மதுராந்தகியின் காதல் (மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் அத்தியாயம் - 10. ‘காலம் வரக் காத்திருப்பேன்!’ சோழதேவர் வேங்கி நாட்டிலிருந்து இரண்டாவதாக வந்த ஓலையைப் படித்துவிட்டு ஏதோ முணு முணுத்ததும், அருகில் அமர்ந்திருந்த இளையதேவர் வீரராசேந்திரர் எழுந்து அவரிடம் சென்று, “என்ன அண்ணா?” என்று வினவினார். “சூழ்ச்சி! குந்தளத்தானின் சூழ்ச்சி! காலையில் ஓலை கொணர்ந்தவன் அவர்களின் ஒற்றன்! பிடியுங்கள் அவனை. எங்கிருந்தாலும் உடனே பிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள். செல்லுங்கள் படைத் தலைவர்களே!” என்று குமுறினார் இராசேந்திர தேவர். அந்த ஒற்றனைச் சோழப் படைத் தலைவர்கள் அனைவருமே நேரில் பார்த்திருந்தனர். தவிர, அவன் விடை பெற்றுச் சென்று அதிகப்பொழுதும் ஆகிவிடவில்லை. எத்தனை வேகமாகச் செல்லக் கூடிய குதிரையில் போயிருந்தாலும் அரைக் காதம் அல்லது ஒரு காதத் தொலைவுக்கு அப்பால் அவன் சென்றிருக்கவே முடியாது. சோழப் படையினரிடம் குந்தளத்தாரின் குதிரையை வேகத்தில் விஞ்சிவிடும் குதிரைகள் நிறைய உண்டு. அத்தகைய குதிரைகளில் ஏறி, ஆளுக்குச் சில வீரர்களையும் உடன் அழைத்துக் கொண்டு படைத்தலைவர்கள் தலைக்கு ஒரு சாலையாக விரைந்தனர். ஆனால் பாவம், அந்த ஒற்றன் இன்னும் நகர் எல்லையைக் கடந்து அப்பால் செல்லவில்லை என்பதை அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை! தன் தந்தை இறந்துவிட்டதாகவும், நாட்டைச் சிறிய தந்தை கைப்பற்றிக் கொண்டு விட்டதாகவும் வந்த ஓலை பொய்யோலை என்ற விவரம் சற்றைக்கெல்லாம் குலோத்துங்கனுக்கும் தெரிய வந்தது. அவனும் அந்த ஒற்றனை நேரில் பார்த்திருந்தான். ஆதலால் தானும் அவனைத் தேடும் பணியில் ஈடுபடலாமென அவனும் குதிரையேறிக் கிளம்பினான். படைப் பயிற்சிப் பள்ளியைச் சார்ந்த சில வீரர்களும் அவனுடன் சென்றனர். குலோத்துங்கனும் அவனுடன் வந்த வீரர்களும் முதலில் உட்கோட்டையின் வாசல் வழியே வெளியேறி வெளிக் கோட்டையின் கிழக்கு வாசலுக்கு வந்தனர். வெளிக்கோட்டையின் கிழக்கு வாசல் காவலர்கள், அவர்கள் செல்லும் நெடுஞ்சாலை வழியில் படைத்தலைவர் அணிமுரி நாடாழ்வார் சில வீரர்களுடன் முன்னமே சென்றிருப்பதாக அறிவித்தனர். எனவே குலோத்துங்கன், தாங்கள் வேறு சாலையில் தேடிச் செல்வது நலமெனக் கருதி, தன்னுடன் வந்தவர்களை இட்டுக்கொண்டு வெளிக்கோட்டையின் கிழக்கு வாசலிலிருந்து சோழேச்சுரன் ஆலயத்துக்குச் செல்லும் சிறிய சாலையில் சென்றான். அச்சலை வழியே சென்றால் சோழேச்சுரன் ஆலயத்துக்கு அண்மையில் காவிரிக் கால்வாயைக் கடப்பதற்கு ஒரு பாலம் உள்ளது. பாலத்தின் வழியே கால்வாயின் அக்கரை சேர்ந்தால் அங்கே ஓர் ஒற்றையடிப் பாதை பொது மக்கள் உபயோகத்துக்கானதன்று, அது கால்வாய் காப்பாளர் படையின் உபயோகத்துக்கானது. காவிரி