மதுராந்தகியின் காதல் (மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) மூன்றாம் பாகம் அத்தியாயம் - 5. நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று சோழவள நாட்டிலே அக்காலத்தில் ஒவ்வொருவர் உதிரத்திலும் நாட்டுப்பற்று நன்கு ஊறிப்போயிருந்தது. தங்கள் நலனைவிட நாட்டின் நலனே பெரிதெனக் கருதிய மக்களே அன்று நாட்டில் நிறைந்திருந்தனர். சோழப் பேரரசை நிறுவிய விசயாலயச் சோழர் காலந்தொட்டு, அவரைத் தொடர்ந்து நாட்டை ஆண்டு வந்த மன்னர்கள் எல்லோரும் தங்கள் நலத்தைவிட நாட்டின் நலத்தையும் கௌரவத்தையும் பெரிதாகக் கருதும் இயல்புடையவர்களாக இருந்து வந்ததால் மக்களின் நாட்டுப்பற்று, அதன் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் மட்டுமே காட்டப்பட்டு வந்தது. ஆனால் வீரராசேந்திரரின் மறைவுக்குப் பின்னர் மக்கள் தங்கள் நாட்டுப்பற்றை வேறுவிதமாகக் காட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது, அடுதாற்போல் தங்களை ஆளும் வேந்தர் யாராக இருக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவுறுத்த வேண்டியதாயிற்று. மன்னர் மட்டுந்தான் இவ்வாறு நாட்டின் நிலையை முன்னறிந்து இருந்தார் என்றில்லை. சோழ நாட்டின் அமைச்சர் குழாம், படைத்தலைவர்கள், அரசியல் அதிகாரிகள், ஏன், மக்கள் ஒவ்வொருவருமே, மதுராந்தகன் அரசுக்கட்டில் அமர்ந்தால் அத்தகையதொரு பயங்கர நிலை நாட்டுக்கு ஏற்படும் என்று ஊகித்துத்தான் இருந்தார்கள். இந்தச் சிக்கல் நீங்க மன்னர் தமது ஆயுட்காலத்திலே ஏதாவது வகை செய்துவிட்டுப் போகிறாரா பார்க்கலாம் என்று அவர்கள் காத்திருந்தனர். ஆனால் வீரராசேந்திரர் தமது ஏற்பாட்டை மிக இரகசியமாக மதுராந்தகிக்கு மட்டும் அறிவித்துச் சென்றமையால் அதனை ஒட்டுக் கேட்ட மதுராந்தகன் போன்ற ஒருசில அரச குடும்பத்தினரையன்றி பிறிதெவருக்கும் அது தெரியாமற் போயிற்று. எனவே அவர்கள் தங்கள் நாடு ஒரு கோழையின் கைக்குப் போகாதிருக்கத் தாங்களே நடவடிக்கை எடுக்கத் துணிந்தனர். வீரராசேந்திரர் மறைந்து பதினைந்து நாட்கள் வரையில் தலைநகரில் அரசாங்க அலுவல்கள் எல்லாமே நின்று போயிருந்தன. அரண்மனையில் நிலவிய துயரம் அதற்குள் மாலை வெயிலாக மங்கி மறைந்தது. எல்லோரும் மீண்டும் தங்கள் அன்றாட அலுவல்களில் கவனம் செலுத்தலாயினர். ஆனால் எல்லோருக்கும் முன்னால் செயல்பட்டவள் மதுராந்தகிதான். ஆம், மாமன்னர் தமது இறுதி கோரிக்கை என்ற பெயரில் ஒரு மகத்தான பொறுப்பை அவள் மீதும் அவள் கணவன் மீதும் சுமத்தைவிட்டுப் போயிருந்தாரல்லவா? நாட்டு மக்கள் நினைத்தது போலவே அவளும் நினைத்தாள். மதுராந்தகன் முடிசூட்டப்பட்டால், அவன் குந்தள விக்கிரமாதித்தனைச் சார்ந்துள்ள காரணத்தால் நாடு விரைவில் குந்தளத்தாருக்கு அடிமைப்பட்டதாகிவிடும். ஒருகால் விக்கிரமாதித்தன் தன் மைத்துனன் என்றும் பாராமல் மதுராந்தகன் அரியணையில் அமர்ந்ததுமே அவனைத் தூக்கி எறிந்துவிட்டு அங்கே தான் அமர முயற்சி செய்யக்கூடும். தன் முடிவைச் செயல்படுத்த அவள் சிறிதும் தாமதிக்கவில்லை. முக்கியமான