உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அபிதா 6 வாய்க்கால் தாண்டி, ஐயனார் கோவில் மதில் திரும்பினதுமே கண்ணுக்குக் காத்திருப்பதே போன்று, சட்டெனக் கண்ணுக்கெட்டியவரை வயற்காடுதான். இந்த வழிதான் நான் ஊரை விட்டு ஓட அந்த நாள் ரயிலைப் பிடிக்க ஓடி வந்த வழி. அன்று, கல்லும் முள்ளும், கதிர்களை அறுத்தபின் துருத்திக் கொண்டு நின்ற கட்டைப்புல்லும் காலில் பொத்தன. இன்று, முகம் திரும்பிய இடமெல்லாம் கடலாய்க் கண்குளிர்ப் பசேர். மாலைக் காற்றில், கதிர்கள் ஒரே சீராய் அங்கம் அங்கமாய் அலைவிதிர்கையில், பிரும்மாண்டமான உடல் திரட்சியில் ஒரு மாது, பூமியே படுக்கையாய்ப் புரள்வது போன்றிருக்கிறது. தென்றலின் இதவு உடலின் ரோமக்கால்களின் வழி உள்புகுவது உணர்கிறேன். அதோ தகரக் கொட்டகைகள் இரண்டு தெரிகின்றன. பிறவியின் பிரயாணம் முடியும் இடம் தகரக் கொட்டகைதான். நான் இங்கு விட்டுப்போன பின்னர் இத்தனை வருடங்களில் எரிந்து நீர்த்த எத்தனை எத்தனையோ அஸ்திகளில், கண்ணுக்கெட்டாப் பொடிப்பொடி ஸன்னங்கள் காற்று வாக்கில் சிதைப்படுகையினின்று எழும்பி பூமியின் நான்கு - அல்ல - நாற்பதினாயிரம் திக்குகளில் பறந்து செல்கையில், என் மேல் ஒற்றுவது எது அவள் சின்னம்? இந்த உறுத்தலுக்குப் பதிலிறுப்பது போன்று, பிரும்மாண்டமான அங்கத் திரட்சியில், பூமியே படுக்கையாய்ப் புரண்ட பசுமை வடிவத்தினின்று, பிரும்மாண்டமான பெருமூச்செறிந்தது. எனக்கு ஏதோ சேதி காற்றுவாக்கில் தவிக்கிறது... என்னைப்போல் ஒரு சின்ன உயிர், உடல் கூட்டினின்று விடுபட்டு, அனலாகி, புனலாகிப் புவியுமாகி, இப்பரந்த வெளியின் பேருயிருமான பின்னர், அந்தப் பாஷை எனக்குப் புரியாதா புரியாதா புரியாதா... வான் பாதியும் பூமியின் பாதியும் விளிம்பு சேர்ந்த முழு உருட்டு இப்பூமி. நித்யத்வம் உகுத்த கண்ணீர்த் துளி. அதன் நீரோட்டத்தில் ஆடும் நிழல்கள் நாம் - நம்மை நாம் என்று கொண்டதன் விளைவாய் நேர்ந்த நம் வாழ்வுகள் தாழ்வுகள், அஸ்திகள், அஸ்தியில் பூத்த நினைவுகள் - நாம் எல்லோருமே கண்ணீரின் நிழல்கள். இங்கு ஏதோ அற்புதம் என்னை சாக்ஷி வைத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்ன அது? வான்வீச்சில் தேடுகிறேன். பார்வையின் வாள் வீச்சில் சின்னாபின்னமாய், மேகச்சிதர்கள், அந்திஜால வர்ணங்கள் பூரித்துத் திக்குத் திகைத்து நிற்கின்றன. நகர்கின்றன, விரைகின்றன, அலைகின்றன. அத்தனையும் ஊமைக் குழந்தைகள். அவைகளின் தெய்வீகத் திகைப்பின் கனம், என் மார்பு அழுந்துகிறது. அவைகளின் வாயடைத்த வேதனை மோனத்தில் கூக்குரலிடுகிறது. உணர்ச்சிகள், உணர்வுகள், அத்தனையின் ப்ரதிநிதியாய், மோனத்தின் ஒரே வாய் ஒரே குரல் ஒரே கேள்வி ஒரே பதில் இத்தனையின் ஒரே குவிப்பின் ஒரே கூர்ப்பாய்த் திடீரெனக் கரடி மலை, காற்றில் ஆடும் திரைச் சீலையில் தீட்டிய சித்திரம் போன்று, கண்ணுக்கும் நெஞ்சுக்கும் படபடத்துக் கொண்டு எழுகின்றது. மோனத்தின் மூலக்கோபுரம். எதிர்மறைகளின் இழைவு. கண்ணெதிரிலேயே குன்றின் பின்னணியில், கோபக் கண்ணாய் ஒளிக்கதிர்கள் நரம்போடிய செவ்வானம் சட்டெனக் கோபத்தணிவில் ம்ருதுவிடத் தொடங்கிவிட்டது. நானொரு பச்சோந்தி நானொரு பைத்யம் நானொரு குழந்தை எனக்கு உடனே கோபம் - உடனே சிரிப்பு காரணம் கேட்டால் காரணம் அறியேன் பட்டது விட்டு நான் வெட்கம் கெட்டவன் என்று வானம் வெட்கம் தெரிவித்து, கெட்ட வெட்கத்தின் அழகு கொள்கிறது. மணவறை மஞ்சத்தில், புலவி