6 ஒரு முறை சுலட்சணாவும் கனகராஜூம் யூனிவர்ஸிடி காம்பஸுக்கு அருகே உள்ள ஒரு கடைத் தெருவில் மாலை வேளையில் தற்செயலாக நடந்து போய்க் கொண்டிருந்த போது ஒரு சம்பவம் நடந்தது. கவனத்தைக் கவரும் சம்பவம் அது. பரபரப்பான பஜாரில் காய்கறி கூறுகட்டி வைத்து விற்றுக் கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அந்தப் பக்கத்துப் பேட்டை ரவுடி ஒருத்தன் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தான். மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்கக் கூசும் அநாகரிகமான வார்த்தைகளால் அவளைத் திட்டிக் கொண்டிருந்தான். இவ்வளவுக்கும் அது மாலை நேரமாகையினால் பஜாரில் நல்ல கூட்டம். ஆனால் யாரும் அந்தப் பேட்டை ரவுடியை ஏனென்று தட்டிக் கேட்க முன்வரவில்லை. எதுவுமே நடக்காதது போல் எதையுமே கண்டுகொள்ளாமல் மக்கள் அந்த இடத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள், வந்து கொண்டிருந்தார்கள். ‘நிராதரவான இளம் பெண் ஒருத்தியை நடுத்தெருவில் துகிலுரியாத குறையாக ஒருத்தன் இம்சை பண்ணி மான பங்கப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஏன் என்று கேட்பாரில்லையா?’ என்று மனக் குமுறலோடு தயங்கி நின்றாள் சுலட்சணா, கனகராஜ் அவள் காதருகே முணுமுணுத்துத் துரிதப்படுத்தினான். “நேரம் சரியாயில்லை. இப்போ இங்கே நிற்க வேணாம். பெரிய கலாட்டா வரும் போல இருக்கு. கண்டுக்காமப் போயிடலாம், வா.” இதைக் கேட்டுச் சுலட்சணாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கண் முன்னால் நடக்கிற ஓர் அக்கிரமத்தை, அநியாயத்தை, அநாகரிகத்தை ஏனென்று கேட்காமல் ‘நமக்கேன் வம்பு? கண்டுக்காமப் போயிடலாம்’ என்று உபாயம் சொல்கிற ஆண் பிள்ளையை ஏறிட்டுப் பார்க்கவே அருவருப்பாயிருந்தது அவளுக்கு. கனகராஜின் முகத்தில் கலவரமும் பீதியும் தெரிந்தன. உடனே அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போன்றதொரு தப்பிப் பிழைக்கும் அவசரம் அவன் முகத்தில் தெரிந்தது. அந்தப் பெண்பிள்ளையை ரவுடி இம்சைப்படுத்திக் கொண்டிருந்த அதே பிளாட்பாரத்தில் லத்திக்கம்பு சகிதம் உலாத்திக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரன் அதைக் கண்டு கொள்ளாதது போல் இருந்தான். சுலட்சணா அவனிடம் ஓடிப்போய்ப் புகார் செய்தாள். “உங்களுக்கு ஏம்மா இதெல்லாம்? அவங்க இந்த நிமிஷம் அடிச்சிப்பாங்க, அடுத்த நிமிஷமே சிரிச்சுப் பேசு வாங்க... நாம தலையிடறது சரியா இருக்காது” என்று வேதாந்தம் பேசினான் கான்ஸ்டபிள். நடந்து கொண்டிருந்த சண்டையைப் பார்த்தால் அப்படிப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த ரவுடியின் இடுப்பில் இளநீர் சீவுகிற