அபிதா

3

     வழியில், கழனிக்கட்டில், ஒரு ஏற்றம் இறைக்கின்றது. கிணற்று விளிம்புக்குமேல் ஒரு தலைப்பா மட்டும் தெரிகின்றது. மேலே ஏற்றக்கோலின் இரு நுனியிலும் இருவர் ஏறி இறங்கி ஒருவரையொருவர் ஓயாமல் தேடி ஒருவரையொருவர் அடையாமல் மாறிமாறி வருகின்றனர். கீழே சால் கவிழ்ந்ததும் கிணற்றையொட்டிய கல்முகவாய் வழி ஜலம் ஜலஜல சலசல அலைகள் துள்ளிக் குதித்துத் திரிந்துகொண்டு, நுரைத்துக் கொண்டு, சுழித்துக் கொண்டு தெறித்துக் கொண்டு கேளிக்கையாடிக் கொண்டு பாய்ந்து சரிந்து பரவி சிற்றருவிகள் பிரிந்து பச்சைப்பசேல் பயிர்க் கால்களில் குறுகுறுவென உருவி ஓடுகின்றன.

     தத்தளிக்கும் தராசுபோல் மேலே இருவர் மிதிப்பில் ஏற்றக்கோல் வானைக் குறி பழகும் அம்பு போல் நிலை கொள்ளாது ஏறி இறங்குகிறது.

     சாவித்ரிக்கு இதெல்லாம் புதிது. வைத்த விழிமாறாது பார்க்கிறாள். வண்டி, பாதையின் மேடு பள்ளங்களில் குடிகாரன்போல் தள்ளாடிச் செல்கிறது.

     சின்னஞ்சிறு சிட்டுக் குருவி - உடல் பூரா நீலமைக் கறுப்பு, மூக்கு சிவப்பு, வால் நீளம். சொல்லாமலே வீங்கி வெடித்துவிடப் போகும் ரஹஸ்யம் போல் மார் முட்டிக் கொண்டு புதருக்குப் புதர், செடிக்குச் செடி, மலருக்கு மலர் தொட்டுத் தன் ரஹஸ்யம் சொல்ல, தன்னைப் போல் ஒன்றை - இல்லை, எதையேனும் ஒன்றைத் தேடிப் பறக்கின்றது. கூடவே என் மனம் இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறது.

     புது இடத்தைக் காணும் வியப்பைக் காட்டிலும் பழைய இடம், பழகின இடம் திரும்பும் உள்ளக் கிளர்ச்சி தாங்க முடியவில்லை. தேங்கிவிட்ட நினைவுகள் கொந்தளிப்பு கண்டு உணர்ச்சிகள் ஒருங்கே அழுத்தும் நிலை முற்றிலும் இன்பம் என்று சொல்வதற்கில்லை. திரும்பியே வந்திருக்க வேண்டாமோ? என்று கூட சித்தம் சலிக்கிறது. ஆயினும் ஒரு எண்ணம், ஒரே எண்ணம் - நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருந்தது ஒரு பொறி, நினைவின் காற்றுவாக்கில் பற்றிக் கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலையாக்கி என்னைத் தன்முன் உந்தித் தள்ளிச் செல்கிறது. நானும் பற்றி எரிகிறேன். ஒன்று கண்டேன். எதுவுமே மறப்பதற்கில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே.

     இப்போது சகுந்தலை எப்படியிருப்பாள்?

     ஆனால் அவள் மறந்தால் என்ன, நினைவில் வைத்துக் கொண்டிருந்தால் என்ன? அதனால் நாங்கள் அடையப் போகும் பயன் என்ன? அவள் என்னை மறந்தாலும் அவளைக் குற்றம்கூற எனக்கென்ன வாய் இருக்கிறது? ஆனால் இப்படி ஒருதரம் மனம் தனக்குப் புத்தி சொன்னாலும், மறுகணமே தறிதெறித்துப் புத்தியையும் தன்னுடன் இழுத்துக் கொண்டு, சென்று போன வருடங்களின் கல், முள், மேடு பள்ளங்களில் விழுந்தடித்து ஓடுகிறது. நெற்றியில் வேர்வை கொப்புளிக்கிறது. அசதியில் வண்டியில் தலை சாய்க்கிறேன்.

