சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
முதல் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 8 ... 1.71. திருநறையூர்ச்சித்தீச்சரம் பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் 765 பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய் நாகத்தர் கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர் கங்காளர் மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில் மகிழ்வெய்திச் சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.1 766 பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம் பாடவே தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர் விடையேறிக் கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக் குளிர்பொய்கைச் செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச் சரத்தாரே. 1.71.2 767 முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல் பொடிகொள்நூலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக் கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலா ரினம்பாயக் கொடிகொள்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.3 768 பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும் ஒருகாதர் பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்து செண்பகஞ் சென்றார்செல்வத் திருவார் நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.4 769 நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர் பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்லச் சீரார்கோலம் பொலியும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே. 1.71.5 770 நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத் தெழிலார்வந் தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்கு கோபுரந் தீண்டுமதியந் திகழும்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.6 771 குழலார்சடையர் கொக்கின்இறகர் கோல நிறமத்தந் தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவ ணக்கீளர் எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்து* விடையேறிக் கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச் சரத்தாரே. 1.71.7 * இசைந்து 772 கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலை மலைதன்னை வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்து மனமொன்றி உரையார்கீதம் பாடநல்ல வுலப்பி லருள்செய்தார் திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.8 773 நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார் மனத்தாராய் அடியாரவரும் அருமாமறையும் அண்டத் தமரரும் முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வா அருளென்ன செடியார்செந்நெல் திகழும்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.9 774 நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்ட போர்வையார் ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட் டுழல்வீர்காள் கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபால மயல்பொழியச்* சென்றுண்டார்ந்து சேரும்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.10 * வழியச் 775 குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ் சுரபுன்னை செயிலார்பொய்கை சேரும்நறையூர்ச் சித்தீச் சரத்தாரை மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்கு சம்பந்தன் பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவ நாசமே. 1.71.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - சித்தநாதேசர் தேவி - அழகாம்பிகையம்மை 1.72. திருக்குடந்தைக்காரோணம் பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் 776 வாரார்கொங்கை மாதோர்பாக மாக வார்சடை நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றி ஒற்றைக்கண் கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன் குடமூக்கிற் காரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோ ணத்தாரே. 1.72.1 777 முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுல கும்மேத்தும் படியார்பவள வாயார்பலரும் பரவிப் பணிந்தேத்தக் கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக் குழகாருங் கடியார்சோலைக் கலவமயிலார் காரோ ணத்தாரே. 1.72.2 778 மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங் குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கில் முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவா மதியினார் கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே. 1.72.3 779 போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ் வழகாருந் தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண்குட மூக்கில் மாதார்மங்கை பாகமாக மனைகள் பலிதேர்வார் காதார்குழையர் காளகண்டர் காரோ ணத்தாரே. 1.72.4 780 பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர் புறவெல்லாந் தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக் கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற் கிளிப்பிள்ளை காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோ ணத்தாரே. 1.72.5 781 மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னே அனல்வாளி கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர் குடமூக்கில் தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள் நலியாமைக் காப்பார்காலன் அடையாவண்ணங் காரோ ணத்தாரே. 1.72.6 782 ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந் துழல்வாழ்க்கை மானார்தோலார் புலியினுடையார் கரியின் னுரிபோர்வை தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங்குடமூக்கில் கானார்நட்டம் உடையார்செல்வக் காரோ ணத்தாரே. 1.72.7 783 வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும் விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும் உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாருங் கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோணத்தாரே. 1.72.8 784 கரியமாலுஞ் செய்ய பூமேல் அயனுங்கழறிப்போய் அரியவண்டந் தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார் தெரியவரிய தேவர்செல்வந் திகழுங் குடமூக்கில் கரியகண்டர் காலகாலர் காரோ ணத்தாரே. 1.72.9 785 நாணார்அமணர் நல்லதறியார் நாளுங் குரத்திகள் பேணார்தூய்மை* மாசுகழியார் பேச லவரோடுஞ் சேணார்மதிதோய் மாடமல்கு செல்வ நெடுவீதிக் கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோ ணத்தாரே. 1.72.10 786 கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத் திருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ்சம்பந்தன் உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக் கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே. 1.72.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - காசிவிசுவநாதர், சோமநாதர் தேவி - விசாலாட்சி, தேனார்மொழியம்மை 1.73. திருக்கானூர் பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் 787 வானார்சோதி மன்னுசென்னி வன்னிபு னங்கொன்றைத் தேனார்போது தானார்கங்கை திங்க ளொடுசூடி மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலை யாடுவார் கானூர்மேய கண்ணார்நெற்றி ஆனூர் செல்வரே. 1.73.1 788 நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடை தன்மேலோர் ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றை யெழிலார போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தரவர்போலாம் காந்தள்விம்மு கானூர்மேய சாந்த நீற்றாரே. 1.73.2 789 சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்ய மலர்க்கொன்றை மறையார்பாட லாடலோடு மால்விடை மேல்வருவார் இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நல முங்கொண்டார் கறையார்சோலைக் கானூர்மேய பிறையார்சடையாரே. 1.73.3 790 விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலை யதுசூடித் தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வ நோய்செய்தான் கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர் பெருமானே. 1.73.4 791 தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார் கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண்டத்தாரே. 1.73.5 792 முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்கு மார்பராய் எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லே புகுந்துள்ளத் தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேற லார்பூவில் களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண் பிறையாரே. 1.73.6 793 மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல் செய்திங்கே பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசிப் போவார்போல மால்செய்துள்ளம் புக்க புரிநூலர் தேவார்சோலைக் கானூர்மேய தேவ தேவரே. 1.73.7 794 தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணை பண்ணிநல்ல முழவம்மொந்தை மல்குபாடல் செய்கை யிடமோவார் குமிழின்மேனி தந்துகோல நீர்மை யதுகொண்டார் கமழுஞ்சோலைக் கானூர்மேய பவள வண்ணரே. 