5 கனகராஜைப் போன்ற அழகிய ஸ்மார்ட்டான இளைஞன் ஒருவன் சுலட்சணா தவிர வேறு எந்த இளம் பெண்ணிடம் அந்த மாதிரி ஓர் அன்பு அழைப்பை விடுத்திருந்தாலும் இத்தனை கடுமையாக மறுத்திருக்க மாட்டாள். அவனுடைய முகமன் வார்த்தைகளை இங்கிதமாகத் தட்டிக் கழிக்காமல் கறாராக உடனே ‘குட் பை’ என்று அவனைக் கத்திரித்திருந்தாள் அவள். அலுங்காமல், குலுங்காமல், உணவு, உறக்கம், படிப்பு, சுயநலம் என்கிற நான்கு கோடுகளாலான ஒரே சதுரத்திற்குள் அடைபட்டு அழுகும் கனகராஜ் போன்றவர்களை வெறுப்பதை விட அதிகமான அனுதாபத்தோடு பார்த்தாள் சுலட்சணா. கண்டித்துச் சுற்றறிக்கை விட்டதோடு ஓயாமல் டீன் அண்ட் ஆக்டிங் வி. சி. என்ற முறையில் உடனே தன்னை வந்து சந்திக்கும்படி ‘டல் பிள்ளை’ சுலட்சணாவுக்கு ஒரு மெமோ வேறு அனுப்பியிருந்தார். மெமோவைப் பார்த்து அவளுக்கு ஆத்திரம்தான் வந்தது. பொருளாதாரத் துறை, தமிழ் இலக்கியத் துறை போன்ற சில டிபார்ட்கெண்டுகளுக்கு நல்ல பெயர் இருந்தாலும் வேறு சில வட்டாரங்களில் உதயா பல்கலைக்கழகத்திற்கு உதவாக் கரைப் பல்கலைக்கழகம், ஊழல் பல்கலைக்கழகம், டிக்னிஃபைடு எலிமெண்டரி ஸ்கூல், டிக்னிஃபைடு ஹைஸ்கூல், க்ளோரிஃபைடு காலேஜ் என்றெல்லாம் அகடமிக் சர்க்கிளில் இருண்ட பெயர்கள் உண்டு. வி. சி., டீன் ஆகியோரின் ஊழல்களே இதற்குப் பெரிதும் காரணம். அன்று சுலட்சணாவுக்கு மெமோ அனுப்பிய போதும் இப்படி ஒரு குறுகிய நோக்கத்தோடுதான் அந்த மெமோவை அவளுக்கு அனுப்பி மிரட்டியிருந்தார் ஆக்டிங் வி. சி. பல்கலைக்கழகத்தில் சுலட்சணாவுக்கு யாரிடமும் எதற்காகவும் அநாவசியமான பயம் கிடையாது. அதுவும் டாக்டர் கையாடல் வல்லான்பிள்ளை எம். ஏ., பிஎச். டி.யிடம் மரியாதை கூடக் கிடையாது. தைரியமாக அவரது மெமோவை வாங்கிக் கொண்டு சந்திக்கச் சென்றாள், கனமான சோடாபுட்டிக் கண்ணாடி, பிதுங்கும் குண்டு விழிகள், எந்தக் கடுங்கோடையிலும் சூட்டு, கோட்டு, டை அணிந்து பார்க்க ஆந்தை போலிருப்பார் டல் பிள்ளை. ஆந்தைமூக்குக் கண்ணாடி அணிந்து நாற்காலியில் அமர்ந்திருப்பதுபோல் சாயல் இருக்கும். குரலிலும் ஏறக்குறைய ஆந்தையின் சாயல் தான். “மிஸ் சுலட்சணா! வீ ஆர் ஹியர் டு ஆர்கனைஸ் சோஷியல் செர்வீஸ் லீக் ஆன் பிஹாஃப் ஆஃப் திஸ் யூனிவர்ஸிட்டி” என்று கடுமையாகச் சொல்லி நிறுத்தி விட்டு ஆந்தை விழிகளால் அவளை ஊடுருவினார். “இஃப் யூ ஸே லைக் திஸ் வெல் அண்ட் குட் சார். பட் அன்ஃபார்ச்சுனேட்லி ஸோ ஃபார் யூ டிண்ட் ஆர்கனைஸ் எனி சச் ப்ரொக்ராம் ஆன் பிகாஃப் ஆஃப் த யூனிவர்ஸிடி சார்!” “நீ யாரு அதை எல்லாம் சொல்ல? சோஷல் செர்விஸ் புரோகிராம் நடந்து ஸ்டூடன்ஸுக்கு