உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மதுராந்தகியின் காதல் (மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் அத்தியாயம் - 12. வியப்புறு திருப்பம்! ஆகவமல்லனின் எதிர்பாராத மரணத்தால் விக்கிரமாதித்தன் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளானான். ஆம், அவனுடைய திட்டங்கள் அனைத்தையுமே கிட்டத்தட்ட நிலைகுலையச் செய்துவிட்டது அச்சாவு. வீரனான விக்கிரமாதித்தனின் திட்டங்கள் பலப் பல. ஆயினும் அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை; ஒரே குறிக்கோள் உடையவை. இளங்கோப் பருவத்தில் போர்க்கலைப் பயிற்சியை முடித்த நாளிலிருந்தே அந்த வீரனின் உள்ளத்தில் “நம் நாட்டைப் பலமுறை போரில் புறங்காண வைத்த சோழர்களை நம் ஆயுட்காலத்தில் ஒரு முறையாவது புறங்காணச் செய்ய வேண்டும்,” என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அது அப்போது ஓர் ஆவலாக, வெறும் வெறியாக இருந்ததேயன்றி, அவன் அதைத் தனது கடமைகளில் ஒன்றாகக் கருதவில்லை. ஆனால் சோழநாட்டு இளவரசியின் காதலைப் பெற்று, அவளை முறையாக மணந்துகொள்ள அரசகுல வரிசைகளுடன் சென்றபோது அடைந்த அவமானம், “எந்த வானவியை எனக்கு மணம் முடிக்க இயலாது என்று இந்த வீரராசேந்திரன் விரட்டி அடித்தானோ, அவளை அவனே என் காலடியில் கொண்டுக் கிடத்துமாறு அந்நாட்டைப் போரில் முறியடிக்க வேண்டும்,” என்பதை அவனுடைய உறுதிப் பாடாகவும், அதுவே அவன் தன் காதலிக்கு ஆற்ற வேண்டிய கடமையாகவும் ஆக்கிற்று. அதிலும் தன் காதலி தன்னைக் காண வேண்டிப் பல இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு, பல காலம் பைத்தியமாக நடித்துத் தன்னைச் சோழநாட்டுக்கு மாற்றுருவில் வரவழைத்தபோது, அம்முயற்சி வெளிப்பட்டு, தான் சிறைப்பட்டுத் தப்பி ஓடவும், அவளும் அவளுக்கு உதவிய அவள் தம்பியும் ஆயுள் சிறைவாசம் அடையவும் நேரிட்டதிலிருந்து, அவன் தனது இதர அரசியல் அலுவல்களையெல்லம் மறந்துவிட்டு, தனது வாக்குறுதியை நிறைவேற்றுவது ஒன்றையே கடமையாகக் கொண்டான்; அதற்காகப் பல திட்டங்களையும் வகுத்தான். சோழநாட்டுடன் அதுவரை நிகழ்த்தியிருந்த போர்கள் ஒன்றில் கூடத் தங்களுக்கு வெற்றி கிட்டாதது விக்கிரமாதித்தனின் நுண்ணறிவுக்கு ஒரு புத்தொளி அளித்திருந்தது. ‘அதாவது, இனி தான், தனது தந்தை, தனது சகோதரர்கள், தங்கள் படை ஆகியோர் மட்டுமே அவர்களுடன் போரிட்டுப் பயனில்லை. சோழர்களைப் போலவே தாங்களும் முதலில் பல சிற்றரசுகளை வென்று தங்களுக்கு அடங்கியதாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அந்தக் குறுநில மன்னர்களையும், அவர்களது படைகளையும் சேர்த்துக்கொண்டுதான் சோழர்களுடன் போர் தொடுக்க