அமைச்சர்களுக்கும், அரசியல் அதிகாரிகளுக்கும் அவள் இரகசியமாகச் செய்தி அனுப்பி, முடிகொண்ட சோழன் அரண்மனையில் தான் வசித்து வந்த பகுதிக்கு வரச்செய்தாள். மாமன்னரை மரணப் படுக்கையில் தான் சந்தித்த விவரத்தையும் அப்போது அவர் விடுத்த வேண்டுகோளையும், அதன் சூசக அறிவிப்பையும் அவர்களுக்கு விளக்கினாள். ‘மாமன்னர் சோழ அரசின் பிற்கால நலனைக் கவனத்தில் கொள்ளாது, ஒன்றுக்கும் உதவாத தமது மைந்தனையே அரசாளும் நிலையை ஏற்படுத்திவிட்டுப் போய் விட்டாரே; நாட்டு மக்கள் அனைவரும் கொதித்துக் கொண்டிருக்கிறார்களே; இதனால் என்ன என்ன குழப்பம் ஏற்படப் போகிறதோ? அதை நாம் எப்படிச் சமாளிக்கப் போகிறோமோ?’ என்றெல்லாம் கலங்கிக் கொண்டிருந்த அமைச்சர்களுக்கும் அரசியல் அதிகாரிகளுக்கும் இச்செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. எனவே அவர்கள் அனைவரும் மதுராந்தகன் முடிசூட்டிக் கொள்வதைத் தவிர்ப்பதே இந்நிலையில் உகந்த செயலாகும் என்ற மதுராந்தகியின் முடிவை அப்படியே ஏற்றுக்கொண்டனர். ஆனால் அரசாங்கத்தில் பணியாற்றும் அவர்களும், ஆளும் மன்னரைப் போல் நாட்டின் நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியார்கள் ஆவார்கள்; அந்த நடைமுறைகள் சரிவரச் செயல்பட உதவ வேண்டியவர்கள் ஆவார்கள். ஆதலால் சூழ்நிலை காரணமாக இப்போது அந்த நடைமுறைக்கு எதிராக நடைபெற வேண்டியிருந்த இந்தச் செயலை வெளிப்படையாக ஆதரிக்க இயலாத நிலையில் இருந்தார்கள். அதற்காக நாடு பகைவன் கைக்குப் போவதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? இறுதியாக, நாட்டின் நலத்துக்காகத் தொட்டிலை ஆட்டிக்கொண்டே குழந்தையைக் கிள்ளி விடும் ராஜதந்திரத்தைக் கையாளுவதென்று அவர்கள் முடிவுறுத்தினார்கள். அதாவது நாட்டு மக்களைத் தூண்டிவிட்டு மதுராந்தகன் அரியணை ஏறக்கூடாதென்று கிளர்ச்சி செய்யச் சொல்வதோடு, பரம்பரை நடைமுறையை மீறக் கூடாதென்று மக்களுக்கு அறிவுரை வழங்கி அக்கிளர்ச்சியை அடக்கிவிட முயலுவது போல் பாசாங்கு செய்வதென்று தீர்மானித்தார்கள். அதற்கிடையே, உடனடியாக தூதன் ஒருவனை இரகசியமாக ஸ்ரீவிசய ராச்சியத்துக்கு அனுப்பி, குலோத்துங்கனுக்கு நாட்டின் நிலையை விளக்கி, அவனை இங்கே வரச்செய்து, தருணம் பார்த்துச் சோழ அரியணையில் உட்கார்த்தி விடுவது என்றும் அவர்கள் திட்டமிட்டார்கள். இத்திட்டப்படி அன்றிரவே நம்பகமான சோழவீரன் ஒருவன் அமைச்சர்களும், அரசியல் அதிகாரிகளும் கையப்பமிட்ட ஓலை ஒன்றுடனும், மதுராந்தகியின் அன்பு அழைப்பைத் தாங்கிய ஓலை ஒன்றுடனும் கடாரத்துக்குப் புறப்பட்டான். அங்கே குலோத்துங்கன் மிகச் சிக்கலான சூழ்ச்சி வலை ஒன்றில் வீழ்த்தப்பட்டிருக்கிறான் என்பதை இவர்கள் எங்கனம் அறிவார்கள்? இது இவ்வாறாக, சோழகேரளன் அரண்மனையில் மதுராந்தகனின் முடியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முறைப்படி தொடங்கின. எந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் அது நடைபெறாதிருக்க வழிகளை வகுத்திருந்தார்களோ, அவர்களே முன்னின்று அந்த ஏற்பாடுகளைத் துவக்கி வைத்தனர். அரசாங்கப் புரோகிதர் வந்து முடிசூட்டு விழாவுக்கான