வெறியில், பிய்த்தும் உருவியும் தானாவும் உதிர்ந்த மலர்கள்போல் வானில் மேகங்கள் இப்போது சிதறிக் கிடக்கின்றன. இவ்வளவு மகத்தான கலவி கொண்ட விராட்புருஷன், அவனுடைய ஸ்திரீ யார்? மனதில் ஓவியங்கள் மாறும் வேகம், விதவிதம், உடல் தாள முடியவில்லை. இங்கு ஏதோ ரஸவாதம் என்னை சாக்ஷி வைத்து நேர்ந்து கொண்டிருக்கிறது. இதோ பார், கரடிமலை ஆட்டுமந்தை மேயும் குன்றாக மாறிவிட்டது. கண், முகம், கால், குளம்பு தெரியாது சின்னதும் பெரிதுமாய் உரோமப்பந்துகளாகி, மேகங்கள் திரள்திரளாய் ஊர்கின்றன, உருள்கின்றன, சுருள்கின்றன, தயங்குகின்றன, குன்றின்மேல் தவழ்கின்றன, குழைகின்றன, துவள்கின்றன. ஒன்றிரண்டு மொட்டை வால்கள் கூட மொட்டு விட்டிருக்கின்றன. இதோ பார், கரடிமலை திடீரெனக் கறந்தபால் நுரை பொங்கிவழியும் பெருங்குவளையாக மாறிவிட்டது. குன்றின் உச்சியில் மேகங்கள் அப்படி அடர்ந்து தூயவெண்மையைச் சொரிகின்றன, சுரக்கின்றன. பாலின் கருணை, தாய்மை. இதோ பார், கரடிமலை திடீரெனக் குலுக்கிக் குலுக்கி, பூஜைக்குப் பறித்த மலர்கள் குவிந்து புலுபுலுக்கும் புஷ்பக் குடலை, கட்டை விரலும் பாம்பு விரலும் மட்டும் நுனிசந்தித்து, ஒவ்வொரு சந்திப்பும் ஒரு லக்னம், லக்னத்தின் முத்திரை - அவ்வளவு நுட்பம், அவ்வளவு ஜாக்கிரதை, அவ்வளவு பக்தியுடன், காம்புக்கு நோகாது, ஆய்ந்தது அவைகளே அறியாது பறித்த மலர்கள், மேகங்கள் திடீரென அவ்வளவு நளினத்தில் அலர்ந்து விட்டன. அவை தமக்குத்தாமே ஏதோ கவிதை புரிந்து கொண்டிருக்கின்றன. மானிடர் மக்கு. நமக்குப் புரியவைக்கும் நேரம் அவைகளுக்கில்லை. தேவையுமில்லை. பூரா புரிந்துகொள்ளும் சக்தியும் பாவிகள் நமக்கில்லை. நெகிழ நெஞ்சம், பார்க்கப் பாக்கியம், மலரக் கண், படைத்தவர் கண்டு கொண்டேயிருக்கலாம். காண்பதும், கண்டதில் இழைவதுமன்றி கவிதையில் புரிந்து ஆகவேண்டியதென்ன? குன்றின்மேல் ஒரு பெரும் புகைமண்டலம் தேங்கி நிற்கிறது. இப்போது இருண்டது நேரமா? என் கண்களா? மேகத்தைக் கடையும் சாக்கில், கரடிமலை காலத்தையே கடையும் மத்தாக மாறிவிட்டதோ? செவியோரம் யுகங்களின் ஓசை கடைகிறது. நெற்றிப் பொட்டின் நரம்பு மீட்டலினின்று குதித்தெழுந்த நாதபித்து நான், என் சடலங் களைந்து அந்தரத்தில் மிதந்து செல்கிறேன். கரடிமலையா, இது கைலை மலையா? கைலைமலைச் சாரலில், எந்த லோகத்தின் எந்த நிமித்தத்தில், ஆண்டவன் சந்நிதானத்திலேயே வெட்டிய எந்த ஹோம குண்டத்தினின்று எழுந்த புகையிது? “ஸத்யோ ஜ்யோதி ஜுஹோ மிஸ்வாஹா ஆ: ஓம் பூர்ப் புவஸ்ஸுவஸ் வாஹா ஆ...” ஆஹுதியின் மந்த்ரகோஷம் இட, கால, தூரத்தைக் குடைந்து எட்டுவது போன்று ப்ரமை தட்டுகிறது. ஆனால் சென்றது, நிற்பது, இனி வரப்போவதன் பேதக் கோடுகள், நிகழ்ச்சியின் நிபந்தனைகள் அழிந்த இந்த நிலையில் ப்ரமை எது? நிஜம் எது? புகைக் கண்ணைக் கரிக்கிறது. ஆனால் கசக்கக் கண் இல்லை, கையுமில்லை. அங்கம், அவயவங்கள் விழுந்து, இந்த அசரீரத்தில் ப்ரக்ஞை ஒன்றுதான் மிச்சம். எனக்கு நான் சாக்ஷி, என் சாக்ஷி எனக்குத் துணையெனும் சாரமும் விழுந்ததும் என்னைக் கவ்விக் கொண்ட திகில் - திகிலே அகிலாய், என் மேல் கவிந்து கொண்ட முகிலின் பேருருவம் தானா இந்தப் புகை? இந்த ரீதி எந்நேரம், எவ்வளவுதூரம் இருந்ததோ? ஆனால் மேகங்கள் தம் நெய்தலில் இதோ உரமும் ஒழுங்கும் பெற ஆரம்பித்துவிட்டன. துகில் போர்போராய்க் குவிகிறது. இடையிடையே ஜரிகை சுடர் விடுகிறது. உயர்ந்த ரகஸல்லா, மடிமடியாக வானில் அலைகிறது. இந்தத் திரைக்குப்பின், மஞ்சத்தில், ஜன்னலண்டை, பல்லக்கிலிருந்து