முதல் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 14 ...

1.131. திருமுதுகுன்றம்

பண் - மேகராகக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1405  மெய்த்தாறு சுவையும் ஏழிசையும்
       எண்குணங்களும் விரும்பும்நால்வே
       தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்
       பளிங்கேபோல் அரிவைபாகம்
       ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்
       கருதுமூர் உலவுதெண்ணீர்
       முத்தாறு வெதிருதிர நித்திலம்வா
       ரிக்கொழிக்கும் முதுகுன்றமே. 1.131.1

1406  வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
       வெங்கானில் விசயன்மேவு
       போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
       புரிந்தளித்த புராணர்கோயில்
       காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
       மலருதிர்த்துக் கயமுயங்கி
       மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற்
       புகுந்துலவு முதுகுன்றமே. 1.131.2

1407  தக்கனது பெருவேள்வி சந்திரனிந்
       திரனெச்சன் அருக்கன்அங்கி
       மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
       தண்டித்த விமலர்கோயில்
       கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு
       குயர்தெங்கின் குவைகொள்சோலை
       முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
       நீள்வயல்சூழ் முதுகுன்றமே. 1.131.3

1408  வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
       விறலழிந்து விண்ணுளோர்கள்
       செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத்
       தேவர்களே தேரதாக
       மைம்மருவு மேருவிலு மாசுணநாண்
       அரியெரிகால் வாளியாக
       மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த
       முதல்வனிடம் முதுகுன்றமே. 1.131.4

1409  இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள்
       ஒருபாலா யொருபாலெள்கா
       துழைமேவும் உரியுடுத்த ஒருவனிருப்
       பிடமென்பர் உம்பரோங்கு
       கழைமேவு மடமந்தி மழைகண்டு
       மகவினொடும் புகவொண்கல்லின்
       முழைமேவு மால்யானை இரைதேரும்
       வளர்சாரல் முதுகுன்றமே. 1.131.5

1410  நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த
       நாதனிடம் நன்முத்தாறு
       வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
       கரையருகு மறியமோதி
       தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு
       நீர்குவளை சாயப்பாய்ந்து
       முகையார்செந் தாமரைகள் முகம்மலர
       வயல்தழுவு முதுகுன்றமே. 1.131.6

1411  அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்
       இருந்தருளி யமரர்வேண்ட
       நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின்
       ஒன்றறுத்த நிமலர்கோயில்
       திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங்
       கெழிற்குறவர் சிறுமிமார்கள்
       முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி
       முத்துலைப்பெய் முதுகுன்றமே. 1.131.7

1411  கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல்
       இலங்கையர்கோன் கண்ணும்வாயும்
       பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை
       மலையைநிலை பெயர்த்தஞான்று
       மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்
       றூன்றிமறை பாடவாங்கே
       முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்
       வாய்ந்தபதி முதுகுன்றமே. 1.131.8

1413  பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்
       பூந்துழாய் புனைந்தமாலும்
       ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்
       துறநாடி யுண்மைகாணாத்
       தேவாருந் திருவுருவன் சேருமலை
       செழுநிலத்தை மூடவந்த
       மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ
       மேலுயர்ந்த முதுகுன்றமே. 1.131.9

1414  மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட்
       டுடையாரும் விரவலாகா
       ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்
       உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
       ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை
       முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
       மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
       தவம்புரியும் முதுகுன்றமே. 1.131.10

1415  முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும்
       முதுகுன்றத் திறையைமூவாப்
       பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய
       கழுமலமே பதியாக்கொண்டு
       தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான
       சம்பந்தன் சமைத்தபாடல்
       வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்
       நீடுலகம் ஆள்வர்தாமே. 1.131.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது. இதுவே விருத்தாசலம்.
சுவாமி - பழமலைநாதர்
தேவி - பெரியநாயகியம்மை

1.132. திருவீழிமிழலை

பண் - மேகராகக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1416  ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்
       கீரிருவர்க் கிரங்கிநின்று
       நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்
       நெறியளித்தோன் நின்றகோயில்
       பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்
       பயின்றோது மோசைகேட்டு
       வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
       பொருள்சொல்லும் மிழலையாமே. 1.132.1

1417  பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்
       தாகப்புத் தேளிர்கூடி
       மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட
       கண்டத்தோன் மன்னுங்கோயில்
       செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு
       மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்
       வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்
       வீற்றிருக்கும் மிழலையாமே. 1.132.2

