![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரம் ... தொடர்ச்சி - 9 ... 17. ஆய்ச்சியர் குரவை (கொச்சகக்கலி) 'கயல் எழுதிய இமய நெற்றியின் அயல் எழுதிய புலியும் வில்லும் நாவல் அம் தண் பொழில் மன்னர் ஏவல் கேட்பப் பார் அரசு ஆண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் 5 காலை முரசம் கனை குரல் இயம்பும்; ஆகலின், நெய்ம் முறை நமக்கு இன்று ஆம்' என்று, ஐயை தன் மகளைக் கூஉய், கடை கயிறும் மத்தும் கொண்டு, இடை முதுமகள் வந்து தோன்றும்-மன். 10 உரைப் பாட்டு மடை குடப் பால் உறையா; குவி இமில் ஏற்றின் மடக் கண் நீர் சோரும்; வருவது ஒன்று உண்டு! 1 உறி நறு வெண்ணெய் உருகா; உருகும் மறி, தெறித்து ஆடா; வருவது ஒன்று உண்டு! 2 நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும்; மால் மணி வீழும்; வருவது ஒன்று உண்டு! 3 கருப்பம் 'குடத்துப் பால் உறையாமையும், குவி இமில் ஏற்றின் மடக் கண் நீர் சோர்தலும் உறியில் வெண்ணெய் உருகாமையும், மறி முடங்கி ஆடாமையும், மான் மணி நிலத்து அற்று வீழ்தலும், வருவது ஓர் துன்பம் உண்டு' என, மகளை நோக்கி, 'மனம் மயங்காதே! மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய கண்ணகியும்-தான் காண, ஆயர் பாடியில், எரு மன்றத்து, மாயவனுடன் தம்முன் ஆடிய வால சரிதை நாடகங்களில், வேல் நெடுங் கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் யாம்' என்றாள்- 'கறவை, கன்று, துயர் நீங்குக எனவே!' கொளு 'காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும், இவ் வேரி மலர்க் கோதையாள்; சுட்டு, 1 சுட்டு நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய, இப் பொன் தொடி மாதராள் தோள். 2 மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள், இம் முல்லை அம் பூங் குழல்-தான். 3 நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும், இப் பெண் கொடி மாதர்-தன் தோள். 4 பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இந் நன் கொடி மென்முலை-தான். 5 வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள், இக் கொன்றை அம் பூங் குழலாள். 6 தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள், இப் பூவைப் புது மலராள். 7 எடுத்துக்காட்டு ஆங்கு, தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவர் இளங் கோதையார்,- என்று, தன் மகளை நோக்கி, தொன்று படு முறையான் நிறுத்தி, இடை முதுமகள் இவர்க்குப் படைத்துக் கோள் பெயர் இடுவாள்; குடமுதல் இடமுறையா, குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என, விரி தரு பூங் குழல் வேண்டிய பெயரே. மாயவன் என்றாள், குரலை; விறல் வெள்ளை- ஆயவன் என்றாள், இளி-தன்னை; ஆய் மகள் பின்னை ஆம் என்றாள், ஓர் துத்தத்தை; மற்றையார் முன்னை ஆம் என்றாள் முறை. மாயவன் சீர் உளார், பிஞ்ஞையும் தாரமும்; வால் வெள்ளை சீரார், உழையும் விளரியும்; கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள்; வலத்து உளாள், முத்தைக்கு நல் விளரி-தான் அவருள், வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு, தண்டாக் குரவை-தான் உள்படுவாள், கொண்ட சீர் வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்காப் பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே, 'ஐ!' என்றாள், ஆயர் மகள், கூத்து உள்படுதல் அவர் தாம் செந்நிலை மண்டிலத்தான், கற்கடகக் கை கோஒத்து, அந் நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார், முன்னைக் குரல்-கொடி தன் கிளையை நோக்கி, 'பரப்பு உற்ற கொல்லைப் புனத்துக் குருந்து ஒசித்தான் பாடுதும், முல்லைத் தீம் பாணி' என்றாள். எனா அக், குரல் மந்தம் ஆக, இளி சமன் ஆக, வரன்முறையே, துத்தம் வலியா, உரன் இலா மந்தம் விளரி பிடிப்பாள், அவள் நட்பின் பின்றையைப் பாட்டு எடுப்பாள். பாட்டு கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன் இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில் கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! 1 பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன் ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில் ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! 2 கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன் எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில் முல்லை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! 3 தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை- அணி நிறம் பாடுகேம் யாம். இறும் என் சாயல் நுடங்க நுடங்கி அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம்? அறுவை ஒளித்தான் அயர, அயரும் நறு மென் சாயல் முகம் என்கோ யாம்? 1 வஞ்சம் செய்தான் தொழுனைப் புனலுள் நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம்? நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்? 2 தையல் கலையும் வளையும் இழந்தே கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம்? கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி, மையல் உழந்தான் வடிவு என்கோ யாம்? 3 ஒன்றன் பகுதி கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான், மதி புரையும் நறு மேனித் தம்முனோன் வலத்து உளாள், பொதி அவிழ் மலர்க் கூந்தல் பிஞ்ஞை: சீர் புறங்காப்பார் முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார். 