1 பட்ட மேற்படிப்புக்காகத் தனியே ஏற்படுத்தப்பட்டிருந்த பல்கலைக் கழக நூல் நிலையத்தில்தான் சுலட்சணாவை அவன் முதல் முதலாகச் சந்திக்க நேர்ந்திருந்தது. அந்தப் பல்கலைக் கழகத்தில் இரண்டு தனத்தனி நூலகங்கள் இருந்தன. எல்லாருக்கும் எல்லாவகையிலும் எப்போதும் பயன்படுகிற பொதுவான பெரிய நூலகம் ஒன்று. மேற்பட்டப் படிப்புப் படிக்கிற மாணவர்களுக்கும் கற்பிக்கிற பேராசிரியர்களுக்கும் மட்டும் பயன்படுகிற போஸ்ட். கிராஜுவேட்ஸ் லேப்ரரி என்னும் சிறப்பு நூலகம் மற்றொன்று. குளுகுளுவென்று ஒரு சூழ்நிலை நிலவும் அங்கே. இந்தச் சிறப்பு நூலகம் மரங்களடர்ந்த சோலை போன்ற பகுதியில் ஓர் ஏரிக்கரையிலே அமைந்திருந்தது. எந்நேரமும் ஜிலு ஜிலு என்று காற்று வரும். வெளி உலகின் சத்தங்களும் ஆரவாரச் சந்தடிகளும் கேட்காத இடம் அது. போய் உட்கார்ந்தால் கண்களைச் சொருகிக்கொண்டு தூக்கம் வரும். எதற்கும் விரைந்து மனத்தில் பட்டதை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் உடனே பெயர் வைத்து அழைத்து விடுவது என்பது மாணவப் பருவத்துக்கே உரிய உற்சாகங்களில் ஒன்று. பேராசிரியர்கள், கட்டிடங்கள், ஹாஸ்டல் உணவுப் பண்டங்கள், சக மாணவ மாணவியர் எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் பகிரங்கமாகவோ இரகசியமாகவோ காரண இடுகுறிப் பெயர்களை சூட்டி அப்பெயர்களை வழக்கமாக்கியும், பிரபலப்படுத்தியும் மகிழ்வது அந்த வயதின் உற்சாகங்களிலே தலைசிறந்ததாயிருக்கும். உதயா பல்கலைக்கழக மாணவர்களும் அப்படி ஓர் உற்சாகத்தோடுதான் பெயர்கள் சூட்டியிருந்தார்கள். அந்தப் பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்டவற்றைப் பற்றிய உண்மை அபிப்ராயங்களாகவும் விமர்சனங்களாகவும் சில சமயங்களில் கண்டனங்களாகவும் கூட இருந்தன. எப்படியாயினும் அந்தப் பெயர்களில் அவற்றை வைத்தவர்களின் இரசனை புலப்படும். சுலட்சணாவும், கனகராஜும் பொருளாதார மாணவர்கள். சனி, ஞாயிறு விடுமுறைகளில் மாணவர்கள் படித்துப் பயனடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பொருளாதாரப் பேராசிரியர் சில புத்தகங்களின் பெயர்களை மாணவர்களுக்குச் சொல்லுவார். போஸ்ட் கிராஜுவேடஸ் லைப்ரரியில் போய் அவற்றை எடுத்துப் படிக்கவேண்டும். திங்கட்கிழமை வகுப்பில் மறுபடி பேராசிரியர் பரீட்சையைப் போல இல்லாமல் பொதுவாக அந்தப் புத்தகங்களை எல்லாம் மாணவர்கள் தேடிப் படித்தார்களா இல்லையா எனபது பற்றி விசாரித்தறிவார். படித்தவர்களை உற்சாக மூட்டும் வகையில் இண்டேர்னல் அசெஸ்மெண்ட் மார்க்குகள் உண்டு. புத்தகத்தைப் படித்த மாணவர் வகுப்பில் அதைச் சுருக்கமாக விமர்சிக்க வேண்டும். இப்படி ஒரு வெள்ளிக் கிழமை மாலையில் ஒரே புத்தகத்தைத் தேடிக்கொண்டு போன போதுதான் சுலட்சணாவும், கனகராஜூம் சந்தித்துக் கொண்டார்கள். பொதுவாகப் போஸ்ட்கிராஜுவேட்ஸ் நூலகத்தில் ஒவ்வொரு புத்தகமும் இரண்டு முதல் நான்கு பிரதிகள் வரை இருக்கும். ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லாருக்கும் ஒரே சமயத்தில் கொடுக்க வேண்டியிருப்பதால் இந்த ஏற்பாடு செய்திருந்தார்கள். இருந்தும் சமயா சமயங்களில் பலர் ஒரே நேரத்தில் ஒரே புத்தகத்தைத் தேடிக் கொண்டு வர அந்த ஒரே புத்தகத்தின் ஒரு பிரதி மட்டும் அங்கே இருக்க நேர்ந்து அதை யாருக்குத் தருவது என்ற தர்மசங்கடம் லைப்ரேரியனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அன்றும் சுலட்சணாவும் கனகராஜூம் ஒரே புத்தகத்தைத் தேடி வந்தபோது பல்கலைக்கழக நூலகருக்குத் தர்ம சங்கடமான நிலைமைதான் ஏற்பட்டது. இருக்கிற ஒரு பிரதியை இருவரில் யாருக்குத் தருவது? இருவருமே தங்களுக்கு வேண்டும் என்பதை வற்புறுத்தினார்கள். இருவரில் யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை. ‘நான் தான் நீங்கள் சொல்லிய புத்தகத்தை முதலில் படித்தேன்’ என்று பேராசிரியரிடம் போய்ப் பீற்றிக்கொள்ளும் வாய்ப்பை இருவருமே இழக்க விரும்பவில்லை. “லேடீஸ் ஃபர்ஸ்ட்னு மரபே இருக்கு” என்று புன்னகையோடு மெல்லத் தொடங்கித் தன்னுடைய முன்னுரிமையை நிறுவ முயன்றாள் சுலட்சணா. கனகராஜூம் விடவில்லை. “இருக்கலாம்! அதெல்லாம் இந்திய மரபு இல்லை. ஆங்கில மரபு. நம்ம யூனிவர்ஸிடி அமெரிக்காவிலியோ ஐரோப்பாவிலியோ இல்லை. இந்தியாவிலேதான் இருக்கு. இங்கே லைப்ரேரியனோட டெஸ்குக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒரே சமயத்துக்கு வந்தோம்னாலும் லைப்ரரிக்குள்ளே நான் நுழைஞ்சு ரெண்டுமணி நேரத்துக்கு மேலே ஆச்சு. நீங்க ஜஸ்ட் இப்பத்தான் உள்ளே நுழைஞ்சீங்க...” “நீங்க ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே லைப்ரரியிலே நுழைஞ்சதுக்கு என்ன அத்தாட்சி?” “லைப்ரரி ரிஜிஸ்டர்லே கையெழுத்துப் போட்டிருக்கேன் சார்.” லைப்ரேரியன் உடனே எழுந்திருந்து போய் அங்கே உள்ளே நுழைகிற முகப்பில் வைக்கப்பட்டிருந்த ரிஜிஸ்தரை நோட்டம் விட்டுவிட்டு அவன் சொல்லியதை உறுதிப்படுத்திக் கொண்டு வந்தார். “மிஸ் சுலட்சணா! தயவு செய்து நீங்க என்னை மன்னிக்கணும். மிஸ்டர் கனகராஜ் கையெழுத்துப் போட்டிருக்கும் சீரியல் நம்பர் நாற்பத்திரெண்டு. நீங்க கையெழுத்துப் போட்டிருககிற சீரியல் நம்பர் அறுபத்தி ஏழு. ரிஜிஸ்டர்படி அவர்தான் முன்னாடி லைப்ரரிக்குள் வந்திருக்கார்னு உறுதிப்படுது.” “அதுக்காக...?” “இந்த புக்கை கிளெய்ம் பண்றதிலே மிஸ்டர் கனகராஜுக்கு ப்ரயாரிட்டி இருக்கு.” சுலட்சணா தான் அவனுக்காக விட்டுக்கொடும்படி ஆயிற்று. விட்டுக் கொடுத்தாள். அவனுக்குத்தான் வெற்றி. புத்தகத்தை அவன் எடுத்துக் கொண்டு போனான். அவள் வெறுங்கையோடு திரும்பினாள். போகிற போக்கில், “ஐயாம் வெரி சாரி சுலட்சணா!” என்று அவளிடம் நுனி நாக்கால் வருத்தம் தெரிவித்து விட்டுப் போனான் கனகராஜ். தன்னைப்போல் ஒரு பெண் - சக மாணவி - கெஞ்சியும் கனகராஜ் விட்டுக் கொடுக்க