மதுராந்தகியின் காதல் (மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) மூன்றாம் பாகம் அத்தியாயம் - 3. சூழ்ச்சி உருவாயிற்று! மதுராந்தகி தன் சிற்றப்பா வீரராசேந்திரரரை மரணப்படுக்கையில் சந்தித்துத் திரும்பிய அன்றிரவே அவர் இறந்துவிட்டார். அரசியல் கௌரவங்களோடு அவரது ஈமச்சடங்குகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. வீரராசேந்திரர் வீரம் செறிந்த மன்னராக விளங்கியது மட்டுமல்ல; நாட்டு மக்களிடம் நல்லன்பு கொண்டவராகவும் விளங்கி வந்தமையால் சோழநாடு முழுவதுமே மன்னரது மறைவையொட்டி மூன்று நாட்கள் துக்கம் கொண்டாடியது. குமறிக் கொந்தளிக்கும் கடல் சில போது எவ்வித அசைவுமின்றிப் பேரமைதியுடன் விளங்குமே, அதுபோன்றுதான் அப்போது இருந்தது சோழநாடு. வீட்டு வாயில்களை அலங்கரிக்கும் கோலங்களில்லை; வீடுகளுக்கு எந்தவிதமான அலங்காரங்களும் இல்லை. மக்களும் நல்லாடைகளை உடுத்தவில்லை. கடை-கண்ணிகள், வர்த்தக நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள் எல்லாமே அம்மூன்று நாட்களும் விடுமுறையை மேற்கொண்டன. என்ன? எல்லோருக்கும் என்றா சொல்லிவிட்டேன்? தவறு. இரண்டு பேர்களுக்கு அவ்வாறில்லை. அவர்களும் அழுதார்கள்; புலம்பினார்கள். ஆனால் அதெல்லாம் வெளிவேடம். அவர்கள் உள்ளத்தின் அந்தரங்கத்தில் மன்னரின் மறைவு மட்டற்ற மகிழ்ச்சியைத்தான் அளித்திருந்தது. அதிலும் அவர்கள் யார், தெரியுமா? குடிமக்களில்லை; வேற்றாட்களில்லை; எட்டிய உறவினர் இல்லை. மன்னருக்கு மிகக் கிட்டிய உறவினர். ஆம், ஒருத்தி மன்னரின் பட்டத்தரசி அருமொழி நங்கை; மற்றொருவன் சோழ நாட்டின் பட்டத்துரிமை பெற்ற அவருடைய மைந்தன் மதுராந்தகன்! பட்டத்தரசிக்குப் பலகாலமாகவே மன்னரிடம் அளவற்ற வெறுப்பு இருந்து வந்தது என்று கண்டோம். அது போலவே மதுராந்தகனுக்கும். எங்கே தந்தை தனக்கு அரசுரிமை கிட்டாமற் செய்துவிடுவாரோ என்ற அச்சம் இருந்து கொண்டிருந்தது. அதை அவன் அடிக்கடி தன் அன்னையிடம் கூறுவான். அவர் இதுகாறும் தனக்கு இளவரசுப் பட்டங்கூடக் கட்டாததைச் சுட்டிக் காட்டுவான். “அப்பாவின் உள்ளத்தில் வேறு ஏதோ எண்ணம் வேலை செய்து கொன்டிருக்க வேண்டும், அம்மா. இல்லாவிட்டால், தமது முன்னோர்களைப்போல், தாம் உயிரோடிருக்கையிலேயே எனக்கு இளவரசுப் பட்டம் சூட்டியிருக்க மாட்டாரா? பட்டத்தரசியின் மகனாகப் பிறந்தும், நான் நாடாளும் உரிமையின்றிப் போகவேண்டும் என்பது உன் விருப்பமா?” என்று புலம்புவான். அப்போதெல்லாம் அருமொழி நங்கை மகனுக்கு இப்படித்தான் ஆறுதல் சொல்வாள்: “மகனே! இளவரசுப் பட்டம் கட்டுவது என்பதெல்லம் வெறும் நடைமுறை நிகழ்ச்சிதான், அப்பா. இறுதியில் அரசுரிமை யாருக்குப் போகிறது என்பதுதான் முக்கியமானது. அவர் மனம் விபரீத வழியில்தான் சென்று கொண்டிருக்கிறது என்பதை