ஆறுவரைச் செல்லும் அந்த ஒற்றையடிப் பாதை, பிறகு வடக்கே செல்லும் நெடுஞ்சாலையுடன் இணைகிறது. அப்பொழுது மாலை மங்கி முன்னிரவு தொடங்கிவிட்ட போதிலும், கால்வாய்க் காப்பாளர் படையினர் தங்கள் காவல் வேலையைத் தொடங்கும் நேரமாகிவிடவில்லை. மனிதர் நடமாட்டமற்ற அந்த ஒற்றையடிப் பாதையைக் குந்தள ஒற்றன் ஏன் பின் பற்றியிருக்கக்கூடாது? கால் காதத் தொலைவை, யார் கண்ணிலும் படாமல் அவன் கவலையின்றிக் கடக்கலாமே? ஆலயத்துக்குத் தெற்கே சிறிது தொலைவில் வாகை மரங்கள் நெருங்கி வளர்ந்தும், தாழம்புதர்கள் மண்டியும் இருந்த ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, குதிரையை ஒரு மரத்தின் வேரில் கட்டிப் போட்டுவிட்டுத் தானும் அம்மரத்தடியிலே படுத்தாவாறு வானவியைச் சந்திக்கும் வழியில் சிந்தனையைச் செலுத்தினான். இராசமகேந்திரரைத் தீர்த்துக்கட்டும் நோக்கத்துடன் கல்யாணபுரத்திலிருந்து வந்தவனாதலால், அவனிடம் பல்வேறு புனைவேடங்களுக்கான உடைகளும் இதரப் பொருள்களும் இருந்தன. அவற்றின் உதவியால், தன்னை கடா£த்து முத்து வர்த்தகனாக மாற்றிக் கொண்டு மறுநாள் காலையில் முடிகொண்ட சோழன் அரண்மனைக்குச் சென்று அவளைச் சந்திக்க முயலுவதென்று அவன் முடிவுறுத்தினான். மாலையில் சோழ கேரளன் அரண்மனையில் உணவருந்திய பிறகே கிளம்பியிருந்தமையால் இரவுப் பொழுதை நிம்மதியாக இந்த மனித நடமாட்டமற்ற இடத்திலே தள்ளலாமென்று அங்கேயே உறக்கம் கொள்ள ஆரம்பித்தான். சிறிது நேரம் நன்றாகத் தூங்கவும் தூங்கினான் விக்கிரமாதித்தன். ஆனால் பிறகு, சோழேச்சுரன் ஆலயத்து இரவுப் பூசையின்போது எழுந்த கண்டாமணியின் பேரோசை அவன் உறக்கத்தைக் கலைத்து விட்டது. அதன் பின்னர் நெடும்பொழுது அவனுக்கு உறக்கம் வரவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு அவனுக்கு தாகமும் எடுத்தது. கால்வாயில் நீர் பருகச் சென்றபோது, தான் தங்கியிருந்த மரக்கூட்டத்துக்கு அப்பால் கால்வாய்க் கரையில் படிக்கட்டு ஒன்று இருப்பதையும், அதன் கடைசிப் படியில் இரண்டு இளம் பெண்கள் அமர்ந்திருப்பதையும் கண்டான். இளமை துடிக்கும் வயதல்லவா அவனுக்கு? பெண்களைக் கண்டதும் அருகில் சென்று பார்க்கவேண்டுமென்ற அவா அவனுக்கு உண்டாகியது. போனான். போய், பங்கயற்கண்ணியை முதலை வாயிலிருந்து மீட்டான். தான் காண விரும்பியவளையும் கண்டான். அவளைத் தனிமைப்படுத்தி ஆசை தீர உரையாடிக் கொண்டும் இருந்தான். ஆனால் இரண்டு கண்கள் தங்களைக் கண்காணிப்பதை அவன் உணரவில்லை. பொழுது இப்பொழுது நன்றாக இருட்டி நிலவு வீச ஆரம்பித்து விட்டது. முன்பு அவர்கள் கடந்து சென்ற பாலத்தை நெருங்கியபோது சயங்கொண்ட சோழ பிரம்மாதிராசர் என்ற படைத்தலைவரும் வேறு சில வீரர்களும் ஒற்றையடிப் பாதையில் எதிரே வந்தனர். (இவர்களுடைய குதிரைகளின் குளம்போசை கேட்டு வானவி, விக்கிரமாதித்தன், பங்கயற்கண்ணி, மதுராந்தகன் ஆகிய நால்வரும் தாழம்புதர்க்குள்ளே பதுங்கிக் கொண்டனர்.) பிரம்மாதிராசர், தாங்கள் கோட்டை அகழியிலிருந்து கால்வாய்க் கரை ஓரமாகவே வந்ததாகவும், ஆதலால் குலோத்துங்கனும் அவனது வீரரும் திரும்புகாலில் அவ்வழிச் செல்லாமல், கிழக்குக் கரையை ஒட்டிச் செல்லும் சோழேச்சுரன் ஆலயத்துக்கு வரும் சாலை வழியே போகுமாறும் கூறினார். அவ்வாறே அவர்கள் மீண்டும் பாலத்தின் வழியே திரும்பி வந்து, ஆலயத்தின் வெளிமதிலைச் சுற்றிக்கொண்டு வானவியும், பங்கயற்கண்ணியும் திரும்பிய சாலையில் புகுந்தனர். இதற்குள் ஆலயத்தில் இரவுப் பூசை முடிந்து யாவரும் திரும்பி விட்டமையால் சாலையில் அமைதி நிலவியது. அந்த அமைதியில், விக்கிரமாதித்தன் மறைந்திருந்த இடத்துக்கு நேரே அவர்கள் வந்தபோது, குதிரையின் கனைப்பு ஒலி ஒன்று கேட்டுச் சட்டென்று நின்றான் குலோத்துங்கன். அவ்வொலி அடுத்திருந்த மரக்கூட்டத்தின் இடையிலிருந்து வந்ததால் அவனுக்கு சந்தேகம் எழுந்தது. தன் வீரர்களை அங்கேயே சாலையில் நிறுத்திவிட்டு அவன் மட்டும் குதிரையிலிருந்து இறங்கி, மரக்கூட்டதினிடையே நடந்து சென்றான். அங்கே தாங்கள் தேடித்திரிந்த அந்த ஒற்றன் வேங்கி வீரன் உடைகளைக் களைந்துவிட்டு அரசகுலத்தினர் அணியும் ஆடைகளை அணிவதை அவன் கண்ணுற்றான். அப்படியே அவன் மீது பாய்ந்து கட்டிப் பிடித்துக் கொள்ளும் துடிப்புடன் ஓரடி எடுத்து வைத்தான் குலோத்துங்கன், ஆனால் இது என்ன? அவன் எங்கோ வேகமாகச் செல்கிறானே! குலோத்துங்கன் அவனைப் பின்பற்றினான். அதோ! அதோ நிற்பது யார்? வானவி அல்லவா? ஒற்றன் வாகை மரத்தின் வேரில் அமருகிறான்; அவனருகில் அவளும் சென்று அமருகிறாளே! இதில் ஏதோ பெரிய சூது இருக்கிறது என்று உடனே எச்சரிக்கையடைந்தான் குலோத்துங்கன். அவன் சட்டென்று வந்த வழியே திரும்பி, தன்னுடன் வந்த வீரர்களிடம் சென்றான். எல்லோரும் குதிரையை விட்டிறங்கி, விக்கிரமாதித்தனின் குதிரை கட்டப்பட்டிருந்த இடத்திலேயே குதிரைகளை நிறுத்திவிட்டு, வானவியும் அவனும் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகில் வந்து ஆளுக்கு ஒரு மரத்தின் பின்னால் மறைந்து கொண்டனர். விக்கிரமாதித்தனை வீழ்த்தி, அவனைக் கயிற்றால் பிணைக்கச் செய்த பிறகே குலோத்துங்கனின் கவனம் வானவியின் பால் சென்றது. ஆனால் அவள்தான் காதலன் பிடிபட்ட கணத்திலேயே காற்றாகப் பறந்துவிட்டாளே! இதற்குள் அவள் பங்கயற்கண்ணியுடனும் மதுராந்தகனுடனும் முடிகொண்ட சோழன் அரண்மனை போய்ச் சேர்ந்திருப்பாளே! ஆனால் பேதைப் பெண்! அவள் இனி எதையும் மூடி மறைக்க முடியாது. தன் சூழ்ச்சிக்குச் சான்று விட்டு விட்டுத்தான் ஓடியிருந்தாள். அவள் நந்துகன் வழியே விக்கிரமாதித்தனுக்கு அனுப்பிய ஓலையை பின்னவன் அவளிடம் திருப்பித் தந்தான் அல்லவா? ஓடிய அவசரத்தில் அதைக் கீழே நழுவவிட்டு விட்டாள். அவ்வோலை குலோத்துங்கனின் கையில் அகப்பட்டு விட்டது! சோழதேவர் சொல்லொண்ணாச் சினத்துடன் தமது அந்தரங்க அறையில் குறுக்கும் நெடுக்கும் நடை போட்டுக் கொண்டிருந்தார். அவருக்குச் சிவந்த மேனி; சிவந்த முகம். ஆதலால் குரோதம் கொதிக்கும் போது, அவரது முகம் மட்டுமின்றி மேனியும் குங்குமச் சிவப்பாக மாறிவிடும். அகன்ற பெரு விழிகளோ அச்சமயம் தீயை உமிழும். அரசர் கோபமுற்றிருக்கிறார் என்றால் அரண்மனையில் அனைவருக்கும் நடுக்கந்தான். அவரது உயிருக்கு உயிரானவர்கள் கூட அச்சமயம் அவர் எதிர்ப்பட அஞ்சுவார்கள். ஆம், மன்னர் சினம் கொண்டால், முன் நிற்பவர் யாராயிருந்தாலும் சுட்டெரித்து விடுவார். அன்று அவரது அத்தகைய எரிப்புக்கு ஆளாகி நின்றார் இளையத்தேவர் வீரராசேந்திரர். சிங்கத்தின் முன் எலியைக் கொண்டு நிறுத்தினால் அது எவ்வாறு நடுங்குமோ, அவ்வாறு நடுங்கிக் கொண்டிருந்தார் அவர். “இது அவமானம்! சோழ பரம்பரைக்கே அவமானம்! சோழ நாட்டுக்கே சொல்லில் அடங்காத அவமானம்!” என்று நடந்து கொண்டே கொதித்தார் சோழதேவர். நீண்ட நேரமாகத் தீக்கங்கென வந்த சகோதரரின் சொல்லம்புகளை வாய் திறவாது அமைதியாகத் தாங்கி நின்ற இளையதேவர் இப்பொழுது மெதுவாக வாய் திறந்து, “அண்ணா!” என்றார். “ஆமாம் அண்ணா!” என்று குதித்துக்கொண்டு திரும்பினார் சோழதேவர். “இந்த அண்ணா உறவெல்லாம் அரசியலில் இல்லை. புகழ் பெற்ற இராசேந்திர சோழ மாவலி வாணராயன் அரியணையில் அமர்ந்து ஆட்சி செலுத்துவோனுக்கு உறவினரும் ஒன்றுதான். அந்த அயல்நாட்டுத் துரோகிக்கு அளிக்கப்பட்ட அதே தண்டனைதான் உன் மகளுக்கும். அவனுடன் அவளும் பாதாளச் சிறை செல்ல வேண்டியவளே. என் தம்பி மகள் என்பதற்காக நான் அவள் பால் எள்ளளவும் இரக்கம் காட்ட மாட்டேன்.” “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் அண்ணா. மகளுக்குப் பரிந்து பேசுவதாக நினையாதீர்கள். ஆனால் சற்றுமுன் அந்தத் துரோகியிடம் இம்மாதிரி ஓலை எழுதி அனுப்பிக் குந்தள இளவரசனை இங்கு வரவழைத்ததன் காரணத்தை வினவியபோது அவள் என்ன சொன்னாள், தெரியுமா?” “என்ன சொன்னாள்?” சோழதேவரின் சுருதி ஏனோ இறங்கி ஒலித்தது. “மாமன்னரின் மகள் அம்மன்னரின் அரியணையில் தன் காதலனை உட்கார்த்தி விடுவதாக ஆணையிட்டு, அதனை நிறைவேற்ற முயன்று வருகையில், நான் எங்கோ இருக்கும் வேங்கி நாட்டு அரியணையில் வேறொருவரை அமர்த்த முயன்றது எப்படித் துரோகமாகும்? என்று கேட்டாள், அண்ணா, நீங்கள் அறிவீர்களோ என்னவோ? அன்று வெற்றிப்படை வரவேற்பு விழாவின்போது...” “எல்லாம் தெரியும்!” என்று குறுக்கிட்டுக் கூறிவிட்டுச் சோழதேவர் மீண்டும் கூண்டில் அடைபட்ட விலங்கைப்போல் குறுக்கும் நெடுக்கும் நடந்தார். சிறிது நேரம் அவ்வாறு நடந்த பிறகு சட்டென்று திரும்பி வீரராசேந்திரரிடம் வந்தார். இளவலின் தோள் மீது கை வைத்து, “தம்பி! நேற்று நீங்கள் அந்தப் பொய்யோலையைப் பார்த்ததும் குந்தளத்தார் மீது மீண்டும் போர் தொடுக்க வேண்டுமென்று ஒருமுகமாகக் கூறியபோது நான் ஏன் அதற்கு இணங்கவில்லை, தெரியுமா? என் மகளின் மனத்தில் குடி கொண்டுள்ள அந்த விபரீத ஆசை அழிவதற்குத்தான். குலோத்துங்கன் வேங்கிக்கு அரசன் ஆனால்தானே அவள் அவனை இந்நாட்டின் அரையணைக்காகப் போர் தொடுக்கத் தூண்ட முடியும்? வேங்கி நாடு இனி விசயாதித்தனுக்குத்தான் என்று நான் அன்றே தீர்மானித்து விட்டேன்!” என்றார். “ஆனால் அண்ணா, அவனை வேங்கி அரியணையைக் கைப்பற்றிக்கொள்ள விட்டால் நம் நாட்டின் வடவெல்லைப் பாதுகாப்புக் கேந்திரத்தை நாம் இழந்து விடுவோமே! பல காலமாகக் குந்தளத்தாரின் கைப்பாவையாக இருந்துவரும் அவன்...” “நமது கைப்பாவை ஆவான். ஆக்கமுடியாதென்று நினையாதே. அவன் குறிக்கோள் வேங்கி அரியணை. அதை யார் கிடைக்கச் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவன் அடிமை. நாம் அதை அளிக்க முந்திக்கொண்டு விட்டால்...?” “உண்மைதான் தம்பி. ஆனால் நான் நேற்று நமது மந்திராலோசனை அவையில் அறிவித்தது நினைவில்லையா? குலோத்துங்கன் இந் நாட்டைவிட்டுப்போக விரும்பவில்லை. அதோடு வேங்கிக்குத் தனது சிறிய தந்தை வேந்தனாவதிலும் அவனுக்கு இசைவே. அவன் விரும்புவதெல்லாம் இந்நாட்டில் சிறு படைப் பகுதியின் தலைமைப் பதவியும், என் மகள் மதுராந்தகியுந்தான். எனவே விரைவில் அவர்கள் திருமணத்தை நடத்தி, குலோத்துங்கனை நமது படைத்தலைவர்களில் ஒருவனாகவும் செய்துவிடப் போகிறேன்.” “அதற்கு மதுராந்தகி இசைவாளா? அவளுடைய ஆணை...?” “இசையாவிட்டால் அவள் துரோகியாவாள். அப்பொழுது அவளுக்கும் பாதாளச் சிறைதான் கிடைக்கும். ஆனால் இப்பொழுது இல்லை. தீ என்றதும் வாய் வெந்துவிடாது. பகைநாட்டு இளவரசனே ஆயினும் விக்கிரமாதித்தனைத்தான் மணந்து கொள்வேன் என்று உன் மகள் கூறியிருந்தால், அவள் விருப்பத்துக்கு நாம் குறுக்கே நின்றிருக்கப் போவதில்லை. குந்தளத்தானை மணந்து கொண்ட பிறகு அவள் இந்நாட்டுக்கு எத்தகைய துரோகம் செய்திருந்தாலும் நாம் அதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டோம். ஏனென்றால் அப்பொழுது அவள் சோழ இளவரசி அல்ல; குந்தள நாட்டு இளவரசி.” “உங்கள் முடிவில் குறுக்கிடவில்லை, அண்ணா; இருந்தாலும் எனக்கு ஓர் ஐயம். நீங்களே விசயாதித்தனுக்குத்தான் வேங்கி நாடு என்று முடிவுறுத்திவிட்ட பிறகு, என் மகள் அதனை அவனுக்குக் கிடைக்கச் செய்வதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியைத் துரோகச் செயல் என்று எவ்வாறு கூற முடியும்?” இத்தனை பொழுது சினம் அடங்கி அமைதியாக உரையாடி வந்த சோழதேவர் சீறினார். “வாதம் பேசுகிறாயா வீரராசேந்திரா? அல்லது அரசியல் அறிவுதான் மகள் பாசத்தால் மங்கிப் போய்விட்டதா உனக்கு? இன்று தன் இச்சைக்காக, ஓர் அர்த்தமற்ற ஆணைக்கு எதிர் ஆணை இட்டுவிட்ட காரணத்துக்காக ஒரு பகை நாட்டானுக்குக் காதல் ஓலை அனுப்பிக் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளத் துணிந்த ஒருத்தி நாளைக்கு இந்நட்டையும் அதே முறையில் அடைய முயலமாட்டாள் என்பது என்ன நிச்சயம்? ஏன், இப்பொழுதே அவள் நமது அரசியல் ரகசியங்கள் எத்தனையை அவனுக்கு அம்பலமாக்கியிருக்கிறாளோ, யார் அறிவார்? தவிர அவனைச் சிறையிலிட்டு அவளை வெளியே விட்டு வைத்திருந்தால், அவள் அதிக வன்மம் கொண்டு நமது அந்தரங்கங்கள் அனைத்தையும் குந்தளத்தாருக்கு எழுதி அனுப்பிவிட மாட்டாளா? அரசியல் நெடுநோக்கு வேண்டும், வீரராசேந்திரா, விதையிலிருந்து முளையை அளவிட அறிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எந்த அரசும் நிலைக்க முடியாது!” வீரராசேந்திரர் தலையைத் தாழ்த்திக் கொண்டார். சகோதரரின் நெஞ்சகத்தில் ஒரு தலைச் சார்பான நினைவில்லை; நாட்டின் நலம் ஒன்றுதான் அவர் கருத்தில் நிற்கிறது; அதற்குச் சான்று, சொந்த மகளுக்குக் கிட்ட வேண்டிய பெருவாழ்வையே அவர் நாட்டுக்குத் தியாகம் செய்ய முன் வந்திருப்பது என்ற உண்மைகளை உணர்ந்ததும் அந்த இளவல், “நாட்டின் நலமே என் நலமும் அண்ணா; உங்கள் சித்தப்படியே வானவியைப் பாதாளச் சிறையில் தள்ளுங்கள்,” என்றார். அன்றே சோழதேவர் மகள் மதுராந்தகியை அழைத்து அவளுக்கும் குலோத்துங்கனுக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறதென்றும், அதன் பிறகு குலோத்துங்கன் இந்நாட்டில் ஒரு சாதாரணப் படைத்தலைவனாக இருப்பானென்றும் அறிவித்தார். மதுராந்தகி இதைக் கேட்டதும் சற்றே திடுக்கிட்டாள்; எனினும் அதற்கு இசைவு அளிக்காவிடில் வானவிக்குக் கிட்டிய பாதாளச் சிறையே தனக்கும் கிட்டும் என்பதை உணர்ந்து, “சரி அப்பா; அவ்வாறே செய்யுங்கள்,” என்றாள். ஆனால் அதன் பிறகு குலோத்துங்கன் அவளைச் சந்தித்து, “அன்று உன் காதலும் ஆணையும் பிரிக்க முடியாதவாறு பிணைந்திருப்பதாகக் கூறினாயே மதுரா! இப்பொழுது என்ன ஆயிற்று?” என்று வினவியபோது, அவள் என்ன சொன்னாள், தெரியுமா? “ஒன்றும் ஆகவில்லை. அவை இன்னும் பிரிக்க முடியாதவாறு பிணைந்தே இருக்கின்றன. உங்களை மணந்து இந்தச் சோழ அரியணையில் அமருவதாகத்தான் நான் ஆணையிட்டிருக்கிறேன். இப்பொழுது உங்களை மணக்கப் போகிறேன். சோழ அரியணையில் உங்களுடன் அமரக் காலம் வரும்; அதுவரையில் காத்திருப்பேன்!” என்றாள். முதல் பாகம் - முற்றும் மதுராந்தகியின் காதல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
2-11
2-12
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
|