7

     இப்படித் துணைவேந்தரைத் தைரியமாக எச்சரித்து விட்டு அவருடைய அறையிலிருந்து வெளியேறித் தன் விடுதிக்குத் திரும்பினாள். அவள் திரும்பியபோது மாணவர்களின் விடுதி மெஸ் பையன் ஒருவன் ஒரு கடிதத்தோடு அவளுக்காக முகப்பிலேயே காத்திருந்தான். கனகராஜ் தான் கடிதத்தை எழுதியிருந்தான். கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. கூடவே ஒரு செக் ஆயிரம் ரூபாய்க்கு எழுதி இணைக்கப்பட்டிருந்தது.

     “சுலட்சணா! என்னை மன்னித்துவிடு. சிறு வயதிலிருந்தே அரிவாள், முரடர்கள், இரத்தம் என்றால் பயந்து நடுங்குகிற சுபாவம் எனக்கு. கலகம் என்றால் காதூரம் ஓடிவிடுவேன். அன்று, பஜாரில் உன்னோடு இறுதிவரை துணை நின்று உதவாமல் ஓடி வந்து விட்டதற்காகத் தவறாக நினைக்காதே. வீராசாமியின் ஆஸ்பத்திரிச் செலவுகள் போன்றவற்றுக்கு உபயோகமாக இருக்குமென்று இதனோடு ஓர் ஆயிரம் ரூபாய்க்குச் ‘செக்’ இணைத்திருக்கிறேன்! உன் கோபம் ஆறுவதற்கு முன் உன்னை நேரில் வந்து சந்திக்கப் பயமாயிருக்கிறது. இரண்டு நாளில் பார்க்கிறேன்” என்று கடிதம் சொல்லியது. கடிதத்தைப் படித்ததும் தரையில் காறித் துப்பினாள் அவள்.

     இதைப்படித்ததும் அவளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. அதே கடிதத்தின் பின்பக்கத்தில், “உங்கள் அநுதாபம் எனக்கோ வீராசாமிக்கோ தேவையில்லை. அநுதாபம், செக் எல்லாவற்றையும் திருப்பி அனுப்பியுள்ளேன். அதோடு உங்களுக்குத் தினசரி பூசிக்குளிக்கவும் அணிந்து கொள்ளவும் உபயோகமாக இருக்குமென்று இரண்டு மஞ்சள் கிழங்குகளும் அரைடஜன் கண்ணாடி வளையல்களும் அனுப்பியுள்ளேன். பெற்றுக் கொள்ளவும்” என்று எழுதி அறைக்குப்போய் இரண்டு மஞ்சள் கிழங்கும் பெட்டியில் சொந்த உபயோகத்துக்காக வாங்கி வைத்திருத்த புது வளையல்களில் ஆறையும் ஒரு பழைய அட்டைப்பெட்டியில் அடுக்கி அழகாக கிஃப்ட் பொட்டலம் போலக் கட்டி அந்தப் பையனிடம் கொடுத்து அனுப்பினாள் சுலட்சணா.

     ‘இவனைப்போன்றவர்கள் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம். யூனிவர்ஸிட்டி ரேங்க் வாங்கலாம். மன்மதனைப் போல அழகாயிருக்கலாம். அழகான ‘எஸ்கேப்பிஸ்ட்’டுகளைவிடக் குரூரமாகத் தோன்றும் தைரியவான்கள் எவ்வளவோ மேல். வீராசாமி அழகனில்லை, பணக்காரனில்லை. மாநிலத்திலேயே பின்தங்கிய பகுதியில், பின்தங்கிய வகுப்பில், வறண்ட பிரதேசத்தில் பிறந்தவன். பிரைட்டான மாணவன்கூட இல்லை. மந்தமான சராசரி மாணவன். ஆனால் ஆண்மையாளன்.

     தவறு செய்கிறவன் எத்தனை வலிமையானவனாக இருந்தாலும் அவனை எதிர்த்துக் கையை ஓங்கி முஷ்டியை மடக்கிக் கொண்டு எழுகிறவன். நாளைய இந்தியாவுக்கு இப்படிப்பட்ட ஆண்மையாளர்கள்தான் தேவை. ஆணின் தோற்றம் மட்டுமே ஆண்மையாகிவிடாது. ஆணின் இதயமுள்ளவன்தான் ஆண்மையாளன். ரிஸ்க் எடுத்துக் கொள்ளத் துணியாதவன் எப்படிப்பட்ட கொம்பனாயிருந்தாலும் இரண்டாம் பட்சமானவனே. அதுவும் பிறருடைய நலனைக் கருதி ரிஸ்க் எடுத்துக் கொள்கிறவனே ஆண் பிள்ளை’ என்று எண்ணினாள் சுலட்சணா.

