மதுராந்தகியின் காதல்

(மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம்

அத்தியாயம் - 4. குடம் பாலில் துளி விஷம்

     மதுராந்தகி இயற்கையாகவே பேரழகு வாய்ந்தவள். இருந்தாலும், இயற்கை அழகு வாய்ந்தவர்களும் செயற்கைப் பொருள்கள் மூலம் தங்கள் அழகுக்கு அழகு செய்துகொள்ளாமல் இருப்பதில்லையே! குறிப்பாக, வண்ண வண்ண ஆடைகளை அணிய வேண்டும்; பொன்னும் மணியும் இழைத்த ஆபரணங்களைப் பூண வேண்டும் என்று ஆவல் கொள்ளாத பெண்டிர் யார்தான் இருக்கின்றனர்? அதிலும் மதுராந்தகி சோழ அரசர் குலத்துப் பெண்; எந்த ஆடையானாலும் எந்த அணியானாலும் விரும்புவதை வாங்கிக்கொள்ளும் சுதந்திரம் பெற்றவள். ஆதலால், அன்று சோழ கேரளன் அரண்மனைக்குச் சேரத்துச் சல்லாத்துணி வர்த்தகன் ஒருவன் வந்துள்ளான் என்ற செய்தியை அங்கு சென்று வந்த முடிகொண்ட சோழன் அரண்மனைச் சேடி ஒருத்தி வந்து அறிவித்ததும், அவள் அவ்வரண்மனைக்கு ஓடோடியும் வந்தாள்.

     வந்தவள் நேரே அந்தப்புரத்துக்குச் சென்று தன் சிற்றன்னை அருமொழி நங்கையிடம் “சேரத்து வர்த்தகன் எங்கே இருக்கிறான்?” என்று வினவினாள். “முன் மண்டபத்தில் அவனைக் காணவில்லையே? அங்குதானே வானவி அவனை நிறுத்தி வைத்துக்கொண்டு தனக்குத் தேவையான துணிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள்?” என்றாள் சிறிய பிராட்டியார். ‘சரி, நாம் வருவதற்குள் வானவி தனக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு வர்த்தகனை அனுப்பி விட்டாள் போலும்!’ என்று நினைத்துக்கொண்டு மதுராந்தகி திரும்பினாள்.

     அவள் முன் மண்டபத்துக்கு வந்ததும் அங்கிருந்த பணிப்பெண்ணிடம், அந்த வர்த்தகன் எப்பொழுது புறப்பட்டுச் சென்றானென்பதை வினவினாள். “வர்த்தகன் இன்னும் போகவில்லை, இளவரசி. வானவன் மாதேவியார் அவனைத் தமது விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்!” என்றாள் அப்பணிப்பெண். உடனே மதுராந்தகி அங்கே புறப்பட்டுச் சென்றாள். இரண்டொரு நாட்களுக்கு முன்தான் அவளுக்கும் வானவிக்கும் முன் அத்தியாயத்தில் கூறிய விவாதம் நிகழ்ந்தது. அன்று வானவியை “மானமிழந்தவள்” என்று பழித்துவிட்டுத் திரும்பியிருந்ததை மறந்து, சல்லாத் துணியின் மீதுள்ள ஆவலால், கிட்டத்தட்ட அவளுடைய விடுதி வாயில் வரையில் வந்துவிட்டாள் மதுராந்தகி. ஆனால் பிறகு அவளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் தங்களிடையே நிகழ்ந்த சண்டை நினைவுக்கு வரவே, வாயில் அருகிலேயே மறைவாக நின்றுவிட்டாள், ‘வர்த்தகர் வெளியே வரட்டும்; அவரை அழைத்துக்கொண்டு நமது அரண்மனைக்கே போய்விடலாம்’ என்ற நினைவுடன்.

     ஆனால் சில பொழுதுக்குப் பின் உள்ளே நிகழ்ந்த இரகசியப் பேச்சு மதுராந்தகியின் கவனத்தை ஈர்த்தது. வானவிக்கும் அவ்வர்ததகனுக்கும் இடையே நிகழ்ந்த அந்த இரகசிய உரையாடல் மதுராந்தகிக்கு மிகத் தெளிவாகக் கேட்டதால், அவன் குந்தள ஒற்றன் என்பதையும், வானவி அவன் வழியே தன் காதலன் விக்கிரமாதித்தனுக்கு ஓலை அனுப்பப் போகிறாள் என்பதையும் அவள் தெரிந்து கொண்டாள்.

