சிலப்பதிகாரம் - Silapathikaram - ஐம்பெருங் காப்பியங்கள் - Iymperum Kappiangal - சென்னை நூலகம் - ChennaiLibrary.com




இளங்கோவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

... தொடர்ச்சி - 12 ...

23. கட்டுரை காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்,
குவளை உண் கண் தவள வாள் முகத்தி;
கடை எயிறு அரும்பிய பவளச் செவ்வாய்த்தி;
இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி
இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும், 5

வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள்;
இடக் கை பொலம் பூந் தாமரை ஏந்தினும்,
வலக் கை அம் சுடர்க் கொடு வாள் பிடித்தோள்;
வலக் கால் புனை கழல் கட்டினும், இடக் கால்
தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள்; பனித்துறைக் 10

கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன்,
பொற்கோட்டு வரம்பன், பொதியில் பொருப்பன்,
குல முதல் கிழத்தி ஆதலின், அலமந்து
ஒரு முலை குறைத்த திருமா பத்தினி
அலமரு திருமுகத்து ஆய் இழை நங்கை-தன் 15

முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்,
'கேட்டிசின் வாழி, நங்கை! என் குறை' என-
வாட்டிய திரு முகம் வலவயிற் கோட்டி,
'யாரை நீ, என் பின் வருவோய்? என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ?' என- 20

'ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன், அணி-இழாஅய்!
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன்;
கட்டுரை ஆட்டியேன்; யான் நின் கணவற்குப்
பட்ட கவற்சியேன்; பைந்தொடி! கேட்டி
பெருந்தகைப் பெண்! ஒன்று கேளாய், என் நெஞ்சம் 25

வருந்திப் புலம்புறு நோய்
தோழி! நீ ஈது ஒன்று கேட்டி, எம் கோமகற்கு
ஊழ்வினை வந்தக் கடை
மாதராய்! ஈது ஒன்று கேள், உன் கணவற்குத்
தீதுற வந்த வினை காதில் 30

மறை நா ஓசை அல்லது, யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே;
அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது
குடி பழி தூற்றும் கோலனும் அல்லன்
இன்னும் கேட்டி; நல் நுதல் மடந்தையர் 35

மடம் கெழு நோக்கின் மத முகம் திறப்புண்டு,
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப்படாஅது
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும்,
ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக் குடிப் பிறந்தோர்க்கு 40

இழுக்கம் தாராது இதுவும் கேட்டி,
உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி,
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
"அரைச வேலி அல்லது யாவதும்
புரை தீர் வேலி இல்" என மொழிந்து, 45

மன்றத்து இருத்திச் சென்றீர் அவ்வழி
இன்று அவ் வேலி காவாதோ? என,
செவிச் சூட்டு ஆணியில், புகை அழல் பொத்தி,
நெஞ்சம் சுடுதலின், அஞ்சி, நடுக்குற்று,
வச்சிரத் தடக் கை அமரர் கோமான் 50

உச்சிப் பொன் முடி ஒளி வளை உடைத்த கை
குறைத்த செங்கோல், குறையாக் கொற்றத்து,
இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை
இன்னும் கேட்டி, நன் வாய் ஆகுதல்
பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை 55

திரு நிலைபெற்ற பெருநாள் இருக்கை,
அறன் அறி செங்கோல், மற நெறி நெடு வாள்,
புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்,
பூம் புனல் பழனப் புகார் நகர் வேந்தன்,
தாங்கா விளையுள், நல் நாடு-அதனுள், 60

வலவைப் பார்ப்பான், பராசரன் என்போன்,
குலவு வேல் சேரன் கொடைத் திறம் கேட்டு,
'வண் தமிழ் மறையோர்க்கு வான் உறை கொடுத்த
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு' என,
காடும், நாடும், ஊரும், போகி, 65

நீடு நிலை மலயம் பிற்படச் சென்று, ஆங்கு,
ஒன்று புரி கொள்கை இரு பிறப்பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி,
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும்
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க 70

நா வலம் கொண்டு, நண்ணார் ஓட்டி,
பார்ப்பன வாகை சூடி, ஏற்புற
நன் நலம் கொண்டு தன் பதிப் பெயர்வோன்-
செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர்
தங்கால் என்பது ஊரே அவ் ஊர்ப் 75

பாசிலை பொதுளிய போதி மன்றத்து;
தண்டே, குண்டிகை, வெண்குடை, காட்டம்,
பண்டச் சிறு பொதி, பாதக் காப்பொடு
களைந்தனன் இருப்போன்; 'காவல் வெண்குடை
விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி! 80

கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி!
விடர்ச் சிலை பொறித்த விறலோன் வாழி!
பூந் தண் பொருநைப் பொறையன் வாழி!
மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க!' என;
குழலும், குடுமியும், மழலைச் செவ் வாய், 85

தளர் நடை ஆயத்து தமர் முதல் நீங்கி,
விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர;
'குண்டப் பார்ப்பீர்! என்னோடு ஓதி, என்
பண்டச் சிறு பொதி கொண்டு போமின்' என;
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன், 90

ஆல் அமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன்,
பால் நாறு செவ் வாய்ப் படியோர் முன்னர்,
தளர் நா ஆயினும், மறைவிளி வழா அது,
உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத,
தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து, 95

முத்தப் பூணூல், அத்தகு புனை கலம்,
கடகம், தோட்டொடு கையுறை ஈத்து,
தன் பதிப் பெயர்ந்தனனாக- நன் கலன்
புனைபவும் பூண்பவும் பொறாஅராகி,
வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பி, 100

கோத்தொழில் இளையவர் கோமுறை அன்றி,
'படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன்' என,
இடு சிறைக் கோட்டத்து இட்டனராக,
வார்த்திகன் மனைவி, கார்த்திகை என்போள்,
அலந்தனள்; ஏங்கி அழுதனள், நிலத்தில்; 105

புலந்தனள்; புரண்டனள்; பொங்கினள்; அது கண்டு,
மை அறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினைக் கதவம் திறவாது ஆகலின்,
திறவாது அடைந்த திண் நிலைக் கதவம்
மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கி 110

'கொடுங்கோல் உண்டுகொல்? கொற்றவைக்கு உற்ற
இடும்பை யாவதும் அறிந்தீமின்' என,
ஏவல் இளையவர் காவலன் தொழுது,
வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி உரைப்ப,
'நீர்த்து அன்று இது' என நெடுமொழி கூறி, 115

'அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என்
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன்' என,
தடம் புனல் கழனித் தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கிக்
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர், 120

இரு நில மடந்தைக்குத் திரு மார்பு நல்கி, அவள்
தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே;
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின்
மலை புரை மாடம் எங்கணும் கேட்ப,
கலை அமர் செல்விக் கதவம் திறந்தது 125

'சிறைப்படு கோட்டம் சீமின், யாவதும்
கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்மின்;
இடு பொருள் ஆயினும், படுபொருள் ஆயினும்,
உற்றவர்க்கு உறுதி, பெற்றவர்க்கு ஆம்' என
யானை எருத்தத்து, அணி முரசு இரீஇ, 130

கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன்
தான் முறை பிழைத்த தகுதியும் கேள், நீ
'ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து,
அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று,
வெள்ளி வாரத்து, ஒள் எரி உண்ண, 135

உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்' எனும்
உரையும் உண்டே, நிரை தொடியோயே!-
கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு,
வடி வேல் தடக் கை வசுவும், குமரனும்,
தீம் புனல் பழனச் சிங்கபுரத்தினும், 140

காம்பு எழு கானக் கபிலபுரத்தினும்,
அரைசு ஆள் செல்வத்து, நிரை தார் வேந்தர்-
வீயாத் திருவின் விழுக் குடிப் பிறந்த
தாய வேந்தர்-தம்முள் பகையுற,
இரு-முக் காவதத்து இடைநிலத்து யாங்கணும், 145

செரு வெல் வென்றியின், செல்வோர் இன்மையின்,
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து,
கரந்து உறை மாக்களின் காதலி-தன்னொடு,
சிங்கா வண் புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர்
அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும் 150

சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை,
முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவன்-
வெந் திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்,
பரதன் என்னும் பெயரன்; அக் கோவலன்
விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்- 155

'ஒற்றன் இவன்' எனப் பற்றினன் கொண்டு,
வெற்றி வேல் மன்னர்க்குக் காட்டிக் கொல்வுழி;
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி,
நிலைக்களம் காணாள், நீலி என்போள்,
'அரசர், முறையோ? பரதர், முறையோ?' 160

ஊரீர், முறையோ? சேரியீர் முறையோ?' என,
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு
எழு நாள் இரட்டி எல்லை சென்றபின்,
'தொழு நாள் இது' எனத் தோன்ற வாழ்த்தி,
மலைத் தலை ஏறி, ஓர் மால் விசும்பு ஏணியில் 165

கொலைத் தலைமகனைக் கூடுபு நின்றோள்,
'எம் உறு துயரம் செய்தோர் யாவதும்
தம் உறு துயரம் இற்று ஆகுக' என்றே
விழுவோள் இட்ட வழு இல் சாபம்
பட்டனிர் ஆதலின், கட்டுரை கேள் நீ 170