முன்வராததோடு பெருந்தன்மையாக நடந்து கொள்ளவும் இல்லை என்று தோன்றியது சுலட்சணாவுக்கு. இந்தச் சிறிய விரோதம் ஒரு மனத்தாங்லாகவே அவளுக்குள் தங்கி உறைந்து போயிற்று. ஒரு பெண்ணிடம் ஆண் காட்ட வேண்டிய இங்கிதத்தை அவன் காட்டத் தவறி விட்டதாகவே அவள் நினைத்தாள். பொருளாதார எம். ஏ. முதலாண்டு வகுப்பில் டே ஸ்காலர்களாகப் பதினெட்டுப் பேர்தான் சேர்ந்திருந்தார்கள். இந்தப் பதினெட்டுப்பேரில் சுலட்சணா உட்படப் பெண்கள் ஏழுபேர். ஆண்கள் பதினொருவர். மாணவர்களில் மிகவும் ‘ஸ்மார்ட்’ என்று பெயரெடுத்தவன் கனகராஜ். பெண் களில் - அதாவது - மாணவிகளில் மிகவும் அழகானவள் என்று மட்டுமில்லாமல் - சூட்டிகையானவள் என்றும் பெயரெடுத்தவள் சுலட்சணாதான். எங்கும் எதிலும் தனக்கு ஒரு முகராசி உண்டு என்ற நம்பிக்கையோடு துணிந்து முயல்கிறவள் அவள். பல சந்தர்ப்பங்களில் பல காரியங்களில் அவள் நினைத்தது நினைத்தபடியே நடந்திருக்கிறது. இன்றும் அப்படி நடந்திருக்க முடியும். ஆனால் அந்தப் பாழாய்ப் போன லைப்ரேரியன் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ‘ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட்’ என்று எதையோ சொல்லிப் புத்தகத்தைக் கனகராஜிடம் எடுத்துக் கொடுத்து விட்டார். இதில் நூலகர் மேலும் அவளுக்கு வருத்தம்தான். தன்னுடைய வாய்ப்பு நழுவிப் போக முன் நின்று உதவியவர் அவர்தான் என்று நினைத்தாள் அவள். அந்தப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை மிகவும் புகழ்பெற்றது. நாட்டின் பொறுக்குமணிகளான பல பொருளாதார நிபுணர்கள் மாணவப் பருவத்தில் அங்கு உருவானவர்கள்தான். முதல் பட்டத்தில் - அதாவது ஃபர்ஸ்ட் டிகிரியில் பொருளாதாரத்தில் கணிசமான மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளைத்தான் போஸ்ட் கிராஜுவேட் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். மாணவர்களின் அதிகபட்ச அளவு இருபது என்றிருந்தாலும் பதினெட்டுக்குமேல் சேர்ப்பதே இல்லை. பிரமாதமான புகழ் பெற்ற பேராசிரியர்கள் பொருளாதாரத் துறையில் பணிபுரிந்தார்கள். முதல் வகுப்பு, ரேங்க் - யூனிவர்ஸிடி அவுட்ஸ்டாண்டிங் - இவற்றை அடைய மாணவர்களிடையே பெரும் போட்டி நிலவியது. மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெரிய பெரிய குடும்பங்களில் இருந்து மாணவர்கள் வந்து தங்கிப் படித்தார்கள். கனகராஜ் சேலததில் யாரோ ஒரு பெரிய தொழிலதிபரின் ஒரே மகன் என்று மட்டும் சுலட்சணா கேள்விப்பட்டிருந்தாள். கனகராஜ் பல்கலைக் கழக நேரம் தவிர முக்கால்வாசி நூல் நிலயத்திலேயே பொழுதைக் கழித்ததால் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்கிற ஞானமும் எல்லா இண்டேர்னல் அஸெஸ்மெண்ட்டிலும் முதல் மதிப்பெண் பெறுகிற திறமையும் அவனுக்கு இருந்தது. ‘இந்தக் காலத்தில் பெண்கள்தான் கெட்டிக்காரத் தனமாகப் படிக்கிறார்கள்’ என்ற பொதுமதிப்பீட்டையும் மீறி