3

     அந்த ஆண்டின் தொடக்கத்தில் உதயா பல்கலைக்கழக லேடிஸ் ஹாஸ்டலில் ஒரு பிரச்னை ஏற்பட்டது.

     விடுதி அறைகளிலிருந்த பாத்ரூம்களுக்குத் தண்ணீர் சப்ளை சரியாக இல்லை. வழக்கமாக ஜூன் கடைசியிலோ ஜூலை தொடகத்திலோ பெய்யும் கோடை மழைகள் தவறி விட்டதனால் லேடீஸ் ஹாஸ்டல் ஓவர்ஹெட் டேங்குக்குத் தண்ணிர் மேலேறவில்லை. ஹாஸ்டலின் பின்புறமுள்ள இரு கிணறுகளுக்கு வந்துதான் எல்லாப் பெண்களும் நீர் இறைத்துக் குளிக்க வேண்டியிருந்தது. முன்புறம் மதிற் சுவர் இருந்தது போல் பின்புறம் மதிற் சுவர் இல்லாததனால் மைதானத்தில் விளையாடும் மாணவர்கள், காலையில் வாக் போகும் பேராசிரியர்கள் இவர்கள் காணும்படி திறந்த வெளியில் கிணற்றடில் மாணவிகள் குளிக்க நேர்ந்தது.

     ஒருநாள் இரண்டு நாள் இந்த ஏற்பாடு என்றால் எப்படியோ சமாளித்து விடலாம். ஆனால் பலநாள் இதே நிலை நீடித்தது. மோட்டார் மூலம் ஓவர்ஹெட் டேங்குக்குத் தண்ணீர் இறைக்கும் கிணறுகளை இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்தினால் பிரச்னையைச் சமாளித்துவிட முடியும். ஆயினும் அதைச் செய்யாமல் பல்கலைக் கழக நிர்வாகம் காலதாமதப்படுத்தியது. வி. சி., வார்டன், ரிஜிஸ்திரார் எல்லாரையும் போய்ப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனார்கள் மாணவிகள். காரியம் ஒன்றும் நடக்கவில்லை.

     சுலட்சணா உடனே விடுதி மாணவிகளை ஒன்று திரட்டினாள். ‘ஆர்கனைஸ்’ செய்வதில் எப்போதுமே அவள் கெட்டிக்காரி.

     “நமது உரிமையை நாம் அடைய ஒவ்வொருவராகப் பார்த்துக் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருப்பானேன்? ஒரு போராட்டத்தைத் தொடங்கினால் தான் நம் கஷ்டத்தை அவர்களுக்குப் புரிய வைக்க முடியும்.”

     சில மாணவிகள் ஒப்புக்கொண்டார்கள். வேறு சிலர் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கினார்கள். கால வரையறையற்ற உண்ணாவிரதத்துக்குத் தலைமை ஏற்று நடத்த முன்வந்தாள் சுலட்சணா.

     அந்தப் பல்கலைக்கழக வி. சி. அயல் நாட்டுப் பிரயாண வெறியர். மெக்ஸிகோ, ஜப்பான்,ஜெர்மனி என்று சதா பறந்து கொண்டேயிருப்பார்.

     ஆக்டிங் வி. சி. வம்பில் சிக்காமல் பதில் சொல்லி மழுப்புவதையே ஒரு கலையாகப் பயின்றவர். அப்போதும் துணைவேந்தர் பொறுப்பில் தற்காலிகமாக இருந்த ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர் ஆடல் வல்லான் பிள்ளை ஒரு முடிவும் எடுக்கமுடியாமல் திணறினார். இவருக்குக் (கையா) டல் வல்லான் பிள்ளை என்று ‘டல் பிள்ளை’ என்றும் வித விதமான பெயர்கள் ஏற்பட்டிருந்தன.

     இவருடைய வகுப்புகள் பெரும்பாலும் ‘டல்’ அடிப்பதால் மாணவர்களிடம் டல் பிள்ளை - என்று தந்தி விலாசம் போல் ஒரு பெயராகவும் பிரபலகிமாமாயிருந்தது. டல் பிள்ளை தன் பெயக்கேற்ப லேடிஸ் ஹாஸ்டல் தண்ணிர்ப் பஞ்சத்தைப் பற்றி கண்டு கொள்ளாமல் ‘டல்’லாக விட்டுவிட்டார். வேறு வழியின்றி மறுபடி ரிஜிஸ்திரார், யூனிவர்சிடி அட்மினிஸ்டிரேடிவ் ஆபீஸர் ஆகியோரை போய்ப் பார்த்தால், “கொஞ்சம் பொறுத்து அட்ஜஸ் பண்ணிக்குங்க. வி. சி. திரும்பி வந்துறட்டும்” என்றார்கள்.