வேண்டும். எல்லவற்றுக்கும் மேலாக அவர்களது போர் அரணாகவும், எல்லைக் கேந்திரமாகவும் விளங்கி வரும் தங்களது அண்டை நாடான வேங்கியை எப்படியாவது கைப்பற்றிக் கொள்ள வேண்டும்; இவ்விரண்டையும் செய்தால்தான் தாங்கள் அவர்களை வெற்றி கொள்ள முடியும்; தான் தனது காதலிக்கு அளித்துள்ள உறுதிமொழியையும் நிறைவேற்ற முடியும்’ என்று அவன் முடிவுறுத்தினான். எனவே இதற்கேற்ற திட்டங்கள் பலவற்றை வகுத்துக் கொண்டு அவற்றை நிறைவேற்ற ஒரு திக்குவிசயத்தை மேற்கொண்டான். நினைத்தவாறு வேங்கியை அடிபணியச் செய்தான். வேறு சில சிற்றரசுகளையும் அடிமைப்படுத்தினான். இன்னும் பல சிறு நாடுகளை குந்தளத்துக்குக் கீழ்ப்படியச் செய்ய வேண்டியிருந்தது. அப்பணியை மேற்கொண்டிருந்த போதுதான் அவன் எதிர்பாராதது நிகழ்ந்துவிட்டது. வேங்கி கிட்டிய வெற்றிக் களிப்பின் அவன் தந்தை அவசரப்பட்டுச் சோழநாட்டைப் போருக்கு அழைத்துச் சூளோலை அனுப்பி விட்டார். அந்தப் போராவது நிகழ்ந்ததா? போதாத வேளை அவரை நோய்க்குள்ளாக்கி வாழ்வை முடித்துக் கொள்ளச் செய்துவிட்டது; மீண்டும் வேங்கி சோழர் வசமாகிவிட்டது. பலகால முயற்சிக்குப் பின்னர் கைவசமான அந்நாடு பறிபோய் விட்டதைப் பற்றிக்கூட விக்கிரமாதித்தன் வருந்தவில்லை. ஆனால் தனது முயற்சிகளுக்கெல்லாம் ஊக்கமளித்து வந்ததோடு, தாய்நாட்டைப் பற்றிய கவலையே தனக்கு இல்லாமல் செய்திருந்த தந்தையை இழந்தது அவனுக்குப் பெருத்த கவலையையும், மனத் தொல்லையையும் அளித்தது. இனி அவன் தாய்நாட்டுக் கவலையின்றி இருக்க முடியாது. ஏனென்றால், அவனுக்கு மூத்தவனும், தந்தைக்குப் பின்னர் குந்தள அரியணை ஏற இளவரசாக முடிசூட்டப்பட்டிருந்தவனுமான இரண்டாம் சோமேசுவரன் நெறி தவறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டு மக்களின் வெறுப்பைத் தேடிக்கொண்டிருந்தான். எனவே, தந்தையின் மறைவுக்குப் பிறகு மக்கள் அவனை அரியணை ஏற விடாமல் குழப்பம் செய்வார்களோ என்று அவன் கவலைப்பட வேண்டியிருந்தது. அதற்காக அரசைத் தான் ஏற்றுக் கொள்ளலாமென்றால் அண்ணன் கலகம் செய்வான்; தனது திக்குவிசயத்தைத் தொடர முடியாதவாறு தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பான்; ஆதலால் நாட்டு மக்களை அமைதிப்படுத்தி அண்ணனுக்கே முடிசூட்டு விழா நடத்தி வரும் பொருட்டு, தந்தையின் ஈமக்கடன்களைச் செய்து முடித்ததும், அவன் நேரே கல்யாணபுரத்துக்குச் சென்றான். அங்கே போய், மக்களுக்குச் சோமேசுவரன்பால் நம்பிக்கை பிறக்கச் செய்து, அவனுடைய முடிசூட்டு விழாவைச் சிறப்பாக நடத்தி வைத்தான். *பிறகு, மேலும் ஒரு திங்கள் கல்யாணபுரத்திலேயே தங்கியிருந்து, அண்ணன் ஆட்சிமுறையை நன்கு கடைப்பிடிப்பான் என்பது உறுதியான பின்னர், தம்பி சயசிம்மனை அண்ணனுக்கு உதவுவதற்காக நாட்டிலே விட்டுவிட்டுத் தான் மட்டும் திக்குவிசயத்தைத் தொடங்கினான். (*கி.