1.73.8 795 அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான் சிந்தையுள்ளும் நாவின்மேலுஞ் சென்னியு மன்னினான் வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலை யாடுவான் கந்தமல்கு கானூர்மேய எந்தை பெம்மானே. 1.73.9 796 ஆமையரவோ டேனவெண்கொம் பக்கு மாலைபூண் டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந் நோய்செய்தார் ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ் சேமமாய செல்வர்கானூர் மேய சேடரே. 1.73.10 797 கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர் மேயானைப் பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும் பாடியே தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்துநின் றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லல் அறுப்பாரே. 1.73.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - செம்மேனிநாயகர் தேவி - சிவயோகநாயகியம்மை 1.74. திருப்புறவம் பண் - தக்கேசி திருச்சிற்றம்பலம் 798 நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்து நயனத்தால் சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான் புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த இறைவனறவன் இமையோரேத்த உமையோ டிருந்தானே. 1.74.1 799 உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல் படநாகம் விரவி விரிபூங் கச்சாவசைத்த விகிர்தன் னுகிர்தன்னால் பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம் பதியாக இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.2 800 பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக் கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.3 801 நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங் கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றைப் புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.4 802 செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந் தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.5 803 பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய் அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.6 804 உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர் விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல் பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.7 805 விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன் திண்டோ ளுடலும் முடியுநெரியச் சிறிதேயூன்றிய புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.8 806 நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப் படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற் பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.9 807 ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர் கோலும்மொழிகள் ஒழியக்குழுவுந் தழலுமெழில்வானும் போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.10 808 பொன்னார்மாடம் நீடுஞ்செல்வப் புறவம்பதியாக மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனைத் தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே. 1.74.11 திருச்சிற்றம்பலம் திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.75. திருவெங்குரு பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 809 காலைநன் மாமலர் கொண்டடி பரவிக் கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன் ஓலம திடமுன் உயிரொடு மாள உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான் மாலைவந் தணுக ஓதம்வந் துலவி மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.1 810 பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற் பிறையொடும் அரவினை யணிந் தழகாகப் பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள் பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி மண்ணினை மூடி வான்முக டேறி மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து விண்ணள வோங்கி வந்திழி கோயில் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.2 811 ஓரியல் பில்லா உருவம தாகி ஒண்டிறல் வேடன துருவது கொண்டு காரிகை காணத் தனஞ்சயன் றன்னைக் கறுத்தவற்* களித்துடன் காதல்செய் பெருமான் நேரிசை யாக அறுபத முரன்று நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து வேரிக ளெங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.3 * கறுத்ததற் 812 வண்டணை கொன்றை வன்னியு மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க கொண்டணி சடையர் விடையினர் பூதங் கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்* பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம் பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல் வெண்பிறை சூடி உமையவ ளோடும் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.4 * கூடியமுழவம் 813 சடையினர் மேனி நீறது பூசித் தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக் கடைதொறும் வந்து பலியது கொண்டு கண்டவர் மனமவை கவர்ந் தழகாகப் படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி* உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.5 * பங்கயக்கண்ணி 814 கரைபொரு கடலில் திரையது மோதக் கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி உரையுடை முத்தம் மணலிடை வைகி ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும் புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள் புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.6 815 வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை மறுகிட வருமத களிற்றினை மயங்க ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல் கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில் நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப நலிந்திட லுற்று வந்தவக் கருப்பு வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.7 816 பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப் பலதலை முடியொடு தோளவை நெரிய ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய கோங்கொடு செருந்தி கூவிள மத்தம் கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர் வேங்கைபொன் மலரார்* விரைதரு கோயில் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.8 * மலரா 817 ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச் சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ் செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண் நீறுடைக் கோல மேனியர் நெற்றிக் கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த வேறெமை யாள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.9 818 பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரு மறவுரை விட்டழ காக ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக் கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.10 819 விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன் நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும் பண்ணியல் பாகப் பத்திமை யாலே பாடியு மாடியும் பயில வல்லார்கள் விண்ணவர் விமானங் கொடுவர வேறி வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே. 1.75.11 திருச்சிற்றம்பலம் திருவெங்குரு என்பது சீகாழிக்கொரு பெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.76. திரு இலம்பையங்கோட்டூர் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 820 மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம் நிலையினான் எனதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் தேறிய நிமலன் கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக் கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும் இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.1 821 திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை நிருமல னெனதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் தேறிய நிமலன் கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும் இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.2 822 பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம் பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங் காலனாம் எனதுரை தனதுரை யாகக் கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள் நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோ ங்கும்* ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள் வதியல்பே. 