மதுராந்தகியின் காதல்

(மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம்

அத்தியாயம் - 4. காதல் ஓலை

     மேற்சொன்ன நிகழ்ச்சிகள் அன்று மாலையில் நடந்தன. அதாவது, மதுராந்தகி தன் ஆணையை நிறைவேற்றுவதற்கான செயல் முறைகளில் அன்று மாலையில்தான் முதன் முதலாக ஈடுபட்டாள். ஆனால் மதுராந்தகியிலும் ஒரு படி மேலே போய் இரண்டு ஆணைகள் இட்டிருந்த வானவி ஒரு கணங்கூட தாமதிக்கவில்லை. ஆணையை இட்டுவிட்டு முடிகொண்ட சோழன் அரண்மனைக்குத் திரும்பியதும், அவள் செயலாற்றத் தொடங்கி விட்டாள். அவள் செய்த முதல் பணி, தன் இளைய சகோதரன் மதுராந்தகனை அந்தப்புரத்துக்கு அழைத்து வரச் செய்து அவனிடம் சற்றுமுன் நடந்தவை அனைத்தையும் கூறியதாகும்.

     மதுராந்தகியும் வானவியும் அன்று இட்டிருந்த ஆணைகளை நிறைவேற்றத் தனித்தனியே முயற்சிகளைத் தொடங்கிவிட்ட போதிலும், அவை நிறைவேற்றுவதில் மதுராந்தகிக்கு இருந்த சாத்தியக்கூறுகள் வானவிக்கு இருக்கவில்லை. மதுராந்தகி ஆளும் அதிபரின் புதல்வியாதலால், அரண்மனையிலும் அரசாங்கத்திலும் இதர அரசகுலப் பெண்டிருக்கு இல்லாத சில உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றிருந்தாள். வானவிக்கு அப்படி ஏதும் கிடையாது. அவள் பட்டத்து இளவரசர் மகள்கூட இல்லை. ஆதலால் தன் ஆணைகளை நிறைவேற்றுவதற்கு மதுராந்தகியைவிட அதிகமாகக் கஷ்டப்பட வேண்டும் என்பதை அவள் உணர்ந்தே இருந்தாள். ஆயினும் எப்பாடு பட்டாவது அவற்றை நிறைவேற்றிட வேண்டும் என்ற துடிப்பும், நிறைவேற்றிட முடியும் என்ற உறுதியும் அவளிடம் இருந்தன. அவற்றை நிறைவேற்றும் பொருட்டு, அவள் பாவ-புண்ணியம் பாராமல் எதையும் செய்யத் தயாராக இருந்தாள். அவ்வளவு தூரம் அவளுடைய உள்ளத்தில் குரோதம் பெருகியிருந்தது.

     ஆம்; பதவி, மதிப்பு, தகுதி ஆகியவற்றைப் பெற வேண்டுமென்ற வேட்கை இன்றைய அரசியல்வாதிகளிடம் மட்டும் புதிதாகத் தோன்றியிருப்பதன்று. அரசு என்று ஒன்று தோன்றிய நாளிலிருந்தே அவ்வேட்கையும் தோன்றிவிட்டது. எனவே இன்று போலவே அன்றும் அரசியல் தொடர்புடையவர்களிடையேயும், அரச குலத்தினரிடையேயும் இவ்வேட்கையுடையோர் பலர் இருந்தனர்.

     தவிர, ஆண் மக்களிடம் மட்டும்தான் இந்த வேட்கை இருந்தது என்று கூறுவதற்கில்லை. அரசகுல மகளிரில் கூட ஒரு சிலரை இவ்வேட்கை பிடித்தாட்டியுள்ளது. அந்த ரகத்தில் ஒருத்தியாகவே விளங்கினாள் வானவி. அவள் மட்டுமல்ல; அவளுடைய இளைய சகோதரனும், வீரராசேந்திரனின் *மூத்த மைந்தனுமான மதுராந்தகனும் இதே வேட்கை கொண்டு அலைந்தான்.

