மதுராந்தகியின் காதல்

(மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம்

அத்தியாயம் - 1. பாதாளச் சிறையின் மர்மம்

     முதலாம் இராசேந்திர சோழதேவர் வடக்கே கங்கை வரையிலுள்ள நாடுகளை வென்று, தோல்வியுற்ற மன்னர்களின் தலையில் கங்கை நீர் கொண்ட குடங்களை ஏற்றிக்கொணர்ந்து, அந்நீரால் சோழ நாட்டின் பண்டைத் தூய்மையைப் பெருக்கியதோடு, தமது இந்த மகத்தான வெற்றிக்கு ஓர் அழியாச் சின்னமாக கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை நிறுவிய போது, தலைநகருக்கு இன்றியமையாத பெரிய சிறைக்கூடம் ஒன்றையும் அதனுள்ளே அமைத்தார். உட்கோட்டையின் மையத்தில் சோழகேரளன் மற்றும் முடிகொண்ட சோழன் அரண்மனைகளுக்கு அண்மையில், பெரும் பரப்பில், தனியாக மதிள்சுவர், அகழி முதலிய பாதுகாப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்த அந்தச் சிறைக்கூடத்தின் உள்ளே மற்றொரு மர்மச் சிறையும் இருந்தது. அதுதான் பாதாளச் சிறை.

     பாதாளச் சிறையைப்பற்றி சோழ நாட்டு மக்களிடையே பல பயங்கரக் கதைகள் உலவி வந்தன. அச்சிறைக்குள்ளே கொடிய வனவிலங்குகள் திங்களுக்கு ஒரு தடவையே உணவிடப்பட்டு எப்பொழுதும் கொடும் பசியுடன் இருக்குமாறு வளர்க்கப்படுகின்றன என்றும், ஆதலால் அச்சிறையில் தள்ளப்படுபவர்கள் உடனே அவற்றுக்கு இரையாகி விடுவார்கள் என்றும் ஒரு சிலர் கூறிவந்தனர். வேறு சிலர், “இல்லை; அவ்வாறு ஒன்றும் இல்லை. அச்சிறையில் அடைபட்டவர்களுக்கு இதரச் சிறையில் அடைபட்டுள்ள கைதிகளுக்கு அளிக்கப்படுவது போல் உணவோ, நீரோ அளிக்கப்பட மாட்டா. ஆதலின் அவர்கள் பசியாலும் நீர் விடாயாலும் தவித்து உயிர் விடுவார்கள்,” என்று கூறினர். இன்னும் சிலர், “பாதாளச் சிறையினுள்ளே நிலமே கிடையாது. அது ஒரு நீர் நிலை. முதலைகளும், கொடிய விஷத்தன்மை வாய்ந்த நீர்வாழ்வனவும் நிறைந்தது. எனவே அச்சிறையில் தள்ளப்படுபவர்கள் நேரே அவற்றின் வாயில் விழவேண்டியவர்களே!” என்று நம்பினர்.

     இவ்வாறெல்லாம் பலப் பல கதைகள் அச்சிறைச்சலையைப் பற்றி வழங்கி வந்தமைக்கு முக்கிய காரணம், அதனுள்ளே இன்றுவரை யாரும் சென்று பார்த்ததில்லை என்பதுதான். கங்கைகொண்ட சோழபுரம் நிறுவப்பட்ட பின்னர் தலைமைச் சிறைக்காவலராக விளங்கி வந்தவர்களுக்குக்கூட அச்சிறைச்சாலையின் உள்ளே அடங்கியிருந்த மர்மம் தெரியாது. அதற்கு ஒரே வாயில்தான் இருந்தது. அந்த வாயிலின் கனத்த இரும்புக் கதவுகள் எப்பொழுதும் பூட்டப்பட்டே இருந்தன. அப்பூட்டின் திறவுகோலை நாடளும் மன்னரே வைத்துக்கொண்டிருந்தார். அது மட்டுமின்றி, முதலாம் இராசேந்திர சோழரின் காலந்தொட்டு இன்றளவும் பாதாளச் சிறைவாசத் தண்டனை பெற்று அதனுள்ளே தள்ளப் பட்டவர்களும் யாரும் இல்லை. எனவே, கொடுந்தண்டனைக்கென்றே அமைத்திருப்பதாகக் கருதப்பட்ட அந்தச் சிறைச்சாலையைப் பற்றி மக்கள் உள்ளங்களிலே பயங்கரக் கற்பனைகள் தோன்றி இருந்ததில் வியப்பில்லை.