மார்க் எல்லாம் கூட முறையாகக் குடுத்திருக்கோம்...” “டூயிங் கார்டன் வொர்க் இன் த காம்பஸ் இஸ் நாட் அட் ஆல் எ சோஷல் வொர்க் சார்!” “ஆர் யூ டீச்சிங் மீ வாட் இஸ் சோஷல் வொர்க் அண்ட் வாட் இஸ் நாட் சோஷல் ஒர்க்?...” “ஸாரி சார்...” “நெள யூ மே கோ...” நிமிர்ந்த நடையோடு டீனின் அறையிலிருந்து வெளியேறினாள் சுலட்சணா. திட்டமிட்டபடி விடுமுறையில் சுலட்சணாவும் அவளோடு ஒத்துழைத்த மாணவ மாணவிகளும் கிராமத்துக்குச் சாலை போட்டு முடித்தார்கள். பொதுவாக இம்மாதிரி சோஷல் செர்வீஸ் நாட்களில் ஆகும் உணவு, சிற்றுண்டிச் செலவுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் தான் ஏற்க வேண்டும். முன்பே கட்டணங்களில் இதற்கான தொகை மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டிருந்தும் காம்பஸூக்குள்ளேயே களைபிடுங்கச் சொல்லியும் புதர் வெட்டச் சொல்லியும் வேலையை முடித்து விடுவதால் வழக்கமான ஹாஸ்டல் சாப்பாடு சிற்றுண்டியிலேயே இதையும் சமாளித்து விட முடிந்தது. வேறு எக்ஸ்ட்ரா செலவு இல்லை. சாலை போடச் சுலட்சணா செய்த ஏற்பாட்டில் பல்கலைக் கழகத்திலிருந்து பணம் எதுவும் கோரிப் பெறாமல் அவரவர்கள் செலவை அவரவர்களே பார்த்துக் கொண்டார்கள். அவர்களது பணி நடந்த பகுதி மக்களும் வலிய முன் வந்து அவர்களுக்கு உதவினார்கள். எல்லாரிடமிருந்தும் மாணவ மாணவிகளுக்கு நல்ல ஒத்துழைப்புக் கிடைத்தது. படிக்கிற பையன்களும், பெண்களும் வெயிலில் மண்வெட்டியும் கூடைகளுமாகச் சாலை போடுவதை மக்கள் வியப்பாகப் பார்த்தார்கள். விடுமுறை நிமித்தம் ஊருக்குப் போகுமுன் கனகராஜ் சுலட்சணாவை வந்து பார்த்தான். சமூக சேவைத் திட்டத்திற்கு மாணவர்களை அழைக்கும் துண்டுப் பிரசுரங்கள் அச்சாகி வந்திருந்தன. சுலட்சணாவிடமிருந்து அதில் ஒரு துண்டுப் பிரசுரத்தைத் தானே கேட்டு வாங்கிப் படித்துப் பார்தத கனகராஜ் அலட்சியமாகவும் ஏளனமாகவும் நகைத்தான். பின்பு சொன்னான்: “இந்தக் கழுதை பொதி சுமக்கிற வெயிலில் நம்மாலே அலைய முடியாது. சுகமாக ஒரு மாசம் ஏற்காட்டிலே இருக்கிறதைப் பத்து வருஷமாப் பழகியாச்சு. இனிமே நான் என்ன மாத்திக்க முடியாது.” “நீங்கள் மட்டுமில்லை மிஸ்டர் கனகராஜ்! இந்நாட்டு மக்களில் பலர் தாங்களாகவே தங்களைக் காலத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளத் தயாராயிருக்க மாட்டார்கள். காலம்தான் அவர்களை மாற்றவேண்டும். மாற்றும் என்று நினைக்கிறேன்.” “நீ நினைக்கிறபடி எல்லாம் அவ்வளவு சீக்கிரமாக இந்த நாட்டில் எதுவும் நடந்துவிடாது சுலட்சணா!” “மனிதனை என்றும் மாறாமலிருக்க நிர்ப்பந்தப்படுத்தும் மதம், சடங்குகள், சம்பிரதாயங்களிலிருந்து