உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதல் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 7 ... 1.61. திருச்செங்காட்டங்குடி பண் - பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் 656 நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும் முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச் சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள் கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.1 657 வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப ஊரேற்ற செல்வத்தோ டோங்கியசீர் விழவோவாச் சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள் காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. 1.61.2 658 வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான் கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர் சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைச்சேருங் கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. 1.61.3 659 தொங்கலுங் கமழ்சாந்தும் அகில்புகையுந் தொண்டர்கொண் டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான் செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள் கங்கைசேர் வார்சடையான்* கணபதீச் சரத்தானே. 1.61.4 * யோர்சடையான் 660 பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச் சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள் காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.5 661 நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான் தண்ணியான் வெய்யான்நம் தலைமேலான் மனத்துளான் திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக் கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே. 1.61.6 662 மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம் மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச் செய்யினார் தண்கழனிச்* செங்காட்டங் குடியதனுள் கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே. 1.61.7 * அகன்கழனிச் 663 தோடுடையான் குழையுடையான் அரக்கன்தன் தோளடர்த்த பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான் சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடும் காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே. 1.61.8 664 ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான் தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான் கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.9 665 செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும் படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான் பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக் கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே. 1.61.10 666 கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின் நறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன் சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும் மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே. 1.61.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - கணபதீசுவரர் தேவி - திருக்குழல்மாதம்மை 1.62. திருக்கோளிலி பண் - பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் 667 நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமம் கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக் கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே. 1.62.1 668 ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில் கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே. 1.62.2 669 நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண் டொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல் கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான் கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே. 1.62.3 670 வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ் சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத் தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக் கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே. 1.62.4 671 வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால் நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும் பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான் கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே. 1.62.5 672 தாவியவ* னுடனிருந்துங் காணாத தற்பரனை ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும் நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன் கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே. 1.62.6 * காவியவன் 673 கல்நவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான் சொல்நவிலும் மாமறையான் தோத்திரஞ்செய்* வாயினுளான் மின்நவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற் கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே. 1.62.7 * தோத்திரஞ்சேர் 674 அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்பச் சுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானுங் கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. 1.62.8 675 நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத் தாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. 1.62.9 676 தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல் இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள் நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல் கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே. 1.62.10 677 நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங் கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்தமிழ்கொண் டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே. 1.62.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - கோளிலியப்பர் தேவி - வண்டமர்பூங்குழலம்மை. 1.63. திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் 678 எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன் பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே. 1.63.1 679 பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல் வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே. 1.63.2 680 நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே அகலாதுறையும் மாநிலத்தில் அயலின் மையாலமரர்* புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே. 1.63.3 * அயலின் மயலாலமரர்; 681 சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன் அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே. 1.63.4 682 தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன் பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலை வவ்வுதியே அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்கத் துணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே. 1.63.5 683 கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே அவர்பூணரையர்க் காதியாயவள்தன் மன்னனாள்மண்மேற் தவர்பூம்பதிகள் எங்குமெங்குந் தங்குதராயவனே. 1.63.6 684 முலையாழ்கெழுவ* மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச் சிலையான்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே. 