பி. 1068 ஏப்ரல் 11-ம் நாள் Ep.Ind.Vol.XXV. பக்கம்: 249) ஆனால் இப்போதும் அவன் தொல்லை இன்றித் திக்குவிசயம் செய்ய இயலவில்லை. கல்யாணபுரத்திலிருந்து புறப்பட்டுச் சில திங்கள் ஆகுமுன்பே சயசிம்மன் அவச்செய்தி ஒன்றுடன் அவனைத் தேடி வந்தான். சோமேசுவரன் மீண்டும் தவறான நெறிகளில் ஈடுபட்டு விட்டானென்றும், அவனால் நாட்டு நங்கைகளுக்கு ஏற்படும் தொல்லை மக்களை மறுபடியும் கொதிப்படையச் செய்திருக்கிறதென்றும், அவனை நல்வழிப்படுத்த தான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பயனற்றவை ஆயினவென்றும் அவன் வருத்தத்தோடு உரைத்தான். சுவர் இருந்தால் அல்லவா சித்திரம் தீட்டலாம்? உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டால் சோழர்கள் தருணம் பார்த்துக் குந்தளத்தையே வாய்க்குள்ளே போட்டுக்கொண்டு விடுவார்களே? எனவே விக்கிரமாதித்தன் தம்பியுடன் மீண்டும் நாட்டுக்குப் புறப்பட்டான். இத்தடவை மக்களை மன அமைதி பெறச்செய்வது கடினந்தான் என்று நினைத்துக் கொண்டே அவன் வந்தான். ஆனால் அவன் நினைத்தே இராத வேறொன்று, நாட்டை நெருங்கிக் கொண்டிருக்கையில் நிகழ்ந்தது. கல்யாணபுரத்துக்குச் சில காதத்தொலைவு இருக்கையில், சோமேசுவரனின் படையொன்று அவர்களை எதிர்கொண்டு தடுத்து நிறுத்தியது. நாட்டுக்குள்ளே வர முயன்றால் அவர்கள் இருவரையும் கைது செய்யுமாறு மன்னர் கட்டளையிட்டிருப்பதாக அப்படையின் தலைவன் அறிவித்தான். சினங்கொண்ட விக்கிரமாதித்தன் அச்சிறுபடையை அங்கேயே தோற்றோடச் செய்தான். பின் ‘இவ்வளவு துணிந்துவிட்ட அண்ணனுடன் இப்போது பிணக்குக் கொள்வது தவறு; உள்நாட்டுக் குழப்பத்தால் ஏற்படும் அழிவைவிட இப்பிணக்கால் ஏற்படும் அழிவே பெரிதாக இருக்கும்’ என்பதை ஆய்ந்தறிந்து, நாட்டை இப்போதைக்கு மறந்துவிட்டுத் தனது திக்குவிசயத்தைத் தொடர்ந்தான். இப்போது தாய்நாட்டின் துணை இல்லாமையால் விக்கிரமாதித்தனும் சயசிம்மனும் தாங்கள் முன்பே அடிமைப்படுத்தியிருந்த அரசர்கள் அனைவரையும், அவர்களது படையுடன் திக்குவிசயத்தில் கலந்து கொள்ளுமாறு ஓலை அனுப்பினர். அதோடு, புதிதாக வெல்லும் நாடுகளின் மன்னர்களையும், அவர்களது படைகளையும் அவ்வப்போது தங்கள் படையுடன் சேர்த்துக் கொண்டனர். முன்பே அவர்களிடம் குந்தள நாட்டுப் படையில் ஒரு பெரும்பகுதி இருந்தது. இப்போது எண்ணற்ற சிற்றரசர்களின் சிறு சிறு படைகளும் சேர்ந்துவிடவே, பல துளி பெருவெள்ளமாவது போல் குந்தளப் படையும் ஒரு பெரும் படையாகிவிட்டது. சோழர்களை வென்றுவிடும் அலவுக்குப் படைபலம் பெற்றதும் சகோதரர்கள் இருவரும் திக்குவிசயத்தை