அபிதா

14

     அபிதா எப்பவோ தயாராயாச்சு.

     அத்தனை இட்டிலியையும் அவளே வார்த்து, பற்றுப் பாத்திரங்களை அவளே தேய்த்துக் கவிழ்த்துமாகி விட்டது. இத்தனைக்கும் இன்னிக்கு ஏனோ தினத்தை விட அதிகப்படி வேலை. அவள் சித்தியின் சூழ்ச்சியாவே இருக்கலாம். ஆனால் காரியங்கள் மளமளவென முடிந்தன. உடைமாற்றிக் கொள்வது தான் பாக்கி. இன்று அபிதாவின் உடம்பில் பாதரஸம் ஓடிற்று! சினிமா என்றால் இந்தத் தலைமுறைக்கு என்ன பைத்யமோ? ஆனால் அபிதா பாவம்! அவள் ஆவலைப் பார்த்தால் வீட்டுச் சிறையை விட்டு எங்கேயும் போயிருப்பாள் என்று தோன்றவில்லை. சித்திதான் அவள் இடத்தையும் சேர்த்து அடைத்துக் கொண்டிருக்கிறாளே! இப்போக் கூட கடைசி நிமிடத்தில் சித்தி தடுத்து விடுவாளோ என்று பயம் கூட இருக்கும்.

     சாவித்ரி பூத்தொடுத்துக் கொண்டிருக்கிறாள். ஈதென்ன நேற்றிலிருந்து ஓயாத தொடுப்பு! இவ்வளவு தொடுப்பலுக்குப் பூ ஏது? அவள் பூத்தொடுப்பைக் கண்டால் ஏதோ அச்சம் கொள்கிறது. எல்லாம் அறிந்து தன்னுள் தானடங்கி மேலிறங்கிய மோனத்தில் விதியின் தொடுப்பல்.

     குற்றமுள்ள நெஞ்சு நுட்பம் ஒண்ணுமில்லாததில் கூட ஏதேதோ படிக்கிறது.

     குருக்கள் தான் வீட்டுக்குக் காவல். அவர் தான் உண்மையில் மஹான். கட்டின பசுப்போல் தோன்றுகிறார். ஆனால் எதுவும் அவரிடம் ஒட்டவில்லை. வீட்டைப் பார்த்துக் கொள்வது பற்றி மாமி ஏதேதோ உஷார்கள் சொல்லிக் கொண்டிருக்கிறாள்; இது போல் பழைய சமயங்களில் அவர் பார்த்துக் கொண்ட லக்ஷணம் பற்றி ஏசிக் கொண்டிருக்கிறாள். ஆனால் வார்த்தைகள் இந்தக் காதுள் நுழைந்து அந்தக் காதில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

     அபிதா கூடத்து அறையிலிருந்து வெளியே புறப்பட்டாள். சாவித்ரி தன் புடவையை உதவியிருக்கிறாள். அவள் உடல் விளிம்பெல்லாம் அவள் உள் ஒளி தகதகக்கின்றது. புடவையில் அங்கங்கே தெறித்த ஜரிகைப் பொட்டுகள், பூக்கள் தனித்தனியே உயிர் மூச்சு விடுகின்றன.

     வண்டு மல்லாந்தாற் போல் என் விழிகள் அகன்று விட்டன. அதனாலேயே மற்றவர் காண்பதை விட நான் கூடக் காண்கிறேன்.

     சாவித்ரி எழுந்து தான் தொடுத்த சரம் அத்தனையும் பந்து சுருட்டி அபிதாவின் தலையில் சொருகினாள்.

     சித்தி ஒரு வழியாக குருக்களுக்குச் சொல்லித் தீர்த்துவிட்டு வந்தாள். அபிதாவைக் கண்டதும் அவள் முகம் புழுங்கிற்று.

     “ஏண்டியம்மா, எல்லாப் பூவையும் உன் கொண்டையிலேயே வெச்சுத் திணிச்சுக்கணுமா? வாங்கின கையும் தொடுத்த கையும் தலைக்கு விரலை நறுக்கி வெச்சுக்கறதா?”

