இளங்கோவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

பதிகம்

(இணைக் குறளாசிரியப்பா)

குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி
'பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு, 5

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்
காதல் கொழுநனைக் காட்டி, அவளொடு, எம்
கண்-புலம் காண, விண்-புலம் போயது
இறும்பூது போலும்; அஃது அறிந்தருள் நீ' என-
அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன், 10

'யான் அறிகுவன் அது பட்டது' என்று உரைப்போன்,
'ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்,
பேராச் சிறப்பின் புகார் நகரத்துக்
கோவலன் என்பான் ஓர் வாணிகன், அவ் ஊர்
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு 15

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடுஉற,
கண்ணகி என்பாள் மனைவி - அவள் கால்
பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர்
மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு 20

மன்பெரும் பீடிகை மறுகில் செல்வோன்
பொன் செய் கொல்லன்-தன் கைக் காட்ட
"கோப் பெருந் தேவிக்கு அல்லதை, இச் சிலம்பு
யாப்புறவு இல்லை; ஈங்கு இருக்க" - என்று ஏகி
பண்டு தான் கொண்ட "சில் அரிச் சிலம்பினைக் 25

கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை" என
வினை விளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
கன்றிய காவலர்க் கூஉய், "அக் கள்வனைக்
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு" - என 30

கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள், நெடுங்கண் நீர் உகுத்து,
பத்தினி ஆகலின், பாண்டியன் கேடுஉற,
முத்து ஆர மார்பின் முலைமுகம் திருகி,
நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய 35

பலர் புகழ் பத்தினி ஆகும் இவள்' என-
'வினை விளை காலம் என்றீர்; யாது அவர்
வினை விளைவு?' என்ன - 'விறலோய்! கேட்டி:
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்,
கொன்றை அம் சடைமுடி மன்றப் பொதியிலில் 40

வெள்ளி அம்பலத்து, நள் இருள் கிடந்தேன்;
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுரை மாதெய்வம் வந்து தோன்றி,
'கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்!
முதிர் வினை நுங்கட்கு முடிந்தது; ஆகலின், 45

முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது; ஆகலின்,
வார் ஒலி கூந்தல்! நின் மணமகன்-தன்னை 50

ஈர் ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி,
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்' எனக்
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான்' என
'அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம், 55

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்' என 60

'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது,
அடிகள்! நீரே அருளுக' என்றாற்கு அவர்,
மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
மனையறம் படுத்த காதையும், நடம் நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும், 65

அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையும்,
இந்திர விழவு ஊர் எடுத்த காதையும்,
கடல் ஆடு காதையும்,
மடல் அவிழ் கானல் வரியும், வேனில் வந்து இறுத்தென
மாதவி இரங்கிய காதையும், தீது உடைக் 70

கனாத் திறம் உரைத்த காதையும், வினாத் திறத்து
நாடு காண் காதையும், காடு காண் காதையும்,
வேட்டுவ வரியும், தோட்டு அலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்கு இசை
ஊர் காண் காதையும், சீர்சால் நங்கை 75

அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,
ஆய்ச்சியர் குரவையும், தீத்திறம் கேட்ட
துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய
ஊர் சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும், வஞ்சின மாலையும் 80

அழல் படு காதையும், அரும் தெய்வம் தோன்றிக்
கட்டுரை காதையும், மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும் என்று, இவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து, வரம் தரு காதையொடு 85

இவ் ஆறு ஐந்தும்
உரை இடையிட்ட பாட்டு உடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள, மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது, பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபுஎன். 90

உரை பெறு கட்டுரை

அன்று தொட்டு, பாண்டிய நாடு மழை வறம்
கூர்ந்து, வறுமை எய்தி, வெப்புநோயும் குருவும்
தொடர, கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்
கொன்று, களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய,
நாடு மலிய மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது. 1

அது கேட்டு, கொங்கு இளங்கோசர் தங்கள்
நாட்டகத்து, நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய,
மழை தொழில் என்றும் மாறாதாயிற்று. 2

அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக்
கயவாகு என்பான், நங்கைக்கு நாள் பலி - பீடிகைக்
கோட்டம் முத்துறுத்து-ஆங்கு, 'அரந்தை கெடுத்து,
வரம் தரும் இவள்' என, ஆடித் திங்கள் அகவையின்,
ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பன் முறை எடுப்ப,
மழை வீற்றிருந்து, வளம் பல பெருகிப் பிழையா
விளையுள் நாடு ஆயிற்று. 3

அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி
கோழி அகத்து, 'எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஓர் பத்
தினிக் கடவுள் ஆகும்' என, நங்கைக்குப் பத்தினிக்
கோட்டமும் சமைத்து, நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே.