     “வி. சி. வந்து மட்டும் என்ன சார் பண்ணிடப்போறாரு? ஒரு வாரம் இங்க தங்கிட்டு மறுபடி ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் வி. சி. ஸ் கான்ஃபரன்ஸ்னு எதுக்காவது புறப்பட்டுப் போயிடப் போறாரு” என்றாள் சுலட்சணா. அதற்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

     பல்கலைக் கழக நிர்வாக அலுவலகத்தின் முகப்பில் செக்கச் செவேலென்று பூத்துச் சொரிந்திருந்த குல்மோகர் மரத்தடியில் சுலட்சணா தலைமையில் உண்ணாவிரதம் ஆரம்பமாயிற்று. உண்ணாவிரதம் இருந்த மாணவிகளின் முன்பு ஏராளமான விளம்பர அட்டைகளில் கோரிக்கை வாசகங்கள் பல எழுதி வைக்கப்பட்டிருந்தன.

     ‘தண்ணீர் இல்லாமல் மாணவிகளைக் கண்ணீர் சிந்த வைக்காதே!’

     ‘பல்கலைக் கழகம் இந்தியாவில்-வி. சி. வெளி நாட்டிலே.’

     ‘தண்ணீருக்குத் தவிக்கிறோம்! தட்டிக் கேட்க ஆளில்லை.’

     ‘பல்கலைக் கழகமா? பாலைவனக் கலகமா?’ போன்ற அட்டைகள் பெரிது பெரிதாக எழுதி வைக்கப்பட்டிருந்தன.

     முதல் நாள் உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்தவுடன் கலைப்பிரிவு மாணவர்களில் இருபது பேர் பக்கத்து மரத்தடியில் மாணவிகளுக்குத் தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் அநுதாப உண்ணாவிரதம் தொடங்கி ஒத்துழைத்தனர்.

     அந்தப் பத்துப் பேரில் கனகராஜ் இல்லை என்பது சுலட்சணாவுக்கு மிகவும் ஏமாற்றமளித்தது. அவன் உண்ணாவிரதமிருக்க முன்வராதது கூடப் பரவாயில்லை. உண்ணாவிரத மிருப்பவர்களை வந்து பார்த்தால் கூடத் தன் மீது கெட்ட பெயர் வந்து ஒட்டிக் கொண்டு விடும் என்று பயந்தாற் போல ஒதுங்கினான் கனகராஜ். அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கக் கூட முன் வரவில்லை.

     மூன்றாவது நாள் மாணவிகளுக்கு ஆதரவாகப் பொறியியல் பிரிவு மாணவர்கள் எம். டெக். படிப்பவர்கள் மற்றொரு மரத்தடியில் உண்ணாவிரத்தைத் தொடங்கினர்கள்.

     யூனிவர்ஸிடி அட்மினிஸ்டிரேடிவ் ஆஃபீஸின் முகப்பில் பெரும்பகுதி உண்ணாவிரத கோஷ்டிகளால் கேராவ் செய்யப்பட்டது போல ஆகிவிட்டது. சுற்றி வளைத்து உட்கார்ந்து விட்டார்கள்.

     நான்காவது நாள் மெடிகல், விவசாயப்பிரிவு மாணவர்களும் சேரவே பிரச்னை பெரிதாகிவிட்டது. உண்ணாவிரதம் பெரியதாக விசுவரூபம் எடுத்தது.

     சுலட்சணாவைப் பசியும் வாட்டமும் வாழை நாராக ஆக்கியிருந்தன. அவளருகே உண்ணுவிரதத்துக்கு உட்கார்ந்திருந்த மணிமேகலை என்ற சக மாணவி ஒருத்தி “சுலட்சணா! சினிமாக் கதாநாயகன் மாதிரி உங்கூட ஒரு ஸ்டேண்ட் சதா சுத்திண்டிருப்பானே, அவன் மட்டும் உன்னை வந்து பார்க்கவே இல்லையேடி? லீவா? அல்லது அவன் ஊரில் இல்லியா?” என்று அவளையே கேட்டபோது சுலட்சணாவுக்கு அப்படியே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது.

