4 எல்லாரும் சுலட்சணாவை மதித்துப் புகழ்ந்த போதுதான் கனகராஜ் அவள் தனக்கு மட்டுமே உரியவள் என்பது போல் உணரத் தலைப்பட்டான். அவள் மெல்ல மெல்ல, அவன் உணர்வுகளைப் பாதிக்கத் தொடங்கினாள். அவனிடமிருந்து அவள் விலகிச் செல்லச் செல்ல அவன் அவளருகே நெருங்கிச் செல்ல ஆசைப்பட்டான். அவளால் அவனைத் தவிர்க்கவும் முடியவில்லை. விரும்பவும் முடியவில்லை. மாற்றலாம் என்று முயல ஆரம்பித்தாள். அவன் மாறுவது கடினமென்று தோன்றியது. புதிதாகச் சிந்திப்பதற்குப் பயப்பட்டான் என்பதை விடப் புதிதாகச் சிந்திப்பவர்களையே பார்க்கக் கூடப் பயப்பட்டான் கனகராஜ். புதுமையே அவனுக்குப் பெரிய அலர்ஜியாக இருந்தது. அவள் மாக்ஸிம் கார்க்கியின் அன்னை, ஆண்டன் செகாவின் சிறுகதைகள் என்று தனக்குப் பிடித்த புத்தகங்களை அவனிடம் சொன்னால் அவன் ‘ஹெரால்ட் ராபின்ஸ்’ மட்டுமே தனக்குப் பிடிக்கும் என்றான். பல்கலைக்கழக விவாத மன்றத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் ஏற்றது ‘கலப்புப் பொருளாதாரமே!’ என்ற தலைப்பில் அவன் விவாதித்தான். ‘பொதுவுடைமையே’ என்று அவள் விவாதித்த வேகத்தைக் கண்டு அவன் பயந்தே போனான். அவளுக்கு நல்ல விவாதத் திறமையும் ஆணித்தரமாக அடித்துப் பேசும் ஆற்றலும் இருந்தன. அவனிடம் துண்டு துண்டாகச் சில உதிரிக் கருத்துக்கள் மட்டும் இருந்தன. அவற்றை இணைத்துத் தொகுத்து வடிவம் தந்து கோவையாகப் பேசத் தெரியாமல் விழித்தான் அவன். பரீட்சைகளில் மட்டும் பிரமாதமாக எழுதி முதல் மார்க் வாங்கினான் அவன். பொது வாழ்விலும் மற்ற மாணவர்களிடமும் முதல் மதிப்பும் மதிப்பெண்களும் அவளுக்குத்தான் அதிகம். ஒரு சிறிய பிரசங்கம் அல்லது அறிக்கை அந்தப் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்று சேர்த்துத் தன் முன்னால் நிறுத்திவிடும் ஆற்றல் அவளுக்கு இருந்தது. அவனோ தானும் பிறருடன் அதிகம் பழகுவதில்லை. பிறரையும் தன்னோடு பழகவிடுவதில்லே. ஒரே விதிவிலக்கு - சுலட்சணா மட்டும்தான் அவனோடு பழகினாள். அந்தப் பழகுதலில் உள்ள முரண்பாட்டை மற்றவர்கள் வினோதமாகப் பார்த்து ரசித்தார்கள். அவனோ ஒரு தொழிலதிபரின் செல்லப் பிள்ளை. அவளோ ஒரு தொழிற்சங்கத் தலைவரின் அருமைப் பெண். இவர்கள் நெருங்கிப் பழகுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேடை விவாதங்களில் அவன் அவளிடம் தோற்றான். மற்ற மாணவ மாணவிகள் முன் அவள் தலைவியாக எழுந்து நின்றாள். அவனோ அடையாளமே இல்லாத, சமர்த்தாகப் படிக்கிற யாரோ ஒரு பையனாக மட்டுமே இருந்தான். அவளிடம் தோற்கத் தோற்கத் தன்னை அவளுக்கு மிக அருகில் கொண்டு செல்லும் ஆர்வம் அவனுள் அதிகரித்தது. அவனை வெல்ல அவள் முயலவில்லை. அவளிடம் தோற்பதில் கூட அவன் மகிழ்வதற்குத் தொடங்கினான். அவளுடைய பிறந்தநாளை ஞாபகம் வைத்திருந்து அன்று மாலை பல்கலைக்கழகப் பூங்காவில் அவளைத் தனியே சந்தித்து ஒரு சிறிய வைர மோதிரத்தை அவளுக்கு அன்பளிப்பாக வழங்கினான் கனகராஜ். “தங்கம், வைரங்களை அணிவதில் எனக்கு விருப்ப மில்லை! ஆனால் எனக்கு விருப்பான ஒரு காரியத்துக்கு இதைப் பயன்படுத்தினால் உங்களுக்கு