சிலப்பதிகாரம் - Silapathikaram - ஐம்பெருங் காப்பியங்கள் - Iymperum Kappiangal - சென்னை நூலகம் - ChennaiLibrary.com


இளங்கோவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

... தொடர்ச்சி - 4 ...

7. கானல் வரி

கட்டுரை

சித்திரப் படத்துள் புக்கு, செழுங் கோட்டின் மலர் புனைந்து,
மைத் தடங் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி,
பத்தரும், கோடும், ஆணியும், நரம்பும் என்று
இத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி-
பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல்,தைவரல்,
கண்ணிய செலவு, விளையாட்டு, கையூழ்,
நண்ணிய குறும்போக்கு, என்று நாட்டிய
எண் வகையால் இசை எழீஇ;
பண் வகையான் பரிவு தீர்ந்து;
மரகதமணித் தாள் செறிந்தமணிக் காந்தள் மெல் விரல்கள்,
பயிர் வண்டின் கிளை போல, பல் நரம்பின்மிசைப் படர;
வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல்,
சீருடன் உருட்டல், தெருட்டல், அள்ளல்,
ஏர் உடைப் பட்டடை, என இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக் கரணத்துப்
பட்ட வகை தன் செவியின் ஓர்த்து-
'ஏவலன்; பின்,பாணி யாது?' என,
கோவலன் கை யாழ் நீட்ட-அவனும்,
காவிரியை நோக்கினவும், கடல் கானல் வரிப் பாணியும்,
மாதவி-தன் மனம் மகிழ, வாசித்தல் தொடங்கும்- மன். 1

(வேறு)

திங்கள் மாலை வெண்குடையான்,
     சென்னி, செங்கோல்-அது ஓச்சிக்
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
     புலவாய்; வாழி, காவேரி!
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
     புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மங்கை மாதர் பெரும் கற்பு என்று
     அறிந்தேன்; வாழி, காவேரி! 2

மன்னும் மாலை வெண்குடையான்
     வளையாச் செங்கோல்-அது ஓச்சி,
கன்னி-தன்னைப் புணர்ந்தாலும்,
     புலவாய்; வாழி, காவேரி!
கன்னி-தன்னைப் புணர்ந்தாலும்,
     புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று
     அறிந்தேன்; வாழி, காவேரி! 3

உழவர் ஓதை, மதகு ஓதை,
     உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
     நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
     நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
     வளனே; வாழி, காவேரி!- 4

கரிய மலர் நெடுங் கண் காரிகைமுன்
     கடல் தெய்வம் காட்டி காட்டி,
அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று,
     ஏழையம் யாங்கு அறிகோம், ஐய?
விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும்
     ஆம் என்றே, விளங்கும் வெள்ளைப்
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல்
     பொதி அவிழ்க்கும் புகாரே, எம் ஊர். 5

காதலர் ஆகி, கழிக் கானல்,
     கையுறை கொண்டு, எம் பின் வந்தார்
ஏதிலர்-தாம் ஆகி, யாம் இரப்ப,
     நிற்பதை யாங்கு அறிகோம், ஐய?
மாதரார் கண்ணும், மதி நிழல் நீர்
     இணை கொண்டு மலர்ந்த நீலப்
போதும், அறியாது வண்டு ஊசலாடும்
     புகாரே, எம் ஊர். 6

மோது முது திரையான் மொத்துண்டு,
     போந்து அசைந்த முரல் வாய்ச் சங்கம்
மாதர் வரி மணல்மேல் வண்டல்
     உழுது அழிப்ப, மாழ்கி, ஐய!
கோதை பரிந்து அசைய, மெல் விரலால்
     கொண்டு ஓச்சும் குவளை மாலைப்
போது சிறங்கணிப்ப, போவார் கண்
     போகாப் புகாரே, எம் ஊர். 7

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல், உழுத
     தோற்றம் மாய்வான்,
பொறை மலி பூம் புன்னைப் பூ உதிர்ந்து, நுண் தாது
     போர்க்கும் கானல்,
நிறை மதி வாள் முகத்து நேர் கயல்
     கண் செய்த
உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு
     மென் முலையே தீர்க்கும் போலும். 8

