உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதல் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 6 ... 1.51. திருச்சோபுரம் பண் - பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் 548 வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி* மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங் கங்கையோடு திங்கள்சூடிக் கடிகம ழுங்கொன்றைத் தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே. 1.51.1 * விளங்குமெழில் 549 விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாங் கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத் தொடைநெகிழ்ந்த* வெஞ்சிலையாய் சோபுர மேயவனே. 1.51.2 * நிகழ்ந்த 550 தீயராய வல்லரக்கர் செந்தழ லுள் ளழுந்தச் சாயவெய்து வானவரைத் தாங்கிய தென்னைகாலாம் பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே. 1.51.3 551 பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந் தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம் வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடுந் தொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே. 1.51.4 552 நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம் ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம் ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளித் தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே. 1.51.5 553 கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன் பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம் அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர் துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே. 1.51.6 554 குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார் கற்றகேள்வி* ஞானமான காரண மென்னைகொலாம் வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில் துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே. 1.51.7 * கற்றல்கேள்வி 555 விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர் குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம் இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால் துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே. 1.51.8 556 விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி விரிதிரைநீர் கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம் இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனுந் தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுர மேயவனே. 1.51.9 557 புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேயுரைத்துப் பித்தராகக் கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம் மத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல் துத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே. 1.51.10 558 சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச் சீலமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன்நலத்தால் ஞாலம்மிக்க தண்டமிழால் ஞானசம் பந்தன்சொன்ன கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே. 1.51.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமி - சோபுரநாதர் தேவி - சோபுரநாயகியம்மை 1.52. திருநெடுங்களம் பண் - பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் 559 மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால் குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.1 560 கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத் தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும் நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.2 561 நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும் நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. 1.52.3 562 மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய் அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ் நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.4 563 பாங்கினல்லார்* படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர் தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித் தாங்கிநில்லா# அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ் நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.5 * பாங்கிநல்லார் # தாங்கிநல்லா 564 விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய் அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும் நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.6 565 கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால் மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல் ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.7 566 குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய் என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும் நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.8 567 வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ் சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய் கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின் நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.9 568 வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந் தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார் துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.10 569 நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச் சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால் நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. 1.52.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - நித்தியசுந்தரர் தேவி - ஒப்பிலாநாயகியம்மை. 1.53. திருமுதுகுன்றம் பண் - பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் 570 தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர் நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும் மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும் மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே. 1.53.1 571 பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார் எற்றுநீர்தீக் காலு* மேலை விண்ணிய மானனொடு மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள் முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே. 