உம்மை வினை வந்து உருத்தகாலை,
செம்மையிலோர்க்குச் செய் தவம் உதவாது
வார் ஒலி கூந்தல்! நின் மணமகன் - தன்னை
ஈர்-ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி,
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை, 175

ஈனோர் வடிவில் காண்டல் இல்' என,
மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு
விதி முறை சொல்லி, அழல்வீடு கொண்டபின்-
'கருத்து உறு கணவன் கண்டபின் அல்லது,
இருத்தலும் இல்லேன்; நிற்றலும் இலன்' என, 180

கொற்றவை வாயில் பொற்றொடி தகர்த்து,
'கீழ்த் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்;
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு' என,
இரவும் பகலும் மயங்கினள் கையற்று
உரவு நீர் வையை ஒரு கரைக் கொண்டு, ஆங்கு, 185

அவல என்னாள், அவலித்து இழிதலின்,
மிசைய என்னாள், மிசை வைத்து ஏறலின்;
கடல் வயிறு கிழித்து, மலை நெஞ்சு பிளந்து, ஆங்கு,
அவுணரைக் கடந்த சுடர் இலை நெடு வேல்
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி- 190

பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ், 'ஓர்
தீத் தொழில் ஆட்டியேன் யான்' என்று ஏங்கி
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின்
'தொழு நாள் இது' எனத் தோன்ற வாழ்த்தி,
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி, 195

வாடா மா மலர் மாரி பெய்து, ஆங்கு,
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த,
கோநகர் பிழைத்த கோவலன்-தன்னொடு
வான ஊர்தி ஏறினள்-மாதோ-
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான்-என். 200

வெண்பா

தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால்-தெய்வம் ஆய்,
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து.

கட்டுரை

முடி கெழு வேந்தர் மூவருள்ளும்
படை விளங்கு தடக் கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,
விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும், 5

ஒடியா இன்பத்து அவருடை நாட்டுக்
குடியும், கூழின் பெருக்கமும், அவர்-தம்
வையைப் பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிதலும்,
ஆரபடி, சாத்துவதி என்று இரு விருத்தியும், 10

நேரத் தோன்றும் வரியும் குரவையும்
என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
வட ஆரியர் படை கடந்து,
தென் தமிழ் நாடு ஒருங்கு காணப் 15

புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன்
அரைசுக் கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ் செழியனோடு ஒரு பரிசா
நோக்கிக் கிடந்த
மதுரைக் காண்டம் முற்றிற்று. 20

வஞ்சிக் காண்டம்

24. குன்றக் குரவை

(கொச்சகக் கலி)

'குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி,
அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன்,
மலை வேங்கை நறு நிழலின், வள்ளி போல்வீர்! மனம் நடுங்க,
முலை இழந்து வந்து நின்றீர்; யாவிரோ?' என-முனியாதே,
'மண மதுரையோடு அரசு கேடுற வல் வினை வந்து உருத்தகாலை, 5

கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான்' என்றாள்.
என்றலும், இறைஞ்சி, அஞ்சி, இணை வளைக் கை எதிர் கூப்பி,
நின்ற எல்லையுள், வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்ப, கொழுநனொடு கொண்டு போயினார்;
இவள் போலும் நம் குலக்கு ஓர் இருந் தெய்வம் இல்லை; ஆதலின், 10

சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே!
நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ் சினை வேங்கை நல் நிழல்கீழ், ஓர்
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே! 15

தொண்டகம் தொடுமின்; சிறுபறை தொடுமின்;
கோடு வாய் வைம்மின்; கொடு மணி இயக்குமின்;
குறிஞ்சி பாடுமின்; நறும் புகை எடுமின்;
பூப் பலி செய்ம்மின்; காப்புக்கடை நிறுமின்;
பரவலும் பரவுமின்; விரவு மலர் தூவுமின்- 20

ஒரு முலை இழந்த நங்கைக்கு,
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே. 1

கொளுச் சொல்

ஆங்கு ஒன்று காணாய், அணி இழாய்! ஈங்கு இது காண்:
அஞ்சனப் பூழி, அரி தாரத்து இன் இடியல்,
சிந்துரச் சுண்ணம் செறியத் தூய், தேம் கமழ்ந்து,
இந்திரவில்லின் எழில் கொண்டு,இழும் என்று
வந்து, ஈங்கு, இழியும் மலை அருவி ஆடுதுமே.
ஆடுதுமே, தோழி! ஆடுதுமே, தோழி!
'அஞ்சல் ஓம்பு' என்று, நலன் உண்டு நல்காதான்
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே. 2