1.63.7 * முலையாழ்கெழும் 685 எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக் கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலையப் பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே. 1.63.8 686 துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங் கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகைவார்குழலார் அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே. 1.63.9 687 நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய கழல்நாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே. 1.63.10 688 கட்டார் துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே. 1.63.11 689 கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க்கவுணி நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல படையார்மழுவன் மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார்க் கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே. 1.63.12 திருச்சிற்றம்பலம் திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.64. திருப்பூவணம் பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் 690 அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல் குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம் முறையால்* முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்குந் திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்பூவணமே. 1.64.1 * முறையார் 691 மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை ஒருபால்பாக மாகச்செய்த உம்பர்பிரானவனூர் கருவார்சாலி ஆலைமல்கிக் கழல்மன்னர் காத்தளித்த திருவால்மலிந்த சேடர்வாழுந் தென்திருப் பூவணமே. 1.64.2 692 போரார்மதமா உரிவைபோர்த்துப் பொடியணி மேனியனாய்க் காரார் கடலில் நஞ்சமுண்ட கண்ணுதல் விண்ணவனூர் பாரார் வைகைப் புனல்வாய்ப் பரப்பிப் பன்மணி பொன்கொழித்துச் சீரார்வாரி சேரநின்ற தென்திருப் பூவணமே. 1.64.3 693 கடியாரலங்கல் கொன்றைசூடிக் காதிலோர் வார்குழையன் கொடியார்வெள்ளை ஏறுகந்த கோவண வன்னிடமாம் படியார்கூடி நீடியோங்கும் பல்புக ழாற்பரவச் செடியார்வைகை சூழநின்ற தென்திருப் பூவணமே. 1.64.4 694 கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதில் கூட்டழித்த போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந் தானிடமாம் ஆராவன்பில் தென்னர்சேரர் சோழர்கள்போற்றிசைப்பத் தேரார்வீதி மாடநீடுந் தென்திருப் பூவணமே. 1.64.5 695 நன்றுதீதென் றொன்றிலாத நான்மறை யோன்கழலே சென்றுபேணி யேத்தநின்ற தேவர் பிரானிடமாம் குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில் சூழ்மலர்மேல் தென்றலொன்றி முன்றிலாருந் தென்திருப் பூவணமே. 1.64.6 696 பைவாயரவம் அரையிற்சாத்திப் பாரிடம் போற்றிசைப்ப மெய்வாய்மேனி நீறுபூசி ஏறுகந் தானிடமாம் கைவாழ்வளையார்* மைந்தரோடுங் கலவி யினால்நெருங்கிச் செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்திருப் பூவணமே. 1.64.7 * கைவாழ்வினையார் 697 மாடவீதி மன்னிலங்கை மன்னனை மாண்பழித்துக் கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையி னார்க்கிடமாம் பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணி பொன்கொழித்து ஓடநீரால் வைகைசூழும் உயர்திருப் பூவணமே. 1.64.8 698 பொய்யாவேத நாவினானும் பூமகள் காதலனும் கையால்தொழுது கழல்கள்போற்றக் கனலெரி யானவனூர் மையார்பொழிலின் வண்டுபாட வைகை மணிகொழித்துச் செய்யார்கமலம் தேனரும்புந் தென்திருப் பூவணமே. 1.64.9 699 அலையார்புனலை நீத்தவருந் தேரரும் அன்புசெய்யா நிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன் தன்னிடமாம் மலைபோல்துன்னி வென்றியோங்கு மாளிகை சூழ்ந்தயலே சிலையார் புரிசை பரிசு பண்ணுந் தென்திருப் பூவணமே. 1.64.10 700 திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப் பூவணத்துப் பெண்ணார்மேனி எம்மிறையைப் பேரியல் இன்தமிழால் நண்ணார்உட்கக் காழிமல்கும் ஞானசம் பந்தன்சொன்ன பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வது வானிடையே. 1.64.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமி - பூவணநாதர் தேவி - மின்னாம்பிகையம்மை 1.65. காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் 701 அடையார்தம் புரங்கள் மூன்றும் ஆரழ லில்லழுந்த விடையார் மேனிய ராய்ச்சீறும் வித்தகர் மேயவிடம் கடையார் மாடம் நீடியெங்கு* கங்குல்புறந் தடவப் படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவ னீச்சரமே. 1.65.1 * நீடியோங்கும் 702 எண்ணா ரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரான் இமையோர் கண்ணா யுலகங் காக்கநின்ற கண்ணுதல் நண்ணுமிடம் மண்ணார் சோலைக் கோலவண்டு வைகலுந்தேன் அருந்திப் பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 1.65.2 703 மங்கை யங்கோர் பாகமாக வாள்*நில வார்சடைமேல் கங்கை யங்கே வாழவைத்த கள்வன் இருந்தஇடம் பொங்க யஞ்சேர் புணரியோத மீதுயர் பொய்கையின்மேல் பங்க யஞ்சேர் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 1.65.3 * வான் 704 தாரார் கொன்றை பொன்தயங்கச் சாத்திய மார்பகலம் நீரார் நீறு சாந்தம்வைத்த நின்மலன் மன்னுமிடம் போரார் வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசை பாடலினாற் பாரார் கின்ற பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 1.65.4 705 மைசேர் கண்டர் அண்டவாணர் வானவ ருந்துதிப்ப மெய்சேர் பொடியர்* அடியாரேத்த மேவி இருந்தவிடங் கைசேர்வளையார் விழைவினோடு காதன்மை யாற்கழலே பைசே ரரவார் அல்குலார்சேர் பல்லவ னீச்சரமே. 1.65.5 * மெய்சேர்கோடி 706 குழலினோசை வீணைமொந்தை கொட்ட முழவதிரக் கழலினோசை யார்க்கஆடுங் கடவு ளிருந்தவிடஞ் சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப் பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே. 1.65.6 707 வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச் சாடிவிண்ணோர் வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன் மகிழ்ந்தஇடம் மந்தலாய மல்லிகையும் புன்னை வளர்குரவின் பந்தலாரும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 1.65.7 708 தேரரக்கன் மால்வரையைத் தெற்றி யெடுக்கஅவன் தாரரக்குந் திண்முடிகள் ஊன்றிய சங்கரனூர் காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெ லாமுணரப் பாரரக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே. 1.65.8 709 அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால் தங்கணாலும் நேடநின்ற சங்கரன்தங்குமிடம் வங்கமாரும் முத்தம்இப்பி வார்கட லூடலைப்பப் பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே. 1.65.9 710 உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நக வேதிரிவார் கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறி யாதவிடந் தண்டுடுக்கை தாளந்தக்கை சார நடம்பயில்வார் பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவ னீச்சரமே. 1.65.10 711 பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம் அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம் பந்தன்சொல் சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினை நோயிலராய் ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொ டோங்குவரே. 1.65.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பல்லவனேசர் தேவி - சவுந்தராம்பிகையம்மை 1.66. திருச்சண்பைநகர் பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் 712 பங்மேறு மதிசேர்சடையார் விடையார் பலவேதம் அங்கமாறும் மறைநான்கவையு மானார் மீனாரும் வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கே நுனைமூக்கின் சங்கமேறி முத்தமீனுஞ் சண்பை நகராரே. 