நான் உணராமல் இல்லை. ஆயினும், முறைப்படி அரசுரிமை பெற்ற உனக்கு நாட்டை இல்லை என்று சொல்லிவிட அவரால் முடியாது. ஆதலால் அவர் கண்களை மூடும் வரையில் நீ பொறுமையாக இரு. பிறகு உன்னை அரசுக்கட்டில் அமர்த்துவது என் பொறுப்பு.” இந்நிலையில்தான் மன்னர் நோய்ப்படுக்கையில் விழுந்தார். மருத்துவர்கள் சிறிது சிறிதாக நம்பிக்கை இழக்கத் தொடங்கினர். ‘சரி, இனி அச்சமில்லை. நாம் நினைத்தபடி ஏறுமாறாக ஏதும் இனி நடக்காது. இளவரசுப் பட்டம் கட்டப்படாவிட்டாலும், மதுராந்தகன் சோழமாவலி வாணராயன் அரியணையில் அமருவதை இனி எவரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. இவர் சாகிறபோது சாகட்டும்’ என்று அவள், தானும் மனம் தேறி, மகனின் மனத்தையும் தேற்றிக் கொண்டிருந்தபோதுதான் அந்த எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது. ஆம், மன்னரின் மறைவுக்கு முன், மதுராந்தகிக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்ததே, அந்தச் சந்திப்புத்தான். மன்னர் நோய்ப் படுக்கையில் விழுந்திருக்கும் செய்தியே சில நாட்கள்வரை முடிகொண்ட சோழன் அரண்மனைக்குத் தெரியாமல் இருந்தது. தெரியவிடவில்லை அருமொழி நங்கை. ஏனென்றால் உடல் நோயோடு தனது பணிவிடைக்குக் கூட அரச குடும்பத்தினர் யாரும் வரவில்லையே என்ற மனநோயும் சேர்ந்து அவர் புழுங்கிப் புழுங்கிச் சாக வேண்டும் என்று அவள் விரும்பினாள். அத்தனைக்கு அவளுக்கு அவர் மீது வெஞ்சினம் ஏற்பட்டிருந்தது. ஆனால், அவருடைய நோய் முற்றத் தொடங்கியதும் அச்செய்தியை ஊர்வாய்க்கு அஞ்சி ஓரளவு வெளிப்பரவ இடமளித்தாள், அவள். ஆனால் அத்தோடு மருத்துவர்கள், அவரை யாரும் போய்ப் பார்த்தோ, அல்லது பேச்சுக் கொடுத்தோ தொல்லை கொடுக்கக்கூடாது என்று அறிவித்திருப்பதாகக் கூறி, மன்னரின் மனநோய் நீங்கிவிடாதபடியும் முன்னணை கட்டிக் கொண்டாள். நோயுற்றிருப்பவர்களுக்கு எது தேவையென்று மருத்துவர்கள் கூறுகிறார்களோ, அதைச் செய்யத் தவறுவதில்லை அல்லவா மற்றவர்கள்? பெற்ற தாயேயாயினும், மகவு நோயுற்றிருந்து மருத்துவர் அதை நெருங்க கூடாதென்று கட்டளையிட்டு விட்டால், நெருங்க மாட்டாள் அன்றோ? நோயின் கொடுமையால் வெதும்பியிருக்கும் தான் பெற்ற செல்வத்தை அணைத்து ஆறுதல் தர வேண்டுமென்று உள்ளம் துடித்தாலும், அதன் நலன் பொருட்டு தனது துடிப்பை அடக்கிக் கொள்ளும் அத்தாயின் இயல்பில்தான், முடிகொண்ட சோழன் அரண்மனையிலும், சோழ கேரளன் அரண்மனையிலும் வசித்துவந்த இதர அரசகுலப்பெண்டிர் இருந்தனர்! தவிர, பட்டத்தரசியின் கட்டளையை மீறும் அளவுக்குத் துணிவு பெற்றவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை. நாட்டைப் பற்றிய வரையில் மன்னரின் கட்டளை எப்படிச் சிறிதும் பிழையின்றி நிறைவேற்றப்பட்டு வந்ததோ, அவ்வாறே