இளங்கோவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

... தொடர்ச்சி - 15 ...

29. வாழ்த்துக் காதை

உரைப் பாட்டு மடை

குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்,
கொங்கர் செங் களம் வேட்டு, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன், சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்த காலை;
வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர் மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை தன்னில், ஒன்று மொழி நகையினராய்,
'தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில் விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்,
எம் போலும் முடி மன்னர் ஈங்கு இல்லை போலும்' என்ற வார்த்தை,
அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்த இடத்து ஆங்கண்,
உருள்கின்ற மணி வட்டைக் குணில் கொண்டு துரந்ததுபோல்,
'இமய மால் வரைக் கல் கடவுள் ஆம்' என்ற வார்த்தை இடம் துரப்ப;
ஆரிய நாட்டு அரசு ஓட்டி, அவர் முடித்தலை அணங்கு ஆகிய
பேர் இமயக் கல் சுமத்தி, பெயர்ந்து போந்து; நயந்த கொள்கையின்,
கங்கைப் பேர் யாற்று இருந்து, நங்கை-தன்னை நீர்ப்படுத்தி,
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி; வஞ்சி மா நகர் புகுந்து;
நில அரசர் நீள் முடியால் பலர் தொழு படிமம் காட்டி,
தட முலைப் பூசல் ஆட்டியைக் கடவுள் மங்கலம் செய்த பின்னாள்-
கண்ணகி-தன் கோட்டத்து மண்ணரசர் திறை கேட்புழி-
அலம்வந்த மதி முகத்தில் சில செங் கயல் நீர் உமிழ,
பொடி ஆடிய கரு முகில் தன் புறம் புதைப்ப, அறம் பழித்து;
கோவலன், தன் வினை உருத்து, குறுமகனால் கொலையுண்ண;
காவலன்-தன் இடம் சென்ற கண்ணகி-தன் கண்ணீர் கண்டு,
மண்ணரசர் பெரும் தோன்றல் உள் நீர் அற்று, உயிர் இழந்தமை
மா மறையோன் வாய்க் கேட்டு; மாசாத்துவான் தான் துறப்பவும்,
மனைக்கிழத்தி உயிர் இழப்பவும், எனைப் பெரும் துன்பம் எய்தி,
காவற்பெண்டும், அடித் தோழியும்,
கடவுள் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன் கூடி
'சேயிழையைக் காண்டும்' என்று, மதுரை மா நகர் புகுந்து;
முதிரா முலைப் பூசல் கேட்டு, ஆங்கு, அடைக்கலம் இழந்து, உயிர் இழந்த
இடைக்குல மகள் இடம் எய்தி; ஐயை அவள் மகளோடும்
வையை ஒருவழிக்கொண்டு; மா மலை மீமிசை ஏறி,
கோமகள்-தன் கோயில் புக்கு; நங்கைக்குச் சிறப்பு அயர்ந்த
செங்குட்டுவற்குத் திறம் உரைப்பர் மன். 1

முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வட பேர் இமய மலையில் பிறந்து,
கடு வரல் கங்கைப் புனல் ஆடிப் போந்த
தொடி வளைத் தோளிக்குத் தோழி நான் கண்டீர்,
சோணாட்டார் பாவைக்குத் தோழி நான் கண்டீர். 2

மடம் படு சாயலாள் மாதவி-தன்னைக்
கடம்படாள், காதல் கணவன் கைப் பற்றி,
குடம் புகாக் கூவல் கொடுங் கானம் போந்த
தடம் பெரும் கண்ணிக்குத் தாயர் நான் கண்டீர்,
தண் புகார்ப் பாவைக்குத் தாயர் நான் கண்டீர். 3

தற்பயந்தாட்கு இல்லை; தன்னைப் புறங்காத்த
எற்பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை;
கற்புக் கடம் பூண்டு, காதலன் பின் போந்த
பொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்;
பூம் புகார்ப் பாவைக்குத் தோழி நான் கண்டீர். 4