நிறுத்திவிட்டுச் சோழ நாட்டின் மீது படையெடுப்புச் செய்யத் திரும்பினர். அவர்கள் இடைதுறை நாடுவழியாக வந்து துங்கபத்திரை ஆற்றைக் கடந்து நுளம்பாடியைத் தாண்டி, கங்கபாடியை நெருங்கிக் கொண்டிருக்கையில், கங்கைகொண்ட சோழபுரத்துப் பாதாளச் சிறையிலிருந்து தப்பி, கால்நடையாகவே குந்தள நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த வானவியையும், மதுராந்தகனையும் சந்தித்தனர். போதிய உணவும் உறக்கமும் இன்றிப் பல திங்கள் வழி நடந்து உடல் நலிந்து தன்னைத் தேடி வந்துள்ள காதலியைக் கண்டதும் வீரனான விக்கிரமாதித்தனின் கண்களில்கூடக் கண்ணீர் பெருகியது. ஆயினும் அந்த உண்மை வீரன் அவளை அப்படியே ஏற்றுக்கொண்டு விடவில்லை. “அன்பே! உன்னை உன் தந்தையாரே அழைத்துவந்து எனக்கு மணமுடித்து வைக்கச் செய்வதாக அன்றொருநாள் உன் முன் ஆணையிட்டேன். அது நிறைவேறும் காலம் நெருங்கி வந்துவிட்ட பிறகு, ‘என் மகளைச் சிறையிலிருந்து தப்பி வரச் செய்து, மணந்துகொண்டான், கோழை!’ என்ற அவச் சொல்லுக்கு இடமளிக்க மாட்டேன். இதோ, இந்தக் கடலனைய படை இன்னும் சில நாட்களில் காஞ்சி வழியே சோழ நாட்டில் புகுந்து அதைச் சூறையாடப் போகிறது; உன் தந்தையின் கொட்டத்தை அடக்கப் போகிறது. அதுவரையில் நீ இந்த விக்கிரமாதித்தனின் மனைவியாக முடியாது; சோழ நாட்டு இளவரசியாகவே எங்களுடனே இருப்பாய்!” என்றான். காதலனின் வீரம் செறிந்த பேச்சைக் கேட்டுத் தளர்ச்சியடையவில்லை வானவி; மாறாக, பூரிப்பே அடைந்தாள். அவன் சேர்த்து வந்திருந்த பெரும்படையை அவள் ஒரு தடவை பார்த்தாள்; அவளுடைய மார்பகம் பூரிப்பால் விம்மியது. அவன் இட்ட ஆணை மட்டுமின்றி, தான் மதுராந்தகி முன் இட்ட ஆணைகளும் இனி எவ்விதத் தடையுமின்றி நிறைவேறிவிடும் என்று அவள் பெருமிதம் கொண்டாள். காதலனின் இச்சைப்படி அவனைக் கைப்பிடிக்கக் காத்திருக்க இணங்கினாள். இடையே, விக்கிரமாதித்தனும் சயசிம்மனும் பெரும்படை சேர்த்துக்கொண்டு சோழநாட்டைத் தாக்க வரும் செய்தி ஒற்றர்கள் வழியே வீரராசேந்திர தேவரை எட்டியது. மகளும், மகனும் சிறையிலிருந்து தப்பிவிட்ட செய்தியை அறிந்தபோதே, அவர்கள் பகை நாட்டுகுத்தான் ஓடிப்போயிருப்பார்கள் என்று ஊகித்து அவர் மனம் கொதித்துக் கொண்டிருந்தார். இப்போது படையெடுப்புச் செய்தியும் வரவே, அவருடைய உள்ளம் கொழுந்து விட்டெரியும் வேள்வித் தீ ஆயிற்று. சோதனைபோல், அப்போது சோழ நாட்டின் சிறந்த படைத்தலைவர்களில் பெரும்பாலோர் நாட்டில் இல்லை. குலோத்துங்கனைத் திக்குவிசயம் செய்ய வெளிநாட்டுக்கு அனுப்பியிருந்தது போலவே, இதர முக்கியமான படைத்தலைவர்களையும் அவர் ஆங்காங்கு அனுப்பியிருந்தார். அவர்களுக்குச் செய்தி அனுப்பி வரவழைக்கப் போதிய