சிலப்பதிகாரம் - Silapathikaram - ஐம்பெருங் காப்பியங்கள் - Iymperum Kappiangal - சென்னை நூலகம் - ChennaiLibrary.com


இளங்கோவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

... தொடர்ச்சி - 8 ...

15. அடைக்கலக் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர்க்
கோலின் செம்மையும், குடையின் தண்மையும்,
வேலின் கொற்றமும், விளங்கிய கொள்கை,
பதி எழு அறியாப் பண்பு மேம்பட்ட 5

மதுரை மூதூர் மா நகர் கண்டு; ஆங்கு,
அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து:
தீது தீர் மதுரையும், தென்னவன் கொற்றமும்,
மாதவத்து ஆட்டிக்குக் கோவலன் கூறுழி- 10

தாழ் நீர் வேலித் தலைச்செங்கானத்து,
நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை
மா மறை முதல்வன் மாடலன் என்போன்
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து, 15

தமர்முதல் பெயர்வோன், தாழ் பொழில் ஆங்கண்,
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க,
கவுந்தி இடவயின் புகுந்தோன்-தன்னை
கோவலன் சென்று சேவடி வணங்க
நாவல் அந்தணன் தான் நவின்று, உரைப்போன் 20

'வேந்து உறு சிறப்பின் விழுச் சீர் எய்திய,
மாந்தளிர் மேனி, மாதவி மடந்தை
பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து,
வாலாமை நாள் நீங்கிய பின்னர்,
மா முது கணிகையர், 'மாதவி மகட்கு 25

நாம நல் உரை நாட்டுதும்' என்று
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு, ஆங்கு,
'இடைஇருள் யாமத்து எறி திரைப் பெரும் கடல்
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள்
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின், 30

நண்ணு வழி இன்றி, நாள் சில நீந்த,
'இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்;
வந்தேன்; அஞ்சல்; மணிமேகலை யான்;
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது;
துன்பம் நீங்கித் துயர்க் கடல் ஒழிக' என, 35

விஞ்சையின் பெயர்த்து, விழுமம் தீர்த்த,
எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக' என:
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்,
'மணிமேகலை' என வாழ்த்திய ஞான்று;
மங்கல மடந்தை மாதவி-தன்னொடு 40

செம் பொன் மாரி செங் கையின் பொழிய;
ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன்,
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்-தன்னை; 45

பாகு கழிந்து, யாங்கணும் பறை பட, வரூஉம்
வேக யானை வெம்மையின் கைக்கொள
ஒய் எனத் தெழித்து, ஆங்கு, உயர் பிறப்பாளனைக்
கைஅகத்து ஒழித்து, அதன் கைஅகம் புக்கு,
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி, 50

மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்,
பிடர்த்தலை இருந்து, பெரும் சினம் பிறழாக்
கடக் களிறு அடக்கிய கருணை மறவ!
பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக,
எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல, 55

வடதிசைப் பெயரும் மா மறையாளன்,
'கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல் ஏடு
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க' என,
பீடிகைத் தெருவின் பெருங்குடி வாணிகர் 60

மாட மறுகின் மனைதொறு மறுகி,
'கருமக் கழி பலம் கொள்மினோ' எனும்
அரு மறை ஆட்டியை அணுகக் கூஉய்,
'யாது நீ உற்ற இடர்? ஈது என்?' என,
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி, 65

'இப் பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி,
கைப் பொருள் தந்து, என் கடுந் துயர் களைக' என
அஞ்சல்! உன்-தன் அரும் துயர் களைகேன்;
நெஞ்சு உறு துயரம் நீங்குக' என்று, ஆங்கு,
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கையின், 70

தீத் திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க,
தானம் செய்து, அவள்-தன் துயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி,
ஒல்காச் செல்வத்து உறு பொருள் கொடுத்து,
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ! 75

பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த,
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரி பொய்த்து, அறைந்து உணும் பூதத்துக்
கறை கெழு பாசத்துக்கை அகப்படலும்,
பட்டோ ன் தவ்வை படு துயர் கண்டு 80