அரிவாள் போல் கூர்மை மின்னும் அரிவாள் வேறு இருந்தது. கனகராஜ் உதவிக்கு வருவான் என்று நம்பிப் பயனில்லை என்கிற முடிவுக்கு வந்த சுலட்சணா அந்த ரவுடியை நோக்கி, “அடிக்கிறதை நிறுத்துப்பா... என்ன தகராறு உங்களுக்குள்ளே...?” என்ற கேள்வியுடன் விரைந்தபோது, “சுலட்சணா! வேண்டாம் போகாதே சொன்னாக் கேளு!” என்று அவளைத் தடுத்து அலறினான் கனகராஜ். அவள் அவனைப் பொருட்படுத்தவில்லை. ‘சிவிக் கரேஜ்’ இல்லாத ஆண்பிள்ளையும் ஓர் ஆண் பிள்ளையோடு சேர்த்தியா என்று அவனைத் துச்சமாக நினைத்தாள் சுலட்சணா. அவசர அவசரமாகப் பக்கத்துக் கடையிலிருந்த இளைஞன் ஒருவன் ஓடி வந்து சுலட்சணாவை வழிமறித்து, “இதுலே நீங்க ஏம்மா தலையிட்டு வம்பை விலைக்கு வாங்கறீங்க? இங்கே பிளாட்பாரத்துல் கடை பரத்தறவங்க எல்லாம் அந்த ஆளுக்கு ‘மாமூல்’ குடுத்துடறது உண்டு. இந்தப் பொண்ணு புதுசு. இதுக்கு நடைமுறை தெரியாது. தெற்கே ராமநாதபுரத்துப் பக்கத்திலேருந்து புதுசாப் பிழைக்க வந்திருக்கு. ‘பிளாட்பாரத்திலேகடைபோட நீ யாருப்பா அதிகாரி?’ன்னு அவனை அது எதிர்த்துக் கேட்டதாலேதான் தகராறு” என்றான். சுலட்சணா பதிலுக்கு அவனை வினவினாள்:- “அந்தப் பெண் கேட்டதிலே என்ன தப்பு? அவ பிளாட்பாரத்திலே கடை போட இவனுக்கு ஏன் பணம் அழணும்? இவன் யாரு? அதுக்குத் தானாவதியா என்ன?” “அது மாமூல்! இல்லாட்டி அவன் கலாட்டாப் பண்ணுவான். தகராறு வரும்.” “போலீஸ்ல கம்ப்ளயிண்ட் பண்ணலாமே?” “போலீஸ் இதெல்லாம் ஒண்ணும் கண்டுக்காது. ஏன்னா இந்த வசூல்லே அவங்களுக்கும் பங்கு உண்டு.” அந்தப் பெண்ணின் கண்ணீரையும் அழுகையையும் காணாமலும் கதறலைக் கேளாமலும் அப்போது அந்த பஜாரில் வருவதும் போவதுமாயிருந்த அத்தனை மனிதர்களும் கபோதிகளா, கை கால் இழந்த முடங்களா என்று அவர்கள் மேல் வெறுப்பும் கோபமும் அடைந்தாள் சுலட்சணா. அவள் குறுக்கே பாய்ந்து அந்தச் சண்டையைத் தடுக்க முயன்ற போது அந்த மீசைக்கார முரடனின் கோபம் முழுவதும் சுலட்சணாவின் மீது திரும்பியது. “வாம்மா ஜான்ஸி ராணி! இவளுக்குப் பலிஞ்சுக்கிட்டு வர்ரியா நீ?” என்று சுலட்சணாவின் பக்கம் திரும்பினான் அவன். பல்கலைக்கழக விவசாயப் பிரிவு மாணவர்கள் சிலர் அந்த வேளையில் தற்செயலாக அந்த பஜார்ப்பக்கம் நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் சுலட்சணாவை நன்கு அடையாளம் தெரியுமாகையால் அவளுக்கு உதவியாக வந்தார்கள். அந்த முரடனைத் தட்டிக் கேட்டார்கள். சுலட்சணாவின் பக்கம் அணிவகுத்து நின்றார்கள். ஆனால் கனகராஜ் பக்கத்திலேயே வரவில்லை. பயத்தோடு தூர விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தானே ஒழியப் பக்கத்திலேயே நெருங்கவில்லை