அபிதா

13

     “மாமீ! மாமாவை எண்ணெய் தேய்ச்சுக்கச் சொல்லுங்கோ! வந்த அன்னிக்கே நான் சொல்லியிருக்கணும். ஆனால் அப்போ எண்ணெய்ச் சட்டி காலி. ‘கப்சிப்’புனு இருந்துட்டேன். என்ன சொல்றேள், பழக்கமில்லையா? நன்னாச் சொன்னேள் போங்கோ! இந்தக் கந்தக பூமியிலே எண்ணெய் முறை தப்பிப் போச்சுன்னா, நடந்துண்டு இருக்கறத்துலேயே சொக்கப்பானையா எரிஞ்சு போயிடுவோம், வரட்டியே வேண்டாம். நாமா ஏன் பஸ்மாசூரம் பண்ணிக்கணும்? அவரையே மாமா தலையிலே ஒரு கை வெக்கச் சொல்றேன். மிளகாய்ப் பழம், இஞ்சி, புழுங்கலரிசி எல்லாம் போட்டுக் காய்ச்சி வெச்சிருக்கேன். உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது. இஞ்சியைக் கடிச்சுத் தின்னச் சொல்லுங்கோ. கரகரன்னு பிஸ்கோத்து தோத்துடும். அத்தனையும் சத்து. எங்கே போயிட்டார் எங்காத்துப் பிராம்மணன்? சமயத்தில் காணாமல் போறதில் வரப்ரசாதி!”

     கடைசி வார்த்தைகள் திடீரென கர்ஜனையில் உயர்ந்தன.

     ஆனால் குருக்கள் எங்கேயும் போய்விடவில்லை. கையில் எண்ணெய்க் கிண்ணியுடன் திடீரெனச் சுவர் மூலையிலிருந்து முளைக்கிறார். மறுகையில், திடீரென எங்கிருந்தோ, செப்பிடு வித்தை போல் ஒரு மணை தோன்றிற்று. குட்டி மணை.

     என் தோளை மெதுவாய் அழுத்தி, மணை மேல் என்னை அமர்த்தி, தலையில் எண்ணெயும் வைத்தாகி விட்டது. எல்லாம் அரை நிமிஷம்.

     உடனே ‘பரபர’ தேய்ப்பில் மண்டை ‘கிர்ர்ர்ர்’ - தலை வயிற்றுள் போய்விட்டது. மண்டையுள் மத்துக் கடைந்தது.

     கரடி மலையை விட்ட பின் எண்ணெய் மறுபடியும் இப்போத்தான்.

     கடியார முள்ளை இப்படியும் திருப்ப முடியுமோ?

     எண்ணெய் ஸ்நானம் இந்தப் பக்கத்து விருந்தோம்பலின் இன்றியமையாத சடங்கு.

     இத்தனை வருடங்களுக்குப் பின் இப்போது தேய்த்துக் கொள்வதால் எனக்கு என்னவானாலும் இதைத் தப்ப முடியாது.

     அதிதி வாசற்படியேறி, திண்ணையில் உட்கார்ந்ததும், வீட்டுக்காரி ஏந்தி வந்த தம்ளர் தண்ணீரை, உப்போ தித்திப்போ, தேவையோ இல்லையோ, குடித்தாக வேண்டும். பிறகு தான் கால் அலம்பவே உள்ளே அனுமதி. பிறகு நாகரிகத்தின் அறிகுறி காப்பி என்ற பேரில் காவித் தண்ணீரின் குமட்டல் அடங்கினதோயில்லையோ, “வாடாப்பா எண்ணெய் தேய்ச்சுக்கோ” -

     - ஐயையோ என்ன நடக்கிறது?

     - கண்ணில் ஒரு கரண்டி எண்ணெய், விழிகளில் திடீரென வைத்த நெருப்பில் உடலே நெளிகிறது.

     “உஸ் அப்பப்பா!”

     தொண்டையில் எச்சில் கொழகொழத்துக் கடைகிறது. விழியுள் என்னைச் சூழ்ந்து கொண்ட மதுரை எரிப்பில், எங்கிருந்தோ ஒரு குரல் - குருக்கள் அல்ல; வந்த அன்று பேசின பின் அந்த மனிதன் வாய் அனேகமாய்ப் பூட்டுதான் - ஒரு குரல், மந்திர உச்சாடனம் போல்:

     “நாள் கழிச்சுத் தேய்ச்சுண்டாலே இப்படித்தான். கண்ணிலிருந்து ரெண்டு சொட்டு ஜலம் கழண்டால் சரியாப் போயிடும். மாமாவைக் கையைப் பிடிச்சு அழைச்சுண்டு போங்கோ. அபிதாவை வென்னீரை விளாவச் சொல்லியிருக்கேன். நான் கடைவரைக்கும் போய் வரேன், கண்டந்திப்பிலி வாங்க!”