காலம் இல்லை. இருந்தாலும் வீரராசேந்திரர் இதற்காகத் தயங்கிவிடவில்லை. இருக்கிற படைகளையும், படைத்தலைவர்களையும் அழைத்துக்கொண்டு, குந்தளத்தாரை சோழ நாட்டின் எல்லையையே நெருங்கிவிடாமல் விரட்டிவிட வேண்டுமென்ற வீறுடன் வடக்கு நோக்கிப் பயணப்பட்டார். இருதரப்புப் படைகளும் காஞ்சியில் சந்தித்தன. விக்கிரமாதித்தனின் படைப்பலத்தைப் பற்றி வந்த செய்திகள் வீரராசேந்திரருக்குத் திகிலளிப்பனவக இருந்தன. இருந்தாலும், வீரப் போரிட்டு மடிவோமேயன்றி இவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓட மாட்டோமென்ற தீவிரத்துடன் இருந்தார் அவர். போருக்கு நாள் குறிப்பிடப்பட்டது. நாளைக்குப் போர்; இன்று வியப்புக்குரிய திருப்பம் ஒன்று நடந்தது. குந்தளப் படையில் அந்நாட்டுக்காக உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருந்த குறுநில மன்னர்கள் பலர் இருந்த போதிலும், அவர்களிடையே சமாதானத்தை விரும்பிய மன்னர்களும் ஓரிருவர் இருந்தனர். அவர்களில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர், கோவா நகரத்தைச் சேர்ந்த கடம்பர்குல மன்னர் முதல் சயகேசி என்பார். ஏதோ விக்கிரமாதித்தனுக்குக் கீழே அரசாளும் குறுநில மன்னராக ஆகிவிட்டமையால், அவனுடைய கட்டளைக்கு அடங்கித் தமது படையுடன் இப்போரில் கலந்துகொள்ள வந்திருந்தாரேயன்றி, முதலாம் சயகேசிக்கு இவ்விரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் நெடுநாள்ப் பகையைப் போக்கி நட்புறவு ஏற்படுத்த வேண்டும் என்ற பேராவல் பலகாலமாக இருந்து வந்தது. வீரராசேந்திரர் முன்னின்று வானவியை விக்கிரமாதித்தனுக்கு மணமுடித்து வைத்துவிட்டால் இப்போரைத் தவிர்த்து விடலாம் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆதலால் அவர், போருக்கு முன்னாள் மாறுவேடம் புனைந்து சோழர்களின் பாசறைக்குச் சென்று வீரராசேந்திரரைச் சந்தித்தார். படைப் பலத்தில் அவர் இப்போது தாழ்ந்திருப்பதையும், அதனால் ஏற்படவிருக்கும் தோல்வியையும் அவருக்கு விளக்கினார். பின்னர் இப்போரின் காரணத்தை வெளியிட்டு, “உங்கள் சகோதரர் இரண்டாம் இராசேந்திர தேவர் உயிரோடிருந்த வரையில், பகை நாட்டார் என்றென்றும் பகை நாட்டாராகவே இருக்க வேண்டுமென்ற தேவையில்லை; தருணம் வாய்த்தால் பகைவரையும் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்துக் கொண்டிருந்தார். உங்கள் முன்னோரான இராசராச சோழர் கூட வேங்கி நாட்டுடன் இருந்த பகையைப் போக்கிக்கொள்ளத் தமது மகள் குந்தவையை அந்நாட்டு இளவரசன் விமலாதித்தனுக்கு மணம் முடித்து வைத்து இரு நாடுகளிடையேயிருந்த பலகாலப் பகையைப் போக்கிக் கொண்டார். அவ்வாறே நீங்களும் உங்கள் மகளை விக்கிரமாதித்தனுக்கு மணம் முடித்து வைத்து இப்போரைத் தவிருங்கள். இரு நாடுகளும் கொள்வினையால் ஒன்றுபட்டதாகுங்கள். நீங்களாக முன் வந்து இதைத் செய்யாவிட்டால்கூட விக்கிரமாதித்தன் - வானவி திருமணம் நடக்கத்தான் போகிறது; அவள் அவன் வசம் இருக்கிறாள் என்பதை மறந்து விடாதீர்கள்,” என்று பலவாறு கரைத்தார்.