     விரும்பியிருந்தால் அவள் அந்த ஒற்றனை மிக எளிதாகச் சிக்க வைத்திருக்கலாம். வானவிக்கும் அவனுக்கும் இடையே அரசியல் சம்பந்தமான உரையாடல் நிகழ்ந்திருந்தால் மதுராந்தகி அவனைச் சிக்க வைத்தே இருப்பாள். ஆனால் வானவி அவனிடம் தன் காதலன் தன்னைக் கைவிட்டு விட்டதாக மட்டுமே குறைப்பட்டுக் கொண்டதால், பரந்த உள்ளம் கொண்ட மதுராந்தகி, காதலனைப் பிரிந்து வாடும் அப்பெண் தன் எதிரியாகிவிட்டிருந்த போதிலும், அவள் அவனை அடையும் முயற்சிக்குத் தடை விளைவிக்க விரும்பவில்லை. அவள் உடனே தன் அரண்மனைக்குத் திரும்பிவிட்டாள். ஆனால் அன்றிரவு தன் கணவர் குலோத்துங்கனிடம் மட்டும் அரண்மனைக்குள்ளே குந்தள ஒற்றர்களின் நடமாட்டம் இருப்பதை இலேசாகக் கோடி காட்டினாள்.

     சோழ நாட்டின் படைத் தலைவர்களில் ஒருவனாக விளங்கிய குலோத்துங்கனால் இந்த ஒற்றர் நடமாட்டச் செய்தியை மதுராந்தகியைப்போல் ஒரு சிறிய நிகழ்ச்சியாகக் கருத முடியவில்லை. அவன் அப்போது நகரப் பாதுகாப்புப் படையின் தலைவனாக இருந்தான். ஆதலால் உடனே கோட்டைக்குள்ளே வரும் ஒவ்வொர் அயல் நாட்டாரையும் இனி மிகுந்த கவனத்துடன் பரிசோதிக்க வேண்டும் என்று காவற்படையினருக்குக் கட்டளை பிறப்பித்தான். இந்தக் கட்டளையின் விளைவாகத்தான் சாமுண்டராயன் பெரும்படை ஒன்றுடன் வேங்கியை நோக்கிச் சென்று கொண்டிருந்த செய்தி வெளியாயிற்று.

     நுளம்பாடியில் குந்தள இளவரசன் விக்கிரமாதித்தன் வானவியின் ஓலையைப் படித்து மிகவும் மனம் வருந்தினான். அவ்வோலையில் அவள், சோழ நாட்டில் தன்னை எல்லோரும் மானமிழந்த பரத்தையென்று மிகவும் இழிவாகத் தூற்றுவதாகவும், அந்த இழிவைத் தன்னால் இனிப் பொறுக்க முடியாதென்றும், ஆதலால் எவ்வழியிலாவது தன்னைச் சோழ நாட்டிலிருந்து அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்றும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

     ஆனால் விக்கிரமாதித்தன் பகை நாட்டுப் பெண்ணான தன் காதலியை இரகசியமாகக் கடத்திச் சென்று அதன் நிமித்தம் ஒரு போர் நிகழ இடமளிக்க விரும்பவில்லை. எந்த வீரராசேந்திரன், தன்னுடன் இரண்டாண்டுகள் தனித்து வாழ்ந்த மகளைத் தனக்கு முறையாக மணமுடித்து வைக்க முடியாதென்று மறுத்து அவமானப்படுத்தினானோ, அந்த வீரராசேந்திரனே அவளை மணந்துகொள்ளுமாறு தன்னைக் கெஞ்சும் நிலையை ஏற்படுத்த வேண்டுமென்று துணிவு கொண்டிருந்தான். அதற்குரிய காலம் விரைந்து வந்து கொண்டிருப்பதாகவும் அவன் கருதினான். வேங்கி நாடு குந்தள நாட்டோடு இணையும்போது சோழ நாட்டின் வலிமை குன்றிவிடுவதோடு தங்கள் நாடு வலிமையில் மேம்பட்டு விடுமென்றும், அதன் பிறகு சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்று ஒரே போரில் அதனை அடிபணியச் செய்து, வீரராசேந்திரன் வானவியைத் தன் காலடியில் கொண்டுக் கிடத்தி, “இதோ உங்கள் பொருள்; உங்கள் மனைவி!” என்று கெஞ்சச் செய்துவிடலாமென்றும் அவன் மனக்கோட்டைகள் கட்டியிருந்தான்.

