முதல் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 4 ...

1.31. திருக்குரங்கணில்முட்டம்

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

327  விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்கும்
       கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயும்
       கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
       தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே. 1.31.1

328  விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக்
       கடைசேர்கரு மென்குளத் தோங்கிய* காட்டில்
       குடையார்புனல் மல்கு குரங்கணின் முட்டம்
       உடையானெனை யாளுடை யெந்தை பிரானே. 1.31.2

* குழல்தொங்கிய

329  சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்
       காலன்றனை ஆருயிர் வவ்விய காலன்
       கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்
       தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே. 1.31.3

330  வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில்
       தோடார்குழை யான்நல பாலன நோக்கிக்
       கூடாதன செய்த குரங்கணில் முட்டம்
       ஆடாவரு வாரவ ரன்புடை யாரே. 1.31.4

331  இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக்
       கறையார்மிடற் றான்கரி கீறிய கையான்
       குறையார்மதி சூடி குரங்கணின் முட்டத்
       துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே. 1.31.5

332  பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங்
       கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக்
       குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
       நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே. 1.31.6

333  மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத்
       தோடார்குழை தானொரு காதில்* இலங்கக்
       கூடார்மதி லெய்து குரங்கணில் முட்டத்
       தாடாரர வம்மரை யார்த்தமர் வானே. 1.31.7

* காதினில்

334  மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
       உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
       கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
       கையால்தொழு வார்வினை காண்ட லரிதே. 1.31.8

335  வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்
       அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங்
       குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணில் முட்டம்
       நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே.* 1.31.9

* நிற்கிலாவே

336  கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும்
       வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்
       குழுமின்சடை யண்ணல் குரங்கணில் முட்டத்
       தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே. 1.31.10

337  கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன்
       கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டம்
       சொல்லார் தமிழ் மாலை செவிக்கினி தாக
       வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே. 1.31.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமி - வாலீசுவரர்
தேவி - இறையார்வளையம்மை.

1.32. திருவிடைமருதூர்

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

338  ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
       காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
       வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்து
       ஈடாவுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.1

339  தடங்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல்
       குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
       படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்
       இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ. 1.32.2

340  வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி
       அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து
       பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல்
       எங்கோ னுறைகின்ற இடைமரு தீதோ. 1.32.3

341  அந்தம்மறி யாத அருங்கல முந்திக்
       கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல்
       வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன்
       எந்தையுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.4

342  வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
       தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்
       பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய
       ஈசன்உறை கின்ற இடைமரு தீதோ. 1.32.5

343  வன்புற்றிள நாகம் அசைத் தழகாக
       என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி
       அன்பிற்பிரி யாதவ ளோடும் உடனாய்
       இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ. 1.32.6

344  தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப்
       போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்
       ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
       ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ. 1.32.7

345  பூவார்குழ லார்அகில் கொண்டு புகைப்ப
       ஓவாதடி யாரடி யுள்* குளிர்ந் தேத்த
       ஆவாஅரக் கன்றனை ஆற்ற லழித்த
       ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ. 1.32.8

* யாரடிகள்

346  முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்
       நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப்
       பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக
       எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.9

347  சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற
       நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
       வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்
       எறியார்மழு வாளன் இடைமரு தீதோ. 1.32.10

348  கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்
       எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்
       பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்
       விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே. 1.32.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - மருதீசர்
தேவி - நலமுலைநாயகியம்மை

1.33. திரு அன்பிலாலந்துறை

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

349  கணைநீடெரி மாலர வம்வரை வில்லா
       இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்
       பிணைமாமயி* லுங்குயில் சேர்மட அன்னம்
       அணையும்பொழி லன்பி லாலந் துறையாரே. 1.33.1

* பிணையா மயிலுங்

350  சடையார்சது ரன்முதி ராமதி சூடி
       விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன்
       கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை
       அடையார்பொழில் அன்பி லாலந்துறை யாரே. 1.33.2

352  ஊரும்மர வம்சடை மேலுற வைத்துப்
       பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்
       நீருண்கய லும்வயல் வாளை வராலோ
       டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே. 1.33.3

353  பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்
       நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்
       மறையும்பல வேதிய ரோத ஒலிசென்
       றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே. 1.33.4

354  நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்
       கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்
       மாடும்முழ வம்மதி ரம்மட மாதர்
       ஆடும்பதி அன்பி லாலந்துறை யாரே. 1.33.5