நன்னாளும், நல்ல பொழுதும் கணித்தார். அச்செய்தி நாடெங்கும் பறையறிவிக்கப்பட்டது. குறுநில மன்னர்களுக்கெல்லாம் ஓலைகள் அனுப்பப்பட்டன. நகரலங்காரமும், விருந்தினர் உபசரிப்பு, நாட்டு மக்களுக்கு அவரவர்கள் செய்த நற்செயல்களையொட்டிப் பரிசில்கள் வழங்குவது போன்ற இவ்விழாவை ஒட்டிய நிகழ்ச்சிகளெல்லாம் பட்டத்தரசி அருமொழி நங்கையைக் கலந்தாலோசித்து முடிவுறுத்தப்பட்டன. ஒவ்வொரு பொறுப்பும் ஒவ்வோர் அரசியல் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கண் துடைப்பு நிகழ்ச்சிகளில் உள்ளூரக் கேலி நகைப்புடன் கலந்து கொண்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் அடுத்த எதிர் நடவடிக்கையை ஆவலுடன் எதிர் பார்த்துத்தான் இருந்தனர் என்று சொல்லவும் வேண்டுமா? அவர்கள் எதிர்பார்த்தபடியே அதுவும் நடந்தது. முடிசூட்டு விழா பற்றிப் பறையறிவிக்கப்பட்ட மறுநாள் சோழகேரளன் அரண்மனை முன் கங்கைகொண்ட சோழபுரத்து மக்களில் பெரும்பாலோர் கொண்ட பெருந்திரள் ஒன்று பலவித கோஷச்சொற்களைப் பெருங்குரலில் கூவிக்கொண்டே வந்து நின்றது. “திறமையற்றவர்களுக்கு இந்நாட்டின் அரசுரிமை இல்லை! பாதாளச் சிறைவாசிக்குப் பட்டத்துரிமையா? வீரமற்ற கோழையா வீரராசேந்திரரைப் பின்பற்றுவது? பகைநாட்டானைச் சரணடைந்தவன் எங்கள் பகைவன்; அவனை அரியணை ஏற விடோம்!” என்ற கூக்குரல்கள் வானைப் பிளந்தன. இத்தனை மக்கள் திரண்டு வந்து நிற்பதையும், அவர்களது முகத்தில் கொதித்த சினத்தையும் வெறுப்பையும், அரண்மனை உப்பரிகையிலிருந்து பார்த்த மதுராந்தகன் கதிகலங்கிப் போனான். செருக்கோடு வந்த அவன் சிறு பூனையாகக் குறுகி அரண்மனைக்குள்ளே திரும்பினான். நேரே தன் அன்னையின் அந்தப்புரத்துக்குச் சென்று “ஐயோ அம்மா! மக்கள் கலகம் செய்கிறார்கள்; நான் அரியணை ஏறக்கூடாதாம்!” என்று முறையிட்டான். சேடியர் சென்று, தங்கள் தங்கள் அலுவலகங்களில் அமைதியாகப் பணியில் ஈடுபட்டிருந்த அரசாங்கத் தலைவர்களை அழைத்து வந்ததும், அவள் பெருஞ்சினத்துடன் குழப்பம் செய்யும் மக்களை அமைதிப்படுத்தி வீடுதிரும்பச் செய்யுமாறு பணித்தாள். அரசியல் அரங்கத்தில் தங்கள் நாடகத்தின் முற்பகுதியை அவர்கள் செவ்வனே நிறைவேற்றி விட்டுத்திரும்பி வந்து, “சோழப் பிராட்டியாரே! அரசே பரம்பரையின் நடைமுறைகளில் குறுக்கிட நாட்டு மக்களுக்கு உரிமை இல்லை என்று நாங்கள் அவர்களுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். அவர்கள் அமைதிகொள்ள மறுக்கிறார்கள். அவர்களது விருப்பத்துக்கு மாறாக இளையதேவரை அரசுக்கட்டில் அமர்த்த முயன்றால் அது நடைபெறாதவாறு பெரிய உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்துவதாகப் பயமுறுத்துகிறார்கள். எங்களைக் கேட்டால் முடிசூட்டுவிழாவை இன்னும் சிலகாலம் தள்ளிப்போட்டு மக்களின் கொதிப்பு ஓரளவு அடங்கிய பிறகு செய்வதே நல்லது!” என்று உரைத்தார்கள். இக்காலத்து அரசாங்கங்களைப்போல் அன்றைய நாடுகள் நிரந்தரமாகப் படை ஒன்றைக் கூலிக்கு அமர்த்திக் கொண்டிருக்கவில்லை. அரண்மனைக் காவல், நகரக் காவல் போன்ற பணிகளுக்கு மட்டுமே அன்று