8 பூசிக்கொள்ள மஞ்சளும் அணிந்து கொள்ள வளையல்களும் அனுப்பித் தன்னைக் கேவலப்படுத்திய நாளில் இருந்து கனகராஜ் அவளைச் சந்திக்க முயலவில்லை. விரக்தியும், வேதனையும் அவனை வாட்டின. ஆள் அரை ஆளாக வாட்டம் அடைந்திருந்தான். முகம் பேயறைந்த மாதிரிப் போயிருந்தது. சுலட்சணாவோ வீராசாமியை உற்சாகமாக வைத்துக் கொள்ளக் கருதி மாலை வேளைகளில் அவனோடு உலாவச் செல்வது, அவனைத் திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வது, அவனோடு கடைத் தெருவுக்குப் போவது என்று முனைந்திருந்தாள். இந்த மாறுதலை அனைவருமே பாத்தார்கள். புரிந்து கொண்டார்கள். கனகராஜைத் தவிர வேறு இரண்டு மூன்று சேலத்து மாணவர்களும் அங்கே உதயா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்கள். எல்லாருமே அவ்வப்போது விடுமுறைகளுக்குச் சேர்ந்து ஊருக்குப் போவது, திரும்புவது என்ற முறையில் பழகியிருந்தார்கள். அவர்களில் சுகவனம் என்று ஒரு மருத்துவ மேல்படிப்பான எம்.டி. படிக்கும் மாணவன் கனகராஜுக்குத் தூரத்து உறவினனும்கூட. அவன் அடிக்கடி கனகராஜை சந்திக்க வருவது உண்டு. கனகராஜ், சுகவனம் இருவருமே பல்கலைக்கழக டீன் டல் பிள்ளைக்கு உறவினர்கள். டல் பிள்ளைக்கும் சொந்த ஊர் சேலம்தான். டல்பிள்ளையைக் கலந்து பேசித்தான் கனகராஜின் தந்தை அவனை இந்த ரெசிடென்ஷியல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்திருந்தார். அவ்வப்போது இவர்களைத் தம் அறைக்கோ, காம்பஸுக்குள்ளேயே இருந்த தமது வீட்டுக்கோ அழைத்துப் பேசுவார் டல் பிள்ளை. டீனுக்கும், துணைவேந்தருக்கும் பயந்துதான் கனகராஜ் பல்கலைக்கழக எல்லையில் எதிலுமே கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றான். இயற்கையாகவே அவன் சுபாவமும் பயந்து கூசி ஒதுங்குவதாகவே இருந்தது. தொட்டாற் சுருங்கியாகவே வளர்ந்திருந்தான் அவன். சுலட்சணாவுக்கும் கனகராஜுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்ட பின் ஒரு மாலை வேளையில் மருத்துவ மாணவர் விடுதியிலிருந்து சுகவனம் கனகராஜைப் பார்க்கத் தேடி வந்தான். கனகராஜ் இருந்த நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். இருவருமாகப் பூங்காவுக்குப் புறப்பட்டனர். சுகவனம் பூங்கா என்று ஆரம்பித்ததுமே, “அங்கே வேண்டாம். வேறு எங்கேயாவது போகலாமே” என்று தட்டிக் கழிக்கப் பார்த்தான் அவன். சுகவனம் அவனை விடவில்லை. “சும்மா வாப்பா போகலாம். ரூமிலேயே அடைந்து கிடந்தால் இப்படித்தான் போரடிக்கும். வெளியே இருந்து மற்றவர்கள் தேடி வந்து இங்கே உட்கார விரும்புகிற அளவு பிரமாதமான பொடானிகல் கார்டன்ஸை வைத்துக் கொண்டு நாம் ஏன் வெளியே போகவேண்டும் என்கிறாய்? இங்கேயே உட்கார்ந்து பேசலாம் வா” என்று வற்புறுத்தி அவனைப் பல்கலைக்கழகப் பூங்காவுக்கு அழைத்து வந்து விட்டான். அங்கே பூங்காவுக்குள் நுழைந்த பிறகும் கனகராஜ் யாருக்கோ கூசி ஒதுங்கி ஒளிகிறாற் போல் ‘அந்த மூலையில் உட்காரலாம். இந்த மூலைதான் மறைவாக