நிணம் கொள் புலால் உணங்கல் நின்று, புள்
     ஓப்புதல் தலைக்கீடு ஆக,
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம், கன்னி
     நறு ஞாழல் கையில் ஏந்தி,
மணம் கமழ் பூங் கானல் மன்னி,
     மற்று ஆண்டு ஓர்
அணங்கு உறையும் என்பது அறியேன்; அறிவேனேல்,
     அடையேன் மன்னோ. 9

வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில்,
     மலர் கை ஏந்தி,
விலை மீன் உணங்கல் பொருட்டாக
     வேண்டு உருவம் கொண்டு, வேறு ஓர்
கொலை வேல் நெடுங் கண்
     கொடுங் கூற்றம் வாழ்வது
அலை நீர்த் தண் கானல் அறியேன்; அறிவேனேல்,
     அடையேன் மன்னோ. 10

(வேறு)

கயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி, காமன்
செயல் எழுதி, தீர்த்த முகம் திங்களோ, காணீர்!
திங்களோ, காணீர்-திமில் வாழ்நர் சீறூர்க்கே
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே! 11

எறி வளைகள் ஆர்ப்ப, இரு மருங்கும் ஓடும்,
கறை கெழு வேல் கண்ணோ கடுங் கூற்றம், காணீர்!
கடுங் கூற்றம், காணீர்-கடல் வாழ்நர் சீறூர்க்கே
மடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே! 12

புலவுமீன் வெள் உணங்கல் புள் ஓப்பிக் கண்டார்க்கு
அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ, காணீர்!
அணங்கு இதுவோ, காணீர்-அடும்பு அமர் தண் கானல்
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே! 13

(வேறு)

பொழில் தரு நறு மலரே, புது மணம் விரி மணலே,
பழுது அறு திரு மொழியே, பணை இள வன முலையே,
முழு மதி புரை முகமே, முரி புரு வில் இணையே,
எழுது-அரு மின் இடையே-எனை இடர் செய்தவையே. 14

திரை விரிதரு துறையே, திரு மணல் விரி இடமே,
விரை விரி நறு மலரே, மிடைதரு பொழில் இடமே,
மரு விரி புரி குழலே, மதி புரை திரு முகமே,
இரு கயல் இணை விழியே-எனை இடர் செய்தவையே. 15

வளை வளர்தரு துறையே, மணம் விரிதரு பொழிலே,
தளை அவிழ் நறு மலரே, தனியவள் திரி இடமே,
முளை வளர் இள நகையே, முழு மதி புரை முகமே,
இளையவள் இணை முலையே-எனை இடர் செய்தவையே. 16

(வேறு)

கடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வர் நின் ஐயர்;
உடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வைமன் நீயும்;
மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம்;
இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய்! 17

கொடுங் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை;
நெடுங் கண் வலையால் உயிர் கொல்வைமன் நீயும்;
வடம் கொள் முலையான் மழை மின்னுப் போல
நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய்! 18

ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்;
கோடும் புருவத்து உயிர் கொல்வைமன் நீயும்
பீடும் பிறர் எவ்வம் பாராய்; முலை சுமந்து
வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய்! 19

(வேறு)

பவள உலக்கை கையால் பற்றி,
தவள முத்தம் குறுவாள் செங் கண்,
தவள முத்தம் குறுவாள் செங் கண்
குவளை அல்ல! கொடிய, கொடிய! 20

புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்,
அன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்
கொன்னே வெய்ய! கூற்றம், கூற்றம்! 21

கள் 'வாய் நீலம் கையின் ஏந்தி,
புள் வாய் உணங்கல் கடிவாள் செங் கண்,
புள் வாய் உணங்கல் கடிவாள் செங் கண்
வெள் வேல் அல்ல! வெய்ய, வெய்ய! 22

(வேறு)

சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்;
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்:
ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய். 23

கட்டுரை

ஆங்கு, கானல் வரிப் பாடல் கேட்ட மான் நெடுங் கண் மாதவியும்,
'மன்னும் ஓர் குறிப்பு உண்டு; இவன் தன் நிலை மயங்கினான்' என,
கலவியால் மகிழ்ந்தாள்போல்,புலவியால் யாழ் வாங்கி,
தானும் ஓர் குறிப்பினள் போல், கானல் வரிப் பாடல்-பாணி,
நிலத் தெய்வம் வியப்பு எய்த, நீள் நிலத்தோர் மனம் மகிழ,
கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும்மன். 24

