மதுராந்தகியின் காதல்

(மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம்

அத்தியாயம் - 3. தந்தையும் மகளும்

     அன்று பிற்பகலில் மாமன்னர் இராசேந்திர சோழ தேவர் காலை வரவேற்பு நிகழ்ச்சிகளின் களைப்பு நீங்கத் துயில்கொண்டு எழுந்த பின் சோழகேரளன் அரண்மனை அந்தப்புரத்துக்கு வந்தார்.

     அரண்மனையில் ஆங்காங்கு தங்கள் நியமங்களில் ஈடுபட்டிருந்த பணிப்பெண்கள், வேந்தரைக் கண்டதும் கரம் கூப்பிச் சிரம் தாழ்த்தி வணங்கினர். அந்தப்புரத்தில் நுழைவாயிலைக் காவல் புரிந்து நின்ற பணிப்பெண்களில் ஒருத்தி மன்னர் பிரானின் வருகையை அறிவிக்க உள்ளே விரைந்தோடினாள்.

     அந்தப்புரத்தின் நடு மண்டபத்தில் பட்டத்தரசி கிழானடிகளும் அவளது ஒரே அருஞ்செல்வியான *மதுராந்தகியும் மட்டுமே இருந்தனர். மதுராந்தகி அன்னையின் மடியில் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்தாள். காலையில் தனக்கும் வானவிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலையும், அதன் முடிவில் தாங்கள் செய்துள்ள சபதத்தையும் அவள் சற்றுமுன் தன் அன்னையிடம் கூறினாள்.

     (*இரண்டாம் இராசேந்திர சோழ தேவருக்குக் கிழானடிகள், திரைலோக்கியமுடையாள் என இரு மனைவியர் இருந்ததாக ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன. ஆயின், மதுராந்தகி இவர்களுள் யாருடைய மகள் என்பது பற்றிய குறிப்பு எங்கும் காணக்கிடைக்கவில்லை. எனவே, பட்டத்தரசியான கிழானடிகளின் ஒரே மகளே மதுராந்தகி என நான் எடுத்துக் கொண்டுள்ளேன்.)

     அதைச் செவிமடுத்த கிழானடிகள் பெரிதாக நகைத்து “மதுராந்தகி! உன் தந்தையார் உன் மீது அளவு கடந்த அன்பைச் சொரிந்து உன்னை இன்னும் அறியாப் பிராயத்தினளாகவே நிறுத்தி வைத்திருக்கிறார். இல்லாவிட்டால், இப்படி வேடிக்கையான ஆணை ஒன்றை இட்டிருப்பாயா?” என்றாள்.

     “அம்மா, என் ஆணை வேடிக்கை அன்று; அது உண்மையானது; நான் நிறைவேற்றியாக வேண்டியது,” என்று குமுறினாள் மதுராந்தகி.

     “எதை நிறைவேற்றப் போகிறாய், மகளே? கீழைச் சளுக்கிய மரபினனுக்குச் சோழ அரியணையா? உன் தந்தையார் காது கேட்க இப்படிப் பேசி விடாதே. அப்புறம் நீ அவர் அன்புக்குரிய மகள் என்ற நிலை மாறி, நாட்டுக்குத் துரோகம் நினைப்பவள் என்ற நிலை ஏற்பட்டுவிடப் போகிறது. முத்தரையரை வென்று சோழப் பேரரசை நிறுவிய நம்முடைய முதாதை தஞ்சை கொண்ட கோப்பரகேசரி விசயாலய சோழர் காலம் முதல் வாழையடி வாழையாக அரசு செலுத்திவரும் சோழ மரபுக்கு நீ முடிவு கட்டப் போகிறாயா? இது என்ன பொருளற்ற பிதற்றால் மகளே!”