கட்டிய பாசத்துக் கடிது சென்று எய்தி,
'என் உயிர் கொண்டு, ஈங்கு இவன் உயிர் தா' என,
நல் நெடும் பூதம் நல்காதாகி,
'நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு,
பரகதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை; 85

ஒழிக, நின் கருத்து' என, உயிர் முன் புடைப்ப,
அழிதரும் உள்ளத்து-அவளொடும் போந்து, அவன்
சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து,
பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல்! 90

இம்மைச் செய்தன யான் அறி நல்வினை;
உம்மைப் பயன்கொல், ஒரு தனி உழந்து, இத்
திருத்தகு மா மணிக் கொழுந்துடன் போந்தது,
விருத்த கோபால! நீ?' என வினவ-
கோவலன் கூறும்: 'ஓர் குறுமகன்-தன்னால், 95

காவல் வேந்தன் கடி நகர்-தன்னில்,
நாறு ஐங் கூந்தல் நடுங்கு துயர் எய்த,
கூறை கோள்பட்டுக் கோட்டு மா ஊரவும்;
அணித்தகு புரி குழல் ஆய்-இழை-தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும்; 100

மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து,
காமக் கடவுள் கையற்று ஏங்க,
அணி திகழ் போதி அறவோன்-தன் முன்,
மணிமேகலையை மாதவி அளிப்பவும்;
நனவு போல, நள் இருள் யாமத்து, 105

கனவு கண்டேன்: கடிது ஈங்கு உறும்' என-
'அறத்து உறை மாக்கட்கு அல்லது, இந்தப்
புறச்சிறை இருக்கை பொருந்தாது; ஆகலின்,
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கின் நின்
உரையின் கொள்வர்; இங்கு ஒழிக நின் இருப்பு; 110

காதலி-தன்னொடு கதிர் செல்வதன் முன்,
மாட மதுரை மா நகர் புகுக' என,
மாதவத்து ஆட்டியும் மா மறை முதல்வனும்
கோவலன்-தனக்குக் கூறும் காலை-
அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய 115

புறஞ்சிறை மூதூர்ப் பூங் கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப், பண்பின் பெயர்வோன்
ஆயர் முதுமகள், மாதரி என்போள்,
காவுந்தி ஐயையைக் கண்டு, அடி தொழலும்-
'ஆ காத்து ஓம்பி, ஆப் பயன் அளிக்கும் 120

கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை;
தீது இலள்; முதுமகள்; செவ்வியள்; அளியள்;
மாதரி-தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்று' என எண்ணினளாகி,
'மாதரி! கேள்; இம் மடந்தை-தன் கணவன் 125

தாதையைக் கேட்கின், தன் குலவாணர்
அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு,
கருந் தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்;
உடைப் பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்,
இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன். 130

மங்கல மடந்தையை நல் நீர் ஆட்டி,
செங் கயல் நெடுங் கண் அஞ்சனம் தீட்டி,
தே மென் கூந்தல் சின் மலர் பெய்து,
தூ மடி உடீஇ; தொல்லோர் சிறப்பின்
ஆயமும், காவலும், ஆய்-இழை-தனக்கு, 135

தாயும், நீயே ஆகித் தாங்கு: ஈங்கு,
என்னொடு போந்த இளங் கொடி நங்கை-தன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
கடுங் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு
நடுங்கு துயர் எய்தி, நாப் புலர வாடி, 140

தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி,
இன் துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது,
பொற்பு உடைத் தெய்வம் யாம் கண்டிலமால்
வானம் பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது; 145

நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது;
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு; என்னும்
அத்தகு நல் உரை அறியாயோ நீ?-
தவத்தோர் அடைக்கலம்-தான் சிறிது ஆயினும்,
மிகப் பேர் இன்பம் தரும்; அது கேளாய்; 150

