![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
2 உதயா பல்கலைக் கழகம் ஒரு ‘ரெஸிடென்ஷியல் யூனிவர்ஸிடி.’ போஸ்ட் கிராஜுவேட் ஸ்டடீஸ், எம். ஃபில்., பி எச் டி. தவிர மற்றவற்றை அங்கே சேர்ந்துதான் படித்தாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இல்லாமல், ஓபன் யூனிவர்ஸிடி திட்டத்தின் கீழோ, தபால் முறைக் கல்வி மூலமோ படிக்கலாம். அதனால் பல்கலைக் கழக எல்லையில் பரபரப்புக் குறைவு. மருத்துவப் பட்டப்படிப்புப் படிக்கும் எண்பது பேர், எஞ்சினியரிங் வகையில் ஒரு நூற்றைம்பது, விவசாயப் பாடத்தில் மேற்பட்டத்துக்கான நூறு பேர், ஆர்ட்ஸ், சயின்ஸ் வகையில் ஏறத்தாழ இருநூறு என்று தங்கிப்படிக்கும் மொத்த மாணவர் எண்ணிக்கையே ஐநூறு அல்லது அறுநூறைத் தாண்டாது. மொத்தம் ஐந்து ஹாஸ்டல்கள். எண்ணூறு ஏகர் நிலப்பரப்பில் ஒரு பெரிய காம்பஸ். தென்னை, மா, பலா என்று ஒரே சோலை மயமாக இருந்தாலும், சில பகுதிகள் உள்ளேயே வெட்டவெளியாகவும் இருந்தன. காம்பஸுக்குள் இரண்டு மூன்று கண்மாய்களும், ஏரிகளும் தற்செயலாகச் சிக்கி இருந்தன. ஏரிகள் கண்மாய்களை ஒட்டிய பகுதி பசுஞ்சோலையாகவும், மற்ற இடங்கள் பொட்டலாகவும் இருக்கும். பல்கலைக் கழகங்களுக்குரிய போராட்டங்கள், பிணக்குகள், பூசல்களைத் தவிர்ப்பதற்காகவே காம்பஸுக்குள் ஐநூறு அறுநூறு மாணவர்களுக்கு மேல் தங்காதபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் கோ-எஜுகேஷன் இருந்ததாலும், வேறு சில பிரச்னைகள் அவ்வப்போது கிளம்பியதாலும், சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படத்தான் செய்தன. கலைப்பிரிவு மாணவர்களுக்கும் சயின்ஸ் பிரிவு மாணவர்களுக்கும் தகறாறு. விவசாயப் பிரிவு மாணவர்களுக்கும் பொறியியல் பிரிவு மாணவர்களுக்கும் போர், மருத்துவப் பிரிவு மாணவர்களுக்கும் பல்கலைக் கழகத்தின் நிர்வாகிகளுக்கும் போர் என்றெல்லாம் பூசல்கள் அவ்வப்போது வெடிக்கத்தான் செய்தன. காம்பஸுக்கு உட்பட்ட பிரச்னைகள் காரணமாக சில சமயங்களிலும், காம்பஸுக்கு வெளியே உண்டாகும் மாநில அளவிலான பிரச்னைகள் காரணமாகச் சில சமயங்களிலும், மாணவர்களிடையேயும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள் கிளம்பின. இன்றைய மாணவன் என்பவன் - அதாவது இருபத்து ஒன்றாவது நூற்றாண்டுக்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகக் காத்திருக்கும் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவன் தன்னைச் சுற்றி நிகழும் தேசிய சர்வதேசியப் பிரச்னைகளைக் கவனிக்காமலும் அவை பற்றிக் கவலைப்படாமலும் புத்தகங்களிலோ, வகுப்பறைகளிலோ மட்டுமே தன்னைப் புதைத்துக் கொண்டு பாராமுகமாக இருந்துவிட முடியாது. அவன் பிரச்னைகளைப் பாரா முகமாக இருப்பதும் சாத்தியமில்லே. பிரச்னைகள் அவனைப் பாராமுகமாக விட்டு விடுவதும் சாத்தியமில்லை. எல்லார் மேலுமாகப் படுகிற