வீரர்கள் நிரந்தர மானியம் அளிக்கப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். போர் மூளும் காலத்தில்தான் வீட்டுக்கு ஓரிரு ஆண்கள் வீதம் பெரும்படை திரட்டப்படும் அப்படையினர் ஊதியம் பெறக்கூடமாட்டார்கள். அதை நாட்டுக்குத் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையாகத்தான் அவர்கள் கருதுவார்கள். போர் முடிந்து நாடு திரும்பியதும் அப்படை கலைக்கப்பட்டுவிடும். இந்நிலை இருந்து வந்ததால் படைப்பலங்கொண்டு கிளர்ச்சி செய்யும் மக்களை அடக்கிவிடும் வாய்ப்பு அன்றைய மன்னர்களுக்கு இல்லாமல் இருந்தது. அதுமட்டும் இருந்திருந்தால் அமைச்சர்களின் சொற்களுக்குச் செவி சாய்க்காமல் தன் மகனுக்குக் குறிப்பிட்ட நாளில் எப்படியும் முடிசூட்டியே இருப்பாள் அருமொழி நங்கை. அந்த வாய்ப்பு இல்லாதது ஒன்று; இக்கலகத்தை அடக்கவென்று ஒரு படை திரட்டச் செய்யலாம் என்றால், அதற்கு வழியில்லாதவாறு நாட்டு மக்கள் அனைவருமே இக்கிளர்ச்சியில் பங்கு கொண்டிருந்தது மற்றொன்று; இவ்விரண்டும் சேர்ந்து அருமொழிநங்கையை அமைச்சர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வைத்தன. ஆனால் இக்கிளர்ச்சி அவளை விழிப்படையச் செய்துவிட்டது. நாட்டு மக்களுக்குத் தன் மைந்தன் மீது ஓரளவு வெறுப்பு உண்டு என்பதை அவள் அறிவாள். ஆனால் அது இந்த அளவுக்கு முற்றியிருக்கும் என்று அவள் கருதவில்லை. பட்டத்துரிமை பெற்ற ஒருவனைப் பட்டம் ஏற விடமாட்டோம் என்று எதிர்க்கும் வண்ணம் அவர்கள் துணிவடைந்துவிட்டதைக் கண்கூடாகக் கண்டுவிட்டபோது, இவர்களுடைய மனப்புண் அத்தனை எளிதாக ஆறிவிடக் கூடியதல்ல என்று அவள் உணர்ந்தாள். அது ஆறட்டும்; ஆறாமற் போகட்டும்; அதைப்பற்றி அருமொழிநங்கை கவலைப்படவில்லை. ஆனால் அதற்காகத் தன் மகன் அரியணை ஏறாமல் நின்றுவிடக் கூடாதே என்று அவள் கவலையுற்றாள். அதற்கு என்ன செய்யலாமென்று தீவிரமாகச் சிந்தித்தாள். மக்களிடையே அமைதி ஏற்படும்; ஏற்படும் என்று நாட்களைத் தள்ளிக்கொண்டுபோக அவள் விரும்பவில்லை. அமைதி ஏற்படாமலே போய்விடும் என்று வைத்துக்கொண்டுதான் அவள் ஆராய்ச்சி செய்தாள். அமைதி ஏற்படாமலே போய்விடுமென்றால் மக்கள் கலகம் செய்வதை அடக்க ஒரே ஒரு வழிதான் இருந்தது. அதாவது, படைப்பலத்தால் கலகத்தை அடக்குவது. இதற்காகப் படைதிரட்ட வேண்டுமென்றால், அது சோழ நாட்டில் சாத்தியமில்லை. வேற்று நாட்டுப் படைகள் வருவதாக இருந்தால்கூட மிக இரகசியமாகத்தான் வரவேண்டும். எதிர்பாராதபடி கலகக்காரர்கள் மீது பாய்ந்து அவர்களை ஒழிக்க வேண்டும். அப்படி இரகசியமாகத் தங்கள் உதவிக்குப் படை அனுப்பக் கூடியவர்கள் யார் என்று அவள் ஆலோசித்தபோது தனது மருமகன் விக்கிரமாதித்தனின் நினைவுதான் அவளுக்கு முதலில் வந்தது. உடனேயே அவள் உட்கார்ந்து, மருமகனை விரைவில் பெரும்படை ஒன்றுடன் வந்து தனது மகனின் முடிசூட்டு விழாவை நடத்திவிட்டுச் செல்ல வேண்டுமென்று ஓர் ஓலை எழுதி அனுப்பினாள். மதுராந்தகியின் காதல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
2-11
2-12
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
|