     வீராசாமியின் வெட்டுண்டு வீழ்ந்த வலது கையில் ஐம்பது பைசா விலை கூடப் பெறாத ஒரு செப்பு மோதிரம் இருந்தது. அதில் சின்னஞ்சிறு பாரதியாரின் உருவத்தைச் செதுக்கியிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் வெட்டுண்ட பகுதிகளை இணைக்க முடியாதென்று முடிவானதும் அந்த ஆபரேஷன் தியேட்டரின் நர்ஸ் ஒருத்தி அந்த மோதிரத்தை மட்டும் கழற்றி உடனிருந்த சுலட்சணாவிடம் கொடுத்தாள். சொன்னாள்:

     “நினைவு வந்து தேறி எழுந்தும் இந்த மோதிரத்தை அவரிடம் சேர்த்து விடுங்கள்...”

     “கொடுப்பது சரி. ஆனால் இனிமேல் அவர் இதை எங்கே அணிவது சிஸ்டர்?” கண்ணீர் மல்க கேட்டாள் சுலட்சணா. நர்ஸுக்கும் கண் கலங்கி விட்டது. போலீஸார் கைது செய்திருக்கும் பேட்டை ரவுடியை அவர்களும் சட்டமும் தண்டிக்கலாம். சில ஆண்டுகளுக்கு சிறையில் வைக்கலாம். ஆனால் அதனால் எல்லாம் வீராசாமிக்குப் போன கை வந்துவிடப் போவதில்லை.

     மூன்றுநாள் கழித்து முதுகுளத்தூரிலிருந்து அவனது பெற்றோர் வந்து கதறிய கதறலைப் பார்த்தபோது சுலட்சணா இரத்தக் கண்ணீர் வடித்தாள். ‘இவன் படித்து வந்து ஆளாகிக் குடும்பத்தைக் கரையேற்றப்போகிறான் என்று கனவு கண்டுகொண்டிருந்த இந்த ஏழைகளின் கதி இனி என்ன? கையில்லாதவன் படித்த பின் என்ன செய்ய முடியும்?’ என்று எண்ணிப்பார்த்தபோது துயரம் நெஞ்சைக் கப்பியது சுலட்சணாவுக்கு.

     அந்த ரவுடியோடு சண்டை போடப்போன தனக்கு ஆதரவாகப் பரிந்து கொண்டு வரப்போய்த்தானே வீராசாமிக்கு இந்தக் கதி நேர்ந்தது? என்றெண்ணி எண்ணி வேதனையில் தவித்தாள் அவள். மாணவர்களுடைய ஒற்றுமைக்குப் பயந்து பல்கலைக்கழக நிர்வாகம் வீராசாமியைத் தொடர்ந்து உடல் ஊனமுற்ற மாணவனாகக் கல்வி பயில அநுமதிக்கும்படி நேர்ந்தது.

     அங்கே துணைவேந்தர் இப்படி விஷயங்களில் கருணை காட்டி வழக்கமே இல்லை. டீனாக இருக்கும் ‘கையாடல்’ வல்லான் பிள்ளையும் பெரிய குடும்பத்துப் பிள்ளைகள், பணக்கார மாணவர்களை விரும்பியே காலந்தள்ளியவர். விவசாயப் பட்டப்படிப்பில் தியரி தவிர வயலில் இறங்கி வேலை செய்யும் பிராக்டிகல் ஒர்க், ஃபீல்டு ஒர்க் எல்லாம் நிறைய இருப்பதால் ஆஸ்பத்திரிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வந்ததும் வீராசாமிக்கு டி. சி. கொடுத்து அனுப்பிவிடுவது என்று முடிவு செய்து வைத்திருந்தார்கள்.

