முதல் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 13 ... 1.121. திருவிடைமருதூர் - திருவிராகம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1304 நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த படைமரு தழலெழ மழுவல பகவன் புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே. 1.121.1 1305 மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன் குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர் இழைநுழை புரியணல் இடமிடை மருதே. 1.121.2 1306 அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன் கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன் பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின் இருமையும் உடையணல் இடமிடை மருதே. 1.121.3 1307 பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன் வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர் எரிவளர் சடையணல் இடமிடை மருதே. 1.121.4 1308 வருநல மயிலன மடநடை மலைமகள் பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான் செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர் இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே. 1.121.5 1309 கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை மலையுடை மடமகள் தனையிடம் உடையோன் விலையுடை அணிகலன் இலனென மழுவினொ டிலையுடை படையவன் இடமிடை மருதே. 1.121.6 1310 வளமென வளர்வன வரிமுரல் பறவைகள் இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே. 1.121.7 1311 மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு துறையவன் எனவல அடியவர் துயரிலர் கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை இறையவன் உறைதரும் இடமிடை மருதே. 1.121.8 1312 மருதிடை நடவிய மணிவணர் பிரமரும் இருதுடை யகலமொ டிகலின ரினதெனக் கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர் எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே. 1.121.9 1313 துவருறு விரிதுகில் உடையரும் அமணரும் அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல் கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும் அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே. 1.121.10 1314 தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன் இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த படமலி தமிழிவை பரவவல் லவர்வினை கெடமலி புகழொடு கிளரொளி யினரே. 1.121.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - மருதீசர் தேவி - நலமுலைநாயகியம்மை
1.122. திருவிடைமருதூர் - திருவிராகம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1315 விரிதரு புலியுரி விரவிய அரையினர் திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல் புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே. 1.122.1 1316 மறிதிரை படுகடல் விடமடை மிடறினர் எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர் செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில் பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே. 1.122.2 1317 சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள் நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர் இலரென இடுபலி யவரிடை மருதினை வலமிட வுடல்நலி விலதுள வினையே. 1.122.3 1318 விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர் இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர் உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே. 1.122.4 1319 உரையரும் உருவினர் உணர்வரு வகையினர் அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம் உரைகள துடையவர் புகழ்மிக வுளதே. 1.122.5 1320 ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும் அழகிய முடியுடை அடிகள தறைகழல் எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே. 1.122.6 1321 கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும் நிலையினர் சலமகள் உலவிய சடையினர் மலைமகள் முலையிணை மருவிய வடிவினர் இலைமலி படையவர் இடமிடை மருதே. 1.122.7 1322 செருவடை யிலவல செயல்செயத் திறலொடும் அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர இருவகை விரனிறி யவரிடைமருதது பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே. 1.122.8 1323 அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல் புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே. 1.122.9 1324 குடைமயி லினதழை மருவிய வுருவினர் உடைமரு துவரினர் பலசொல வுறவிலை அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர் இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே. 1.122.10 1325 பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு விரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப் பரவிய ஒருபது பயிலவல் லவரிடர் விரவிலர் வினையொடு வியனுல குறவே. 1.122.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - மருதீசர் தேவி - நலமுலைநாயகியம்மை 1.123. திருவலிவலம் - திருவிராகம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1326 பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல் ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள் மேவிய திருவுரு வுடையவன் விரைமலர் மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே. 1.123.1 1327 இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு பட்டவிர் பவளநல் மணியென அணிபெறு விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர் மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே. 1.123.2 1328 உருமலி கடல்கடை வுழியுல கமருயிர் வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு மருமலி பொழில்வலி வலமுறை யிறையே. 1.123.3 1329 அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு புனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும் எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை மனமுடை யவர்வலி வலமுறை யிறையே. 1.123.4 1330 பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. 1.123.5 1331 தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில் வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே. 1.123.6 1332 நலிதரு தரைவர நடைவரும் இடையவர் பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர் வலிவரு மதில்வலி வலமுறை யிறையே. 1.123.7 1333 இரவணன் இருபது கரமெழில் மலைதனின் இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி இரவண நிகர்வலி வலமுறை யிறையே. 1.123.8 1334 தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும் ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடி தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி வானணை மதில்வலி வலமுறை யிறையே. 1.123.9 1335 இலைமலி தரமிகு துவருடை யவர்களும் நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன் மலைமலி மதில்வலி வலமுறை யிறையே. 1.123.10 1336 மன்னிய வலிவல நகருறை யிறைவனை இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே. 1.123.