     பேசிக் கொண்டே குரல் தூரத்தில் ஓய்ந்தது.

     என்னை ஒரு கை பிடித்தது. மெதுவாய்த்தான். என்னுள் சினம் மூண்டது. என்னைப் பிடித்த கையை வெடுக்கென உதறினேன். உதறின கை என்னைத் திரும்பவும் பிடிக்க முன்வரவில்லை. ஐயோ, விழிவயண்டு விடும் போல் வதைக்கிறதே! கண்ணைக் கசக்கிய வண்ணம், நடுக்கூடத்தில், நடுக்காட்டில் நிற்கிறேன்.

     என் பக்கத்தில் ஒரு சிரிப்பு. விழித்துப் பார்க்கிறேன். நல்ல கண்களே நெற்றிக் கண்களாகி விட்டன.

     என் அவஸ்தை சாவித்ரிக்கு நகைப்பு. நகைக்க இப்போ அவள் முறை.

     சிந்திய கௌரவத்தைத் திரட்டி, நிமிர்ந்த முதுகில் சுமந்து கொண்டு, கொல்லைப்புறம் செல்கிறேன். விழி தெறிக்கிறது. தலை சுற்றுகிறது. காலடியில் ஏதோ தடும் -

     “ஐயோ!”

     அபிதா அலறினாள்.

     ஒரு கை என்னைப் பிடித்துக் கொண்டது. உதறினேன்.

     ஆனால் இந்த சமயம் குருக்கள் என்னை விடுவதாயில்லை. என் கூச்சம், கோபம் அவருக்குச் சட்டையில்லை. என்னை அழுத்திப் பிடித்துக் கொண்டு, முதுகில் சீயக்காய்க் குழைவைப் பூசித் தேய்க்கிறார்.

     முதுகுத் தேய்ப்போடுதான் எண்ணெய்ச் சடங்கு பூர்த்தி.

     கறீல் -

     ஸன்னமானதோர் வெம்மை, பிடரியில் கண்டு, வேர் பிரிந்து, ஆணி வேர் நடுமுதுகில் இறங்குகிறது.

     மண்டையும் நினைவும் அமிழ்ந்து கிடக்கும் அரைமயக்கத்தில், விழிகளில் எண்ணெய்க் கரிப்பின் முழுக்குருடில், சூடு என்று தவிர, சட்டென அடையாளம், உணர்வில் உடனே கூடவில்லை.

     சுட்டிய விரல் நுனியின் ஈர்ப்பில் புருவ நடுவைத் துருவும் வேதனை போல் உடல் பூரா, காலிலிருந்து தலைநோக்கி ஒரு காந்தம் ஊடுருவிக் கடுத்தது.

     மொண்டுமொண்டு, தலையிலும் தோளிலும் மாறிமாறிக் கொட்டிக் கொள்கிறேன். ஆனால் பிடரிமேல் நூல்பிடித்து விழுந்து கொண்டிருக்கும் இந்தக் கிண்டி நீரின் நெருப்பு, தந்தியறவில்லை. நேரே முதுகுத் தண்டிலிருந்து நரம்பு தானே கண்டு மீட்டும் இந்த இன்பமும் துன்பமும் ஒரே பங்கில் கலந்த இந்தத் தவிப்புக்கு ஈடு, பூமியைப் பிளந்து கொண்டு புறப்படும் முளையைச் சொல்வேனா?

     கோத்து வாங்க மறந்து, உள்ளுக்கிழுத்த மூச்சு உள்ளுக்கே இன்னும் இன்னும் இன்னும் - ஐயையோ! - இன்னும் இழுத்துக் கொண்டே போகும் இரக்கமற்ற தன்மையில், இந்த அபிஷேக தீர்த்தம், ஒரே சூட்டுச்சரடு, சதையுள் இறங்கி, அங்கங்கே ஏதேதோ மந்திரங்கள் புரிகின்றது. நாளடைவில், என் மூதாதையர் நாளிலிருந்தே, பரம்பரையாய் ஓய்ந்து போன யந்திரங்கள், ஏதேதோ சக்கரங்கள், தம்தம் முதல் சுற்றில், ரத்தத்தில் அசைய ஆரம்பிக்கின்றன.