1.53.2 * தீகாலும் 572 வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி நாரிபாகம்* நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில் சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர் மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே. 1.53.3 * நாரிபாகர் 573 பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர் நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும் நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும் ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே. 1.53.4 574 வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச் செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத் தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே. 1.53.5 575 சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும் அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே. 1.53.6 *இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 576 மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும் இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள் முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே. 1.53.8 577 ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக் கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால் ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும் மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே. 1.53.9 578 உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின் மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே. 1.53.10 579 மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன் .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... 1.53.11 * 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயின. திருச்சிற்றம்பலம் இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம். சுவாமி - பழமலைநாதர் தேவி - பெரியநாயகியம்மை 1.54. திருஓத்தூர் பண் - பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் 580 பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால் ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக் கூத்தீ ரும்ம குணங்களே. 1.54.1 581 இடையீர் போகா இளமுலை யாளையோர் புடையீ ரேபுள்ளி மானுரி உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச் சடையீ ரேயும தாளே. 1.54.2 582 உள்வேர் போல நொடிமையி னார்திறம் கொள்வீ ரல்குலோர் கோவணம் ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க் கள்வீ ரேயும காதலே. 1.54.3 583 தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை ஆட்டீ ரேயடி யார்வினை ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர் நாட்டீ ரேயருள் நல்குமே. 1.54.4 584 குழையார் காதீர்* கொடுமழு வாட்படை உழையாள் வீர்திரு வோத்தூர் பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார் அழையா மேயருள் நல்குமே. 1.54.5 * காதா 585 மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத் தக்கார் தம்மக்க ளீரென் றுட்கா தாருள ரோதிரு வோத்தூர் நக்கீ ரேயருள் நல்குமே. 1.54.6 586 தாதார் கொன்றை தயங்கு முடியுடை நாதா என்று நலம்புகழ்ந் தோதா தாருள ரோதிரு வோத்தூர் ஆதீ ரேயருள் நல்குமே. 1.54.7 587 என்றா னிம்மலை யென்ற அரக்கனை வென்றார் போலும் விரலினால் ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர் என்றார் மேல்வினை யேகுமே. 1.54.8 588 நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச் சென்றார் போலுந் திசையெலாம் ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர் நின்றீ ரே* யுமை நேடியே. 1.54.9 * நின்றாரே 589 கார மண்கலிங் கத்துவ ராடையர் தேரர் சொல்லவை தேறன்மின் ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச் சீர வன்கழல் சேர்மினே. 1.54.10 590 குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர் அரும்பு கொன்றை யடிகளைப் பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல் விரும்பு வார்வினை வீடே. 1.54.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - வேதநாதர் தேவி - இளமுலைநாயகியம்மை. 1.55. திருமாற்பேறு பண் - பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் 591 ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை நீறு சேர்திரு மேனியர் சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின் மாறி லாமணி கண்டரே. 1.55.1 592 தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை அடைவா ராமடி கள்ளென மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே றுடையீ ரேயுமை யுள்கியே. 1.55.2 593 பையா ரும்மர வங்கொடு வாட்டிய கையா னென்று வணங்குவர் மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற ஐயா நின்னடி யார்களே. 1.55.3 594 சால மாமலர் கொண்டு சரணென்று மேலை யார்கள் விரும்புவர் மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று நீல மார்கண்ட நின்னையே. 1.55.4 595 மாறி லாமணி யேயென்று வானவர் ஏற வேமிக ஏத்துவர் கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின் நீற னேயென்று நின்னையே. 1.55.5 596 உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப் பரவா தாரில்லை நாள்களும் திரையார் பாலியின் தென்கரை மாற்பேற் றரையா னேயருள் நல்கிடே. 1.55.6 * இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 597 அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை உரைகெ டுத்தவன் ஒல்கிட வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப் பரவி டக்கெடும் பாவமே. 1.55.8 598 இருவர் தேவருந் தேடித் திரிந்தினி* ஒருவ ராலறி வொண்ணிலன்# மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப் பரவு வார்வினை பாறுமே. 1.55.9 * திரிந்ததில் # லறிவுண்டிலன், லறியுண்டிலன் 599 தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும் நீசர் தம்முரை கொள்ளெலுந்* தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின் ஈச னென்றெடுத் தேத்துமே. 1.55.10 * கொள்ளலும் 600 மன்னி மாலொடு சோமன் பணிசெயும் மன்னும் மாற்பேற் றடிகளை மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல் பன்ன வேவினை பாறுமே. 1.55.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - மால்வணங்குமீசர் தேவி - கருணைநாயகியம்மை. 