அதில் ஒன்றும் ஆட்சேபணை இராதே?” “ஆட்சேபணை இராது. உன் இஷ்டம்போலப் பயன் படுத்தலாம்.” “உடைமை உங்களுடையது என்பதால் கேட்டு அநுமதி பெற்று விடுவது நல்லது என்றெண்ணித்தான் கேட்கிறேன்.” “உனக்கென்று நான் முழு மனத்தோடு கொடுத்துவிட்ட பின் அப்புறம் அதை நீ என்ன வேண்டுமானால் செய்து கொள்ளலாம். மறுபடி அதற்கு என் அநுமதி தேவையே இல்லை சுலட்சணா!” அடுத்த வாரமே ஊனமுற்ற குழந்தைகளின் நல்வாழ்வுக்காகத் திரட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பொது நிதியில் சேர்ப்பதற்காக அந்த மோதிரத்தை ஒரு கூட்டத்தில் ஏலம் விட்டு மூவாயிரம் ரூபாய் திரட்டிக் கொடுத்து விட்டாள் சுலட்சணா. அவனுக்கு அது என்னவோ போலிருந்தது. சும்மா கேட்கிறாளே ஒழிய அந்த மோதிரத்தைத் தன் அன்பின் ஞாபகமாக அவளே கையில் அணிவாள் என்று எதிர்பார்த்தான் அவன். அவள் அப்படிச் செய்யாததில் அவனுக்குப் பெருத்த ஏமாற்றம் தான். அவளை அவனால் முழுவதுமாக இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளோ அவனை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள். அந்த மோதிரத்தை அவள் ஏலம் விட்ட அதிர்ச்சியிலிருந்து அவன் மீள அதிக நாளாயிற்று. அவனுடைய பிறந்த நாள் வந்ததும், பல்கலைக்கழகப் பொடானிகல் கார்டன் முகப்பில் இருந்த மில்க் பார்லரில் ஒரு ரோஸ்மில்க் வாங்கி அவனிடம் பருகக் கொடுத்தாள் அவள். அதற்கே அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். “நீ பத்துப் பைசாவுக்குக் கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்தால் கூட எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் சுலட்சணா!” “ஏன்? என்னால் அதற்கு மேல் எதுவும் முடியாது என்றா சொல்கிறீர்கள்? செய்ய முடிவதற்கும் செய்ய விரும்புவதற்கும் நடுவே ஒரு வித்தியாசம் இருக்கும்.” “புரிகிறது சுலட்சணா... நீ முடிந்ததைச் செய்கிற டைப் இல்லே. விரும்புகிறதைத்தான் செய்வாய் என்பது எனக்குத் தெரியும்.” “என் தந்தை உங்கள் தந்தையைப் போல் தொழிலதிபரோ செல்வந்தரோ இல்லை. தொழிலாளிகளோடு தொழிலாளியாகக் குடிசையில் வசிப்பவர். முடிந்ததைச் செய்யும் வசதி எனக்கில்லை.” காதலர்களைப் போல் அவர்கள் இருவரும் பல்கலைக்கழக எல்லையில் இடையிடையே சந்தித்துக் கொண்டாலும் இப்படிக் கருத்து மோதல்கள், கொள்கை உரசல்கள் அடிக்கடி அவர்கள் மத்தியில் ஏற்படுவதுண்டு. படிப்பது, மார்க் வாங்குவது, போஸ்ட் கிராஜுவேட்ஸ் லைப்ரரிக்குப் போய் இண்டேர்னல் அஸெஸ்மெண்ட் மார்க்குகளுக்காகப் புத்தகங்களை எடுத்துக் கரைத்துக் குடிப்பது இவை தவிர வெளியே புயல் வீசினாலும், பூகம்பமே ஏற்பட்டாலும், இடி விழுந்தாலும் கூடக் கவனம் கலையக்கூடாது என்றிருந்தான் கனகராஜ். அவளோ வெளியே துரும்பு அசைந்தாலும், யாருக்கு எங்கே என்ன சிரமம் என்று விரைந்து ஓடிச் சென்று பார்க்கவும், உதவவும் தயாராயிருந்தாள். பொதுக் காரியங்கள், வேலைகள் கிடைத்தால் அவள் அதில் தன்னைக் கரைத்துக் கொண்டு விட, தன்னை மறந்து விடப் பழகியிருந்தாள். அவனோ தன்னைத் தவிர மற்றெல்லாவற்றையும் பற்றி