காவிரிப் படப்பைப் பட்டினம்-தன்னுள்
பூ விரி பிண்டிப் பொது நீங்கு திரு நிழல்,
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளிச் சிலாதலம்மேல் இருந்தருளி,
தருமம் சாற்றும் சாரணர்-தம் முன்; 155

திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்,
தாரன் மாலையன், தமனியப் பூணினன்,
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்துப்
பெரு விறல் வானவன் வந்து நின்றோனை; 160

சாவகர் எல்லாம் சாரணர்த் தொழுது, 'ஈங்கு
யாது இவன் வரவு?' என, இறையோன் கூறும்
'எட்டி சாயலன் இருந்தோன்-தனது
பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில், ஓர்
மாதவ முதல்வனை மனைப் பெரும் கிழத்தி 165

ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து
ஊர்ச் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி, உள்புக்கு,
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி,
உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி, 170

எதிர் முகம் நோக்கிய இன்பச் செவ்வியை
அதிராக் கொள்கை அறிவனும் நயந்து, 'நின்
மக்களின் ஓம்பு, மனைக்கிழத்தீ!' என,
மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பி;
காதல் குரங்கு கடைநாள் எய்தவும், 175

தானம் செய்வுழி, அதற்கு ஒரு கூறு
'தீது அறுக' என்றே செய்தனள் ஆதலின்,
மத்திம நல் நாட்டு வாரணம்-தன்னுள்,
உத்தர-கௌத்தற்கு ஒரு மகன் ஆகி;
உருவினும் திருவினும், உணர்வினும், தோன்றி; 180

பெரு விறல் தானம் பலவும் செய்து; ஆங்கு,
எண்-நால் ஆண்டின் இறந்த பிற்பாடு;
விண்ணோர் வடிவம் பெற்றனன் ஆதலின்,
'பெற்ற செல்வப் பெரும் பயன் எல்லாம்
தற்காத்து அளித்தோள் தானச் சிறப்பு' என, 185

பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறு கை
கொண்டு, ஒரு பாகத்து; 'கொள்கையின் புணர்ந்த
சாயலன் மனைவி தானம்-தன்னால்
ஆயினன் இவ் வடிவு; அறிமினோ, என,
சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்டத் 190

தேவ குமரன் தோன்றினன்' என்றலும்-
சாரணர் கூறிய தகைசால் நல்மொழி
ஆர் அணங்கு ஆக, அறம் தலைப்பட்டோ ர்
அன்று அப் பதியுள் அரும் தவ மாக்களும்,
தன் தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும், 195

இட்ட தானத்து எட்டியும், மனைவியும்,
முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர்;
கேட்டனை ஆயின், தோட்டு-ஆர் குழலியொடு
நீட்டித்திராது, நீ போக' என்றே
கவுந்தி கூற-உவந்தனள் ஏத்தி, 200

வளர் இள வன முலை, வாங்கு அமைப் பணைத் தோள்,
முளை இள வெண் பல், முதுக்குறை நங்கையொடு;
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்து;
கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப,
மறித் தோள் நவியத்து உறிக் காவாளரொடு 205

செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ;
மிளையும், கிடங்கும், வளை வில் பொறியும்,
கரு விரல் ஊகமும், கல் உமிழ் கவணும்,
பரிவுறு வெந் நெயும், பாகு அடு குழிசியும்,
காய் பொன் உலையும், கல் இடு கூடையும், 210

தூண்டிலும், தொடக்கும், ஆண்டலை அடுப்பும்,
கவையும், கழுவும், புதையும், புழையும்,
ஐயவித் துலாமும், கை பெயர் ஊசியும்,
சென்று எறி சிரலும், பன்றியும், பணையும்,
எழுவும், சீப்பும், முழு விறல் கணையமும், 215

கோலும், குந்தமும், வேலும், பிறவும்,
ஞாயிலும், சிறந்து, நாள் கொடி நுடங்கும்
வாயில் கழிந்து; தன் மனை புக்கனளால்-
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து-என்.