     ஆம்; பல்லவர்களுக்குத் திரை செலுத்தி, அவர்கள் ஆளுகையின் கீழ் குறுநில மன்னர்களாக விளங்கி வந்த முத்தரையர் மரபினரிடமிருந்து தஞ்சை உள்ளடங்கிய சோழ மண்டலத்தைப் போர் வலியால் பெற்ற விசயாலயச் சோழப் பராந்தகருக்குப் பிறகு இம்மாபெரும் சோழப் பேரரசின் அரியணைக்காக வேறு மரபினரும் கனவுகூடக் கண்டதில்லை. அப்படியிருக்க, தான் இன்று இட்டுவிட்ட ஆணை எளிதில் நிறைவேறக் கூடியதா என்ற ஐயம் அதனை இட்ட கணத்திலிருந்தே மதுராந்தகியின் உள்ளத்தைச் சூழ்ந்து வாட்டி வந்தது. ஆனால் அவள் என்ன, இந்தச் சோணாட்டின் பட்டத்தரசியாக ஆயுள் முழுவதும் வாழ்வேன் என்றா ஆணை இட்டாள்? இல்லையே! குலோத்துங்கனை மணந்து அவருடன் ஒரு நாளாவது சோழ அரியணையில் அமராவிட்டால், தன் பெயர் மதுராந்தகி அல்ல என்றுதானே கூறியிருக்கிறாள்? அது சாத்தியமில்லையா? சோழவள நாட்டின் ஏகச் சக்கரவர்த்தியாக விளங்குபவரால், இந்த ஒரு சிறிய ஏற்பாட்டைத் தன் மகளுக்காகச் செய்ய முடியாதா? குலோத்துங்கனுக்கும் அவளுக்கும் இடையே நிலவும் ஆழ்ந்த காதலை அவர் அறிவார். அவனையே தமது மகள் மணக்க உறுதி பூண்டிருப்பதும் அவருக்குத் தெரியும். தவிர, அவர் அவளுடைய விருப்பம் எதற்கும் இடையூறாக நின்றது என்பது இதுவரையில் கிடையாது. அத்தகைய அன்புப் பொழிலான தந்தையார் தனது இந்தச் சிறு கோரிக்கையை, அதிலும் அதனைத் தான் ஆணையிட்ட காரணத்துக்காக, நிறைவேற்றிக் கொடுக்கமாட்டாரா? கட்டாயம் செய்வார். அவர் ‘என் மீது வைத்துள்ள பாசத்தின் அளவை இந்த அம்மாதான் அறியாமல் ஏதோ பிதற்றுகிறாள்!’

     இதையும் மதுராந்தகி தன் அன்னையிடம் கூறத் தயங்கவில்லை. ஆனால் இதைக் கேட்டதும் கிழானடிகளின் வதனத்தில் துலங்கிய பரிவு மறைந்தது. அதன் இடத்தைக் குரோதம் சூழ்ந்தது. குரலிலே வெறுப்பு ஓங்க, பெரிய பிராட்டியார் என அழைக்கப்படும் அந்தச் சோழ அரசி மகளிடம் சொன்னாள்: “முன்பு அந்த ஓர் எண்ணமேனும் என் உள்ளத்தில் இருந்தது; நேற்று மாலையிலிருந்து அதுவும் காற்றோடு போய்விட்டது!“

     “நீ எதைக் குறிப்பிடுகிறாய், அம்மா?” என்று திகிலுடன் வினவினாள் மதுராந்தகி.

     “சொந்த நாட்டின் மீதே பற்றற்ற அந்தப் பிள்ளைக்கு என் ஒரே மகளை மனைவியாக்கும் எண்ணந்தான்!”

     “அம்மா!” என்று அலறினாள் மதுராந்தகி.