காற்றில், மழையில், வெயிலில், பனியில் அவனும் பாதிக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும். இன்றைய சமூக அரசியல் பிரச்னைகள் மழையையும் காற்றையும் போலத்தான். அவை சிலரை நீக்கிவிட்டுப் பெய்வதோ, விலக்கிவிட்டு வீசுவதோ நிச்சயமாக இயலாத காரியம். எவ்வளவோ திறமாகவும், தரமாகவும் சாமர்த்தியமாகவும் நிர்வகிக்கப்பட்டு வந்த உதயா பல்கலைக்கழகமும் அந்தத் தலைமுறையின் பிரச்னைகளான காற்று மழைகளுக்குத் தப்ப முடியவில்லை. வெளிப் பிரச்னைகளான காற்றும் மழையும் தவிர மாணவிகள் படித்து வந்ததனால் காதல் பிரச்னைகளாலும் சிறு சிறு தகராறுகள் அவ்வப்போது மூண்டன. மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிகள் இருந்த பகுதிக்கும் மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதிகள் இருந்த பகுதிக்கும் நடுவே இரண்டு கிலோ மீட்டர் தொலைவு காம்பஸுக்குள்ளேயே இருந்தது. மாணவிகள் விடுதிகள் இருந்த பகுதியைச் சுற்றித் தற்செயலாக அகழி போல் ஒரு பெரிய வாய்க்கால் - அதன்பின் பெரிய காம்பவுண்டு மதிற் சுவர் - இரண்டரைக் கிலோ மீட்டர் தொலைவு, இத்தனையும் இருந்தும் காதல்களும் அவை பற்றிய போட்டிகள் பூசல்களும் இருக்கவே செய்தன. அவை தொடர்பான பிரச்னைகளும் எழுந்தன. இத்தனைக்கும் பெண்கள் விடுதிகள் சம்பந்தப்பட்ட வார்டன், வாட்ச்மேன், உணவுவிடுதியில் சமைப்பவர், பரிமாறுபவர் உட்பட அனைவரும் பெண்களாகவே நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் என்ன? வகுப்புக்களில், நூல் நிலையங்களில், லேபரெட்டரி முதலிய ஆராய்ச்சிச் சாலைகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து பழகத்தானே வேண்டியிருந்தது? ஆண்களும், பெண்களும் நெருங்கிப் பழகி அதனால் வம்புகள் வருவதை நான்கு இடங்களில் தடுத்தார்கள் என்றால் நாற்பது இடங்களில் அப்படிப் பழகுவது தவிர்க்கப் பட முடியாமல் இருந்தது. அங்கெல்லாம் காதல்கள், ஆசைகள், ஒருதலைக் காதல்கள், இருவர் பிரியத்தை எதிர்க்கும் மூன்றாமவரது அசூயை எல்லாம் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாமல் போயிற்று. மாணவர்களும் மாணவிகளும் சந்தித்துப் பழகுமிடங்களில் மிகவும் முக்கியமானதாக ‘வசந்த மண்டபம்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ‘போஸ்ட் கிராஜுவேட்ஸ் லைப்ரரி’ விளங்கியது. இந்த நூல் நிலையத்தில் ஒரு விரோதமான சூழ்நிலையில் கனகராஜூம், சுலட்சணாவும் சந்தித்துக் கொண்டாலும் பின்பு மெல்ல மெல்ல அந்த விரோதம் மாறி நட்பாகியது. திடீரென்று தன் தாய்க்கு உடல்நிலை மோசமாகி விட்டது என்று ஊர் சென்ற கனகராஜ் தாயை இழந்து பதினைந்து நாட்களுக்குப் பின் தான் மறுபடி பல்கலைக்கழகம் திரும்பினன். மொட்டைத் தலையும் அதை மறைக்கும் ஃபர் குல்லாயும், சோகம் தேங்கிய முகமுமாகத் திரும்பியவனைச் சுலட்சணா தானே தேடிச் சென்று சந்தித்து அவன் தாய் இறந்தது