     சக்கு, உனக்கும் எனக்கும் இடையே பத்து வயதிருக்குமா? சக்கு, உனக்கு நினைவிருக்கா? ஒரு சமயம் பக்கத்தூருக்கு உன் அப்பாவோடு கந்தசஷ்டி சூரசம்மாரத்துக்குப் போயிருந்தோமே! அதாண்டி, சுவாமியைக் கையும் காலையும் முறித்து, வில்லையும் அம்பையும் கொடுத்து அலங்காரம் பண்ண உன் அப்பாவை அழைத்திருந்தார்களே! கூட்டம் முழி பிதுங்கியது. வாணம், சாமி ‘ஸைடி’லிருந்து கயிறு மேலே சீறி வந்ததும் சூரன் தலையை மாத்தரது உனக்குத் தெரியல்லேன்னு அழுதையே! அப்போ கூட்டத்தில் உன்னைத் தோள் மேலே தூக்கிண்டு நின்னேனே, உனக்கு நினைவிருக்கா? அப்போ நீ பாவாடையும் சொக்காயும் தான் அணிஞ்சிருந்தே. சின்னப்பொண்ணு. எட்டு வயசோ பத்து வயசோ, என் தலைமயிரைக் கொத்தாப் பிடிச்சுண்டு என் தோள்மேலே உட்கார்ந்துண்டு வேடிக்கை பார்த்தையே, நான் கூட மயிரைப் பிடிச்சு உலுக்காதேடின்னு கத்தினேனே உனக்கு நினைவிருக்கா?

     அம்பி! உனக்கு நினைவிருக்கா? அன்னி ஒருநாள் நவராத்ரி போது ‘நகுமோமு’ நன்னா பாடினேன்னு அம்மா உன்னிடம் என்னை அந்தப் பாட்டைக் கத்துக்கச் சொன்னாளே! நீயும் கத்துக் கொடுத்தியே! அம்பி, என்னதான் இருந்தாலும் உனக்கு நல்ல குரல். என்னதான் கட்டுப் போட்டாலும் உன் பாட்டு எனக்கு வருமா? இருந்தாலும் எனக்குத் தாளம் தப்பிப் போச்சுன்னு என் தொடையிலே பட்டுனு ஒண்ணு வெச்சையே! நான் அழுதுட்டேன். அப்போ நான் பெரியவளாகல்லே. பாவாடை சொக்காயில் சின்னப் பொண்ணுதான். நீ கூட அப்புறம் ‘அழாதேடி அழாதேடி’ன்னு சமாதானம் பண்ணினையே, எனக்குப் புடிச்ச புளிப்புமிட்டாய் வாங்கிக் கொடுத்தியே! ‘அம்மாகிட்டே சொல்லாதே’ன்னு கெஞ்சினையே! நான் சொல்லுவேனாடா அம்பி! ஆனால் அடி வலிச்சால் அழாமல் இருக்க முடியுமா?

     சக்கு, அடுத்தாப்போலேயே நீ பெரியவளாயிட்டே.

     அம்பி நீ நாலு நாளைக்கு திகைப்பூண்டு மிதிச்ச மாதிரி ஊமைக் காயம்பட்ட மாதிரி, வாயடைச்சுப் போய் கண்ணாலே என்னைத் தேடித்தேடித் தவிச்சுட்டுப் போனையே! எனக்கு மறைப்பு கட்டியிருந்த ஓலைத் தடுக்கின் பின்னாலிருந்து பார்த்தேன். உன்னைப் பார்க்க ஒரு பக்கம் சிரிப்பா வந்தது, ஒரு பக்கம் பரிதாபமாயிருந்தது. ஆனால் அதுக்கப்புறம் எனக்கே ஏக்கம் பிடிச்சுப்போச்சு அம்பி. அம்மா சட்ட திட்டம் பண்ணிப்பிட்டா. ‘நீ இனிமேல் யாரோடும் இஷ்டப்படி பேசிண்டு கூத்தடிக்கப்படாது. உன் இஷ்டத்துக்குக் கூடத்துக்கு வாசல்லே வந்து நிக்கப்படாது’ன்னு. திடீர்திடீர்னு நினைக்காத சமயத்தில், எதிர்பாராத இடத்தில், எதிரே, பின்னாலிருந்து, பக்கத்திலிருந்து அம்மா புதையல் காக்கும் பூதம்போல் திடீர்திடீர்னு முளைக்கறப்போ ‘பகீர் பகீர்’னு வயத்தைச் சுருட்டறது. குத்தமில்லாத இடத்தில் என்ன குத்தம் பண்ணினேனோன்னு சதா திகில்; வீடு ஜயிலாயிடுத்து. வீடென்ன, இந்தப் பரந்த பூமியையே அம்மா சுவரைப் போட்டு வளைச்சுப்பிட்டாள். என்னவோ பாதி புரிஞ்சதும் புரியாததுமா ஏதோ சொல்றா. ‘பொண்ணைப் பெத்துட்டேனே! உனக்கென்ன, உன் வேளை வந்ததும் வயத்தை விட்டுக் கழிஞ்சுட்டே. நீ விட்ட இடத்தில் நெருப்பை வெச்சுக் கட்டிண்டிருக்கேனே!’ என்கிறாள்.