     - இதென்ன, ப்ரக்ஞையுடன் புதுப் பிறவியின் பயங்கரம், ஆச்சர்யம், தோலுரிப்பு, அழல் நடுவில் ஸ்புடம், தபோக்னியின் கானல் நடுக்கம், கண்ணிருட்டு, விடியிருள், பிறந்த மனதோடு பிறந்த மேனியின் விடுதலை. காலமாய் உடலின் சருமத்வாரங்களை, நெஞ்சின் சல்லடைக் கண்களை அடைத்துக் கொண்டிருந்த அழுக்குகளின் எரிப்பில், பழைய வேகத்தை மீண்டும் பெற்ற புத்துணர்வில், ஜீவநதியின் மறு ஓட்டம், ஆதார ஸ்ருதியின் தைரியமான, கம்பீரமான மீட்டலின் சுடர்தெறிக்கும் சொடசொடப்பு, காண்டீபத்தின் டங்காரத்தில் உடல் பூரா, உணர்வு பூரா, மனம் பூரா ஜல் ஜல் ஜல் சிலம்பொலி!

     கண்ணைக் கசக்கி இமை சிமிழ் திறந்ததும்
     கண் கரிப்புடன் திரையும் கழன்று விழுந்து
     சித்திரத்துக்குக் கண் திறந்த
     விழிப்பு.

     என்னைச் சூழ்ந்து கக்கும் வென்னீரின் ஆவியினின்று என் புதுத் துல்லியத்தில் புறப்படுகிறேன்.

     உலையிலிருந்து விக்ரகம்.

     வென்னீரின் ஆவி கலைகையில், புலனுக்குப் பிதுங்குவது, பனிங்கிலடித்தாற் போன்று, நெருக்கமாய் நின்ற இரு பாதங்கள், அங்கிருந்து முழங்காலை நோக்கி விழியேறுகையில், பிடிப்பான கண்ட சதையின் வெண் சந்தனப் பளிச்சில், பச்சை நரம்பின் ஓட்டம் கொடி பிரிகிறது.

     அம்பா! உன் பாத கமலங்கள் எனக்கு மட்டும் தரிசனமா?
     அப்படியானால் நீ உண்டா?
     உன் பாதங்கள் தந்த தைரியத்தில்
     உன் முகம் நோக்கி என் பார்வை எழுகின்றது.
     ஓ, உன் முகம் அபிதாவ?

     உடல் பூரா நிறைந்த சிலம்பொலி, உலகத்தின் ஆதிமகளின் சிரிப்பா?

     அபிதா, இப்போது என் பார்வையில் நீ உலகத்தின் ஆதிமகளாயின், நீ நீராட்டுவித்த ஞானஸ்னானத்தில் நான் ஆதிமகன்.

     எனக்குத் தோன்றுகிறது. யாருக்குமே, ஏதோ ஒரு சமயம், இது போல் தரிசனம் நேரத்தான் நேர்கின்றது. மடிப்பு விரிந்தாற் போல், இதயம் திடீரென அகன்று அதனுள் எரியும் விளக்கு தெரிகிறது.

     நான் தான் உன் பிறவியின் முழு ஒளி
     உன் அவதார நிமித்தம்
     உயிரின் கவிதாமணி
     நீ அறியாது, தொண்டையில் மாட்டிக் கொண்டிருக்கும்
     உன் கனவின், தூண்டில் முள்
     தொன்று தொட்டு உலகின் ஆதிமகன், ஆதிமகளுக்கும்
     உனக்கும் இன்று வரை வழிவழி வந்த தொந்தம்
     வேஷங்கள் இற்று விழுந்ததும்
     அன்றிலிருந்து இன்று வரை
     மாறாத மிச்சம்
     உனக்கு உன் அடையாளம்.

     இந்த உதயம் தானாவே வந்து தோளைத் தொடுகையில், அதன் மோனச் சேதியை, அறிந்தோ அறியாமலோ வாங்கிக் கொள்ள, அந்த மோதலின் வேளையில், பாத்திரம் காத்திருக்கும் பக்குவத்துக்கேற்ப, ஒன்று - தன் மயமாக்கிக் கொண்டு விடுகிறது; அல்லது சதைத் தடுமனில் தெறித்து விழுந்த குண்டு போல், மஹிமை நீர்த்து மங்கி விடுகிறது.