     கனகராஜ் ஒரு முறைக்காகக் கூட உண்ணாவிரதமிருந்த மாணவிகளை வந்து பார்க்காதது சுலட்சணாவுக்கு எரிச்சலூட்டியது. மற்ற மாணவிகளைப் பற்றிக் கவலை இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் தன்னைப் பார்க்கக் கூட அவன் வரவில்லை என்பது அவளுள் மிகவும் உறுத்தவே செய்தது. ஒரு ஒப்புக்காகக் கூட அவன் அதைச் செய்ய முன் வராதது அவளுக்கு வியப்பை மட்டுமில்லாமல் அதிர்ச்சியையும் அளித்தது.

     ஸ்டிரைக், உண்ணாவிரதம், ஹர்த்தால், ஆர்ப்பட்டங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு ‘இண்டேர்னல் அஸெஸ்மெண்ட், மார்க்கு’களை மிகமிகக் குறைத்துவிடச் சொல்லி ஆக்டிங் வி. சி. ஓர் இரகசியச் சுற்றறிக்கை எல்லா இலக்காக்களுக்கும் அனுப்பியிருக்கிறார் என்று மாணவ மாணவிகளிடையே பரவலாக ஒரு பேச்சு உண்டு. ஆனால் அது வெறும் பூச்சண்டி காட்டும் ஏற்பாடாகப் பரப்பப்பட்ட வதந்தியே ஒழிய உண்மையில்லை. கனகராஜ் முன்பு ஒருமுறை இதை அவளிடம் சொல்லிப் பயமுறுத்தியபோதுகூட அவள் இதை நம்பவுமில்லை. ஏற்கவுமில்லை.

     “உங்களைப் போன்ற புத்தகப் புழுக்களும், பயந்தாங் கொள்ளிகளும் சுயநலத்திற்காகவே முயற்சி செய்து திட்டமிட்டுப் பரப்புகிற வதந்தி இது உண்மையில் அப்படி எதுவும் கிடையாது” என்று சுலட்சணாவே அப்போது அவனிடம் மறுத்திருந்தாள். இப்படி நினைத்த கனகராஜுக்காக அவள் பரிதாபப்பட்டாள்.

     சுலட்சணாவின் உண்ணாவிரதத்தை உள்ளுரின் பிரமுகர் ஒருவர் வந்து பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். பல்கலைக்கழக நிர்வாகம் பணிந்தது. உடனடியாகக் கிணறுகளை ஆழப்படுத்தி ஒவர் ஹெட் டேங்குக்கு நீர் ஏற்ற ஒப்புக் கொண்டார்கள். மாணவர்கள் முன்னிலையில் ஆக்டிங் வி. சி. ‘டல ்பிள்ளை’ இதற்கு உறுதி கூறினார்.

     உண்ணாவிரதம் முடிந்த பின்பும் கூட கனகராஜ் அவளைச் சந்திக்க வரவில்லை. அவளுக்கும் ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் பலருடைய பாராட்டுக்களிலும், மாணவ மாணவிகளின் புகழிலும் அவன் வராதது பற்றிய ஏமாற்றம் மறந்து விட்டது. இந்தப் போராட்டம் பல்கலைக் கழக வட்டாரத்திலும், மாணவர்களிடையேயும் அவள் அந்தஸ்தை உயர்த்தி விட்டது. அவள் ஒரு தலைவியாக உயர்ந்துவிட்டாள் அங்கே.

     அன்று பகலில் வகுப்பில் கனகராஜ் தவிர்க்க முடியாமல் அவளைச் சந்திக்க நேர்ந்து விட்டது. போராட்டம் முடிந்து அப்போதுதான் முதல் முதலாக வகுப்புக்களுக்கு மாணவிகள் வருகிறர்கள். கனகராஜின் சம்பிரதாயமான அநுதாப விசாரணை ஆரம்பமாயிற்று.

     “ரொம்ப இளைத்து வாடிப் போய் விட்டீர்கள் சுலட்சணா! உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள், ப்ளிஸ் டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்.” பொது இடங்களில் அவளை நீங்க, வாங்க என மரியாதைப் பன்மையில்தான் அவன் அழைத்தான்.

     “உங்கள் அநுதாபத்துக்கும் அன்புக்கும் நன்றி. நான் பொதுக் காரியங்களுக்காக உழைக்கிறபோது என் உடம்பு, என் செளக்கியம், என் நன்மை என்று பார்ப்பதில்லை. பொது நன்மையை மட்டும்தான் பார்ப்பது வழக்கம்! பொது நன்மையே என் இலக்கு.”

     “பொது நன்மை என்ற பெயரில் நமது படிப்பு, நமது உடல் நலம் எல்லாம் கெட்டுவிட்டால் நம்முடைய பெற்றோர்களுக்கு யார் பதில் சொல்வது? யோசித்தீர்களா?”