பற்றித் துக்கம் விசாரித்துத் தன் அநுதாபங்களைத் தெரிவித்தாள். ஊருக்குப் போவதற்குமுன் அவன் ஞாபகமாகப் புத்தகத்தைத் தனக்குக் கொடுத்து அனுப்பியதைப் பாராட்டினாள் . தனக்கு அதனால் பேராசிரியரிடம் நல்ல பெயரும் இன்டேர்னல் அஸெஸ்மென்டில் மதிப்பெண்களும் கிடைத்ததை நன்றியுணர்வோடு அவனிடம் சொன்னாள். அதன் பின் நூல் நிலையத்திலும் பல்கலைக் கழகப் பொடானிகல் கார்டனாக விளங்கிய பூங்காவிலும் அவர்கள் தொடர்ந்து சந்தித்தார்கள். பேசினார்கள், பழகினார்கள். பாடம், வகுப்பு, அகடெமிக் விஷயங்கள் பற்றியும், திரைப் படம், அரசியல், இலக்கியம், பத்திரிகைகள் எல்லாம் பற்றியும் பேசினார்கள், விவாதித்தார்கள். சில கருத்துக்களில் ஒன்றுபட்டார்கள். பலவற்றில் வேறுபட்டார்கள். சிலவற்றில் இருவர் இலக்குகளும் வேறு வேறு திசையாயிருந்தன. கனகராஜூம் அவளும் நெருங்கிப் பழகினாலும் அவர்களிடையே அடிப்படை வேறுபாடுகள் நிறைய இருந்தன. கனகராஜ் எல்லாவற்றிலும் ஒரு ஃபண்டமெண்டலிஸ்ட் ஆக இருந்தான். பயந்து பயந்து பழகினான். ‘ஜட்காவில்’ பூட்டிய குதிரைபோல் கண்களுக்கு மூடியிட்டுக் கொண்டு பாடம் - படிப்பு - மார்க்குகள் - டிஸ்டிங்ஷன் என்று ஒரே திசையில் மட்டும் பார்க்கப் பழகியிருந்தான். கவலை தெரியாமல் வளர்க்கப்பட்ட ‘சுயநலத்தில் அக்கறையும் பற்றுமுள்ள’ சராசரியான பணக்காரக் குடும்பத்து இளைஞனாக இருந்தான். அவனுடைய பயங்களையும் அறியாமைகளையும் பார்க்கும்போது சில வேளைகளில் சுலட்சணாவுக்குச் சிரிப்புக்கூட வரும். ஒரு முறை அவள் நூலகத்தில் ‘மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும்’ பற்றிய விமர்சன நூல் ஒன்றைப் படிக்க எடுத்தபோது, “நீங்க கம்யூனிஸ்டா?” என்று பயந்து கொண்டே தணிந்த குரலில் அவளைக் கேட்டான் கனகராஜ். “மார்க்ஸையும் அவரது நண்பர்களையும் பற்றி ஆழ்ந்த அக்கறையோடு படிப்பதற்கு ஒவ்வொரு பொருளாதார மாணவனும் கடமைப்பட்டிருக்கிறான்” என்றாள் அவள். அதற்கு அவன் சொன்ன பதில் இன்னும் விநோதமாயிருந்தது. “இதையெல்லாம் படிப்பது நம்ம புரொபஸருக்குப் பிடிக்காது.” “புரொபஸருக்குப் பிடிக்காத பல நல்ல விஷயங்கள் இருக்கலாம். அவை நமக்கும் பிடிக்காமல் போக வேண்டுமென்ற அவசியமில்லை மிஸ்டர் கனகராஜ்!” “எங்கப்பாவுக்கும் இதெல்லாம் பிடிக்காது. பாடத்தை மட்டும் படி! கண்டதைத் தொடாதே என்பார்.” “ஒருதலைப்பட்சமான ஞானம் என்பது ஃபாஸிஸத்தை விட மோசமானது. நமக்கு உடன்பாடில்லாதது நல்லதாயிருந்தாலும் அதைப் பார்க்கவே மாட்டேன் என்பது கோழைத் தனம்.” “ஞானத்துக்காக நாம் யூனிவர்சிடிக்குள்ளே வரலே. ஃபர்ஸ்ட் கிளாஸ்லே டிஸ்டிங்ஷனோட பாஸ் பண்ணி நல்ல ஸ்டுடன்டுன்னு பேர் வாங்கி முன்னேறுவதற்காகத்தான் வந்திருக்கோம்.” “நீங்க இப்பிடிச் சொல்றதைக் கேட்டு உங்களுக்காக அநுதாபப்படறேன் மிஸ்டர் கனகராஜ். எம். ஏ. படிக்கிற கிணற்றுத் தவளைகளும் நம்ம நாட்டிலே இருக்காங்கன்னு