     ‘இன்னும் ஒரே ஒரு வருஷப் படிப்புத்தான் மிச்சமிருந்தது. நடுவே இப்படி ஒரு விபத்து நேர்ந்ததற்காக அவன் படிப்பைத் தொடர விடாமல் செய்வது மனிதாபிமானம் ஆகாது! விதி விலக்கு அளிக்க வேண்டும்’ என்று மாணவர் கவுன்ஸில், உடல் ஊனமுற்றோர் சங்கம் எல்லாம் வற்புறுத்தியதன் காரணமாக வி. சி. வழிக்கு வந்தார்.

     வீராசாமி அதே பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்ந்தான். ஒரு மாதத்திற்குப் பின் ஒருநாள் தற்செயலாக ஒரு மாலை வேளையில் பல்கலைக் கழகப் பூங்காவில் அவனைச் சந்திக்க நேர்ந்தபோது பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டு முடிவில் விடைபெறும்போது, “பை தி வே... உங்க மோதிரம் ஒண்ணு எங்கிட்ட இருக்கு வீராசாமி! ஆஸ்பத்திரியிலே நீங்க அனெஸ்தீஸியாவிலே இருந்தப்போ நர்ஸ் கொடுத்தாங்க” என்று சுலட்சணா அந்தச் செம்பு மோதிரத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

     அவன் அதை வாங்கிக் கொள்ளவில்லை. அவனுக்குக் கண்கள் கலங்கின.

     “இடது கையிலே மோதிரம் போடப்படாதுன்னு எங்கப்பா சொல்வாரு...”⁠

     “...போட்டுக்காட்டி என்ன? சும்மா ஒரு ஞாபகமா வச்சுக்குங்களேன்.”

⁠      “இந்த மோதிரமே ஒரு ஞாபகம்தான்! எட்டயாபுரம் பாரதி நூற்றாண்டு விழாப் பேச்சுப் போட்டிக்குப் போனப்ப அங்கே வாங்கினது இது! எனக்குப் பாரதியார் மேலே கொள்ளைப் பிரியம்.”⁠

     “எனக்கும் கூடத்தான்...”⁠

     “அப்போ நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நெனச்சுக்காம ஏத்துப்பீங்களா மிஸ் சுலட்சணா?”⁠

     “என்ன?... சொல்லுங்க வீராசாமி!”⁠

     “எனக்குத் தான் வலது கையே போயிடிச்சு. மோதிரம் போட விரலே இல்லை. நீங்க இதை என் அன்பளிப்பா உங்க வலது கையிலே போட்டுக்குங்க...”

     அவள் ஏதோ சொல்ல வாயைத் திறந்து, அப்புறம் இரண்டாவது எண்ணமாக அதைச் சொல்ல வேண்டாமென்று எண்ணினாற்போல உதட்டைக் கடித்துக் கொண் டாள். அவன் கெஞ்சினான்.

     “ப்ளீஸ்! மாட்டேன்னுடாதீங்க. இது என் அன்பு வேண்டுகோள்.”

⁠      “ரொம்ப நாளைக்கு முன்னே இதே பூங்காவிலே இதே இடத்திலே இதுமாதிரி ஒரு நண்பன் ப்ரஸண்ட் பண்ணின வைர மோதிரத்தையே ஏலத்துக்கு விட்டு உடல் ஊன முற்றோர் நிதிக்குப் பணம் கொடுத்து உதவினேன்.”

     “இருக்கலாம்! ஆனால் இந்த அன்பளிப்பே உங்களுக்கு உடல் ஊனமுற்ற ஓர் இளைஞனிடமிருந்துதான் வருகிறது மிஸ் சுலட்சணா!”⁠

     “ஐயாம் சாரி! உங்க மனசைப் புண்படுத்திட்டேன் போல இருக்கு...”

⁠      “நோ... நெவர்... நீங்க இதை ஏத்துக்கணும், எனக்காக...”

⁠      “சரி...”

     அவள் மெனமாக அந்தச் செம்பு மோதிரத்தை தன் வலது கை விரலில் அணிந்து கொண்டாள். அது மோதிர விரலில் சேர்ந்தது.

     “இதை நீங்க ஏலத்துக்கு விடமுடியாது... போகாது...”

     “போனாலும் விடமாட்டேன்!”

     “நன்றி... சுலட்சணா"

     “நன்றி எல்லாம் நமக்குள் சொல்லிக்கொள்ளக் கூடாது.”

     “ஏன்?... நாம் ஒருவருக்கொருவர் விசுவாசமற்றவர்களா என்ன?”