அவன். அரிவாளுக்கும், அரிவாள் மீசைக்காரனுக்கும், அத்தனை பயம் அவனுக்கு. விவசாய மாணவர்கள் நால்வரும் அப்படிப் பயப்படவில்லை. முரடன் முதலில் தாக்கிக் கொண்டிருந்த பெண்ணையும், சுலட்சணாவையும் விட்டுவிட்டுப் பரிந்து கொண்டு வந்த விவசாயப்பிரிவு மாணவர்கள் மேல் அரிவாளோடு பாய்ந்தான். அதை அவர்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. பேச்சில் ஆரம்பித்த தர்க்கத்தை உடனே அவன் அரிவாளால் எதிர்கொள்வான் என எதிர்பார்த்திராத அவர்களில் மூவர் மருண்டு சற்றே பின்வாங்கினர். அபாரமான துணிச்சலும் அரிவாளுக்குப் பயப்படாத ஆண்மையுமுள்ள ஒருவன் மட்டும் ஓங்குகிற அரிவாளோடு வந்த அந்த ரவுடியின் வலது கையை அப்படியே மறித்துத் தடுத்துப் பிடித்தான். அந்த மாணவனைச் சுலட்சணாவுக்கே நன்றாகத் தெரியும். அவளுடைய சமூக சேவை முகாம், ஹாஸ்டல் உண்ணா விரதம் எல்லாவற்றிலும் ஆர்வமாக முன்வந்து கலந்து கொண்டவன். வீராசாமி என்று பெயர்கூட நினைவு இருந்தது. ஊர்கூட முதுகுளத்தூர்ப் பக்கம் என்பதாகவும் நினைவிருந்தது. அப்போது அவன் காட்டிய வீரம் அவளை வியப்பிலாழ்த்தியது. “நடுத்தெருவிலே பொம்பளையைக் கை ஓங்கி அடிக்கிற நீயும் ஒரு மனுசன்தானா?” என்று வரிந்து கட்டிக்கொண்டு அந்த ரவுடியை மடக்கிப் பிடித்து விட்டான் வீராசாமி. ஒற்றைக்கு ஒற்றையாக அரிவாளும் கையுமாக இருந்த அந்த முரடனைச் சமாளித்தான் அவன். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் வேறுமாதிரி நடந்து விட்டது. வீராசாமி தன்னை மடக்கிவிட்டான் என்ற ஆத்திரத்திலும் அவமானத்திலும் சிறிய ரவுடி திமிறிக்கொண்டு பாய்ந்தான். உடனே ஓர் அலறல் அதைத் தொடர்ந்து அடுத்த நொடியில் இரத்தம் சொட்டச்சொட்ட ஒரு இளம் வலதுகை நடுரோட்டில் துண்டிக்கப்பட்டு வந்து விழுந்தது. என்ன நடந்தது என்று புரியவே சில நொடிகள் ஆயிற்று. ரவுடி ஓடி விட்டான். விவசாய மாணவர்கள் அவனைத் துரத்திக் கொண்டு பாய்ந்தனர். வீராசாமி மட்டும் வெட்டுண்ட கையில் குருதி ஒழுகத் துடிதுடித்தபடி விழுந்து கிடந்தான். நடைபாதைப் பெண்ணும் சுலட்சணாவும் அவனைத் தாங்கிக் கொண்டார்கள். சுற்றிலும் கூட்டம் கூடி விட்டது. ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்யச் சொல்லலாம் என்று சுற்றி நின்ற கும்பலில் கனகராஜின் முகத்தைத் தேடினாள் சுலட்சணா. அவனைக் காணவில்லை. கும்பலில் மட்டுமில்லை. கும்பலுக்கு அப்பாலும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கனகராஜ் தென்படவே இல்லை. பயந்து ஓடிப் போயிருப்பானோ என்று அவளுக்குச் சந்தேகமாயிருந்தது. அங்கே பக்கத்தில் இருந்த போலீஸ் நிலையத்தில் தகவல் சொல்லி அங்கிருந்தே ஆம்புலன்சுக்கும் ஃபோன் செய்வதாகக் கூறிவிட்டு யாரோ ஒருவர் விரைந்தார். கனகராஜ் மட்டும் ஆள் அகப்படவே இல்லை. எங்கே போனானோ? சுலட்சணா துணையின்றி நிராதரவாகத் தவித்தாள். ரவுடியைத் துரத்திக்கொண்டு ஓடின அந்த மூன்று மாணவர்களும் திரும்பி வந்து சேரக் கால்மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. வீராசாமியின் உடலிலிருந்து இரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகி விடுமோ என்றும் பயமாயிருந்தது சுலட்சணாவுக்கு. அவனைக் காப்பாற்றப் பதறினாள். போலீஸ் வந்தது. ஆம்புலன்ஸ் வந்தது. அவளிடமும் நடைபாதைப் பெண்மணியிடமும் ஸ்டேட்மெண்ட் வாங்கிக் கொண்டு முடித்து ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தது ஆம்புலன்ஸ். சுலட்சணாவும் ஆம்புலன்ஸில் வீராசாமியுடன் சென்றாள். அந்த இடத்திலிருந்து ஆம்புலன்ஸ் கிளம்புவதற்குள்ளேயே எப்படியோ தகவல் எட்டிப் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்து விட்டனர். அவர்களால் பஜாரில் ஏதேனும் கலகம் மூண்டு விடக் கூடாதே என்று போலீஸார் முன்னெச்சரிக்கை உணர்வு அடைந்தனர். கூட்டம் கூடாமல் கலத்தனர். “இந்த நாளில் சர்ஜரியில் விநோதங்கள் எல்லாம் நடக்கின்றன. வலது மணிக்கட்டை அப்படியே ஒட்ட வைத்து விடலாம். வலது கை விரல்கள் இல்லாவிட்டால் பாவம். அவனது வாழ்க்கையே வீணாகிவிடும்” என்று கூடியிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். ‘பிளாஸ்டிக் சர்ஜரியில் முடியாதது இல்லை’ என்று மற்றொருவர் சொன்னார். இரண்டு மணி நேரம் வரை இந்த சஸ்பென்ஸ் நீடித்தது. அதன்பின் வெட்டுண்ட மணிக்கட்டுப் பகுதியையும் உடம்பில் எஞ்சிய கையின் நுனியையும் பரிசோதித்த டாக்டர்களும் நிபுணர்களும் - இரண்டையும் இணைப்பது இனி மேல் சாத்தியமில்லை என்று தெரிவித்துவிட்டனர், வீராசாமியின் வலது கை மூளியாகத் தான் இருக்கும் என்றறிந்ததும் சுலட்சணா கதறினாள், அழுதாள். முடிவில் வேறு வழியின்றி மெளனமாகக் கண்ணீர் சிந்தினாள். மறுநாள் பல்கலைக்கழக மாணவர்கள் கருப்புச் சின்னமணிந்து பஜாரில் மெளன ஊர்வலம் சென்றார்கள். சுலட்சணா தலைமை வகித்தாள். ‘நியாயம் கேட்ட மாணவனைக் காட்டுமிராண்டித்தனமாக வெட்டிய சமூகவிரோதியைத் தேடிக் கைது செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை கலெக்டருக்கும் மற்றவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களால் முன்வைக்கப்பட்டது. அந்தப் பேட்டை ரவுடி ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவருக்கு வேண்டியவன் என்றும் போலீஸார் அவனைக் கைது செய்ய மாட்டார்கள் என்றும் வதந்தி பரவவே மாணவர்கள் கொதித்தெழுந்தனர். பிரச்னை பெரிதாகி மாணவர்கள் போராட்டம் வலுத்து விடுமோ என்று பயந்து இரண்டு