10

     இதற்கிடையில் கனகராஜின் தந்தையிடம் பேசி அவனைச் சேலத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தபின் டீன் தம்முடைய அதிகார வரம்பையும் மீறி இன்னொரு காரியம் செய்தார். இப்போது அவருக்கு மேலிருந்த துணை வேந்தரின் பதவிக் காலம் அடுத்த இரண்டாண்டுகளில் முடிகிறது. இரண்டு டேர்ம் தொடர்ந்து இருந்து விட்டதால் இனி அவருக்கு அந்தப்பதவி மேலும் கிடைக்க முடியாது.

     உதயா பல்கலைக்கழகத்தின் புரோ சான்ஸ்லருக்கு மிகவும் வேண்டியவர் கனகராஜியின் தந்தை. கனகராஜ் விஷயத்தில் தான் கொஞ்சம் அக்கறைகாட்டி உரிமை எடுத்துக் கொண்டு பாடுபட்டால் அவனுடைய தந்தையை இம்ப்ரெஸ் செய்யலாம்; அதன் மூலம் அடுத்த துணை வேந்தர் பதவிக்காகச் சிபாரிசு செய்யப்படும் பெயர்களில் தன்னுடைய பெயர் முதலாவதாயிருக்க வழி செய்து கொள்ள முடியும். இது அவருடைய நீண்டநாள் பேராசையாக இருந்தது.

     டாக்டர் (கை)யாடல் வல்லான் பிள்ளையின் மூளை குறுக்கு வழியில் யோசனை செய்தது. கனகராஜை அனுப்பிய பின், பல்கலைக்கழக நேரமாயில்லாமல் அகாலமாயிருந்தும் ஒரு பியூனை அனுப்பி சுலட்சணாவை உடனே லேடிஸ் ஹாஸ்டலிலிருந்து அழைத்து வரச் செய்தார்.

     ரெஸிடென்ஷியல் பல்கலைக் கழகமாயிருந்தாலும் ஒரே காம்பஸ்-ற்குள் டீனின் வீடு, லேடிஸ் ஹாஸ்டல், பேராசிரியர்கள் குடியிருப்பு, துணேவேந்தர் மாளிகை எல்லாம் இருந்ததாலும், இப்படி மாணவர்களைப் பொறுப்பிலுள்ளவர்கள் அழைத்துப் பேசுவதும், பொறுப்பிலுள்ளவர்களை மாணவர்கள் வந்து காண்பதும் அவ்வப்போது வழக்கம்தான், அதில் புதுமை ஒன்றுமில்லை.

     பல்கலைக்கழகத் துனைவேந்தர் முக்கால்வாசி நாள் வெளி நாட்டுப் பயணங்களிலேயே இருந்ததனால் “ஃபாரின் வைஸ்சான்ஸைலர்” - என்றே பேராகி இருந்தது. மாணவர்கள் சம்பந்தப்பட்டவற்றை விசாரிப்பதும், நடவடிக்கைகள் எடுப்பதும் அவ்வப்போது ஆக்டிங் துணை வேந்தராயிருக்கும் ‘கடல் பிள்ளை’யின் வேலைதான். அதனால் ஆக்டிங் வி. சி. கூப்பிட்டனுப்புவது பற்றி மாணவர்கள் பயமோ பதற்றமோ அடைவது கிடையாது. எப்போது கூப்பிட்டாலும் உடனே போய்ப் பார்ப்பார்கள்.

     இன்று சுலட்சணாவும் அப்படித்தான் அவர் கூப்பிட்டனுப்பியதும் மறுக்காமல் உடனே அவரைப் பார்க்க வந்தாள்.

     அவள் தேடி வந்தபோது அவர் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்ததனால் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. கிராமந்தரத்து உயர் நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மாதிரி அந்த டீன் மாணவ மாணவிகளிடம் பழகுவார் என்பது ஊரறிந்த உண்மைதான். யாரும் அது பற்றி அதிகம் பொருட்படுத்துவது கூடக் கிடையாது. அகால நேரத்தில் இப்படிக் கூப்பிட்டனுப்பிக் காக்கப் போடுகிறாரே என்ற வருத்தம் உள்ளூர சுலட்சணாவுக்கு இருந்தாலும் பொறுமையாகக் காத்திருந்தாள்.