     "ஆம் மகளே! நீ வீர பரம்பரையில் உதித்தவள். இந்தச் சோழப் பேரரசை நிறுவிய உன் முதாதை விசயாலய சோழ தேவர் காலத்திலிருந்து ஒவ்வொரு சோழ மன்னரும் எத்தனை வீர பராக்கிரமத்துடன் விளங்கினார்கள் என்பது ஒருகால் உனக்குத் தெரியாமல் இருக்கலாம். குடமூக்குப் போர், அரிசிற்கரைப் போர் முதலிய பல்வேறு போர்களில் கலந்து கொண்டு மார்பில் *தொண்ணூற்றாறு விழுப்புண் தழும்புடைய வீரர் விசயாலயசோழர். அவருடைய புதல்வர் ஆதித்த சோழர் கொங்கு மண்டலத்தை வென்று, அங்கிருந்து கொணர்ந்த பொன்னால் தில்லைச் சிற்றம்பலக் கோவிலின் முகட்டை வேய்ந்த பராக்கிரமசாலி. அவர் மைந்தர் முதலாம் பராந்தகர் வெள்ளூர்ப் போரில் பாண்டிய மன்னனையும், ஈழத்துப் போரில் உதயனையும், வல்லத்துப் போரில் வாணர்குல மன்னர்களையும், சீட்புலிப் போரில் கீழைச்சளுக்கிய மன்னனாகிய வீமனையும் வென்று புகழ் எய்தியவர். அவ்வாறே பிற்காலத்தில் இச்சோணாட்டில் கோலோச்சிய சுந்தர சோழர் திருமுனைப்பாடி நாட்டையும், தொண்டை நாட்டையும் தமது ஆட்சியின் கீழ்க் கொணர்ந்த மாவீரர். அவருடைய புதல்வராகிய முதலாம் இராச ராச சோழர் திக்கு விசயம் செய்து பாண்டி மண்டலம், சேர மண்டலம், தொண்டை மண்டலம், கங்க மண்டலம், கொங்கு மண்டலம், நுளம்பாடி, கலிங்கம், ஈழம் ஆகிய நாடுகள் அடங்கிய மும்முடிச் சோழ மண்டலம் ஆகிய பல மண்டலங்களைத் தமது ஆளுகைக்கு உட்படுத்தியவர். அவருடைய மைந்தரும் உனது பாட்டனாரும் ஆகிய முதலாம் இராசேந்திர சோழரோ இடைதுறை நாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மண்ணைக் கடகம் ஆகியவற்றைப் போர் செய்து கைப்பற்றியவர்; ஈழ நாட்டுடன் பல போர்கள் நிகழ்த்தியவர்; வட நாட்டின் மீது படையெழுச்சி செய்து வங்க மன்னன் மகிபாலனை வென்று அவன் தலைமீது கங்கை நீர்க்குடத்தை ஏற்றி இங்குக் கொண்டுவந்து ‘கங்கை கொண்ட சோழர்’ என்று அழியாப் புகழ் பெற்றவர்; இன்று நாம் வாழும் இந்தக் கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவியவர். அவருக்குப் பின் இச்சோணாட்டின் அரசுக் கட்டிலேறிய உன் பெரிய தந்தை இராசாதிராச சோழர் ஈழ நாட்டு மன்னர்களோடும், மேலைச் சளுக்கியர்களோடும் பல போர்களை நிகழ்த்தி, போர்களத்தில் வீர மரணம் எய்தி, ‘யானை மேல் துஞ்சின உடையார்’ என்ற மெய்க் கீர்த்தி அடைந்தவர். கடைசியாக உன் தந்தையின் வீரத்தைப் பற்றி நான் எடுத்துரைக்க வேண்டியதில்லை. இவ்வாறு வீரத்தின் மேல் வீரங்காட்டிய மரபின் வழித் தோன்றலாகிய உன்னை, நீ பெண்ணாக இருப்பினும், தன்னாட்டின் மீது பற்றற்ற ஒரு கோழைக்கு மணம் செய்விக்க நான் ஒருபோதும் உடன்படேன், மகளே!”

     (*...புல்லர் தொழும்புடைய வானத்துத் தொண்ணூறு மாறுந் தழும்புடைய சண்டப்ர சண்டன்....... (இராசராச சோழன் உலா-36-38))

     இம்முடிவைக் கேட்டதும், “அம்மா!” என்று அலறியவாறு தாயின் மடிமீது சாய்ந்து விட்டாள் மதுராந்தகி. “என் வாழ்வின் குறிக்கோளைப் பாழ்படுத்தி விடாதே, அம்மா. என் உயிரின் ஒளியை அவித்து விடாதே. நீ நினைக்கிறவாறு அத்தான் கோழையல்ல; அன்றித் தமது நாட்டின் மீது பாசமற்றவரும் இல்லை. ஆனால், தாம் பிறந்து வளர்ந்த இத் தவத்திரு நாட்டின் மீது கொண்ட பற்று, அவருடைய தாய் நாட்டுப் பற்றையும் விஞ்சியிருக்கின்றது; அவ்வளவுதான். ஆதலால் அவரைத் தவறாக மதித்து விட்டிருக்கிறீர்கள்!”

     மதுராந்தகியால் பேச முடியவில்லை; தேம்பித் தேம்பி அழுதாள். இது என்ன? கிணறு வெட்டப் பூதம் தோண்டிய கதையாகிவிட்டதே!

     இந்நிலையில் அந்தப்புரத்தின் காவல் நியமப் பெண் மாமன்னரின் வருகையைக் கட்டியம் கூறிக்கொண்டு அங்கு வந்தாள்.

     மன்னர் வருவதை அறிந்ததும், கிழானடிகள் அவசரத்துடன் மகளின் தலையை நிகிர்த்தி, “எழுந்திரு மதுராந்தகி. உன் தந்தையார் வருகிறாராம். போர் மீண்டுள்ள அவரை அந்தபுரத்தில் கண்ணீருடன் வரவேற்பது நன்னிமித்தமன்று. எழுந்து, கண்ணீரைத் துடைத்துக் கொள், மகளே,” என்று எழுப்பினாள்.

