12

     கனகராஜ் சேலத்துக்கு வந்து சில மாதங்கள் கழிந்தன. நாட்கள் முடமாகி நொண்டி மெதுவாக நகர்ந்தன, நடந்தன. அவன் மனநிலை தேறவேண்டும் என்று அவனுடைய தந்தை தம்மால் முடிந்த விதங்களில் எல்லாம் முயன்று செலவழித்து என்னென்னவோ உற்சாகப்படுத்திப் பார்த்தார். உதயா பல்கலைக் கழகத்திலிருந்து டாக்டர் சுகவனம் எழுதியிருந்த ஓர் இரகசியக் கடிதம் கனகராஜின் தந்தையை எச்சரித்திருந்தது. ஓரளவு பயமுறுத்தவும் செய்திருந்தது.

     ‘எக்காரணம் கொண்டும் அவனைக் கவனிக்காமல் தனியே விட்டு விடாதீர்கள்! சுலட்சணா விஷயத்தில் அவன் கடுமையாக ஏமாந்து போயிருக்கிறான். என்னிடம் அவன் வாயாலேயே ‘தற்கொலை அது இது’ என்று இரண்டு மூன்று முறை விரக்தியாக உளறியிருக்கிறான். இங்கிருந்து புறப்படுகிற சமயத்தில் டீனிடம் அவன் பேசியதிலிருந்தும், என்னிடம் நடந்து கொண்டதிலிருந்தும் மிக மிகச் சோர்ந்து தளர்ந்த நிலையிலிருந்தான் அவன். இங்கிருந்தோ, வேறு எங்கிருந்தோ சேலம் முகவரிக்குக் கனகராஜ் பெயருக்கு எந்தத் தபால் வந்தாலும் நேரே அவனிடம் கொடுத்து விட வேண்டாம். நீங்கள் பார்த்து சென்ஸார் செய்து அவசியமானால் மட்டும் கொடுக்கவும். ஏற்காடு, பெங்களுர், என்று கனகராஜை எங்கும் தனியாக அனுப்ப வேண்டாம் - மிக மிக ஜாக்கிரதை யாயிருக்கவும்! தனிமை அவனைத் தற்கொலைக்குத் தூண்டக் கூடும்.’

     பல்கலைக் கழகத்திலிருந்து கனகராஜ் சேலத்திற்கு வந்து சேர்ந்த இரண்டு நாளைக்குள் அவன் தந்தை பெயருக்கு ஸ்டிரிக்ட்லி பிரைவைட் அண்ட் கான்ஃபிடென்ஷியல் என்ற குறிப்புடன் சுகவனத்திடம் இருந்து இந்தக் கடிதம் வந்து சேர்ந்திருந்தது. டீன் கூடத் தனியாக இதே எச்சரிக்கையைச் செய்து டெலிஃபோனில் கனகராஜின் தந்தையோடு பேசியிருந்தார். கடுமையாக எச்சரித்தும் இருந்தார்.

     கனகராஜின் தந்தை தர்மராஜ் தமது பணத்திற்கும் செல்வாக்கிற்கும் புகழுக்கும் இது ஒரு சவால் என்று நினைத்தார். ‘அப்படி இவனைப் பைத்தியமாக அடித்த பெண் யார் தான்’ என்று பார்த்துவிட விரும்பினார் அவர். டீன் பிள்ளையுடனும் சுகவனத்துடனும் ஃபோனிலேயே தமது வியப்பைத் தெரிவித்தார்.

     “பையனோட படிப்பு, மூளை எதிர்காலம் எல்லாத்தையுமே இப்போ இப்பிடிப் பாழாக்கிட்டாளேப்பா. அப்படி என்னப்பா ரம்பையா திலோத்தமையா? நம்ம பையனைப் போல ராஜாவாட்டம் ஒரு பையனைக் கசக்குதா அவளுக்கு? அவனுக்கென்ன குறை? அழகில்லையா? பணமில்லையா? படிப்பில்லையா?”

     “எல்லாம் இருக்கலாம்! ஆனா அதெல்லாம் அந்த சுலட்சணாவுக்குப் போதுமானதா இல்லியே? அதை எல்லாம் அவ பொருட்படுத்தலியே?”

     “அப்பிடி அவளென்ன பெரிய கொம்பனுக்குப் பிறந்தவளா? யாருப்பா அந்தப் பொண்ணு?”

     “சுலட்சணா, மெட்ராஸ்லே சின்னச்சாமின்னு ஒரு பெரிய டிரேட் யூனியன் லீடரோட மகள்.”