     அபிதா சிற்பமாய் நின்றாள். அவளுக்கு நா எழவில்லை. தவழ்ந்து செல்லும் மேகத்தின் நிழல் போல், திகிலின் அழகு அவள் மேல் ஸல்லா படர்ந்தது. நெற்றிப் பொட்டில், மோவாய்ப் பிளவில், நெஞ்சுத் தழைவில், கழுத்தின் வெண்மையில் தெரியும் பச்சை நரம்பில், ரவிக்கைக்கு வெளியே தொள் எலும்புக் குழிவில், மார்த்துணி கீழ் ரவிக்கை முடிச்சுள் இறங்கி மறைந்த மார்பின் பிரிவில்...

     எனக்கு நெஞ்சு வரள்கிறது. யாரேனும் ஒரு முழுங்கு தீர்த்தம் தந்தால் தேவலை.

     கூடவே ஒரு ஆச்சர்யம். கரடிமலையில், பூமியின் இந்தக் கண்காணா மூலையில் இவ்வளவு அழகா? சிருஷ்டியின் விருதாவான செலவுக்கு வேறு சான்று என்ன வேண்டும்? பயனற்ற அழகு. திருவேலநாதனின் திருவிளையாடல் விசேஷம். இப்போ அபிதாவைப் பார்க்கையில் மனுஷியாகவே தோன்றவில்லை. எங்கிருந்தோ வழி தப்பி வந்து மருண்ட பிராணி.

     நல்லவேளை, சாவித்ரி அவள் உதவிக்கு வந்து விட்டாள்.

     “நமக்கென்ன மாமி. விரல் நறுக்கு போறாதா? சிறிசுகளுக்குச் சூட்டிப் பார்ப்பதுதானே நமக்கு சந்தோஷம்!”

     தர்க்கம் மேலே தொடர வழியிலாது, பட்டாசுக் கடை பற்றிக் கொண்டது போல் ‘பட்பட் படார்’ சத்தம் கேட்டு எல்லோரும் வாசலுக்கு ஓடினர். நான் சாவகாசமாய்ப் பின் வந்தேன்.

     மாமியின் தம்பி மோட்டார் சைக்கிளின் மேல் வீற்றிருந்தான். அந்த நாளில் ரஜபுத்ர வீரன் இதுபோல், சண்டையிலிருந்து குதிரை மேல் வீட்டுக்குத் திரும்பி வந்திருப்பான். முகத்தில் அவ்வளவு வெற்றி.

     “என்னடா அம்பி இது?”

     (ஓ, இவனும் ‘அம்பி’யா?)

     “மலிவா வரும்போல இருக்கு. என்ன அபிதா, வாங்கலாமா?”

     மாமி எரிந்து விழுந்தாள்.

     “அவளை என்ன கேள்வி? பெரியமேரு!”

     “உன்னையென்ன கேள்வி? வாங்கப் போறவன் நான்!”

     “ஆமாம், என்னைக் கேட்பையா? நான் என்ன உன் குதிகாலில் ஈஷிய சாணிக்கு சமானம்...”

     “இதோ பார் அக்கா, இதனால் தான் எனக்கு இங்கே வரவே பிடிக்க மாட்டேன்கறது. உன் சண்டை ஸ்வாரஸ்யமா வேனுமிருக்கா, படு bore! வா அபிதா. பின்னால் ஏறு, நாம் போகலாம்!”

     “நானா?” அபிதா பின்னிடைந்தாள்.

     “நீதான், நீயேதான்! பின் என்ன உன் சித்தியா? பயப்படாதே. உம் ஏறு!”

     “நன்னாயிருக்குடா வயசுப் பெண்ணை நீ கூப்பிடற லக்ஷணம்!”

     “நீ ஒருத்தியே உடன் பிறந்தாள் போதும்போல இருக்கே! நான் யாரு உன் தம்பி, இவளுக்கு மாமா!”

     “இல்லை இல்லை. நான் இவாளோடேயே வண்டியில் வரேன்.”

     அபிதா முகத்தில் வெட்கம், பயம். கூடவே அவள் அடக்கப் பார்த்தும் மீறும் ஒரு மகிழ்ச்சி.