     மனமுடைந்து ஓலை அனுப்பியிருந்த காதலிக்கு விக்கிரமாதித்தன் விவரங்களை விளக்கி, “அன்பே, அன்று ‘உங்களுடன் கல்யாணபுரத்தில் வாழ ஆயிரங்கோடி காலமானாலும் காத்திருப்பேன்’ என்றாய். உன்னை ஆயிரங்கோடி காலம் காத்திருக்கச் செய்ய மாட்டேன். இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டும் காத்திரு; போதும். குந்தளத்தாரின் மதிப்பை உணர்ந்து உன் தந்தையே உன்னை எனக்கு மணமுடித்துத் தருவார். அதற்கான முயற்சிகள் வெற்றி தரும் வழியில் நடந்து கொண்டிருக்கின்றன. வேங்கி நாட்டு அரசன் சக்திவர்மனின் வேண்டுகோளுக்கு இணங்கி எங்கள் திறமைமிக்க மாதண்ட நாயகர் சாமுண்டராயர் பெரும் படையுடன் இன்று வேங்கியை நோக்கிச் சென்றுள்ளார். விரைவில் வேங்கி எங்கள் வசம் ஆகிவிடும். பிறகு உன் தந்தையின் கொட்டம் அடங்க அதிக காலம் ஆகாது,” என்று குறிப்பிட்டு மறு ஓலை ஒன்றை அந்த ஒற்றன் வழியாகவே அனுப்பி வைத்தான்.

     ஆனால் இடையில் குலோத்துங்கன் சோழ நாட்டில் செய்து விட்டிருந்த அயல்நாட்டார் பரிசோதனை ஏற்பாட்டின் காரணமாக, கங்கை கொண்ட சோழபுரத்து உட்கோட்டைக்குள்ளே முன்போல் எளிதாகச் சென்றுவிட முயன்ற அந்தக் குந்தள ஒற்றன் பிடிபட்டான். சற்றும் எதிர் பாராதபடி அவன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் விக்கிரமாதித்தன் வானவிக்கு அனுப்பியிருந்த ஓலையைக் காவற்படையினர் கைப்பற்றிக் குலோத்துங்கனுக்கு அனுப்பிவிட்டனர். குலோத்துங்கன் அக்கணமே சோழதேவரிடம் அவ்வோலையைக் கொண்டுபோய்க் காட்ட, அவர் பெரும்படை ஒன்றுடன் வேங்கியை நோக்கிக் கிளம்பி விட்டார்.

     அன்று மட்டும் அந்த ஓலை சோழர்கள் கையில் சிக்கியிராவிட்டால் சோழநாட்டின் பிற்காலச் சரித்திரமே மாறிப் போயிருக்கும். ஆம், அவர்களுக்குக் குந்தளத்தாரின் வேங்கிப்படையெடுப்பு, அந்நாடு அவர்கள் கைவசமான பிறகுதான் தெரிய வந்திருக்கும். விக்கிரமாதித்தன் நினைத்தவாறு வேங்கி நாடு குந்தளத்தாரின் கைக்கு வந்திருந்தால் சோழர்களின் வலுவில் ஒரு பகுதி குன்றி விட்டிருக்கும்; குந்தளத்தாரின் கை ஓங்கியும் இருக்கும். ஆனால் கிடைத்தற்கரிய அந்த அரிய வாய்ப்பை, சரித்திரத்தின் போக்கையே மாற்றிவிட இருந்த அந்த நிகழ்ச்சியை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அந்த ரகசியத்தைக் காதல் பித்தில், காதலிக்குத்தானே அறிவிக்கிறோம் என்ற மிதப்பில், விக்கிரமாதித்தன் வெளிப்படுத்தப் போக, நிலைமையே தலைகீழாகிவிட்டது. எனவே, அரசியலில் காதல் குறுக்கிடும்போது, அது குடம் பாலில் துளி விடமாகக் கலந்து அத்தனையையும் விடமாக்கி விடுகிறது என்று கூறியதில் தவறு என்ன இருக்கிறது?