     (*தன் றிருப் புதல்வனாகிய மதுராந்தகனை...
     கொடுத்தருளி திண்டிறல் மைந்தனாகிய
     கங்கைகொண்ட சோழனை.... (S.I.I.Vol. V.NO.976)
     இப்பாடலிலிருந்து மதுராந்தகனே வீரராசேந்திரனின் மூத்த மைந்தனென்று நான் எடுத்துக்கொண்டுள்ளேன்.)

     உண்மையில் வானவியின் பேதை உள்ளத்தில் இந்த வேட்கைத் தீயை மூட்டி விட்டவனே மதுராந்தகன் தான்! தான், தன் தம்பி கங்கை கொண்ட சோழன், தங்கள் பெரிய தந்தை இராசேந்திர தேவரின் புதல்வர் அறுவர் ஆகியோர் சோழ மரபினராக இருந்த போதிலும், வேறோரு மரபைச் சார்ந்த குலோத்துங்கன் அரண்மனை வட்டாரத்திலும், அரசியல் அதிகாரிகளாலும் தங்களை விட அதிகமாக மதிக்கப்பட்டு வந்ததே இந்த இளைஞன் உள்ளத்தில் கனலை மூட்டக் காரணமாயிற்று. ஆனால் இதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய அவனால் முடியவில்லை. ஏனென்றால், அவன் ஒருவனைத் தவிர இதர இளைஞர்கள் எழுவரும் குலோத்துங்கனைத் தங்கள் மூத்த சகோதரனாக மதித்துப் பணிவுடன் நடந்து வந்தார்கள். அவர்கள் உள்ளத்தில் புரட்சிக் கனலை எழுப்ப மதுராந்தகன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. தவிர அவன் தந்தை வீரராசேந்திரரோ, அரச குடும்பத்துக்குள் பொறாமை, புரட்சி, பூசல் ஆகியவை தோன்றுவதை வெறுப்பவர். ஓரிரு தடவைகள் மதுராந்தகன் குலோத்துங்கன் மீது கொண்டிருந்த குரோதத்தை உணர நேர்ந்தபோது, அவர் மகனை வன்மையாகக் கண்டித்தது கூட உண்டு.

     ஆனால் இதனாலெல்லாம் மதுராந்தகன் திருந்திவிடவில்லை. அவன் கூண்டில் அடைபட்ட விலங்கைப்போல் உள்ளூரக் குமுறிக்கொண்டிருந்தான். தன் மனப்போக்குக்கு ஆதரவு தரக்கூடிய ஆண்கள் யாரும் இல்லாமற் போனமையால், தன் வயிற்றெரிச்சலைக் கூறச் சகோதரி வானவியையே நாடிச் செல்வான். முதலில் வானவி கூட அவன் போக்கைக் கண்டித்தாள். ஆயின் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைந்துவிடக்கூடும் அல்லவா? ஏற்கெனவே மதுராந்தகியின் மீது வானவிக்குச் சிறிதளவு பொறாமை இருந்தது. அதை உணர்ந்து கொண்ட மதுராந்தகன், சகோதரியின் இந்தக் குறைபாட்டைச் சரியானபடி பயன்படுத்திக் கொண்டான். மதுராந்தகி குலோத்துங்கனை மணக்க இருப்பதால், அவனைச் சிறுகச் சிறுகச் சோழ அரசகுலத்தில் ஒருவனாக்கிப் பிறகு, தருணம் வாய்த்தால் அரசுக் கட்டிலும் ஏற்றிவிடத் திட்டமிட்டிருக்கிறாள் என்று அவன் தூபம் போட்டபோது, வானவி அதில் முற்றிலும் மயங்கிவிட்டாள். அந்தத் தூபத்தின் புகையே அன்று காலையில் அவளிடமிருந்து வெப்பம் மிக்க சொற்களாக வெளிப்போத்து, இருபெரும் ஆணைகளை இட வைத்தது.

