உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அபிதா 8 மறுநாள் காலை, அபிதாவின் சித்தி வந்தாள். உடன் அவன் தம்பி - Tent சினிமா முதலாளி - வந்திருந்தான். அவனே ‘ஸ்டார்’ மாதிரிதான் இருக்கிறான். பார்த்ததும் மனதை சிவ்வுவது அந்த எடுப்பான மூக்கும், கண்ணை மறைத்துக் கொண்டு முன்சரிந்த முரட்டு மயிரும், ஒழுங்காய் ஒதுக்கிய துளிர் மீசையும் செம்பட்டையும் தான். “அபிதா, நீ ஏன் வரல்லே? உனக்குப் படம் பிடிச்சிருக்கும்.” சிலும்பலேயிலாது சுபாவத்திலேயே கனத்த வெண்கலக் குரல். “ஆமாம் உன் படத்தை நீதான் மெச்சிக்கணும். ஒரு பாட்டா, டான்ஸா, சண்டையா? உட்கார்ந்தது தெரியல்லே உடனே எழுந்துட்டமாதிரிதான் இருந்தது. அவ்வளவு சுருக்க முடிஞ்சுடுத்து. கூட்டமேயில்லை. நாற்காலியில் ஈ ‘ஙொய்ஞ்ஞ...’ ராத்திரியே விட்ட சுருக்குக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால் இந்த வீட்டுக்குத் தான் எப்பவும் திரும்பிண்டு இருக்கோமே!” “திரும்பறதுன்னாலே பின்னே என்ன அர்த்தம்? ஒரொரு சமயமும் ஒரு ஒரு இடம் திரும்பிண்டிருக்க முடியுமா? உங்களுக்கெல்லாம் ரயிலேறிப் போற மாதிரி விடிகாலை ஊர் சேர மாதிரி கணிசமா நாலுமணி நேரம் இருக்கணும். முனகினால் பாட்டு, தடுக்கிவிழுந்தால் கும்கும், இடறிவிழுந்தால் அதுவே ஒரு டான்ஸ் - இதுவும் தான் எப்பவுமிருக்கே! கொஞ்சம் high class picture ஸார் - cheap rentக்கு வந்தது. இன்னிக்குப் பார்த்துண்டு நாளைக்குத் தூக்கிட வேண்டியதுதான். அபிதா, கேக்கறேனே நீ ஏன் வர்லே?” “ஆமாண்டா, உன் அத்திம்பேரை நம்பி வாசற்கதவையும் திறந்து போட்டுட்டு, நான் இவளையும் உன் அவிசல் படத்துக்கு அழைச்சுண்டு வந்துடறேன். திரும்பி வர வேளைக்கு இருக்கற வாசல் கதவையும் எவனாவது அடுப்புக்குப் பிடுங்கிண்டு போயிடட்டும். அந்தப் பிராமணன் இன்னமும் வரல்லியே? எனக்குத் தெரியும். அங்கேயே குளத்துலே குளிச்சுட்டு, நேத்து சோத்தையே சாமிக்குக் காட்டிப்பிட்டு ஒரு நடை மிச்சம் பண்ணிண்டு வந்துடுவார்...” ... கேட்டுக்கொண்டே குருக்கள் உள்ளே வருகிறார். அவர் தோளில் தொங்கும் நைவேத்ய மூட்டையும், கபடும் அசடும் கலந்த அந்த இனிப்பும் - அவரைப் பார்த்தால் சர்க்கஸ் கோமாளி போல் தானிருக்கிறது. அவர் வராததைக் கேட்டுக் கொண்டிருந்தவள் கூட அவர் வந்ததைச் சட்டை செய்வதாய்த் தெரியவில்லை. அவர் மைத்துனன் அவர் வீட்டில் அவர் இருப்பதாக ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை. அவன் என்னோடுதான் பேசிக் கொண்டிருக்கிறான். என்ன பேசுகிறான் என்று அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே எனக்கு மறந்து போய்க் கொண்டே வருகிறது. பலகையில் வலது கை எழுத, பின்னாலேயே இடது கை அழித்துக் கொண்டு வருவதுபோல். ஆனால் அவன் கதையை அவன் சொல்லி நான் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. அவன் உடையும், ஒழுங்காக ஒதுக்கி விட்ட அரும்பு மீசையும் அவன் வெற்றிக் கதைக்கு சாக்ஷியாய் அலறுகின்றன. என்னையுமறியாமலே ஒரு காதைக்கூட பொத்திக் கொண்டு, பிறகு பொத்தினது தெரியாமலிருக்கும் பொருட்டு, காதின் பின் சொறிந்து கொள்கிறேன். A selfmade Man. அவன் சூழ்நிலைக்கு ஒவ்வாது உயர்ந்த ரகத் துணி. கண்ணைப் பறிக்கும் சலவை. உருளைக்கிழங்கு வறுவல் பில்லைபோல் பெரிய wrist watch. புதிதாகக் கண்ட சுகம். ஆத்திரத்துடன் அனுபவிக்கிறான். அனுபவ ஞானத்தைத் தவிர வயிற்றைக் கீறினால் அக்ஷரம் தேறுமோ சந்தேகம். இவனுக்கு இப்போ சொந்தமாகியிருக்கும் இந்த tent சினிமாவிலேயே இவனே ‘வெற்றிலை பாக்கு பீடி சிகரெட்டு’ கணீரென்று சிலம்பலற்ற குரலில் விற்றிருப்பான் என்றால் எனக்கு