(வேறு)

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
     மணிப் பூ ஆடை-அது போர்த்துக்
கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,
     நடந்தாய்; வாழி, காவேரி!
கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,
     நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை;
     அறிந்தேன்; வாழி, காவேரி! 25

பூவர் சோலை மயில் ஆலப்
     புரிந்து குயில்கள் இசை பாட,
காமர் மாலை அருகு அசைய,
     நடந்தாய்; வாழி, காவேரி!
காமர் மாலை அருகு அசைய,
     நடந்த எல்லாம் நின் கணவன்
நாம வேலின் திறம் கண்டே;
     அறிந்தேன், வாழி, காவேரி! 26

வாழி அவன்-தன் வள நாடு
     மகவாய், வளர்க்கும் தாய் ஆகி,
ஊழி உய்க்கும் பேர் உதவி
     ஒழியாய்; வாழி, காவேரி!
ஊழி உய்க்கும் பேர் உதவி
     ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும்
ஆழி ஆள்வான், பகல் வெய்யோன்
     அருளே; வாழி, காவேரி! 27

(வேறு)

தீங்கதிர் வாள் முகத்தாள் செவ் வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும்,
'வாங்கும் நீர், முத்து' என்று, வைகலும், மால்-மகன் போல் வருதிர், ஐய!
வீங்கு ஓதம் தந்து, விளங்கு ஒளிய வெண் முத்தம்; விரை சூழ் கானல்
பூங் கோதை கொண்டு; விலைஞர் போல் மீளும் புகாரே, எம் ஊர். 28

மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செங் கை
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்-யாங்கு அறிகோம்? ஐய!
நிறை மதியும் மீனும் என, அன்னம் நீள் புன்னை அரும்பிப் பூத்த
பொறை மலி பூங் கொம்பு ஏற, வண்டு ஆம்பல் ஊதும் புகாரே, எம் ஊர். 29

உண்டாரை வெல் நறா ஊண் ஒளியாப் பாக்கத்துள், உறை ஒன்று இன்றித்
தண்டா நோய் மாதர் தலைத் தருதி என்பது யாங்கு அறிகோம்? ஐய!
வண்டால் திரை அழிப்ப, கையான் மணல் முகந்து, மதிமேல் நீண்ட,
புண் தோய் வேல் நீர் மல்க, மாதர் கடல் தூர்க்கும் புகாரே, எம் ஊர். 30

(வேறு)

புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி,
இணர் ததையும் பூங் கானல் என்னையும் நோக்கி,
உணர்வு ஒழியப் போன, ஒலி திரை நீர்ச் சேர்ப்பன்,
வணர் சுரி ஐம்பாலோய்! வண்ணம் உணரேனால். 31

தம்முடைய தண்ணளியும், தாமும், தம் மான் தேரும்,
எம்மை நினையாது, விட்டாரோ? விட்டு அகல்க;
அம் மென் இணர அடும்புகாள்! அன்னங்காள்!
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால். 32

புன்கண் கூர் மாலைப் புலம்பும் என் கண்ணே போல்,
துன்பம் உழவாய், துயிலப் பெறுதியால்;
இன் கள் வாய் நெய்தால்! நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக் கண்டறிதியோ? 33

புள் இயல் மான் தேர்-ஆழி போன வழி எல்லாம்,
தெள்ளு நீர் ஓதம்! சிதைத்தாய்; மற்று என் செய்கோ?
தெள்ளு நீர் ஓதம்! சிதைத்தாய்; மற்று எம்மோடு ஈங்கு
உள்ளாரோடு உள்ளாய்; உணராய்; மற்று என் செய்கோ? 34

நேர்ந்த நம் காதலர் நேமி நெடுந் திண் தேர்
ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற, ஓதமே;
பூந் தண் பொழிலே! புணர்ந்து ஆடும் அன்னமே!
ஈர்ந் தண் துறையே! 'இது தகாது' என்னீரே. 35

நேர்ந்த நம் காதலர் நேமி நெடுந் திண் தேர்
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; வாழி, கடல் ஓதம்!
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு
தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம்! 36

(வேறு)