     ஒரு பெரிய ஏப்பத்தோடும் கையில் சாப்பாட்டுக்குப் பின் உட்கொள்ள வேண்டிய ஒரு கொத்து வண்ண வண்ண மாத்திரைகளுடனும் டீன் அவள் அமர்ந்திருந்த வீட்டு முன்பக்க வாரந்தாவுக்கு வந்தார். எந்தப் பேச்சுக்கோ நேரடியாக வரத் தயங்கி வேறு எதை எதையோ ஆரம்பித்தார் அவர்.

     “என்னம்மா, உன்னைப்பத்தி இந்தக் காம்பஸ்லே ஏதாவது ந்யூஸ் கேள்விப்படாத நாளே இராது போல் தோன்றுகிறதே?”

     “சொல்லுங்க இப்ப என்ன புது ந்யூஸ் கேள்விப்பட்டிங்க?”

     “ஒண்ணு ரெண்டா சொல்லி முடிக்கிறதுக்கு? அடுத்தடுத்துக் கேள்விப்பட்டுக் கிட்டேயிருக்கேன்.”

     “என்னன்னு சொல்ல மாட்டேங்கறீங்களே?”

     “அக்ரிகல்ச்சுரல் ஸ்டூடண்ட்ஸைக் கூப்பிட்டு செல்மீட்டிங் மாதிரி அடிக்கடி ஏதோ ஆர்கனைஸ் பண்றியாமே?”

     “அப்புறம்...? மேலே.”

     “ஏதோ காம்பஸ் முழுக்க வேலை நிறுத்தத்துக்குக் கூட ஏற்பாடு பண்றியாமே?”

     “இருக்கலாம்! ஸ்டுண்ட்ஸோட நியாயமான உரிமைகள் என்னென்னவோ, அதை அடைய என்ன மார்க்கமிருக்கோ அத்தனை மார்க்கத்திலும் போராடத்தான் போராடுவோம்! அதைத் தடுக்க ஒரே வழி எங்கள் குறைகளை நீங்களாக முன்வந்து நிவர்த்தி பண்ணுவதுதான் சார்.'”

     “என்னமோ இந்த யூனிவர்ஸிடி அமைதியா நடக்கிறது உனக்குப் பிடிக்கலே போலிருக்கு.”

     “புயலுக்கு முந்திய புழுக்கமே அமைதியாகி விடாது. இது அமைதியில்லை, புழுக்கம்.”

     “நீயும், அக்ரியில் படிக்கும் யாரோ ஒரு நொண்டிப் பையனும் சேர்ந்துதான் எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறீர்களாம்.”

     “சார்! மன்னிக்கணும். உங்க மாணவர்களைப் பற்றி நீங்க இன்னும் கொஞ்சம் நாகரிகமாகப் பேசலாம்னு நினைக்கிறேன். ‘ஐ. நா. வின் சர்வதேச உடல் ஊனமுற்றோா் ஆண்டு - உடல் ஊனமுற்றோரும் மனிதர்களே! அவர்களை மனிதர்களாய் - மரியாதையாய் நடத்துங்கள்’ - என்ற சுவரொட்டி இங்கு நம் வி. சி. அறையின் முகப்பில் இன்னும் ஒட்டப்பட்டிருக்கிறது. அதை இங்கே யாருக்காக சார் ஒட்டியிருக்கிறீர்கள்? மாணவர்களுக்காக மட்டும்தானா? ஆசிரியர்களுக்கு அந்த மரியாதை அநாவசியமா? அந்தக் ‘கல்ச்சர்’ வேண்டாமா?”

     “சாரி... அந்த ‘அக்ரி’ பையன் மேல் உனக்கு இத்தனை இண்ட்ரெஸ்ட் இருக்கும்னு எனக்குத் தெரியாமப் போச்சே.”

     “யாரோ வெறும் பையன் இல்லை சார். அவருக்குன்னு ஒரு பெயர் இருக்கு, வீராசாமி. அவரைத் தொடர்ந்து படிக்க அநுமதிக்கும்படி தாங்கள் போராடி வெற்றி பெற்றது உங்களுக்கும் யூனிவர்ஸிடி நிர்வாகத்துக்கும் அதுக்குள்ள மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன்.”