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - மனத்துணைநாதர் தேவி - வாளையங்கண்ணியம்மை 1.124. திருவீழிமிழலை - திருவிராகம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1337 அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர் நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ் நிலமலி மிழலையை நினையவ லவரே. 1.124.1 1338 இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர் கருமலி தருமிகு புவிமுதல் உலகினில் இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு நிருபமன் மிழலையை நினையவ லவரே. 1.124.2 1339 கலைமகள் தலைமகன் இவனென வருபவர் அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை இலைமலி யிதழியு மிசைதரு சடையினர் நிலைமலி மிழலையை நினையவ லவரே. 1.124.3 1340 மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர் காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில் நீடமர் மிழலையை நினையவ லவரே. 1.124.4 1341 புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர் முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு நிகழ்தரு மிழலையை நினையவ லவரே. 1.124.5 1342 அன்றினர் அரியென வருபவர் அரிதினில் ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற நின்றவன் மிழலையை நினையவ லவரே. 1.124.6 1343 கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர் சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர் வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி நிரம்பினர் மிழலையை நினையவ லவரே. 1.124.7 1344 ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர் அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு நெருக்கினன் மிழலையை நினையவ லவரே. 1.124.8 1345 அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர் கடிமலர் அயனரி கருதரு வகைதழல் வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு நெடியவன் மிழலையை நினையவ லவரே. 1.124.9 1346 மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர் வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர் துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ் நின்மலன் மிழலையை நினையவ லவரே. 1.124.10 1347 நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள் வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு கற்றுவல் லவருல கினிலடி யவரே. 1.124.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - வீழியழகர் தேவி - சுந்தரகுசாம்பிகை 1.125. திருச்சிவபுரம் - திருவிராகம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1348 கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன் முலைமலி தருதிரு வுருவம துடையவன் சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே. 1.125.1 1349 படரொளி சடையினன் விடையினன் மதிலவை சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம் இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே. 1.125.2 1350 வரைதிரி தரவர வகடழ லெழவரு நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ் திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம் உரைதரும் அடியவர் உயர்கதி யினரே. 1.125.3 1351 துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர் தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய மணிமிட றனதடி இணைதொழு மவரே. 1.125.4 1352 மறையவன் மதியவன் மலையவன் நிலையவன் நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன் இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம் உறைவென உடையவன் எமையுடை யவனே. 1.125.5 1353 முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய் ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன் எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே. 1.125.6 1354 வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர் பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன் செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம் அடைதரும் அடியவர் அருவினை யிலரே. 1.125.7 1355 கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன் உரம்நெரி தரவரை யடர்வுசெய் தவனுறை பரனென அடியவர் பணிதரு சிவபுர நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே. 1.125.8 1356 அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர் சென்றள விடலரி யவனுறை சிவபுரம் என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர் ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே. 1.125.9 1357 புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம் இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம் மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே. 1.125.10 1358 புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம் பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே. 1.125.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரிநாயகர் தேவி - பெரியநாயகியம்மை 1.126. திருக்கழுமலம் - திருத்தாளச்சதி பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1359 பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப் பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ் சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ் சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ் சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற் தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங் கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக் காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே. 1.126.1 1360 பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப் பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும் உச்சத்தால் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே றூராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெயிசை வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார் வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங் கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங் காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே. 1.126.2 1361 திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின் சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப் பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும் பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின் போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங் கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 1.126.3 1362 அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத் தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம் மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும் மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ் மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங் கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 1.126.4 1363 திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச் சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப் போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ் சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத் தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங் கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக் காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே. 