1.66.1 713 சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர் சுடர்க்கமலப் போதகஞ்சேர் புண்ணியனார் பூத கணநாதர் மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில் விண்ணார்ந்த சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பை நகராரே. 1.66.2 714 மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய நிகரொப் பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார் பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத் தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே. 1.66.3 715 மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ் சதுவுண்ட தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக் கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர்காதலாற் சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பை நகராரே. 1.66.4 716 கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம் அருள்செய்த குலமார்கயிலைக் குன்றதுடைய* கொல்லை யெருதேறி நலமார்வெள்ளை நாளிகேரம் விரியார் நறும்பாளை சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பை நகராரே. 1.66.5 * குன்றொத்துடைய 717 மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்து மெய்ம்மாலான் சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன் மேதக்க ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண் வயலுக்கே சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பை நகராரே. 1.66.6 * இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 718 இருளைப்புரையும் நிறத்திலரக்கன் றனையீ டழிவித்து அருளைச்செய்யும் அம்மானேரா ரந்தண் கந்தத்தின் மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார் திரைக்கையால் தரளத்தோடு பவளமீனுஞ் சண்பை நகராரே. 1.66.8 719 மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசை மேலயனும் எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன் மறையோதி தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத் தாதின்மேற் பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பை நகராரே. 1.66.9 720 போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும் நீதியாகக் கொண்டங்கருளும் நிமலன் இருநான்கின் மாதிசித்தர் மாமறையின் மன்னிய தொன்னூலர் சாதிகீத வர்த்தமானர் சண்பை நகராரே. 1.66.10 721 வந்தியோடு பூசையல்லாப் போழ்தின் மறைபேசிச் சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பை நகர்மேய அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம் பந்தன்சொல் சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே. 1.66.11 திருச்சிற்றம்பலம் 1.67. திருப்பழனம் பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் 722 வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப் பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார் நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே. 1.67.1 723 கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார் காலனைப் புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப்புறந் தாளால் எண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான் மகளோடும் பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழன நகராரே. 1.67.2 724 பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல் விழிகட்பேய் உறையுமயான மிடமாவுடையார் உலகர் தலைமகன் அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல்பாடல்செய் பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழன நகராரே. 1.67.3 725 உரம்மன்னுயர்கோட் டுலறுகூகை யலறும் மயானத்தில் இரவிற்பூதம் பாடஆடி எழிலாரலர் மேலைப் பிரமன்றலையில் நறவமேற்ற பெம்மான் எமையாளும் பரமன்பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே. 1.67.4 726 குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடை யண்ணல் கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற் காவேரி நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண் டெதிருந்திப் பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழன நகராரே. 1.67.5 727 வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின் னொலியோவா மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியா மதிளெய்தார் ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார் வாழையின் பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழன நகராரே. 1.67.6 728 பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார் திருமேனி செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்த அகலத்தார் கையாடலினார் புனலால்மல்கு சடைமேற் பிறையோடும் பையாடரவ* முடனேவைத்தார் பழன நகராரே. 1.67.7 * பைவாயரவ 729 மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறா யெடுத்தான்றோள் அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடர வூன்றினார் நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான் வம்பாரும் பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழன நகராரே. 1.67.8 730 கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன் சடையார்விண் முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந் தாவிய நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக் காணாத படியார்பொடியா டகலமுடையார் பழன நகராரே. 1.67.9 731 கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக் கஞ்சியை உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார் பாராட்ட வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய் மிகவுண்டு பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழன நகராரே. 1.67.10 732 வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணு புரந்தன்னுள் நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞான சம்பந்தன் பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான் பழனத்தை வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார் நல்லாரே. 1.67.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - ஆபத்சகாயர் தேவி - பெரியநாயகியம்மை 1.68. திருக்கயிலாயம் பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் 733 பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல் திகழ்மார்பில் கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர் கண்டத்தர் இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்கு முனைச்சாரல் கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலை மலையாரே. 1.68.1 734 புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார் பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்* கூர்ந்த கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே. 1.68.2 * மழுங்கியிருள் 735 மாவினுரிவை மங்கைவெருவ மூடி முடிதன்மேல் மேவுமதியும் நதியும்வைத்த இறைவர் கழலுன்னும் தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல் முகவன்சேர் காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலை மலையாரே. 1.68.3 736 முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர் மதனன்றன் தென்னீருருவம் அழியத்திருக்கண் சிவந்த நுதலினார் மன்னீர்மடுவும் படுகல்லறையின் உழுவை சினங்கொண்டு கன்னீர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலை மலையாரே. 1.68.4 737 ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல் சேர்வார் நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித் திரண்டெங்குந் தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல் நெறியோடிக் கன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலை மலையாரே. 