     “அவனைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அப்பிடி ஒண்ணும் காசு பணமுள்ள ஆள் இல்லியே அவன்? ரொம்ப முரண்டுக்காரன். இன்னும் தொழிலாளிகளோட தொழிலாளியாக் குடிசையிலியே தானே இருக்கான் அந்த ஆளு? அவளோட மகள்தானா இந்த முரண்டு பிடிச்ச பொண்ணு?”

     “அவ அப்பனைப் போலவே மகளும் முரண்டு பிடிச்சவ. ஆனால் நல்ல அழகி. கொள்கையிலே பிடிவாதக்காரி.”

     “கனகராஜ் தாயில்லாப் பிள்ளை. அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா எனக்கு வாரிசே இல்லைங்கிறது உனக்குத் தெரியாததில்லே சுகவனம்! அவளோட நன்மைக்காகவாவது நான் அந்த பெண்ணை வசப்படுத்திச் சம்மதிக்கவச்சு இந்தக் குடும்பம்கிற வண்டியிலே கொண்டாந்து பூட்டியாகனும்ப்பா...”

     “அதிலே எனக்கு நம்பிக்கையில்லை. நேரே மெட்ராஸ் போயி இவ அப்பன்காரன் கிட்ட வேணும்னாப் பேசிப் பாருங்க. இவ கிட்டப் பேசிப் பிரயோசனமில்லை. இவ உங்க பேச்சுக்கு இணங்கி வசப்படறது கஷ்டம்.”

     “சடார்னு அப்பிடிச் சொல்லி முடிச்சுடாதே சுகவனம். ஒவ்வொருத்தருக்கும் ஒரு விலை இருக்கும். அதைத் தெரிஞ்சுக்கிட்டா அந்த விலையைக் குடுத்து அவங்களை வாங்கிடலாம்.”

     “சுலட்சணாவுக்கு வேண்டிய விலை ரொம்பப் பெரிசு. அது உங்க ஸன் கிட்ட இல்லேன்னு அவளே முடிவு பண்ணியாச்சு.”

     “அதென்னப்பா அப்பிடி அபூர்வமான விலை? நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?”

     “தெரிஞ்சுக்கலாம். ஆனா உங்களுக்குப் புரியறது சிரமம். கொஞ்சம் நுணுக்கமான விலை அது.”

     “உலகத்திலே உள்ள விலைதானே?”

     “உள்ளதுதான்! ஆனாக் கனகராஜாலே மட்டுமே குடுக்க முடிஞ்ச விலை. துரதிஷ்டவசமா அவங்கிட்ட அது இல்லை. அவனுக்காக நீங்க தர முடியாதது அது...”

     “என்னப்பா புதிர் போடறே?”

     “புதிர் இல்லே. இது உண்மை. ‘சிவிக் கரேஜ்’னு ஒரு இங்கிலீஷ் வார்த்தை இருக்கே...?”

     “ஆமாம் அதுக்கென்ன வந்தது இப்போ?”

     “அதாவது சமூகத் துணிச்சல் - பொதுக்காரியங்களிலே தைரியம்...”

     “சரிதான் மேலே சொல்லு.”

     “அது உள்ள ஓர் ஆம்பிளையைத்தான் எனக்குப் பிடிக்கும்கிறா அவ....”

     “அப்போ எவனாவது விட்டேத்தியாத் தெருவிலே அலையிற காலிப்பயல்தான் கிடைப்பான் அவளுக்கு.”

     “நீங்க கோபமாப் பேசறீங்க! பொறுமையா மெட்றாஸ்லே அவ அப்பாவைப் போய்ப் பார்த்துக் கலந்து பேசுங்களேன். அதுலே என்ன தப்பு!”

     “யூனிவர்ஸிடியிலிருந்து சேலம் வந்த நாளிலேயிருந்து இங்கே இவன் என்னமோ பறிகுடுத்தவன் மாதிரியிருக்கானே சுகவனம்?”

     “அதுவும் எனக்குப் பிடிக்கலே? விட்டுப் பிடிடா. ‘இந்த சுலட்சணா இல்லாட்டா இன்னொரு விலட்சணா’ என்று எவ்வளவோ அவன் கிட்டச் சொல்லிப் பார்த்தாச்சு. இருந்தும் அவன் மனசைத் தேத்திக்கல. இன்னும் அவளுக்காகத்தான் உருகறான்! அவளை நினைச்சுத் தான் உயிரை விடறான்.”