16. கொலைக்களக் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற
இரும் பேர் உவகையின் இடைக் குல மடந்தை
அளை விலை உணவின் ஆய்ச்சியர்-தம்மொடு
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி,
பூவல் ஊட்டிய புனை மாண் பந்தர்க் 5

காவல் சிற்றில் கடி மனைப் படுத்து;
செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி,
நறு மலர்க் கோதையை நாள்-நீர் ஆட்டி:
'கூடல் மகளிர் கோலம் கொள்ளும்
ஆடகப் பைம் பூண் அரு விலை அழிப்ப, 10

செய்யாக் கோலமொடு வந்தீர்க்கு என் மகள்
ஐயை, காணீர், அடித்தொழில் ஆட்டி;
பொன்னின் பொதிந்தேன், புனை பூங் கோதை!
என்னுடன் நங்கை, ஈங்கு இருக்க' எனத் தொழுது,
'மாதவத்துஆட்டி வழித் துயர் நீக்கி, 15

ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள்;
நோதகவு உண்டோ , நும் மகனார்க்கு இனி
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்,
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள் 20

நெடியாது அளிமின், நீர்' எனக் கூற-
இடைக்குல மடந்தையர், இயல்பின் குன்றா
மடைக்கலம்-தன்னொடு மாண்பு உடை மரபின்
கோளிப் பாகல் கொழுங் கனித் திரள் காய்,
வாள் வரிக் கொடுங் காய், மாதுளம் பசுங் காய், 25

மாவின் கனியொடு வாழைத் தீம் கனி,
சாலி அரிசி, தம் பால் பயனொடு,
'கோல் வளை மாதே! கொள்க' எனக் கொடுப்ப-
மெல் விரல் சிவப்பப், பல்வேறு பசுங் காய்
கொடு வாய்க் குயத்து விடுவாய்செய்ய, 30

திரு முகம் வியர்த்தது; செங் கண் சேந்தன;
கரி புற அட்டில் கண்டனள் பெயர,
வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு
கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி-
தாலப் புல்லின் வால் வெண் தோட்டுக் 35

கை வல் மகடூஉக் கவின் பெறப் புனைந்த
செய் வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி,
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல், 40

தண்ணீர் தெளித்து, தன் கையால் தடவி,
குமரி வாழையின் குருத்து அகம் விரித்து-ஈங்கு,
'அமுதம் உண்க, அடிகள்! ஈங்கு என;
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின்
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து-'ஆங்கு, 45

ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ,
நல் அமுது உண்ணும் நம்பி! ஈங்கு,
பல் வளைத் தோளியும் பண்டு நம் குலத்து,
தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை 50

விழுமம் தீர்த்த விளக்குக்கொல்!' என;
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி,
'கண் கொளா நமக்கு, இவர் காட்சி, ஈங்கு' என-
உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு
அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த 55

மை ஈர் ஓதியை, 'வருக' எனப் பொருந்தி,
'கல் அதர் அத்தம் கடக்க யாவதும்
வல்லுநகொல்லோ மடந்தை மெல் அடி!' என,
வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி,
எம் முதுகுரவர் என் உற்றனர்கொல்? 60

மாயம் கொல்லோ, வல் வினைகொல்லோ?
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன்!
வறு மொழியாளரொடு வம்பப் பரத்தரொடு
குறு மொழிக் கோட்டி, நெடு நகை புக்கு,
பொச்சாப்புண்டு, பொருள் உரையாளர் 65

நச்சுக் கொன்றேற்கு நல் நெறி உண்டோ?
இரு முதுகுரவர் ஏவலும் பிழைத்தேன்;
சிறு முதுகுறைவிக்குச் சிறுமையும் செய்தேன்;
வழு எனும் பாரேன்; மா நகர் மருங்கு ஈண்டு
எழுக என எழுந்தாய்; என் செய்தனை!' என- 70

'அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன் 75

முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருண் மொழி அளைஇ,
எற் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்த, 80

போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்' என்று அவள் கூற-
'குடி முதல் சுற்றமும், குற்றிளையோரும்;
அடியோர் பாங்கும், ஆயமும், நீங்கி; 85