நினைத்துப் பார்க்கக் கூடப் பழகவில்லை. ஆனாலும் அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகினார்கள். இவர்கள் ஆருயிர்க் காதலர்களோ என்று பார்க்கிறவர்கள் மருண்டு வியக்கிற அளவுக்குப் பழகினார்கள். சந்தித்தார்கள். பேசிக் கொண்டார்கள். உதயா பல்கலைக்கழக அதிசயங்களில், விநோதங்களில் இது, முதன்மையானதாயிருந்தது. அரும்பு மீசையும் டி ஷட்டும், சுருள் முடியும், செலுலாய்ட் புன்முறுவலுமாக அவன் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தான். கொள்கைகளில், பழக்க வழக்கங்களில் அவள் அவனுக்கு நேர்மாறானவளாக இருந்தாள். அவனோடு மட்டுமில்லாமல் மற்றவர்களோடும் தோழமையோடு பழகினாள். இந்தத் தோழமையை அவன் எப்படிப் புரிந்து கொண்டானோ, புரிந்து கொள்ளவில்லேயோ, அவள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தாள். உணர்ந்து கொண்டிருந்தாள். உணர்ந்து தெளிந்து கொண்டுமிருந்தாள். ஒரு விடுமுறையின் போது பல்கலைக்கழகத்தை ஒட்டிச் சென்ற ஜி. எஸ்.டி. - அதாவது கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடிலிருந்து ஒரு கிலோமீட்டர் உள்ளே தள்ளி இருந்த ஓர் அரிஜன கிராமத்திற்குச் சாலை போட்டுக் கொடுக்கும் இலவச சேவையைத் திட்டமிட்டாள் சுலட்சணா. சமூக சேவைத் திட்டத்தின் கீழ் யூனிவர்சிடி நிர்வாகத்தைச் சம்பந்தப் படுத்தாமலே அவளாகப் பொறுப்பேற்று இதை மனிதாபிமான அடிப்படையில் ‘ஆர்கனைஸ்’ செய்தாள். நிறைய மாணவ - மாணவிகள் சேர முன்வந்திருந்தனர். யூனிவர்ஸிடி நிர்வாகமே இம்மாதிரி ‘சோஷியல் செர்வீஸ் லீக்’ என்று சமூக சேவைப் பணிகளைச் செய்யச் சொல்லி அதற்கு மார்க்குகள் போடச் செய்வது வழக்கம். ஆனால் அந்தச் சமூக சேவைப் பணி வெறும் கண்துடைப்பாகவே இருக்கும். யூனிவர்ஸிடி காம்பஸிற்குள் புதர்களை வெட்டி ஒழுங்கு செய்வது - புல்வெளிகளைச் சமன் செய்வது போன்று பல்கலைக் கழகத் தோட்டக்காரர்கள் செய்ய வேண்டிய வேலையை மாணவர்களிடம் ஓசியிலேயே வாங்கிக் கொண்டு - மார்க் போட்டு முடித்து விடுவார்கள். உண்மையில் ‘சோஷியல் செர்வீஸ் லீக்’ என்பது வெளி உலகின் பொதுப் பணிகள் எவற்றையாவது பிரதிபலன் கருதாமல் மாணவர்களைச் செய்ய வைப்பதே ஆகும். இதற்காக மாணவர்களின் கட்டணத்திலே கூட ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. அந்தத் தொகை மொத்தத்தில் வேறு எதற்கோ திருப்பி விடப்படுவதோடு பல்கலைக் கழக நிர்வாகம் செலவழித்துச் செய்ய வேண்டிய காரியங்களை மாணவர்களை வைத்தே முடித்துவிடுகிற சாதுரியமும் (கையா) டல் வல்லான் பிள்ளை போன்றவர்களிடம் இருந்தது. இதைப் பற்றிய புகார்கள் கிடைத்ததன் பேரில் யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் கூட உதயா பல்கலைக்கழகத்தை எச்சரித்திருந்தது. ஆனால் பெரும் பண வசதியும் மத்திய மாநில ஆளும் கட்சிகளில் செல்வாக்கும் கொண்டிருந்த உதயா பல்கலைக் கழகப் புரோ-சான்ஸ்லர் இதற்கெல்லாம் ஒரு சிறிதும் அஞ்சவில்லை. வழக்கம்போல் நிர்வாகம் மாணவர்களைக் கொண்டே காம்பஸுக்குள் புல்பிடுங்கவும், புதர் வெட்டவும், களை வெட்டவும் தூண்டி அதையே சோஷல் செர்வீஸாக