     “மறக்கலேம்மா! அத்தனை சுலபமா மறந்துட முடியுமா அதை எல்லாம்? ஒரு எக்னாமிக்ஸ் ஸ்டூடண்டுக்கு அக்ரி க்ராஜுவேட் மேலே பிடிப்பு வந்ததுதான் ஆச்சரியம்!”

     “சார் ஏன் சுற்றி வளைக்கிறீங்க? இப்போ என்னக் கூப்பிடனுப்பின விஷயம் என்னன்னு சொல்லுங்க... எனக்கு நேரமாகுது. லேடிஸ் ஹாஸ்டல் கேட்டை க்ளோஸ் பண்றத்துக்குள்ள போகணும்.”

     “நீ முன்னை கனகராஜோடப் பழகிக்கிட்டிருந்தே இல்லே...”

     “ஏன்...? இப்பவும் பழகறேன். நாங்க கிளாஸ்மேட்ஸ். ஒரே சப்ஜக்ட் படிக்கிறோம். பழகாம இருக்க முடியாது.”

     “இப்போ அத்தனை நெருக்கம் இல்லைன்னு கேள்வி. ஏதோ மனஸ்தாபம்னு சொன்னாங்களே...”

     “யார் சொன்னங்க?... எதுக்காகச் சொன்னாங்க?...”

     “வேற யாரு? கனகராஜேதான் சொன்னான். உன்னோட பழக்கம் குறைஞ்சதிலேருந்து அவன் அரை ஆளாப் போயிட்டான். உனக்குத் தெரியும்னு நெனைக்கிறேன். கனகராஜ் ரொம்பப் பெரிய ஃபேமிலியில வந்தவன். அவன் ஃபாதர் பெரிய கோடீசுவரர். நம்ம புரோ சான்ஸ்லருக்கு ரொம்ப வேண்டியவர்.”

     “சார்! இதெல்லாம் இப்ப எதுக்கு வீணா? என்ன விஷயம்னு மட்டும் சொல்லுங்க...” அவளை எப்படிக் கன்வின்ஸ் செய்து கனகராஜுக்காகப் பரிந்து பேசுவதென்று தெரியாமல், திணறினார் டீன். அவளோ அவ்வப்போது அவரது பேச்சை இடைவெட்டினாள், தவிர்த்தாள்.

     “கனகராஜ் ரொம்பத் தங்கமான பையன். படிப்பில் முதல் நம்பர். தானுண்டு தன் காரியம் உண்டு என்று இருப்பான். அநாவசியமா ஒரு வம்பு தும்புக்குப் போக மாட்டான். நீ அவனைப் புரிஞ்சுக்கணும் அம்மா!”

     “அந்த மாதிரி ஆளை இந்தக் காலத்திலே ஒரு மியூஸியம் கட்டி அதிலே உட்காரவச்சு ‘ஒருத்தரோட வம்புதும்புக்கும் போகாதவர்’னு ஒரு போர்டு எழுதி மாட்டினாக் கூட ஒருத்தரும் சீந்த மாட்டாங்க. நம்முடைய காலத்து மனிதன் என்பவன் நம் காலத்து வம்பு தும்புகளில் ஈடுபட வேண்டும். நம் காலத்து நல்லதை ஆதரிக்க வேண்டும். தீமையை எதிர்த்துப் போராட வேண்டும். ஒதுங்கி நின்றுகொண்டிருப்பவன் உயிருள்ளவனே அல்ல! நீச்சல் தெரிந்தவர்கள் கரையிலே நிற்கக் கூடாது.”

     “உங்களுக்குள்ளே என்ன சண்டை? மனஸ்தாபமா? விரோதமா? நான் தெரிஞ்சுக்கலாமா அதை?”

     “நீங்க இப்போ யாரைப்பற்றி, எந்தச் சண்டையைப் பற்றிக் கேட்கிறீங்க சார்?”

     “உனக்கும் கனகராஜுக்கும் ஆகாமற் போனதைப் பற்றித்தான் கேட்கிறேன்.”

     “அதுதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீங்களே சொன்னீங்களே சார், அவர் ஒருத்தரோட வம்புதும்புக்கும் போகாதவர்னு. அப்படிப்பட்ட பரம சாத்வீக புருஷரோட எனக்கென்ன சார் சண்டை வரப்போகிறது?”