     அப்புறம் அப்பா, ‘இதென்ன? அம்பி நம்மாத்துப் பையன்! குழந்தைகளை இப்படி ஹிம்ஸிச்சா என்னதான் ஆறது? எங்கே தான் போறது? உன் அமுலைப் பார்த்தால் நானே என் பெண்ணோடு பேச முடியாது போலிருக்கே!’ன்னு ஒருநாள் இரைச்சல் போட்டப்புறம்தான் அம்மா சத்தே அடங்கினாள். அப்புறம் அவளுக்கும் தள்ளல்லே. கோவில் வேலையிலே பாதி அப்பாவுக்கு ஒத்தாசையா நானே பண்ற நிலைமை வந்தப்புறம் ‘உனக்கு நீதான் காவல்’னு சொல்லியே விட்டுட்டாள்.

     ‘எல்லாமே முடிந்தவரைக்கும் தான்!’

     ‘என்ன கேலி பண்றயா?’

     ‘கேலியில்லை. உண்மையே அதுதானே! எல்லாம் முடிந்த வரைக்கும்தான்.’

     ‘அம்பி அப்புறம் உனக்கு நினைவிருக்கா?’

     ‘சக்கு உனக்கு நினைவிருக்கா?’

     மாறிமாறி

     நானே அம்பி

     நானே சக்கு

     வாய்விட்டுப் பேசாத பாஷையில்

     மனம்விட்டு ஒருவருக்கொருவர் எண்ணியதாய் எண்ணிக் கொண்ட எண்ணங்களை எண்ணி எண்ணி நினைவின் சுவடுகளில் நினைவைப் பொருந்தி வைத்துப் பார்த்துக் கொள்வது தவிர வேறென்ன செய்ய முடிகிறது?

     இப்போ சக்கு எப்படியிருப்பாள்?

     ராகம், தாளம், பல்லவி.

     பததனி நிததம ஸமகஸ

     சக்கு எப்படியிருப்பாள்?

     ‘லொடக்’ ‘லொடக்’ ‘லொடக்’ - இதோ வண்டி அக்ரஹாரத்தின் முனை திரும்பிவிட்டது. அக்ரஹாரமாம்! அந்த நாளிலேயே நாலு வீடுகளில் மூணு பாழ். இப்போ நாலாவது நடு வீடு குருக்கள் வீட்டுக்கும் தள்ளாமை வந்துவிட்டது. ஒற்றைக்காலில் நொண்டிக் கொண்டு நிற்கிறது.

     நொண்டி குருக்கள் வீடு நொண்டி வீடு.

     இப்போ சக்கு எப்படி இருப்பாள்?

     உடல் ஒரு கூடு எனில் இதயம் அதனில் குருவி. திடீர் திடீர் திகில்திகில் தொண்டைவரை பறந்து பறந்து மார்த்தட்டில் விழுந்து விழுந்து எழுகையில் அடி வயிறு பகீர்பகீர் - அதன் சிறகுகளின் படபடப்பு என் நெஞ்சின் துடிதுடிப்பு. குருவி கொத்து கொத்தெனக் கொத்திக் கொத்தியே மார்ச் சுவர்கள் பிளந்து விடும் போல் வலி விண் விண் விண் - ஒரு கையால் மார்பை அழுத்திக் கொண்டே வண்டியை விட்டிறங்குகிறேன்.

