுக னொருபது முடியொடும் இருபது கனமரு வியபுயம் நெரிவகை கழலடி யிலொர்விரல் நிறுவினன் இனமலி கணநிசி சரன்மகிழ் வுறவருள் செய்தகரு ணையனென மனமகிழ் வொடுமறை முறையுணர் மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.8 236 அணிமலர் மகள்தலை மகனயன் அறிவரி யதொர்பரி சினிலெரி திணிதரு திரளுரு வளர்தர அவர்வெரு வுறலொடு துதிசெய்து பணியுற வெளியுரு வியபர னவனுரை மலிகடல் திரளெழும் மணிவள ரொளிவெயில் மிகுதரு மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.9 237 இயல்வழி தரவிது செலவுற இனமயி லிறகுறு தழையொடு செயல்மரு வியசிறு கடமுடி யடைகையர் தலைபறி செய்துதவம் முயல்பவர் துவர்படம் உடல்பொதி பவரறி வருபரன் அவனணி வயலினில் வளைவளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.10 238 வசையறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர்பர மனைநினை பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள் புகழ்வழி வளர்தரு இசையமர் கழுமல நகரிறை தமிழ்விர கனதுரை யியல்வல இசைமலி தமிழொரு பதும்வல அவருல கினிலெழில் பெறுவரே. 1.22.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - மறைக்காட்டீசுரர் தேவி - யாழைப்பழித்தமொழியம்மை 1.23. திருக்கோலக்கா பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 239 மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. 1.23.1 240 பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி கொண்டான் கோலக் காவு கோயிலாக் கண்டான் பாதங் கையாற் கூப்பவே உண்டான் நஞ்சை உலக முய்யவே. 1.23.2 241 பூணற் பொறிகொள் அரவம் புன்சடை கோணற் பிறையன் குழகன் கோலக்கா மாணப் பாடி மறைவல் லானையே பேணப் பறையும் பிணிக ளானவே. 1.23.3 242 தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர் மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான் குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே. 1.23.4 243 மயிலார் சாயல் மாதோர் பாகமா எயிலார் சாய எரித்த* எந்தைதன் குயிலார் சோலைக் கோலக் காவையே பயிலா நிற்கப் பறையும் பாவமே. 1.23.5 * எயிலார் புரமூன் றெரித்த 244 வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே. 1.23.6 245 நிழலார் சோலை நீல வண்டினங் குழலார் பண்செய் கோலக் காவுளான் கழலால் மொய்த்த பாதங் கைகளால் தொழலார் பக்கல் துயர மில்லையே. 1.23.7 246 எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன் குறியார் பண்செய் கோலக் காவையே நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே. 1.23.8 247 நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில் ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக் கூற்ற முதைத்த குழகன் கோலக்கா ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே. 1.23.9 248 பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும் உற்ற துவர்தோ யுருவி லாளருங் குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப் பற்றிப் பரவப் பறையும் பாவமே. 1.23.10 249 நலங்கொள் காழி ஞான சம்பந்தன் குலங்கொள் கோலக் காவு ளானையே வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே. 1.23.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - சத்தபுரீசுவரர் தேவி - ஓசைகொடுத்தநாயகி 1.24. சீர்காழி பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 250 பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா காவா யெனநின் றேத்துங் காழியார் மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம் பாவா ரின்சொற் பயிலும் பரமரே. 1.24.1 251 எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக் கந்த மாலை கொடுசேர் காழியார் வெந்த நீற்றர் விமல ரவர்போலாம் அந்தி நட்டம் ஆடும் அடிகளே. 1.24.2 252 தேனை வென்ற மொழியா ளொருபாகங் கான மான்கைக் கொண்ட காழியார் வான மோங்கு கோயி லவர்போலாம் ஆன இன்பம் ஆடும் அடிகளே. 1.24.3 253 மாணா வென்றிக் காலன் மடியவே காணா மாணிக் களித்த காழியார் நாணார் வாளி தொட்டா ரவர்போலாம் பேணார் புரங்கள் அட்ட பெருமானே. 1.24.4 254 மாடே ஓதம் எறிய வயற்செந்நெல் காடே றிச்சங் கீனுங் காழியார் வாடா மலராள் பங்க ரவர்போலாம் ஏடார் புரமூன் றெரித்த இறைவரே. 1.24.5 255 கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக் கங்கை புனைந்த சடையார் காழியார் அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாஞ் செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே. 1.24.6 256 கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங் கல்ல வடத்தை யுகப்பார் காழியார் அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம் பல்ல விடத்தும் பயிலும் பரமரே. 1.24.7 257 எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக் கடுத்து முரிய அடர்த்தார் காழியார் எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம் பொடிக்கொள்* நீறு பூசும் புனிதரே. 1.24.8 * பொடிக்கண் 258 ஆற்ற லுடைய அரியும் பிரமனுந் தோற்றங் காணா வென்றிக் காழியார் ஏற்ற மேறங் கேறு மவர்போலாம் கூற்ற மறுகக் குமைத்த குழகரே. 1.24.9 259 பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர் கரக்கும் உரையை விட்டார் காழியார் இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம் அருப்பின் முலையாள் பங்கத் தையரே. 