1.126.5 1364 செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ் சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய் ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக் கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப் பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும் பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங் கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக் காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே. 1.126.6 1365 பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப் பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய் மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச் சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங் கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 1.126.7 1366 செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற் சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன் இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற் பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட் டம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற் காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங் கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக் காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே. 1.126.8 1367 பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப் பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ னோதானோதான் அஃதுணரா துருவின தடிமுடியுஞ் சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின் றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங் கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 1.126.9 1368 தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத் தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும் இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க் கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப் புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும் போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங் கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 1.126.10 1369 கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக் கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத் தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள் எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசைத் தமைத்தகொண் டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர் மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே. 1.126.11 திருச்சிற்றம்பலம் கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.127. சீகாழி - திருஏகபாதம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1370 பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான். 1.127.1 1371 விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன். 1.127.2 1372 புண்டரி கத்தவன் மேவிய புகலியே புண்டரி கத்தவன் மேவிய புகலியே புண்டரி கத்தவன் மேவிய புகலியே புண்டரி கத்தவன் மேவிய புகலியே. 1.127.3 1373 விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன். 1.127.4 1374 சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன். 1.127.5 1375 பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி. 1.127.6 1376 செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில். 1.127.7 1377 பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன். 1.127.8 1378 தசமுக னெறிதர வூன்று சண்பையான் தசமுக னெறிதர வூன்று சண்பையான் தசமுக னெறிதர வூன்று சண்பையான் தசமுக னெறிதர வூன்று சண்பையான். 1.127.9 1379 காழி யானய னுள்ளவா காண்பரே காழி யானய னுள்ளவா காண்பரே காழி யானய னுள்ளவா காண்பரே காழி யானய னுள்ளவா காண்பரே. 1.127.10 1380 கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே. 1.127.11 1381 கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை. 1.127.12 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.128. திருவெழுகூற்றிருக்கை பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1382 ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ டொருவ னாகி நின்றனை 05 ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை இருநதி யரவமோ டொருமதி சூடினை ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் 10 நாற்கால் மான்மறி ஐந்தலை யரவம் ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத் திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை ஒருதனு இருகால் வளைய வாங்கி முப்புரத் தோடு நானிலம் அஞ்சக் 15 கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம் முக்குணம் இருவளி யொருங்கிய வானோர் ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20 நான்மறை யோதி ஐவகை வேள்வி அமைத்தா றங்க முதலெழுத் தோதி வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை 25 இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை பாணிமூ வுலகும் புதையமேல் மிதந்த தோணிபுரத் துறைந்தனை தொலையா இருநிதி வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை 30 வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன் விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப் பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை 35 ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும் ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும் மறை முதல் நான்கும் 40 மூன்று காலமுந் தோன்ற நின்றனை இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் மறுவிலா மறையோர் கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் அறியும் 45 அனைய தன்மையை யாதலின் நின்னை நினைய வல்லவ ரில்லை நீள்நிலத்தே. திருச்சிற்றம்பலம் 1.129. திருக்கழுமலம் பண் - மேகராகக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1383 சேவுயருந் திண்கொடியான் திருவடியே சரணென்று சிறந்தவன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள்கோயிற் வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச் செங்குமுதம் வாய்கள்காட்டக் காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டுங் கழுமலமே. 1.129.1 1384 பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய மலைச்செல்வி பிரியாமேனி அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான் அமரர்தொழ வமருங்கோயில் தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும் இறைவனது தன்மைபாடிக் கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயருங் கழுமலமே. 