உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அபிதா 4 மத்தியான்னம் மாமா வீட்டுக்கு. கண்ணில் பட்டதெல்லாம் புதுமுகங்கள். எங்களைப் பார்த்து மிரளமிரள விழிக்கின்றன. நியாயம் தானே! பிள்ளைகளுக்கெல்லாம் பெண்டுகள் வந்துவிட்டார்கள். ஆளுக்கொரு குடும்பமாகப் பெருகி விட்டது. வீடு, வீடா அது - ‘ஜே ஜே’ன்னு இடைவிடாத இரைச்சல். மாமிதான் - அன்று கண்டமேனிக்கு அழிவில்லை. சுக்கங்காயா வற்றி, சதாயுசுக்குக் குறைவற்றவளாகத் தோன்றுகிறாள். நெற்றிக் குங்குமம்தான் அழிந்து போயிற்றே அன்றி, தலையில் ஒரு மயிர் கூட நரைக்கவில்லை. நெற்றியில் ஒரு வரிகூட கோடவில்லை. சில பேர் ராசி அப்படி. ஜலம் பாயப் பாய, கூழாங்கள் இன்னும் வழ வழ... “யாரது அம்பியா? என்னடா உயிரோடுதானிருக்கையா, செத்துப் போயிட்டையா? உருவே தெரியல்லியே! நாட்டுப் பெண்ணே வாடியம்மா! நமஸ்காரம் பண்ணறயா, பண்ணு பண்ணு - அப்படியில்லே திக்கு இதுதான் கிழக்கு - தோளோடு தாலி தொங்கத் தொங்கக் கட்டிண்டு பதினாறும் பெத்து - பதினாறும் பெத்துடாதே, நான் சொன்னேனேன்னு, நாள் இருக்கற இருப்புலே! என்ன ஒண்ணுமே காணோமே, கைப்பிள்ளையேனும் அழைச்சுண்டு வரப்படாதோ? என்ன சிரிக்கறே, என்ன முழிக்கறே? ஒண்ணுக்குக் கூட வழியில்லையா? நீங்களேதான் ஒருத்தருக்கொருத்தர் எச்சிலா? சரி, பிராப்தம் அப்படியிருந்தால் நீயும் நானும் என்ன பண்றது? கடைக்காரனாவது கொசிர் போடறான். கடவுள் எடைக்குமேல் இம்மி கூட மாட்டேன்கறான். தவிட்டையும் தங்கத் தராசில் தான் நிறுப்பேன்கறான். ஆனால் யோகமும் இப்போ தவிட்டுக்குத்தான் அடிக்கிறது. இங்கேதான் பார்க்கறையே, வதவதன்னு, போதாதா? வாடா பசங்களா, உங்கள் மாமாடா, மாமிடா, நமஸ்காரம் பண்ணுங்கோ! உங்கள் நமஸ்காரங்களும் கூலிக்குத்தானே! உங்கள் புது மாமி என்னென்னவோ பெட்டியிலிருந்து எடுக்கறாளே! எடுத்துண்டேயிருக்காளே! பிஸ்கோத்து பாக்கட் பாக்கட்டா, பப்பர்மிட்டு, சொக்காத் துணி, ரவிக்கைத் துணி - நீங்கள் இத்தனை பேர் இருக்கேன்னு எப்படிடா அவளுக்குத் தெரியும்? நாள் கழிச்சு பார்க்கறோம்; இதுவும் நியாயம் தான். ஆனால் நியாயத்துக்கும் எல்லை உண்டேப்பா அம்பி! அதைத் தெரிஞ்சுண்டிருக்கையா? தெரிஞ்சிருந்தால் சரி, இங்கிருந்தபடி உன் எல்லை என்னென்னு நான் கண்டேன்? மயிர் நரைச்சுப் போனாலும் வாழ்வு பச்சையாயிருக்குன்னு வெச்சுக்கறேன், அதைத் தவிர எனக்கென்ன தெரியும்? நாள் கழிச்சு ஒத்தரை யொருத்தர் பாக்கறோம். நீ போன முகூர்த்தம் நல்லபடியா திரும்பி வந்திருக்கே, இதைவிடத் திருப்தி எனக்கு வேறென்ன வேணும்...?” பெரியவர்களுக்கு எப்படி இப்படி ஒரு தீர்மானம், எல்லாம் தங்கள் அருள் தான் என்று? வீட்டை விட்டுத் துரத்தினாலும், அது துரத்தப்பட்டவன் நன்மைக்காக அவர்கள் செய்த தியாகம் என்று எப்படி நிரூபிக்கிறார்கள்? அகந்தையைப் பங்காக அவர்கள் எடுத்துக் கொண்டபின் மிச்சமாய் எஞ்சிய அகத்தையும் அழித்து விடுகிறார்கள். எப்படி அது? |