     பாதாளச் சிறை பற்றிய பயங்கர நினைவு நாட்டு மக்கள் உள்ளத்தில் மட்டுமே நிலவி வந்தது என்பதில்லை. அரச குலத்தினரிடையேயும் அது இருந்துதான் வந்தது. ஏன்? அடுத்து பட்டத்துக்கு உரியவரான வீரராசேந்திரர் கூட அதுபற்றிப் பயங்கர நினைவுடனேயே இருந்து வந்தார். ஏனென்றால் அதைப்பற்றிய இரகசியமும் அதன் திறவுகோலும் அவர் ஆளும் மன்னர் ஆகும்போதல்லவா அவருடைய உடமையாகும்? அதனால்தான் தமது மகளுக்கு அத்தகைய கொடுந்தண்டனை தேவையா என்ற முறையில் அன்று அவர் சோழதேவருடன் சிறிதளவு வாதாடினார். ஆனால் சோழதேவர் நாட்டின் நலம் கருதியே அக்கொடுந் தண்டனையை வானவிக்கு விதிக்க நேர்ந்தது என்பதை விளக்கிய பிறகு அவர் அடங்கிவிட்டாரெனினும், மகளை இவ்வாறு பறிகொடுக்க நேர்ந்ததற்காக அவர் விசனமடையாமல் இல்லை.

     வானவியும் தன் வாழ்வு, கனவு அனைத்தும் அன்றோடு சிதைந்தன என்ற நினைவுடனேதான் விக்கிரமாதித்தனுடன் பாதாளச் சிறையிக்குள்ளே புகுந்தாள். ஆயினும் அவளுக்கு ஓர் ஆறுதல் - ‘நம் உள்ளம் கவர்ந்தவருடன் தானே உயிர்விடப் போகிறோம்! வாழ்வில் இணைய முடியாமற் போனாலும், சாவிலாவது அவருடன் இணையும் பேறு கிடைத்ததே!’

     தங்களுக்குப் பின்னே அக்கொடுஞ்சிறையின் பெருங்கதவுகள் மூடப்பட்டதும், வாழ்வெனும் ஒளியிலிருந்து சாவென்ற இருளின் இரும்புப்பிடியில் மீள இயலாதவாறு சிக்கிவிட்ட திகிலுடன் அவ்விருவரும் சிறிது பொழுது வாயடைத்து நின்றனர். பின்னர் வானவி தன் உள்ளத்தைத் திடப்படுத்திக் கொண்டு, “அன்பே!” என்று அழைத்து, விக்கிரமாதித்தனின் கரங்களைத் தடவிப் பிடித்தாள். பழைய காதற் சந்திப்புக் காட்சிகள் எண்ணத்தில் முகிழ்ந்தன!

     விக்கிரமாதித்தன் அப்பொழுது மறுமொழி கூற இயலாத அளவு அதிர்ச்சி அடைந்திருந்தான். அவன் எதிர்பார்த்து வந்தது என்ன? இப்பொழுது நடந்திருப்பது என்ன?

     அக்காரிருளில் வானவி மெதுவாக அவனுடைய முகத்தைத் துழாவித் தடவினாள். “என்னால்தான் உங்களுக்கு இத்தகைய பயங்கரச்சாவு!” என்றபோது அவளுடைய குரல் துயரத்தால் தழதழத்தது.

     “சாவா?” விக்கிரமாதித்தன் மேலும் அதிர்ந்தான்.

     “ஆம்; நம் எதிரே இந்த மையிருளில் சாவுதான் மறைந்து நிற்கிறது. என்ன உருவில் என்பதை நான் அறியேன்!” என்று விடையிறுத்த அவள், பாதாளச் சிறை பற்றி மக்கள் பேசிக்கொள்ளும் கதைகளை அவனுக்கு கூறினாள்.

     “வீரனுக்குக் கோழைச் சாவா? சீ! எத்தனை கேடுகெட்ட நாடு உங்கள் நாடு!” என்று விக்கிரமாதித்தன் கொதித்தான்.