1.56. திருப்பாற்றுறை பண் - பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் 601 காரார் கொன்றை கலந்த முடியினர் சீரார் சிந்தை செலச்செய்தார் பாரார் நாளும் பரவிய பாற்றுறை ஆரா ராதி முதல்வரே. 1.56.1 602 நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ் சொல்லார் நன்மலர் சூடினார் பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை எல்லா ருந்தொழும் ஈசரே. 1.56.2 603 விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர் எண்ணார் வந்தென் எழில் கொண்டார் பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை யுண்ணா ணாளும் உறைவரே. 1.56.3 604 பூவுந் திங்கள் புனைந்த முடியினர் ஏவின் அல்லா ரெயிலெய்தார் பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை ஓவென் சிந்தை யொருவரே. 1.56.4 605 மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென தாகம் பொன்னிற மாக்கினார் பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை நாகம் பூண்ட நயவரே. 1.56.5 606 போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி நாதர் வந்தென் நலங்கொண்டார் பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை வேத மோதும் விகிர்தரே. 1.56.6 607 வாடல் வெண்டலை சூடினர் மால்விடை கோடல் செய்த குறிப்பினார் பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை ஆடல் நாகம் அசைத்தாரே. 1.56.7 608 வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர் எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார் பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை மவ்வல் சூடிய மைந்தரே. 1.56.8 608 ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி ஆன வண்ணத்தெம் அண்ணலார் பான லம்மலர் விம்மிய பாற்றுறை வான வெண்பிறை மைந்தரே. 1.56.9 610 வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் வந்தென் நன்னலம் வௌவினார் பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர் தாமோர் மணாளரே. 1.56.10 611 பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய பத்து நூறு பெயரானைப் பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ் பத்தும் பாடிப் பரவுமே. 1.56.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - திருமூலநாதர் தேவி - மோகாம்பிகையம்மை. 1.57. திருவேற்காடு பண் - பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் 612 ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி வெள்ளி யானுறை வேற்காடு உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில் தெள்ளி யாரவர் தேவரே. 1.57.1 613 ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர் வேடங் கொண்டவன் வேற்காடு பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில் சேட ராகிய செல்வரே. 1.57.2 614 பூதம் பாடப் புறங்காட் டிடையாடி வேத வித்தகன் வேற்காடு போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க் கேதம் எய்துத லில்லையே. 1.57.3 615 ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன் வீழ்ச டையினன் வேற்காடு தாழ்வி டைமனத் தாற்பணிந் தேத்திட பாழ்ப டும்மவர் பாவமே. 1.57.4 616 காட்டி னாலும் அயர்த்திடக் காலனை வீட்டி னானுறை வேற்காடு பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர் ஓட்டி னார்வினை ஒல்லையே. 1.57.5 617 தோலி னாலுடை மேவவல் லான்சுடர் வேலி னானுறை வேற்காடு நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர் மாலி னார்வினை மாயுமே. 1.57.6 618 மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர் வில்லி னானுறை வேற்காடு சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் செல்ல வல்லவர் தீர்க்கமே. 1.57.7 619 மூரல் வெண்மதி சூடும் முடியுடை வீரன் மேவிய வேற்காடு வார மாய்வழி பாடு நினைந்தவர் சேர்வர் செய்கழல் திண்ணமே. 1.57.8 620 பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி விரக்கி னானுறை வேற்காட்டூர் அரக்கன் ஆண்மை யடரப் பட்டானிறை நெருக்கி னானை நினைமினே. 1.57.9 621 மாறி லாமல ரானொடு மாலவன் வேற லானுறை வேற்காடு ஈறி லாமொழி யேமொழி யாயெழில் கூறி னார்க்கில்லை குற்றமே. 1.57.10 622 விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு கண்டு நம்பன் கழல்பேணிச் சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டு பாடக் குணமாமே. 1.57.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - வேற்காட்டீசுவரர் தேவி - வேற்கண்ணியம்மை. 1.58. திருக்கரவீரம் பண் - பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் 623 அரியும் நம்வினை யுள்ளன ஆசற வரிகொள் மாமணி போற்கண்டங் கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம் பெரிய வன்கழல் பேணவே. 1.58.1 624 தங்கு மோவினை தாழ்சடை மேலவன் திங்க ளோடுடன் சூடிய கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம் சங்க ரன்கழல் சாரவே. 1.58.2 625 ஏதம் வந்தடை யாவினி நல்லன பூதம் பல்படை யாக்கிய காத லான்திக ழுங்கர வீரத்தெம் நாதன் பாதம் நணுகவே. 1.58.3 626 பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட மறையும் மாமணி போற்கண்டங் கறைய வன்திக ழுங்கர வீரத்தெம் இறைய வன்கழல் ஏத்தவே. 1.58.4 627 பண்ணி னார்மறை பாடலன் ஆடலன் விண்ணி னார்மதி லெய்தமுக் கண்ணி னானுறை யுங்கர வீரத்தை நண்ணு வார்வினை நாசமே. 1.58.5 628 நிழலி னார்மதி சூடிய நீள்சடை* அழலி னாரழ லேந்திய கழலி னாருறை யுங்கர வீரத்தைத் தொழவல் லார்க்கில்லை துக்கமே. 1.58.6 * சூடினன் நீள்சடை 629 வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன் அண்டன் ஆரழல் போலொளிர் கண்ட னாருறை யுங்கர வீரத்துத் தொண்டர் மேற்றுயர் தூரமே. 1.58.7 630 புனலி லங்கையர் கோன்முடி பத்திறச் சினவ லாண்மை செகுத்தவன் கனல வனுறை கின்ற கரவீரம் எனவல் லார்க்கிட ரில்லையே. 1.58.8 631 வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த் தெள்ளத் தீத்திர ளாகிய கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை உள்ளத் தான்வினை ஓயுமே. 1.58.9 632 செடிய மண்ணொடு சீவரத் தாரவர் கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்* கடிய வன்னுறை கின்ற கரவீரத் தடிய வர்க்கில்லை யல்லலே. 1.58.10 * கொள்ளன்மின் 633 வீடி லான்விளங் குங்கர வீரத்தெம் சேடன் மேற்கசி வால்தமிழ் நாடு ஞானசம் பந்தன சொல்லிவை பாடு வார்க்கில்லை பாவமே. 1.58.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - கரவீரேசுவரர் தேவி - பிரத்தியட்சமின்னாளம்மை. 