இருக்கும்’ - என்று ஒதுங்கலான இடங்களாகத் தேடியது சுகவனத்துக்கு வியப்பை அளித்தது. ‘சரி! அவன் போக்கிலேயே விட்டுப் பிடித்து விஷயத்தை வரவழைக்கலாம்’ என்று ஒரு சவுக்குப் பச்சை வேலியை ஒட்டினாற்போல மறைவில் உட்கார்ந்திருந்தார்கள். அந்த வேலியின் மறுபுறமும் யாரோ இருவர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது சுகவனத்துக்குத் தெரிந்தது. யாரென்று தலையை நீட்டி எட்டிப் பார்ப்பது அநாகரிமாக இருக்கும் என்று விட்டு விட்டான். பித்துப் பிடித்ததுபோல் விரக்தியாகத் தென்பட்ட கனகராஜிடம் சுகவனம்தான் முதலில் பேச்சைத் தொடங்கினான்! “ஏண்டா என்னமோ மாதிரி ஆயிட்டே? உடம்பு சரியில்லாம இருந்தியா? ஒரு வாரத்துக்கு முன்னாடி பார்க்கறப்பக் கூட நல்லா இருந்தியே?” “என்னமோ டல்லடிக்குது! மெடிகல் லீவு அப்ளை பண்ணி எழுதிக் குடுத்திட்டுப் பேசாம ஊருக்குப் போயிடலாமான்னு பார்க்கிறேன்.” “படிப்பு என்ன ஆறது? உங்கப்பா கனவு கண்டுக்கிட்டிருக்கிற யூனிவர்சிடி ஃபர்ஸ்ட் ரேங்க் என்ன ஆகிறது?” “இப்போ ஒண்ணுலியுமே இண்ட்டரஸ்ட் இல்லேப்பா...” “ஏன், என்ன ஆச்சு? வாட் இஸ் ராங் வித் யூ கனகராஜ்?” “மனசு சரியில்லே... எதிலியுமே நாட்டம் போகலே. இப்பிடியே இருந்த ஒரு நா அறையிலேயே ‘சூயிஸைட்’ பண்ணிக் கிட்டுக் கிடந்தாலும் கிடப்பேன்...” “...” இதைக் கேட்டு ஒரு நிமிஷம் தயங்கி யோசித்தபின் சிக்கலின் ஏதோ ஒரு நுனி தனக்குள் அகப்பட்டு விட்டவனைப் போலச் சுகவனம் மெல்ல வினவினான். “நீயும் சுலட்சணாவும் இப்பல்லாம் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறதே இல்லையா கனகராஜ்?” “இல்லை! அவளுக்கு என்னைப் பிடிக்காமப் போச்சோ என்னமோ...?” “இஃப் ஐ யாம் நாட் இன்க்யுஸிட்டிவ். ஏ ஸ்டெரெயிட் க்வஸ்ச்சின்...” “என்ன? கேளேன்...” “சுலட்சுணாவும் நீயும் காதலிக்கிறீங்களா?” “நான் காதலிக்கிறேன். அவள் என்னைக் காதலிக்கிறாளா இல்லையா என்பது சந்தேகமாயிருந்தது. இப்போது தீர்மானமாகத் தெரிந்து போயிற்று.” “என்னவென்று...?” “இல்லை என்று தெரிந்துவிட்டது...” “ஏன்? உங்களுக்குள்ளே ஏதாவது மனஸ்தாபமா? எங்கிட்டச் சொல்லலாம்னாச் சொல்லு! என்னாலே சரிப்படுத்தி ராசி பண்ணி வைக்க முடியுமானாப் பண்றேன். பாவம்! உன்னைப் பார்க்கிறதுக்கே இப்போ பரிதாமா இருக்கு கனகராஜ்!” “இல்லைடா சுகவனம்! அது ரொம்பக் கஷ்டமான காரியம். அவ ஒரு சீரியஸ் டைப். இலட்சியம், பொதுத் தொண்டு, சமூகசேவை என்று தேடித் தேடி ரிஸ்க் எடுத்துக் கொண்டு அலைகிற ஒருத்தியால் எப்படி இன்னொருத்தரைக் காதலிக்க முடியும்? காதலிக்கப் போதுமான மென்மையான உள்ளமே அவளுக்கு இல்லைங்கிறது என் அபிப்ராயம்...” “எதிலிருந்து நீ இந்த முடிவுக்கு வந்தாய்? என்ன நடந்தது உங்களுக்குள்?” அவள் கோபமாகப் பூசிக் கொள்ள மஞ்சளும் புனைந்து கொள்ள வளையல்களும் அனுப்பித் தன்னை அவமானப்படுத்தி விட்டதை இன்னொருத்தரிடம் வெளியிடவே கனகராஜுக்குப் பிடிக்கவில்லை. கூச்சமாகவும் வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. வைர