செய் தவம் இல்லாதேன் தீக் கனாக் கேட்ட நாள்,
எய்த உணராது இருந்தேன், மற்று என் செய்தேன்?
மொய் குழல் மங்கை முலைப் பூசல் கேட்ட நாள்,
அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ, தோழீ?
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ, தோழீ? 5

கோவலன்-தன்னைக் குறுமகன் கோள் இழைப்ப,
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு, ஏங்கி,
'சாவது-தான் வாழ்வு' என்று, தானம் பல செய்து,
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ, அன்னை?
மாநாய்கன் தன் துறவும் கேட்டாயோ, அன்னை? 6

காதலன் தன்-வீவும், காதலி நீ பட்டதூஉம்,
ஏதிலார் தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு, ஏங்கி,
போதியின் கீழ் மாதவர்முன் புண்ணிய தானம் புரிந்த
மாதவி-தன் துறவும் கேட்டாயோ, தோழீ?
மணிமேகலை துறவும் கேட்டாயோ, தோழீ? 7

'ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப
வல்லாதேன் பெற்றேன் மயல்' என்று உயிர் நீத்த
அவ்வை மகள் இவள்-தான், அம் மணம் பட்டிலா,
வை எயிற்று ஐயையைக் கண்டாயோ, தோழீ?
மாமி மட மகளைக் கண்டாயோ, தோழீ? 8

என்னே! இஃது என்னே! இஃது என்னே! இஃது என்னே கொல்!
பொன் அம் சிலம்பின், புனை மேகலை, வளைக் கை,
நல் வயிரப் பொன் தோட்டு, நாவல் அம் பொன் இழை சேர்,
மின்னுக் கொடி ஒன்று மீவிசும்பில் தோன்றுமால்! 9

தென்னவன் தீது இலன்; தேவர் கோன்-தன் கோயில்
நல் விருந்து ஆயினான்; நான் அவன்-தன் மகள்
வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்;
என்னோடும், தோழிமீர்! எல்லீரும், வம், எல்லாம். 10

வஞ்சியீர், வஞ்சி இடையீர், மற வேலான்
பஞ்சு அடி ஆயத்தீர்! எல்லீரும், வம், எல்லாம்;
கொங்கையால் கூடல் பதி சிதைத்து, கோவேந்தைச்
செஞ் சிலம்பால் வென்றாளைப் பாடுதும்; வம், எல்லாம்.
தென்னவன் தன் மகளைப் பாடுதும் வம், எல்லாம்
'செங்கோல் வளைய, உயிர் வாழார் பாண்டியர்' என்று
எம் கோ முறை நா இயம்ப, இந் நாடு அடைந்த
பைந் தொடிப் பாவையைப் பாடுதும்; வம், எல்லாம்;
பாண்டியன்-தன் மகளைப் பாடுதும்; வம், எல்லாம். 11

'வானவன், எம் கோ, மகள்' என்றாம்; வையையார்
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள்; வானவனை
வாழ்த்துவோம் நாமாக, வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள். 12

தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல, உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் வையை
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே! 13

மலையரையன் பெற்ற மடப் பாவை-தன்னை
நில அரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் ஆன்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே! 14

எல்லா! நாம்-
காவிரி நாடனைப் பாடுதும்; பாடுதும்,
பூ விரி கூந்தல்! புகார். 15

வீங்குநீர் வேலி உலகு ஆண்டு, விண்ணவர் கோன்
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார், அம்மானை?
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண், அம்மானை;
சோழன் புகார் நகரம் பாடேலோர், அம்மானை. 16

புறவு நிறை புக்கு, பொன்னுலகம் ஏத்த,
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார், அம்மானை?
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த
கறவை முறை செய்த காவலன் காண், அம்மானை;
காவலன் பூம் புகார் பாடேலோர், அம்மானை. 17

கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண,
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் யார், அம்மானை?
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன்காண், அம்மானை
கொற்றவன் பூம் புகார் பாடேலோர், அம்மானை. 18

அம்மனை தம் கையில் கொண்டு, அங்கு அணி இழையார
தம் மனையில் பாடும் தகையேலோர், அம்மானை;
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன்
கொம்மை வரி முலைமேல் கூடவே, அம்மானை;
கொம்மை வரி முலைமேல் கூடின், குல வேந்தன்
அம் மென் புகார் நகரம் பாடேலோர், அம்மானை 19

பொன் இலங்கு பூங்கொடி! பொலம் செய் கோதை வில்லிட,
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப, எங்கணும்,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே. 20

பின்னும் முன்னும், எங்கணும், பெயர்ந்து; உவந்து, எழுந்து, உலாய்;
மின்னு மின் இளங் கொடி வியல் நிலத்து இழிந்தென,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று பந்து அடித்துமே. 21

துன்னி வந்து கைத்தலத்து இருந்ததில்லை; நீள் நிலம்-
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்ததில்லை-தான் என,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே. 22

வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ, ஐயை
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு, ஒற்றை மேல் ஊக்க,
கடம்பு முதல் தடிந்த காவலனைப் பாடி
குடங்கை நெடுங் கண் பிறழ, ஆடாமோ ஊசல்;
கொடு வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல். 23

ஓர் ஐவர் ஈர்-ஐம்பதின்மர் உடன்று எழுந்த
போரில், பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த
சேரன், பொறையன், மலையன், திறம் பாடி,
கார் செய் குழல் ஆட, ஆடாமோ ஊசல்;
கடம்பு எறிந்த வா பாடி, ஆடாமோ ஊசல். 24

வன் சொல் யவனர் வள நாடு, வன் பெருங்கல்,
தென் குமரி, ஆண்ட; செரு வில், கயல், புலியான்
மன்பதை காக்கும் கோமான், மன்னன், திறம் பாடி;
மின் செய் இடை நுடங்க, ஆடாமோ ஊசல்;
விறல் வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல். 25

தீங் கரும்பு நல் உலக்கை ஆக, செழு முத்தம்
பூங் காஞ்சி நீழல், அவைப்பார் புகார் மகளிர்;
ஆழிக் கொடித் திண் தேர்ச் செம்பியன் வம்பு அலர் தார்ப்
பாழித் தட வரைத் தோள் பாடலே பாடல்;
பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல். 26

பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால்
மாட மதுரை மகளிர் குறுவரே;
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன்
மீனக் கொடி பாடும் பாடலே பாடல்;
வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் 27

சந்து உரல் பெய்து, தகைசால் அணி முத்தம்,
வஞ்சி மகளிர் குறுவரே, வான் கோட்டால்
கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்
பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல் 28

ஆங்கு, நீள் நில மன்னர், நெடு வில் பொறையன் நல்
தாள் தொழார், வாழ்த்தல் தமக்கு அரிது; சூழ் ஒளிய
எம் கோமடந்தையும் ஏத்தினாள், 'நீடூழி,
செங்குட்டுவன் வாழ்க!' என்று. 29

30. வரம் தரு காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

வட திசை வணங்கிய வானவர் பெருந்தகை
கடவுள் கோலம் கண்-புலம் புக்க பின்,
தேவந்திகையைச் செவ்விதின் நோக்கி,
'வாய் எடுத்து அரற்றிய மணிமேகலை யார்?
யாது அவள் துறத்தற்கு ஏது? இங்கு, உரை' என- 5

'கோமகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி
நாடு பெரு வளம் சுரக்க' என்று ஏத்தி,
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய
மணிமேகலை-தன் வான் துறவு உரைக்கும்
'மை ஈர் ஓதி வகை பெறு வனப்பின் 10

