உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அபிதா 12 வரவர செயல்களில் நினைவு பொருந்தவில்லை. அல்ல நினைவோடு செயல் பொருந்தவில்லை. எது முன் எது பின்? முரட்டுக் குதிரைத் தனித்தனியாக திமிர்கின்றன. எது முன் எது பின்? இதிலேயே நினைவு குழம்புகிறது. இல்லையேல் மீண்டும் கன்னிக்குளத்துக்கு எப்போது வந்தேன்? கண்ணைக் கட்டித் தட்டாமாலை சுற்றி வந்து விட்ட இடத்தில் கட்டை எடுத்து விட்டால் போல் என்னைச் சுற்றி விழித்துத் திகைக்கிறேன். விட்ட இடத்தில் தொட்டாற் போல் வெள்ளைக் கூழாங்கல்லை உள்ளங்கையில் ஏந்தியபடி நிற்கிறேன். ஓ, எங்கள் ரஹஸ்யம் ஆராயத் திரும்பவும் வந்திருக்கிறாயா? எல்லாம் புரிஞ்சு போச்சு. நாங்கள் தான் பாக்கியாக்கும்! அவ்வளவு சுலபமா நாங்கள் புரிஞ்சு போமா? முதலில் என்னை எடுத்துக் கொள். நான் கிடந்த இடத்திலிருந்து என்னை இப்போது எடுத்தாய். ஆனால் நீ எடுக்கும் வரை நான் இருந்த இடத்தில் எத்தனை காலம் கிடந்திருப்பேன் என்று உன்னால் யூகிக்கவாவது முடியுமா? கேவலம் இந்த சம்பவம் நேர்வதற்குள் கடந்திருக்கும் காலம் உங்கள் கணக்கில் உன் வயதைப் போல் எத்தனை விழுங்கியிருக்கும் அறிவையோ? முன் செயல், பின் செயல், தற்செயல், செயல் வயதுகளின் கோடு அழிந்த நிலை உன்னால் நினைத்துப் பார்க்க முடியுமோ? பிறக்கும் போதே சாகப் போகிறேன். சாகத்தான் சாவேன் எனச் சாகும் சித்தத்தில் உருவெடுப்பாய்ப் பிறக்கிறீர்கள். ஆதலால் வயதைப் பற்றியன்றி வேறு நினைப்பு உங்களுக்கு ஏது? சாகவும் தைரியமில்லை. பிறக்கவும் வெட்கமில்லை. இரண்டும் உங்களை விடவும் இல்லை. பேச்சுக்கும் குறைச்சலில்லை. கை நிறைந்து வந்து, விரலிடுக்கில் கொண்டு வந்ததை வழிந்து ஓட விட்ட பின், உள்ளங்கையை நக்கிக் கொண்டு, கொண்டு வந்ததையெல்லாம் கண்டுகொண்டேன் என்று நீங்கள் அடிக்கும் தம்பட்டத்தில் யாரை ஏமாற்றுவதாய் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? பாவம்! உன் வயதுக் கணக்கில் என்னை அளவெடுத்தால் உன்னைப் போல் எத்தனை பேரை விழுங்கியிருப்பேன் தெரியுமா? எங்களுக்கு அறியக் கூடத் தெரியாது. அறிஞ்சு என்ன ஆகணும்? அறிய அறிய துன்பம் எது குறையுது? அதிகம் தான் ஆகுது. காத்திருப்பதும் - எதற்காக என்று கூட எங்களுக்குக் கவலையில்லை - காவல் கிடப்பதும் தான் எங்கள் ரகஸ்யம். நீ வேணுமானால், முடியுமானால், தேடி எடுத்துக் கொள். நாங்கள் கரையாகவும், படுகையாகவும், கல்வடித்த கண்ணீரே இந்தக் குளமான காரணம் கண்டுபிடி. இதெல்லாம் லேசா? எங்கள் ரஹஸ்யம் புரிந்து கொள்ள, முன்னால் உன் சிக்கிலிருந்து விடுபடு. இடம், பொருள், ஏவல், காலத்தின் ஒன்றையொன்று இழுப்பில் நீ மாட்டிக் கொண்டிருக்கிறாய் - பிரசங்கம் - சீ! கூழாங்கல்லை வீசி எறிகிறேன். கிளுக் - ஜலத்தில் விழுந்து கொண்டே அது சிரிக்கிறது. அத்துடன் சேர்ந்து கன்னிக்குளமும் சிரிக்கிறது. என் நிலைகண்டு எல்லாவற்றிற்கும் கேலி. இந்த சமயத்தில் ஒன்று தெரிகிறது. உலகத்தில் உயிர் இல்லாத பொருளே இல்லை. அது அது தன் தன் பழிவாங்க சமயத்திற்குக் காத்திருக்கும் பொருள் தான். யாவும் பழி வாங்கும் பரம்பரை. சீற்றம் என்னைப் பற்றிக் கொண்டது. எறிந்த கல்லைத் தொடர்ந்து நானும் குளத்தில் குதித்தேன். One. Two. Three. தண்ணீர் மும்முறை