355  நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்
       ஊறார்சுவை யாகிய உம்பர் பெருமான்
       வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி
       ஆறார்வயல் அன்பி லாலந்துறை யாரே. 1.33.6

356  செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட
       படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்
       கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்
       அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே. 1.33.7

357  விடத்தார் திகழும்மிட றன்நட மாடி
       படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி
       கொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார
       அடர்த்தாரருள் அன்பி லாலந்துறை யாரே. 1.33.8

358  வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்
       பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை
       சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்
       அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே. 1.33.9

359  தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
       நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்
       வெறியார்மலர் கொண்டடி வீழும் அவரை
       அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே. 1.33.10

360  அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல்
       கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்
       பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்
       விரவாகுவர் வானிடை வீடெளி தாமே. 1.33.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
அன்பில் என வழங்கப்பெறும்.
சுவாமி - சத்தியவாகீசர், ஆலந்துறைநாதர்
தேவி - சௌந்தரநாயகி

1.34. சீகாழி

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

360  அடலே றமருங் கொடியண்ணல்
       மடலார் குழலா ளொடுமன்னுங்
       கடலார் புடைசூழ் தருகாழி
       தொடர்வா ரவர்தூ நெறியாரே. 1.34.1

361  திரையார் புனல்சூ டியசெல்வன்
       வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
       கரையார் புனல்சூழ் தருகாழி
       நிரையார் மலர்தூ வுமினின்றே. 1.34.2

362  இடியார் குரல்ஏ றுடையெந்தை
       துடியா ரிடையா ளொடுதுன்னுங்
       கடியார் பொழில்சூழ் தருகாழி
       அடியார் அறியார் அவலம்மே. 1.34.3

363  ஒளியார் விடமுண் டவொருவன்
       அளியார் குழல்மங் கையொடன்பாய்
       களியார் பொழில்சூழ்* தருகாழி
       எளிதாம் அதுகண் டவரின்பே. 1.34.4

* புனல்சூழ்

364  பனியார் மலரார் தருபாதன்
       முனிதா னுமையோ டுமுயங்கிக்
       கனியார் பொழில்சூழ் தருகாழி
       இனிதாம் அதுகண் டவரீடே. 1.34.5

365  கொலையார் தருகூற் றமுதைத்து
       மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
       கலையார் தொழுதேத் தியகாழி
       தலையால் தொழுவார் தலையாரே. 1.34.6

366  திருவார் சிலையால் எயிலெய்து
       உருவார் உமையோ டுடனானான்
       கருவார் பொழில்சூழ் தருகாழி
       மருவா தவர்வான் மருவாரே. 1.34.7

367  அரக்கன் வலியொல் கஅடர்த்து
       வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான்
       சுரக்கும் புனல்சூழ் தருகாழி
       நிரக்கும் மலர்தூ வுநினைந்தே. 1.34.8

368  இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
       உருவிற் பெரியா ளொடுசேருங்
       கருநற் பரவை கமழ்காழி
       மருவப் பிரியும் வினைமாய்ந்தே. 1.34.9

369  சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற
       அமைந்தான் உமையோ டுடன் அன்பாய்க்
       கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
       சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே. 1.34.10

370  நலமா கியஞான சம்பந்தன்
       கலமார் கடல்சூழ் தருகாழி
       நிலையா கநினைந் தவர்பாடல்
       வலரா னவர்வான் அடைவாரே. 1.34.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

1.35. திருவீழிமிழலை

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

371  அரையார் விரிகோ வணஆடை
       நரையார் விடையூர் திநயந்தான்
       விரையார் பொழில்வீ ழிம்மிழலை
       உரையால் உணர்வார் உயர்வாரே. 1.35.1

372  புனைதல் புரிபுன் சடைதன்மேல்
       கனைதல் லொருகங் கைகரந்தான்
       வினையில் லவர்வீ ழிம்மிழலை
       நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே. 1.35.2

373  அழவல் லவரா டியும்பாடி
       எழவல் லவரெந் தையடிமேல்
       விழவல் லவர்வீ ழிம்மிழலை
       தொழவல் லவர்நல் லவர்தொண்டே. 1.35.3

374  உரவம் புரிபுன் சடைதன்மேல்
       அரவம் அரையார்த் தஅழகன்
       விரவும் பொழில்வீ ழிம்மிழலை
       பரவும் மடியார் அடியாரே. 1.35.4