ஐ-வகை வகுக்கும் பருவம் கொண்டது;
செவ் வரி ஒழுகிய செழுங் கடை மழைக் கண்
அவ்வியம் அறிந்தன; அது தான் அறிந்திலள்;
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த
நித்தில இள நகை நிரம்பா அளவின; 15

புணர் முலை விழுந்தன; புல் அகம் அகன்றது;
தளர் இடை நுணுகலும், தகை அல்குல் பரந்தது;
குறங்கு இணை திரண்டன; கோலம் பொறாஅ
நிறம் கிளர் சீறடி நெய் தோய் தளிரின;
தலைக்கோல் ஆசான் பின் உளனாக, 20

குலத் தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார்;
யாது நின் கருத்து? என் செய்கோ?' என,
மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப-
'வருக, என் மட மகள் மணிமேகலை!' என்று,
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு 25

விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித்தானம் புரிந்து, அறம்படுத்தனள்-
ஆங்கு, அது கேட்ட அரசனும் நகரமும்
ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர்- 30

தம்மில் துன்பம் தாம் நனி எய்த,
செம்மொழி மாதவர், 'சேயிழை நங்கை
தன் துறவு எமக்குச் சாற்றினள்' என்றே
அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர்
பருவம் அன்றியும் பைந் தொடி நங்கை 35

திரு விழை கோலம் நீங்கினள் ஆதலின்,
அரற்றினென்' என்று, ஆங்கு, அரசற்கு உரைத்தபின்-
குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ;
துடித்தனள் புருவம்; துவர் இதழ்ச் செவ் வாய்
மடித்து, எயிறு அரும்பினள்; வரு மொழி மயங்கினள்; 40

திரு முகம் வியர்த்தனள்; செங்கண் சிவந்தனள்;
கைவிட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள்
பலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்
உலறிய நாவினள்; உயர் மொழி கூறித்
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான்- 45

'கொய் தளிர்க் குறிஞ்சிக் கோமான்-தன் முன்
கடவுள்-மங்கலம் காணிய வந்த
மடமொழி நல்லார் மாண் இழையோருள்,
அரட்டன் செட்டி-தன் ஆய்-இழை ஈன்ற
இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும், 50

ஆடகமாடத்து அரவு-அணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறு மகள் ஈங்கு உளள்
மங்கல மடந்தை கோட்டத்து-ஆங்கண்
செங் கோட்டு உயர் வரைச் சேண் உயர் சிலம்பில்,
பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை, நிரம்பிய 55

அணி கயம் பல உள; ஆங்கு அவை இடையது,
கடிப்பகை நுண் கலும், கவிர் இதழ்க் குறுங் கலும்,
இடிக் கலப்பு அன்ன இழைந்து உகு நீரும்,
உண்டு ஓர் சுனை; அதனுள் புக்கு ஆடினர்
பண்டைப் பிறவியர் ஆகுவர்; ஆதலின், 60

ஆங்கு-அது கொணர்ந்து, ஆங்கு, ஆய்-இழை கோட்டத்து
ஓங்கு இருங் கோட்டி இருந்தோய்! உன் கை,
'குறிக்கோள் தகையது; கொள்க' எனத் தந்தேன்;
உறித் தாழ் கரகமும் உன் கையது அன்றே;
கதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை 65

முதிராது; அந்நீர் முத் திற மகளிரைத்
தெளித்தனை ஆட்டின், இச் சிறு குறுமகளிர்
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்;
பாசண்டன் யான்; பார்ப்பனி-தன்மேல்,
மாடல மறையோய்! வந்தேன்' என்றலும்- 70

மன்னவன் விம்மிதம் எய்தி, அம் மாடலன்-
தன் முகம் நோக்கலும்-தான் நனி மகிழ்ந்து,
'கேள் இது, மன்னா! கெடுக நின் தீயது!
மாலதி என்பாள் மாற்றாள் குழவியைப்
பால் சுரந்து ஊட்ட, பழ வினை உருத்து, 75