     வெறுங்கையாலேயே இவன் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டால் என்ன? இந்த சமயத்தில், என் உடல் பலம், ஆத்திர பலம் அத்தனையும் என் இரு கைவிரல்களில் வந்து வடிந்திருப்பது எனக்கே தெரிகிறது.

     பொறுமையிழந்து அவன் முகம் சுளித்தது. “உன் சித்தியேறி விட்டால் வண்டியில் அப்புறம் இடம் ஏது? இவா வண்டியில் வரத்துக்குள்ளே நாம் எட்டு ஊரை எட்டு தரம் சுத்தி வந்துடலாம். வா வா அபிதா, போகலாம், வாயேன்!”

     அவன் குரல் கெஞ்சிற்று, கொஞ்சிற்று.

     “சரி, சரி, சினிமாவும் டிராமாவும், உன் வெள்ளித்திரையில் பாக்கறது போறாதா, இங்கே வேறே நீ நடத்திக் காட்டணுமா?” சித்தி சீறி விழுந்தாள். அபிதாவிடம் திரும்பினாள். அவள் முகம் எள்ளும் கொள்ளும் வெடித்தது. முகத்தின் மறு சிலிர்த்தது.

     “பொண்ணே, உனக்கு சினிமா போய்த்தான் ஆகணும்னா, ஏறித் தொலை! மாட்டேன், வரல்லேன்னு பேரம் பேசி யாருக்கு இந்தப் பூச்சு வேண்டிக் கிடக்கு? ‘மாட்டேன்னா, வல்லேன்னா, தாரும் தாரும் வாழைக்காய் தாளம் போல் கோபுரம், கில்லாப் பரண்டி கீப்பரண்டி கிச்சு மூச்சு மாப்பிரண்டி’ இன்னும் விளையாடிண்டிருக்கப் போறேளா? ஜானவாசத்துக்கு கார் வெக்கறோமோ யில்லையோன்னு கவலைப்பட்டுண்டு மாப்பிள்ளைப் பிள்ளையாண்டான் தானே வாஹனம் இப்பவே வாங்கிண்டு வந்துவிட்டான். என் தீர்மானத்தில் என்ன இருக்கு? பின்னால் தான் கையைப் பிடிக்கறது இருக்கவேயிருக்கு. இப்பவே அவன் உன் கையைப் பிடிச்சு இழுக்காமே நீயே போய் உக்கார்ந்துடு, இல்லே ஆத்திலேயே தங்கிடு... எங்களுக்கு நேரமாறது!”

     “அக்கா! நீ அபிதாவை எங்கே தங்க வெச்சுடுவியோன்னு தானே நானே வந்திருக்கேன்!”

     சிரிப்புச் சத்தம் கேட்டுத் திரும்பினோம். குருக்கள் திண்ணையில் உட்கார்ந்து பாக்கு வெட்டியால் கொட்டைப் பாக்கை நறுக்கிக் கொண்டிருந்தார். ஏன் இந்தச் சிரிப்பு? நடுவாய்க்காலில் இப்படி அழுக்குத் துணி அலசுவது கண்டா?

     இல்லை, மரை ‘லூஸா’?

     அபிதா ஒன்றும் பேசவில்லை. பில்லியனில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். கன்னங்களில் மட்டும் இரண்டு சிவப்புத் திட்டு. மோட்டார் சைக்கில், புறப்பட்டு வெடி போட்டுக் கொண்டு கிளம்பிப் பறந்தது. பின்னால் ஒரு புழுதித் தொகை துரத்தி அதன் போக்கை மறைத்தது.

     “தழையை அப்புறம் நாள் பூரா மெல்லலாம்; வண்டி பார்த்துண்டு வாங்கோ” என்று மாமி அதட்டிவிட்டு, திடீரென்று புருஷாளோடு பேசும் கூச்சத்தில் உடம்பையும் குரலையும் திடீரென்று குறுக்கிக் கொண்டு... (சகிக்கவில்லை, முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.)

     “மாமா ரெடியாகல்லியா?”

     “நான் வரவில்லை.” ஏன் இப்படிச் சொன்னேன்? எனக்கெ தெரியவில்லை. சாவித்ரி என்னை நேர் முகமாகப் பார்த்தாள்.