1.24.10 260 காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச் சீரார் ஞான சம்பந் தன்சொன்ன பாரார் புகழப் பரவ வல்லவர் ஏரார் வானத் தினிதா இருப்பரே. 1.24.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.25. திருச்செம்பொன்பள்ளி பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 261 மருவார் குழலி மாதோர் பாகமாய்த் திருவார் செம்பொன் பள்ளி மேவிய கருவார் கண்டத் தீசன் கழல்களை மருவா தவர்மேல் மன்னும் பாவமே. 1.25.1 262 வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச் சீரார் செம்பொன் பள்ளி மேவிய ஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச் சேரா தவர்மேற் சேரும் வினைகளே. 1.25.2 263 வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித் திரையார் செம்பொன் பள்ளி மேவிய நரையார் விடையொன் றூரும் நம்பனை உரையா தவர்மே லொழியா வூனமே. 1.25.3 264 மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச் செழுவார் செம்பொன் பள்ளி மேவிய எழிலார் புரிபுன் சடையெம் இறைவனைத் தொழுவார் தம்மேல் துயர மில்லையே. 1.25.4 265 மலையான் மகளோ டுடனாய் மதிளெய்த சிலையார் செம்பொன் பள்ளி யானையே இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல் நிலையா வணங்க நில்லா வினைகளே. 1.25.5 266 அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச் சிறையார் செம்பொன் பள்ளி மேவிய கறையார் கண்டத் தீசன் கழல்களை நிறையால் வணங்க நில்லா வினைகளே. 1.25.6 267 பையார் அரவே ரல்கு லாளொடுஞ் செய்யார் செம்பொன் பள்ளி மேவிய கையார் சூல மேந்து கடவுளை மெய்யால் வணங்க மேவா வினைகளே. 1.25.7 268 வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத் தேனார் செம்பொன் பள்ளி மேவிய ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை ஆனான் கழலே அடைந்து வாழ்மினே. 1.25.8 269 காரார் வண்ணன் கனகம் அனையானுந் தேரார் செம்பொன் பள்ளி மேவிய நீரார் நிமிர்புன் சடையெம் நிமலனை ஓரா தவர்மே லொழியா ஊனமே. 1.25.9 270 மாசா ருடம்பர் மண்டைத் தேரரும் பேசா வண்ணம் பேசித் திரியவே தேசார் செம்பொன் பள்ளி மேவிய ஈசா என்ன நில்லா இடர்களே. 1.25.10 271 நறவார் புகலி ஞான சம்பந்தன் செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப் பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும் உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே. 1.25.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - சொர்ணபுரீசுவரர் தேவி - சுகந்தவனநாயகியம்மை, மருவார்குழலியம்மை 1.26. திருப்புத்தூர் பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 272 வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத் திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க் கங்கை தங்கு முடியா ரவர்போலும் எங்கள் உச்சி உறையும் இறையாரே. 1.26.1 273 வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத் தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர் ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும் ஏன முள்ளும் எயிறும் புனைவாரே. 1.26.2 274 பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத் தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர் ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந் தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே. 1.26.3 275 நாற விண்ட நறுமா மலர்கவ்வித் தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர் ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும் ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. 1.26.4 276 இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத் திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர் பசை விளங்கப் படித்தா ரவர்போலும் வசை விளங்கும் வடிசேர்* நுதலாரே. 1.26.5 * மடிசேர் 277 வெண்ணி றத்த விரையோ டலருந்தித் தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர் ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும் வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே. 1.26.6 278 நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ் செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த் தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும் மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே. 1.26.7 279 கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத் திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர் இருக்க வல்ல இறைவ ரவர்போலும் அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே. 1.26.8 280 மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப் பெருகி வாழும் பெருமா னவன்போலும் பிரமன் மாலும் அறியாப் பெரியோனே. 1.26.9 281 கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல் தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர் ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும் ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. 1.26.10 282 நல்ல கேள்வி ஞான சம்பந்தன் செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச் சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும் அல்லல் தீரும் அவலம் அடையாவே. 