கூற்று உயிர் கொள்ள, குழவிக்கு இரங்கி,
ஆற்றாத் தன்மையள், ஆர் அஞர் எய்தி,
பாசண்டன்பால் பாடுகிடந்தாட்கு,
'ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி
வந்தனன்; அன்னை! நீ வான் துயர் ஒழிக' என, 80

செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி,
பார்ப்பனி-தன்னொடு பண்டைத் தாய்பால்
காப்பியத் தொல் குடிக் கவின் பெற வளர்ந்து,
தேவந்திகையைத் தீவலம் செய்து,
நால்-ஈர்-ஆண்டு நடந்ததன் பின்னர், 85

மூவா இள நலம் காட்டி, 'என் கோட்டத்து,
நீ வா' என்றே நீங்கிய சாத்தன்,
மங்கலமடந்தை கோட்டத்து ஆங்கண்,
அங்கு உறை மறையோனாகத் தோன்றி,
உறித் தாழ் கரகமும் என் கைத் தந்து, 90

குறிக்கோள் கூறிப் போயினன்; வாரான்
ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின்,
ஈங்கு இம் மறையோள்-தன்மேல் தோன்றி,
'அந் நீர் தெளி' என்று அறிந்தோன் கூறினன்-
மன்னர் கோவே! மடந்தையர்-தம்மேல் 95

தெளித்து ஈங்கு அறிகுவம்' என்று அவன் தெளிப்ப-
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின்,
'புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின்
இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய்;
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு தனி, 100

காதலன்-தன்னொடு கடுந் துயர் உழந்தாய்;
யான் பெறு மகளே! என் துணைத் தோழீ!
வான் துயர் நீக்கும் மாதே, வாராய்!'-
'என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை-
தன்னோடு இடை இருள் தனித் துயர் உழந்து, 105

போனதற்கு இரங்கிப் புலம்புறும் நெஞ்சம்;
யான் அது பொறேஎன்; என் மகன், வாராய்!-
'வரு புனல் வையை வான் துறைப் பெயர்ந்தேன்;
உருகெழு மூதூர் ஊர்க் குறுமாக்களின்
வந்தேன் கேட்டேன்; மனையில் காணேன்; 110

எந்தாய்! இளையாய்! எங்கு ஒளித்தாயோ?'-
என்று, ஆங்கு, அரற்றி, இனைந்துஇனைந்து ஏங்கி,
பொன் தாழ் அகலத்துப் போர் வெய்யோன் முன்,
குதலைச் செவ் வாய்க் குறுந் தொடி மகளிர்
முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ- 115

தோடு அலர் போந்தைத் தொடு கழல் வேந்தன்
மாடல மறையோன்-தன் முகம் நோக்க,
'மன்னர் கோவே, வாழ்க!' என்று ஏத்தி,
முந்நூல் மார்பன் முன்னியது உரைப்போன்;
'மறையோன் உற்ற வான் துயர் நீங்க, 120

உறை கவுள் வேழக் கைஅகம் புக்கு,
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி-தன்மேல் காதலர் ஆதலின்,
மேல்நிலை உலகத்து அவருடன் போகும்
தாவா நல் அறம் செய்திலர்; அதனால், 125

அஞ் செஞ் சாயல் அஞ்சாது அணுகும்
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின்,
பொன்-கொடி-தன்மேல் பொருந்திய காதலின்,
அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி
மட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின் 130

உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர்-
ஆயர் முதுமகள் ஆய்-இழை-தன்மேல்
போய பிறப்பில் பொருந்திய காதலின்,
ஆடிய குரவையின், அரவு-அணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறு மகள் ஆயினள்- 135

நல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்,
அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்,
அறப் பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்,
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,
புதுவது அன்றே; தொன்று இயல் வாழ்க்கை- 140

ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி,
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்,
செய் தவப் பயன்களும், சிறந்தோர் படிவமும்,
கை அகத்தன போல், கண்டனை அன்றே;
ஊழிதோறு உழி உலகம் காத்து, 145

நீடு வாழியரோ, நெடுந்தகை!' என்ற
மாடல மறையோன்-தன்னொடும் மகிழ்ந்து-
பாடல்சால் சிறப்பில் பாண்டி நல் நாட்டுக்
கலி கெழு கூடல் கதழ் எரி மண்ட
முலைமுகம் திருகிய மூவா மேனி 150

பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து,
'நித்தல் விழா அணி நிகழ்க' என்று ஏவி,
'பூவும், புகையும், மேவிய விரையும்,
தேவந்திகையைச் செய்க' என்று அருளி,
வலமுறை மும் முறை வந்தனன் வணங்கி, 155

உலக மன்னவன் நின்றோன் முன்னர்-
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,
குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும், 160

'எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்
நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்
வந்து ஈக' என்றே வணங்கினர் வேண்ட-
'தந்தேன் வரம்!' என்று எழுந்தது ஒரு குரல்-
ஆங்கு, அது கேட்ட அரசனும், அரசரும், 165

ஓங்கு இருந் தானையும், உரையோடு ஏத்த,
வீடு கண்டவர்போல், மெய்ந் நெறி விரும்பிய
மாடல மறையோன்-தன்னொடும் கூடி,
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற,
வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின்- 170

யானும் சென்றேன்; என் எதிர் எழுந்து,
தேவந்திகைமேல் திகழ்ந்து தோன்றி,
'வஞ்சி மூதூர் மணி மண்டபத்திடை
நுந்தை தாள் நிழல் இருந்தோய்! நின்னை
'அரைசு வீற்றிருக்கும் திருப் பொறி உண்டு' என்று, 175

உரைசெய்தவன் மேல் உருத்து நோக்கி,
கொங்கு அவிழ் நறுந் தார்க் கொடித் தேர்த் தானைச்
செங்குட்டுவன்-தன் செல்லல் நீங்க,
பகல் செல் வாயில் படியோர்-தம்முன்,
அகலிடப் பாரம் அகல நீக்கி, 180

சிந்தை செல்லாச் சேண் நெடுந் தூரத்து,
அந்தம் இல் இன்பத்து, அரசு ஆள் வேந்து' என்று-
என் திறம் உரைத்த இமையோர் இளங்கொடி-
தன் திறம் உரைத்த தகைசால் நல் மொழி
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!- 185

பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்; 190

செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
பொய்க் கரி போகன்மின்; பொருள்-மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்; 195

அற மனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்
இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது; 200

செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்.

கட்டுரை

முடி உடை வேந்தர் மூவருள்ளும்
குட திசை ஆளும் கொற்றம் குன்றா
ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும், 5

விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியின் செல்வமும், கூழின் பெருக்கமும்,
வரியும், குரவையும், விரவிய கொள்கையின்,
புறத் துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய 10

மறத் துறை முடித்த வாய் வாள் தானையொடு
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று. 15

நூல் கட்டுரை

குமரி, வேங்கடம், குண குட கடலா,
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில்,
செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின்,
ஐந்திணை மருங்கின், அறம், பொருள், இன்பம்,
மக்கள் தேவர் என இரு சார்க்கும் 5

ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர,
எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய
பாடலும், எழாலும், பண்ணும், பாணியும் 10

அரங்கு, விலக்கே, ஆடல், என்று அனைத்தும்
ஒருங்குடன் தழீஇ, உடம்படக் கிடந்த
வரியும், குரவையும், சேதமும், என்று இவை
தெரிவுறு வகையான், செந்தமிழ் இயற்கையில்,
ஆடி நல் நிழலின் நீடு இருங் குன்றம் 15

காட்டுவார்போல், கருத்து வெளிப்படுத்து,
மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்.