உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அபிதா 5 சாவித்ரிக்கு அலுப்பு. என்னுடன் அவள் வரவில்லை. நான் வீட்டை விட்டுக் கிளம்பும் போது ரேழித் திண்ணையில் அவளும் மாமியும், பிரிந்தவர் கூடினாற் போல் கொள்ளை ரஹஸ்யம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னைக் கண்டதும் மாமி பேச்சைச் சட்டென்று நிறுத்தி, தொண்டையைக் கனைத்துக் கொள்கிறாள். புன்னகை பூக்கிறாள். இந்த வயதில், பல்வரிசையும் வெண்மையும், பொய்ப்பல் தோற்றது. நான் வாசல் தாண்டியதும், மீண்டும் ‘கிசுமுசு கிசுமுசு’ - எனக்குத் தெரியும். என் மண்டை உருள்கிறது. அந்த நாளில் நான் இருந்த இருப்பும் ஆடின ஆட்டமும், அந்த நொண்டி ‘மணியாட்டி’ வீட்டையே சுற்றிக் கொண்டிருந்ததும், மாமா புத்தி சொல்லப் போய், அவருக்கு நான் இழைத்த அக்ரமமும், நான் வீட்டை விட்டு ஓடிப் போனதன் மூலம் என்னையே எனக்கு மீட்டுத் தந்ததும் அத்துடன் மட்டும் அல்ல - என் உலகத்தின் மகத்தான புதையல் சாவித்ரி எனக்குக் கிடைத்ததற்கே தாங்கள் காரண பூதமாயிருந்ததும் - இந்த ரீதியில், சொல்பவளுக்கும் விஷயத்திற்குக் குறைவில்லை. கேட்பவளுக்கும் சுவாரஸ்யம் மட்டு இல்லை. I don't care. என்னுள் நான் காணும் சூன்யத்தில், எனக்கு வைக்கும் பெரிய சூன்யத்துள் மறைந்து போன சின்ன சூன்யம். |