மோதிர விஷயத்தை மட்டும் சுகவனத்திடம் விவரித்தான். அந்த மோதிரத்தை உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு நிதிக்காக ஏலம் விட்டுப் பணம் வசூலித்துக் கொடுத்ததையும் சொன்னான். சோஷல் செர்வீஸ் முகாமுக்கும் வீராசாமி சிகிச்சை நிதிக்கும் தான் பணம் நன்கொடை கொடுத்து அவள் அவற்றை மறுத்துத் திருப்பிக் கொடுத்து விட்டதையும் சொன்னான். இவற்றைக் கேட்டுவிட்டு யோசிப்பது போல் மெளனமாக அமர்ந்திருந்தான் சுகவனம். பின்பு அவனிடம் மெல்லச் சொல்லத் தொடங்கினான். “இவ வேற ‘மெட்டல்’லே உருவாயிருக்கிறவ. புகழ்ச்சி. அழகு, பணம், இதுல எல்லாம் சொக்கிப் போய் மயங்கிக் காதலிக்கிற டைப் இல்லை இவ. துணிச்சல், தைரியம், பிறருக்காக உதவ விரைகிற குணம், சமூக உணர்ச்சி, சிவிக் கரேஜ், மைனூட் சிவிக் ஸென்ஸ், டயனமிஸம், சிவிக் ஹானஸ்டி, ஹ்யூமனிஸம், ப்ராக்மேடிஸம், சோஷல் கமிட்மெண்ட், சோஷல் மைண்டெட்னெஸ், சோஷல் கான்ஷியஸ்னெஸ் இதெல்லாம் உள்ள ஒருத்தன்தான் இவளுக்குப் பெரிதாகத் தோன்றுவான். அப்படிப்பட்ட ஒருத்தனத்தான் இவளால் விரும்ப முடியும். நீயோ ஒரு நிச்சயமான ஃபண்டமெண்டலிஸ்ட்! இவள் உன்னை விரும்ப முடியாது.” “நீ சொல்றதெல்லாம். சைக்காலஜி.” “ஆமாம்! ஆனால் சுலட்சணாவைப் பொறுத்து இதுதான் நீ தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. நடைமுறையிலிருந்துதான் சைக்காலஜி பிறந்தது. இப்போ நான் சைக்காலஜியிலிருந்து நடைமுறைக்கு வந்து அதைச் சுலட்சணாவோடு ஒப்பிட்டு உன்க்கு ரிசல்ட் சொல்லுகிறேன்! அவ்வளவுதான்." “எது எப்படியோ? ஓர் ஆட்சேபணையும் சொல்லாமல் அவள் என்னோடு மிகவும் நெருங்கிப் பழகினாள் என்பது மட்டும் உண்மை” “இது நவீன யுகம்! நம்மிடம் கலகலப்பாகப் பழகுகிற பெண்கள் எல்லாம் நம்மைக் காதலிப்பதாக நாம் நினைப்பது தான் பேதைமை. அது நீடித்த உண்மையில்லை. தற்காலிகமான பிரமைதான்.” உடனே இதற்குக் கனகராஜ் பதில் எதுவும் சொல்லவில்லை. மெளனமாகத் தலைகுனிந்து புல் தரையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். ஏறக்குறைய நண்பன் தனக்கு வந்திருக்கும் நோயைச் சரியாக டயகனைஸ் செய்து விட்டான் என்பது அவனுக்கே ஒரளவு புரியத்தான் செய்தது. ஆனாலும் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத்தான் விருப்பமில்லை. கனகராஜின் தளர்ச்சியும், விரக்தியும் சுகவனத்துக்குப் புரிந்தன. அவன் கனகராஜூக்கு ஆறுதல் கூறித் தேற்றினான். “டேக் இட் ஈஸி மை பாய்! இவ இல்லாட்டா இன்னொருத்தி.” “அப்பிடி விட்டுட முடியலேப்பா! இத்தினி நாள் நெருங்கிப் பழகிட்டு இப்பத் திடீர்னு மோசம் பண்ணிட்டா...” “நான் அப்பிடி நினைக்கலே. இத்தனை நாள் உன்னோட கணிப்புத் தான் தவறானது. இத்தனை நாளும் அவ உன்னைக் காதலிக்கிறதாக நீயே நினைக்கலேன்னு நீ சொன்னாலும் அப்பிடி உள்ளுற நினைச்சுக்கிட்டுத்தான் அவஸ்தைப் பட்டிருக்கிறே!” இப்படி நண்பன் சொல்வது உண்மையாக