     என்ன இருந்தாலும், வானவி பெண்தானே? அதிலும் அரசகுலப் பெண்ணாதலால் பிரியம் போல் எங்கு வேண்டுமானலும் போய் எதை வேண்டுமானலும் செய்ய முடியாது. ஆனால் அரச குலத்து ஆண்களின் நிலை அதல்ல. அவர்களுடைய செயல்களுக்கும் சில கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், உட்கோட்டைக்குள்ளோ, அல்லது அதற்கு வெளியேயோ எங்கும் போய்வரும் சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது. ஆதலால்தான், தன் ஆணைகளை நிறைவேற்றும் பணிக்குத் தம்பியையே முதல் கருவியாக்கிக்கொள்ள அவள் தீர்மானித்து அவனை அழைத்து வரச் செய்து அன்றைய நிகழ்ச்சிகளை விரிவாக கூறினாள்.

     அதைக் கேட்ட மதுராந்தகன், “பார்த்தாயா அக்கா, நான் அன்று சொன்னது முற்றிலும் மெய்யாகி விட்டது!” என்று கூறிக்களித்தான்.

     “ஆம் தம்பி; மதுராந்தகி இத்துணை பேராசை கொண்டிருப்பாளென்று நான் நினைக்கவே இல்லை!” என்றாள் வானவி.

     “ஆனால் அவள் பேராசை நிராசையாகத்தான் போகும்; நீ கவலைப்படாதே!” என்று உறுதியுடன் மொழிந்தான் மதுராந்தகன்.

     “இல்லை மதுராந்தகா; நாம் அப்படி மெத்தனமாக இருக்க முடியாது. சோழ நாட்டின் அரசுரிமை உள்ளவர்களாக நம் பெரிய தந்தை இராசமகேந்திரன், நம் தந்தையார், அவரைத் தொடர்ந்து நீ, நம் தம்பி கங்கைகொண்ட சோழன் என்று பலர் காத்திருந்தபோதிலும், அந்தப் பேராசைக்காரி ஏதேனும் சூழ்ச்சி செய்து குலோத்துங்கனை அரியணையில் ஏற்றிவிடக்கூடும்!”

     “சூழ்ச்சி! இவள் என்ன அக்கா, இத்தனை பேர்களின் உரிமைக்குப் புறம்பாக அவனை அரசுக் கட்டிலேற்றப் பெரிய சூழ்ச்சி செய்துவிடப் போகிறாள்!”

     “அப்படிச் சொல்லாதே தம்பி. குலோத்துங்கன், அவன் தந்தைக்குப் பிறகு வேங்கி நாட்டின் மன்னனாகப் போகிறான் என்பதை மறந்து விடாதே. இங்கே இத்தனை காலமாக இருந்து போர்ப் பயிற்சி பெற்று, நமது படைப் பலத்தையும் அறிந்திருக்கிறான் அவன். ஆதலால் வேங்கியில் முடி சூட்டப்பட்டதும், போதிய படைகளைத் திரட்டித் திடீரென சோழ நாட்டின் மீது பாய்ந்து நம்மை முறியடித்து விடுவது அவனுக்கு மிக எளிது. ஒருகால் அதுவே அவர்கள் திட்டமாகவும் இருக்கலாம். முடக்காற்றுப் போர் முடிந்து எவ்வளவு சோழப்படை திரும்பி வருகிறது என்பதைக் கண்டறிந்து கொள்ளுவதற்காகவே, தந்தைக்கு உடல் நலமில்லை என்று அவசர ஓலை வந்திருந்தும், நேற்று அவன் வேங்கிக்குச் செல்ல மறுத்திருக்கக் கூடும். ஆம், அங்கே சென்று உடனேயே அரசுப் பதவியை ஏற்றுக் கொள்ள நேர்ந்தால், பிறகு இங்கே வருவதோ, நமது படை பலத்தைத் தெரிந்து கொள்ளுவதோ அத்தனை சுலபமானதில்லை அல்லவா? இப்படியெல்லாம் அந்தப் பேராசைக்காரி மதுராந்தகியும் அவனும் திட்டமிட்டிருப்பதால் தான் போலும், ஒரு நாளாவது அவனுடன் இந்தச் சோழ அரியணையில் உட்காராவிட்டால் தன் பெயர் மதுராந்தகி அல்ல என்று இன்று அவள் என்னிடம் ஆணையிட்டிருக்கிறாள்; விளங்கிற்றா, தம்பி?”