375  கரிதா கியநஞ் சணிகண்டன்
       வரிதா கியவண் டறைகொன்றை
       விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
       உரிதா நினைவார் உயர்வாரே. 1.35.5

376  சடையார் பிறையான் சரிபூதப்
       படையான் கொடிமே லதொர்பைங்கண்
       விடையான் உறைவீ ழிம்மிழலை
       அடைவார் அடியார் அவர்தாமே. 1.35.6

377  செறியார் கழலுஞ் சிலம்பார்க்க
       நெறியார் குழலா ளொடுநின்றான்
       வெறியார் பொழில்வீ ழிம்மிழலை
       அறிவார் அவலம் அறியாரே. 1.35.7

378  உளையா வலியொல் கஅரக்கன்
       வளையா விரலூன் றியமைந்தன்
       விளையார் வயல்வீ ழிம்மிழலை
       அளையா வருவா ரடியாரே. 1.35.8

379  மருள்செய் திருவர் மயலாக
       அருள்செய் தவனார் அழலாகி
       வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
       தெருள்செய் தவர்தீ வினைதேய்வே. 1.35.9

380  துளங்குந் நெறியா ரவர்தொன்மை
       வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை
       விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
       உளங்கொள் பவர்தம் வினையோய்வே. 1.35.10

381  நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன்
       குளிரார் சடையான் அடிகூற
       மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை
       கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே. 1.35.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - வீழியழகர்
தேவி - சுந்தரகுசாம்பிகை

1.36. திரு ஐயாறு (திருவையாறு)

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

382  கலையார் மதியோ டுரநீரும்
       நிலையார் சடையா ரிடமாகும்
       மலையா ரமுமா மணிசந்தோ
       டலையார் புனல்சே ருமையாறே. 1.36.1

383  மதியொன் றியகொன் றைவடத்தன்
       மதியொன் றவுதைத் தவர்வாழ்வும்
       மதியின் னொடுசேர் கொடிமாடம்
       மதியம் பயில்கின் றவையாறே. 1.36.2

384  கொக்கின் னிறகின் னொடுவன்னி
       புக்க சடையார்க் கிடமாகுந்
       திக்கின் னிசைதே வர்வணங்கும்
       அக்கின் னரையா ரதையாறே.* 1.36.3

* வரையார்தவையாறே

385  சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
       கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
       மறைகொண் டநல்வா னவர்தம்மில்
       அறையும் மொலிசே ருமையாறே. 1.36.4

386  உமையா ளொருபா கமதாகச்
       சமைவார் அவர்சார் விடமாகும்
       அமையா ருடல்சோர் தரமுத்தம்*
       அமையா வருமந் தணையாறே. 1.36.5

* சேர்தர முத்தம், சேர்தரு முத்தம்

387  தலையின் தொடைமா லையணிந்து
       கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
       நிலைகொண் டமனத் தவர்நித்தம்
       மலர்கொண் டுவணங் குமையாறே. 1.36.6

388  வரமொன் றியமா மலரோன்றன்
       சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
       வரைநின் றிழிவார் தருபொன்னி
       அரவங் கொடுசே ருமையாறே. 1.36.7

389  வரையொன் றதெடுத் தஅரக்கன்
       சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
       விரையின் மலர்மே தகுபொன்னித்
       திரைதன் னொடுசே ருமையாறே. 1.36.8

390  *சங்கக் கயனும் மறியாமைப்
       பொங்குஞ் சுடரா னவர்கோயில்
       கொங்கிற் பொலியும் புனல்கொண்டு#
       அங்கிக் கெதிர்காட் டுமையாறே. 1.36.9

* சங்கத்தயனும்
# புனல்கொண்ட

391  துவரா டையர்தோ லுடையார்கள்
       கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
       தவரா சர்கள்தா மரையானோ
       டவர்தா மணைஅந் தணையாறே. 1.36.10

392  கலையார் கலிக்கா ழியர்மன்னன்
       நலமார் தருஞான சம்பந்தன்
       அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
       சொலுமா லைவல்லார் துயர்வீடே. 1.36.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - செம்பொன்சோதீசுரர்
தேவி - அறம்வளர்த்தநாயகியம்மை.

