அபிதா

10

     வாழ்க்கையின் ஏடுகளைத் திரும்பிப் புரட்டுகையில் அத்தனையும் எப்படியோ குற்றப் பத்திரிகையாகவே படிக்கின்றன. கோட்டைவிட்ட சந்தர்ப்பங்கள், அவசரப்பட்டுவிட்ட ஆத்திரங்கள், மீள முடியாத பாதைகள், அசலுக்கும் போலிக்கும் இனம் தெரியாது ஏமாந்த லேவாதேவிகள், இனாமுக்கு ஆசைப்பட்டு முதலே பறிபோன இழப்புகள், கண் கெட்டபின் விழுந்து விழுந்து சூர்ய நமஸ்காரங்கள் - ஏற்றலும் தாழ்த்தலுமாய் ஓயாத பழங்கணக்கு, அத்தனையும் தப்புக்கணக்கு. ஆத்திரத்தில் ஸ்லேட்டைக் கீழே போட்டு உடைத்தால் அவ்வளவுதான்; உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா.

     எங்கிருக்கிறேன்? சொறி நாய் சுருண்டு படுத்துக் கொண்டாற் போல் ஒரு வளையத்தில் ஒரு கரைமேடு; இது கன்னிக் குளமல்லவா? என் யோசனை வழியில் ரொம்பதூரம் வந்திருக்கிறேன். இந்த ஜலத்தின் தெளிவு பளிங்கு தோற்றது. கரையிலும் குளத்திலும் பூரா சின்னதும் பெரிதுமாய் ஒரே கூழாங்கற்கள். கடுங்கோடையிலும் இந்தக் குளம் வற்றுவதில்லை. ராக்ஷஸத்தோடு பதித்தாற்போன்று நூற்றுக்கணக்கான வருடங்களில் அடுக்கடுக்காய்ப் புதைந்து போன கற்களின் திட்டுக்களினடியில் எங்கோ ரகஸ்ய ஊற்றிலிருந்து ஜலம் கசிகின்றது.

     கல் வடித்த கண்ணீர்.

     இங்கு அல்லியும் பூத்ததில்லை. ஆம்பலும் தலை நீட்டியதில்லை. உச்சி வெய்யிலில் குளத்தில் அடிவயிறு பளீரென்று தெரியும். அடி வயிற்றின் தொப்புள் குழி கூட இஷ்டப்பட்டால் தெரியும். நடுப்பகலின் வெட்ட வெளிச்சத்தில், வெறிச்சிட்டு, தனிப்பட்ட குளம். தண்ணீர் கற்கண்டாயினும் யார் இவ்வளவு தூரம், பானையையோ குடத்தையோ தூக்கிக் கொண்டு வருவது? ஆகையால் இதன் தண்ணீர் செலவாவதில்லை. அதனாலேயே பேரும் கன்னிக் குளம்.

     வெய்யிலின் வெம்மை, தோல் மேல் ஏறுகிறது. குனிந்து காலடியில் ஒரு வெள்ளைக் கூழாங்கல்லைப் பொறுக்குகிறேன். பூஜையில் வைக்கலாம், அவ்வளவு உருண்டை, மழமழ. ஒன்றைப் போல் பல குட்டிக் கருவேல நாதர்கள், கெட்டிக் கருவேல நாதர்கள். கீழே போட்டு உடைத்தாலும், உடைந்தாலும் பளார் எனப் பிளந்து போமேயன்றி குட்டு உடையாது. அவைகளின் ரகஸ்யம் காலத்துக்கும் பத்ரம்.

     பார்வைக்கு இது என் கையில் அடங்குகிறது. ஆனால் வயதில் என்னைப் போல் எத்தனை பேரை இது விழுங்கியிருக்கும்!

     “என்ன முணுமுணுக்கிறாய்? வயதா? அதென்ன வயது? ஒண்ணு, ரெண்டு மூணு என்று உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை உங்கள் அழுக்கை உருட்டி உருட்டி நீங்கள் மணியாய் ஜபிக்கும் அழுக்குருண்டைதான்.”

     ஜலத்தைக் கையில் அள்ளுகிறேன். எல்லாம் விரலிடுக்கில் வழிந்து போகிறது! உள்ளங்கையில் மட்டும் ஆசமன அளவிற்கு ஒரு மணி உருண்டு வெய்யிலில் சுடர் விடுகிறது. என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.

     அபிதா?

     உன் உள்ளங்கையில் நான் குந்துமணி.

     புலிக் கோடுகள் போல் மின்னல், கண்ட சதையை, தொடைகளை, விலாவில், நெற்றிக்குள், புருவ மத்தியில், பளிச், பளிச் வெய்யில் பிடரியில் தேளாய்க் கொட்ட ஆரம்பித்து விட்டது. நேரமாகிவிட்டது.

     இவ்வளவு தூரம் வந்ததற்கு இங்கு குளித்துவிட்டுப் போகலாம். வீட்டுக்குப் போனால், அந்த வேலையும் நேரமும் மிச்சமாகும். நேரே இலையில் உட்கார்ந்து விடலாம்.

     ஆனால் ஜலத்தின் அமைதியைக் கலைக்க மனம் வரவில்லை. காற்றில் அதன் விளிம்பில் அதிரும் லேசான விதிர்விதிர்ப்பு கூட ஏதோ தூக்கத்தில் மூச்சுப் போல்தான் தோன்றிற்று. கலைக்க மனமில்லை. தூங்குவதைத் தட்டியெழுப்பத் தைரியமில்லை, திரும்புகிறேன்.