சிலப்பதிகாரம் - Silapathikaram - ஐம்பெருங் காப்பியங்கள் - Iymperum Kappiangal - சென்னை நூலகம் - ChennaiLibrary.com


இளங்கோவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

... தொடர்ச்சி - 13 ...

25. காட்சிக் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து,
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல், வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி, 5

'துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்' என,
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்,
வள மலர்ப் பூம் பொழில் வானவர் மகளிரொடு 10

விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன்
பொலம் பூங் காவும், புனல் யாற்றுப் பரப்பும்,
இலங்கு நீர்த் துருத்தியும், இள மரக் காவும்,
அரங்கும், பள்ளியும், ஒருங்குடன் பரப்பி;
ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த 15

பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று;
கோங்கம், வேங்கை, தூங்கு இணர்க் கொன்றை,
நாகம், திலகம், நறுங் காழ் ஆரம்,
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து,
மதுகரம், ஞிமிறொடு வண்டு இனம் பாட, 20

நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
இடு மணல் எக்கர் இயைந்து, ஒருங்கு இருப்ப-
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்,
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும், 25

தினைக் குறு வள்ளையும், புனத்து எழு விளியும்,
நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும்,
பறை இசை அருவிப் பயம் கெழும் ஓதையும்,
புலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும்,
கலி கெழு மீமிசைச் சேணோன் ஓதையும், 30

பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும்,
இயங்கு படை அரவமோடு, யாங்கணும், ஒலிப்ப-
அளந்து கடை அறியா அருங்கலம் சுமந்து,
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து,
இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது, 35

திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல;
யானை வெண் கோடும், அகிலின் குப்பையும்,
மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும்,
சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும்,
அஞ்சனத் திரளும், அணி அரிதாரமும் 40

ஏல வல்லியும், இருங் கறி வல்லியும்,
கூவை நூறும், கொழுங் கொடிக் கவலையும்,
தெங்கின் பழனும், தேமாங் கனியும்,
பைங் கொடிப் படலையும், பலவின் பழங்களும்,
காயமும், கரும்பும், பூ மலி கொடியும், 45

கொழுந் தாள் கமுகின் செழுங் குலைத் தாறும்,
பெரும் குலை வாழையின் இருங் கனித் தாறும்;
ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்,
வாள்வரிப் பறழும், மத கரிக் களபமும்,
குரங்கின் குட்டியும், குடா அடி உளியமும், 50

வரை ஆடு வருடையும், மட மான் மறியும்,
காசறைக் கருவும், ஆசு அறு நகுலமும்,
பீலி மஞ்ஞையும், நாவியின் பிள்ளையும்,
கானக்கோழியும், தேன் மொழிக் கிள்ளையும்;
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு-ஆங்கு 55

ஏழ் பிறப்பு அடியேம்; வாழ்க, நின் கொற்றம்!
கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து, தனித் துயர் எய்தி,
வானவர் போற்ற மன்னொடும் கூடி,
வானவர் போற்ற, வானகம் பெற்றனள்; 60

எந் நாட்டாள்கொல்? யார் மகள் கொல்லோ?
நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர்!' என-
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு
கண் களி மயக்கத்துக் காதலோடு இருந்த 65

தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும்
'ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம்,
திண் திறல் வேந்தே! செப்பக் கேளாய்;
தீவினைச் சிலம்பு காரணமாக,
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும்; 70

வலம் படு தானை மன்னன் முன்னர்,
சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்;
செஞ் சிலம்பு எறிந்து, தேவி முன்னர்,
வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி,
'அம் சில் ஓதி! அறிக' எனப் பெயர்ந்து, 75

முதிரா முலைமுகத்து எழுந்த தீயின்
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்;
'அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கு இணர்க் கோதை தன் துயர் பொறாஅன், 80

மயங்கினன் கொல்' என மலர் அடி வருடி,
தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்,
கலக்கம் கொள்ளாள், கடுந் துயர் பொறாஅள்,
'மன்னவன் செல்வுழிச் செல்க யான் என
தன் உயிர்கொண்டு அவன் உயிர் தேடினள்போல், 85

பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்;
'கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்று' எனக் காட்டி, இறைக்கு உரைப்பனள்போல்,
தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள்,
நின் நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை' என்று, 90