எற்று ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைக்
கல் தீண்டி வந்த புதுப் புனல்;
கல் தீண்டி வந்த புதுப் புனல் மற்றையார்
உற்று ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 3

என் ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப்
பொன் ஆடி வந்த புதுப் புனல்;
பொன் ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
முன் ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 4

யாது ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப்
போது ஆடி வந்த புதுப் புனல்;
போது ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
மீது ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 5

பாட்டு மடை

உரை இனி, மாதராய்! உண் கண் சிவப்ப,
புரை தீர் புனல் குடைந்து ஆடின், நோம் ஆயின்,
உரவுநீர் மா கொன்ற வேல்-ஏந்தி ஏத்திக்
குரவை தொடுத்து, ஒன்று பாடுகம் வா தோழி! 6

சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்,
ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே-
பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள்,
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே. 7

அணி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு கையும்,
இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே-
பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும்வண்ணம்
மணி விசும்பின் கோன் ஏத்த, மாறு அட்ட வெள் வேலே. 8

சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல்-அன்றே-
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து,
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே. 9

பாட்டு மடை

'இறை வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்று அன்னை, அலர் கடம்பன் என்றே,
வெறியாடல் தான் விரும்பி, 'வேலன், வருக' என்றாள்! 10

ஆய் வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்!
வரும் ஆயின் வேலன் மடவன்; அவனின்
குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன். 11

செறி வளைக் கை நல்லாய்! இது நகை ஆகின்றே-
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்!
வேலன் மடவன்; அவனினும் தான் மடவன்;
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் ஆயின். 12

நேர் இழை நல்லாய்! நகை ஆம்-மலை நாடன்
மார்பு தரு வெந் நோய் தீர்க்க வரும் வேலன்!
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன்,
கார்க் கடப்பந் தார் எம் கடவுள் வரும் ஆயின். 13

பாட்டு மடை

வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து,
நீலப் பறவைமேல் நேர்-இழை-தன்னோடும்
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் வந்தால்,
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே! 14

கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல்
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார்,
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்-
அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே. 15

மலைமகள் மகனை! நின் மதி நுதல் மடவரல்
குல மலை உறைதரு குறவர்-தம் மகளார்,
நிலை உயர் கடவுள்! நின் இணை அடி தொழுதேம்-
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே. 16

குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும்,
அறுமுக ஒருவ! நின் அடி இணை தொழுதேம்-
துறைமிசை நினது இரு திருவடி தொடுநர்
பெறுக நல் மணம்; விடு பிழை மணம் எனவே. 17

பாட்டு மடை

என்று யாம் பாட, மறை நின்று கேட்டருளி,
மன்றல் அம் கண்ணி மலைநாடன் போவான் முன்
சென்றேன்; அவன்-தன் திருவடி கைதொழுது
நின்றேன் உரைத்தது கேள்; வாழி, தோழி! 18

'கடம்பு சூடி, உடம்பிடி ஏந்தி,
மடந்தை பொருட்டால் வருவது இவ் ஊர்:
அறுமுகம் இல்லை; அணி மயில் இல்லை;
குறமகள் இல்லை; செறி தோள் இல்லை;
கடம் பூண் தெய்வமாக நேரார்
மடவர் மன்ற, இச் சிறுகுடியோரே.' 19

பாட்டு மடை

என்று, ஈங்கு,
அலர் பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டு,
புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர் தலை வெற்பன் வரைவானும் போலும்;
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடி,
பலர் தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலை ஒன்று பாடுதும் யாம். 20

பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்;
பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்;
கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம்;
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால்,
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே. 21

பாடு உற்று,
பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர்
பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே;
பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே. 22

வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த,
கான நறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே
கான நறு வேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே. 23

மறுதரவு இல்லாளை ஏத்தி, நாம் பாட,
பெறுகதில் அம்ம இவ் ஊரும் ஓர் பெற்றி!
பெற்றி உடையதே, பெற்றி உடையதே,
பொற்றொடி மாதர் கணவன் மணம் காணப்
பெற்றி உடையது, இவ் ஊர். 24

வாழ்த்து

என்று, யாம்
கொண்டுநிலை பாடி, ஆடும் குரவையைக்
கண்டு, நம் காதலர் கைவந்தார்; ஆனாது
உண்டு மகிழ்ந்து, ஆனா வைகலும் வாழியர்-
வில் எழுதிய இமயத்தொடு
கொல்லி ஆண்ட குடவர் கோவே! 25






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247