அவனை உடனே மாற்ற முயலும் விஞ்ஞானம் வித்தியாசமானது. விஞ்ஞானத்துக்கும் மதத்துக்கும் உள்ள குளிர் யுத்தத்தில் இளைஞராகிய நீங்கள் விஞ்ஞானத்தின் பக்கமில்லை என்பதுதான் மிகவும் துயரமான விஷயம்.” “விஞ்ஞானத்தின் பக்கத்திலும் மதத்தின் பக்கத்திலும் நான் இருக்கிறேனோ இல்லையோ, நிச்சயமாக உன் பக்கம் இருக்கிறேன். உன்னைப் போல ஓர் அழகிய பெண்ணின பக்கமாக நெருங்கி நிற்பதற்குப் பெருமைப்படுகிறேன். நீ நடத்துகிற சோஷியல் செர்வீஸ் ‘லீக்’ முகாமில் என்னால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் என் உதவி உனக்கு உண்டு சுலட்சணா! இந்தா இதை என்னுடைய ‘ஹம்பிள் டொனேஷனாக’ ஏற்றுக்கொள்” என்று சட்டைப் பையிலிருந்து ஐந்து புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுக்களை எண்ணி எடுத்து அவளிடம் நீட்டினான் கனகராஜ். அவள் உதாசீனமாகச் சிரித்தாள்: “தயவுசெய்து மன்னிக்கவும். எங்களுக்கு வேண்டியது உழைப்பு. வெறும் பணம் மட்டுமில்ல. சேவையைத் தர விரும்பாத - சேவைக்கு ப்ராக்ஸியாகத் தரப்படுகிற பணத்தை நாங்கள் வாங்குவதில்லை” என்று நிர்த்தாட்சண்யமாக அதை மறுத்து அவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டாள் சுலட்சணா அவன் இதை எதிர்பார்க்கவில்லை. திடீரென்று முகத்திலறைந்தாற் போலிருந்தது. சமூகப் பணி முகாம் நடத்துவதற்காக அவள் மாணவ மாணவிகளிடம் நிதி வசூலிப்பதை அவன் அறிந்திருந்தான். அவளுக்கு அதில் உதவியாயிருக்கட்டும் என்றுதான் அவன் ஐநூறு ரூபாயைத் தூக்கித் தயங்காமல் கொடுத்திருந்தான். அவளோ ஒரே விநாடியில் அவனது பெருந்தன்மையைத் தூள் தூளாக்கி விட்டாள். அவன் சற்று ஆத்திரமடைந்த குரலிலேயே, “எல்லாரிடமும் பணம் வசூல் செய்கிறாயே, நான் கொடுப்பதை மட்டும் ஏன் வாங்க மறுக்கிறாய்?” என்று அவளைக் கடுப்போடு கேட்டான். “நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைப்பதற்கு நான் வரமாட்டேன்! பணம் வேண்டுமானால் தருகிறேனென்று முன்வருகிற ஆட்களாகப் பார்த்து வசூல் செய்தால் - இதற்குச் சமூக சேவை என்று ஏன் பெயரிட்டு அழைக்க வேண்டும்? நன்கொடை வசூல் செய்து யாராவது ஒரு சாலைக் காண்ட்ராக்ட் என்ஜினியரிடம் கொடுத்து அவரையே ரோடு போடச் சொல்லி விட்டு விடலாமே? அதுவல்ல எங்கள் நோக்கம். எம். ஏ. யும் எம். ஃபில்லும், எம். டெக். கும், எம். டி. யும் படிக்கிற மாணவர்கள் வசமும் மண்வெட்டி பிடித்து உழைக்கிற மனமும் உடலும் உண்டு என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். இதில் பணமே மனிதனுக்கு ப்ராக்ஸியாக நின்று விட முடியாது, கூடாது