     “விளங்கிற்று. ஆனால் வேங்கி அரியணை இந்தப் பஞ்சைக்குக் கிட்டுமென்று என்ன நிச்சயம்? அங்கேதான் இவன் சிற்றப்பன் விசயாதித்தன் பருந்துபோல் காத்துக் கிடக்கிறானே?”

     “விசயாதித்தன் காத்திருப்பது மெய்தான், தம்பி. ஆனால் அவன் படைபலம் அற்றவன். குந்தள மன்னன் ஆகவமல்லனின் படைபலத்தை நம்பியிருப்பவன். ஆகவமல்லனோ அண்மையில் முடிந்த முடக்காற்றுப் போரில் நமது படைகளை எதிர்த்து நிற்க முடியாமல் தன் மகன் விக்கிரமாதித்தன், இருகையன் முதலானாரோடு புறமுதுகிட்டு ஓடியிருப்பவன். ஆகவமல்லனின் படைக்கே தூண் போல் விளங்கிய வீரசிங்கம், தண்டநாயகன் வாலாதேவன் வேறு இப்போரில் கொல்லப்பட்டு விட்டான். ஆதலால் இன்றைய நிலையில் ஆகவமல்லன் விசயாதித்தனுக்கு உதவத் தக்க நிலையில் இல்லை. இவற்றையெல்லாம் உணர்ந்து, காலநிலை சரியில்லையென விசயாதித்தன் வாளா இருந்துவிட்டால், குலோத்துங்கன் வேங்கி மன்னனாகிவிட மாட்டானா?”

     “ஆமாம் அக்கா. ஆனால் அதை நாம் தடுப்பது எப்படி?”

     “எப்படி என்ற சொல்லுக்கு இடமேயில்லை, மதுராந்தகா. எப்படியாவது அவனுக்கு வேங்கி நாடும் இல்லையென்று ஆக்கிவிடத்தான் வேண்டும். முடக்காற்றுப் போரில் தோற்றுச் சோர்ந்து போயிருக்கும் ஆகவமல்லனுக்கு ஊக்கமூட்டி எப்படியாவது விசயாதித்தனுக்கு உதவி செய்து அவனை வேங்கி அரியணையில் ஏற்றச் செய்துவிட வேண்டும்.”

     “அது சரிதான்; ஆனால் ஆகவமல்லன் இப்பொழுது எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறானோ?”

     “தண்டநாயகன் வாலாதேவன் போன்ற வலக்கரத்தை இழந்துவிட்ட பிறகு அவன் நிச்சயமாகத் தோல்வி மனப்பான்மையில் ஊறி மனம் ஒடிந்துதான் போயிருப்பான். அதில் ஐயமே இல்லை. இருந்தாலும், அந்நிலையிலும் அவனை இச்செயலுக்கு ஊக்கக்கூடிய சக்தி ஏதேனும் இல்லாமல் இராது. அது எது என்பதை நாம் கண்டறிய வேண்டும்.”

     “அறிவதுதான் எப்படி என்று கேட்கிறேன்!”

     "நீ என்னடா தம்பி, சிறிதுகூட ராஜதந்திரம் அறியாதவன் போல் பேசுகிறாய்? இன்றுதான் குந்தள நாட்டுப் படையினரில் பலரைப் போர்க் கைதிகளாகச் சிறைப் பிடித்து வந்திருக்கிறார்களே, அவர்களில் ஒருவனை ரகசியமாக சந்தித்து, வாய்ச்சாலத்துடன் பேச்சுக் கொடுத்து அதை அறிய வேண்டும்.”