     என் பிறவியே என் பாக்யம், பிறவிக்குப் பிறவி பாக்யத்தின் பெருக்கு என என் மறுமலர்ச்சியில் நான் அறிந்த பின் பிறவியின் ஒவ்வொரு தருணமும் உயிரின் கவிதாமணியாகக் கண்டு கோத்த மாலையை ஆதிமகளின் பாதத்தில் காணிக்கையாச் சேர்ப்பேனோ? அல்ல அவள் கழுத்தில் மாலையாகப் பூட்டுவேனோ?

     இது, இதுபோல இதுவரை காத்திருந்தும் நான் அடையாளங் கண்டு கொள்ளாததால் என்னைக் கடந்து போன தருணங்களின் வீணை நான் உணர்ந்து, வருந்தி, என் இழப்புக்கு உருகி, இனியேனும் ஏமாறாது காணத் தவிக்கும் ஏக்கத்திற்கேற்ப நான் பெறும் உக்ரத்தைப் பொறுத்தது.

     சகுந்தலை!

     அபிதா!

     தரிசனி!

     கரடிமலைச் சாரலில், பல்லக்குத் திரைவிலக்கி எனக்குக் கண் காட்டிய ராஜகுமாரி!

     ஹிமவான் புத்ரி ஹைமவதி!

     உங்கள் அத்தனை பேரின் பூர்வமுகியை இப்போது நான் பெற்ற உக்ரமுகத்தில் அபிதாவில் அடையாளம் கண்டு கொண்ட பின், நீங்கள் அனைவரும் நான் கண்ட முகத்தின் நாமார்ச்சனையாகத்தான் தெரிகிறீர்கள். இந்த சமயம், அபிதா, நீ கூட எனக்கு அவசியம் தானோ?

     ஆனால் இது என் விசுவரூபத்தின் வியப்பு. இப்போது நீயும் எனக்கு ஐக்யமாதலால், உன்னை என்னிலிருந்து தனியாய்ப் பிரித்துப் பார்க்க இந்த வேளையில் வழியில்லை. ஆனால் வியப்புத்தான். சந்தேகமில்லை. நீயலாது விழிப்பு ஏது? அபிதா, நீ என் காயகல்பம்.

     சாவித்ரி என்னைக் கவனிக்கிறாளோ? அவள் பார்வையில் கூர்மை என் மனப்ரமைதானோ? நான் போகையில், வருகையில் அவள் கண்கள் மெய்யாவே என்னைத் தொடர்கின்றனவோ? எங்கிருந்து திடீரென என் நடையில் இம்மிடுக்கு? குதிகால் குமிழ் பூமியில் பாவாத பரபரப்பு? என் கடைக் கண்ணில் அவ்வப்போது நான் உணர்ந்த தீப்பொறி? என்ன தான் அடக்க முயன்றும், உடலின் அசைவில், உள்ளே எரியும் ஜ்வாலையின் குபீர்? இந்தக் குங்கிலியம் எப்படி என்னுள் வந்தது? இதுதான் ஆத்மாவின் சுகந்தமா? திடீரென்று மட்டற்ற மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியில் சாவித்ரி முகத்தில் கூட அபிதாவின் சாயலை லேசாகக் காண்கிறேனோ? உடம்பு சரியாக இருக்கிறேனோ? திருட்டுத்தனமாய் வலதுகை நாடியை இடது கையால் பிடித்துப் பார்த்துக் கொள்கிறேன். சாவித்ரியின் ஆச்சர்யந்தான் என் ஆச்சர்யம் கூட.

     துருதுருப்பு ஒரு நிமிஷம் சும்மாயிருக்க விடவில்லை. வாசலுக்கும் கொல்லைக்கும், கூடத்துக்கும், கூடத்தில் உருப்படியாயிருக்கும் ஒற்றையறைக்குமாய் அலைந்து கொண்டிருக்கிறேன்.

     சாவித்ரி தூணோரம் உட்கார்ந்து மல்லி தொடுத்துக் கொண்டிருக்கிறாள்.

     குருக்கள் எப்பவோ பூஜைக்குக் கிளம்பிப் போயாச்சு.

     மாமி கையில் சொம்புடன் பால்காரியைத் தேடிப் போயிருக்கிறாள். அவள் எப்பவுமே இதுமாதிரி யாரையேனும் தேடிக் கொண்டிருக்கிறாள்.

     அபிதா எங்கே? என் கண்கள் வேட்டையாடுகின்றன.