     “ஆம், கேடுகெட்ட நாட்டில் உதித்த இந்தப் படுபாவி எங்கோ இருந்த உங்களை இங்கு இழுத்து இத்தகைய சாவுக்கு இலக்காக்கிவிட்டேன்,” என்று கதறி அழுதாள் வானவி.

     அவளுடைய அழுகை விக்கிரமாதித்தனின் உள்ளத்தைத் துளைத்தது. “அழாதே கண்ணே! சாவைக்கண்டு அழுவது வீரத்துக்கு இழுக்கு. நான் வருந்துவதெல்லாம் இப்படி நம்மைக் கண்காணாமற் சாகடிப்பதை விட கண் முன்னே வாளால் சிதைத்துக் கொன்றிருக்கலாமே என்பதுதான். வா, அவர்கள் கோழைச் சாவை நமக்கு அளித்தாலும் நாம் அதை வீரத்துடன் ஏற்போம்.”

     பாதாளச் சிறையின் கதவுகள் திறக்கப்பட்டபோது உள்ளே ஒரு படிக்கட்டுக் கீழ்நோக்கிச் செல்வதை அவர்கள் கண்டிருந்தனர். அந்தப் படிக்கட்டில் இப்பொழுது அவர்கள் இறங்கினர். விக்கிரமாதித்தன் முன் சென்றான். வானவி அவனது தோளைப்பற்றியவாறு ஒரு படி பின்னால் வந்து கொண்டிருந்தாள். எங்கும் ஒரே இருள்; எல்லையற்ற காரிருள். உள்ளே காற்றுப் புக வசதி செய்யப்பட்டிருக்க வில்லையோ, அல்லது பலகாலமாக அச்சிறைச்சாலை பூட்டிக்கிடந்தமையாலோ தெரியாது, சுவாசிக்கும் காற்றுக்கூட வெப்பக் காற்றாகவே இருந்தது.

     சுமார் ஐம்பது படிகள் இறங்கிய பிறகு திடீரென்று விக்கிரமாதித்தன் பின்னே அடி வைத்து, “வானவி!” என்று கூவினான்.

     அவனது குரலின் கலக்கம் வானவியைத் திடுக்கிட வைத்தது. அவள் சட்டென்று அவன் இடுப்பைச் சுற்றிக் கையை வளைத்துக்கொண்டு, “என்ன அன்பே?” என்று திகிலுடன் வினவினாள்.

     “மக்கள் பேசிக்கொண்டது மெய்தான், வானவி.”

     “நீங்களென்ன சொல்கிறீர்கள்?”

     “அடுத்த படியில் நீர் நிறைந்திருக்கிறது. மக்களில் ஒரு சாரார் கருதியவாறு இச்சிறைச்சாலை முதலைகளும் விஷப் பிராணிகளும் நிறைந்த நீர் நிலையைத்தான் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். சரி, ஏதானால் என்ன? நாம் வீரச் சாவு சாகத்துணிந்த பின் அச்சாவு எதனால் ஏற்பட்டால் என்ன?” அவன் மீண்டும் அடுத்த படியில் கால் வைப்பதற்காக உடலை அசைத்தான்.

     வானவி அவனைப் பின் பக்கமாக இழுத்தாள். “பொறுங்கள். சாகத்தான் போகிறோம். அதற்கு இத்தனை அவசரம் ஏன்? இங்கேயே சிறிது நேரம் அமர்ந்து உல்லாசமாக உரையாடி விட்டுத்தான் சாவோமே?”

     விக்கிரமாதித்தன் கொல்லென நகைத்தான். “சாவின் வாசலில் உல்லாசம் எப்படிப் பிறக்கும், வானவி?” என்று கூறியவன் மறுபடியும் அவள் கையைப்பற்றி இழுத்தவாறு கீழே இறங்கலானான். “இனி சாவு ஒன்றுதான் எனக்கு உல்லாசம் அளிக்க வல்லது,” என்ற சொற்கள் அவனிடமிருந்து வேகத்தோடு உதிர்ந்தன.