     கார் மேகம் திருண்டு வருவது போலவும், கடல்நீர் பொங்கி வழிவது போலவும், இமயமொத்த மலை ஒன்று இடம் பெயர்ந்து நகருவது போலவும், பெரும்படை ஒன்றுடனும் சொல்லவொண்ணாச் சீற்றத்துடனும், வீறுகொண்டு வேங்கியை நோக்கி விறைந்து வந்த வீரராசேந்திரார், சாமுண்டராயனின் தலைமையில் இயங்கிய குந்தளப் படையை வேங்கி நாட்டுக்கு அருகில் சந்தித்துக் கடும் போர் புரிந்தார்.

     நிலைமை முற்றிவிட்டதைக் கண்ட சக்திவர்மன் வெளிப்படையாகக் குந்தளத்தாருடன் சேர்ந்துகொண்டு சோழரைத் தாக்க முற்பட்டான். அவன் தந்தை விசயாதித்தனோ சோழர்களின் கடலனைய படையைக் கண்டு கதிகலங்கி, வீரராசேந்திரரிடம் சரணடைந்து, தன் மகனுக்கு வேங்கியை முடிசூட்டிய தவறுக்காகத் தன்னை மன்னிக்கும்படி கெஞ்சினான்.

     போர் மும்முரமாக நடந்தது. குந்தளத்திலிருந்து ஆகவமல்லனும், அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பிரதிநிதிகளாக இருந்து வந்த அவனுடைய மக்கள் சோமேசுவரன், விக்கிரமாதித்தன், சயசிம்மன் ஆகியோரும், மற்றும் அவர்களது தண்ட நாயகர்களான கேசவன், கேத்தரையன், மாரயன், போத்தரையன், இரேச்சயன் போன்ற பலரும் வேங்கிக்கு விரைந்து வந்து போரில் கலந்து கொண்டனர்.

     சோழர் படையில் மாமன்னர் வீரராசேந்திரர், குலோத்துங்கன், கங்கைகொண்ட சோழ தன்மபாலன், வீரராசேந்திர காரானை விழுப்பரையன் போன்ற படைத்தலைவர்களும் போரிட்டனர்.

     குந்தளப்படையை சாமுண்டராயனே முன்னின்று நடத்தினான். சோழப்படை மாமன்னர் வீரராசேந்திரரின் தலைமையில் இயங்கியது. குந்தளத்தார் வழக்கப்படி வீரம் குன்றாதவாறுதான் போரிட்டனர். ஆயினும் போர்க்கலையில் வல்ல சோழர்கள் முன் அவர்கள் வீரம் எடுபடவில்லை. போர் ஆரம்பமாகி இரண்டொரு நாட்கள் ஆவதற்குள்ளே வீரராசேந்திரரின் கணைக்கு இலக்காகி மடிந்தான் குந்தள மாதண்டநாயகன் சாமுண்டராயன். அவன் வீழ்ந்ததும் குந்தளப்படையும் நிலை குலைந்து போயிற்று. அதனை ஒன்று சேர்த்து மீண்டும் போர் செய்ய முன் வந்தான் விசயாதித்தனின் மகனான சக்திவர்மன். ஆனால் அன்றே வீரராசேந்திரரின் வாளுக்கு அவனும் பலியானான்.