என்னைக் கவனிப்பது யார்? என் உயிர், சக்தி யாவற்றையும் தன் பார்வையாலேயே உறிஞ்சி விடுவது போலும், தன்னைக் காட்டாது, தன்வேகம் மட்டும் களவுகாட்டும் இந்தப் பார்வை யாருடையது? ஹிமவான் புத்ரி, ஹைமவதி, பர்வத ராஜகுமாரி... திரை இதோ லேசாய் விலகுகிறது. ஒரு இம்மிதான். விலக்கிய விரல் நுனிகளுக்குப்பால் எடுப்பான புருவத்தின் வில் வளைவின்கீழ், இமையடியில், நுனிகொடுக்காய் வளைந்த கத்திகளை அடுக்காய்ச் சொருகினாற் போன்று நுனி நீண்டு சுருண்ட கண் ரப்பை மயிர்களின் கீழ் வெள்ளை விழி மேட்டில் சுழன்ற கருவிழி ஒன்று... அடித்தொண்டையைக் கிழித்துக்கொண்டு, பூமியைப் பட்டை உரித்தாற்போல் என்னின்று ஒருகுரல் வீறிட்டது. பிறகு நேர்ந்தது அறியேன். மல்லாந்த முகத்தில் பனித்த காற்றுதான் மீண்ட நினைப்பின் முதல் உணர்வு. கண் திறந்ததும் விழிகளில் முதல் பேய்வு வானின் தண் முழுநீலம். வானின் முழுநீலத்திற்கும் அண்ணாந்த என் பார்வைக்கும் குறுக்கே ஓர் முகம் புகுகின்றது. சக்கு. நான் செத்துப்போயிட்டேனா? ஆச்சர்யம், பயம் இரண்டும் ஒருங்கே தந்த பலத்தில் உதறிக்கொண்டு எழுகிறேன். “பயந்தே போயிட்டேன் மாமா! அதென்ன அப்படிக் கட்டையாக் கிடந்தேள்?” முகத்தை வேட்டி நுனியால் துடைத்து, கன்னத்தில் குறுகுறுத்த சிவப்பை மறைக்க முயன்றேன். “பாம்போ பூச்சியோ என்னவோ...” என்று இழுத்தாள். “மலைக்கு அந்தண்டைப்பக்கம்...” கையை வீசினாள். “ஒரு பெரிய புத்து இருக்கு, மதில் மதிலா குழல் விட்டுண்டு. இப்போல்லாம் நான் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பாக்கறதில்லை. ஒரே பயம் - என்ன மாமா ஒரு மாதிரியா முழிக்கறேளே! என்னை நெனப்பில்லையா? காலையில் வந்தேள், மாலையில் மறந்து போச்சா?” “மறக்கவில்லை” என் குரல் லேசாய்த் தடித்தது. நான் ஏமாந்த நிலையில் என்னை அவள் கண்டுவிட்ட கோபம். அடக்கிக் கொள்கிறேன். “என்ன அதற்குள் மறந்துவிடுமா? மறக்கலாமா?” அவள் முகம் மலர்கிறது. “இல்லே மாமா என்னமோபோல் இருக்கேளேன்னு கேட்டேன்.” “எதுபோலுமில்லை. பழைய இடத்தில் வந்து புதிதாகப் பொருந்திக் கொண்டிருக்கிறேன்.” “என்ன சொல்றேள்?” விழித்தாள். “புரியல்லியே!” அவள் திகைப்பைக் கண்டதும் எனக்கு வாய்விட்டுச் சிரிப்பு வந்துவிட்டது. “உனக்குப் புரியத் தேவையில்லை. பயப்படாதே. எனக்குக் காக்காவலிப்பு இல்லை. காற்று சுகமாயிருந்தது கண்ணயர்ந்து போச்சு, அவ்வளவுதான். இங்கு நீ எங்கே வந்தாய்?” “மலை மேல் விளக்குப் போட வந்தேன். நான் தான் வர வழக்கம். அப்பாவுக்கு சாயங்காலம் இங்கேயிருந்து இரண்டாவது கல்லில் ஒரு பிள்ளையார் கோவிலில் ஒரு கால பூஜை. கையோடு ஒரு குடம் குடிஜலமும் எடுத்துப் போவேன். இதோ ஒரு நிமிஷம். மேலே போய் வந்துடறேன். இங்கேயே இருக்கேளா?” “நானும் வரேன்.” “உங்களுக்கேன் கஷ்டம்?” “என்ன கஷ்டம்? என்னை என்ன மூட்டைகட்டி வெச்சுட்டியா? நான் ஏறாத கரடிமலையா?” இடுப்பில் குடத்துடன் அவள் முன் ஏறுகையில் வேணுமென்றே என் நடை அவளை இரண்டு படிகள் முன் விட்டது. இடுப்பில் குடத்திற்கு இடம், குடத்தின் செருக்கு. இடையில் குடம் இடுப்பின் செருக்கு. இடையின் வளைவுள் குடத்தின் வளைவு புதைந்ததும் கோடுகள் பூக்கும் மர்மப் புன்னகை இதயத்தில் ஒளி தட்டுகின்றது. படியேறுகையில், அவள் உடலில் லேசான வளைவுகள் சுடராட்டம் போல் விளைகையில், முதுகுப்புறம், வலது தோளில் ரவிக்கை தையல் விட்ட இடத்தில் பளீரிட்ட சதை நெருப்பு