     ஒன்று, இரண்டு, மூன்று படிகள் அவர்கள் இறங்கிவிட்டார்கள். தண்ணீர் பாதத்திலிருந்து கணுக்காலுக்கு வந்து இப்பொழுது முழங்கால் அளவு வந்துவிட்டது. எந்தக் கணமும் ஒரு முதலையின் கவ்வுதலையோ, நீர்ப் பாம்பு போன்ற விடப்பிராணிகளின் தீண்டுதலையோ எதிர்பார்த்தவாறு நான்காவது படிக்கு நகர வலது பாதத்தைத் தூக்கி வைத்தபோது: எங்கே அந்த நாலாவது படி? “சமதளம் போல் தென்படுகிறதே!” என்றாள் வானவி. அவள் சொற்களில் எதிர்பாராத அமைதி காணப்பட்டது.

     விக்கிரமாதித்தன் கூட இப்பொழுது வியப்படைய ஆரம்பித்தான். ‘என்ன, சமதளந்தானா? முழங்கால் அளவு நீர் தேக்கப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு சிறு நீர்த்தேக்கந்தானா? அல்லது இனிச் சமதளந்தான் என எண்ணி எங்களைத் தெம்புடன் நடக்க வைத்துப் பிறகு திடீரென்று படுகசத்தில் வீழ்த்துவதற்கான சூழ்ச்சி அமைப்பா? எதுவானால் என்ன? இனி அவனும் அவளும் முன் வைத்த காலைப் பின் வாங்கப் போவதில்லை. அல்லது இந்த முழங்காலளவு நீரில் தயங்கி நிற்கவும் போகிறதில்லை. இருந்தாலும் திடீர் வீழ்ச்சியைத் தவிர்க்க, அவன் பாதத்தை நீரின் அடித்தளத்தில் தேய்த்தவாறு நடந்தான்.

     சட்டென்று அவனுடைய கால் விரல்கள் எதன் மீதோ மோதி மேலே செல்ல முடியாமல் நின்றன். என்ன அது? சுவரா? இடக்கரத்தால் வானவியின் கரத்தைப் பிடித்திருந்ததால், விக்கிரமாதித்தன் வலக்கரத்தால் தன் முன்னே துழாவிப் பார்த்தான். வெட்ட வெளிதான் தென்பட்டது. பிறகு பாதத்தை மோதி நின்ற இடத்தைத் தடவியவாறே மெதுவாக மேலே உயர்த்தினான். சாண் உயரம் வரை பாதம் அதில் உராய்ந்தவாறே மேலே சென்றது. பின்னர் மீண்டும் இரண்டு சாண் தூரம் ஒரு சமதளம்; மறுபடியும் ஒரு மேடு-விக்கிரமாதித்தனுக்கு இப்பொழுது விளங்கி விட்டது. இதுவும் ஒரு படிக்கட்டு. இது நீர் நிலையிலிருந்து மேலே ஏறுவதற்கானது. அவன் வானவியிடம், “பாதத்தை தூக்கி வை. மேலே ஏறும் படிக்கட்டு,” என்று கூறியவாறு மேலே ஏறினான். மறுபடியும் அவர்கள் நான்கு படிகள் மேலே ஏறினார்கள். “நாம் கடந்து வந்தது முழங்கால் அளவு நீர் தேங்கியிருக்கும் குட்டம் போலிருக்கிறது,” என்றாள் வானவி. “ஆம், அப்படித்தான் நினைக்கிறேன்!” என்றவாறு அவன் மேலே நடந்தான்.

     இரண்டோர் அடிகள்தான் நடந்திருப்பான்; அவன் தலை ‘ணங்’ என்று எதிலோ மோதியது. வலக்கரத்தால் முன்னால் தடவிப் பார்த்த விக்கிரமாதித்தனிடமிருந்து ஒரு மகிழ்ச்சிக் கூச்சல் பிறந்தது - “கதவு, வானவி! கதவு!”

     “கதவா?” வானவியும் மகிழ்ச்சியினால் கூவினாள்.

     “ஆமாம்,” என்றவாறு விக்கிரமாதித்தனதை மேலும் துழாவினான். அவன் கையில் ஒரு குமிழ் சிக்கியது. அதைச் சுழற்றியதும் கிரீச்சிட்டவாறு பெரும் கதவு ஒன்று திறந்தது. வெளியேயிருந்து கண்ணைப் பறிக்கும் ஒளி!