தெரியறப்ப ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு.” “கிணறுதான் தவளைக்குப் பாதுகாப்பான இடம். கிணறுகளில் இருக்கிறவரை சுகம்தான். கிணறுகளை விட்டு வெளியே வந்து உயிரிழக்கும் ஆபத்துகளைச் சந்திக்க நேர்வதைவிடக் கிணறுகளே பாதுகாப்பானவை.” “தவளைகளுக்கு அது சரியாகக்கூட இருக்கலாம். மனிதர்களுக்குப் பொருந்தி வராது. ஆபத்துக்களைச் சந்திக்கவும், எதிர் கொள்ளவும், போராடவும், வெற்றி பெறவும் மனிதர்கள் தயாராயிருக்க வேண்டும். அந்தத் துணிவுதான் மானுட இலட்சணம்.” “நன்றாகப் பேசுகிறீர்கள் மிஸ் சுலட்சணா! நீங்கள் பொருளாதாரத்துக்குப் பதில் எம். ஏ. பிலாஸபி எடுத்துக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு பிலாஸபி நன்றாகப் பேச வருகிறது.” இதைச் சொல்லிவிட்டு தன் அரும்பு மீசையின் கீழே ஒழுங்கான வரிசையான அழகான வெண்பற்கள் தெரியச் சிரித்தான் கனகராஜ். அசப்பில் சராசரி சினிமாக் கதாநாயகன் போலிருந்த அவனிடம் அழகு இருந்தது. படிப்பு இருந்தது. பணம் இருந்தது. ஆனால் சிந்தனை இல்லை. துணிச்சல் இல்லை. ரிஸ்க் எடுத்துக் கொள்ள முன்வரும் எந்த மனோதிடமும் இல்லை. இந்நாட்டின் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பணக்காரக் குடும்பங்களில் வாயில் வெள்ளி ஸ்பூனுடனே பிறந்த பல செலூலாய்ட் இளைஞர்களைப் போல் தான் கனகராஜூம் இருந்தான். அவனிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பது அவளுக்குத் தெரிந்ததைவிட என்னென்ன தகுதிகள் இல்லை என்பதே முதலில் தெரிந்தன. அவன் பிறந்து வளர்ந்த பரம்பரைப் பணக்காரக் குடும்பமும், வளர்க்கப்பட்ட சூழ்நிலையுமே அதற்குக் காரணமாயிருக்கலாம். சிலவற்றை நினைக்கவே பயப்படும்படி வளர்ந்திருந்தான். ஆனால் சுலட்சணா நேர்மாறான சூழ்நிலையில் வளர்ந்து உருவானவள். அவள் தந்தை ஒரு டிரேட்யூனியன் லீடர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளுக்காகவும் தொழிற்சங்கங்களின் உரிமைகளுக்காகவும் போராடி வருபவர். தொழிலாளர் வழக்குகளுக்காக லேபர் கோர்ட் படிகளில் ஏறி ஏறிக் கால்கள் தேய்ந்தவர். ஆவடி, அம்பத்தூர் வட்டாரங்களில் இருந்த பல தொழிற்சாலைகளில் அவரது தொழிற்சங்கம்தான் பெரிய சக்தியாக விளங்கியது. மகளை பி. ஏ. வரை சென்னையில் படிக்க வைத்திருந்த அவள் தந்தை மேற்படிப்பு வெளியூரில் விலகி இருந்து படிக்கட்டும்; புதிய சூழ்நிலைகளைத் தனியே எதிர்கொள்ளக் கற்கட்டும் என்றுதான் அவளை உதயா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பியிருந்தார். பெண்ணுரிமை இயக்கத்திலும் பெண்விடுதலையிலும் அதிக நம்பிக்கையுள்ள அவர் சிறுவயதிலிருந்து சுலட்சணாவை எதற்கும் கட்டுப்படுத்தியதில்லை. கண்டித்ததில்லை, அடக்கி வைத்ததில்லை. ஒடுக்கி வைத்ததுமில்லை. அவருடைய போராட்டங்கள் நிறைந்த வாழ்வை அருகிலிருந்து ஒவ்வொரு நிமிஷமும் பார்த்ததால் பிரச்னைகளை