     “சரி! இந்த மேட்டரை இனிமேல் எங்கிட்ட விட்டுடு! ஐ வில் டாக் டு ஹெர் ஃபாதர். இன்னிக்கே மெட்ராஸ் போறேன்” என்று டெலிபோன் உரையாடலை முடித்தார், கனகராஜின் தந்தை தர்மராஜன். எப்படியும் ஒரு கை பார்த்துவிடுவதென்ற உறுதி வந்திருந்தது அவருக்கு.

     அவர் உடனே சொன்னபடியே செய்தார். சென்னைக்குச் சென்றார். தேடி அலைந்து சுலட்சணாவின் தந்தையைக் கண்டு பிடித்துச் சந்தித்தார். தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டு எல்லா விவரமும் சொல்லி நிலைமையை விளக்கினார். பொறுமையாகச் சகலத்தையும் கேட்டுக் கொண்ட சுலட்சணாவின் தந்தை தோழர் சின்னச்சாமி சுருக்கமாக ஆனால் தீர்மானமான தன் பதிலைக் கூறினார்.

     “சின்ன வயசிலிருந்தே நான் அவளை ‘இதை இப்படிச் செய்; அதை அப்படிச் செய்யாதே’ - என்றெல்லாம் உத்தரவு போட்டோ, அதட்டியோ வளர்க்கலே. அவள் என் இஷ்டப்படி வளர்ந்தாள் என்பதை விடத் தன் இஷ்டப்படி வளர்ந்தாள் என்பதே சரி! பெண்ணுரிமை, பெண் விடுதலைன்னு பேசறதோட விட்டுவிடாமல் அவளுக்கு இந்தச் சுதந்திரத்தை எல்லாம் நான் உண்மையிலேயே கொடுத்தேன்.”

     “ஆனாலும் இப்போ அவள் நீங்க சொல்றதைக் கேட்பாள்னே எனக்குத் தோன்றுகிறது.”

     “இந்த விஷயத்தில் அவள் சொல்வதை நான் கேட்கத் தயாராயிருக்கிறேன். உங்கள் மகனை அவளுக்குப் பிடித்து அவள் சரி என்றால் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். உங்கள் மகனும் அவளைக் காதலித்து அவளும் உங்கள் மகனைக் காதலித்தால் எனக்கு ஆட்சேபனையேயில்லை. இது அவள் வாழ்க்கை. அவள் தீர்மானப்படி நடக்கும். என் விருப்பம்னு எதையும் அவள் மேல் நான் திணிக்கமாட்டேன். நீங்கள் உதயா பல்கலைக்கழகத்திற்குப் போய்ச் சுலட்சணாவையே பார்த்துப் பேசுங்களேன்.”

     திட்டவட்டமான இந்தப் பதிலைக் கேட்டு வேறு வழியின்றி அவரிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டு, உதயா பல்கலைக்கழகத்துக்குப் புறப்பட்டார் தர்மராஜ்.

     தனக்கு வேண்டியவரும், உறவினருமான டீன் வீட்டில் இருந்து கொண்டு டீன் மூலமே சுலட்சணாவைக் கூப்பிட்டனுப்பினார் அவர். டீனிடம் தர்மராஜன் ஆதங்கப்பட்டார்:

     “இந்த விஷயம் இவ்வளவு பெரிசாக ஆகும்னே நான் நினைக்கலே, இந்தப் பொண்னைச் சம்மதிக்க வைக்கலேன்னா என் ‘ஸ்ன்’னோட ஃப்யூச்சரே போயிடும் போலிருக்கு...”

     “கொஞ்சம் ஹார்டு நட். இவ வழிக்கு வர மாட்டாள்னு நினைக்கிறேன். ‘உன் பணத்துக்கும் குணத்துக்கும் அழகுக்கும் ஆயிரம் பொண்கள் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்கடா. இவளை மறந்து தொலை’ன்னு நானே கனகராஜுக்கு இங்கே அட்வைஸ் பண்ணினேன். அவன் கேட்கலே...”

     “இதில் அவன் ஏறக்குறைய மெண்டல் ஆயிட்டான்னே சொல்லலாம்.”

     வீராசாமியோடு சுலட்சணா டீன் வீட்டுக்கு வந்தாள். அவர்கள் இருவரும் இப்படித் தன்னைக் கூப்பிட்டனுப்பியது அவளுக்கு அறவே பிடிக்கவில்லை என்று அவள் வந்த தோரணையிலேயே தெரிந்தது. டீனின் மிரட்டலான பாணியை அவள் வெறுத்தாள்.

     பல்கலைக்கழக டீன் தர்மராஜைக் ‘கனகராஜின் தந்தை’ என்று அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

     “என் குடும்பத்தின் எதிர்காலம் உன் கையிலேதான் இருக்கும்மா... நீ கொஞ்சம் பெரிய மனசு பண்ணி...”