நல் நித்திலத்தின் பூண் அணிந்து,
     நலம் சார் பவளக் கலை உடுத்து
செந்நெல் பழனக் கழனிதொறும்
     திரை உலாவு கடல் சேர்ப்ப!
புன்னைப் பொதும்பர் மகரத் திண்
     கொடியோன் எய்த புதுப் புண்கள்
என்னைக் காணாவகை மறைத்தால்,
     அன்னை காணின், என் செய்கோ? 37

வாரித் தரள நகை செய்து,
     வண் செம் பவள வாய் மலர்ந்து,
சேரிப் பரதர் வலை முன்றில்
     திரை உலாவு கடல் சேர்ப்ப!
மாரிப் பீரத்து அலர் வண்ணம்
     மடவாள் கொள்ள, கடவுள் வரைந்து
'ஆர் இக் கொடுமை செய்தார்?' என்று
     அன்னை அறியின், என் செய்கோ? 38

புலவு உற்று, இரங்கி, அது நீங்கப்
     பொழில்-தண்டலையில் புகுந்து உதிர்ந்த
கலவைச் செம்மல் மணம் கமழ
     திரை உலாவு கடல் சேர்ப்ப!
பல உற்று, ஒரு நோய் துணியாத
     படர் நோய் மடவாள் தனி உழப்ப,
அலவுற்று, இரங்கி, அறியா நோய்
     அன்னை அறியின், என் செய்கோ? 39

(வேறு)

இளை இருள் பரந்ததுவே; எல் செய்வான் மறைந்தனனே;
களைவு-அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே;
தளை அவிழ் மலர்க் குழலாய்! தணந்தார் நாட்டு உளதாம் கொல்-
வளை நெகிழ, எரி சிந்தி, வந்த இம் மருள் மாலை? 40

கதிரவன் மறைந்தனனே; கார் இருள் பரந்ததுவே;
எதிர் மலர் புரை உண் கண் எவ்வ நீர் உகுத்தனவே
புது மதி புரை முகத்தாய்! போனார் நாட்டு உளதாம் கொல்-
மதி உமிழ்ந்து, கதிர் விழுங்கி, வந்த இம் மருள் மாலை? 41

பறவை பாட்டு அடங்கினவே; பகல் செய்வான் மறைந்தனனே;
நிறை நிலா நோய் கூர, நெடுங் கண் நீர் உகுத்தனவே;
துறு மலர் அவிழ் குழலாய்! துறந்தார் நாட்டு உளதாம்கொல்-
மறவை ஆய், என் உயிர்மேல் வந்த இம் மருள் மாலை? 42

(வேறு)

கைதை வேலிக் கழிவாய் வந்து, எம்
பொய்தல் அழித்துப் போனார், ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார், அவர்நம்
மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர். 43

கானல் வேலிக் கழிவாய் வந்து,
'நீ நல்கு' என்றே நின்றார் ஒருவர்
'நீ நல்கு' என்றே நின்றார், அவர் நம்
மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர். 44

அன்னம் துணையோடு ஆடக்கண்டு,
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார், அவர் நம்
பொன் நேர் சுணங்கின் போவார் அல்லர். 45

(வேறு)

அடையல், குருகே! அடையல் எம் கானல்,
அடையல், குருகே! அடையல் எம் கானல்,
உடை திரை நீர்ச் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய்;
அடையல், குருகே! அடையல் எம் கானல். 46

(வேறு)

ஆங்கனம் பாடிய ஆய்-இழை, பின்னரும்,
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல்
தீம் தொடைச் செவ்வழிப்பாலை இசை எழீஇ,
பாங்கினில் பாடி, ஓர் பண்ணுப் பெயர்த்தாள். 47

(வேறு)

நுளையர் விளரி நொடிதரும் தீம் பாலை
இளி கிளையில் கொள்ள இறுத்தாயால், மாலை!
இளி கிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்,
கொளை வல்லாய்! என் ஆவி கொள்; வாழி, மாலை! 48

பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல்
இருந்து, ஏங்கி, வாழ்வார் உயிர்ப் புறத்தாய், மாலை!
உயிர்ப் புறத்தாய் நீ ஆகில், உள் ஆற்றா வேந்தன்
எயில்-புறத்து வேந்தனோடு என் ஆதி, மாலை? 49

பையுள் நோய் கூர, பகல் செய்வான் போய் வீழ,
வையமோ கண் புதைப்ப, வந்தாய், மருள் மாலை!
மாலை நீ ஆயின், மணந்தார் அவர் ஆயின்,
ஞாலமோ நல்கூர்ந்தது; வாழி, மாலை! 50