1 மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள், பயில் இதழ் மலர் மேனித் தம்முனோன் இடத்து உளாள், கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னைச் சீர் புறங்காப்பார் குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் 2 ஆடுநர்ப் புகழ்தல் மாயவன் தம்முன்னினொடும், வரிவளைக் கைப் பின்னையொடும், கோவலர் - தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம்சோர, ஆய் வளைச் சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த, தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே. எல்லா நாம், புள் ஊர் கடவுளைப் போற்றுதும், போற்றுதும்- உள்வரிப் பாணி ஒன்று உற்று. உள்வரி வாழ்த்து கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம், தேவர் கோன் பூண் ஆரம், தென்னர் கோன் மார்பினவே: தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் செழுந் துவரைக் கோ குலம் மேய்த்து, குருந்து ஒசித்தான் என்பரால். 1 பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான், மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்: மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன் பொன் அம் திகிரிப் பொரு படையான் என்பரால், 2 முந்நீரினுள் புக்கு, மூவாக் கடம்பு எறிந்தான், மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன் மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன் கல் நவில் தோள் ஓச்சி, கடல் கடைந்தான் என்பரால். 3 முன்னிலைப் பரவல் வடவரையை மத்து ஆக்கி, வாசுகியை நாண் ஆக்கி, கடல் வண்ணன்! பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண் கை மலர்க் கமல உந்தியாய்! மாயமோ? மருட்கைத்தே! 1 'அறு பொருள் இவன்' என்றே, அமரர் கணம் தொழுது ஏத்த, உறு பசி ஒன்று இன்றியே, உலகு அடைய உண்டனையே உண்ட வாய் களவினால் உறி வெண்ணெய் உண்ட வாய் வண் துழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே! 2 திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்! நின் செங் கமல இரண்டு அடியால் மூ-உலகும் இருள் தீர நடந்தனையே; நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி; மடங்கலாய்! மாறு அட்டாய்! மாயமோ? மருட்கைத்தே! 3 படர்க்கைப் பரவல் மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத் தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து, சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே? திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே? 1 பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம் விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும், திருவடியும், கையும், திரு வாயும், செய்ய கரியவனை; காணாத கண் என்ன கண்ணே? கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே? 2 மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற, படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே? 'நாராயணா!' என்னா நா என்ன நாவே? 3 வாழ்த்து என்று, யாம் கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம் ஆத்தலைப் பட்ட துயர் தீர்க்க! வேத்தர் மருள, வைகல் வைகல் மாறு அட்டு, வெற்றி விளைப்பது மன்னோ-கொற்றத்து இடிப் படை வானவன் முடித்தலை உடைத்த தொடித் தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே! 18. துன்ப மாலை (கொச்சகக் கலி) ஆங்கு, ஆயர் முதுமகள், ஆடிய சாயலாள், பூவும், புகையும், புனை சாந்தும், கண்ணியும், நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த, தூவி, துறைபடியப் போயினாள், மேவிக் 5 குரவை முடிவில்-ஓர் ஊர் அரவம் கேட்டு, விரைவொடு வந்தாள் உளள். அவள்தான், சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச் சொல்லாடும் சொல்லாடுந் தான் 10 'எல்லா! ஓ!- காதலன் காண்கிலேன்; கலங்கி நோய் கைம்மிகும்; ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே; ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின், ஏதிலார் சொன்னது எவன்? வாழியோ, தோழீ! 15 நன் பகல் போதே நடுக்கு நோய் கைம்மிகும்; அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே; அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு ஆயின், மன்பதை சொன்னது எவன்? வாழியோ, தோழீ! தஞ்சமோ! தோழீ! தலைவன் வரக் காணேன்; 20 வஞ்சமோ உண்டு; மயங்கும் என் நெஞ்சு-அன்றே; வஞ்சமோ உண்டு; மயங்கும் என் நெஞ்சு ஆயின், எஞ்சலார் சொன்னது எவன்? வாழியோ, தோழீ!' சொன்னது: 'அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் 25 கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே. கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே, குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே!' எனக் கேட்டு, பொங்கி எழுந்தாள்; விழுந்தாள், பொழி கதிர்த் 30 திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டென; செங் கண் சிவப்ப அழுதாள்; தன் கேள்வனை, 'எங்கணா!' என்னா இனைந்து, ஏங்கி, மாழ்குவாள்; 'இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க, துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல், 35 மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப, அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ? நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி, துறை பல திறம் மூழ்கித் துயர் உறு மகளிரைப் போல், மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப, 40 அறன் எனும் மடவோய்! யான் அவலம் கொண்டு அழிவலோ? தம் உறு பெரும் கணவன் தழல் எரிஅகம் மூழ்க, கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரைப் போல், செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப, இம்மையும் இசை ஒரீஇ, இனைந்து, ஏங்கி, அழிவலோ?' 45 காணிகா, வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்; ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க; பாய் திரை வேலிப் படு பொருள் நீ அறிதி, 50 காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?'- 'கள்வனோ அல்லன்; கருங் கயல் கண் மாதராய்! ஒள் எரி உண்ணும், இவ் ஊர்' என்றது ஒரு குரல். |