     “ரொம்ப ஸெண்டிமெண்டலாப் பேசறீங்க, விஷயத்தை அறிவு பூர்வமாக் காரண காரியத்தோட நீங்க சிந்திக்கணும். வெறும் உணர்ச்சி பயன்படாது.”

     “மெட்ராஸ் போய் உங்கப்பாவைக் கூடப் பார்த்தேன். அவர்தான் உன்னைப் பார்த்துப் பேசச் சொன்னார்.”

     “அவரை எதுக்காகப் போய்ப் பார்த்தீங்க...?”

     முடிந்தவரை விவரமாகத் தர்மராஜூம், டீனும் அவளுக்கு விவரித்தார்கள். அவளால் கைவிடப் பட்ட கனகராஜின் பரிதாப நிலைமையையும் எடுத்துச் சொன்னார்கள். அவள் எந்த உணர்ச்சியையும் காண்பிக்காமல் அதை எல்லாம் பொறுமையாகக் கேட்டாள்.

     சுலட்சணா அதுவரை வெளியே உட்கார்த்திவிட்டு வந்திருந்த வீராசாமியைப் போய் அழைத்து வந்தாள். அவர்களுக்கு அவனை அறிமுகப்படுத்தினாள். தன் வலது கையை உயர்த்திக் காட்டி, “இவர் என்னைக் காதலிப்பதற்கும் நான் இவரைக் காதலிப்பதற்கும் அடையாளமாக ‘எங்கேஜ்மெண்ட்’ ரிங் கூடப் போட்டுக் கொண்டிருக்கேன். செப்பு மோதிரம்தான். இதை விரலில் அணிய உங்க ஸன் ஒரு வைர மோதிரமே கொண்டு வந்து தந்தார். அதை நான் விரல்லே போட்டுக்கலே. உடல் ஊனமுற்றோர் நிதிக்காக ஏலம்விட்டுப் பணம் திரட்டிக் குடுத்துட்டேன். ஐஃபீல் வெரி ஸாரி... நீங்க என்னை மன்னிக்கணும்.நான் உங்க ஸன்னைக் காதலிக்கலே. காதலிக்கிறது - உடம்பின் அழகு, பண வசதி, இதை எல்லாம் பொறுத்தது என்று நான் நம்பவும் இல்லை. நான் எதிர்பார்க்கிற சில குணங்கள் யாரிட்ட இருக்கோ அவங்களிலே ஒருத்தரைத்தான் என் மனசு விரும்பும். அந்தக் குணங்கள் இவரிட்ட இருக்கு. இவரை நான் காதலிக்கிறேன்” என்றாள்.

     “இதிலே மறுபரிசீலனை எதாவது உண்டாமா?”

     “இல்லை. நிச்சயமாக இல்லை. இப்படி விஷயங்கள் மறுபரிசீலனைக்கு உரியவை அல்ல” - என்று தீர்மானமான பதிலைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் அவள். ஒரு கை - அதாவது வலது கை நுனிக்குப் பதில் சட்டைத் துணி மட்டுமே தொங்கும் முகமலர்ச்சியற்ற அந்தக் கறுப்பு இளைஞனைப் பொறாமையும் அசூயையும் பொங்கும் பார்வையால் பார்த்தார் தர்மராஜ். நினைத்ததை அடையும் வாய்ப்பைத் தாம் இழந்தாயிற்று என்ற நஷ்டம் அவருள் உறைத்துப் புரியத் தொடங்கியது. வெறும் முக அழகை - பணத்தை - பதவிகளை-அவற்றால் வரும் பவிஷுகள் - செல்வாக்குகள் இவற்றைத் தவிர வேறு எதையுமே பெரிதாக மதித்திராத அந்தப் பரம்பரைப் பணக்காரர் தம் வாழ்வில் முதல் முதலாகக் ‘கொள்கைகளும் வீரமுமே அவற்றை எல்லாம் விடப் பெரியவை - மதிக்கத் தக்கவை’ என்று பிடிவாதமாகக் கூறிக் கொள்கைகளையும் சமூகத் துணிச்சலையுமே காதலிக்கும் அதிரூபவதியான இளம் பெண் ஒருத்தியைக் கண்ணெதிரே கண்டு அயர்ந்து போனார். இப்போது சுலட்சணா அவர் பார்வையில் இரட்டை மடங்கு அழகியாய்த் தோன்றினாள். அவள் உடம்பை விட உள்ளம் அதிக அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது மறுபடியும் அவருக்கு உறுதியாகத் தெரிந்தது.

முற்றும்



சுலட்சணா காதலிக்கிறாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12