     வாசற்கதவு மூடியிருக்கிறது. அந்தக் காலத்துத் தேக்கு. சுவர் விட்டுக் கொடுத்துவிட்டாலும் அது இன்னும் விட்டுக் கொடுக்கவில்லை. பல்லிருக்குமோ யில்லையோ விசுவாசம் மாறாமல் நிலைவாசலைக் கவ்விக் கொண்டிருக்கிறது. நடுச்சட்டத்தில் முழு முழியாகப் பித்தளைக் குமிழ்கள்.

     இப்போ சக்கு எப்படியிருப்பாள்?

     நிதமா நிதம்மா நிதம்ம்ம்ம் - ம்ம்ம்ம்ம்ம்ம்

     செவியோரம் ரீங்காரம் புவனத்தையே வளைத்த ஓங்காரம் இதிலிருந்து இந்த நியமனத்துள் எத்தனை சக்கு எத்தனை ‘நான்’ எத்தனை சாவித்ரி எத்தனை எத்தனை -

     - ஆனால் சக்குவின் ஸ்வரஸ்தாங்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. கதவு திறந்ததும் “அம்பி வந்தையா?” என்று ஒரே விளிப்பில், கூடத்தில் சிதறிக் கிடக்கும் பெரும் குப்பைகளை ஒரே கைவீச்சில் ஒதுக்கித் தள்ளுவதுபோல் இத்தனை வருடங்களின் கோடுகளை அந்தத் தருண மகிமையில் ஒரே கணத்தில் அழித்துவிடுவாள்.

     கதவு திறக்கிறது. கூடவே கிண்கிண் என் இதயத்திலும் ஒரு -

     நானே சரியில்லை. எனக்கே தெரிகிறது. நான் குடித்ததில்லை. ஆனால் அரை போதையில் இருக்கிறேன். நெஞ்சிற்குள் பூக்கள் கொத்துக் கொத்தாய்க் குலுங்க, ஒரு கிளை அசைகிறது; உள்ளெல்லாம் ‘கம்’ -

     சக்கு -

     ஆமாம், சக்குவேதான்!

     But my God! நான் கரடிமலையை விட்டே போகவில்லையா? இதுவரை எனக்கு நேர்ந்ததெல்லாம் வெறும் கனவு தானா? மனிதன் பிறவியெடுத்து வாழ்வோடு உறவாடி இறந்து போம் வரை ஒரு ஜன்மா பூராவே கனவாய்க் கண்டு விழித்து எழுந்தும் விட முடியும் என்பது உண்மைதானா? அப்படி ஆயின் எது கனவு? இதுவரை கண்டதா, அல்ல இப்போ காண்பதா?

     இல்லையேல் சக்குமட்டில் உருமாறா மார்க்கண்ட ரஹஸ்யம் எப்படிக் கண்டாள்? வயது இவளுக்கு மட்டும் நான் விட்டுப் போன சமயத்திலேயே எப்படி உறைந்து போயிற்று? கனவு என்பதென்ன? விழிப்பு என்பதென்ன?

     நாமே சரியாயில்லை. என்னுடைய இப்போதைய நிலையில் கோடுகள் கலைந்திருந்தன.

     “சக்கு!”

     அவள் பெயர் என் நெற்றி நரம்புகளில் புடைத்து, என் கண்களில் உருவாயிற்றோ என்னவோ வார்த்தையாக வெளிவரவில்லை. எனக்கு நா எழவில்லை.

     ஆனால் அவள் கண்களில் அடையாளமில்லை. அன்னியனைக் காணும் திகைப்புடன், லேசான அச்சத்துடன், வெட்கத்துடன் பின்னிடைந்தாள்.

     அடுத்தபடி என் நா கண்ட சொல் : “அப்பா?”

     “அப்பா கோவிலுக்குப் போயிருக்கா.”

     “அபிதா! வாசல்லே யாரு?” உள்ளிருந்து ஒரு பெண் குரல். வெளி ஆளை உள்ளிருந்தே மோப்பங் கண்ட குரல். சற்று உர்த்தண்டம் தான்.

     “யாரோ அப்பாவைத் தேடிண்டு வந்திருக்கா.”

     ஈரக்கையைத் தலைப்பில் துடைத்தபடி ஒரு மாது உள்ளிருந்து வந்தாள். வாட்ட சாட்டமான தேகம். கண்டதும் கண்ணைச் சட்டென உறுத்துவது கன்னத்தில் பெரிய மறு. என்னைப் பார்த்ததும் மேலாக்கைத் தோள்மேல் இழுத்துக் கொள்ள முயன்றாள். ஆனால் அந்த நாஸுக்கான ஸாஹஸம் அந்தத் தேகவாகுக்கு ஒவ்வவில்லை. அமரிக்கையின் அடையாளமாயில்லை. மறந்து போனதை நினைவுபடுத்திக் கொள்ளும் சைகையாய்த்தான் அமைந்தது.