ஆண்பிள்ளையாகிய கனகராஜ் எதிலும் நம்பர் ஒன்றாக முன் நின்றான். சுலட்சணாவுக்குக் கூட இது பெரிய ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் அவன் அவளுக்கு ஒரு சவாலாகவே வாய்த்திருந்தான். பல்கலைக்கழக ரேங்க் - அல்லது டிஸ்டிங்க்ஷன் அவனுக்கே போய்விடுமோ என்று கூட அவள் இரகசியமாகக் கவலையும் பொறாமையும் கொன்டிருந்தாள். இந்த மாதிரி அத்தியாவசியமான புத்தகங்கள் நாலந்து பிரதிகளாவது வாங்கி லைப்ரரியில் அடுக்கி இருக்க வேண்டாமா என்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் மேல் கூட அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. அந்த முறையும் ‘எக்ஸ்ட்ரா கரிகுலர் ரீடிங்’குக்கான இண்டெர்னல் மதிப்பீட்டில் கனகராஜ் தான் முதல் மாணவனாக வரப்போகிறான் என்ற குமுறலோடுதான் அன்று மேற் பட்டப் படிப்பு நூலகத்திலிருந்து அவள் வெளியேறியிருந்தாள். ஆனால் இந்தக் குமுறல் எல்லாம் மாலை ஆறுமணிவரை தான். ஆறு மணிக்கு மாணவர் விடுதியைச் சேர்ந்த பையன் ஒருவன் அவளைத் தேடி வந்து ஒரு சிறு கடிதத்தையும், பகலில் நூல்நிலையத்தில் அவளுக்குக் கிடைக்க விடாமல் கனகராஜ் தட்டிக் கொண்டுபோன அந்தப் புத்தகத்தையும் கொடுத்தபோது அவளுக்கு முதலில் வியப்பும் பின்பு கனகராஜ் மேலும் அவன் குடும்பத்தினர் மீதும் அநுதாபமும் ஏற்பட்டன. “மிஸ் சுலட்சனா! என் தாய் மிகவும் சீரியஸாய் இருக்கிறாள் என்று என்னே உடனே அழைத்து வரச் சொல்வித் தந்தை கார் அனுப்பியிருக்கிறார். நான் இந்த வினாடியே சேலம் விரைகிறேன். புத்தகத்தை நீங்களாவது படித்துப் பயன்படுத்தித் திங்கள் கிழமை இண்டர்னல் அசெஸ்மெண்ட் மதிப்பெண்களைப் பெற வேண்டுகிறேன்” என்று கடிதத்தில் எழுதியிருந்தான் கனகராஜ். சுலட்சனாவுக்கு உடனே அவன் மேலிருந்த கோபம் எல்லாம் போய், பொறாமை எல்லாம் கழன்று, ‘ஐயோ பாவம்! இத்தனை பதற்றமான சூழ்நிலையிலும் புத்தகம் கிடைக்காததால் நான் அடைந்த ஏமாற்றத்தை ஞாபகம் வைத்துக் கொண்டிருந்து தனக்குப் பயன்படாமற் போனது எனக்காவது பயன்படட்டும் என்ற எண்ணத்தோடு சிரத்தையாகக் கொடுத்தனுப்பியிருக்கிறாரே’ என்று அவன்மேல் அநுதாபமாகவும் அன்பாகவும் மாறியது. ‘படிக்கிற - நன்றாகப் படிக்கிற ஒரு மாணவரின் சிரமங்கள் கேலிக்குரியதாகப் படாமல் - நன்றாகப் படிக்கிற மற்றொரு மாணவருக்குத்தான் சீரியஸ்ஸாகப் புரிய முடிகிறது’ என்று உணர்ந்தாள் சுலட்சணா. அத்தனை பரபரப்பிலும் ஆளைத் தேடிப் புத்தகத்தையும் கடிதத்தையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு சொல்லி அவன் ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருக்கிற பாங்கு அவளைக் கவர்ந்தது. ‘சின்ன விஷயங்களைக்கூட ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் பெரிய மனிதர்களாகும் வாய்ப்பை இழக்கிறார்கள்’-என்ற மேற்கோள் வாசகம் சுலட்சணாவுக்கு நினைவு வந்தது. அவள் கனகராஜின் சிரத்தையை நேசித்தாள். |