ஆச்சர்யமில்லை. ஆனால் என் வாழ்வும் அப்படித்தானே! அதனாலேயே நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் விளக்கமில்லாமலே ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும். கோதாவில் மல்லர்கள் போல், ஒருவனையொருவன் கட்டிப் பிடித்துப் புரளுமுன் ஒருவனையொருவன் ஆழம் பார்த்துக் கொண்டு ஒருவரையொருவன் வளைய வருகிறோம். என்னைப் போல் அவனைக் காண எனக்கு ஏன் ஆகவில்லை? அவனைப் போல் நான் இல்லை என்கிற ஆத்திரம்தானே! குழந்தையின் முகத்தெதிரே கயிற்று நுனியில் பொம்மையைத் தொங்கவிட்டு ஆட்டுவது போல் அபிதாவுக்கு சினிமா ஆசை காட்டுகிறான். அபிதாவின் கண்கள் விரிகின்றன. புன்னகை உதட்டோரத்தில் ஆரம்பித்து அதன் உள்ளொளி மறு ஓரத்திற்குப் பரவிச் செல்வது எனக்கு நன்றாய்த் தெரிகிறது. அவன் சித்திக்கு சினிமா ஆசை விடவில்லை. அவளுக்கிருக்காதா? வீட்டை விட்டு, கரடிமலையை விட்டு வெளியே போக அவளுக்குத்தான் வேறே வாய்ப்பு என்ன இருக்கிறது? “ஆமாம் இது கண்டிப்பு; வெள்ளிக்கிழமை அபிதா நீ வந்தே ஆகணும். புதுப்படம்.” சித்தி எரிந்து விழுகிறாள். “ஆமாம் அவளும் வந்துட்டா வீட்டுக்கு யார் காவல்?” “நீ.” ஒரே எழுத்து. ஒரே சொல். ஒரே கத்தி. ஒரே குத்து. மாமிக்குக் கன்னங்கள் வெடித்துவிடும் போல் உப்புகின்றன. வாயடைச்சுப் போச்சு. விழி பிதுங்கறது. ஆனால் அவன் தம்பிக்கு இரக்கமில்லை. அவள் பக்கம் கூட அவன் முகம் திரும்பவில்லை. அக்காவுக்காகவா அவன் இங்கு வருகிறான்? “நீங்களும் வரணும் சார், மாமியையும் அழைச்சுண்டு வாங்கோ. உங்களுக்கெல்லாம் Air Conditioned தியேட்டரில் உட்கார்ந்து பழக்கம் இல்லையா?” சிரிக்கிறான். Kolynos சிரிப்பு. உரமான இறுகிய தாடைகள். நன்றாய்த்தானிருக்கிறான். “இதுவும் உங்களுக்கு ஒரு புது அனுபவமாயிருக்கட்டுமே! நாளடைவில் நானும் ஒரு Air Conditioned தியேட்டர் கட்ட எனக்கு வசதி வரட்டும்னு பெரியவாள் ஆசீர்வாதம் பண்ணுங்களேன்!” பேச்சும் நன்றாய்த்தான் பேசுகிறான். “பேச்சுக்கு நாளடைவில்னு சொல்றேன். இந்த பிஸினெஸ் அடிச்சால் நாளைக்கே வாரிக் கொடுக்கும். போச்சுன்னா அன்னிக்கே காலை வாரிவிடும். சரி, நான் கிளம்பறேன். எனக்கு வேலை காத்துக்கிடக்கு. அபிதா மறக்காதே.” ஆள் வந்து போனதே புயல் வந்து கடந்தாற் போல். அவன் சென்ற வழி நோக்கி அபிதா நின்றாள். இவன் ஒரு திக் விஜயன். இங்கத்திய நினைவு அவளுக்கில்லை. நினைப்பில் வெள்ளிக்கிழமை சினிமாவை இப்பவே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளை அப்படிக் காண்கையில் என் மார்பை மின்னல் வெட்டுகிறது. “...நின்ன இடத்தில் கல்லாலடிச்சாப்போல் நின்னுட்டால் பறிச்ச பழம் மாதிரி கலத்தில் சோறு விழுந்துடுமா? விழுந்துடுமான்னு கேக்கறேன்?” அபிதா ஒன்றும் பேசவில்லை. குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு கிளம்புகிறாள். அவள் கனவு இன்னும் கலையவில்லை. புன்னகை கன்னக் குழிவில் தேங்கிவிட்டது. மௌனம் எவ்வளவு அற்புதமான அங்கி! நளினத்தில் டாக்கா மஸ்லின் அதனெதிர் என் செய்யும்? அதன் மடிகள் அவள் தோளினின்று விழுந்து, அவள் பின்னால், அவளைச் சூழ்ந்து, பூமியில் மௌனமாய்ப் புரள்கின்றன. “பறிக்கும் வரை பழத்தை மரத்தில் யார் விட்டு வைக்கறா? இந்த நாளில் பழத்தை மரத்தில் எவன் பார்த்தது? எல்லாம் பிஞ்சுலே பழுத்த வெம்பல். இல்லை, தடியால் அடிச்சுக் கனியவெச்ச பழுக்கல்கள். பழங்களே ஏது?” இங்கு வந்து இத்தனை நாழிக்குப்பின், இப்போத்தான் குருக்கள் இப்படி வாய்திறக்கிறார். பரவாயில்லை. பேச்சில், நொண்டி குருக்கள் வாடை கொஞ்சம் இவரிடம் அடிக்கும் போலிருக்கிறதே! |