     “வாங்கோ! நீங்க யாரு. தெரியல்லியே!”

     “நொண்டி குருக்கள்...” என் குரல் தடுமாறிற்று.

     “அவர் காலம் ஆயிடுத்தே!”

     “மாமி?”

     “எந்த மாமி? மாமியாரா? நான் வரத்துக்கு முன்னாலேயே அவர் சுமங்கலியா போயிட்டாரே!”

     எனக்குக் கண்கள் இருண்டன. திடீரென வேளையில் அஸ்தமனம் படர்ந்து விட்டாற்போல் தோன்றிற்று.

     “அப்படின்னா - அப்படின்னா - சக்கு?” என் எதிரே தாவணியின் கொடுக்கு நுனியை விரல்களினிடையே திருகிக் கொண்டு நின்ற சக்குவைப் பார்த்து மலர மலர விழித்தேன்.

     அந்த ஸ்திரீயின் கன்னத்து மறு திடீரென சிலிர்த்துக் கொண்டு இன்னும் பெரிதானாற்போல் எனக்குப்பட்டது.

     “நீங்கள் ஏதேதோ பழைய பேரெல்லாம் சொல்றேள். வெளியிலேயே நிக்கறேளே உள்ளே வாங்கோளேன்! வாசலில் வண்டி நிக்கறதே! மாமியும் வந்திருக்காளா? யாராயிருந்தாலும் உள்ளே வாங்கோ... நொண்டி குருக்கள் வீடு இதுதான்... அபிதா நீ போய் அப்பாவை அழைச்சுண்டு வா. பேட்டைப் பிள்ளையாருக்கு சாயங்காலம் தண்ணி கொட்டிக்கலாம்னு சொல்லு...”

     இப்போது எனக்குப் புரிந்தது. எது கனவு எது நனவு என்று. பூமி, தானும் சுழன்று கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறதென்று. அதன் கோளத்தில் சூரிய ஒளியும் வெப்பமும் பட்டு, பட்ட இடம் பகல், மற்ற இடம் இரவு என இரவும் பகலும் மாறி மாறி வரும் விளைவாய், வித்து, காய், கனி, வயது, வயோதிகம், பிறப்பு, வாழ்வு, தாழ்வு, பிரிவு, சாவு, விதி, வினையென, நிகழ்ச்சியாய் மாறிய வண்ணம், நியதி, ‘எனக்கு’, ‘உனக்கு’ என இரக்கம் பார்க்காமல், தனக்கே இரக்கம் பார்க்க இயலாது, தன்னைத் தானே துரத்தி வருகிறதென்று.

     சாமான்களை இறக்கிவிட்டு, ‘காப்பி’ என்ற பேரில் சூடாய்க் குடித்த பின்னர், சாவித்ரிக்கு மண்டையிடி குறைந்து சற்றுத் தலைதூக்கித் தன்னைச் சுற்றிப் பார்க்க முடிந்ததும், மண் தரையும் அதில் அங்கங்கே குழிகளும், சில இடங்களில் தலையிலிடிக்கத் தழைத்துவிட்ட கூரையும், கூடத்து மூலையில் குதிராய் இடத்தை அடைத்துக் கொண்டு இருட்டடித்து நின்ற குதிர் - (அதில் ஏதேனும் இருக்கோ?) - சுவரில் செம்மண்ணில் வரைந்து வருடக்கணக்கில் மேலிருந்து அழுக்கு மழை ஜலம் ஒழுகிக் கரைந்த வரலக்ஷ்மிக் கலசவடிவம். மேலே பரண்கள் அடைசலில் பகலிலேயே பயமற்று விளையாடும் எலிகள், - வீட்டில் இப்போது பாதிக்குமேல் வானம் பார்க்கிறது - சுவர்களில் பாசி, திட்டுத் திட்டாய்ப் படர்ந்து அதில் காளானும் நாய்க்குடையும் விருத்தி. வீட்டில் உருப்படியாப் புறாக்கூண்டு போல் வீட்டின் ஒரே அறையில், உடைந்த பீரோ, புளிப்பானை, தையல் இலைக்கட்டு, கண்டான்முண்டான்களின் நடுவே உறைகிழிந்து, எண்ணெய்ச் சிக்குப்பிடித்து கட்டியும் முட்டியுமாய்ப் பஞ்சு கட்டிப்போன தலையணைகள், கிழிந்த பாய், ஓலைத் தடுக்கு, பல நாள் ஓதத்தின் வாடை... இந்த உலகத்தை இதற்கு முன் சாவித்ரி எங்கு பார்த்திருக்கிறாள்?