1.26.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமி - புத்தூரீசர், திருத்தளிநாதர் தேவி - சிவகாமியம்மை 1.27. திருப்புன்கூர் பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 283 முந்தி நின்ற வினைக ளவைபோகச் சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர் அந்தம் இல்லா அடிகள் அவர்போலுங் கந்த மல்கு கமழ்புன் சடையாரே. 1.27.1 284 மூவ ராய முதல்வர் முறையாலே தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர் ஆவ ரென்னும் அடிகள் அவர்போலும் ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே. 1.27.2 285 பங்க யங்கள் மலரும் பழனத்துச் செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க் கங்கை தங்கு சடையா ரவர்போலும் எங்கள் உச்சி உறையும் மிறையாரே. 1.27.3 286 கரையு லாவு கதிர்மா மணிமுத்தம் திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர் உரையின் நல்ல பெருமா னவர்போலும் விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே. 1.27.4 287 பவள வண்ணப் பரிசார் திருமேனி திகழும் வண்ணம் உறையுந் திருப்புன்கூர் அழக ரென்னும் அடிகள் அவர்போலும் புகழ நின்ற புரிபுன் சடையாரே. 1.27.5 288 தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல் திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப் பொருந்தி நின்ற அடிகள் அவர்போலும் விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே. 1.27.6 289 பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும் தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர் ஆர நின்ற அடிகள் அவர்போலும் கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே. 1.27.7 290 மலையத னாருடை யமதில் மூன்றும் சிலையத னாலெரித் தார்திருப் புன்கூர்த் தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை மலையத னாலடர்த் துமகிழ்ந் தாரே. 1.27.8 291 நாட வல்ல மலரான் மாலுமாய்த் தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர் ஆட வல்ல அடிகள் அவர்போலும் பாட லாடல் பயிலும் பரமரே. 1.27.9 292 குண்டு முற்றிக் கூறை யின்றியே பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல் வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க் கண்டு தொழுமின் கபாலி வேடமே. 1.27.10 293 மாட மல்கு மதில்சூழ் காழிமன் சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர் நாட வல்ல ஞான சம்பந்தன் பாடல் பத்தும் பரவி வாழ்மினே. 1.27.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - சிவலோகநாதர் தேவி - சொக்கநாயகியம்மை 1.28. திருச்சோற்றுத்துறை பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 294 செப்ப நெஞ்சே நெறிகொள்* சிற்றின்பம் துப்ப னென்னா தருளே துணையாக ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற் றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.1 * நெறிகள் 295 பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித் தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர் மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.2 296 செய்யர் செய்ய சடையர் விடையூர்வர் கைகொள் வேலர் கழலர் கரிகாடர் தைய லாளொர் பாக மாயஎம் ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.3 297 பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர் துணிகொள் போரார் துளங்கு மழுவாளர் மணிகொள் கண்டர் மேய வார்பொழில் அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.4 298 பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து மறையும் ஓதி மயானம் இடமாக உறையுஞ் செல்வம் உடையார் காவிரி அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.5 299 துடிக ளோடு முழவம் விம்மவே பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப் படிகொள் பாணி பாடல் பயின்றாடும் அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.6 300 சாடிக் காலன் மாளத் தலைமாலை சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம் பாடி ஆடிப் பரவு வாருள்ளத் தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.7 301 பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக் கண்ணோர் பாகங் கலந்த நுதலினார் எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.8 302 தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே அழலா யோங்கி அருள்கள் செய்தவன் விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்* எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.9 * விதியான்மிக்க 303 *கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர் ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே நீதி நின்று நினைவார் வேடமாம் ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.10 * போதுசாற்றி 304 அந்தண் சோற்றுத் துறைஎம் ஆதியைச் சிந்தை செய்ம்மின் அடியா ராயினீர் சந்தம் பரவு ஞான சம்பந்தன் வந்த வாறே புனைதல் வழிபாடே. 1.28.