     “இல்லை எனக்கு அலுப்பாயிருக்கிறது. உங்களுடன் குருக்கள் போய் வரட்டும். நான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்.”

     என்னுள் புகுந்து கொண்ட அழும்பு சாவித்ரிக்குத் தெரிந்து விட்டது. மேலும் வற்புறுத்த வேண்டாம் என்று அவள் தடுத்து விட்டாள்.

     வண்டி தட்டுத் தடுமாறித் தள்ளாடி கண்ணுக்கு மறைந்த பின் எந்நேரம் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தேனோ தெரியாது. லேசாய் மாரை வலிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு வண்டு இடது புறம் கிளம்பி வலது பக்கமாய், உடலின் உள் சுவரில் முதுகுப்புறத்தைச் சுற்றி வந்து, இதயத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே கட்டியிருக்கும் கூட்டில் தங்கி விண்விண் எனத் தெறித்தது. சில கணங்கள் கழிந்து மீண்டும் மீண்டும் இதே ப்ரதக்ஷணம். மார்பை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டால் மட்டும் வலி விட்டு விடுமா? துருவல் அதிகரித்தது.

     Heart Attack என்பது இதுதானா?

     ஏற்கெனவே இதைப் பற்றி டாக்டரிடம் கேட்டதற்கு:

     “நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை விடப் பன்மடங்கு அதிக வலி அந்த வலி. அடேப்பா! வலி ஏறிக் கொண்டே போகும் வேகத்தில், உச்சத்தில் வலிக்கிறது என்று சொல்வதற்குக் கூட உங்களுக்கு நேரமிருக்காது. நினைவு தப்பிவிடும். நினைவு மீண்டால் உங்களுக்கு மாரடைப்பு வந்ததைப் பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லிப் பெருமைபட்டுக் கொண்டிருக்க முடியும். மீளாவிட்டால் - well, அதைப் பற்றி, எதைப் பற்றியுமே உங்களுக்கப்புறம் என்ன?” என்று சிரித்துக் கொண்டே அவர் தைரியம் சொல்லியிருக்கிறார்.

     இது சகுந்தலையின் கோபம்.

     பிறகு அங்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை. ஆமாம், இந்தக் கந்தல் பாய்க்கும், ஓட்டைச் சொம்புக்கும் காவல் இல்லாவிட்டால் கெட்டுப் போச்சாக்கும்! அபிதாவும் இங்கு இல்லை. இனி எனக்கு இங்கே என்ன வேலை?

     கதவு திறந்தது திறந்தபடி. நான் நடந்தேன்.

     மார்பில் கொக்கி மாட்டிக் கரடிமலை என்னைத் தன்னிடம் இழுக்கிறது. உயிரைக் குடிக்கும் ஆலிங்கனத்தில் அணைக்க அதோ காலைத் தூக்கிக் காத்திருக்கிறது.

     சகுந்தலையையும் இப்படித்தான் அன்று இழுத்திருக்குமோ?

     சகுந்தலை எப்படிச் செத்திருப்பாள்? பச்சிலை ஏதேனும் தின்றாளா? என் பிரிவு தாங்காமல் இதயம் வெடித்தா? இல்லை நினைத்த சமயத்தில் யாதொரு பலவந்தமுமில்லாமல் உயிர் நீக்கும் சக்தி பெற்றிருந்தாளோ? “நினைத்தேன், செத்தேன்.”

     மேலே போய், ஆண்டவன் எனும் அந்த ஆள்விழுங்கியைத் தான் கேட்கணும். கேட்டு என்ன? எப்பவும் அவனிடம் அந்த அசட்டுப் புன்னகைதான் உண்டு. “அப்பப்போ நீ என்னென்ன நினைக்கிறாயோ அதுதான்” எனும் எதிலும் பட்டுக் கொள்ளாத பதிலுக்குத் தீர்வையேது?