     வீரராசேந்திரர் அன்று அந்த ரணகளத்தில் ருத்ரமூர்த்தியாகவே விளங்கினாரென்று ஏடுகள் கூறுகின்றன. தமது கணைக்கு இலக்காகி மடிந்த குந்தள மாதண்டநாயகனின் தலையை, அவர் இன்னும் ஆத்திரம் தீராமல் தமது வாளாலேயே துண்டித்து எறிந்தார் எனவும், குந்தளத்தாரின் பாசறைகளை முற்றுகையிட்டு அங்கிருந்தவர்கள் அனைவரையும் சிறை செய்ததோடு, அம்முற்றுகையின் போது சிக்கிக்கொண்ட சாமுண்டராயனின் மகளும், குந்தளப் படைத் தலைவனான இருகையனின் மனைவியுமான நாகலி என்ற பேரழகியின் மூக்கைச் சிதைத்து அவமதித்தனன்* என்றும் ஆராய்ச்சி ஏடுகள் அறிவிக்கின்றன.

     (*S.I.I.VOL.III PAGE 34 & 66)

     இவ்வாறு வீரராசேந்திரர் தமது ஆட்சிக் காலத்தில் மேலைச் சளுக்கியர்களுடன் நிகழ்த்திய இரண்டாவது போர் அவருக்கு அளப்பரிய வெற்றியுடன் முடிவுற்றது. இந்தப் போரிலிருந்து வீரராசேந்திர தேவர் ஓர் எச்சரிக்கைக் குறிப்புப் பெற்றார். அதாவது, தமது மூத்த சகோதரர் வேங்கி பற்றிக் கையாண்ட அரசியல் தந்திரம் வெற்றி பெறவில்லை! விசயாதித்தன் தங்களுக்குக் கீழ்ப்படிந்தவனாக வேங்கியை ஆள இணங்கி இறுதியில் மோசம் செய்துவிட்டான்! தனது முதுமைப் பிராயம் காரணமாக மகனுக்கு இந்நாட்டை முடிசூட்டுவதாக நடித்து, அவன் வழியே குந்தளத்தார் கைக்குப் போக வகை செய்துவிட்டான்!

     உண்மையில் நடந்தது என்னவோ அவ்வாறு அல்லவாயினும், நிகழ்ச்சிகள் விசயாதித்தனுக்கு எதிராகவே அமைந்துவிட்டன. ஆதலால் போர் முடிந்த பிறகு, இனி வேங்கி நாட்டை முன்போல் தானே ஆண்டுவருவதாக அவன் வேண்டிக் கொண்டபோது, சோழதேவர் அதற்கு இணங்கவில்லை. வேங்கி அரியணையில் முறையாக அமர வேண்டிய குலோத்துங்கனே இனி அங்கே அமர்ந்து ஆட்சி செலுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். காலஞ்சென்ற தமது சகோதரர் இராசேந்திர தேவரின் கருத்துக்கு மாறாக, வெளிப்பகையை விட உட்பகை அத்தனை கொடிதல்ல என்று கருதினார். எனவே அவர் குலோத்துங்கனை அழைத்துத் தமது கருத்தை வெளியிட்டார்.

     ஆனால் இதைக் கேட்டதும் குலோத்துங்கனுக்கு தன் மனைவி மதுராந்தகியின் ஆணை நினைவுக்கு வந்தது. தங்கள் திருமணத்துக்கு முன் அவள் கூறிய சொற்கள் எதிரொலித்தன - “சோழ அரியணையில் உங்களுடன் அமரக் காலம் வரும்; அதுவரையில் காத்திருப்பேன்!” என்றாள் அவள். மனைவி மீது தான் கொண்டிருந்த காதலை நினைத்தபோது அவனுக்குத் தன்மீதே நம்பிக்கை குன்றியது. ‘இன்று வேங்கி அரியணையை ஏற்றுக் கொண்டால், காலம் செல்லச் செல்ல அவள் என்னைக் கரையாய்க் கரைப்பாள். ஒருகால், அத்தை கிழானடிகளிடம் கூறியுள்ள உறுதி மொழியையும் புறக்கணித்து, நான் என்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட நாட்டுக்கு எதிராக வாளெடுக்க நேரிட்டாலும் நேரிட்டுவிடும். துரோகச் செயலுக்கு எதற்காக விதை விதைத்துக் கொள்ள வேண்டும்?’ என்று எண்ணினான்.