1.37. திருப்பனையூர்

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

393  அரவச் சடைமேல் மதிமத்தம்
       விரவிப் பொலிகின் றவனூராம்
       நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
       பரவிப் பொலியும் பனையூரே. 1.37.1

394  எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
       உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்
       கண்ணின் றெழுசோ லையில்வண்டு
       பண்ணின் றொலிசெய் பனையூரே. 1.37.2

395  அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
       மலரும் பிறையொன் றுடையானூர்
       சிலரென் றுமிருந் தடிபேணப்
       பலரும் பரவும் பனையூரே. 1.37.3

396  இடியார் கடல்நஞ் சமுதுண்டு
       பொடியா டியமே னியினானூர்
       அடியார் தொழமன் னவரேத்தப்
       படியார் பணியும் பனையூரே. 1.37.4

397  அறையார் கழல்மேல் அரவாட
       இறையார் பலிதேர்ந் தவனூராம்
       பொறையார் மிகுசீர் விழமல்கப்
       பறையா ரொலிசெய் பனையூரே. 1.37.5

398  அணியார் தொழவல் லவரேத்த
       மணியார் மிடறொன் றுடையானூர்
       தணியார் மலர்கொண் டிருபோதும்
       பணிவார் பயிலும் பனையூரே. 1.37.6

399  அடையா தவர்மூ எயில்சீறும்
       விடையான் விறலார் கரியின்தோல்
       உடையான் அவனெண்* பலபூதப்
       படையா னவனூர் பனையூரே. 1.37.7

* அவனொண்

400  இலகும் முடிபத் துடையானை
       அலல்கண் டருள்செய் தஎம்மண்ணல்
       உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
       பலகண் டவனூர் பனையூரே. 1.37.8

401  வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
       சிரமுன் னடிதா ழவணங்கும்
       பிரமன் னொடுமா லறியாத
       பரமன் னுறையும் பனையூரே. 1.37.9

402  *அழிவல் லமண ரொடுதேரர்
       மொழிவல் லனசொல் லியபோதும்
       இழிவில் லதொர்செம் மையினானூர்
       பழியில் லவர்சேர் பனையூரே. 1.37.10

* அழிவில் லமணஃ தொடுதேரர்

403  பாரார் *விடையான் பனையூர்மேல்
       சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
       ஆரா தசொன்மா லைகள்பத்தும்
       ஊரூர் நினைவா ருயர்வாரே. 1.37.11

* விடையார்

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சௌந்தரியநாதர், அழகியநாதர்
தேவி - பெரியநாயகியம்மை

1.38. திருமயிலாடுதுறை

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

404  கரவின் றிநன்மா மலர்கொண்டு*
       இரவும் பகலுந் தொழுவார்கள்
       சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
       வரமா மயிலா டுதுறையே. 1.38.1

* மலர்கொண்டே

405  உரவெங் கரியின் னுரிபோர்த்த
       பரமன் னுறையும் பதியென்பர்
       குரவஞ் சுரபுன் னையும்வன்னி
       மருவும் மயிலா டுதுறையே. 1.38.2

406  ஊனத் திருள்நீங் கிடவேண்டில்
       ஞானப் பொருள்கொண் டடிபேணுந்
       தேனொத் தினியா னமருஞ்சேர்
       வானம் மயிலா டுதுறையே. 1.38.3

407  அஞ்சொண் புலனும் மவைசெற்ற
       மஞ்சன் மயிலா டுதுறையை
       நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்
       துஞ்சும் பிணியா யினதானே. 1.38.4

408  தணியார்* மதிசெஞ் சடையான்றன்
       அணியார்ந் தவருக் கருளென்றும்
       பிணியா யினதீர்த் தருள்செய்யும்
       மணியான் மயிலா டுதுறையே. 1.38.5

* கணியார்

409  தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
       கண்டு துதிசெய் பவனூராம்
       பண்டும் பலவே தியரோத
       வண்டார் மயிலா டுதுறையே. 1.38.6

410  அணங்கோ டொருபா கம்அமர்ந்து
       இணங்கி யருள்செய் தவனூராம்
       நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
       வணங்கும் மயிலா டுதுறையே. 1.38.7

411  சிரங்கை யினிலேந் தியிரந்த
       பரங்கொள் பரமேட் டிவரையால்
       அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
       வரங்கொள் மயிலா டுதுறையே. 1.38.8

412  ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்
       கோலத் தயனும் மறியாத
       சீலத் தவனூர் சிலர்கூடி
       மாலைத் தீர்மயிலா டுதுறையே. 1.38.9

413  நின்றுண் சமணும் நெடுந்தேரர்
       ஒன்றும் மறியா மையுயர்ந்த
       வென்றி யருளா னவனூராம்
       மன்றன் மயிலா டுதுறையே. 1.38.10

414  நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
       மயல்தீர் மயிலா டுதுறைமேல்
       செயலா லுரைசெய் தனபத்தும்
       உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே. 1.38.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - மாயூரநாதர்
தேவி - அஞ்சநாயகியம்மை.