அரண்மனையைப் பொறுத்தவரையில் பட்டத்தரசியின் கட்டளைதான் அங்கு முடிவானது; அப்படியே நிறைவேற்றப்பட வேண்டியது. இந்த நடைமுறையை அருமொழி நங்கை தனக்கேற்ற வழியில் நன்கு பயன்படுத்தி வந்தாள். மன்னரைக் காண எவரையும் வரவிட வேண்டாமென்று தாங்களே கூறியிருப்பதாக வெளியாரிடம் சொல்ல வேண்டுமென்று அவள் மருத்துவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டிருந்தாள். இதர அரசகுலப் பெண்டிரைப் போலவே மதுராந்தகியும் மன்னரின் நோய் நிலை பற்றியே தனது சிற்றன்னை இவ்வாறு கட்டளையிட்டிருக்கிறாள் என்று நம்பியிருந்தாள். ஆனால், மாமன்னர் இத்தடவையும் வேங்கியை மீட்டு அதனை விசயாதித்தனுக்கே அளித்தது அவளுக்கு மெத்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்திருந்தமையால், அவர் இவ்வாறு செய்ததற்கு என்ன காரணம் என்றாவது அறிந்து வரவேண்டுமென்று அவள் நெடுநாட்களாக எண்ணியிருந்தாள். போர் மீண்டு திரும்பிய பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் சோழவேந்தர்கள் ஏறக்குறைய ஒரு திங்கள் வரையில் அரசாங்க அலுவல்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்களாதலால், வீரராசேந்திரர் நாடு திரும்பிய உடனே அவளால் இந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை. “எப்படியும் வேங்கி இத்தடவை எங்களுக்கு இல்லை என்று ஆகிவிட்டது. சிற்றப்பா அரசியல் பணிகளில் தம்மை மறந்திருக்கும் தருணத்தில் இதைப்பற்றிக் கேள்விகள் கேட்டுத் தொல்லை கொடுத்தால் அவர் சினமடையக்கூடும்; அதன் காரணமாக மீண்டும் எப்போதாவது வேங்கி பிற மன்னர்கள் வசமாகி, சோழர்களால் மீட்கப்படும்போது, அதனை என் கணவருக்கே அளித்து இத்தொல்லைகளிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணங்கூட அவருக்கு ஏற்படாமல் போய்விடக்கூடும். ஆதலால் அவர் அரசியல் பணிகள் ஏதுமின்றி ஓய்வாக இருக்கும்போதுதான் போய்ப்பார்க்க வேண்டும்; பக்குவமாகப் பேச்சுக் கொடுத்து, இப்போது அவர் வேங்கியை எங்களுக்கு அளிக்காததன் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும், முடிந்தால், அடுத்த தடவையாவது அதை எங்களுக்கு வழங்குமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்,” என்று அவள் ஒரு திங்கள் வரை காத்திருந்தாள். ஆனால் அந்த ஒரு திங்கள் முடிவதற்கு முன்னரே, மன்னர் நோய் வாய்ப்பட்டுவிட்ட செய்தியும், அவரைக்காண எவரும் அநுமதிக்கபடுவதில்லை என்ற செய்தியும் அவளுக்கு எட்டின. எனவே அவள் தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளும் காலத்தை வீரராசேந்திரரின் நோய் தீரும்வரையில் தள்ளிப்போட வேண்டியதாயிற்று. அரண்மனைப் பெண்டிர்கூட அநுமதிக்கப்படாத அளவு மன்னரின் நோய் இருந்ததென்றால் அது மிக முற்றிய நோயாகத்தான் இருக்க வேண்டும் என்று அவள் ஊகித்தாள். அதோடு மற்றப்பெண்டிரைவிட