1.76.3 * விண்டேங்கும், விண்டெங்கும் 823 உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன் ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல் விளம்புவா னெனதுரை தனதுரை யாக வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன் குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக் கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.4 824 தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த் தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில் வானுமா மெனதுரை தனதுரை யாக வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன் கானமான் வெருவுறக் கருவிர லூகங் கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல் ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.5 825 மனமுலாம்* அடியவர்க் கருள்புரி கின்ற வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர் தனமிலா னெனதுரை தனதுரை யாகத் தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன் புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம் பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும் இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.6 * மனமுலா 826 நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான் நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும் ஊருளான் எனதுரை தனதுரை யாக ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன் பாருளார் பாடலோ டாடல றாத பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும் ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.7 827 வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில் ஆருலா மெனதுரை தனதுரை யாக ஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல் வாருலா நல்லன மாக்களுஞ் சார வாரண முழிதரும் மல்லலங் கானல் ஏருலாம் பொழிலணி* இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.8 * ஏருலாம் பைம்பொழில் 828 கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன் கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா உளமழை யெனதுரை தனதுரை யாக வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன் வளமழை யெனக்கழை வளர்துளி சோர மாசுண முழிதரு மணியணி மாலை இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.9 829 உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள் பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப் பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான் கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக் களிமுக வண்டொடு தேனின முரலும் இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.10 830 கந்தனை மலிகனை கடலொலி யோதங் கானலங் கழிவளர் கழுமல மென்னும் நந்தியா ருறைபதி நால்மறை நாவன் நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன் எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர் இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய் வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும் வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே. 1.76.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - சந்திரசேகரர் தேவி - கோடேந்துமுலையம்மை. 1.77. திருஅச்சிறுபாக்கம் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 831 பொன்றிரண் டன்ன புரிசடை புரள பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக் குன்றிரண் டன்ன தோளுடை யகலங் குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர் மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.1 832 தேனினு மினியர் பாலன நீற்றர் தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார் ஊன்நயந் துருக உவகைகள் தருவார் உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார் வானக மிறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார் ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.2 833 காரிரு ளுருவ மால்வரை புரையக் களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி நீறணிந் தேறுகந் தேறிய நிமலர் பேரரு ளாளர் பிறவியில் சேரார் பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.3 834 மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும் மலைமக ளவளொடு மருவின ரெனவும் செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ் சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார் தம்மல ரடியொன் றடியவர் பரவத் தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.4 835 விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும் விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும் பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும் பலபுக ழல்லது பழியில ரெனவும் எண்ணலா காத இமையவர் நாளும் ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.5 836 நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித் தோடொரு காதினிற் பெய்துவெய் தாய சுடலையி லாடுவர் தோலுடை யாகக் காடரங் காகக் கங்குலும் பகலுங் கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த ஆடர வாட ஆடுமெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.6 837 ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக் கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங் குளிரிள மதியமுங் கூவிள மலரும் நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழிள வன்னியும் இவைநலம் பகர ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.7 838 கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர் கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும் பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப் பச்சமும் வலியுங் கருதிய வரக்கன் பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வித் தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள் அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே. 1.77.8 839 நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும் நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலைக் கூற்றலா ரேனும் இன்னவா றென்றும் எய்தலா காததோர் இயல்பினை யுடையார் தோற்றலார் மாலும் நான்முக முடைய தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள் ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.9 840 வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினை யாளர் ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார் உள்கலா காததோர் இயல்பினை யுடையார் வேதமும் வேத நெறிகளு மாகி விமலவே டத்தொடு கமலமா மதிபோல் ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.10 841 மைச்செறி குவளை தவளைவாய் நிறைய மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப் பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப் பதியவ ரதிபதி கவுணியர் பெருமான் கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண் டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும் அன்புடை யடியவர் அருவினை யிலரே. 1.77.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - பாக்கபுரேசுவரர் தேவி - சுந்தரமாதம்மை 1.78. திரு இடைச்சுரம் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 842 வரிவள ரவிரொளி யரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக் கரிவளர் தருகழல் கால்வல னேந்திக் கனலெரி யாடுவர் காடரங் காக விரிவளர் தருபொழில் இனமயி லால வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும் எரிவள ரினமணி புனமணி சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.1 843 ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர் அழகினை யருளுவர் குழகல தறியார் கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர் நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார் சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.2 844 கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங் காதலர் தீதிலர் கனல்மழு* வாளர் வானமும் நிலமையும்# இருமையு மானார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் நானமும் புகையொளி விரையொடு கமழ நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர் ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.3 * கனமழு # நிலைமையும் 845 கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார் காதலர் தீதிலர் கனல்மழு வாளர் விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர் வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர் வடமுலை யயலன கருங்குருந் தேறி வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும் இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.4 844 கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக் கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர் நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர் சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ் செழும்புன லனையன செங்குலை வாழை ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.5 845 தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர் சுடலையி னாடுவர் தோலுடை யாகப் பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர் பேயுட