என்பதுதான் என் கொள்கை.” “இது மிகவும் விநோதமான கொள்கைதான்.” “விநோதமான மனிதர்களுக்கு எல்லா நல்ல கொள்கைகளும் கூட விநோதமாகவே தோன்றும்; இயல்பாகத் தோன்றாது.” “திறந்த வெளியில் சட்டையில்லாத உடம்புடன் மண் வெட்டி பிடித்து வேர்க்க விறுவிறுக்கச் சாலை போடுகிற திறமையோ பழக்கமோ எனக்கு இல்லை. ஆனாலும் உனக்கு எப்படியும் உதவ வேண்டும் என்பதற்காகவே என் பாக்கெட் மணியாக அப்பா எனக்குத் தருவதில் மிச்சம் பிடித்து உன்னிடம் கொடுத்தேன்.” “எனக்கு வேண்டியது உங்கள் வேர்வையும் உழைப்புமே ஒழியப் பணம் இல்லை. வேர்வையையும் உழைப்பையும் ஏழைகளுக்காக விட்டுக் கொடுக்கிற மனம் உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று அறிய விரும்பினேன். அந்த மனம் உங்களுக்கு இல்லை. பிச்சைக்காரனுடைய திருவோட்டில் கையில் வந்த காசுகளை அவசர அவசரமாக அள்ளிப் போடுகிற பணக்காரன் போல் நீங்களும் என்னிடம் பணத்தை எடுத்து நீட்டினீர்கள். எனக்கு அது பிடிக்கவில்லை, வேண்டாமென்றேன். என் நிலையில் நான் செய்ததுதான் சரி.” அந்தச் சாலை போடும் திட்டம் மாணவ மாணவிகளின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக முடிந்தபிறகும் கனகராஜ் பணம் கொடுக்க முன்வந்த இந்தச் சம்பவத்தையும், பல்கலைக்கழக டீன் தன்னைக் கூப்பிட்டு மிரட்டிய அந்தச் சம்பவத்தையும் பலமுறை திரும்பத் திரும்ப இவ்வாறு நினைத்துப் பார்த்திருக்கிறாள் சுலட்சணா. எதிர்ப்புக்களும் பயமுறுத்தல்களும் அவளை வளரச் செய்தனவே ஒழிய ஒரு சிறிதும் தளரச் செய்யவில்லை. தயங்கச் செய்யவில்லை. அந்தப் பல்கலைக்கழக வட்டாரத்தில் ஆண் அழகனைத் தேர்ந்தெடுக்க ஒரு போட்டி நடத்தினால் சுலபமாகக் கனகராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவான் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல அழகியைத் தேர்த்தெடுக்க விரும்பினால் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சுலட்சணா வெற்றி பெறுவாள் என்பது சர்வநிச்சயம். இப்படிப்பட்ட இருவருமே எகனாமிக்ஸ் துறையில் ஒரே வகுப்பில் சேர்ந்து படிப்பது அந்த டிபார்ட்மெண்ட்மேல் மற்றவர்களைப் பொறாமை கொள்ளச் செய்தது. ஒரே வகுப்பில் சேர்ந்து படித்ததோடு போகாமல் அவர்கள் ஒன்றாகப் பழகவும் செய்தார்கள். ஒன்றாகத் தென்பட்டார்கள். ஒன்றாகப் பொது இடங்களில் சிரித்துப் பேசி மகிழ்ந்தார்கள். சந்தித்தார்கள். பிறர் கண்களில் பட்டார்கள். இதனால் பரவலாக அந்தப் பல்கலைக்கழக எல்லையில் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று ஓர் அநுமானம் தானாகவே ஏற்பட்டுப் பரவியிருந்தது. இந்தச் செய்தியைச் சம்பந்தப்பட்ட