1.68.5 738 தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப் போதார்பாக மாகவைத்த புனிதர் பனிமல்கும் மூதாருலகில் முனிவருடனாய் அறநான் கருள்செய்த காதார்குழையர் வேதத்திரளர் கயிலை மலையாரே. 1.68.6 * இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 739 தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண் பகழியார் எடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடிய விரல்வைத்தார் கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகி வருங்கூற்றைக் கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலை மலையாரே. 1.68.8 740 ஊணாப் பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம் பூணாணார மாகப்பூண்டார் புகழு மிருவர்தாம் பேணாவோடி நேடவெங்கும் பிறங்கும் எரியாகிக் காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலை மலையாரே. 1.68.9 741 விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச் சாக்கியர் பொருதுபகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க் கணியராய் எருதொன்றுகைத்திங் கிடுவார் தம்பால் இரந்துண் டிகழ்வார்கள் கருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலை மலையாரே. 1.68.10 742 போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன் காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலைமலையார்மேல் தேராவுரைத்த செஞ்சொன்மாலை செப்புமடியார்மேல் வாராபிணிகள் வானோருலகில் மருவும்மனத்தாரே. 1.68.11 திருச்சிற்றம்பலம் சுவாமி - கயிலாயநாதர் தேவி - பார்வதியம்மை 1.69. திரு அண்ணாமலை பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் 743 பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள் மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள் செய்தார் தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் நிரையோடும் ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.1 744 மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர் பெருமானார் நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும் வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே. 1.69.2 745 ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல் ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள்போலும் ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண் ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.3 746 இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர் பெருமானார் தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார் புரமெய்தார் பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம் அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.4 747 உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர் பெருமானார் செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீ யெழுவித்தார் பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணி முத்தம் அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.5 748 எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர் பெருமானார் நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில் கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.6 749 வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல் வினையோடு பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறை கோயில் முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல் அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.7 750 மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள் நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள் செய்தார் திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே. 1.69.8 751 தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென் றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.9 752 தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணே நின்றுண்ணும் பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள் வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில் அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே. 1.69.10 753 அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன் சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே. 1.69.11 திருச்சிற்றம்பலம் இது நடுநாட்டிலுள்ளது சுவாமி - அருணாசலேசுவரர் தேவி - உண்ணாமுலையம்மை 1.70. திரு ஈங்கோய்மலை பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் 754 வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித் தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக் கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.1 755 சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக் கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே பாலொத்தனைய மொழியாள்காண ஆடும் பரமனார் ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே. 1.70.2 756 கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார் விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார் எண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.3 757 மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான் மகளோடுங் குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன் சடைதாழப் பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட் டெரியாடும் இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய் மலையாரே. 1.70.4 758 நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர் கண்ணினார் கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன் சடைதாழப் பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட் டெரியாடும் எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய் மலையாரே. 1.70.5 759 நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றை யரவோடும் ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ் சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே. 1.70.6 760 வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன் விரிகொன்றை நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பா னலமல்கு தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோ டனலேந்தும் எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே. 1.70.7 761 பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற் பொலிவாய அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார் விரல்தன்னால் நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே. 1.70.8 762 வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான் மகளோடும் பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி அரியோடயனும் அறியாவண்ணம் அளவில் பெருமையோ டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய் மலையாரே. 1.70.9 763 பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்கு சமணரும் மண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில் தேரரும் உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோ டுடனாகி இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய் மலையாரே. 1.70.10 764 விழவாரொலியும் முழவும்ஓவா வேணு புரந்தன்னுள் அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன் எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன் கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலை களைவாரே. 1.70.11 திருச்சிற்றம்பலம் |