இருந்தாலும் அவன் தன்னிடம் மிகவும் நிர்த்தாட்சண்யமாகப் பேசுவது போல் தோன்றியது கனகராஜுக்கு. நெடுநேரம் பேசியும் விவாதித்தும் சுகவனத்தினால் கனகராஜை முழுமையாக ஆறுதலடையச் செய்ய முடியவில்லை. அவன் விரக்தி யாகவே இருந்தான். நெடுநேரத்திற்குப்பின் கனகராஜூம் அவனும் புறப்படலாம் என எழுந்திருந்தபோது தற்செயலாகச் சவுக்கு வேலியின் மறுபுறம் அமர்ந்திருந்தவர்களும் கூட எழுந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் இவர்கள் இருவருக்கும் ஒரே அதிர்ச்சி. அது வீராசாமியும், சுலட்சணாவும்தான். சுலட்சணாவும் இவர்களைப் பார்த்து விட்டாள். ‘ஹலோ’ என்று கூடச் சொன்னாள், ஆனால் கனகராஜுக்குத்தான் அவளிடம் பேச வாய் வரவில்லை. அதிர்ச்சியிலிருந்து மீளாமலே இருந்து விட்டான். விவசாயப் பட்டப்படிப்புப் படிக்கும் அழகில்லாத. கறுப்பு நிறமுள்ள இந்தப் பையனிடம் சுலட்சணாவுக்கு அப்படி என்னதான் கவர்ச்சி இருக்க முடியும் என்று குமுறிப் புழுங்கியது கனராஜின் உள்ளம். “வலதுகை விரல்கள் போய்க் கையே தெரியாமல் முழுக்கைச் சட்டை மட்டும் தொங்குகிற இந்தக் கருவாயன் மேல் அப்படி என்னதான் கவர்ச்சியோ இவளுக்கு?” “யூ ஆர் டோட்டலி இன்கரெக்ட் கனகராஜ்! இட் இஸ் நாட் எ க்வஸ்ச்சின் ஆஃப் ப்யூட்டி அட்ராக்ஷன் ஆர் எனி சச் திங்... இட் இஸ் எ மேட்டர் ஆஃப் சிவிக் கரேஜ். ஹி ஹாஸ் ஆம்பிள் ஆஃப் தட் குவாலிட்டி...” பூங்காவிலிருந்து இவர்கள் வேறு திசையிலும் அவர்கள் வேறு திசையிலுமாகப் பிரிந்து போய் விட்டார்கள். கனகராஜை அவனுடைய விடுதி முகப்புவரை உடன் கொண்டுவந்து விட்டு ஆறுதலாக மேலும் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுத்தான் போனான் சுகவனம். கனகராஜ் தற்கொலை அது இது என்று பேசியிருந்ததால் எதற்கும் டீன் காதில் எச்சரிக்கையாக ஒரு வார்த்தை போட்டு வைக்க வேண்டுமென்று தோன்றியது சுகவனத்துக்கு. ஏனென்றல் சுகவனத்தின் உள்ளத்தில் வேறு பயம் இருந்தது. பைத்தியக்காரத்தனமாகக் கனகராஜ் ஏதாவது செய்து தொலைத்து விடக் கூடாதே என்பதுதான் அது. டீனை அவர் வீட்டில் சந்தித்து ஜாடை மாடையாகக் கனகராஜ் பற்றித் தெரிவிக்க வேண்டியவற்றைத் தெரிவித்தான். டீனும் கனகராஜின் தந்தையும் நண்பர்கள்; உறவினர்கள் வேறு. டீன் விரும்பினால் கனகராஜின் தந்தையோடு ஃபோனிலேயே பேசி, உங்கள் பையன் ரொம்ப விரக்தியாயிருக்கிறான். அவன் மனநிலை சரியாயிருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ காதல் ஏமாற்றம் அது இது என்று மற்றப் பையன்கள் சொல்லுகிறார்கள். எதற்கும் ஒரு மாறுதலாக இருக்கட்டும். கொஞ்சநாள் வேணுமாணால் அவனை ஊருக்குத் திரும்ப அழைத்து உங்கள் பக்கத் திலேயே தங்க வைத்துக்கொண்டு பாருங்கள்’ - என்று டீனே கனகராஜின் தந்தைக்கு அட்வைஸ் செய்ய விரும்பினாலும் செய்து கொள்ளட்டும் என்றுதான் டீன் டாக்டர் (கை)ஆடல் வல்லான் பிள்ளையைப் பார்த்துப் பேசியிருந்தான் சுகவனம். ஆனால் ஆடல் வல்லான் பிள்ளையின் ரியாக்ஷன் முற்றிலும் வேறு விதமாக இருந்தது. |