அதிகமாக, மாமன்னர் விரைவில் நோய் நீங்கப் பெற வேண்டுமென்றும் இறைவனை இடைவிடாது வேண்டிக்கொண்டாள். ஆம், மன்னர் நோய் நீங்கப் பெறாமலே இறந்துவிட்டால், அவரை அடுத்து மதுராந்தகன் அரசுக் கட்டில் அமர்ந்துவிடுவான். ஏற்கெனவே தன் மீதும் தன் கணவர் மீதும் வெஞ்சினம் கொண்டிருக்கும் அவன் அரசனாகி விட்டால் வேங்கி தங்களுக்குக் கிட்டும் வாய்ப்பே இல்லாமற் போய்விடுமல்லவா? இதைப்பற்றி அவள் சிந்தித்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராத வாய்ப்பு ஒன்று அவளைத் தேடி வந்தது. இதர அரசகுலப் பெண்டிரைப் போலன்றி, மதுராந்த¬கி அரண்மனையில் வேலை செய்யும் பணிப்பெண்களிடம் அன்போடு பழகுவாள்; அவர்கள் நலத்தையும், அவர்கள் குடும்ப நலத்தையும் அடிக்கடி வினவுவாள். அவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளை அவ்வப்போது செய்வாள். இந்த நற்பண்பைப் பெற்றிருந்தமையால் சோழகேரளன் அரண்மனையிலும், முடிகொண்ட சோழன் அரண்மனையிலும் பணிவிடை புரியும் பெண்கள் யாவரும் அவளிடம் மட்டற்ற விசுவாசம் கொண்டிருந்தனர். தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனே மதுராந்தகியை நாடி வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். அவ்வாறுதான் ஒருநாள் பேரழகி என்ற பணிப்பெண் தன் குடும்பத்துக்கு ஏற்பட்டுவிட்ட ஓர் இன்னலைக்கூறிச் சிறிது பொருளுதவி பெறுவதற்காக மதுராந்தகியிடம் வந்தாள். பேரழகி சோழகேரளன் அரண்மனையில் பணியாற்றி வந்தவள். அதிலும் கடந்த இரண்டு திங்களாக நோயுற்றிருக்கும் மன்னருக்கு இரவுப்பொழுதில் பணிவிடை செய்யும் வேலை அவளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பேரழகி கோரி வந்த பொருளை அளித்தபின், “நீ இப்போது அரண்மனையில் என்ன வேலையடி செய்து கொண்டிருக்கிறாய்?” என்று வினவினாள் மதுராந்தகி. “மாமன்னரின் இரவுப் பணிவிடைகளைச்செய்து வருகிறேன், அம்மா!” என்றாள் பேரழகி. “மன்னரின் உடல்நிலை எப்படியடி இருக்கிறது இப்போது?” “தாயே! அதைச் சொல்லவே என் நா கூசுகிறது. அரசர் பிரானின் இறுதிக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்படித்தான் மருத்துவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.” இதை அவள் அறிவித்ததும், ‘மன்னர் இறக்குமுன் அவரைச் சந்தித்து நமது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள இயலுமா என்று பார்த்துவிட வேண்டும்’ என மதுராந்தகியின் உள்ளம் துடித்தது. “மன்னரின் உயிர் பிரியுமுன் நான் அவரை ஒரு தடவை காண விரும்புகிறேனடி, பேரழகி. அதற்கு நீ ஏதாவது ஏற்பாடு செய்ய இயலுமா?” என்று அவள் அப்பணிப்பெண்ணிடம் கேட்டாள். “எனக்குப் பேருதவிகள் பல செய்துள்ள தங்களுக்காக நான் எதையும் செய்ய முடியும், அம்மா. இரவுப் பணிவிடைக்காக நான் ஒருத்தியே அமர்த்தப்பட்டிருப்பதால், பெரிய