     அந்தத் திடீர் ஒளியினாள் கூசிப்போன கண்கள் பார்க்கும் நிலை அடைந்ததும், அவர்கள் தங்கள் முன்னே அரண்மனையின் ஏதோ ஒரு பகுதியில் இருப்பதைக் கண்டு திகைத்தார்கள்.

     ஆம், அது அரண்மனையின் ஒரு பகுதிதான். ஆனால் அந்த அரண்மனை சோழகேரளன் அரண்மனையோ அல்லது முடிகொண்ட சோழன் அரண்மனையோ அல்ல. பயங்கர கற்பனைகளை மக்கள் மனத்திலே படர விட்டிருந்த பாதாளச் சிறையின் அரண்மனை. அங்கே இதர அரண்மனையைப் போலவே எல்லா வசதிகளும் இருந்தன. தங்க அறைகள்; அமர்ந்து உரையாடப் பொன்னாசனங்கள் போடப்பட்ட மண்டபங்கள்; படுக்கத் தந்தக் கட்டில்கள்; அவற்றிலே பட்டு மெத்தை, தலையணைகள், குளிக்கத் தடாகங்கள்; உலாவக் காற்றோட்டமுள்ள சாளரங்கள் நிறைந்த முற்றங்கள்; விளையாடச் சொக்கட்டான், அம்மானைக் காய்கள் போன்ற பொருள்கள்; படிக்கப் பல்வேறு ஏட்டுச் சுவடிகள்-இப்படி எல்லாம் இருந்தன.

     ஆயினும் அதைச் சிறைச்சலை என்று உணர்த்தக்கூடிய வேறு சில சின்னங்களும் அங்கே காணப்படாமல் இல்லை. குறிப்பாக அதற்கு ஒரே ஒரு வாயில்தான் இருந்தது. அது பூட்டப்படாமல், தேவையான போது திறந்து மூடிக்கொள்ள வசதியாகக் குமிழ்த் தாழுடன் அமைக்கப்பட்டிருந்தாலும், அங்கிருந்து வெளியேறுவதற்குரிய வாயில் பாதாளச் சிறையின் முகப்பு வாயில்தானே? அடுத்ததாக அந்த இடம் எவ்வளவோ காற்றும் ஒளியும் வருமாறு அமைக்கப்பட்டிருந்தாலும், எங்கும் திறந்த வெளி இல்லாது கடும்பாறைகளாலான மேற்கூரை உடையதாக இருந்தது. தவிர, ஒளிக்காகவும் காற்றுக்காகவும் அமைக்கப்பட்டிருந்த சாளரங்கள் மூன்று நான்கு ஆள் உயரத்தில் இருந்ததோடு கனத்த இரும்புக் கம்பிகளை நெருக்கமாகக் கொண்டவைகளாகவும் இருந்தன.

     விக்கிரமாதித்தனும் வானவியும் அந்த இடத்தின் இத்தகைய அமைப்பெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் வாசலுக்கே திரும்பி வந்தார்கள். இப்பொழுது அவர்கள், தாங்கள் சற்றுமுன் தாண்டி வந்தது நீர்க்குட்டம் அல்ல; அது அங்கிருந்த தடாகங்களை நிரப்புவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய செயற்கை நீரோடை என்பதைக் காண முடிந்தது. அதோடு, அந்த ஓடையில் பொங்கி ஓடிய நீர் அருகில் இருந்த ஓர் இயற்கை ஊற்றிலிருந்து பீறிட்டு வந்ததையும் அவர்கள் கண்டார்கள்.

     “இதை நான் எதிர்பார்க்கவில்லை! இதை நான் எதிர்பார்க்கவில்லை!” என்று இந்த அமைப்புகள் எல்லவற்றையும் பார்த்து முடித்ததும் வானவி களிப்பு மிகுதியால் மிழற்றினாள்.

     ஆனால் விக்கிரமாதித்தன் சொன்னான்: “மோகினிப் பேய்களைப் பற்றி நீ கேள்வியுற்றிருக்கிறாயா, வானவி? அவை தங்கள் அழகால் மனிதரை மயக்கி இழுத்து அவர்களது உதிரத்தை உறிஞ்சிக் குடித்து விடுமாம். இந்த அரண்மனையும் அத்தகைய மோகினிப் பேய்களைப் போன்றதுதான்.”