னாடுவர் பெரியவர் பெருமான் கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர் ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.6 846 கழல்மல்கு காலினர் வேலினர் நூலர் கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர் அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர் பொழில்மல்கு நீடிய அரவமு மரவம் மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும் எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.7 847 தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார் திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி வேறுமோர் சரிதையர் வேடமு முடையர் சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித் தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.8 850 பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர் பலபுக ழல்லது பழியிலர் தாமுந் தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன் தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர் மலையிலங் கருவிகள் மணமுழ வதிர மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல் இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.9 851 பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும் அன்புடை யடியவர்க் கணியரு மாவர் கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக் கயலினம் வயலிள வாளைகள் இரிய எருமைகள் படிதர இளஅனம் ஆலும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.10 852 மடைச்சுர மறிவன வாளையுங் கயலும் மருவிய வயல்தனில் வருபுனற் காழிச் சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல் சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன் புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல் புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த இடைச்சுர மேத்திய இசையொடு பாடல் இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே. 1.78.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - இடைச்சுரநாதர் தேவி - இமயமடக்கொடியம்மை. 1.79. திருக்கழுமலம் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 853 அயிலுறு படையினர் விடையினர் முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர் மயிலுறு சாயல் வனமுலை யொருபால் மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர் பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப் பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர் கயிலையும் பொதியிலும் இடமென வுடையார் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.1 854 கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர் கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர் பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும் படர்சடை யடிகளார் பதியத னயலே வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும் மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற் கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.2 855 எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம் எரியிடை மூன்றினர் நான்மறை யாளர் மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம் வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர் பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.3 856 எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர் ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித் திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள் தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.4 857 ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர் பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற் படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம் நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம் நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக் காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.5 858 முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப் பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த பேரரு ளாளனார் பேணிய கோயில் பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ் சாந்தமு மேந்திய கையின ராகிக் கன்னியர் நாடொறும் வேடமே பரவுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.6 859 கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார் குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின் நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம் நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம் மலைக்கணித் தாவர வன்றிரை முரல மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக் கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.7 860 புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன் பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோள் பயம்பல படவடர்த் தருளிய பெருமான் பரிவொடு மினிதுறை கோயில தாகும் வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும் வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக் கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.8 861 விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும் வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம் பலங்களால் நேடியும் அறிவரி தாய பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில் மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும் மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.9 862 ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும் அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர் நோம்பல தவமறி யாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச் சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத் தையலா ரிடுபலி வையகத் தேற்றுக் காம்பன தோளியொ டினிதுறை கோயில் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.10 863 கலிகெழு பாரிடை யூரென வுளதாங் கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல் வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர் வருங்கலை ஞானசம் பந்தன தமிழின் ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும் உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல் மெலிகெழு துயரடை யாவினை சிந்தும் விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே. 1.79.11 திருச்சிற்றம்பலம் கழுமலம் என்பது சீகாழிக்கொரு பெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.80. கோயில் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 864 கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. 1.80.1 865 பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ் சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே. 1.80.2 866 மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக் கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள் பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச் செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே. 1.80.3 867 நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப் பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச் சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே. 1.80.4 868 செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச் செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே. 1.80.5 869 வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந் திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம் பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே. 1.80.6 870 அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம் மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச் சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத் தலையால் வணங்குவார் தலையா னார்களே. 1.80.7 871 கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச் சீரா லேமல்கு சிற்றம் பலமேய நீரார் சடையானை நித்த லேத்துவார் தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே. 1.80.8 872 கோணா கணையானுங் குளிர்தா மரையானுங் காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான் சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த மாணா நோயெல்லாம் வாளா மாயுமே. 1.80.9 873 பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும் முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே. 1.80.10 874 ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன் சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே. 1.80.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - திருமூலத்தானநாயகர், சபாநாதர் தேவி - சிவகாமியம்மை |