     ஆம், வீராங்கணையாக ஆணையிட்ட மதுராந்தகியும், அதனை நிறைவேற்றிக் கொள்ளக் கண்ணீரைக் கருவியாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அவள் எழுந்து, கன்னங்களில் ஓடியிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொள்ள விரைந்தாள். ஆயின் அதற்குள் மன்னர் அந்தப்புரத்தில் நுழைந்து விட்டார். அவர் கவனம், கன்னங்களைத் துடைத்துக் கொண்டிருந்த மகள்பால் தான் முதலில் சென்றது.

     “மதுராந்தகி! என் கண்ணே! ஏன் இந்தக் கண்ணீர்?”

     வீராதி வீரராகப் போர்க்களத்தில் மனிதத் தலைகளை வெட்டிச் சாய்க்கும் வேந்தர் வேந்தன், மகளின் கண்களில் கண்ணீரைக் கண்டதும் வெம்பனியாக உருகிக் கரைந்து போனார். அவருக்குத் தமது அருஞ் செல்வத்தின் மீது அத்தனை பாசம்.

     இராசேந்திர சோழர் தம்மை வணங்கக் குனிந்த மகளைத் தூக்கி நிறுத்தி, “வணக்கம் இருக்கட்டும், மகளே; உன் வருத்தம் யாது? அதைத் தெரிவி முதலில்,” என்று வாஞ்சையுடன் அவள் முகத்தை நிமிர்த்து வினவினார்.

     கிழானடிகளே அவருக்குப் பதிலிறுத்தார். “உங்கள் செல்வ மகள் வர வரக் குழந்தையாகிக் கொண்டிருக்கிறாள்!” என்றாள் அவள்.

     “பெற்றோருக்குத் தங்கள் செல்வங்கள் என்றென்றும் குழந்தைகள் தாமே தேவி!” என்று முறுவலுடன் உரைத்த சோழ தேவர், மகளை நோக்கி, “என்ன நடந்தது அம்மா? உன் அன்னை குறைப்படுமாறு என்ன செய்தாய்?” என்று கேட்டார்.

     மதுராந்தகி தன் துயரை மறைத்துக் கொள்ளத்தான் முயன்றாள். ஆனால் வெஞ்சினம் கொண்டு பேசுவோர் கிளறிவிடும் துயரம், வேண்டுவோரைக் காணும்போது வீறுகொண்டு விடுகிறதே! “அப்பா!” என்று அவரது பரந்த மார்பில் முகத்தைப் புதைத்து விம்மினாள்.

     “சொல், என் செல்வமே!” மன்னர் அவளுடைய கார்மேகக் கூந்தலை அன்புடன் வருடினார்.

     “வெற்றிகொண்டு திரும்பியுள்ள தாங்கள், தங்கள் மகளுக்கு ஒரு வரம் தந்தருள வேண்டும், அப்பா.”

     “வரமாவது, ஒன்றாவது! அவளுடைய பிதற்றல் எதையும் நிறைவேற்றுவதாக வாக்களித்து விடாதீர்கள்!” என்று அவர்கள் பேச்சில் புகுந்து எச்சரித்தாள் கிழானடிகள்.

     “நீ சற்று அமைதியாயிரு தேவி!” என்று முகத்தின் முறுவல் மாறாமலே கூறிய சோழதேவர், “கேள் மகளே; நீ கேட்கும் வரம் இச்சோணாட்டுக்கும், அதன் குடிமக்களுக்கும் இழுக்காக இல்லாத வரையில், எதாக இருந்தாலும் கொடுத்தேன்!” என்றார்.

     “அப்பா, நம் வானவியின் முன் இன்று நான் ஓர் ஆணையிட்டிருக்கிறேன். அதனை நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும்.”

     “ஆணையா? உன் சகோதரியிடமே ஆணையிட்டிருக்கிறாயா? வியப்பாக இருக்கிறதே நீ கூறுவது?” சொல்லை மறுவிய வியப்பு முகத்தையும் மறுவச் சோழதேவர் மகளின் முகத்தை நோக்கினார்.

     “ஆம் அப்பா; அவளது உள்ளத்திலே மூண்ட பொறாமைத்தீ, என்னை அந்த ஆணையை இட வைத்தது.”