     “அக்கா! நீ சாதிக்க முடியாத காரியத்தைச் சொல்லுகிறாய். போர்க் கைதிகளை இதற்குள் பெரிய சிறைச்சலையில் அடைத்திருப்பார்கள் என்பதும், பகைவர் படையினை அடைத்து வைத்திருக்கும் அச்சிறைக்குள்ளே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் உனக்குத் தெரியாதா?”

     “தெரியும் தம்பி. ஆயினும் நீ மனம் வைத்தால் அங்கே போக முடியும். போர்ப் பயிற்சி பெற்றுவரும் நீங்கள் நமது ஆயுதசாலைக்குள்ளே தடையின்றிச் சென்று, பயிற்சிக்குத் தேவையான ஆயுதங்களை எடுத்துக்கொள்ளும் பொருட்டு உங்களுக்குத் தனித்தனியே புலி இலச்சினை ஒன்று கொடுக்கப்பட்டிருப்பதை மறந்து விட்டாயா? அந்த இலச்சினையைக் காட்டினால், ஆயுத சலையில் மட்டுமின்றி, கட்டுக்காவல் உள்ள வேறு எந்தப் பகுதியிலுங்கூட உங்களுக்கு அனுமதி உண்டே!”

     “ஆமாம்; நீ சொல்வது சரிதான். உன் திட்டப்படியே நான் பெரிய சிறைச்சாலைக்குச் சென்று மேலைச்சளுக்கிய வீரன் ஒருவனைச் சந்தித்து, ஆகவமல்லனைத் தூண்டக் கூடிய வழியை அறிந்து வருவதாக வைத்துக்கொள். அதன் பிறகு...?”

     “அதன் பிறகு அவனைத் தூண்டக்கூடிய அச்செயலை நாம் ரகசியமாக நிறைவேற்றி வைப்பதாகவும், அதற்குப் பிரதியாக அவன் விசயாதித்தனை வேங்கி அரியணையில் ஏற்றி விட வேண்டுமென்றும் ஓலை அனுப்பவேண்டும்.”

     “யாருக்கு? ஆகவமல்லனுக்கா? எங்கேயோ பல காத தூரத்துக்கு அப்பால் இருக்கும் ஆகவமல்லனுக்கு ஓலை அனுப்புவதா? எப்படி அக்கா? யார் மூலம் அனுப்புவது?”

     “ஏன்? நீ சந்திக்கும் அந்தச் சளுக்கிய வீரனையே அதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தம்பி, நான் ஒரு திட்டம் வகுத்துக் கொடுக்கிறேன்; அதன் படி நட. நம் நோக்கம் வெற்றியுடன் நிறைவேறிவிடும்.”

     “சீக்கிரமே சொல், அக்கா...!”

     “மதுராந்தகா! நீ இப்பொழுது நேராக நமது ஆயுதச் சாலைக்குப் போக வேண்டும். அங்கேதான் நம் வீரர்களுக்கான போர் உடைகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. ஆயுதச் சாலைத் தலைவரிடம், போர்ப் பயிற்சி ஆசிரியர் இன்று உங்களைச் சோழ வீரர்களின் உடை அணிந்து பயிற்சிக்கு வரச் சொல்லியிருப்பதாகக் கூறி, உனக்கும், தம்பி கங்கை கொண்ட சோழனுக்கும் என்று இரண்டு ஜதை உடைகளையும், மற்றும் கத்தி, வேல் கேடயம், கவசம் போன்றவைகளையும் கட்டி எடுத்துக்கொள். பின்னர் மறைவான இடம் ஒன்றுக்குச் சென்று அந்த இரு உடைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக நீயே அணிந்து கொள். உனது கத்தி, கேடயம் போன்ற கருவிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்ற ஜதைக் கருவிகளையும் உனது சாதாரண உடையையும் அங்கேயே மறைத்து வை.