நெஞ்சில் பற்றிக் கொள்கையில், இதுவரை சென்று போன வருடங்களில் அங்கு குவிந்து அழுகிய குப்பை கூளங்கள், வயதின் சருகுகள் எரிகின்றன. நானே லேசாகிக் கொண்டிருக்கிறேன். ஏதோ லேசாய் ஒரு மெட்டை முனகியபடி ஏறுகிறாள். பாட்டு அல்ல. இளமையின் கீதம். இவள் இன்னும் தன் அழகை அறியாள். அதுவே இவள் அழகைப் பன்மடங்கு பெருக்குகிறது. படிக்குப்படி வானம் தலைமேல் இறங்கி மெத்துமெத்தென மிதக்கின்றது. தொட்டுவிடலாமோ? அதுதான் கீழறங்கி விட்டதா, அல்ல நான் தான் உயர்ந்துவிட்டேனா? நீலமெத்தையில் பஞ்சு பறக்கிறது. கரடிமலையே, நீ எங்கள் பெருந் தாய். நாங்கள் உன் குட்டிகள். நீ இப்போது எங்களை உன் மார்புற அணைத்துக் கொள்கையில், நாங்கள் உன் ஆலிங்கனத்துள் அவிழ்கையில், உன் இதயத்தில் புதைந்தோமா, அல்ல, உன் கருவினுள்ளேயே புகுந்துவிட்டோமா? நீயே சொல். இல்லை, நீ சொல்லமாட்டாய். உன் மனம் கல். எங்கள் அனுபவம் தான் எங்கள் பேறு. எங்கள் பேறுதான் உன் பதில். அவரவர் இஷ்டம், எண்ணம், நினைப்பின் வன்மைக்கேற்றபடி அவரவர் பேறு. எத்தனைமுறை சக்குவும் நானும் உன்னை ஏறி இருப்போம்! அன்று கூடத் தெரியவில்லை. இப்போது தோன்றுகிறது, அன்று ஏறியதற்கெல்லாம் பொருளும் பலனும் இன்று ஏறுவதில்தான் கிடைப்பதுபோல். என்ன பலன், என்ன பொருள் என்பது தான் புரியவில்லை. ஏதோ சிக்குப் பிரிகின்றது. அதற்கு மேல் புரியவில்லை. சோபனபடத்தின் பெரிய ஏணிபோல், இந்தப் படிக்கட்டு பரமபதத்துக்குத்தான் கொண்டு போய்விடுமோ, அல்ல பெரிய பாம்பின் வாயில் தான் முடிகிறதோ? இந்தப் படிக்கட்டே ஒரு பெரும் மண் உணிப் பாம்போ? சென்றுபோன காலத்துள் புதையும், தான் மென்று உமிழ்ந்த மண்ணில் புதைந்த மண் உணிப் பாம்பு. சென்று போனதற்கும் இனி வரப் போவதற்கும் வித்தியாசம் என்ன? இரண்டுமே நடுநின்ற தருணத்தின் தூலச் சாயல்கள் தான். நான் தருணக் குமிழியில் மிதக்கிறேன். காலை ஊன்றி படிப்படியாக ஏறுவதாகவே தோன்றவில்லை. ஏதோ போதை அழுத்துகிறது. திருவேலநாதர், காற்றில் உருவானவரே போல் கண்ணெதிர் திடீரெனப் பிதுங்குகிறார். காரணம்: அவரை நோக்கியே நான் ஏறிக் கொண்டிருந்தாலும் சமயத்தில் அவரை மறந்தாச்சு. ஆகையால் இப்போ அவர் என் கண்முன் படுகையில், அவர் நான் எதிர்பாராதவரே ஆகிறார். அவரைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? என்றும் அவர் அன்றேபோல்தான் இன்றும். முடிந்தால் மண்டையின் உருண்டை முன்னிலும் பளப்பள, வழுக்கை வழவழ. காற்றும் புட்களும் போக்குவாக்கில் வீசியிறைத்த சருகுகள், குப்பைக் கூளங்கள், எச்சங்களின் அர்ச்சனை நடுவே ஆனந்தமாய் வீற்றிருக்கிறார். அவரைக் கேட்போருமில்லை. மீட்போருமில்லை. அவரும் பரஸ்பரம் அப்படித்தான். கவலையற்ற கடவுள். கொடுத்து வைத்தவர். அவள் ஏற்றிவைத்த விளக்கும் இக்காற்றில் எப்படி நிற்கும்? சுடர், திரியில் துளித்துக் குதித்து, காற்றில் அலைந்து, குன்றித் தவித்துக் குற்றுயிராய்த் துடித்தது. அவள் கீழே விழுந்து கும்பிட்டு எழுந்து நிற்கத்தான் காத்திருந்தாற்போல் அவிந்து, புகைநூல் சுழன்று எழுந்து, தீய்ந்த நெடி மூக்கைத் துளைத்தது. அன்று சக்கு இப்படித்தான் விழுந்து எழுந்தாள். சிந்தனையின் சொந்தத்தில், பார்வை மங்கி, இவள் இப்படி மார்மேல் கைகட்டிக் கொண்டு நிற்கையில், ஆண்டவன் ஒற்றியெடுத்த அச்சில் அவளைக் காட்டிலும் இந்த முகத்தின் செதுக்கல் இன்னும் தெளிவு. அவ்வளவுதான். நெற்றி வகிடினின்று ஒரு பிரி கலைந்து காதோரம், காற்றில் எஃகுச் சுருள் சுழன்று, தன்னோடேயே