பிராட்டிக்குத் தெரியாதவாறு இரவு இரண்டாம் சாமத்துக்குப் பிறகு நீங்கள் இரகசியமாக அரண்மனைக்கு வாருங்கள்; மாமன்னரைப் பார்க்கலாம்,” என்று கூறி ஏற்பாடு செய்துவிட்டுச் சென்றாள் பேரழகி. இந்த ஏற்பாட்டின்படித்தான் மதுராந்தகி வீரராசேந்திரரைச் சந்தித்தாள். தான் சிறிதும் எதிர்பார்த்தே இராத மகிழ்ச்சி மிக்க செய்தியையும் அவர் கூறக் கேட்டாள். தன் ஆணை நிறைவேறும் காலம் மிக அண்மையில் வந்துவிட்டது என்ற வெற்றிக்களிப்புடன் புறப்பட்டுச் சென்றாள். ஆனல் தனக்குப் பின்னே இரண்டு கண்கள் தன்னைக் கவனித்துக் கொண்டிருந்ததையும், இரண்டு காதுகள் தனக்கும் மன்னருக்கும் இடையே நடந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்ததையும், பாவம், அவள் உணரவில்லை. தனது இந்த எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள, மதுராந்தகி மன்னரை இரகசியமாகக் காண வந்தாளே அன்றிரவு நேரத்தையே அவனும் தேர்ந்தெடுத்திருந்தான். இரவு இரண்டாம் சாமப் பொழுதானதும் மன்னர்பிரான் நோயுற்றுப் படுத்திருந்த அரண்மனையின் பகுதிக்கு அவன் வந்தான். தனக்கு முன்னே கறுப்பு நிற அங்கி ஒன்றால் உடலை மூடிக்கொண்டு ஓர் உருவம் சென்று கொண்டிருந்ததைக் கண்டான். ‘யார் இந்நேரத்தில் இப்படி இரகசியமாகச் செல்கிறார்கள்?’ என்பதைக் கண்டறிய வேண்டுமென்ற எண்ணம் எழவே அவன் மறைவாக அவ்வுருவத்தைப் பின்பற்றலானான். அவ்வுருவமும் மன்னர் நோயுற்றுக்கிடந்த அரண்மனைப் பகுதிக்கே சென்றதைக் கண்டு அவனுடைய திகைப்பு அதிகமாயிற்று. அவ்வுருவம் அரசர் படுத்திருந்த அறைவாயிலை அடைந்ததும் மூடிக்கொண்டிருந்த அங்கியை அகற்றியது. மதுராந்தகனின் திகைப்பு இப்போது திகிலாக மாறியது. ‘அட! மதுராந்தகி அல்லவா? இவள் எதற்கு இந்நேரத்தில் இப்படி மறைவாக இங்கே வந்திருக்கிறாள்?’ இந்த திகிலோடு, பணிப்பெண் பேரழகி அவளைச் சந்தித்து இரகசியமாக ஏதோ உரையாடிவிட்டு வேறோர் அறைக்குச் சென்று விட்டதையும் கண்டபோது மதுராந்தகனின் உள்ளத்தில் பற்பல சந்தேகங்கள் முளைத்தெழுந்தன. பேரழகி வேறு அறைக்குச் சென்று மறைந்து கொண்டது அவனுக்கு வசதியாயிற்று. அவன் அரசரின் அறைவாயிலுக்கு வந்து மறைவாக நின்று கொண்டு மதுராந்தகிக்கும் தன் தந்தைக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் முழுவதையும் செவிமடுத்தான். முதலில், வேங்கி அரியணையைக் குலோத்துங்கனுக்கு அளிக்குமாறு வேண்டிக்கொள்ளவே மதுராந்தகி வந்திருக்கிறாள் என்று அவர்கள் உரையாடலின் முற்பகுதியை கேட்டபோது அவன் நினைத்தான். தன் தந்தை அந்த வேண்டுகோளுக்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்துவிட்டு வந்திருப்பதை அறிந்தபோது, “ஓ! அப்படியா செய்தி? இவருடைய ஏற்பாடு நடைபெறாதிருக்க நான் வழி செய்து விடுகிறேன். வெங்கி நாடு