1418  எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்
       புரமூன்றும் எழிற்கண்நாடி
       உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ்
       சிலைவளைத்தோன் உறையுங்கோயில்
       கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம்
       முகங்காட்டக் குதித்துநீர்மேல்
       விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
       வாய்காட்டும் மிழலையாமே. 1.132.3

1419  உரைசேரும் எண்பத்து நான்குநூ
       றாயிரமாம் யோனிபேதம்
       நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
       அங்கங்கே நின்றான்கோயில்
       வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல
       நடமாட வண்டுபாட
       விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்
       கையேற்கும் மிழலையாமே. 1.132.4

1420  காணுமா றரியபெரு மானாகிக்
       காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
       பேணுமூன் றுருவாகிப் பேருலகம்
       படைத்தளிக்கும் பெருமான்கோயில்
       தாணுவாய் நின்றபர தத்துவனை
       உத்தமனை இறைஞ்சீரென்று
       வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப
       போலோங்கு மிழலையாமே. 1.132.5

1421  அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்
       றைம்புலனும் அடக்கிஞானப்
       புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
       துள்ளிருக்கும் புராணர்கோயில்
       தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
       கந்திகழச் சலசத்தீயுள்
       மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட
       மணஞ்செய்யும் மிழலையாமே. 1.132.6

1422  ஆறாடு சடைமுடியன் அனலாடு
       மலர்க்கையன் இமயப்பாவை
       கூறாடு திருவுருவன் கூத்தாடுங்
       குணமுடையோன் குளிருங்கோயில்
       சேறாடு செங்கழுநீர்த் தாதாடி
       மதுவுண்டு சிவந்தவண்டு
       வேறாய உருவாகிச் செவ்வழிநற்
       பண்பாடும் மிழலையாமே. 1.132.7

1423  கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக்
       கைமறித்துக் கயிலையென்னும்
       பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள்
       நெரித்தவிரற் புனிதர்கோயில்
       தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த
       சக்கரத்தை வேண்டியீண்டு
       விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி
       விமானஞ்சேர் மிழலையாமே. 1.132.8

1424  செந்தளிர்மா மலரோனுந் திருமாலும்
       ஏனமொடு அன்னமாகி
       அந்தமடி காணாதே அவரேத்த
       வெளிப்பட்டோ ன் அமருங்கோயில்
       புந்தியினான் மறைவழியே புற்பரப்பி
       நெய்சமிதை கையிற்கொண்டு
       வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்
       சேருமூர் மிழலையாமே. 1.132.9

1425  எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்
       சாக்கியரும் என்றுந்தன்னை
       நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்
       கருள்புரியும் நாதன்கோயில்
       பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்
       பாராட்டும் ஓசைகேட்டு
       விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ
       டும்மிழியும் மிழலையாமே. 1.132.10

1426  மின்னியலும் மணிமாடம் மிடைவீழி
       மிழலையான் விரையார்பாதஞ்
       சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்
       செழுமறைகள் பயிலும்நாவன்
       பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
       பரிந்துரைத்த பத்துமேத்தி
       இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்
       ஈசனெனும் இயல்பினோரே. 1.132.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - வீழியழகர்
தேவி - சுந்தரகுசாம்பிகை

1.133. திருவேகம்பம்

பண் - மேகராகக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1427  வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்
       கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
       அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி
       எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே. 1.133.1

1428  வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்
       சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
       குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந்
       திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே. 1.133.2

1429  வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
       பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
       விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்
       திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே. 1.133.3

1430  தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து
       காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
       மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
       ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே. 1.133.4

1431  தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து
       பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ
       வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி
       சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே. 1.133.5

1432  சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்
       தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து
       மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
       ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே. 1.133.6

* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.133.7

1433  வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து
       நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்
       தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்
       சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே. 1.133.8

1434  பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்
       அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம்
       கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
       மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே. 1.133.9

1435  குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
       மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
       விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவியக்
       கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே. 1.133.10

1436  ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை
       காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
       பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
       சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே. 1.133.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமி - ஏகாம்பரநாதர்
தேவி - காமாட்சியம்மை

1.134. திருப்பறியலூர் - திருவீரட்டம்

பண் - மேகராகக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1437  கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
       நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
       திருத்த முடையார் திருப்பறி யலூரில்
       விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே. 1.134.1

1438  மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
       பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
       திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
       விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே. 1.134.2

1439  குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
       விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்
       தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
       மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 1.134.3