     தற்செயலாய் பார்வை, கூடத்துச் சுவரில் பதித்த கைக் கண்ணாடியில் படுகிறது. அதில் நான் பார்த்த முகம் என்னைப் பார்த்ததும் திடுக்கிடுகிறேன். My God! குடி வெறியில் இந்த ஆள் யார்? ரத்த நாளங்கள் வெடித்துவிடும் போல் முகச் சிவப்பு.

     கீழ்வானச் சிவப்பில் வெண் மேகம் தவழ்கையில் எவ்வளவு அழகாயிருக்கிறது! ஆனால் இந்தச் சிவந்த முகத்தில் புருவ நரைக்கோடு ஏன் ஒவ்வவில்லை? ஒவ்வாதது மட்டுமல்ல, தப்பாவே தெரிகிறது. என் செய்யலாம்? தேடுகிறேன்.

     கண்ணாடியை ஒட்டிய மாடப்பிறை உள்புறம் சீமெண்ணெய் புகைக்கரி அடையாய் அப்பிக் கிடக்கிறது. ஒற்றை விரலால் தொட்டு, புருவத்தை விளம்புகிறேன். முழுக் கறுப்பு முடியாவிட்டால் செம்பட்டை சாதித்தால் கூடப் பரவாயில்லை.

     கண்ணாடியில் சாவித்ரி என்னைக் கவனிப்பது கண்டேன். நாள் கணக்கில் ஏதேதோ கறையும் அழுக்கும் ஏறிய கண்ணாடியில், அவள் விழிகளின் வினா மட்டும் பளிச்செனத் தெரிகிறது. தொடர்ந்து ஆச்சர்யம். இத்தனை நாள் புரியாதிருந்த ஏதோ மூட்டத்தின் கலைப்பு... கண்ணாடியில் நான் கண்ட முகம் இன்னும் சிவக்கிறது! வெளியே விரைகிறேன்.

     அபிதா எங்கே? கிணற்றில் ஜலமெடுக்கப் போயிருப்பாளோ? விடுவிடென மலை நோக்கி நடக்கிறேன்.

     மலை தடுத்த மேகங்கள் மழை கொட்டுமோ கொட்டாதோ, தெரியாது. கொட்டலாமோ வேண்டாமோ எனத் தம்முள் குமைகின்றன. புழுக்கமோ அல்ல என் நடை வேகமோ. கழுத்தின் பின்னாலிருந்து வேர்வை சட்டைக்குள் வழிகிறது.

     சாவித்ரி, என் ரகஸ்யம் உனக்கு வெளிச்சமாகி விட்டதோ? நீ கெட்டிக்காரி; தவிர, பெண் உன்னிடம் எத்தனை நாள் மறைத்து வைத்திருக்க முடியும்? நானாகச் சொல்ல நேர்வதை விட, நீயாவே உன் யூகத்தில் அறிவதே - அல்ல அறிந்ததே மேல். கேள்விகள், பதில்கள், மறு கேள்விக்கு எதிர்ச் சமாதானங்கள், சண்டைகள் - எவ்வளவு மிச்சம்! சமாதானம் பதிலாகாது. சமாதானாம் என்பதே நாணயமற்ற பதில். சந்தேகத்தின் ஊன்று விதை. சந்தேகம் நமக்குல் இனி ஏன்?

     ஆனால் ஓரளவு இந்த நிலைக்கு நீதான் பொறுப்பென்பேன். ஊரை விட்டுக் கிளம்பு முன் இடமாற்றமாய் முதன் முதல் எங்கு செல்வது என்று நாம் யோசித்த போது, கரடி மலை பேரைச் சொல்லி நீதான் ஆசையை மூட்டி, சென்று போனதால், நான் செத்துப் போனதென்று நினைத்ததையெல்லாம் உயிர்ப்பித்து விட்டாய். சாவித்ரி, நானொன்று கண்டேன். எதுவுமே செத்துப் போகல்லையடி!

     என்றுமே நான் களங்கமற்றவன் அல்ல. கரடிமலை நினைப்பு வந்துவிட்டதும் கூடவே கபடும் வந்துவிட்டது. ஆனால் ஒன்று. குற்றாலமும் கொடைக்கானலும் கோவளமும் இருக்க, சில பேருக்குச் செவிமடலில் கூடத் தொங்கும் குந்துமணிச் சதைதான் கண்ணுக்குச் சட்டென்று படுவது போல், கரடிமலை தான் உனக்கும் படணுமா? இதிலேயே விதியை நீ காணவில்லையா? இடையில் வந்த மனைவி நீ. என் விதியை நோக்கிச் செல்ல என்னை விடு சாவித்ரி. இதை நான் சொல்லாமலே புரிந்து கொள்ள உனக்குச் சக்தியுண்டு என்பதை நானறிவேன். எப்படியும் நீ என்னிலும் உயர்ந்த சரக்கு.