     “சில சமயங்களில் சில வார்த்தைகள் அந்நியமானவர்கள் ஒருவருக்கொருவர் உபசாரமாகச் சொல்லிக் கொள்ள மட்டுமே ஏற்பட்டுப் பயன்படுகின்றன. அவற்றை அந்நிய மற்றவர்களும் பயன்படுத்தக் கூடாது.”

     “வெட்டினதுதான் வெட்டினான். இடது கையில் பட்டிருக்கலாம். பாவி... வலது கையில் வெட்டி என் வாழ்வை நாசமாக்கி விட்டான்.”

     “நீங்கள் பாய்ந்து அவனைத் தடுத்தபோது வலது கையால் அந்த ரவுடியைத் தடுத்ததால் வந்த வினை இது. மனிதர்கள் நாகரிகம் அடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இன்னும் மரம் வெட்டுகிற அரிவாளால் மனிதர்களை வெட்டுவதையும், கல்லால் அடிப்பதையும், துச்சாதனன் சபையில் செய்ததைச் சந்தையிலும் கடைத்தெருவிலும் பெண்களுக்குச் செய்வதையும் யாரும் குறைத்துக் கொள்ளவில்லை. சமாதானம், சகவாழ்வு, மனிதனுக்கு மனிதன் விட்டுக் கொடுப்பது எல்லாவற்றையும் பற்றிப் பேசிக் கொண்டே பிலிஸ்டைன்களாக - காட்டுமிராண்டிகளாக - வாழ்கிறோம் நாம்.”

     “சற்றுமுன் இந்த மோதிரத்தை என் கையால் உங்களிடம் எடுத்துக் கொடுக்க முடியாத போதுதான் எனக்கு வலது கை போய்விட்டது என்பதே நினைவு வந்தது சுலட்சணா!”

     “எனக்காகத்தான் வலது கையை இழந்தீர்கள் என்பதால் நானே உங்களது வலது கையாக விளங்குவேன். கவலை வேண்டாம்” என்று தோல் சூம்பிப்போய் மூளியாயிருந்த அவனது வலது கையைக் குனிந்து கண்களில் ஒற்றிக் கொண்டாள் சுலட்சணா. வீராசாமி முழுக்கைச் சட்டை அணிந்திருந்ததால் வலது பக்கக் கைப்பகுதியை மறைத்துக் கொண்டு சட்டையின் கீழ்ப்பகுதி தனியே தொங்கியது.

     சுலட்சணா தனக்குள் நினைத்தாள். ‘புற அழகு என்று வந்து விட்டால் இவனுக்கும் கனகராஜுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள். அவன் நல்ல ரோஜாப்பூ நிறம். இவன் கருப்பு. அவன் சிரித்த முகமாயிருப்பான். இவன் முகத்தில் ஒருவிதமான கடுமை இருக்கிறது. படிப்பில் அவன் புலி. இவன் படிக்கிற படிப்பே வேறு. அக்ரிகல்ச்சர் மாணவனின் படிப்பில் பொருளாதார மாணவனின் திறன்களையோ, நுணுக்கங்களையோ எதிர்பார்க்க முடியாது.’

     ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் வீராசாமியின் ஒரு ப்ளஸ் பாயிண்டும் கனகராஜின் மைனஸ் பாயிண்டும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து பளீரென்று கண்களை உறுத்தின.

     வீராசாமி ரோஷ உணர்ச்சி நிறைந்த ஆண்பிள்ளை. கனகராஜ் ரோஷ உணர்ச்சி கூட மழுங்கிப் போகிற அளவு எல்லையற்ற நாகரிக மெருகு ஏறித் தேய்ந்திருந்தான். பிரச்னைகளைக் கண்டு எதிர் கொள்வதற்குப் பதில் பயந்து விலகி ஓடினான். பஜாரில் கலகம் மூண்டதும் அந்த இடத்தில் நிற்பதற்கே பயந்து ஓடிவிட்டவனுக்கும் - பாதையோடு போய்விடாமல் தேடி வந்து பிரச்னையில் சிக்கிக் கொண்டு இரண்டு பெண்களுக்கு மரியாதை அளித்தவனுக்கும் என்ன வித்தியாசமோ அந்த வித்தியாசம்தான் அவர்களிடையேயும் இருந்தது. வீராசாமி முகம் மலராமல், சிரிக்காமல், மெளனமாக அவளை வென்று முடித்திருந்தான்.



சுலட்சணா காதலிக்கிறாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12