1.59. திருத்தூங்கானைமாடம் பண் - பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் 634 ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம் அடங்கு மிடங்கருதி நின்றீ ரெல்லாம் அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங் கிடங்கும் மதிலுஞ் சுலாவி யெங்குங் கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.1 635 பிணிநீர சாதல் பிறத்தலிவை பிரியப் பிரியாத பேரின்பத்தோ டணிநீர மேலுலகம் எய்தலுறில் அறிமின் குறைவில்லை ஆனேறுடை மணிநீல கண்ட முடையபிரான் மலைமகளுந் தானும் மகிழ்ந்துவாழுந் துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.2 636 சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் ஆமா றறியா தலமந்துநீர்* அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப் பூமாண் அலங்கல் இலங்குகொன்றை புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந் தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.3 * தலம்வந்துநீர் 637 ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம் மான்று மனங்கருதி நின்றீரெல்லாம் மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர் மூன்று மதிலெய்த மூவாச்சிலை முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.4 638 மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை மரணத்தொ டொத்தழியு மாறாதலால் வியல்தீர மேலுலக மெய்தலுறின் மிக்கொன்றும் வேண்டா விமலனிடம் உயர்தீர வோங்கிய நாமங்களா லோவாது நாளும் அடிபரவல்செய் துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.5 639 பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா படர்நோக் கின்கண் பவளந்நிற நன்னீர்மை குன்றித் திரைதோலொடு நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன் பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற் புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந் தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.6 640 இறையூண் துகளோ டிடுக்கண் எய்தி யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம் நீள்கழ லேநாளும் நினைமின்சென்னிப் பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றைப் பிணையும் பெருமான் பிரியாதநீர்த் துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.7 641 பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம் இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம் இறையே பிரியா தெழுந்துபோதுங் கல்சூ ழரக்கன் கதறச்செய்தான் காதலியுந் தானுங் கருதிவாழுந் தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.8 642 நோயும் பிணியும் அருந்துயரமும் நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம் வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம் மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும் தாய அடியளந்தான் காணமாட்டாத் தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண் டோயும் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.9 643 பகடூர் பசிநலிய நோய்வருதலாற் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம் முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும் மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்திழை யுந்தானும் பொருந்திவாழுந் துகள்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.10 644 மண்ணார் முழவதிரும் மாடவீதி வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான் கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய் விண்ணோ ருலகத்து மேவிவாழும் விதியது வேயாகும் வினைமாயுமே. 1.59.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமி - சுடர்க்கொழுந்தீசர் தேவி - கடந்தைநாயகியம்மை 1.60. திருத்தோணிபுரம் பண் - பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் 645 வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும் ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத் துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும் பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே. 1.60.1 646 எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை அறிவுறா தொழிவதுவும் அருவினையேன்* பயனன்றே செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும் வெறிநிறார்# மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே. 1.60.2 * அருவினையின் # வெறிநீறார் 647 பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக் கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும் பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே. 1.60.3 648 காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற் பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர் சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும் ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே. 1.60.4 649 பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள் தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும் நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே. 1.60.5 650 சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள் தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே. 1.60.6 651 முன்றில்வாய் மடற்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை அன்றில்காள் பிரிவுறுநோய் அறியாதீர் மிகவல்லீர் தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங் கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே. 1.60.7 652 பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர் கோனாரை என்னிடத்தே* வரவொருகாற் கூவாயே. 1.60.8 * என்னிடைக்கே 653 நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன் பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன் சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும் விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே. 1.60.9 654 சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. 1.60.10 655 போர்மிகுத்த வயல்தோணி புரத்துறையும் புரிசடையெங் கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வன்கமலத் தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. 1.60.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - தோணியப்பர் தேவி - திருநிலைநாயகியம்மை |