     நான் நன்றியற்றவன். ஒப்புக் கொள்கிறேன். இப்போ நான் எதை வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வேன். ஆனால் என் நன்றியால் உனக்கு இனி என்ன பயன்? சரி, என் நன்றியை விட என் நாணயம் தான் இப்போது எனக்குப் பெரிதாயிருக்கிறது. போயேன். இது நாணயமல்ல. சுயநலம் என்பாய். சரி, அப்படித்தான், போயேன். எதை வேணுமானாலும் இப்போ நான் ஒப்புக் கொள்வேன். சுயநலத்தைக் காட்டிலும் பெரிய உண்மை எது? எனக்குக் காட்டு, உயிர் உண்டான நாளிலிருந்து எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில். சுயத்தைத் தாண்டி கேள்வியுமில்லை, பதிலுமில்லை, உண்மையுமில்லை. இதை நான் சொல்வதே ஒரு சமாதானம் தான்.

     வாழ்வு ஒரு கனவானால், அதை அறிய உணர்வற்று, இதுவரை விரலுக்கிடுக்கில் நனவாய் வழிந்தது போக, மிச்சத்தில் கனவை ருசிக்க, கனவாய் நிறுத்த இயலாதா? கனவு, நிலையாமை, நித்யம், அநித்யம் - இதெல்லாம் நாம் இருக்கும் வரை பேசும் பேச்சுத்தானே! எல்லாமே இருக்கும் வரை தானே!

     - இதென்ன சட்டென்று கன்னத்தில் மட்டும் ஈரக்காற்று? சாவித்ரி நீ துப்பினையா? ‘தூ, அவள் உனக்குப் பெண்ணாயிருக்க வயஸாச்சு, இதென்ன அக்ரமம்? அடுக்குமா?’ என்கிறாயா? சாவித்ரி. இது விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்ந்து வரும் விதியின் பழிவாங்கல். இது உனக்குப் புரியாது. எனக்கே புரியல்லியே. இது சகுந்தலையின் கோபம். சகுந்தலை செத்துப் போனபின் அவள் கோபமாக மாறி, என்னை ஆட்டுவிக்கும் ஆட்டத்தில், அபிதா என் பெண்ணோ, பெண்டோ, இது என் செயலில் இல்லை. அபிதாவில் நான் காணும் சகுந்தலை, என்னில் தன் அம்பியைக் காண மாட்டாளா? சகுந்தலையில் அபிதா, அபிதாவில் சகுந்தலை. ஒருவருக்கொருவர் ஒருவரின் இருவர் இவர்கள் தான் என் சாபம், விமோசனம், இரண்டுமே.

     சாவித்ரி, என்னை மன்னித்துவிடு. மன்னிக்க முடியாவிடில் மறந்து விடு. இரண்டுமே இயலாவிடில், உன் கஷ்டத்துக்குப் பொறுப்பு நானானாலும், நீ படும் வேதனை உன்னுடையதுதான். நாளடைவில், பொறுப்பும் உன்னுடையதாகிவிடும். ஏனெனில் நான் என் விதியை நோக்கிச் செல்கிறேன்.

     மலையடிவாரத்தில், கிணற்றடியில் சகுந்தலையை - இல்லை அபிதாவைக் காணோம். (பார், இப்பவே எனக்குக் குழம்புகிறது!) மலை மேல் போயிருப்பாளோ? இல்லை, அதற்கு ரொம்பவும் நேரமாகி விட்டதே! இல்லை, இருட்டே இறங்க ஆரம்பித்துவிட்டது. மலை, மலையாயில்லை. பிரம்மாண்டமான நிழலாக மாறி விட்டது.

     மலையடிவாரத்தில் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறேன்.

     கரடிமலையே, நீதான் என் விதியோ? நான் எங்கிருந்தாலும் என் மேல் எப்பவும் விழுந்து கொண்டிருக்கும் நிழல் நீதானோ? கனவையும் நனவையும் ஒருங்கே தன்னுள் விழுங்கிய உன் நிழலின் சுயநலம் அதன் தன்மை யாது?

     மலை மேல் இடி குமுறுகிறது.

     இதுதான் உன் பதிலா?