     தவிர, அவனது சிறிய தந்தை விசயாதித்தனும் கைகளைப் பற்றிக்கொண்டு மன்றாடினான். “குலோத்துங்கா, யாரை மகனென்று கருதி முதுமைப் பிராயத்தில் எனக்குக் கிட்டிய இந்த அரியணையைத் தத்தம் செய்து கொடுத்தேனோ, அந்தப் பாவி என்னை மோசம் செய்து தன்னையும் அழித்துக்கொண்டான். எனக்கு இனி நீ தான் மகன். இந்த மகனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன். உயிரோடு இருக்கப் போகும் இன்னும் சில காலத்துக்காவது என்னை இந்நாட்டின் மணிமுடி தரித்து இருக்கச் செய், மகனே. என் மனைவி, முதுமை நிறைந்த உன் சிற்றன்னை மாதவ மகாதேவியின் *ஆணையாகக் கூறுகிறேன். இனி நான் என்றென்றும் சோழர்களின் உண்மையான பிரதிநிதியாகவே விளங்குவேன்.”

     (*Journal of the Andhra Historical Research Socienty (JARS) Vol.V page 47)

     இறுதியில் குலோத்துங்கன் தன் உள்ளத்துப் பீதியையும், தனது சிறிய தந்தையின் உண்மையான விருப்பத்தையும் வீரராசேந்திர தேவரிடம் கூறி, “அவரே இந்நாட்டை ஆண்டுவர அநுமதி வழங்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டான். அந்நாட்டுக்கு உரியவனின் வேண்டுகோளே அதுவாயின் சோழ தேவர் அதனை எவ்வாறு மறுதலிக்க முடியும்? விசயாதித்தனை விளித்து, அவனுக்குக் கண்டிப்பான எச்சரிக்கை விடுத்து, நாட்டை அவனிடமே ஒப்படைத்துவிட்டுக் கங்கை கொண்ட சோழபுரம் திரும்பினார்.

     தலைநகரை அடைந்த வீரராசேந்திரர் இம்மாதிரியான விஷமத்தனத்துக்கு இனியும் இடமளிக்கக் கூடாதென்று கருதி, தமது மகள் வானவியையும் அழைத்து எச்சரித்தார்.

     “பகை நாட்டு இளவரசனுக்கு உன்னை ஒருபோதும் மணம் செய்து கொடுக்க மாட்டேன். நாட்டின் நலம் கருதி, நீ அந்த விக்கிரமாதித்தனை இனி மறந்துவிட வேண்டும். என் கட்டளையை மீறி, இனி அவனுக்கு இது மாதிரி ஓலை ஏதேனும் அனுப்பித் தொடர்புகொள்ள முயன்றாயானால், முன்பு இரண்டாண்டுகள் மட்டுமே வாழ்ந்த பாதாளச் சிறையில் வாழ்நாள் முழுவதும் தனிமையில் வாட நேரிடும்!” என்று முன்னறிவிப்புச் செய்தார். அதோடு அவர், வானவி - விக்கிரமாதித்தன் தொடர்புக்குத் துணை நின்ற அவளுடைய அந்தரங்கத் தோழி பங்கையற்கண்ணியை அரசாங்கப் பணியிலிருந்து தள்ளி விட்டார். தமது மூத்த மகன் மதுராந்தகனுக்கும் இதில் கைகலப்பு உண்டு என்பது தெரிய வந்ததால், அவனுக்குச் சோழேந்திரன் என்ற பட்டம் வழங்கி, தொண்டை மண்டலத்தில் அரசப் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்து வருமாறு அனுப்பிவிட்டார்.*

     (*தன்றிருப் புதல்வனாகிய மதுராந்தகனை வாளேந்துதானைச் சோழேந்திரனென்று எண்டிசை நிகழ எழில் முடிசூட்டித் தொண்டைமண்டலங் கொடுத்தருளி... (S.I.I. Vol.V-No.976))

     இவ்வாறு பகைநாட்டுடன் ஏற்பட்டிருந்த கூடாநட்பை அடியோடு அழித்து விட்டதாகக் கருதி இறுமாந்திருந்தார் சோழமன்னர் வீரராசேந்திர தேவர். ஆனால் அது அழிந்ததா, அல்லது வளர்ந்ததா?