நாணமும், மடனும், நல்லோர் ஏத்தும்,
பேணிய கற்பும், பெரும் துணை ஆக;
என்னொடு போந்து, ஈங்கு என் துயர் களைந்த
பொன்னே, கொடியே, புனை பூங் கோதாய்,
நாணின் பாவாய், நீள் நில விளக்கே, 90

கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி!
சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு, யான் போய்,
மாறி வருவன்; மயங்கா தொழிக' என-
கருங் கயல் நெடுங் கண் காதலி-தன்னை
ஒருங்குடன் தழீஇ, உழையோர் இல்லா 95

ஒரு தனி கண்டு, தன் உள் அகம் வெதும்பி,
வரு பனி கரந்த கண்ணன் ஆகி,
பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி,
வல்லா நடையின் மறுகில் செல்வோன்.
இமில் ஏறு எதிர்ந்தது, இழுக்கு என அறியான், 100

தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின்-
தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து,
மாதர் வீதி மறுகிடை நடந்து,
பீடிகைத் தெருவில் பெயர்வோன்-ஆங்கண்,
கண்ணுள் வினைஞர், கைவினை முற்றிய 105

நுண்வினைக் கொல்லர், நூற்றுவர் பின் வர,
மெய்ப்பை புக்கு, விலங்கு நடைச் செலவின்
கைக் கோல் கொல்லனைக் கண்டனனாகி,
'தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன் வினைக் கொல்லன் இவன்' எனப் பொருந்தி, 110

'காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கு அணி
நீ விலையிடுதற்கு ஆதியோ?' என-
'அடியேன் அறியேன் ஆயினும் வேந்தர்
முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான்' என,
கூற்றத் தூதன் கைதொழுது ஏத்தப் 115

போற்று-அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன்
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
பத்திக் கேவணப் பசும் பொன் குடைச் சூல்
சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம்
பொய்த் தொழில் கொல்லன் புரிந்துடன் நோக்கி, 120

'கோப்பெருந்தேவிக்கு அல்லதை, இச் சிலம்பு
யாப்புறவு இல்லை' என- 'முன்போந்து,
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர, என்
சிறு குடில் அங்கண் இருமின் நீர்' என,
கோவலன் சென்று, அக் குறுமகன் இருக்கை ஓர் 125

தேவ கோட்டச் சிறைஅகம் புக்கபின்-
'கரந்து யான் கொண்ட கால்-அணி ஈங்கு,
பரந்து வெளிப்படாமுன்னம் மன்னற்கு,
புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான்' என,
கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன்- 130

'கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்,
பாடல் பகுதியும், பண்ணின் பயங்களும்,
காவலன் உள்ளம் கவர்ந்தன' என்று, தன்
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து,
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு, 135

குலமுதல் தேவி கூடாது ஏக,
மந்திரச் சுற்றம் நீங்கி, மன்னவன்
சிந்து அரி நெடுங் கண் சிலதியர்-தம்மொடு
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி,
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின்- 140

வீழ்ந்தனன் கிடந்து, தாழ்ந்து, பல ஏத்தி,
'கன்னகம் இன்றியும், கவைக்கோல் இன்றியும்,
துன்னிய மந்திரம் துணை எனக் கொண்டு,
வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து,
கோயில் சிலம்பு கொண்ட கள்வன் 145

கல்லென் பேர் ஊர்க் காவலர்க் கரந்து, என்
சில்லைச் சிறு குடில் அகத்து இருந்தோன்' என-
வினை விளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
ஊர் காப்பாளரைக் கூவி, 'ஈங்கு என் 150

தாழ் பூங் கோதை-தன் கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகின்,
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு' என,
காவலன் ஏவக் கருந் தொழில் கொல்லனும்,
'ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து' என, 155