     “பொறாமையா? உன் சகோதரிக்கு உன் மீது பொறாமையா?”

     “என் மீது இல்லை, அப்பா; குலோத்துங்க அத்தான் மீது. அவர் இந்த நாட்டில் இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.”

     “இது என்ன புதிர் விடுகிறாய் மகளே? அவர்களுக்கு என்றால், இன்னும் யார் யாருக்கு?”

     “என்னையும் உங்களையும் தவிர்த்து, இக்குடும்பத்தைச் சார்ந்த எல்லோருக்குமேதான். இதோ, என்னைப் பெற்றெடுத்த அன்னைக்குக் கூடத்தான்.”

     “அப்படியா?” என்று மனைவியை நோக்கி முறுவலித்த சோழவேந்தர் மகளிடம் திரும்பி, “எதனால் அப்படிச் சொல்கிறாய், மதுராந்தகி?” என்று கேட்டார்.

     “நேற்று அத்தை அம்மங்கை தேவியின் ஓலையுடன் வேங்கித் தூதன் ஒருவன் வந்தான், அப்பா!” என்று மதுராந்தகி சொல்லத் துவக்கியதும், மன்னர் குறுக்கிட்டார்: “ஆம். கேள்வியுற்றேன். குலோத்துங்கனே முற்பகலில் சொன்னான். வெற்றி மறுவித் திரும்பும் என்னிடம் விடைபெற்றுச் செல்லவே காத்திருந்தானாம். அதற்காக...?”

     “அதற்காக அம்மா எங்கள் காதலையே முறித்துவிட முயலுகிறாள்!”

     “என்ன? இது உண்மையா தேவி?” என்று அடங்கா வியப்புடன் கேட்டார் சோழதேவர்.

     “ஆமாம்; பின் என்ன? வேங்கி நாட்டின் நிலையே அந்தரத்தில் தொங்குவதாக உங்கள் சகோதரியார் அவசர ஓலை அனுப்பியிருக்க, இவன் சிறிதுகூட நாட்டுப் பற்று இன்றி, ‘என் நாடு இதுதான்’ என்று பிதற்றினால்?“ என்று கூறினால் கிழானடிகள்.

     “உன் கருத்து தவறு, தேவி. குலோத்துங்கன் பிறந்து வளர்ந்த சூழ்நிலை அவனை இச்சோழப் பேரரசின் மீது அளவற்ற பற்றுக் கொள்ளச் செய்துள்ளது. அதனால்தான் அவன் அவ்வாறு கூறியிருக்கிறான். அதற்காக, இந்தக் குழந்தைகளின் அன்புக்கு அணைகட்டி விடுவதா? இவர்களிடையே போடப்பட்டுள்ள முடி நீயும் நானும் போட்டதன்று, தேவி. அது என் அன்னையார் போட்ட முடி. ஆதலால் குலோத்துங்கனுக்கு ஒரடி மண்கூட இல்லாமற் போயினும், அவனே என் மருமகனாவான்.”

     இவ்வாறு வீராவேசத்தோடு மொழிந்த சோழதேவர் மகளின் முதுகைத் தடவியாவாறு, “இதற்காகவா கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாய், மகளே? கவலை ஒழி. குலோத்துங்கன் உனக்கே உரியவன்” என்று அவளைத் தேற்றினார்.

     “ஆனால் உங்கள் மகள் அதற்காக மட்டும் கண்ணீர் விடவில்லையே! அவள் இட்டுள்ள அதிர்ச்சி தரும் ஆணையைக் கேட்டுவிட்டுப் பிறகு பேசுங்கள்,” என்றாள் கிழானடிகள்.

     “ஆம் மகளே; உன் ஆணையைக் கூறு,” என்றார் சோழதேவர்.

     “கூறுகிறேன் அப்பா. ஆனால் அதைக் கூறுமுன், அந்த ஆணையை நான் இடநேர்ந்த சூழ்நிலையை விளக்க வேண்டும்,” என்று தொடங்கிய மதுராந்தகி, காலை நிகழ்ச்சிகளின் போது குலோத்துங்கன் தன் தந்தைக்கு வெற்றி வணக்கம் செலுத்தியதிலிருந்து தனக்கும் வானவிக்கும் இடையே நடந்த விவாதத்தையும், வானவி அவனை வெகுவாக இழித்துப் பேசி எள்ளி நகைத்ததையும், அது தனக்கு வெறியூட்டவே, குலோத்துங்கனுடன் ஒரு நாளேனும் சோழ அரசுக் கட்டிலில் அமராவிட்டால் தன் பெயர் மதுராந்தகி அல்ல என்று ஆணை இட்டதையும் அறிவித்தாள்.