     “நீ என்னிடம் மறைக்கப் பார்க்கிறாய்?”

     “எதை மறைக்கப் பார்க்கிறேனாம்...?”

     “உனக்குக் கனகராஜ் மேல் என்ன கோபம் என்பதற்கான காரணத்தை...?”

     “ஒருவரை நாம் கோபித்துக் கொள்ள அவர்மேல் நமக்கு ஏதாவது உரிமை இருக்க வேண்டுமே? அப்படி எந்த உரிமையும் கனகராஜ் மேல் எனக்கு இருந்ததில்லையே சார்.”

     “இரண்டு பேரும் நெருங்கிப் பழகினீர்கள் என்பது காம்பஸ் முழுவதுமறிந்த உண்மை.”

     “பழக்கங்கள் எல்லாம் சிநேகிதங்கள் ஆகிவிட முடியாது.”

     “சிநேகிதங்கள் எல்லாம் காதலாகி விட முடியாது என்று கூட இன்னொரு வாக்கியத்தையும் சேர்த்து இப்போது நம் இஷ்டப்படி சொல்லி விடலாம் அம்மா! ஏதோ இந்த யூனிவர்ஸிடி டீன் என்கிற முறையிலே ரெண்டு ஸ்டூடண்ட்ஸ் நட்பு முறிஞ்சு மனசு வேதனைப் படறதை நான் விரும்பல்லே. கனகராஜ் ரொம்ப நொந்து போயிருக்கான். எங்கிட்டச் சொல்லவே செய்தான்.”

     “நான் அப்படி எதற்கும் நொந்து போகலை சார்! எப்பவும் போல உற்சாகமாகத்தான் இருக்கேன்னு அவரைப் பார்த்தா நீங்க தாராளமாகச் சொல்லலாம் சார்.”

     “டீன்கிற முறையிலே இப்போ அதிகாரத் தோரணயோட நான் பேசலைம்மா! கொஞ்சம் அவுட் ஆஃப் தி வேயாக உங்கிட்டச் சொல்றேன்னு வச்சுக்க... கனகராஜோட ஃப்ரண்ட்ஷிப்பை நீ விட்டுடப் படாது.”

     “உங்க யோசனையை விட இதிலே என்னோட ‘சாய்ஸ்’ தான் இன்னும் முக்கியம். நீங்க சொன்னீங்களே கனகராஜ் ‘வம்புதும்புக்குப் போகாதவன்’னு அது நூற்றுக்கு நூறு நிஜம். நடுத்தெருவிலே என்னை மாதிரி ஒரு பெண்னை நாலுபேர் முரடர்கள் கையைப் புடிச்சு இழுத்தாக் கூட ‘நமக்கேன் வம்பு?’ன்னு ஒதுங்கிப் போயிடற அளவுக்கு அத்தனை பெரிய சாது சார் அவர். அவ்வளவு பெரிய சாதுவை இந்தக் காலத்திலே எந்தப் பெண்ணுமே விரும்பமாட்டாள் சார்.”

     “நீ விரும்பினால் கனகராஜையே இப்போ இங்கே கூப்பிட்டனுப்பறேன். நேரேயே பரஸ்பரம் மனம்விட்டுப் பேசி நீங்க ஒருத்தருக்கொருத்தர் சமாதானப் படுத்திக்கலாம்.”

     “உங்களுக்கு அந்தச் சிரமம் எல்லாம் வேண்டாம் சார். சற்றுமுன் அவரையும் அவர் நண்பர் சுகவனம் என்கிற மெடிக்கல் ஸ்டூடண்டையும் நானே பல்கலைக்கழகப் பூங்காவில் கூடப் பார்த்தேன். நான் ஹலோ சொல்லியும் கனகராஜ் என்கூடப் பேசவில்லை. கூச்சப்பட்டுக் கொண்டு ஒதுங்கிப் போய்விட்டார். என்னுடன் அக்ரி மாணவர் வீராசாமி இருந்ததுதான் காரணம் சார். மேலும் இதெல்லாம் எங்கள் சொந்த விவகாரம். ஒரு டீன் தலையிட்டு இதில் ஆகப் போவது எதுவுமில்லை சார்!”