     “நீங்கள் கூறுவது விளங்கவில்லையே!” என்று புருவத்தை உயர்த்தி அவனை நோக்கினாள் வானவி.

     “இந்த அரண்மனை நாம் வாழ்வதற்கானதல்ல, கண்ணே. வாழ்வதற் கானதானால் இங்கே நாம் உயிரோடு இருப்பதற்குத் தேவையான உணவுக்கு என்ன வழி செய்யப்பட்டிருக்கிறது? என்று அவன் வினவினான்.

     இதைக் கேட்டதும் “ஐயையோ!” என்று அலறினாள் வானவி. “பெரியப்பா நம்மைச் சிறையில் தள்ளுகிறேன் என்று தள்ளினாலும், சாகத் தள்ளவில்லை; வாழத்தான் தள்ளியிருக்கிறார் என நினைத்தேன். ஆனால் பாவி அவர் இங்கும் என் எண்ணத்தைப் பாழாக்கி விட்டார்!”

     “இனி அதையெல்லாம் பற்றிப் பேசி என்ன பயன்? நாம் சாவை எதிர்கொள்ள வந்தவர்கள்தாமே? இடையே ஏனோ ஒரு சிறு மயக்கம்!” என்று அவளை அணைத்துத் தேற்றியவாறு உள்ளே கூட்டிச் சென்றான் விக்கிரமாதித்தன்.

     அந்தச் சிறைச்சாலை அரண்மனையின் அமைப்பிலே வெளிவாயிலை அடுத்து, வரிசைக்கு ஒன்பது பெருந்தூண்களைக் கொண்ட பெரிய மண்டபம் ஒன்று இருந்தது. முதல் தடவை உள்ளே வந்தபோது அவர்கள் இம்மண்டபத்தை ஆராயவில்லை. இப்பொழுது வானவியை அழைத்துச் செல்கையில், அந்த மண்டபத்தில் வலது சாரியில் இருந்த தூண்களில் ஐந்தாவது தூணுக்கு அருகில் சில பொன்னாசனங்களும், அவற்றின் நடுவே அழகிய வேலைப்பாட்டுடன் விளங்கிய பீடம் ஒன்றின் மீது ஓர் ஓலைச் சுருளும் இருப்பதைக் கண்ணுற்று, விக்கிரமாதித்தன் வானவியை அங்கே இழுத்துச் சென்றான். அந்த ஓலைச் சுருளில் தமிழ் மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. தமிழில் உரையாட மட்டுமே அறிந்திருந்த அவன் அவ்வோலைச் சுருளை வானவியிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான். அது அவளுக்கு எழுதப்பட்டிருந்த ஓலைதான். ஆனால் அதை எழுதியிருந்தவர்...!

     “மகளே வானவி, பாதாளச் சிறையில் பயங்கரக் கற்பனைகள் இதுகாறும் உன் மனத்தைவிட்டு அகன்றிருக்கும். அதோடு உன் பெரிய தந்தை ஆளும் மன்னர் என்ற விறைப்பில் ஓரவஞ்சனையாகத் தமது மகளை மட்டும் காதலனுடன் களித்து வாழ விட்டு விட்டு, நம்மைக் காதலனுடன் சாவை நாட விரட்டிவிட்டார் என்ற தவறான கருத்தும் இப்பொழுது மாறியிருக்கும். மகளே, அரசப் பதவியில் பல காரியங்களைப் பல நோக்கத்தோடு ஆராய்ந்து செயல் புரிய வேண்டியிருக்கிறது. நீங்கள் விளையாட்டுப் போக்காக ஏதோ ஆணைகள் இட்டு அவற்றை நிறைவேற்றவும் துணிந்து விட்டீர்கள். ஆனால் அதனால் நாடு கேடு அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பில்லையா? நீ மட்டும் இன்னும் சிறிது காலம் செயல் முறையில் இறங்காது இருந்திருந்தால் உன் ஆணைகள் என் மூலம் நிறைவேறியிருக்கும். ஏனென்றால் உன் ஆணைகள் சோழநாட்டைப் பிறர் கைப்பற்றிவிடாதிருப்பதற்கான ஆணைகள். ஆதலால் நாட்டைக் காக்க நானே அதைச் செய்திருப்பேன். ஆனால் நீ அவசரப்பட்டுவிட்டாய். உன் செயலுக்கு நம் நாட்டின் பகைவனையே துணை நாடி, அவனை ஒரு பொய்யோலையுடன் இங்கு வரச் செய்து விட்டாய். அக்குற்றத்திற்கு, அவனுக்கும் உனக்கும் தண்டனை வழங்கியாக வேண்டியது என் கடமையாயிற்று. ஆனால் அதே சமயம் உன் செயல் இந்நாட்டுக்கு நன்மை செய்வதாகவே இருந்ததால், உன் தண்டனை பெயரளவில் தண்டனையாகவும், செயலளவில் உன் இன்ப வாழ்வுக்கு அதிக இடையூறு விளைவிக்காததாகவும் அமையுமாறு செய்ய வேண்டியவனானேன். ஆதலால்தான், வெளியோர் பயங்கர நரகமாகக் கருதியிருக்கும் இந்தப் பாதாளச் சொர்க்கபுரிக்கு உன்னை உன் உள்ளம் கவர்ந்தவுடன் அனுப்பினேன்.