1.39. திருவேட்களம்

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

415  அந்தமும் ஆதியு மாகிய அண்ணல்
              ஆரழல் அங்கை அமர்ந்திலங்க
       மந்த முழவம் இயம்ப
              மலைமகள் காண நின்றாடிச்
       சந்த மிலங்கு நகுதலை கங்கை
              தண்மதியம் மயலே ததும்ப
       வெந்தவெண் ணீறு மெய்பூசும்
              வேட்கள நன்னக ராரே. 1.39.1

415  சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச்
              சங்கவெண் டோடு சரிந்திலங்கப்
       புடைதனிற் பாரிடஞ் சூழப்
              போதரு மாறிவர் போல்வார்
       உடைதனில் நால்விரற் கோவண ஆடை
              உண்பது மூரிடு பிச்சைவெள்ளை
       விடைதனை ஊர்தி நயந்தார்
              வேட்கள நன்னக ராரே. 1.39.2

416  பூதமும் பல்கண மும்புடை சூழப்
              பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்
       சீதமும் வெம்மையு மாகிச்
              சீரொடு நின்றவெஞ் செல்வர்
       ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை
              உள்ளங் கலந்திசை யாலெழுந்த
       வேதமும் வேள்வியும் ஓவா
              வேட்கள நன்னக ராரே. 1.39.3

418  அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்
              அமையவெண் கோவணத் தோடசைத்து
       வரைபுல்கு மார்பி லோராமை
              வாங்கி யணிந் தவர்தாந்*
       திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்
              தேனலங் கானலில் வண்டுபண்செய்ய
       விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த
              வேட்கள நன்னக ராரே. 1.39.4

* அணிந்தவரதர்

419  பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்
              பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த
       பெண்ணுறு மார்பினர் பேணார்
              மும்மதில் எய்த பெருமான்
       கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட்
              கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும்
       வெண்ணிற மால்விடை அண்ணல்
              வேட்கள நன்னக ராரே. 1.39.5

420  கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற்
              கண்கவ ரைங்கணை யோனுடலம்
       பொறிவளர் ஆரழ லுண்ணப்
              பொங்கிய பூத புராணர்
       மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்
              மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை
       வெறிவளர் கொன்றையந் தாரார்
              வேட்கள நன்னக ராரே. 1.39.6

421  மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை
              மாமலை வேந்தன் மகள்மகிழ
       நுண்பொடிச் சேர நின்றாடி
              நொய்யன செய்யல் உகந்தார்
       கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்
              காலனைக் காலாற் கடிந்துகந்தார்
       வெண்பொடிச் சேர்திரு மார்பர்
              வேட்கள நன்னக ராரே. 1.39.7

422  ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்
              அமுத மமரர்க் கருளி
       சூழ்தரு பாம்பரை யார்த்துச்
              சூலமோ டொண்மழு வேந்தித்
       தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்
              தண்மதி யம்மய லேததும்ப
       வீழ்தரு கங்கை கரந்தார்
              வேட்கள நன்னக ராரே. 1.39.8

423  திருவொளி காணிய பேதுறு கின்ற
              திசைமுக னுந்திசை மேலளந்த
       கருவரை யேந்திய மாலுங்
              கைதொழ நின்றது மல்லால்
       அருவரை யொல்க எடுத்த அரக்கன்
              ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த
       வெருவுற வூன்றிய பெம்மான்
              வேட்கள நன்னக ராரே. 1.39.9

424  அத்தமண் டோய்துவ ரார்அமண் குண்டர்
              யாதுமல் லாவுரை யேயுரைத்துப்
       பொய்த்தவம் பேசுவ தல்லால்
              புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்
       முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச
              மூரிவல் லானையின் ஈருரி போர்த்த
       வித்தகர் வேத முதல்வர்
              வேட்கள நன்னக ராரே. 1.39.10

425  விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி
              வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க
       நண்ணிய சீர்வளர் காழி
              நற்றமிழ் ஞானசம் பந்தன்
       பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து
              பேணிய வேட்கள மேல்மொழிந்த
       பண்ணியல் பாடல் வல்லார்கள்
              பழியொடு பாவமி லாரே. 1.39.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பாசுபதேசுவரர்
தேவி - நல்லநாயகியம்மை