ஒழிவு இன்றி உரைத்து, 'ஈண்டு ஊழி ஊழி
வழிவழிச் சிறக்க, நின் வலம் படு கொற்றம்' என-
தென்னர் கோமான் தீத் திறம் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்
'எம்மோரன்ன வேந்தர்க்கு' உற்ற 95

செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன்,
'உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு' என,
வல் வினை வளைத்த கோலை மன்னவன்
செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது
மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்; 100

பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்;
குடி புர உண்டும் கொடுங்கோல் அஞ்சி,
மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது, தொழுதகவு இல்' என,
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த 105

நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து-'ஆங்கு,
உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும்,
செயிருடன் வந்த இச் சேயிழை-தன்னினும்,
நல்-நுதல்! வியக்கும் நலத்தோர் யார்?' என,
மன்னவன் உரைப்ப-மா பெருந்தேவி, 110

'காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெரும் திரு உறுக, வானகத்து;
அத்திறம் நிற்க, நம் அகல் நாடு அடைந்த இப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்' என-
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி, 115

நூல் அறி புலவரை நோக்க, ஆங்கு அவர்,
'ஒற்கா மரபின் பொதியில் அன்றியும்,
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்துக்
கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும்;
கங்கைப் பேர் யாற்றினும், காவிரிப் புனலினும், 120

தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து' என-
'பொதியில் குன்றத்துக் கல் கால்கொண்டு,
முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல்,
மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு,
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று; 125

புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை,
முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன்
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக்
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின், 130

வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்,
முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்,
தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை 135

நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும்,
நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை
மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு' என, 140

'குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும்,
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும்
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும்,
பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்,
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும், 145

வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன்,
புட்கைச் சேனை பொலிய, சூட்டி;
பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என்,
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும்' என-
'பல் யாண்டு வாழ்க, நின் கொற்றம்,ஈங்கு!' என, 150

வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும்:
'நும் போல் வேந்தர் நும்மொடு இகலி,
கொங்கர் செங் களத்துக் கொடு வரிக் கயல் கொடி
பகைபுறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கு அவை
திகைமுக வேழத்தின் செவிஅகம் புக்கன; 155

கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல் வேல் கட்டியர்,
வட ஆரியரொடு, வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேட்டம் என் கண்- புலம் பிரியாது;
கங்கைப் பேர் யாற்றுக் கடும் புனல் நீத்தம், 160

எம் கோமகளை ஆட்டிய அந் நாள்,
ஆரிய மன்னர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செரு வெங் கோலம்
கண் விழித்துக் கண்டது, கடுங் கண் கூற்றம்
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய 165

இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுவதும் இல்லை;
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது
கடவுள் எழுத ஓர் கற்கே; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் 170

தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி,
மண் தலை ஏற்ற வரைக, ஈங்கு, என-
'நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா;
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே 175

தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறை பறை' என்றே அழும்பில் வேள் உரைப்ப-
நிறை- அரும் தானை வேந்தனும் நேர்ந்து,
கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மா நகர் புக்கபின்- 180

'வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை!
ஊழிதொறு ஊழி உலகம் காக்க' என,
'வில் தலைக் கொண்ட வியன் பேர் இமயத்து, ஓர்
கல் கொண்டு பெயரும் எம் காவலன்; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம் 185

இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின்,
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும்,
விடர்ச் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும்,
கேட்டு வாழுமின்; கேளீர் ஆயின்,
தோள்- துணை துறக்கும் துறவொடு வாழுமின்; 190

தாழ் கழல் மன்னன்- தன் திருமேனி,
வாழ்க, சேனாமுகம்!' என வாழ்த்தி,
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி,
அறை பறை எழுந்ததால், அணி நகர் மருங்கு- என்.

26. கால்கோள் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அறை பறை எழுந்தபின், அரிமான் எந்திய
உறை முதல் கட்டில் இறைமகன் ஏற;
ஆசான், பெருங்கணி,அரும் திறல் அமைச்சர்,
தானைத் தலைவர்-தம்மொடு குழீஇ,
'மன்னர்- மன்னன் வாழ்க!' என்று ஏத்தி, 5

முன்னிய திசையின் முறை மொழி கேட்ப-
வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம்
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும்
'இமயத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி 10

நம்பால் ஒழிகுவது ஆயின், ஆங்கு அஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்:
வட திசை மருங்கின் மன்னர்- தம் முடித் தலைக்
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது,
வறிது மீளும், என் வாய் வாள், ஆகில்; 15