தினங்கள் வரை மெத்தனமாக இருந்த போலீஸார் மூன்றாவது நாள் அந்த ரவுடியைக் கைது செய்து லாக்கப்பில் வைத்தார்கள். குற்றப்பத்திரிகையும் தயார் செய்தார்கள். இரண்டு மூன்று நாள் இத்தனை ரகளை நடந்தபோதும், சுலட்சணாவின் பார்வையில் கனகராஜ் தட்டுப்படவே இல்லை. ‘பல்கலைக்கழகக் காம்பஸுக்கு வெளியே நடக்கும் தகராறுகளிலும் சர்ச்சைகளிலும் சண்டைகளிலும் வீணாகப் பல்கலைக்கழக மாணவர்கள் தலையிட்டுப் பல்கலைக்கழகத்திற்குள் டென்ஷனையும், விவகாரங்களையும், பதில் விளைவுகளையும் கொண்டு வராமல் இருக்க வேண்டும்’ என்பதாகத் துணை வேந்தர் ஒரு சுற்றறிக்கையை அவசர அவசரமாக அனுப்பினார். நல்ல வேளையாக அவர் அயல்நாடு எதுவும் போகாமல் அப்போது ஊரிலேயே இருந்தார். டீனும் துணைவேந்தரும் சுலட்சணாவைக் கூப்பிட்டு அனுப்பினார்கள். கண்டிப்பது போன்ற குரலில் அவளிடம் பேசினார் துணை வேந்தர். “இந்தக் காம்பஸிலே உன்னாலே எப்பவும் வம்புதான் அம்மா! பஜார்லே நடக்கிற தெருச் சண்டையை எல்லாம் யூனிவர்ஸிடி காம்பஸுக்குள்ளே கொண்டு வந்து விட்டு எங்கள் உயிரை ஏன் வாங்குகிறாய்? ஒழுங்காய் லட்சணமாய்ப் படிப்பைக் கவனியேன்.” “உங்க யூனிவர்ஸிடி மாணவன் ஒருத்தன் தெருவிலே நடந்த ஒரு அக்கிரமத்தைத் தட்டிக்கேட்ட உடனேயே ரவுடி அவன் கையை வெட்டியெறியறது எப்படி சார் தெருச் சண்டையாகும்? அதைப் பொறுத்துக் கொண்டு நாங்க எப்படிச் சும்மா இருக்க முடியும் சார்?” “தகராறு யூனிவர்ஸிடி சம்பந்தமானதா இல்லையாங்கிறதுதான் இப்போ என்னுடைய கேள்வி?” “பாதிக்கப்பட்டவர்கள் உங்களுடைய யூனிவர்ஸிடி மாணவர்கள் என்பதுதான் என் பதில்.” “வேலை கெட்டுப்போயி நீங்க இழுத்துக்கிட்டு வர்ர தெருச் சண்டையைப் பத்தி எல்லாம் இங்கே தேடி வர்ர போலீஸ்காரங்களுக்கு நான் பதில் சொல்லிக்கிட்டிருக்க முடியாது.” “கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமப் பேசாதீங்க சார் ஒரு ஸ்டூடண்ட் வலது கையை முறிச்சுக்கிட்டு ஆஸ்பத்திரியிலே கிடக்கிறாரு. பேட்டை ரவுடிங்க கிட்டச் சிக்கி அவஸ்தைப்பட்ட ஒரு பெண்ணையும், என்னையும் துணிந்து காப்பாற்ற முன்வந்ததுக்காக அந்த ஸ்டேண்டுக்குக் கிடைச்ச பரிசு அது!” “தலையிட வேண்டாததுலே எல்லாம் அநாவசியமாத் தலையிடறதாலே வர்ர வம்புதான் இதெல்லாம்.” “நீங்களோ, டினோ ஒரு கர்டிஸிக்காகக்கூட இன்னும் ஆஸ்பிடலுக்கு விஸிட் பண்ணலே. அந்தக் கையிழந்த ஸ்டூடண்ட்டைப் பார்த்து ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லலே. மாணவர்கள் எல்லாம் நொந்து கொதிச்சுப் போயிருக்காங்க.” “இதென்ன எங்களுக்கு மிரட்டலா?” “நீங்க எப்பிடி வேணும்னாலும் எடுத்துக்கலாம். பூனை கண்ணை மூடினாலே உலகம் இருண்டு போய்விடாது சார்!” |