     “ஏமாற்றத்தில் கனகராஜூக்கு வாழ்க்கையே வெறுத்து விடுமோ என்று நான் பயப்படுகிறேன் அம்மா! அவன் ரொம்ப விரக்தியாயிருக்கிறான். ஒரு மாறுதலுக்காக நாளைக்கு சேலம் போகிறான். நீ விரும்பினால் தடுத்து நிறுத்தலாம்.”

     “வேண்டாம்! தடுக்காதீர்கள். நான் அதை விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்...”

     “இந்த ஏமாற்றம் கனகராஜின் படிப்பு, எதிர்காலம், வாழ்வு எல்லாவற்றையுமே பாதிக்கப் போகிறது. அவனது குடும்பத்தில் அக்கறையுள்ளவன் என்ற முறையில்தான் நான் உன்னைக் கூப்பிட்டுப் பேசுகிறேன்.”

     “மன்னியுங்கள் சார் கூச்சமும் பயமும் உள்ள ஒரு கோழைக்காக என்னிடம் மறுபரிசீலனை எதுவும் இல்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதை நானே நாளைக் காலையில் மிஸ்டர் கனகராஜுக்கு ஒரு கடிதமாக எழுதியும் அனுப்பி விடுகிறேன். அதில் நீங்கள் என்னைக் கூப்பிட்டுப் பேசியதைப்பற்றிச் சொல்ல மாட்டேன். அதேபோல் நீங்கள் ஒருவேளை அவரைக் கூப்பிட்டுப் பேசினாலும் என்னோடு பேசியது பற்றி அவரிடம் எதுவும் கூற வேண்டியதில்லை. மிஸ்டர் கனகராஜுக்காக நான் இரக்கப்படுகிறேன். இரக்கப்படுவது மட்டும் அவருக்குப் போதாது. ஆனால் இரக்கத்தையும் அதுதாபத்தையும் தவிர நான் அவருக்குத் தர வேறு எதுவுமில்லே சார்!”

     “உன் பதில் எனக்குப் பெரிய ஏமாற்றம்தான் அம்மா...”

     “ஒரு டீன் என்ற முறையில் இது உங்களுக்கு ஓர் அநுபவம் மட்டும்தான். கனகராஜின் குடும்பத்துக்கு வேண்டியவர் என்ற முறையில் வேண்டுமானல் ஏமாற்றமாயிருக்கலாம். அதை நீங்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் சார்!”

     அவர் அவளுக்கு விடை கொடுக்கும் போது இரவு அதிக நேரமாகியிருந்தது. லேடீஸ் ஹாஸ்டல் கேட்டில் உள்ளே விடத் தகராறு செய்தால் தம்மைப் பார்க்க வந்ததாகச் சொல்லிக் கொள்ளும்படி அவளிடம் முகப்புவரை அவளை வழியனுப்ப வந்தபோது சொன்னார் அவர்.

     அவள் டீன் குடியிருப்பிலிருந்து வெளியேறிச் சென்றாள். சுற்றி வளைத்து டீன் உரையாடலைத் தொடங்கிய விதமும் கடைசியிலே வேறு வழியின்றி நேரடியாகக் “கனகராஜைக் கை விட்டு விடாதே! அவன் உடைந்து தூள் தூளாகி விடுவான்” என்ற கோரிக்கையில் கொண்டு வந்து முடித்த விதமும் அவள் முற்றிலும் எதிர்பார்த்திராதவை. வேறு ஏதாவது அரட்டல் மிரட்டல் விவகாரத்திற்காகவே டீன் கூப்பிட்டனுப்பியிருப்பார் என்றுதான் கோபத்தோடு அவள் கிளம்பி வந்திருந்தாள். வந்தபின் கோபத்தை விடப் பரிதாபமே அவளுக்குள் அதிகமாகியிருந்தது.

     கனகராஜின் தந்தை புரோ-சான்ஸ்லரின் நண்பர், கோடீசுவரர் என்பனபோல் டீன் மூலம் அப்போது தெரிந்து கொண்ட உண்மைகள் அவள் அபிப்ராயத்தில் எந்த மாறுதலையும் உண்டாக்கவில்லை என்றாலும் டீன் எதற்காக மெனக்கெடுகிறார் என்பதை ஊகித்துக் கொள்ள முடிந்தது. டீனின் போக்கு அன்று மிகமிகச் சுபாவமாகவும் ஏறக்குறையக் கெஞ்சுவது போலவும் அமைந்திருந்தது. அறைக்குத் திரும்பியதும் கனகராஜுக்கே ஒரு சுருக்கமான கடிதத்தை எழுதி மெஸ் பையன் மூலம் காலையில் கொடுத்தனுப்ப முடிவு செய்தாள் சுலட்சணா.