ஆக்கி மார்க் போட்டு வந்தது. இதில் பச்சை மோசடிதான் நடந்து வந்தது. உண்மையாகவே சோஷியல் செர்வீஸ் செய்ய விரும்பிய சுலட்சணா போன்றவர்கள் வேறு ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. அவள் யாராலும் கவனிக்கப்படாத - மெயின் ரோடிலிருந்து உள் விலகி இருந்த - ஓர் அரிஜன கிராமத்துக்குச் சாலை போட உழைக்க முன்வருமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாள். அவளுடைய வேண்டுகோளுக்கு மாணவ மாணவிகளிடையே நல்ல ஆர்வத்தோடு கூடிய வரவேற்பு இருந்தது. போட்டி போட்டுக்கொண்டு அவளிடம் மாணவர்கள் முன் வந்து பேர் கொடுத்திருந்தார்கள். இத்தனைக்கும் பல்கலைக்கழக டீனும் ஆக்டிங் வி. சி. யுமான (கையா) டல் வல்லான் பிள்ளையிடமிருந்து சுலட்சணா அன் அஃபீஷியலாக ஆர்கனைஸ் செய்யும் இந்த சோஷியல் செர்வீஸ் ஏற்பாட்டை டிஸ்கரேஜ் செய்வது போல ஒரு சுற்றறிக்கை வேறு வந்து பல்கலைக்கழக நோட்டீஸ் போர்டுகளிலும் ஒட்டப்பட்டு விட்டது. ‘பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக நடத்தும் சோஷல் செர்வீஸ் பணிகள் முடிந்து இந்த ஆண்டிற்கான மதிப்பெண்களும் போடப்பட்டுவிட்டன. பல்கலைக்கழகம் நடத்தாமல் தனிப்பட்ட மாணவர்களோ, வெளி அரசியல் சக்திகளோ தலையிட்டு நடத்தும் எந்தச் சமூகப்பணி முகாம்களிலும் மாணவர்களோ, மாணவிகளோ கலந்து கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அப்படிப்பட்ட ஏற்பாடுகளில் இந்தப் பல்கலைக்கழகம் எந்தப் பங்கும் பொறுப்பும் ஏற்காது என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறோம்’ என்று கடல் பிள்ளை அனுப்பியிருந்த சர்க்குலர் சுலட்சணாவை எரிச்சலூட்டினாலும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவளுடைய சமூகப்பணி முகாமில் பங்கேற்க இசைந்து பேர் கொடுத்திருந்தவர்களும் இந்தச் சுற்றறிக்கை பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. இந்த அறிக்கை வருமுன்பே சுலட்சணாவிடம் சாக்குப் போக்குச் சொல்லித் தப்பித்துக் கொள்ள நினைத்திருந்த கனகராஜ் இந்த அறிக்கையும் வந்து விட்ட பிறகு நிச்சயமாகத் தப்பித்து ஒதுங்கிக் கொண்டு விடவே நினைத்தான். சுலட்சணா அவனை வற்தபுறுத்தவில்லை. “வர்க்க அடிப்படையில் சிந்தித்தால்கூட நீங்கள் இந்த முகாமில் உழைக்க முன்வர மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் சார்ந்திருக்கும் வர்க்க அளவு வேறு மாதிரியானது.” “வர்க்கம் என்று ஒன்றுமில்லை சுலட்சணா! ஏற்காடு மலையில் எங்களுக்கு ஒரு பங்களா இருக்கிறது. இந்தக் கோடைக்கு இதமாக வெயிலே தெரியாமல் ஜிலுஜிலு என்றிருக்கும். அங்கே போய்த் தங்கிப் படிக்கலாம் என்று நினைக்கிறேன். விரும்பினால் நீ கூட என்னோடு வரலாம். உன் வருகையால் ஏற்காடு எனக்கு இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்.” “எனக்கு வேண்டிய குளிர்ச்சி இங்கேயே இருக்கிறது கனகராஜ்! விடுமுறைக்குள் இந்த ஒரு கிலோமீட்டர் தொலைவு சாலைபோடும் வேலையை நானும் மற்ற மாணவர்களும் செய்து முடிக்க வேண்டும். குட் பை! நீங்கள் போகலாம்” என்றாள் சுலட்சணா. |