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - தொலையாச்செல்வர், ஓதவனேசுவரர் தேவியார் - ஒப்பிலாவம்மை, அன்னபூரணி 1.29. திருநறையூர்ச்சித்தீச்சரம் பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 305 ஊரு லாவு பலிகொண் டுலகேத்த நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல் சீரு லாவு மறையோர் நறையூரில் சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. 1.29.1 306 காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ வீடு மாக மறையோர் நறையூரில் நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 1.29.2 307 கல்வி யாளர் கனகம் அழல்மேனி புல்கு கங்கை புரிபுன் சடையானூர் மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரில் செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. 1.29.3 308 நீட வல்ல நிமிர்புன் சடைதாழ ஆட வல்ல அடிக ளிடமாகும் பாடல் வண்டு பயிலும் நறையூரில் சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 1.29.4 309 உம்ப ராலும் உலகின் னவராலும் தம்பெ ருமைய ளத்தற் கரியானூர் நண்பு லாவு மறையோர் நறையூரில் செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 1.29.5 310 கூரு லாவு படையான் விடையேறிப் போரு லாவு மழுவான் அனலாடி பேரு லாவு பெருமான் நறையூரில் சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே. 1.29.6 311 அன்றி நின்ற அவுணர் புரமெய்த வென்றி வில்லி விமலன் விரும்புமூர் மன்றில் வாச மணமார் நறையூரிற் சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 1.29.7 312 அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால் நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர் பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரில் திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 1.29.8 313 ஆழி யானும் அலரின் உறைவானும் ஊழி நாடி உணரார் திரிந்துமேல் சூழு நேட எரியாம் ஒருவன்சீர் நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 1.29.9 314 மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார் கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல் உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற் செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே. 1.29.10 315 மெய்த்து லாவு மறையோர் நறையூரில் சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன் பத்தும் பாடப் பறையும் பாவமே. 1.29.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - சித்தநாதேசர் தேவி - அழகாம்பிகையம்மை 1.30. திருப்புகலி பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 316 விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக் கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும் பதியா வதுபங் கயநின் றலரத்தேன் பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே. 1.30.1 317 ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன் மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந் தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே. 1.30.2 318 வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன் புலியின்னதள் கொண்டரை யார்த்த புனிதன் மலியும்பதி மாமறை யோர்நிறைந் தீண்டிப் பொலியும்புனற் பூம்புக லிந்நகர் தானே. 1.30.3 319 கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி அயலார்கடை யிற்பலி கொண்ட அழகன் இயலாலுறை யும்மிடம் எண்திசை யோர்க்கும் புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே. 1.30.4 320 காதார்கன பொற்குழை தோட திலங்கத் தாதார்மலர் தண்சடை* யேற முடித்து நாதான்உறை யும்மிட மாவது நாளும் போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே. 1.30.5 * தன்சடை 321 வலமார்படை மான்மழு* ஏந்திய மைந்தன் கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன் குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன் புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே. 1.30.6 * மாமழு 322 கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச் செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக அறுத்தான்அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப் பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே. 1.30.7 323 தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல எழிலார்வரை யாலன் றரக்கனைச் செற்ற கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டி பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே. 1.30.8 324 மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத் தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம் பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே. 1.30.9 325 உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர் அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக் கிடையாதவன் தன்நகர் நன்மலி பூகம் புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே. 1.30.10 326 இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன் புரைக்கும்பொழில் பூம்புக லிந்நகர் தன்மேல் உரைக்குந்தமிழ் ஞானசம் பந்தனொண் மாலை வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே. 1.30.11 திருச்சிற்றம்பலம் திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி |