மதுராந்தகியின் காதல் (மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) மூன்றாம் பாகம் அத்தியாயம் - 7. அதிராசேந்திரன் சோழ நாட்டின் சரித்திரத்திலே அந்த ஆண்டு மிகவும் குழப்பமான ஆண்டு. அரச மாளிகையில் வதிந்தவர்கள் முதல் சாதாரணக் குடிமக்கள் வரையில் அப்போது மிகவும் மனக் குழப்பமான நிலையில் இருந்தனர். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ? அது நமக்கு இயைந்ததாக அமையுமா, அல்லது எதிராக அமையுமா என்பதை எல்லைக்கட்டிச் சொல்ல முடியாத நிலையில் ஒவ்வொருவரும் இருந்தனர். முன்னவர்கள் விக்கிரமாதித்தனுக்கு ஓலை அனுப்பிவிட்டு, அவன் வருகையை எதிர்பார்த்து மதுராந்தகனின் முடிசூட்டு விழாவைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தனர். முடிகொண்ட சோழன் மாளிகை வாசிகளும், அரசியல் அதிகாரிகளும், குடிமக்களும் ஸ்ரீவிசய நாட்டிலிருந்த குலோத்துங்கனுக்கு ஓலை அனுப்பிவிட்டு அவனுடைய முடிசூட்டுதலுக்கு அவன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். ஒவ்வொருவரும் அடுத்து என்ன நிகழும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல இயலாதவர்களாக இருந்தனர். சோழகேரளன் அரண்மனைவாசிகளான அருமொழி நங்கைக்கும் மதுராந்தகனுக்கும், மக்கள் மறுபடியும் வீறுகொண்டு எழுமுன், விக்கிரமாதித்தன் போதிய படைப்பலத்துடன் வந்து முடிசூட்டு விழாவை நடத்தி வைக்க வேண்டுமே என்ற கவலை பெரிதாக இருந்தது. அதுபோலவே பின்னவர்கட்கு, எங்கோ நெடுந்தொலைவில் கடல் கடந்த நாடான மாபப்பாளத்தில் இருக்கும் குலோத்துங்கன், அரசியும் இளவரசன் மதுராந்தகனும் மீண்டும் முடிசூட்டு விழா முயற்சியில் ஈடுபடுமுன் வந்துசேர வேண்டுமே எனற மனப்பயம் உள்ளூர உதைத்துக்கொன்டிருந்தது. இப்படி இரு தரப்பாரும் தங்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள எங்கோ இருக்கும் இருவரை எதிர்பார்த்து, அவர்கள் வந்து சேருமுன் என்ன நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த நிலையிலேயே, இரண்டு திங்கள் ஓடிவிட்டன. அதன் பிறகு முதன் முதலாக அயல்நாட்டிலிருந்து செய்தி பெற்றவர்கள் மதுராந்தகியின் கட்சியைச் சார்ந்தவர்கள்தாம். ஆம், மாபப்பாள நாட்டுக்குச் சென்றிருந்த தூதன் அங்கே குலோத்துங்கனோடு தங்கியிருந்த படைகளோடு கங்கைகொண்ட சோழபுரத்துக்குத் திரும்பி வந்தான். புலிக்கொடி தாங்கிய படை வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் நகரத்து மக்களும், அரசியல் அதிகாரிகளும், முடிகொண்ட சோழன் அரண்மனை வாசிகளும் குலோத்துங்கன்தான் வருகிறான் என்றும், இனி அவனை அரியணையில் அமர்த்திச் சோழநாட்டின் வீர பாரம்பரியத்தை நிலைநிறுத்திக் கொள்வது அத்தனை கஷ்ட்டமில்லையெனவும் மகிழ்ந்தனர். அதேபோது, அருமொழி நங்கையும் மதுராந்தகனும் “ஐயோ! இந்தச் சிக்கலான போதில் குலோத்துங்கன் வந்து விட்டானே? இனி வெறி கொண்டிருக்கும் மக்கள் நம்மை நாட்டைவிட்டே துரத்திவிட்டு அவனை வலுக்கட்டாயமாக அரியணையில் அமரச் செய்துவிடுவார்களே?” என்று உள்ளம் நடுங்கினர். பாவம், அவ்விரு கட்சியினருக்கும், ‘வரும் படையில் குலோத்துங்கன் இல்லை, இனி எந்நாளும் அவன் இச்சோழ மண்ணில் அடியெடுத்து வைக்க மாட்டான்’ என்பது எங்ஙனம் தெரியும்? இருந்தாலும் ஒருவருக்காவது அவளுடைய முகத்தை ஏறிட்டு நோக்கவோ, அல்லது அவள் முன் தங்கள் மேல் நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்கவோ துணிவு வரவில்லை. அது வெளியிட முடியாமல் குமுறிக்கொண்டிருக்கும் அவளுடைய துயரைக் கிளறிவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். இவ்வாறு சிறிது பொழுது அமைதியாகக் கழிந்தது. பின்னர் மதுராந்தகியே பேசத் துவங்கினாள்: “குழந்தையின் முன் தின்பண்டத்தைக் காட்டி, அது அதைத் தருமாறு கைநீட்டும்போது தன் வாயில் போட்டுக்கொண்டு விடுவது போல், உங்களுக்கெல்லாம் ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டேன், பெரியோர்களே! அதற்காக என்னைப் பொறுத்தருள்க. இப்போது நீங்கள் மேலே செய்ய வேண்டியதைப்பற்றி ஆலோசிக்கக் கூடியிருப்பதாக அறிந்தேன். இம்மாதிரி நாட்டுப்பற்றுக் கொண்டவர்கள் அடங்கிய கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு இனித்தகுதியில்லை என்றாலும், மேல் நடவடிக்கைகளைப் பற்றி என் உள்ளத்தில் தோன்றிய ஒரு கருத்தைத் தெரிவித்துவிட்டுப் போகலாமென்று வந்தேன். நீங்கள் அனுமதி வழங்கினால் அதைக் கூறுகிறேன்.” இவ்வாறு அவள் பேசியபோது அவளுடைய குரலில்கூடச் சிறிதளவும் துயரத்தின் சின்னம் இல்லாதது கூடியிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. அவள் ஏதோ அரியதொரு கருத்துடன், தங்கள் விருப்பம் நிறைவேறுவதற்கான எளிய வழி ஒன்றுடன் வந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைத்திருந்தனர். எனவே தலைமை அமைச்சர் தனபராக்கிரம வேளாண் எழுந்து, “சொல்லுங்கள் இளவரசி. நாட்டின் மீது எங்களைவிட அதிகமான பற்றுக்கொண்ட உங்கள் சொற்களுக்கு எந்நிலையிலும் நாங்கள் உரிய மதிப்பளித்து நடப்போம்,” என்றார். மதுராந்தகி முறுவலித்தாள்: “இந்நாடு பிறநாட்டான் கைக்குப் போகக்கூடாது என்ற எண்ணம் உங்களுக்கு இன்னும் இருக்கிறதா?” என்று அவள் வினவினாள். “இது என்ன கேள்வி குழந்தாய்? அதற்காகத்தானே நாங்கள் மீண்டும் இப்போது இங்கே கூடியிருக்கிறோம்?” என்றார் அரசவைப் புலவர் வேணகோ வாணவராயர். மதுராந்தகியின் இதழ்க் கடையில் மறுபடியும் ஒரு முறுவல் நெளிந்தது. “அவ்வாறாயின், பெரியோர்களே, என் கருத்து இதுதான்; இனி மதுராந்தகனே இந்நாட்டை ஆளட்டும்.” “தேவி!” “இளவரசி!” “குழந்தாய்!” “வேங்கிப் பிராட்டி!” இவ்வாறு கூட்டத்தின் பல மூலைகளிலிருந்து பலவித அதிர்ச்சிக் குரல்கள் ஒரே சமத்தில் எழுந்தன. மதுராந்தகி அவர்களை அமைதியாக இருக்குமாறு கை காட்டினாள். பிறகு சொன்னாள்: “‘சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும்,’ என்ற நரியின் நிலையில் நான் இப்படிக் கூறவில்லை, பெரியோர்களே! உண்மையான அக்கறையோடுதான் சொன்னேன். சற்றே சிந்தித்துப் பாருங்கள். இப்போது நீங்கள் மதுராந்தகன் முடிசூடிக்கொள்வதைத் தடை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதன் பிறகு இந்நாட்டை யார் தகுதியுடன் ஆளப்போகிறார்கள்? அரசுரிமையற்ற, ஆனால் அரசகுலத்தில் பிறந்த முடிகொண்ட சோழன் போன்ற யாரையாவது அரியணையில் அமர்த்தி விடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பிறகு என்ன நடக்கும் தெரியுமா? மதுராந்தகன் குந்தள விக்கிரமாதித்தனிடம் போய் முறையிட்டுக் கொள்வான். அல்லது அவன் முறையிடு முன்பே விக்கிரமாதித்தன் இந்நாட்டை அபகரித்துக்கொள்ள இதுதான் தருணம் என்று படையெடுத்து வருவான். அரண்மனைக்குள்ளேயே இரண்டு கட்சிகள் இருப்பதால் நமது படைப்பலம், நமது குறைபாடுகள் எல்லாம் அவனுக்கு மிக எளிதாக எட்டிவிடும். என்னதான் நீங்கள் வீரத்தில் குன்றியவர்களாக இல்லாத போதிலும் நமது குறைபாடுகளை உணர்ந்த அவன் நம்மை எளிதில் தோற்கடித்துவிடுவான். நேர் மாறாக, நான் சொல்லுகிறபடி மதுராந்தகனையே அரசாள விட்டீர்களானால், விக்கிரமாதித்தன் என்னதான் இந்நாட்டை வஞ்சகமாகக் கைப்பற்றிவிட முயன்றாலும், ஆளும் மன்னனின் பக்கபலம் நம் பங்கிலேயே இருக்கும். நமது படைநிலை, அதிலே உள்ள நெளிவு-சுளிவுகள் போன்ற, போரின் வெற்றிக்கு இன்றி அமையாத இரகசியங்கள் அவன் வரையில் எட்டாமல் நாம் பார்த்துக் கொள்ளலாம். அவையின்றி, அவன் போருக்கு வந்தால், உங்கள் வீரம் அவனைக் கணத்தில் வீழ்த்தி விரட்டிவிடும். நான் கூறியதன் பொருள் இப்போது உங்களுக்கு விளங்கிற்றா?” “அது விளங்கிற்று, இளவரசி. இருந்தாலும் கோழையிலும் கோழையான மதுராந்தகனிடம் நாட்டை ஒப்படைப்பது, கனிந்தெரியும் கட்டையால் தலையை சொறிந்து கொள்வதுபோல் ஆகாதா?” என்று மூவேந்த வேளார் என்ற அரசியல் அதிகாரி கேட்டார். மதுராந்தகி தந்த இந்த நீண்ட விளக்கம், அவளுடைய உருக்கமான வேண்டுகோள், அதிலே பொதிந்திருந்த மாசற்ற நாட்டுப்பற்று, எமனின் பின் சென்று வாதாடிக் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியைப் போல் கடல் கடந்து சென்று கணவனை மீட்டுவர அவள் கொண்டிருந்த துணிச்சல், அதிலிருந்த தீவிரம், அவளுடைய திறமையில் தங்களுக்கு இருந்த நம்பிக்கை-இவையெல்லம் சேர்ந்து, அன்று அங்கு கூடியிருந்தோரை அவளுடைய கோரிக்கைக்கு இணங்க வைத்தன. சொன்னபடி மறுநாள் பொழுது புலருமுன்னரே தன் மைந்தர்களுடன் அவள் ஸ்ரீவிசய நாட்டுப் பயணத்தை மேற்கொண்டு, மரக்கலம் ஏறும் பொருட்டு, பல்லக்கில் அருகிலிருந்த கடற்கரை நகரை நோக்கிச் சென்றாள். மதுராந்தகி மாபப்பாளத்துக்குச் சென்ற இரண்டொரு நாட்களுக்கெல்லாம் கல்யாணபுரத்திலிருந்து குந்தள விக்கிரமாதித்தன் பெரும் படை ஒன்றுடன் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்து சேர்ந்தான். எவ்வித இடையூறும் இன்றி மதுராந்தகன் *அதிராசேந்திரன் என்ற அபிடேகப் பெயருடன் சோழநாட்டின் மகிபனாக முடிசூட்டப்பட்டான். வாய்ப்புக்கள் எல்லாம் தங்களுக்கு ஏற்றவாறு அமைந்து விட்டதாகவும், இனி அதிராசேந்திரனும் அவனுடைய பரம்பரையும் சோழ நாட்டின் அரசுரிமை பெற்றவர்கள் ஆகிவிடுவார்கள் என்றும் பெரிய பிராட்டி அருமொழிநங்கையும், அவளுடைய மருமகன் குந்தள விக்கிரமாதித்தனும் பெருமையும், மன அமைதியும் அடைந்தனர். அந்த அமைதியுடன் விக்கிரமாதித்தன் குந்தள நாட்டுக்குப் புறப்பட்டான். ஆனால் இவர்களது பெருமை, நிறைவு எல்லாவற்றுக்கும் எதிராக இருந்ததே விதி! (*வீரராசேந்திரரின் மக்களில் ஒருவன் அதிராசேந்திரன் என்ற அபிடேகப் பெயருடன் சோழ நாட்டின் மன்னன் ஆனதாகச் சரித்திர ஏடுகள் கூறுகின்றன. அந்த அதிராசேந்திரன் மதுராந்தகனே என்று நான் இக்கதையின் பொருட்டு எடுத்துக்கொண்டுள்ளேன்.) மணிமுடி தரித்துச் சில நாட்கள் ஆகுமுன்னரே, இதுவரை புரிந்து வந்த திருவிளையாடல்கள் காரணமாக அதிராசேந்திரன் கொடிய சரும நோயால் அவதிப்படலானான். எத்தனையோ மருத்துவங்கள் செய்தும் அவன் நோய் நீங்கப் பெறவில்லை. மாறாக, படிப்படியாக அதிகரித்து, அவனை அரசியல் அலுவல்கள் எதிலும் ஈடுபட முடியாதவனாய்ப் படுக்கையில் கிடத்திவிட்டன. பின்னும் சில திங்கள்கள் வரையில் நோயுடன் போராடிவிட்டு அவனது உயிர் உடற்கூண்டிடம் விடை பெற்றுக்கொண்டது. மீண்டும் ஒரு தடவை சோழப் பேரரசு தலைவனை இழந்து தத்தளித்தது. மனிதர்கள் திட்டமிடுகிறார்கள்; பல இன்னல்களைத் தாங்கி, பல முயற்சிகள் செய்து அவற்றை நிறைவேற்றுகிறார்கள். ஆனால் நிறைவேற்றிக் கொண்ட திட்டத்தை, இருந்து அநுபவிக்கச் செய்வது இறைவன் கையில் அல்லவா இருக்கிறது! மதுராந்தகியின் காதல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
2-11
2-12
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
|