இருவருமே முன்வந்து ஆட்சேபிக்கவும் இல்லை. ஆமோதிக்கவும் இல்லை. கனகராஜ் இதை வரவேற்றான். நம்பினான். இதற்காக உள்ளுர அவன் மனம் குறுகுறுத்தது. மகிழ்ந்தது. அவளோடு முன்னை விட இன்னும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு பழகினான். அவளை அவனால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. நடுவில் ஏதோ நெருடியது. சிரிக்கச் சிரிக்க அவனோடு பேசினாள். விவாதித்தாள். தனியாக உணவு விடுதிகளுக்கு அழைத்தால் மறுக்காமல் வந்தாள். ஆனால் அவனிலிருந்து தீர்மானமாக நிச்சயமாக வேறுபட்டாள். சாப்பிடும் பண்டங்களிலிருந்து சர்ச்சை செய்யும் விஷயங்கள் வரை அவள் தனித்து நின்றாள். அவன் “இரண்டு மசால் தோசை” என்று ஆர்டர் கொடுத்தால் உடனே குறுக்கிட்டு “எனக்கு வெறும் டீ மட்டும்தான்” என்பாள். “தோசை வேண்டாம், டீ போதும்” என்று அவன் ஆட்சேபணையைப் பொருட்படுத்தாமல் வெயிட்டரிடமே நேரில் கண்டிப்பாகச் சொல்லி விடுவாள். படத்துக்கு வர ஒப்புக்கொண்டு தியேட்டர் வாசல்வரை கூடப் போவாள். அங்கே போய்ப் பார்த்ததும், “மூளையை மழுங்க அடிக்கிற இந்த மாதிரிப் படத்துக்கெல்லாம் நான் வரமாட்டேன். ஆக்ரோஷ், அர்த்தசத்யா, தாகம், முகா முகம், தர்ட்டிசிக்ஸ் செளரங்கி லேன் மாதிரி எதாவது படங்கள் வந்தால் சொல்லுங்கள். சேர்ந்து போவோம்” என்று திரும்பிக் கிளம்பி விடுவாள். அவனும் வேறு வழியின்றி நிறையப்பணம் செலவழித்து ரிசர்வ் செய்திருந்த டிக்கெட்டுகளைக் கிழித்தெறிந்துவிட்டு அவளைப் பின் தொடர்வான். “ஷீ இஸ் அன்ப்ரடிக்டபிள்” என்று அவன் உள்ளே கறுவிக் கொள்வான். அவளோ அவனளவிற்கு அதில் உணர்ச்சிப் பாதிப்பு இல்லாமல், “எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நீங்கள் ஏன் டிக்கெட்டைக் கிழித்துப் போட்டு விட்டுத் திரும்புகிறீர்கள்? உங்களுக்குப் பிடித்தால் நீங்கள் போய் உட்கார்ந்து படம் பார்த்துவிட்டு வரவேண்டியது தானே?” என்று சர்வ சகஜமாக அவனைக் கேட்பாள். தன்னை அவள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா அல்லது அவளைத்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்று விளங்கிக் கொள்ள முடியாமல் அப்போதெல்லாம் திணறுவான் அவன். அவள் தன்மேல் இரக்கப்பட்டுப் பழகுகிறாளா, பிரியப்பட்டுப் பழகுகிறாளா என்ற சந்தேகம் அவனுள் அடிக்கடி மூண்டு மனத்தைத் திக்குமுக்காடச் செய்யும். ஒரு வாலிப வயதுப் பெண்ணிடமிருந்து இரக்கத்தையோ பரிவையோ அவன் எதிர்பார்க்கவில்லை. பிரியத்தையும் காதலையுமே எதிர்பார்த்துத் தவித்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. |