     மகளின் மொழிகளால் மனம் மகிழ்ந்த மாமன்னர் கலகலவென நகைத்தார். பின்னர் அவள் முதுகில் தட்டியவாறு சொன்னார்; “வீரம் செறிந்த ஆணைதான் இட்டிருக்கிறாய், மகளே. உன்னை மெச்சுகின்றேன். பெண்ணாயிருந்தாலும் சோழ மரபின் உதிரம் ஓடுபவள் அல்லவா நீ? அதன் வீரச் செருக்கு உனக்கு இல்லாமல் போய்விடுமா? ஆனால் மதுராந்தகி!”

     தந்தையின் பாராட்டால் மெய்ம்மறந்து, இனித் தன் ஆணை நிறைவேறிவிடும் என்று அச்சம் ஒழிந்த மதுராந்தகி, இந்த ‘ஆனால்’ என்ற சொல்லைக் கேட்டதும் அதிர்ந்து, “ஆனால் என்ன அப்பா?” என்றாள் சங்கையுடன்.

     “வீரச் சபதங்களை வீரச் செயல்களால்தான் நிறைவேற்ற வேண்டும், குழந்தாய்!”

     “அப்பா!”

     “ஆம் மகளே; நான் இன்று இந்தச் சோழப் பேரரசின் சர்வ வல்லமை வாய்ந்த மன்னன்தான். ஆயினும் சில நெறிகளுக்கு நான் கட்டுப்பட்டே ஆகவேண்டும். அவற்றுள் ஒன்று, எனக்குப் பின் இவ்வரசுக் கட்டிலில் அமர அருகதை உள்ளவர் யார் என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு.”

     மதுராந்தகி தந்தையின் பேச்சை இடைமறித்தாள். “ஆனால் அப்பா, நான் அவரை சோழ நாட்டின் நிரந்தர மன்னராக்கி விடுவாதாக ஆணையிட்டிருக்கவில்லை; ஒருநாள் பொழுது மட்டுமே...!”

     இப்பொழுது சோழதேவர் குறுக்கிட்டார்: “ஒரு நாள் என்ன? ஒரு கணம், கண் இமைக்கும் பொழுது கூட முறையற்ற ஒருவனை இவ்வரியணையில் அமர்த்த எனக்கு உரிமை கிடையாது, குழந்தாய். அந்த உரிமையை நான் எடுத்துக் கொண்டால், அது இந்நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், புகழோங்கிய நமது சோழகுலத்துக்கும் இழுக்கு.”

     “ஐயோ அப்பா! அப்படியானால்...?”

     “ஒரே வழிதான் இருக்கிறது குலோத்துங்கனுக்கு. அதன் மூலம் அவன் ஒருநாள் மட்டுமென்ன, தன் உயிருள்ள வரையில்கூடச் சோழ மண்டலாதிபதி ஆகலாம்.”

     “சொல்லுங்கள் அப்பா; அது என்ன வழி?” மதுராந்தகி ஆவலுடன் துடித்தாள்.

     “அவன் உன்னை மணந்து, தன் வீரத்தால் இந்நாட்டின் மன்னனாக வேண்டும்.”

     “அப்பா!”

     “இதுவே உண்மை நிலை மகளே; வீரம் அல்லது பிறப்புரிமை. இவ்விரண்டில் ஒன்றுதான் எவனையும் இந்நாட்டு மன்னனாக்க முடியும்!...”

     சோழதேவர் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் பணிப்பெண் ஒருத்தி ஓடிவந்து, “முடிகொண்ட சோழன் அரண்மனையிலிருந்து வீரன் ஒருவன் வந்திருக்கிறான், பிரபு. தங்களை உடனே காண வேண்டுமாம்,” என்று கூறி வணங்கி நின்றாள்.

     “அவனை உள்ளே வரவிடு!” என்றார் மாமன்னர்.

     வந்த வீரன் பரபரப்புடன் காணப்பட்டான். அவன் கண்களில் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. “மகாபுரபு! பட்டத்து இளவரசர்...”

     அவன் வார்த்தைகளை முடிக்கவில்லை; “தம்பி இராசமகேந்திரா!” என்று அலறியவாறு சோழதேவர் அந்தப்புரத்திலிருந்து வெளியே பாய்ந்தார்.