     மாமி பறந்து பறந்து வேலை செய்கிறாள். புழக்கடைக்குப் போவதும் கொத்தமல்லியை உருவிக்கொண்டு வருவதும் - மறந்தாற்போல் திரும்பவும் குண்டு குண்டென குலுங்கக்குலுங்க ஓடிப்போய் இரண்டு பீர்க்கங்காய்களைப் பறித்து வருவதும், இடையிடையே வாசற்பக்கம் போய் அங்கே யார் இருக்கிறார்களோ இல்லையோ - “ஏ அஞ்சலை! ஏ அழகம்மே! ஏ பாஞ்சாலே!” என்று ஏதேதோ பேர்களை உரக்கக் கூவுவதும் - (தயிருக்குப் போலும்!) - “ஏன் இந்தப் பிராம்மணனை இன்னும் காணோம்? ஊசியும் தட்டானும் உருண்டோடிப் போயிட்டான்னு அழைச்சுண்டு வரப்போனதையும் அட்ரெஸ் காணல்லே!” என்று அங்கலாய்ப்பதும்...

     அவள் கணவன் தான் என்னை முன்னால் அடையாளம் கண்டுகொண்டான். அவனோடு பேச்சு தொடுத்த பின்னர் எனக்கும் ஞாபகம் வந்தது. அந்த நாளில் இந்த வீட்டுக்கு இரண்டு அல்லது மூணு மாதங்களுக்கு ஒரு முறை ஸைக்கிளில் வந்து ஓரிருவேளை தங்கிவிட்டுப் போவான். நொண்டி குருக்களுக்கு ஒன்றுவிட்ட - “இல்லை, எட்டு விட்டு எட்டிவிட்ட (இது அவர் பாஷை) - மருமான். எங்கள் குலமே நசித்த குலம் என்பதற்கு இந்தப் பையனும் ஒரு அத்தாக்ஷி” என்று உடனே ஒரு கதை சொல்வார்.

     இவனுக்கும் வர்க்க அடையாளம் முற்றிலும் விட்டுப் போகாமல், மூக்கின் மொண்ணையில், கண்களில் ஆழமான குழியில் (இரண்டு முட்டை எண்ணெய் விட்டு ஒரு திரி ஏற்றலாம்), காலைச் சற்று சாய்த்த நடையில், அவன் மாமா சாயல் இவனுக்கும் அடித்தது.

     “போகப் போக மாமாவால் ஒண்ணுமே முடியல்லே. மாமியும் முந்திண்டுட்டப்புறம் இருக்கற ஒரு கண்ணும் அவிஞ்சு போச்சு. வீட்டுக்குள்ளேயே நடமாட்டம் சுவரைத் தொட்டு தூணைத் தொட்டுத் தரையைத் தடவித்தான். இந்தத் திருவேலநாதர் தலையிலே தண்ணியைக் கொட்டவும் முடியல்லேன்னா அவர், ‘இந்தா சர்க்கரையா எண்ணிக்கோ’ன்னு மண்ணை அள்ளித்தான் வாயில் போடறார். எனக்கு ஆள் அனுப்பி என்னையே வீட்டோடு வெச்சுண்டுட்டார். வீட்டை விட்டு ஓடின பையன் முகம் எப்பவோ மறந்து போச்சு. வயசு ஆக ஆக, நினைவு சுழலச் சுழல, அவன் பேரும் மறந்து போச்சு. ஆனால் நீங்களே சொல்லுங்கோ, இந்த மாதிரிப் பிள்ளை நினைவு இருந்தும் ஒண்ணுதான் மறந்தும் ஒண்ணுதான். ஆனால் உங்களைப் பத்தி அடிக்கடி சொல்லுவார்: ‘நான் ஏதாவது பேசினால் அதைக் கேட்க அந்தப் பையனாவது இருந்தான். அவனும் காணோம்’னு.”