புகார்க் காண்டம்

1. மங்கல வாழ்த்துப் பாடல்

(சிந்தியல் வெண்பாக்கள்)

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அங்கண் உலகு அளித்தலான்.
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொற்கோட்டு 5

மேரு வலம் திரிதலான்.
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.
பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்! 10

வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.
ஆங்கு,
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்,
பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய 15

பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்,
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.
அதனால், 20

நாக நீள் நகரொடு நாக நாடு அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது தன்னில்,
மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்;
ஈகை வான் கொடி அன்னாள்; ஈர் ஆறு ஆண்டு அகவையாள்;
அவளும் தான், 25

போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.
ஆங்கு, 30

பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்;
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்;
இரு நிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அகவையான்;
அவனும்தான், 35

மண் தேய்த்த புகழினான்; மதிமுக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டி,
'கண்டு ஏத்தும் செவ்வேள' என்று இசை போக்கிக் காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான்; கோவலன் என்பான் மன்னோ.
அவரை, 40

இரு பெரும் குரவரும், ஒரு பெரு நாளால்,
மண அணி காண மகிழ்ந்தனர்; மகிழ்ந்துழி,
யானை எருத்தத்து, அணி இழையார், மேல் இரீஇ,
மா நகர்க்கு ஈந்தார் மணம்.
அவ்வழி, 45

முரசு இயம்பின; முருடு அதிர்ந்தன; முரை எழுந்தன பணிலம் வெண்குடை
அரசு எழுந்ததோர்படி எழுந்தன; அகலுள் மங்கல அணி எழுந்தது
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து,
நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ்,
வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச் 50

சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,
மா முது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!
விரையினர், மலரினர், விளங்கு மேனியர்,
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர், 55

சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார், 60

'காதலற் பிரியாமல், கவவுக்கை ஞெகிழாமல்,
தீது அறுக!' என ஏத்தி, சின்மலர் கொடு தூவி,
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-'தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை 65

உப்பாலைப் பொன் கோட்டு உழையதா, எப்பாலும்
செரு மிகு சினவேல் செம்பியன்
ஒரு தனி ஆழி உருட்டுவோன்' எனவே. 68

2. மனையறம் படுத்த காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

உரைசால் சிறப்பின், அரைசு விழை திருவின்,
பரதர் மலிந்த, பயங்கெழு, மா நகர்-
முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி,
அரும் பொருள் தரூஉம் விருந்தின் தேஎம் 5

ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட
குலத்தில் குன்றாக் கொழுங் குடிச் செல்வர்,
அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய 10

கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன் விதித் தன்ன மணிக் கால் அமளிமிசை,
நெடு நிலை மாடத்து இடை நிலத்து, இருந்துழி
கழுநீர், ஆம்பல், முழுநெறிக் குவளை,
அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை, 15

வயற்பூ வாசம் அளைஇ; அயற்பூ
மேதகு தாழை விரியல் வெண் தோட்டுக்
கோதை மாதவி, சண்பகப் பொதும்பர்,
தாது தேர்ந்து உண்டு; மாதர் வாள் முகத்துப்
புரி குழல் அளகத்துப் புகல் ஏக்கற்றுத் 20

திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து,
மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து,
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
கண்டு, மகிழ்வு எய்தி, காதலில் சிறந்து, 25

விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும்
நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி,
சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி,
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் 30

கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,
வண்டு வாய் திறப்ப, நெடு நிலா விரிந்த
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
தாரும் மாலையும் மயங்கி, கையற்று, 35

தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை,
'குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின், 40

பெரியோன் தருக திரு நுதல் ஆக என
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவம் ஆக ஈக்க 45

மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
தேவர் கோமான் தெய்வக் காவல் -
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என
அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்,
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே 50

அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?
மா இரும் பீலி, மணி நிற மஞ்ஞை, நின்
சாயற்கு இடைந்து, தண் கான் அடையவும்;
அன்னம், நல் நுதல்! மெல் நடைக்கு அழிந்து, 55

நல் நீர்ப் பண்ணை நனி மலர்ச் செறியவும்;
அளிய தாமே, சிறு பசுங் கிளியே -
குழலும், யாழும், அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மட நடை மாது! நின் மலர்க் கையின் நீங்காது 60

உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின;
நறு மலர்க் கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறு இல் மங்கல அணியே அன்றியும்,
பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல் இருங் கூந்தல் சின்மலர் அன்றியும், 65

எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்கொல்?
நானம் நல் அகில் நறும் புகை அன்றியும்,
மான் மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திரு முலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்,
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்? 70

திங்கள் முத்து அரும்பவும், சிறுகு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர்; என் உற்றனர்கொல்?
மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே! 75

பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னை' என்று 80

உலவாக் கட்டுரை பல பாராட்டித்
தயங்கு இணர்க் கோதை தன்னொடு தருக்கி,
வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள்
வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி
மறப்பு அரும் கேண்மையோடு அறப் பரிசாரமும், 85

விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்,
வேறுபடு திருவின் வீறு பெறக் காண,
உரிமைச் சுற்றமோடு ஒரு தனிப் புணர்க்க,
யாண்டு சில கழிந்தன, இற்பெருங் கிழமையின்
காண் தகு சிறப்பின் கண்ணகி தனக்கு என். 90

வெண்பா

தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என, ஒருவார்
காமர் மனைவி எனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் - மண்மேல்
நிலையாமை கண்டவர் போல், நின்று.