கண்ணாமூச்சி விளையாடிற்று. இந்தச் சமயத்தின் வினாடிகளை, அவைகளின் துளிப்பை, ஸ்படிகமாலை மணிகளைப் போல் ஜபித்துவிடலாம். கட்டுக்கட்டாய் அவைகளின் சுழற்சியைக் கண்ணாலேயே கண்டு விடலாம் போன்று அமைதி எங்களைச் சூழ்ந்தது. வான விளிம்பினோரம் ஒரு பக்ஷி பறந்து செல்கிறது. அது வெறுமெனப் பறப்பது போல் தோன்றவில்லை. எங்களைச் சூழ்ந்த அமைதிக்கு நூல்பிடித்து, உலகத்தையே வளைப்பது போல் தோன்றுகிறது. அவள் முகம் மெதுவாக என் பக்கம் திரும்புகிறது. கண்களில் சிந்தனைப்படலம் கலையவில்லை. “என் அம்மா செத்த விதம் உங்களுக்குத் தெரியுமோ?” எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. திடீரென்று அப்படி அவள்... காலடியில் பூமி விட்டது. “ராப்பூரா தேடியலைஞ்சுட்டு - எந்தக் காரியம் எப்படியானாலும் காலை பூஜை நடந்தாகணுமே! சுவாமி தலையில் தண்ணியைக் கொட்டியாகணுமே! - அப்பா குடம் ஜலத்துடன் மலையேறிவந்தால், லிங்கத்தைக் கட்டிண்டு அம்மா செத்துக் கிடக்கறா?” இழுத்துவிடுத்த நாண் செவியோரம் ‘பூம் பூம்’, ‘பூம் பூம்’... கண்ணுக்குமீறிய ராக்ஷஸங்கள் எவையெவையோ எங்கெங்கோ முறிந்து, இருள்தூலங்கள் என்மேல் சாய்கையில், எங்கிருந்தோ ஒரு குரல்: “... சுவாமிக்குக் கும்பாபிஷேகம் பண்ணும்படி ஆயிடுத்து. குருக்கள் வீட்டைத் தூத்தாதவாள் கிடையாது. மத்த நாள் கோவிலுக்கு மலையேறி வரவாள் பக்தி தட்டுக்கெட்டுப் போயிடறது ஒண்ணுமில்லாட்டாலும், ஊரே ‘கொல்’லுனு ஆயிடுத்து. ‘செத்தும் கெடுத்தாள் பாவின்னு’ அப்பா சபிப்பார்.” திடீரென அவள் முழுக்க என் பக்கம் திரும்பினாள். அவள் முகம் வேதனையில் முறிந்தது. “நீங்கள் சொல்லுங்கோ மாமா, அம்மா பேரை நீங்கள் சொல்றேள். என் அம்மாவைப் பார்த்திருக்கேள். என் அம்மா என்ன அப்படிக் கெட்டவளா?” கைகளைப் பிசைந்து கொண்டு, காற்றிலாடும் புஷ்பப்புதர் போல், குன்றி நீ இப்படி நிற்கையில் நீ செத்தாய் என்று உன் வாயாலேயே நீ சொல்லும் விந்தை என்ன? நீ கெட்டவளா என்று என்னையே கேட்கும் அர்த்தம் என்ன? என்னிடம் என்ன சத்தியத்தைக் கேட்டு வாங்குகிறாய்? எனக்கு ஒண்ணுமே புரியல்லியேடி! இருகைகளாலும் நெற்றிப் பொட்டைப் பற்றிக் கொள்கிறேன். கன்னங்களில் கண்ணீர் சுட்டது. பற்றியெரிகிறேனா? எரிநீரில் மூழ்குகிறேனா? இரண்டுக்கும் வித்யாசம் என்ன? அவள் குரல் சொல்லும் கதை செவியில் பாய்கையில், மூடிய கண்களுக்குள் விழித்திரையில், கோலங்கள் நெய்த ஜமக்காளத்தை விரித்துப் போட்டாற்போல் செத்தவள், உயிர் பெற்று எழுகிறாள். ம்ருதங்கத்தை ஸ்ருதி கூட்டுவதுபோன்று இவள் குரலின் தன்மையிலேயே ஒரு சிறு முனகல், உச்சரிப்பில் ஒருமனமின்மை, சொல்லுக்குச் சொல், கொக்கி, ஓசைகளின் பிகுவை அவ்வப் போது இழுத்துத் தனக்குத்தானே தெரிந்து கொள்வதுபோல். “... அம்மா சதா சர்வகாலமும் அழுதுண்டேயிருப்பாளாம். வாய்விட்டு அல்ல. மோனக் கண்ணீர் வழிந்தபடியிருக்கும். காரணம் சொல்லமாட்டாள். கண்ணில் கோளாறோன்னு வைத்தியம், ஏவல், சூன்யமோன்னு மந்திரம் தந்திரம் வேப்பிலை, பூஜை எல்லாம் பண்ணிப் பார்த்தாச்சு. உள்ளே ஏதோ உடைஞ்சு போச்சு. மருந்துக்குப் பிடிபடல்லே மந்தரத்துக்குப் பிடிபடல்லே. ஒருசமயம் இல்லாட்டா ஒருசமயம் அடக்க முடியாத ஆத்திரத்தில் அடி உதை கூட - ஊஹும். கண்ணீர் நின்ற பாடில்லை. அதைப்பத்தி அழறவாளுக்கே அக்கறையில்லை. ஓரொரு சமயம் அம்மாவைப்பத்தி அப்படி நினைக்கையில் எனக்கே ஆத்திரம் வரது; கூடவே மனம் பரிதவிக்கறது. தாத்தா சொல்வார்: ‘உன் அம்மா