(வேறு)

'தீத் துழைஇ வந்த இச் செல்லல் மருள் மாலை
தூக்காது துணிந்த இத் துயர் எஞ்சு கிளவியால்,
பூக் கமழ் கானலில் பொய்ச் சூள் பொறுக்க' என்று,
மாக் கடல்-தெய்வம்! நின் மலர் அடி வணங்குதும். 51

கட்டுரை

எனக் கேட்டு,
'கானல் வரி யான் பாட, தான் ஒன்றின்மேல் மனம் வைத்து,
மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்' என
யாழ்-இசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்,
உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக் கை ஞெகிழ்ந்தனனாய்,
'பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின், எழுதும்' என்று உடன் எழாது,
ஏவலாளர் உடன் சூழ்தர, கோவலன்-தான் போன பின்னர்-
தாது அவிழ் மலர்ச் சோலை, ஓதை ஆயத்து ஒலி அவித்து,
கையற்ற நெஞ்சினளாய், வையத்தின் உள் புக்கு,
காதலனுடன் அன்றியே, மாதவி தன் மனை புக்காள்-
'ஆங்கு,
மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும்,
சூழி யானை, சுடர் வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப,
ஆழி மால் வரை அகவையா' எனவே. 52

8. வேனிற் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

'நெடியோன் குன்றமும், தொடியோள் பௌவமும்,
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு,
மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும்,
கலிகெழு வஞ்சியும், ஒலி புனல் புகாரும்,
அரைசு வீற்றிருந்த, உரைசால் சிறப்பின், 5

மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய
இன் இளவேனில் வந்தது இவண்' என,
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த
இளங்கால்-தூதன் இசைத்தனன். ஆதலின்,
மகர வெல் கொடி மைந்தன் சேனை! 10

புகர் அறு கோலம் கொள்ளும்' என்பது போல்,
கொடி மிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணி மொழி கூற-
மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டினுள்
கோவலன் ஊட, கூடாது ஏகிய, 15

மா மலர் நெடுங் கண் மாதவி விரும்பி;
வான் உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில்-பள்ளி ஏறி; மாண்- இழை,
தென் கடல் முத்தும், தென் மலைச் சந்தும்,
தன் கடன் இறுக்கும் தன்மைய ஆதலின், 20

கொங்கை முன்றில் குங்கும வளாகத்து,
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி,
அதிரா மரபின் யாழ் கை வாங்கி,
மதுர கீதம் பாடினள், மயங்கி-
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி 25

நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி
வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி,
இடக்கை நால் விரல் மாடகம் தழீஇச்
செம்பகை, ஆர்ப்பே, கூடம், அதிர்வே,
வெம் பகை நீக்கும் விரகுளி அறிந்து, 30

பிழையா மரபின் ஈர்-ஏழ் கோவையை
உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி,
இணை, கிளை, பகை, நட்பு, என்று இந் நான்கின்
இசை புணர் குறிநிலை எய்த நோக்கி,
குரல்வாய், இளிவாய்க் கேட்டனள்; அன்றியும், 35

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்,
உழை முதல் ஆகவும், உழை ஈறு ஆகவும்;
குரல் முதல் ஆகவும்,குரல் ஈறு ஆகவும்;
அகநிலை மருதமும், புறநிலை மருதமும்,
அருகியல் மருதமும், பெருகியல் மருதமும்; 40

நால் வகைச் சாதியும் நலம் பெற நோக்கி,
மூ-வகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்து
திறத்து வழிப்படூ உம் தெள் இசைக் கரணத்துப்
புறத்து ஒரு பாணியில் பூங்கொடி மயங்கிச்
சண்பகம், மாதவி, தமாலம், கருமுகை, 45

வெண் பூ மல்லிகை, வேரொடு மிடைந்த
அம் செங்கழுநீர், ஆய் இதழ்க் கத்திகை
எதிர் பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர் பூந்தாழை முடங்கல் வெண் தோட்டு-
விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட 50