* (*Bombay Gazzette, Vol. I, Part II பக்கம். 567.) வீரராசேந்திரரும் சூழ்நிலையை ஒட்டி இந்தச் சமாதான உடன்படிக்கைக்கு இணங்க வேண்டியதாயிற்று. சில நாட்களுக்குப் பின்னர் துங்கபத்திரை ஆற்றின் கரையில் விக்கிரமாதித்தன் - வானவி திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தார் அவர். பின்னர், இப்போது மருமகனாகிவிட்ட விக்கிரமாதித்தன் நாடின்றி இருக்கலாகாதென, அவனுடைய பெரும்படை, தமது பெரும்படை ஆகியவற்றுடன் குந்தள நாட்டின் ஒரு பகுதியாகச் சோமேசுவரன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இரட்டபாடி ஏழரை இலக்கத்தின் மீது பொருது கொண்டு சென்று, சோமேசுவரனை அப்போரில் வென்று நாட்டைவிட்டே ஓடச் செய்தார். பிறகு தமது கையினாலேயே மருமகனுக்குக் கல்யாணபுரத்தில் முடிசூட்டி வைத்துவிட்டு, மூத்த மகன் மதுராந்தகனோடு கங்கைகொண்ட சோழபுரம் திரும்பினார். என்னதான் ஒரு போரைத் தவிர்த்து, சமாதானமுறையில் பகைவர்களை நண்பர்களாகவும், உறவினர்களாகவும் ஆக்கிக் கொண்டாலும், வீரராசேந்திரருக்கு இது தமக்கு ஏற்பட்ட பெருந்தோல்வியாகவே பட்டது. அந்த வேதனையை எவ்வளவு முயன்றாலும் அவரால் மறக்கவே முடியவில்லை. இந்த மனத்துன்பம் முதுமையை எட்டிக்கொண்டிருந்த அவருடைய உடலைப் பெரிதும் பாதித்தது. நாடு திரும்பிய சில நாட்களுக்குள்ளே அவர் நோய்ப் படுக்கையில் விழுந்துவிட்டார். எந்த மருத்துவமும் பயன்படாமல் கி.பி.1070-ஆம் ஆண்டின் முற்பகுதியில் அவர் உயிர் துறந்தார். தமது எட்டாண்டு ஆட்சிக்காலத்தில் சோழப்பேரரசை விரிவு படுத்தாவிட்டாலும், தமது முன்னோர் சேர்த்து வைத்த பகுதிகளை இழக்காதாதோடு, பல தலைமுறைகளாகப் பகைவர்களாக இருந்த குந்தளத்தாருடன் நட்புறவு பெற்ற பெருமை வீரராசேந்திரருக்கு உண்டு. அந்தப் பெருமை மட்டும் அவருக்கு பின்னும் நீடித்திருந்ததானால், வானவி முன் மதுராந்தகி இட்ட ஆணைகள் நிறைவேற்றப்படாமலே போயிருக்கும். ஆனால் அவள் ஆணை நிறைவேற வேண்டும்; அதிலும் யாரும் எதிர்பாராத வழியில் ஓராண்டுக்குள் நிறைவேற வேண்டுமென்று இருந்ததால்தான், வீரராசேந்திரர் இத்தனை விரைவில் இவ்வுலகிலிருந்து விடை பெற்றுக்கொண்டார் போலும்! (இரண்டாம் பாகம் முற்றிற்று) மதுராந்தகியின் காதல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
2-11
2-12
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
|