1.129.2 1385 அலங்கல்மலி வானவருந் தானவரும் அலைகடலைக் கடையப்பூதங் கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி கண்டத்தோன் கருதுங்கோயில் விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக் கூன்சலிக்குங் காலத்தானுங் கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய மெய்யர்வாழ் கழுமலமே. 1.129.3 1386 பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச் சயமெய்தும் பரிசுவெம்மைப் போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில் வாரிசைமென் முலைமடவார் மாளிகையின் சூளிகைமேல் மகப்பாராட்டக் காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு மகிழ்வெய்துங் கழுமலமே. 1.129.4 1387 ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க ளொடுவன்னி மத்தமன்னும் நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர் செஞ்சடையான் நிகழுங்கோயில் ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி மலையென்ன நிலவிநின்ற கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு சுதைமாடக் கழுமலமே. 1.129.5 1388 தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து தழலணைந்து தவங்கள்செய்த பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ ழமையளித்த பெருமான்கோயில் அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப அதுகுடித்துக் களித்துவாளை கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய அகம்பாயுங் கழுமலமே. 1.129.6 1389 புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய் நிலனைந்தாய்க் கரணம்நான்காய் அவையவைசேர் பயனுருவா யல்லவுரு வாய்நின்றான் அமருங்கோயில் தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு கொம்புதைப்பக் கொக்கின்காய்கள் கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப் புள்ளிரியுங் கழுமலமே. 1.129.7 1390 அடல்வந்த வானவரை யழித்துலகு தெழித்துழலும் அரக்கர்கோமான் மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல் பணிகொண்டோ ன் மேவுங்கோயில் நடவந்த உழவரிது நடவொணா வகைபரலாய்த் தென்றுதுன்று கடல்வந்த சங்கீன்ற முத்துவயற் கரைகுவிக்குங் கழுமலமே. 1.129.8 1391 பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு கேழலுரு வாகிப்புக்கிட் டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா வகைநின்றான் அமருங்கோயில் பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள் கொண்டணிந்து பரிசினாலே காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து நின்றேத்துங் கழுமலமே. 1.129.9 1392 குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்றுகையில் உணல்மருவுஞ் சமணர்களு முணராத வகைநின்றான் உறையுங்கோயில் மணமருவும் வதுவையொலி விழவினொலி யிவையிசைய மண்மேல்தேவர் கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க மேல்படுக்குங் கழுமலமே. 1.129.10 1393 கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து ளீசன்றன் கழல்மேல்நல்லோர் நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம் பந்தன்றான் நயந்துசொன்ன சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார் தூமலராள் துணைவராகி முற்றுலக மதுவாண்டு முக்கணான் அடிசேர முயல்கின்றாரே. 1.129.11 திருச்சிற்றம்பலம் கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.130. திருவையாறு பண் - மேகராகக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1394 புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமருங்கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே. 1.130.1 1395 விடலேறு படநாகம் அரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும் அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர் பலியென்னு மடிகள்கோயில் கடலேறித் திரைமோதிக் காவிரியி னுடன்வந்து கங்குல்வைகித் திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் கீன்றலைக்குந் திருவையாறே. 1.130.2 1396 கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில் கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீங்கி செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திருவையாறே. 1.130.3 1397 ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின் பலிக்குழல்வார் உமையாள்பங்கர் தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் தழலுருவர் தங்குங்கோயில் மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள்தோறுந் தேன்பாய மீன்பாய செழுங்கமல மொட்டலருந் திருவையாறே. 1.130.4 1398 நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத் தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில் காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித் தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே. 1.130.5 1399 வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகிப் பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில் காந்தார மிசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித் தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே. 1.130.6 1400 நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு புரமூன்றும் நீள்வாயம்பு சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில் குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே. 1.130.7 1401 அஞ்சாதே கயிலாய மலையெடுத்த அரக்கர்கோன் தலைகள்பத்தும் மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில் இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ இளமேதி இரிந்தங்கோடிச் செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே. 1.130.8 1402 மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை மிகவகழ்ந்து மிக்குநாடும் மாலோடு நான்முகனு மறியாத வகைநின்றான் மன்னுங்கோயில் கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே. 1.130.9 1403 குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா மிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர் எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர் இறைவரினி தமருங்கோயில் செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே. 1.130.10 1404 அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம் பெருமானை அந்தண்காழி மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல் இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால் ஈசனடி யேத்துவார்கள் தன்னிசையோ டமருலகில் தவநெறிசென் றெய்துவார் தாழாதன்றே. 1.130.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - செம்பொன்சோதீசுரர் தேவி - அறம்வளர்த்தநாயகியம்மை |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
நேர்மையின் பயணம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 360 எடை: 350 கிராம் வகைப்பாடு : வெற்றிக் கதைகள் ISBN: 978-93-5135-029-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 470.00 தள்ளுபடி விலை: ரூ. 425.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் இ. பாலகுருசாமியின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. எளிய பின்னணியிலிருந்து வந்து மாபெரும் உயரங்களைத் தொட்ட ஒரு கல்வியாளரின் சாதனைச் சரித்திரம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|