என் மேல் கலைந்து மூடுகிறது. மூழ்குகிறேன். மூழ்கிக் கொண்டேயிருக்கிறேன். இன்னும் அடிதட்டவில்லை. ஏது, இந்த வெய்யிலில் இவ்வளவு ஆழமா? அம்மா, என்ன குளு குளு! எத்தனை வருடங்கள், இது போல் ஆற அமிழ குளித்து! இங்கு விட்டுப் போன பின், மறுபடியும் இப்பத்தான். வருடங்களின் சுமை, சோர்வுகளை ஜலம் கழுவி விடுகையில் அம்மாடி! என்ன இதவடி! மீறி என்னை ‘அம்மா’ சொல்லி அம்மாவையே நினைக்க வைக்கிறது. அம்மா என் கையில் ஜலமே உன்னைத்தான் துதிக்கிறேன். என் தாய் கூடத் தன் கடைசி வேளையில் உன்னில் தான் புகுந்தாள். நானும் உன்னிடமே வந்துவிட்டேன் அம்மா போதுமடா ஜன்மம். அம்மா உன் ஜல ரூபத்தில் உனக்கு முகமில்லை, தலையில்லை, கையில்லை, காலில்லை. எல்லாம் வயிறு. கரையில்லா வயிறு. அதனால் தான் ‘மா’விலும் பெரிசு அம்மா. மீண்ட கர்ப்பம் மீண்ட சொர்க்கம் இருளோடு இருளாய் நான் எனத் தனிப்படுவதன் வேதனையிலாது வேறெங்கு இவ்வாறு முழுமையில் இயங்க இயலும்? - ஆனால் இத்தனையும் மூச்சின் ‘தம்’ இருக்கும் வரை குளுமையில் ஆழ்ந்து கொண்டே போகையில் காணும் ஆசைக் கனவுதான். பிராணனின் விம்மலில் மார் வெடிக்கையில், தொண்டை தூணாய்ப் புடைக்கையில், இத்தனை வருடங்கள், கைகள், புஜங்கள், கால்கள், தொடைகளில் உறங்கிக் கிடந்த நீச்சல் திரும்ப விழித்துக் கொள்கையில், மூச்சு மூச்மூச் மூச்மூச் மூஊஊ - உணர்வு காலத்தின் ஆழத்தின் அடியையே தொட்டுவிட்டு, உடல் உதைத்துக் கொண்டு பந்து போல் மேல் எழுகிறது. தலையை உதறி, விழிகளை அடைத்த ஜலத்தை உதறி சுற்றுமுற்றும் பார்க்கிறேன். இது ஒரு புது விழிப்பு. கரையில் கைகளைப் பிசைந்து கொண்டு அபிதா நிற்கிறாள். நான் திகைத்துப் போனேன். “அபிதா நீ இங்கு எங்கு வந்தாய்? என் பின்னாலேயே வந்தையா?” அவள் பேசவில்லை. வாயடைத்துப் போய் உதடுகள் தவித்தன. அவள் விழிகள் என்னை விழுங்கின. “நான் முழுகிப் போயிட்டேன்னு பாத்தையா?” அவள் முகத்தின் திகில் கலைந்தது. “அட அசடே, பயந்துட்டையா? நீயும் வாயேன்! உனக்கு நீச்சல் தெரியுமா? தெரியாட்டா நான் பார்த்துக்கறேன் கவலைப்படாதே. இங்கே இந்த வேலைக்கு யாரும் வரமாட்டார்கள். நீயும் நானும் தான் தைரியமா இறங்கு...” இடுப்பு முடிச்சில் கையுடன் தயங்கினாள். “புடவை நனைஞ்சுபோமேன்னு பயமா? கரையிலேயே சுருட்டி வையேன்! வெட்கமா? நான் வேணுமானால் இதோ முழுகிடறேன். நீ கழுத்துவரை இறங்கினப்புறம் இருவரும் ஒண்ணுதான், சரிதானே! இதோ One, two, three!” மூழ்கி எழுந்து கண் திறந்ததும், வாசலில் கயிற்றுக் கட்டிலில் நான் கிடக்கக் கண்டேன். வானில் கூடை கூடையாக வாரிக் கொட்டியிறைந்து கிடந்த நக்ஷத்திரங்கள் கண் சிமிட்டி என்னை ஏளனம் செய்து கொண்டிருந்தன. வாசற் கதவு இறுக அடைத்திருந்தது. உள்ளே சாவித்ரிக்கும் அவள் சித்திக்கும் நடுவே படுத்த வண்ணம் அவள் பத்ரமாயிருப்பாள். எங்கோ நாய் குலைத்தது. நள்ளிரவில், என்னின்று எழுந்த பெருங்கேவலில் நானே பயந்து போனேன். அடிவயிற்றில் கிளம்பிய மூச்சு அப்படியே உச்சி மண்டைவரை சுழித்துக் கொண்டு போய், தான் எழும்பிய வேகத்திலேயே கூரையில் அடிபட்டு விழும் பக்ஷி போல் தடாலென்று விழுந்தது. பிறகு தான் அழுகை வந்தது. இரக்கமற்ற நக்ஷத்ரங்கள். இரக்கமற்ற அமைதி. இரக்கமற்ற அழுகை. |