1.40. திருவாழ்கொளிபுத்தூர்*
(* திருவாளொளிபுற்றூர்)

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

426  பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப்
              பூதகணம் புடை சூழக்
       கொடியுடை யூர்திரிந் தையங்
              கொண்டு பலபல கூறி
       வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்
              ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
       கடிகமழ் மாமல ரிட்டுக்
              கறைமிடற் றானடி காண்போம். 1.40.1

427  அரைகெழு கோவண ஆடையின் மேலோர்
              ஆடரவம் அசைத் தையம்
       புரைகெழு வெண்டலை யேந்திப்
              போர்விடை யேறிப் புகழ
       வரைகெழு மங்கைய தாகமொர் பாகம்
              ஆயவன் வாழ்கொளி புத்தூர்
       விரைகமழ்* மாமலர் தூவி
              விரிசடை யானடி சேர்வோம். 1.40.2

* விரைகெழு

428  பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப்
              புன்றலை யங்கையி லேந்தி
       ஊணிடு பிச்சையூ ரையம்
              உண்டி யென்று பலகூறி
       வாணெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்
              ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
       தாள்நெடு மாமல ரிட்டுத்
              தலைவன தாள்நிழல் சார்வோம். 1.40.3

429  தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை
              தாழ்சடை மேலவை சூடி
       ஊரிடு பிச்சை கொள்செல்வம்
              உண்டி யென்று பலகூறி
       வாரிடு மென்முலை மாதொரு பாகம்
              ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
       காரிடு மாமலர் தூவி
              கறைமிடற் றானடி காண்போம். 1.40.4

430  கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
              காதிலொர் வெண்குழை யோடு
       புனமலர் மாலை புனைந்தூர்
              புகுதி யென்றே பலகூறி
       வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
              ஆயவன் வாழ்கொளி புத்தூர்
       இனமல ரேய்ந்தன தூவி
              எம்பெரு மானடி சேர்வோம். 1.40.5

431  அளைவளர் நாகம் அசைத்தன லாடி
              அலர்மிசை அந்தணன் உச்சிக்
       களைதலை யிற்பலி கொள்ளுங்
              கருத்தனே கள்வனே யென்னா
       *வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்
              ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
       தளையவிழ் மாமலர் தூவித்
              தலைவன தாளிணை சார்வோம். 1.40.6

* வளையொலி என்றும் பாடம்

432  அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து
              வழிதலை யங்கையி லேந்தி
       உடலிடு பிச்சை யோடைய
              முண்டி யென்று பலகூறி
       மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம்
              ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
       தடமல ராயின தூவித்
              தலைவன தாள்நிழல் சார்வோம். 1.40.7

433  உயர்வரை யொல்க எடுத்த அரக்கன்
              ஒளிர்கட கக்கை அடர்த்து
       அயலிடு பிச்சை யோடையம்
              ஆர்தலை யென்றடி போற்றி
       வயல்விரி நீல நெடுங்கணி பாகம்
              ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
       சயவிரி மாமலர் தூவி
              தாழ்சடை யானடி சார்வோம். 1.40.8

434  கரியவன் நான்முகன் கைதொழு தேத்தக்
              காணலுஞ் சாரலு மாகா
       எரியுரு வாகி யூரையம்
              இடுபலி யுண்ணி யென்றேத்தி
       வரியர வல்குல் மடந்தையொர் பாகம்
              ஆயவன் வாழ்கொளி புத்தூர்
       விரிமல ராயின தூவி
              விகிர்தன சேவடி சேர்வோம். 1.40.9

435  குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில்
              கொள்கை யினார் புறங்கூற
       வெண்டலை யிற்பலி கொண்டல்
              விரும்பினை யென்று விளம்பி
       வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்
              ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
       தொண்டர்கள் மாமலர் தூவத்
              தோன்றி நின்றான் அடிசேர்வோம். 1.40.10

436  கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்
              கரைபொரு காழிய மூதூர்
       நல்லுயர் நான்மறை நாவின்
              நற்றமிழ் ஞானசம் பந்தன்
       வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
              வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
       சொல்லிய பாடல்கள் வல்லார்
              துயர்கெடு தல்எளி தாமே. 1.40.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - மாணிக்கவண்ணவீசுரர்
தேவி - வண்டார்பூங்குழலம்மை.



முதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14