1440  பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
       செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
       சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
       விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே. 1.134.4

1441  கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி
       புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்
       தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
       விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 1.134.5

1442  அரவுற்ற நாணா அனலம்ப தாகச்
       செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்
       தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
       வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே. 1.134.6

1443  நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
       அரையா ரரவம் அழகா வசைத்தான்
       திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
       விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 1.134.7

1444  வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
       இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
       திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
       விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே. 1.134.8

1445  வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்
       துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
       இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
       விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே. 1.134.9

1446  சடையன் பிறையன் சமண்சாக் கியரோ
       டடையன் பிலாதான் அடியார் பெருமான்
       உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
       விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே. 1.134.10

1447  நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்
       வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்
       பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க்
       கறுநீ டவலம் அறும்பிறப் புத்தானே. 1.134.11

திருச்சிற்றம்பலம்

1.135. திருப்பராய்த்துறை

பண் - மேகராகக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1448  நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
       கூறுசேர்வதொர் கோலமாய்ப்
       பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
       ஆறுசேர்சடை அண்ணலே. 1.135.1

1449  கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
       வந்தபூம்புனல் வைத்தவர்
       பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
       அந்தமில்ல அடிகளே. 1.135.2

1450  வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
       தோதநின்ற ஒருவனார்
       பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
       ஆதியாய அடிகளே. 1.135.3

1451  தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
       நூலுந்தாமணி மார்பினர்
       பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
       ஆலநீழல் அடிகளே. 1.135.4

1452  விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
       இரவில்நின்றெரி யாடுவர்
       பரவினாரவர் வேதம்பராய்த்துறை
       அரவமார்த்த அடிகளே. 1.135.5

1453  மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
       கறைகொள்கண்ட முடையவர்
       பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
       அறையநின்ற அடிகளே. 1.135.6

1454  விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
       சடையிற்கங்கை தரித்தவர்
       படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
       அடையநின்ற அடிகளே. 1.135.7

1455  தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
       நெருக்கினார்விர லொன்றினால்
       பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
       அருக்கன்றன்னை அடிகளே. 1.135.8

1456  நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
       தோற்றமும் மறியாதவர்
       பாற்றினார்வினை யானபராய்த்துறை
       ஆற்றல்மிக்க அடிகளே. 1.135.9

1457  திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
       உருவிலாவுரை கொள்ளேலும்
       பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
       மருவினான்றனை வாழ்த்துமே. 1.135.10

1458  செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
       செல்வர்மேற் சிதையாதன
       செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
       செல்வமாமிவை செப்பவே. 1.135.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - திருப்பராய்த்துறைநாதர்
தேவி - பசும்பொன்மயிலம்மை

1.136. திருத்தருமபுரம்

பண் - யாழ்மூரி

திருச்சிற்றம்பலம்

1459  மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
       நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
       பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
       அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
       வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
       இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
       தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
       எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே. 1.136.1

1460  பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்
       பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள
       மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்
       வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்
       சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந்
       தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்
       தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின்
       றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே. 1.136.2

1461  விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ
       டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்
       கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர்
       கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
       பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்
       வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
       தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்
       கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே. 1.136.3

1462  வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்
       வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
       காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர்
       கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்
       பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்
       படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
       தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்
       தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே. 1.136.4

1463  நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக்
       கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர்
       பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப்
       பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்
       ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்
       வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
       தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை
       கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே. 1.136.5

1464  கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்
       குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
       மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்
       வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்
       யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந்
       துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்
       தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப்
       புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே. 1.136.6

1465  தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித்
       திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய
       தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை
       தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர்
       காமரு தண்கழி நீடிய கானல கண்டகங்
       கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே
       தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்
       வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே. 1.136.7

1466  தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்
       குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்
       கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
       கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்
       பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்
       கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்
       தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்
       கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே. 1.136.8

1467  வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்
       வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்
       கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை
       குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
       ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்
       மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
       தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்
       தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே. 1.136.9

1468  புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்
       மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்
       பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்
       நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
       முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி
       புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்
       தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்
       தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே. 1.136.10

1469  பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி
       பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்
       தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ
       துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்
       பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
       யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
       இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்
       உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே. 1.136.11

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிய தேவாரம் - முதல் திருமுறை முற்றும்.



முதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14