கண்ணீராவே கரைஞ்சு போயிட்டா’ன்னு. தாத்தாவை நன்னா நினைவிருக்கு. திண்ணையில் தான் எப்பவும் வாசம். தாத்தாவுக்கு கண் தெரியாது. தலையைத் தடவி என்னைத் தெரிஞ்சுப்பார். கதையெல்லாம் நல்லா சொல்வார். ‘இப்போ என் கைதான் அம்மா என் கண்’ என்பார். ‘வாலு போச்சு கத்தி வந்தது டம் டம்; குரங்குக்கு ஒண்ணுபோனால் ஒண்ணு வந்தது டம்டம். உன் தாத்தாவுக்குக் கண்ணுபோச்சு பொண்ணு போச்சு எல்லாம் போச்சு உசிர் போகல்லே டம்டம்’னு ஏதோ சிரிப்பு வரமாதிரி சொல்லி முடிப்பார். சிரிப்பு கேக்காமல் வந்துடும். சிரிச்சப்புறம் சிரிச்சது தப்புன்னு தெரிஞ்சு பயமாயிருக்கும். ஆனால் ஏன் தப்புன்னு தெரியாது. ஒரொரு சமயம் கண்ணிலிருந்து சதையை உரிச்சா போல், கண்ணே திடீர்னு தெரிஞ்சுட்டாப் போல் ஒரு திக்கா முறைச்சுப் பார்த்திண்டிருப்பார். அப்படி என்னத்தைப் பார்க்கறார்னு அந்தப் பக்கம் திரும்பிப் பார்ப்பேன். எனக்கு ஒண்ணும் தெரியாது. ஆனால் அவருக்கு மாத்திரம் ஏதோ தெரியும் போல இருக்கு. ‘இப்போ தெரியறது’ என்பார். திரும்பவும் அந்தத் திசையைப் பார்ப்பேன். அங்கு ஒண்ணுமில்லை. ‘என்னது தாத்தா?’ ‘இப்போ புரியறது.’ ‘எது தாத்தா?’ ‘ஏன் அப்படி கண்ணீரா உருகி, காற்றில் கற்பூரமா காணாமலே போயிட்டான்னு.’ ‘ஏன் தாத்தா?’ ‘ஆனால் இப்போ புரிஞ்சு ப்ரயோஜனம்? புரிஞ்சதை சொல்லித்தான் ப்ரயோஜனம்? அப்பவே புரிஞ்சிருந்தாலும் அதனால் நடக்கப்போற காரியமும் இல்லை. ரகளைதான் கூட. நன்னா புரியறது. புரியறதுக்குமேலே ப்ருவ் ஆறது. கிட்டிமுட்டிப் போனால் யாருக்கு யார்? நீயாரோ நானாரோ யார் யாரோ ஆரிராரோ...ன்’னு கட்டைக் குரலில் தாலாட்டுப் பாட ஆரம்பித்துவிடுவார். ‘என்ன தாத்தா பாடறேள்! ஒண்ணுமே புரியல்லியே!’ ‘எல்லா கேள்விக்கும் ஒரே பதில், ஒரே பதில்தான் ஒரே கேள்வி. கேள்வியேதான் பதில் - ஆரிராரோ ஆராரோ...’ திடீர்னு தாத்தா சிரிப்பார். சிரிப்பு புரியாது; ஆனால் அதன் வேதனை மட்டும் எனக்கு அப்பவே புரியும் - ஏன் மாமா உங்கள் கண்ணில் திரை மறைக்கறது?” வெட்கமற்ற கண்ணீர் - அல்ல வெட்கம் நிறைந்ததா? - என் கன்னங்களில் வழிகின்றது. ஆயினும் என் குரல் மட்டும் கண்ணீரில் குளித்ததாய் சுத்தமாய், தெளிவாய் ஒலிக்கின்றது. “உன் கதை நீ சொல்கிறாய். புஷ்பம் மலர்வது போல், அர்த்தங்கள் ஆயிரம் இதழ்கள் என்னில் தளையவிழ்கின்றன. ஆனால் உன் தாத்தா சொன்னாற்போல் - ப்ரயோஜனம்?” “எல்லோரும் சேர்ந்து என்ன புதிர் பேசுவேளோ! எனக்குத் தலை சுத்தறது.” “ஆனால் ஒன்று சொல்கிறேன்.” அவள் புருவங்கள் வினாவில் உயர்கின்றன. ஆவேசம் வந்தாற்போல் என் வாயினின்று ஏதோ வார்த்தைகள் புறப்படுகின்றன. “சக்கு, நீ சாகவில்லை.” அவள் பின்னிடைந்தாள். அவள் விழிகள் வட்டமாயின. பயம், வியப்பு. நான் அவளை நெருங்கினேன். “கிணற்றில் குடத்தை விட்டு, ஜலத்தைக் கலக்குமுன் ஜலத்தின் பளிங்கில் தெரிவது யார் என்று கிணற்றில் எட்டிப் பார்!” அவள் கண்களில் கலக்கம் சட்டென விட்டது. புன்னகையில் கன்னங்களில் வெளிச்சம் படர்ந்தது. “என்னவோன்னு பயந்தே போனேன். அம்மாவையே உரிச்சு வெச்சிருக்குன்னு அப்பா கூட ஒரொரு சமயம் சொல்வார். அதையே தாத்தா என் முகத்தைத் தடவித் தெரிஞ்சுண்டு சொல்வார். நானும் அப்பப்போ கண்ணாடியில் பார்த்ததுண்டு, பத்துத் தேய்க்கறப்போ, பித்தளைப் பாத்திரத்தில் பளிச்சுனு அழுக்குவிட்ட சுருக்கில் அது என் முகத்துக்குக் காட்டற பொம்மையில் என்னைப் பார்த்து என் அம்மாவை நினைச்சுப்பேன்.” திடீரென என்னை ஒரு