செறி கழல் புனைந்த செரு வெங் கோலத்துப்
பகை அரசு நடுக்காது, பயம் கெழு வைப்பின்
குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக' என-
'ஆர் புனை தெரியலும், அலர் தார் வேம்பும்,
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால், 20

அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல்! நின்
வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ?
இமயவரம்ப! நின் இகழ்ந்தோர் அல்லர்;
அமைக நின் சினம்', என, ஆசான் கூற-
ஆறு- இரு மதியினும் காருக அடிப் பயின்று, 25

ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து,
'வெந் திறல் வேந்தே, வாழ்க, நின் கொற்றம்!
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின்
திரு மலர்த் தாமரைச் சேவடி பணியும்
முழுத்தம் ஈங்கு இது; முன்னிய திசைமேல் 30

எழுச்சிப்பாலை ஆக' என்று ஏத்த-
மீளா வென்றி வேந்தன் கேட்டு,
'வாளும் குடையும் வட திசைப் பெயர்க்க' என-
உரவு மண் சுமந்த அரவுத் தலை பனிப்ப,
பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப; 35

இரவு இடங்கெடுத்த நிரை மணி விளக்கின்
விரவுக் கொடி அடுக்கத்து நிரயத் தானையொடு
ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும்,
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய
கரும வினைஞரும், கணக்கியல் வினைஞரும், 40

தரும வினைஞரும், தந்திர வினைஞரும்;
'மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க!' என,
பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின்
மறம் மிகு வாளும், மாலை வெண்குடையும்,
புறநிலைக் கோட்டப் புரிசையில் புகுத்தி; 45

புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்
அரைசு விளங்கு அவையம் முறையிற் புகுதர-
அரும் படைத் தானை அமர் வேட்டுக் கலித்த
பெரும் படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து-
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி 50

வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து,
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும்
காலை- முரசம் கடைமுகத்து எழுதலும்,
நிலவுக் கதிர் முடித்த நீள் இருஞ் சென்னி,
உலகு பொதி உருவத்து, உயர்ந்தோன் சேவடி 55

மறம் சேர் வஞ்சி மாலையொடு புனைந்து,
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி, வலம் கொண்டு,
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை
நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த,
கடக் களி யானைப் பிடர்த்தலை ஏறினன்- 60

'குடக்கோ குட்டுவன் கொற்றம் கொள்க' என,
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கோண்டு, சிலர் நின்று ஏத்த,
தெண்- நீர் கரந்த செஞ் சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின், 65

ஆங்கு- அது வாங்கி, அணி மணிப் புயத்துத்
தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வுழி-
நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும்
கூடையின் பொலிந்து, 'கொற்ற வேந்தே!
வாகை, தும்பை, மணித் தோட்டுப் போந்தையோடு 70

ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க,
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து,
கண் களிகொள்ளும் காட்சியை ஆக' என-
'மாகதப் புலவரும், வைதாளி கரும்,
சூதரும், நல் வலம் தோன்ற, வாழ்த்த; 75

யானை வீரரும், இவுளித் தலைவரும்,
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த-
தானவர்- தம்மேல் தம் பதி நீங்கும்
வானவன் போல, வஞ்சி நீங்கி;
தண்டலைத் தலைவரும் தலைத் தார்ச் சேனையும் 80

வெண் தலைப் புணரியின் விளிம்பு சூழ் போத,
மலை முதுகு நெளிய, நிலை நாடு அதர்பட,
உலக மன்னவன் ஒருங்குடன் சென்று- ஆங்கு;
ஆலும் புரவி, அணித் தேர்த் தானையொடு
நீலகிரியின் நெடும் புறத்து இறுத்து ஆங்கு; 85

ஆடு இயல் யானையும், தேரும், மாவும்,
பீடு கெழு மறவரும் பிறழாக் காப்பின்
பாடி இருக்கை, பகல் வெய்யோன் தன்
இரு நிலமடந்தைக்குத் திருவடி அளித்து- ஆங்கு,
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த, 90

பெரும் பேர் அமளி ஏறிய பின்னர்-
இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப,
விசும்பு இயங்கு முனிவர், 'வியல் நிலம் ஆளும்
இந்திர திருவனைக் காண்குதும்' என்றே,
அந்தரத்து இழிந்து- ஆங்கு, அரசு விளங்கு அவையத்து, 95

மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற;
மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை-
செஞ் சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ! கேளாய்;
மலயத்து ஏகுதும்; வான் பேர் இமய 100

நிலயத்து ஏகுதல் நின் கருத்துஆகலின்,
அரு மறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்;
பெரு நில மன்ன! காத்தல் நின் கடன்' என்று,
ஆங்கு அவர் வாழ்த்திப் போந்ததன் பின்னர்-
'வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க!' என, 105

கொங்கணக் கூத்தரும் கொடுங் கருநாடரும்
தம் குலக்கு ஓதிய தகைசால் அணியினர்;
இருள் படப் பொதுளிய சுருள் இருங் குஞ்சி
மருள் படப் பரப்பிய ஒலியல் மாலையர்;
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை, 110

கருங் கயல் நெடுங் கண் காரிகையாரோடு;
'இருங் குயில் ஆல, இன வண்டு யாழ்செய,
அரும்பு அவிழ் வேனில் வந்தது; வாரார்
காதலர்' என்னும் மேதகு சிறப்பின்
மாதர்ப் பாணி வரியொடு தோன்ற- 115

'கோல் வளை மாதே! கோலம் கொள்ளாய்;
காலம் காணாய்; கடிது இடித்து உரறிக்
காரோ வந்தது! காதலர் ஏறிய
தேரோ வந்தது, செய்வினை முடித்து! என,
காஅர்க் குரவையொடு கருங் கயல் நெடுங் கண் 120

கோல் தொடி மாதரொடு குடகர் தோன்ற-
தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து,
'வாள்வினை முடித்து மற வாள் வேந்தன்
ஊழி வாழி!'என்று ஓவர் தோன்ற-
கூத்துள்படுவோன் காட்டிய முறைமையின் 125

ஏத்தினர் அறியா இருங் கலன் நல்கி
வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி-
நாடக மகளிர் ஈர்- ஐம்பத்திருவரும்,
கூடு இசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும்,
தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத் துறை 130

நண்ணிய நூற்றுவர் நகை- வேழம்பரும்,
கொடுஞ்சி நெடுந் தேர் ஐம்பதிற்று இரட்டியும்,
கடுங் களி யானை ஓர் ஐஞ்ஞூறும்,
ஐ- ஈராயிரம் கொய் உளைப் புரவியும்
எய்யா வட வளத்து இரு பதினாயிரம் 135

கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்,
சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈர்- ஐஞ்ஞூற்றுவரும்,
சேய் உயர் வில் கொடிச் செங்கோல் வேந்தே!
வாயிலோர்' என வாயில் வந்து இசைப்ப- 140

'நாடக மகளிரும், நலத்தகு மாக்களும்,
கூடு இசைக் குயிலுவக் கருவியாளரும்,
சஞ்சயன்- தன்னொடு வருக ஈங்கு' என-
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து,
சஞ்சயன் புகுந்து, தாழ்ந்து பல ஏத்தி, 145

ஆணையில் புகுந்த ஈர்- ஐம்பத்திருவரொடு
மாண் வினையாளரை வகை பெறக் காட்டி-
வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த
நூற்றுவர்- கன்னரும், கோல் தொழில் வேந்தே!
'வட திசை மருங்கின் வானவன் பெயர்வது 150

கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின்,
ஓங்கிய இமயத்துக் கல் கால்கொண்டு
வீங்கு நீர்க் கங்கை நீர்ப்படை செய்து- ஆங்கு,
யாம் தரும் ஆற்றலம்' என்றனர்' என்று,
'வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க!' என- 155

அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும்
கடல் அம் தானைக் காவலன் உரைக்கும்:
'பாலகுமரன் மக்கள், மற்று அவர்
காவா நாவின் கனகனும் விசயனும்,
விருந்தின் மன்னர்- தம்மொடும் கூடி, 160

அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்- ஆங்கு என,
கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது;
நூற்றுவர்- கன்னர்க்குச் சாற்றி, ஆங்கு,
கங்கைப் பேர் யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெரு நிரை செய்க- தாம்' என, 165

சஞ்சயன் போனபின்- கஞ்சுக மாக்கள்,
எஞ்சா நாவினர், ஈர்- ஐஞ்ஞூற்றுவர்;
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும்
தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து;
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் 170

மண் உடை முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்து- ஆங்கு,
ஆங்கு, அவர் ஏகிய பின்னர்-
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன், ஓங்கிய
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த,
பாடி இருக்கை நீங்கிப் பெயர்ந்து; 175

கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற
வங்கப் பரப்பின் வட மருங்கு எய்தி;
ஆங்கு அவர் எதிர்கொள, அந் நாடு கழிந்து- ஆங்கு,
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ,
பகைப் புலம் புக்கு, பாசறை இருந்த 180

தகைப்பு- அரும் தானை மறவோன்- தன் முன்-
உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்,
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்,
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம்,
'தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம்' என, 185

கலந்த கேண்மையில் கனக விசயர்
நிலம் திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர-
இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா
கரிமாப் பெரு நிரை கண்டு, உளம் சிறந்து
பாய்ந்த பண்பின், பல் வேல் மன்னர் 190

காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப;
வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடிப் பந்தர்,
வடித் தோல் கொடும் பறை, வால் வளை, நெடு வயிர்,
இடிக் குரல் முரசம், இழும் என் பாண்டில்,
உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து 195

மயிர்க் கண் முரசமொடு, மாதிரம் அதிர;
சிலைத் தோள் ஆடவர், செரு வேல் தடக் கையர்,
கறைத் தோல் மறவர், கடுந் தேர் ஊருநர்,
வெண் கோட்டு யானையர், விரை பரிக் குதிரையர்,
மண் கண் கெடுத்த இம் மா நிலப் பெரும் துகள், 200

களம் கொள் யானைக் கவிழ் மணி நாவும்
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும்
நடுங்கு தொழில் ஒழிந்து, ஆங்கு ஒடுங்கி, உள்செறிய;
தாரும் தாரும் தாம் இடை மயங்க;
தோளும் தலையும் துணிந்து வேறாகிய 205

சிலைத் தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து,
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம்
பறைக் கண் பேய்மகள் பாணிக்கு ஆட;
பிணம் சுமந்து ஒழுகிய நிணம்படு குருதியில்
கணம் கொள் பேய்மகள் கதுப்பு இகுத்து ஆட; 210

அடும் தேர்த் தானை ஆரிய அரசர்
கடும் படை மாக்களைக் கொன்று, களம் குவித்து;
நெடுந் தேர்க் கொடுஞ்சியும், கடுங் களிற்று எருத்தமும்,
விடும் பரிக் குதிரையின் வெரிநும், பாழ்பட;
'எருமைக் கடும் பரி ஊர்வோன் உயிர்த் தொகை, 215

ஒரு பகல் எல்லையின், உண்ணும்' என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய,
நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன்,
போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மலைய- 220

வாய் வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த
காய் வேல் தடக்கைக் கனகனும் விசயனும்,
ஐம்பத்திருவர் கடும் தேராளரொடு,
செங்குட்டுவன் - தன் சின வலைப் படுதலும்-
சடையினர், உடையினர், சாம்பல் பூச்சினர், 225

பீடிகைப் பீலிப் பெரு நோன் பாளர்,
பாடு பாணியர், பல் இயத் தோளினர்,
ஆடு கூத்தர், ஆகி; எங்கணும்,
ஏந்து வாள் ஒழிய, தாம் துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தர- 230

கச்சை யானைக் காவலர் நடுங்க,
கோட்டுமாப் பூட்டி, வாள் கோல் ஆக,
ஆள் அழி வாங்கி, அதரி திரித்த
வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி;
தொடி உடை நெடுங் கை தூங்கத் தூக்கி, 235

முடி உடைக் கருந் தலை முந்துற ஏந்தி;
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும், கடல் அகழ்
இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன்
தேர் ஊர் செருவும், பாடி; பேர் இசை
முன் தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி; 240

பின் தேர்க் குரவைப் பேய் ஆடு பறந்தலை-
முடித் தலை அடுப்பில், பிடர்த் தலைத் தாழி,
தொடித் தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு
மறப் பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட,
சிறப்பு ஊண் கடி இனம், 'செங்கோல் கொற்றத்து 245

அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க!' என-
மறக்களம் முடித்த வாய் வாள் குட்டுவன்,
'வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர்
தடவுத் தீ அவியாத் தண் பெரு வாழ்க்கை,
காற்றூ தாளரை, போற்றிக் காமின்' என, 250

வில்லவன் கோதையொடு வென்று வினை முடித்த
பல் வேல் தானைப் படை பல ஏவி,
பொன் கோட்டு இமயத்து, பொரு அறு பத்தினிக்
கல் கால் கொண்டனன், காவலன் ஆங்கு- என். 255






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247