     அந்தக் கடிதம் போன்றதொரு கோபமான அதிர்ச்சியைக் கனகராஜுக்குத் தர அவள் விரும்பவில்லை என்றாலும் மேலும் மேலும் அவன் யார் மூலமாவது தன்னிடம் சமரசப் பேச்சுக்கு முயலக்கூடாது என்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடவே அதை எழுதினாள்.

     மாலையில் பூங்காவில் தான் மறுபுறம் வீராசாமியோடு அமர்ந்திருப்பது தெரியாமல் அவன் அந்தப் பக்கத்திலிருந்து கொண்டு சுகவனத்திடம் பேசிய பேச்சுக்களை எல்லாம் அவள் கேட்டிருந்தாள். அதனால் டீன் சொல்லிய எதிலும் அவள் சந்தேகப்படவே இல்லை. டீன் கூறிய பரிதாபகரமான விரக்தி நிலையில்தான் கனகராஜ் இருந்தான் என்பதை அவளே உணர்ந்திருந்தாள். ஆனாலும் அவனுக்கு அவள் எழுதிய கடிதத்தில் ஈரமோ ஈவு இரக்கமோ எதுவும் காண்பிக்கப் படவில்லை, தீர்மானமாக அவனுக்குப் புரியும்படி எல்லாம் எழுதிவிட்டாள்.

     இரக்கத்துக்காகவோ, சிபாரிசுக்காகவோ ஒரு தொடை நடுங்கியை விரும்புவது என்பது அவளால் முடியாத காரியம். பணத்துக்காகவோ, பதவிகளுக்காகவோ, பாரம்பரியப் பெருமைக்காகவோ ஒருவரைக் காதலிப்பது என்பது அவளது கொள்கைக்கு ஒரு சிறிதும் ஒத்துவராத விஷயம். ஆனால் இவைகளை எல்லாம் விவரிக்காமல் சுருக்கமாகவே கனகராஜுக்கு எழுதியிருந்தாள் அவள்.

     மறுநாள் காலையில் அவன் சேலம் புறப்படும் முன்பாக மெஸ் பையன் மூலம் தான் எழுதிய கடிதத்தைக் கனகராஜுக்குக் கொடுத்தனுப்புவதற்குத் தயாராக இரவே உறையில் போட்டு வைத்து விட்டுத்தான் படுத்தாள்.

     நெடுநேரம் வரை அவளுக்கு உறக்கம் வரவில்லை. சுபாவத்தில் மிகவும் கோழையாகிய கனகராஜை இந்தக் கடிதம் என்ன பாடுபடுத்தும் என்று நினைத்தபோது அவளுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. அவனால் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதுதான்.

     டீன் சொல்லியது போல் இந்த ஏமாற்றத்தைத் தாங்காமல் கனகராஜ் தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வது? என்பதை எண்ணியபோது அவள் உடல் சிறு நடுக்கத்தால் அதிர்ந்து குலுங்கி ஒய்ந்தது.

     என் தற்கொலைக்குச் சுலட்சணாவே காரணம் என்று அசட்டுத் தனமாக எழுதி வைத்துவிட்டு இறந்து தொலைத்தால் அதில் நம் தலை அநாவசியமாக உருளுமே என்றுகூட நினைத்தாள்.

     அடுத்த கணமே நினைப்பை வீராசாமியின் பக்கம் திருப்பினாள். வலது கையை இழந்து மூளியாகியும் தற்கொலையைப் பற்றியே எண்ணாமல் நம்பிக்கையோடு வாழ்க் காத்திருக்கும் அந்த ஏழைத் துணிச்சல்காரனை நினைத்துக் கொண்டபடி கனகராஜை நினைவிலிருந்து மெதுவாகவும், நிச்சயமாகவும் அகற்றி வெளியேற்றினாள்.



சுலட்சணா காதலிக்கிறாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12