பெரும் ஆவல் ஆட்கொண்டது. “உன் பேர் என்ன?” “அபிதா.” நான் திரும்பச் சொல்லிப் பெயரை நாக்கில் சுவைக்கிறேன். “அபிதா.” அ - சிமிழ் போன்று வாயின் லேசான குமிழ்வில், பி - உதடுகளின் சந்திப்பில், தா - நாக்கின் தெறிப்பில், இத்தனை நாள் பிரிந்து போயும், மீண்டதுமே நினைவு கண்டு கொண்ட மனம், விட்ட இடத்திலிருந்து தொட்டுக் கொண்டு, மொக்கு விரிந்தாற் போல் கம்மென்று எழுகின்றது. “நேரமாச்சு, போவோமா?” நீ சொல்கிறாய். செல்கிறாய், நான் உடன் வருகிறேன். ஆண்டவன் வேண்டுவதும் இதுதான். “என்னிடம் உன்னை ஒப்படை.” உன்னிடம் என்னைக் கொடுத்துவிட்டபின் இந்த சமயத்துக்கு என் மனம் எவ்வளவு லேசாயிருக்கிறது. கரைகண்டவன் கவலைவிட்டவன். மிதப்பவனுக்கு மலையேறினால் என்ன? மலையிறங்கினால் என்ன? உயரவோ தாழவோ, எங்கு ஒதுங்கினாலும் அங்கு நான் உன்னோடு இருந்தால் சரி. அற்ப விஷயம் சொற்ப சம்பவம் அடிவயிறு வெள்ளி வீச கடல் வயிற்றில் மீன்குட்டி துள்ளி விழுந்து தனிப்படுகையில், கடலென்றும் மீனென்றும் கண்ட தனிப்பேதம் பொருளா? பொருள் காட்டும் மருளா? அல்ல பொருள் காண்பதே மருளா? அவிழ்த்து அவிழ்த்துப் போட்டு எடுத்தெடுத்துக் கட்டிக் கொள்ளும் பொருளே! சமயமே சிற்பமாகிவிட்டபின் சிற்பத்தில் எது அல்பம் எது சொல்பம்? ஆனால் சக்கு, நீ சக்குவா? அபிதாவா? மலையேறுமுன் சக்கு. மலையிறங்கியதும் அபிதா. ஆனால் நீ யாராயிருந்தால் என்ன? இனி உன்னைக் கவனிப்பதன்றி எனக்கு வேறு ஜோலியில்லை. நீ காத்த மலையாகிவிட்டாய். உன்னைக் கவனிக்கக் கவனிக்க உன் செயல், அசைவுகளின் நுணுக்கம் ஒவ்வொன்றும் நீ அபிதாவோ சக்குவோ, நீயெனும் கவிதையின் தனித்தனி அங்கமாய், ஒவ்வொரு தனிமையும் அதனதன் முழுமை பெற்று, அதன் இரக்கமற்ற கொக்கி என்மேல் விழுந்து கவ்வி, கழுவில் நான் நெளிகிறேன். தரிசனத்தின் பயங்கரம் இதுதான். தரிசனத்திற்கு இரக்கமில்லை. எந்த தரிசனமும் அஞ்சத் தக்கதே. என்னை எனக்கில்லாமல் எல்லாம் தனக்காக்கிக் கொண்டு விட்ட தரிசனி. “நேரமாச்சு.” நேரமாச்சா என்ன? என் பொறிகலங்கிய நிலையில் நேரம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? “போவோமா?” போவோம். நீ சொல்கிறாய். நீ செல்கிறாய். நான் உடன் வருகிறேன். மலையடிவாரத்தில் கிணறு. ராட்டினத்தில் தொங்கும் கயிறுக்கு இதுவரை கள்ளன் வந்ததில்லை. எட்டிப் பார்க்கிறேன். அபிதா அபிதா! தாம்பு நுனியில் குடம் விடுவிடென இறங்கித் தொப்பென்று ஜலத்தில் விழுந்து மொண்டெழுந்த வேகத்தில் ஜலம் அதன் கண்ணாடி கலங்கி, சிற்றலை அதிர்ந்து அடங்கும் மிளிர்வில் அதோ சக்கு முகம் தோன்றிச் சிரித்து நலுங்குகிறது. ‘விர்’ரென்று மேலேறி வரும் குடத்தை வசியமுற்றவனாய்க் கவனிக்கிறேன். கழுத்தில் கயிறுடன் தொங்குவது குடமா? நானா? எனக்கு ஏன் இப்படித் தோன்றுகிறது. பிடிச் சுவர்மேல் குடத்தை இறக்கி, சுருக்கைக் கழற்றி, அவள் குடத்தை இடுப்பில் ஏற்றிக்கொண்ட வேகத்தில், ஜலம் அவள் முகத்தில், உடல் முகப்பில் விசிறி நனைத்தது. ஜலமா? நானா? குடத்தை ஒரு கை அணைக்க, மறுகையால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள். சிரிக்கிறாள். அவள் நடக்கையில் குடத்தில் ஜலம் துளும்பிச் சிரிக்கிறது. நானா? என்னைப் பார்த்து நானேயா? வான் விளிம்பில் ஒரு நக்ஷத்ரம் அர்த்தத்துடன் பார்த்துக் கண் சிமிட்டுகிறது. அவள் முன் செல்கிறாள். நான் பின் செல்கிறேன். அவள் நடையில் இடுப்பின் கடையலில் என் மனம் பறிபோகின்றது. குடத்தின் நசுங்கலிலிருந்து