     எல்லாம் நிமிஷத்தின் முறுக்கேற்றம் தான். நேற்று நியதியையே மாற்றவல்ல விராட் புருஷனாய் உன்னை நினைத்தாய். இன்று என்ன? ஒரு துரும்பைக் கூட அதன் இடத்திலிருந்து அசைக்க நீ சக்தியற்றவன். முட்டாள், வெறும் சிந்தனை மட்டும் வாழ்வாகிவிடுமா? நீ சிந்தனைக்கே இரையாகி விட்டாய். பார், சற்று முன் உன் கண்ணெதிரேயே, அபிதாவை அவளிடமிருந்தே பிடுங்கி (உன்னிடமிருந்து பற்றுவது இருக்கட்டும் - எனக்குச் சிரிப்பாய் வருகிறது) தன் பின்னால் ஏற்றி வைத்துக் கொண்டு போய்விட்டான்! பட்பட்பட் - மோட்டார் சைக்கிள் சப்தம் உனக்குக் கேட்கவில்லை?

     மார்பைத் துளைத்த வலி கூட மறந்து நின்றேன். ஆம், நினைவில் அல்ல. மெய்யாவே வெடி சப்தம் தூர இருந்து எட்டுகிறது. நினைவும் நனவும் இழைந்த சமயமே தெரியவில்லை. இந்தப் பக்கமாய்த்தான் நெருங்குகிறது.

     புரிந்தது. அம்பிப்பயல், புதுவண்டி மோகத்தில் சவாரி பழகிக் கொண்டிருக்கிறான். அபிதாவுக்குத் தன் வரிசைகளைக் காட்டிக் கொண்டிருக்கிறான். கண்மூடி வேகத்தில் வருகிறான்.

     ஆனால் என் கண்கள் இவனைப் பார்ப்பதற்கு இல்லை. அவன் பின்னால், கூந்தலும் ஆடையும் குலைந்து, காற்றில் மேலாக்குச் சிறகாட, முகத்தில் வேகவெறி கூத்தாடிக் கொண்டு-

     அடுத்த கணம் என்ன நேர்ந்ததென்று விளக்கமாய் அப்போது தெரியவில்லை. பின்னால் எண்ணியெண்ணி நெஞ்சுத் தழும்பில், நினைவின் செதுக்கலில் அவயவம் அவயவமாய்ப் பிதுங்கி நிற்கிறது.

     மலையடியில் நந்தியா, நாயா தெரியாமல் குறைச் செதுக்கலில் விட்டு நின்ற கல்லின் மொத்தாகாரத்தில் சைக்கில் பெரும் சத்தத்துடன் மோதிற்று. (அதைத் தன் வழி விட்டுத் தகர்த்து எறிந்து விட வேண்டும் என்று அம்பிப் பயலுக்கு எண்ணமோ என்னவோ?) மோதிய வேகத்தில் பந்தாய் ஆள் உயரம் எகிறி பொத்தென்று பூமியில் விழுந்தது. அவன் ஒரு மூலை. அபிதா ஒரு மூலை -

     - இல்லை, என் கண்கள் அபிதாவைப் பார்க்கத்தான்.

     அர்ச்சனையில், அர்ச்சகன் கையினின்று ஆண்டவன் பாத கமலங்களை நோக்கிப் புறப்பட்ட மலர் போல, அபிதா, மலை மேல் திருவேலநாதர் சன்னதி நோக்கி ஏறும் படிக்கட்டின் - ஒன்று, இரண்டு, மூன்றாவது படி மேல் உதிர்ந்து மலர்ந்தாள்.

     தன் மேல் புழுதியைத் தட்டிக் கொண்டு அம்பி என் பக்கத்தில் வந்து நின்றான். அவனுக்கு ஒரு சிராய்ப்புக் கூட இல்லை. மயிர் தான் கலைந்திருந்தது.

     எனக்கு மார்வலி நின்று விட்டது.

     அபிதா எழுந்திருக்கவில்லை. இப்போக்கூட அவளைத் தொட ஏன் தோன்றவில்லை? அவள் முகத்தின் புன்னகை கூட மாறவில்லை.

     மரத்திலிருந்து பொன்னரளி ஒன்று நேரே அவள் மார் மேல் உதிர்ந்தது.

     சற்று எட்ட மோட்டார் சைக்கிள் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

முற்றும்