     “பிறகு ஒரு சாதாரணப் போர் வீரன் போல், உன்னிடமுள்ள புலி இலச்சினையைக் காட்டிவிட்டுப் பெரிய சிறைச்சாலையின் உள்ளே செல். அங்கே அடைபட்டிருக்கும் சளுக்கிய வீரர்களை அவர்களுடைய போர் உடைகளிலிருந்தே கண்டுகொள்ளலாம். அவர்களிடம் சாதுரியமாகப் பேச்சுக் கொடுத்துப் பார். எவன் நமது நோக்கத்துக்கு உடன்படுவான் என்று தோன்றுகிறதோ, அவனைத் தனியே கூட்டிச் சென்று நமக்குத் தேவையான தகவலை அறிவிப்பானாகில், அவனை ரகசியமாக விடுதலை செய்து நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறு. அவன் இணங்கினால், நீ அணிந்துள்ள சோழ வீரர்களின் உடைகள் இரண்டில் ஒன்றைக் களைந்து அவனிடம் கொடுத்து அணியச் செய். சோழ வீரனின் உடைய அணிந்து விட்டால், பிறகு அவனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிக் கொணர்வது எளிதே!...”

     “இல்லை அக்கா; நீ சொல்வது போல் அது அத்தனை எளிதன்று. சிறைச்சாலைகளில் உள்ளே செல்ல விரும்பும் வீரர்களும், வெளியே வர விரும்பும் வீரர்களும் தங்களது படைத் தலைவரிடமிருந்து பெற்ற அனுமதி ஓலையையோ அல்லது இலச்சினையையோ காட்டினாலன்றி, அவ்வாறு செய்ய அனுமதிக்கபட மாட்டார்கள்.”

     “அதாவது, மேலைச் சளுக்கிய வீரன் சோழ வீரனின் உடையில் இருந்தாலும் அவனிடம் ஓர் இலச்சினை இல்லாவிட்டால் வெளியே வர முடியாது என்கிறாய்; இல்லையா? அதற்கென்ன? அதற்கும் வழி செய்து விட்டால் போகிறது. நம் கங்கை கொண்ட சோழனிடம் இருக்கும் இலச்சினையை அவன் அறியாமல் இப்பொழுதே எடுத்து வந்து தருகிறேன். சளுக்கிய வீரன் வெளியே வர அதைப் பயன் படுத்திக் கொள்ளட்டும். இவ்வாறு நீங்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய பிறகு, அவனை நம் அரண்மனைக்குப் பின்புற முள்ள பூங்காவுக்கு அழைத்து வா. இதர விஷயங்களை நானே அவனிடம் நேரில் உரைத்து ஆவன செய்து கொள்ளுகிறேன்.”

     “அக்கா, உன் மதிநுட்பமே மதிநுட்பம். உண்மையில் இத்தகைய திறமை வாய்ந்த நீ மட்டும் ஒரு சிறு நாட்டின் அரியணையை அலங்கரிப்பாயானால், அந்நாட்டை விரைவில் இந்தச் சோழப் பேரரசைவிடப் பெரிய பேரரசாக்கி விடுவாய்!” என்று மகிழ்ச்சி பொங்கச் சகோதரியைப் பாராட்டினான் மதுராந்தகன்.

     வானவி நெடுமூச்சு ஒன்றைச் சிந்தியாவாறு சொன்னாள்; “ம்...! எல்லாம் என்னுடைய இத்திட்டப்படி நடக்குமானால், தம்பி, நான் ஒரு நாட்டின் அரசியாவது மட்டுமல்ல; உன்னைக்கூட இந்தச் சோழ அரசின் அதிபதி ஆக்குவற்கு முயற்சி செய்வேன். பார்ப்போம், நமது முயற்சிகள் எவ்வளவு தூரம் வெற்றியடைகின்றன என்பதை. சரி, நீ புறப்படு. நான் கூறியதெல்லாம் நினைவிருக்கிறதல்லவா?”

     “நினைவிருக்கிறது அக்கா. இன்னும் சில நாழிகைப் பொழுதில் சளுக்கிய வீரனுடன் உன்னைச் சந்திப்பேன்.”