ஒரு தனிச் செங்கோல் ஒரு மகன் ஆணையின்,
ஒரு முகம் அன்றி, உலகு தொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி-
அலத்தகக் கொழுஞ் சேறு அளைஇ, அயலது
பித்திகைக் கொழு முகை ஆணி கைக்கொண்டு, 55

'மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும்
இன் இளவேனில் இளவரசாளன்;
அந்திப் போதகத்து அரும் பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்;
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும், 60

தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும்,
நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல்
இறும்பூது அன்று; அஃது அறிந்தீமின்' என,
எண்-எண் கலையும் இசைந்து உடன் போகப்
பண்ணும் திறனும் புறங்கூறு நாவில் 65

தளை வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்து உரை எழுதிப்
பசந்த மேனியள் படர் உறு மாலையின்,
வசந்தமாலையை, 'வருக' எனக் கூஉய்த்
'தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம் 70

கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்கு' என-
மாலை வாங்கிய வேல் அரி நெடுங் கண்,
கூல மறுகிற், கோவலற்கு அளிப்ப-
திலகமும், அளகமும், சிறு கருஞ் சிலையும்,
குவளையும், குமிழும், கொவ்வையும், கொண்ட 75

மாதர் வாள் முகத்து, மதைஇய நோக்கமொடு,
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்;
புயல் சுமந்து வருந்திப் பொழி கதிர் மதியத்துக்
கயல் உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்,
பாகு பொதி பவளம் திறந்து, நிலா உதவிய 80

நாகு இள முத்தின் நகை நலம் காட்டி,
'வருக' என, வந்து 'போக' எனப் போகிய
கரு நெடுங் கண்ணி காண் வரிக் கோலமும்;
அந்தி-மாலை வந்ததற்கு இரங்கிச்
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கிக் 85

கிளி புரை கிளவியும், மட அன நடையும்,
களி மயில் சாயலும், கரந்தனள் ஆகிச்
செரு வேல் நெடுங் கண் சிலதியர் கோலத்து
ஒரு தனி வந்த உள் வரி ஆடலும்;
சிலம்பு வாய் புலம்பவும், மேகலை ஆர்ப்பவும், 90

கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும்,
புறத்து நின்று ஆடிய புன்புற வரியும்;
கோதையும், குழலும், தாது சேர் அளகமும்,
ஒரு காழ் முத்தமும், திரு முலைத் தடமும், 95

மின் இடை வருத்த நல் நுதல் தோன்றி,
சிறுகுறுந் தொழிலியர் மறு மொழி உய்ப்ப,
புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின்
இரு புற மொழிப் பொருள் கேட்டனள் ஆகி,
தளர்ந்த சாயல், தகை மென் கூந்தல் 100

கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரிக் கோலமும்;
பிரிந்து உறை காலத்து, பரிந்தனள் ஆகி,
என் உறு கிளைகட்குத் தன் உறு துயரம்
தேர்ந்து தேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி; அன்றியும்,
வண்டு அலர் கோதை மாலையுள் மயங்கி, 105

கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்;
அடுத்து அடுத்து, அவர் முன் மயங்கிய மயக்கம்
எடுத்து அவர் தீர்த்த எடுத்துக் கோள் வரியும்;
ஆடல் மகளே ஆதலின், ஆய்-இழை!
பாடு பெற்றன அப் பைந்தொடி-தனக்கு' என- 110

அணித் தோட்டுத் திரு முகத்து ஆய்-இழை எழுதிய
மணித் தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி,
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடு அலர் கோதைக்குத் துனைந்து சென்று உரைப்ப-
'மாலை வாரார் ஆயினும், மாண்-இழை! 115

காலை காண்குவாம்' என, கையறு நெஞ்சமொடு
பூ மலர்-அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்-
மா மலர் நெடுங் கண் மாதவி-தான்- என்.

வெண்பா

செந்தாமரை விரிய, தேமாங் கொழுந்து ஒழுக,
மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ, கொந்து ஆர்
இளவேனில் வந்ததால்; என் ஆம் கொல்-இன்று,
வள வேல் நல் கண்ணி மனம்? 1

'ஊடினீர் எல்லாம், உருவிலான்-தன் ஆணை!
கூடுமின்' என்று குயில் சாற்ற, நீடிய
வேனல்-பாணிக் கலந்தாள் மென் பூந் திருமுகத்தை,
கானல்-பாணிக்கு அலந்தாய்! காண். 2






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247