     இதை நான் செய்ததற்கு மற்றொரு காரணம் உண்டு. விக்கிரமாதித்தன் உன் காதலனே ஆயினும், அவன் இந்நாட்டின் பகைவர்களில் ஒருவன், அவன் வழியே விசயாதித்தனுக்கு வேங்கி அரியணை கிட்ட நீ முயன்றிருக்கிறாய். அம்முயற்சியில் வெற்றி பெறுவதற்காக நீ அவர்களுக்கு நம் நாட்டின் அரசியல் இரகசியங்களை அம்பலப்படுத்தல் கூடும். அரசன் என்ற முறையில் அதற்கு நான் இடமளிக்க முடியாது. எனவேதான். நீங்கள் காதலர்களாகக் களித்து வாழ வகை செய்து, அதே போது உங்களுடைய வெளியுலகத் தொடர்புகளைத் துண்டிக்கவும் வழி வகுத்தேன். எங்கள் நோக்கமும், மைத்துனர் நரேந்திரருக்குப் பிறகு விசயாதித்தனை வேங்கி அரியணையில் அமர்த்த வேண்டும் என்பதுதான். எனினும் அவன் குந்தள நாட்டோரின் பிடியிலிருந்து விடுபட்டுச் சோழ நாட்டுக்கு உட்பட்டவனாய் அங்கு ஆட்சி செய்ய இசையாவிடில் நாங்கள் அவனை அவ்வரியணையில் கணங்கூட இருக்க விடமாட்டோம். ஆதலால் உங்கள் இருவரின் விடுதலைக் காலம் இப்பொழுது வேங்கி நாட்டின் வருங்கால அரசியல் அமைப்பைப் பொறுத்து இருக்கிறது. அது நமது நாட்டுக்கு உகந்த விதத்தில் அமையும் நாளில் நீயும் உன் காதலனும் பாதாளச்சிறையிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.

     இனி உங்களுடைய வசதிகளைப் பற்றிச் சில செய்திகள். இந்த ஓலை இருக்கும் இடத்தை அடுத்துள்ள வலது வரிசை நடுத்தூண்தான் உங்களுக்கும் வெளி உலகுக்கும் இடையேயுள்ள ஒரே தொடர்பு. அந்தத் தூணின் அடிப்பகுதியில் சிறிய கதவு ஒன்று இருக்கிறது. அதைத் திறந்தால், உள்ளே நாள்தோறும் உங்களுக்குத் தேவையான உணவும் உடையும் காணப்படும். உணவுக்கும் உடைக்கும் புறம்பாக உங்கள் வாழ்க்கைக்குத் தேவையானவை எவையேனும் இருந்தால், அவற்றை அவ்வப்போது ஓர் ஓலையில் எழுதி அத்தூணின் உட்புறம் வைத்துக் கதவை மூடிவிட்டால் போதும். மறுநாளே அவை உங்களுக்குக் கிடைத்துவிடும்.

இங்ஙனம்,
நடுநிலையில் சிறிதும் தவறாத
உன் பெரிய தந்தை,
இராசேந்திரன்.”