தீவினை முதிர் வலைச் சென்று பட்டிருந்த
கோவலன்-தன்னைக் குறுகினனாகி-
'வலம் படு தானை மன்னவன் ஏவ,
சிலம்பு காணிய வந்தோர் இவர்' என,
செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம் 160

பொய் வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட-
'இலக்கண முறைமையின் இருந்தோன், ஈங்கு, இவன்
கொலைப்படு மகன் அலன்' என்று கூறும்
அரும் திறல் மாக்களை அகநகைத்து உரைத்து,
கருந் தொழில் கொல்லன் காட்டினன் உரைப்போன் 165

'மந்திரம், தெய்வம், மருந்தே, நிமித்தம்,
தந்திரம், இடனே, காலம், கருவி, என்று
எட்டுடன் அன்றே இழுக்கு உடை மரபின்
கட்டு உண் மாக்கள் துணை எனத் திரிவது
மருந்தில் பட்டீர் ஆயின், யாவரும் 170

பெரும் பெயர் மன்னனின் பெரு நவைப் பட்டீர்
மந்திரம் நாவிடை வழுத்துவர் ஆயின்,
இந்திர-குமரரின் யாம் காண்குவமோ
தெய்வத் தோற்றம் தெளிகுவர் ஆயின்,
கைஅகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர்; 175

மருந்தின் நம்கண் மயக்குவர் ஆயின்,
இருந்தோம் பெயரும் இடனும்-மார் உண்டோ?
நிமித்தம் வாய்த்திடின் அல்லது, யாவதும்
புகற்கிலர், அரும் பொருள் வந்து கைப் புகுதினும்;
தந்திர கரணம் எண்ணுவர் ஆயின், 180

இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர்;
இவ் இடம் இப் பொருள் கோடற்கு இடம் எனின்,
அவ் இடத்து அவரை யார் காண்கிற்பார்?
காலம் கருதி அவர் பொருள் கையுறின்,
மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ? 185

கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின்,
இரு நில மருங்கின் யார் காண் கிற்பார்?
இரவே பகலே என்று இரண்டு இல்லை;
கரவு இடம் கேட்பின், ஓர் புகல் இடம் இல்லை.
தூதர் கோலத்து வாயிலின் இருந்து, 190

மாதர் கோலத்து வல் இருள் புக்கு,
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று, ஆங்கு,
இளங்கோ வேந்தன் துளங்கு ஒளி ஆரம்
வெயில் இடு வயிரத்து, மின்னின் வாங்க,
துயில்கண் விழித்தோன் தோளில் காணான் 195

உடைவாள் உருவ, உறை கை வாங்கி,
எறிதொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான்.
மல்லிற் காண, மணித் தூண் காட்டி,
கல்வியிற் பெயர்ந்த கள்வன் தன்னைக்
கண்டோ ர் உளர் எனின் காட்டும் ஈங்கு இவர்க்கு 200

உண்டோ உலகத்து ஒப்போர்?' என்று, அக்
கருந் தொழில் கொல்லன் சொல்ல- ஆங்கு, ஓர்
திருந்து வேல் தடக் கை இளையோன் கூறும்
'நிலன் அகழ் உளியன், நீலத் தானையன்,
கலன் நசை வேட்கையின் கடும் புலி போன்று, 205

மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து,
ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற,
கை வாள் உருவ, என் கை வாள் வாங்க,
எவ்வாய் மருங்கினும் யான் அவன் கண்டிலேன்;
அரிது இவர் செய்தி; அலைக்கும் வேந்தனும்; 210

உரியது ஒன்று உரைமின், உறு படையீர்!' என-
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள் வாள் எறிந்தனன்; விலங்கூடு அறுத்தது;
புண் உமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப,
மண்ணக மடந்தை வான் துயர் கூர, 215

காவலன் செங்கோல் வளைஇய, வீழ்ந்தனன்,
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து என்.

வெண்பா

நண்ணும், இரு வினையும்; நண்ணுமின்கள், நல் அறமே-
கண்ணகி தன் கேள்வன் காரணத்தால், மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே; பண்டை
விளைவாகி வந்த வினை.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247