அந்தப் பஞ்சைப்பயல் குலோத்துங்கனுக்குக் கிட்டு முன்னே அதனைக் கவர்ந்து கொள்ளுமாறு இன்றே மைத்துனர் விக்கிரமாதித்தனுக்கு ஓலை அனுப்பி விடுகிறேன்,” என்று அவன் உள்ளூரக் கறுவிக்கொண்டான். குலோத்துங்கனுக்கு நாடு என்று ஒன்று கிட்டிவிட்டால், பிறகு அவன், மனைவியின் ஆணையை நிறைவேற்ற இச்சோழ நாட்டின் மீதே படையெடுத்துத் தன்னை அரியணையிலிருந்து விரட்டி விடுவான் என்று அவன் தீவிரமாக எண்ணினான். ஆனால் இந்த எண்ணத்தைத் தூக்கி அடித்து விட்டது, மதுராந்தகிக்கும் வீரராசேந்திரருக்கும் இடையே நடந்த உரையாடலின் பிற்பகுதி. இந்நாடு தனக்கு கிடைப்பதைத் தவிர்க்க முடியாது என்று தன் தந்தை மதுராந்தகியிடம் கூறியதைக் கேட்ட போது அவனுக்கு முதலில் பெருத்த மகிழ்ச்சியே ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சியில் தன்னை அவர் ‘உதவாக்கரை,’ ‘திறமையற்றவன்’ என்றெல்லாம் குறைவாகக் கூறியதைக்கூட அவன் மறந்துவிட்டான். ஆனால் அதைத் தொடர்ந்து வந்தது அவனுக்கு ஒரு பேரதிர்ச்சி. “என்ன? வேங்கி மன்னனாகப்போகும் குலோத்துங்கனே, சோழநாட்டுக்கும் மன்னன் ஆனாலும் ஆகலாம்; ஆனால் ஒரு குந்தளத்தான் இந்த அரியணையில் அமர இடம் கொடுக்கலாகாதா? அப்படியானால் அப்பா மறைமுகமாக, இந்நாட்டை என்னிடமிருந்து கவர்ந்து கொள்ளுமாறு குலோத்துங்கனுக்கு போதிக்கிறாரா?” என்ற நினைவுதான் சட்டென்று மதுராந்தகனின் உள்ளத்தில் எழுந்தது. “ஏற்கெனவே இந்நாட்டை அடைவதாகச் சபதம் செய்திருக்கும் ஒருத்தியிடம், இப்படிச் சொன்னாள் அதற்கு வேறு என்ன பொருள் இருக்கிறது. சூழ்ச்சிக்காரர் இந்த அப்பா. நாட்டை எனக்கு கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு அதை என்னிடமிருந்து பறித்துக் கொள்ளுமாறு வேறொருவனை வேண்டிக்கொள்கிறார். ஐயோ! இன்று நாம் இங்கே வந்து இந்த உரையாடலைக் கேட்டிராவிட்டால் குடிகெட்டுப் போயிருக்குமே? ஆம், இவர்கள் சூழ்ச்சியை நாம் மற்றோர் சூழ்ச்சியால் வெல்ல வேண்டும். குலோத்துங்கன் இச்சோழ நாட்டுக்குத் திரும்பியே வராதபடி வழிசெய்ய வேண்டும். இப்பொழுதே இச்சூழ்ச்சியை அறிவித்து குந்தள நாட்டிலிருக்கும் மைத்துனருக்கு ஓர் ஓலை அனுப்பி, கடல் கடந்து சென்றிருக்கும் குலோத்துங்கனை அங்கேயே ஒழித்துவிட ஏதாவது ஏற்பாடு செய்துவிட வேண்டும்,” என்று முடிவுறுத்திக்கொண்டு அக்கணமே அங்கிருந்து அகன்றான் மதுராந்தகன். அகன்றது மட்டுமல்ல; உடனே தன் தாயை எழுப்பி இச்சதித் திட்டத்தைக் கற்பனை மெருகேற்றிப் பன்மடங்கு பெருக்கிக் கூறினான். தாயும் மகனும் கலந்து ஆலோசித்து, மதுராந்தகன் போட்ட திட்டப்படியே குந்தள விக்கிரமாதித்தனுக்கு அன்றிரவே ஓர் ஓலையை அனுப்பினர். மதுராந்தகியின் காதல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
2-11
2-12
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
|