ஜலம் மத்தாப்பூக் கொட்டிக் கொண்டே போகிறது. அவள் நடக்கையில் ஜலம் தெளித்த இடம் பூமிக்குக் குளிர்ச்சி. ஆனால் அவள் நடை என் நெஞ்சுக்குத் தீ. ஜ்வாலை காட்டும் உருக்கள்: “நானா? நீயா? நீயா? நானா?” கேள்விகள் கொக்கிகள் என் முகத்தைப் பிறாண்ட எழுகின்றன. முகத்தை இருகைகளாலும் பொத்திக் கொண்டே நடக்கிறேன். ஆனால், சக்கு நீ எங்கும் போகவில்லை. என் அறிவீனத்தில் நான் எங்கெங்கோ போனேன். ஆனால் எங்கு போனேன்? போவதற்கும் போனதற்கும் எங்குமில்லை என்பதற்கு நானே எனக்கு ருசுவாய் இப்போது இங்குதானிருக்கிறேன். நீயும் இங்கேதானிருக்கிறாய். ஆனால், சக்கு என்றுமே நீ ஒரு இருண்ட கேள்வி. அபிதாதான் உன் வெளிச்சமான பதிலோ? அபிதா, உன் வெளிச்சம் கண் கூசுகிறது. உன்னோடு கண்ணைப் பொத்திக் கொண்டுதான் நடக்கிறேன். எனக்கு என்ன தோன்றுகிறது? ஏன் தோன்றுகிறது? என்ன புரிகிறது? புரிந்தால்தானே? புரிவதற்கே எதுவுமில்லை என்பதுதான் புரிகிறது. அது அது அந்தந்த சமயம் எப்படி எப்படித் தோன்றுகிறதோ அதுதான் உண்டு. தொன்றுதொட்டு இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று என்று ஒன்று, நீயும் நானுமென இரண்டாய்ப் பிரிந்து, பிரிந்தபின், பிரிந்தது திரும்ப ஒன்ற நீயும் நானும் படும் ஓயாத வேதனையில், நீயும் நானும் வெட்டியும் ஒட்டியும் ஒவ்வியும் ஒருவரோடொருவர் ஒப்பிட்டுப் பார்ப்பதும் - இதுதான் கண்டது! இதில் ஒரு சமயம் நீ சகுந்தலை. ஒரு சமயம் சாவித்ரி. மறுசமயம் அபிதா. அத்தனையும் உன் - ‘நீ’யின் சட்டையுரிப்பு. நான் - நான் - கனவிலிருந்து விழித்த கண்களைக் கசக்கியபடி சுற்று முற்றும் பார்க்கிறேன். வானிலிருந்து இறங்கிக் கொண்டே வரும் இரவின் திரைக்குப் பின்னால், இருளின் பெரும் திரட்சியாய், கோபமான எச்சரிக்கையாய், எதற்கோ காவலாய், கரடிமலை சிலிர்த்துக் கொண்டு நிற்கிறது. என்னைச் சுற்றி வயல்களில், பயிர்களின் பச்சையில் இரவில் கறுப்பஞ்சாறு வழிகிறது. என்னெதிரே ஒற்றையடிப் பாதை வெறிச்சாய் ஓடுகிறது. நான் தனி. மலைமேல் ராப்பூரா திருவேலநாதரின் தனிமையை நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது. ‘நானி’ன் மாறாத, மட்டற்ற, மௌனத்தின் தனிமை. சக்கு, நீ எப்படி, ஏன், அப்படி நள்ளிரவில் மலையேறி அந்தத் தனிமையில் கலந்தாய்? “ஆண்டவனே என்னைக் கைவிட்டயே!” என்று அவனிடம் முறையிடவா? “Eli, Eli, Lama Sabachtha-ni?" உன் துயரம் உன் சிலுவையை நீயே சுமந்து மலையேறிச் சென்று, நீ விட்ட உயிர் யாருக்கும் குன்றிலிட்ட தீபமாயிருக்கட்டும் என்றா? கரடிமலையின் கோபமூச்சுப் போல் திடீரெனக் காற்று எழுந்தது. வயல்களில் கதிர்கள் திகிலில் சலசலத்தன. மலையிலிருந்து கபந்தமாய் ஒரு கை நீண்டு என்னைத் தேடி வந்து என் இதயத்தை எட்டிப் பிடித்தாற் போல் இருந்தது. இதயம் ‘சில்ல்ல்ல்’. உடல் ஒரு முறை உதறிற்று. குளிரில் ஒடுக்கிக்கொள்கிறேன். “என்ன பின்தங்கிட்டேள்? இருட்டிப் போச்சே! வாங்கோ!” அவள் வெகுதூரம் முன் போய் விட்டாள். குரல் மட்டும் என்னை எட்டுகிறது. சக்கு குரல், அந்த அவசர விளிப்பின் பின் அதன் நிழல் வேறு பொருளில் உட்செவியில் தட்டுகிறது. “நீ என்னைக் கைவிட்ட கதையை, நானே உன்னிடம் சொல்லத்தான், அபிதாவாய்த் திரும்பி வந்திருக்கிறேன். என்னைக் கொன்னாச்சு. அவளை என்ன செய்யப் போகிறாய்? என்னைப் பழி வாங்கிக்கத்தான் நான் அபிதா.” என்னையறியாமலே ஒரு பெருங்கேவல் என்னின்று கிளம்பிற்று. வாய்க்காலுக்கப்பால் ஊர் வெளிச்சம் மினுக்க ஆரம்பித்துவிட்டது. |