     “அவர் சொத்துக்கெல்லாம் நான் தான் வாரிசு. அவர் சொத்து என்ன, எவ்வளவுன்னு உங்களுக்குத் தெரியாததல்ல...” வீடு முழுதும் ஒரு கையால் வளைத்து உள்ளங்கையை விரித்துச் சிரித்தான். புகைந்தது. கீழ் வரிசையில் இரண்டு பற்கள் ஓட்டை.

     “வசனம் சொல்லுவா, ‘பிராம்மணன் தலையில் சிவலிங்கத்தைக் கட்டின மாதிரி’ன்னு. மாமா அப்பட்டமா அப்படியே நிறைவேத்திப்பிட்டார். திருவேலநாதர் என் கழுத்துலே உட்கார்ந்து நசுக்கிண்டிருக்கார். நான் மட்டும் தனியாயிருந்தேன்னா தனிக்காட்டு ராஜா. இங்கே எனக்கென்ன வேலை? பிடரிவரை முடி, தொப்புள் மட்டும் தாடி மீசை வளர்த்துண்டு, காஷாயம் உடுத்தி வடக்கே எங்கேனும் கங்கைக் கரையில் உட்கார்ந்து ‘பம்பம் மஹ்தேவ்’ - வேறொண்ணும் தெரிய வேண்டாம் - சொல்லி விபூதி குங்குமம் பிடிச்சுக் கொடுத்தேன்னா - மிச்சப்பல்லையும் தட்டிட்டு அத்தனையும் தங்கப் பல்லாக் கட்டிப்பேன்...”

     (மனிதனுக்கு ஆசை எப்படியெல்லாம் பேசுகிறது!)

     “... அங்கிருந்து வழி தப்பிப் போனாப் போல இந்தப் பக்கம் ஒரு ஒரு சமயம் பரதேசி வரானே, நம்நாட்டு ஆண்டி போல் வத்தக்காச்சியாவா இருக்கான்? எண்ணெய்க் குடத்திலிருந்து பிடுங்கின மாதிரி - இடுப்பா அது! முத்தின ஆலமரத்தின் அடிமரம். இந்தப் பக்கம் அந்தப் பக்கமும் ரெண்டு பேர் அணைச்சாலும் எதிருக்கெதிர் கைதொடாது. ‘பம்பம் மஹ்தேவ்’ என்கிறான். ஏப்பம் விடறமாதிரி. அடித் தொண்டையில், மலையைக் குடைஞ்சு ரயில் ஓடரது. அதிலே ஏறிண்டே திரும்பவும் அவன் ஊர்பார்க்கப் போய்ச் சேர்ந்துடலாம். இவன்கள் எல்லாம் ஏன் இந்த க்ஷாமபூமிக்கு வரான்கள்...?”

     இந்த மனுஷன் சம்பந்தா சம்பந்தமில்லாமல் என்னவோ பேத்திண்டே போறானே. இந்த ப்ரதாபமெல்லம் இவனை எவன் கேட்டான்? என் நாவில் மந்திரம்போல் ஒரு நாமம் துடித்தது. வெளிப்பட்டால் அதன் நயம் உடனே பொரிந்துபோம். உள்ளிருந்தால், நான் வெடித்து விடுவேன். அவ்வளவு நுட்பமான, வேதகமந்த்ரம், வேதனாமந்த்ரம்.

     என் வேதனை தெரிந்துதான் வேணுமென்றே என்னை வதை செய்கிறானா? அல்ல - எல்லாம் தான் வெட்ட வெளிச்சமாயிருக்கிறதே. அவன் சொல்லி நான் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது என்று சொல்லாமலே விடுகிறானா? இரு மல்லர்கள் சமயம் பார்த்து ஒருவனுடன் ஒருவன் மோதிக் கட்டிப்பிடிப்பதற்கு முன், கோதாவில் ஒருவரையொருவர் வளைய வருகிறோம்.

     பரிசு?

     அவன் அனுபவித்து அவனிடமிருந்து பறந்து போயாச்சு.

     என் நெஞ்சுகள் பறந்து தவிக்கிறது.

     “இலை போட்டாச்சு!”

     கணீரென அவன் மனைவியின் குரல் சமயத்தைக் கலைக்கிறது.