எதிர் கொள்ளும் அச்சம் அவளுக்கு எதிலுமே ஏற்பட்டதில்லை. ‘நைட் ஷிப்ட்’ வேலைக்குப் போன தொழிலாளியைக் கைக் கூலிகள் அடித்துப் போட இரத்தக் காயத்தோடு தூக்கிக் கொண்டு சக தொழிலாளர்கள் தலைவர் வீட்டைத் தேடி வருவார்கள். முகம் சுளிக்காமல் எழுந்து முதலுதவி செய்து அவர்களோடு ஆஸ்பத்திரிக்கும், போலீஸ் நிலையத்திற்கும் அலைவார் அவள் தந்தை. தொழிலாளிகள் விஷயமாகச் சலிப்போ, தளர்ச்சியோ அவருக்கு வருவதேயில்லை. அவர்களுக்காகக் கோர்ட்டுக்கும், காவல் நிலையத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் அலைவதையே ஒரு வாழ்க்கை முறையாகக் கற்றுப் பழகித் தேர்ந்திருந்தார் அவர். அவரோடு கூடவே இருந்து பார்த்துப் பழகி அநுபவித்திருந்த காரணத்தால் - பிறருக்காகச் சிரமப்படுவதிலுள்ள மகிழ்ச்சிகள் சுலட்சணாவுக்கு நன்கு புரிந்திருந்தன. அவள் எந்தப் பிரச்னையிலும் அப்படிச் சிரமப்பட ரிஸ்க் எடுத்துக் கொள்ளத் தயாராயிருந்தாள். சமூகப் பிரச்னைகளிலிருந்து ஒதுங்கிப் போகிறவர்களும், விலகிப் போகிறவர்களும் கோழைகள் என்று அவள் நம்பினாள். உணர்ந்தாள். செயல் பட்டாள். பல்கலைக்கழக எல்லையில் கனகராஜூம் அவளும் சந்திப்பது பழகும் விதம் இவற்றால் அவர்கள் காதலர்கள் என்று புரிந்து கொள்ளப்பட்டிருந்தாலும் இருவருக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அவன் கருதினான்: ‘சமூகம், பிரச்னை, போராட்டம் எல்லாம் மாணவர்கள் சம்பந்தப்படாத பிரச்னைகள். படிப்பில் அக்கறையில்லாத மாணவர்கள் சிலர் இப்படிப்பட்டவற்றைக் கட்டிக்கொண்டு அழுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. படிக்கிற மாணவனுக்குப் படிப்பு ஒன்று மட்டுமே முக்கியப் பிரச்னை, மற்றவை எல்லாம் படிப்பைத் தட்டிக் கழிக்கிறவர்கள் செய்கிற காரியங்களே.’ ஆனால் அவனது இந்த இலக்கணத்தில் அடங்காதவளாக இருந்தாள் சுலட்சணா. அவள் படிப்பில் படு கெட்டிக்காரியாக இருந்தாள். மற்றப் பிரச்னைகளிலும் அதிக அக்கறை காட்டினாள். “விதிவிலக்காகச் சிலர் இருக்கலாம். ஆனால் வெளி விவகாரங்களிலும் மாணவர் போராட்டங்களிலும் ஈடுபடுகிற பலர் படிப்பைத் தட்டிக் கழிக்கவே அவற்றில் ஈடுபடுகின்றனர். இல்லையானால் பரீட்சை நேரங்கள் பார்த்து ஏன் போராட்டங்கள் தொடங்கப் படுகின்றன? பரீட்சைகளை ஒத்திப்போடும் முயற்சியில் தானே அப்படிச் செய்கிறார்கள்?” என்று வாதிடுவான் கனகராஜ். சுலட்சணா அதை ஒப்புக் கொள்ள மாட்டாள். சில மாணவர்கள் கனகராஜ் சொல்கிற மாதிரியும் இருக்கிறார்கள் என்பது அவளுக்குத் தெரியும். என்றாலும் கனகராஜின் பத்தாம் பசலிக் கொள்கையை மறுக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் அவள் உறுதியாக வாதிடுவாள். “நீ ஒரு போராட்டக்காரரின் மகள்! அதனால் இப்படித் தான் பேசுவாய்! உன்னைத் திருத்தக் கடவுளாலும் ஆகாது” என்றுதான் கனகராஜ் அப்படி நேரங்களில் அந்த விவாதத்தை முடிப்பான். |