     பின்னர், கங்கைகொண்ட சோழனின் புலி இலச்சினையை வானவி எடுத்து வந்து கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்ட மதுராந்தகன் உட்கோட்டைக்குள்ளே இருந்த பெரிய சிறைச்சாலையை நோக்கி நடந்தான்.

     வானவி வகுத்துக் கொடுத்த திட்டப்படி யாவற்றையும் நிறைவேற்றிய மதுராந்தகன், அன்று பிற்பகலில் சளுக்கிய வீரன் ஒருவனுடன் முடிகொண்ட சோழன் அரண்மனையைச் சார்ந்த பூங்காவில் சகோதரியைச் சந்தித்தான்.

     அவளுக்கு அவ்வீரனை அறிமுகப் படுத்துகையில் அவன் சொன்னான்: “அக்கா, இவன் பெயர் நந்துகன். ஆகவமல்லனின் புதல்வரான விக்கிரமாதித்தனின் மெய்க்காப்பாளர்களுள் ஒருவனாம் இவன். இன்றைய நிலையில் குந்தள மன்னனை விசயாதித்தனுக்கு உதவ தூண்ட வேண்டுமானால், அது விக்ரமாதித்தன் ஒருவரால்தான் முடியும் என்கிறான் இவன். குந்தள மன்னருக்குத் தமது மைந்தன்மீது அத்துணை பாசமாம்; அரசியல் அலுவல்களில் மகனின் ஆலோசனைகளுக்கு அவர் மாறு சொல்வதே இல்லையாம்.”

     இதைக் கேட்டதும் வானவியின் முகத்தில் மகிழ்ச்சி பரவிற்று. அவள் அவ்வீரனைத் தனியே கூட்டிச் சென்று நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தாள். பின்னர் அவர்களை அங்கேயே நிறுத்திவிட்டு, அவசர அவசரமாக அரண்மனைக்குச் சென்று ஓர் ஓலை எழுதி எடுத்து வந்தாள். அதனை அவ்வீரனிடம் கொடுத்து, தான் அணிந்திருந்த முத்து மாலை ஒன்றையும் கழற்றி அவனிடம் தந்தாள். “நந்துகா! கடைவீதியிலுள்ள பரிச்சாலைகள் ஒன்றில் இம்மாலையைக் கொடுத்துச் சிறந்த குதிரை ஒன்றை வாங்கிக் கொண்டு, இப்பொழுதே நீ கல்யாணபுரத்துக்குப் புறப்படு. இந்த ஓலையை இளவரசரிடம் கொடுத்து என் அன்பையும் வணக்கத்தையும் கூறு. என் விருப்பத்தை அவர் நிறைவேற்றி வைத்தால், அவர் விரும்பும் விதம் நானும் என் தம்பியும் நடக்கச் சித்தமாக இருக்கிறோம் என்று அறிவி!” என்று சொல்லி அவனை அனுப்பினாள்.

     நந்துகன் சென்ற பிறகு, “என்ன அக்கா எழுதினாய் விக்கிரமாதித்தனுக்கு?” என்று வினவினான் மதுராந்தகன்.

     வானவி முறுவல் பூத்தாள்: “கன்னிப் பெண் ஒருத்தி ஓர் இளவரசனிடம் ஒரு வேண்டுகோளை நிறைவேற்றிக் கொள்ள எதைக் கருவியாக்கிக் கொள்ள முடியும் என்பதை நீயே சிந்தித்துப் பாரேன்...!”

     மதுராந்தகன் சிந்திக்கவில்லை. “காதலா?” என்றான் பளிச்சென்று. அவனது முகத்தில் வியப்பு மிதந்தது.

     “ஆம், தம்பி: நம் திட்டம் நிறைவேற நான் என்னையே அர்ப்பணிக்கத் துணிந்து விட்டேன்!” என்றாள் வானவி. அவளுடைய உதடுகள் இப்பொழுது முறுவலைச் சிந்தவில்லை. குரோதத்தால் துடித்தன!