     “என் பெற்றோர்களைப் பொறுத்தமட்டில் இதற்கு அவசியமே இராது மிஸ்டர் கனகராஜ்! என் தந்தையைப் பொறுத்தவரை அவர் பொது நன்மையில் சொந்த நன்மைகளைக் கரைத்தே வாழ்ந்தவர். மற்றவர்கள் போராடும் போது மார்க்குகளுக்காகப் பயந்து ஒதுங்குகிற மகளை அவர் விரும்ப மாட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

     “எனக்குப் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் எல்லாம் அறவே பிடிப்பதில்லை. கல்விக்கூடங்களுக்குள் அரசியலைக் கொண்டு வரும் வீண் வம்பு வேலைகள் இவை.”

     “ஹஸ்டல் ஃபீஸ் என்று மாதா மாதம் ஏராளமாகப் பணம் கறந்துவிட்டுக் குளியலறையில் சொட்டுத் தண்ணீர் கூட வர வழியில்லாமல் கிணற்றடியில் திறந்த வெளியில் பிறர் வேடிக்கை பார்க்கும்படி குளிக்கச் சொன்னால் யார் தான் போராடாமல் இருப்பார்கள்? கடமைகளைச் செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உரிமைகளுக்காகப் போராடுவதும். உரிமைகளுக்காகப் போராடாதவர்கள் மனிதர்களே இல்லை”.

     “படிக்கிறவர்களுக்குப் பணிவும் கல்வி நிறுவனத்தின் மேல் மரியாதையும் வேண்டும் என்கிறேன் நான்.”

     “எந்தப் பணிவும், எந்த மரியாதையும் ஒரு வழிப்பாதையில்லை. மரியாதையற்றவர்கள் மேல் செலுத்தும் மரியாதை அவமானகரமானது என்று நினைக்கிறவள் நான்.”

     “இந்தப் போராட்டத்தின் மூலம் நன்றாகப் படிக்கிற மாணவியாகிய நீங்கள் ‘ரேங்க்’ வாங்கும். வாய்ப்பை இழக்கப் போகிறீர்கள்.”

     இதைக் கேட்டுச் சுலட்சணாவுக்குக் கோபமே வந்து விட்டது.

     “மிஸ்டர் கனகராஜ்! இங்கே படிக்கிற பெண்களின் மானம் மரியாதை என்பவை நான் ஒருத்தி ‘ரேங்க்’ வாங்குவதைவிட மிகவும் அத்தியாவசியமான விஷயங்கள். பிறர் கூடி வந்து வேடிக்கை பார்க்கிற அளவு லேடிஸ் ஹாஸ்டல் பெண்களைத் திறந்த வெளியில் குளிக்க வைத்த நிர்வாகத்தை எதிர்ப்பது சரியா, நான் ரேங்க் வாங்குவது சரியா என்றால் எனக்கு ரேங்க் வாங்குவது பெரிய காரியமே இல்லை.”

     “மன்னியுங்கள்! உங்கள் மேலுள்ள பிரியத்தில் நான் கொஞ்சம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பேசிவிட்டேன் போலிருக்கிறது.”

     அப்போது அவள் குரலில் சூடு ஏறியதைக் கண்டு கனராஜ் தணிந்துபோய் மன்னிப்புக் கேட்டான். அவன் இப்படி மன்னிப்புக் கேட்டதைக் கண்டு அவளுக்கு அவன் மேல் இரக்கமாகக்கூட இருந்தது. அப்பாவியாகிய அவனைப் பொதுக் காரியங்களில் அக்கறை, சமூக ப்ரக்ஞை, பிறர் நலச் சிந்தனை ஆகியவை கொஞ்சமும் இல்லாத கட்டுப் பெட்டியாக வளர்த்துள்ள அவன் குடும்பத்தினர் மேல்தான் அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.

     இவன் எடுப்பாய் இளமையாய் அழகாயிருக்கிறான். நல்ல உயரம், நல்ல நிறம், அரும்பு மீசை, புன் முறுவல் திகழும் மலர்ந்த முகம் எல்லாம் இருந்தும் இவனிடம் இருதயமே இல்லையே? இருதயமே இல்லாதவனிடம் இத்தனயும் இருந்தும் என்ன பிரயோசனம். தான் செய்தது தவறு என்று கூட இவனுள் உறைக்கவில்லையே! முழு யூனிவர்ஸிடியும் மாணவிகளின் உண்ணுவிரதப் போராட்டத்தில் அநுதாபம் கொண்டு அவளுக்குப பக்கபலமாக அநுதாப உண்ணாவிரதம் என்று வந்து போராட்டத்தில் கலந்து கொண்டபோது இவன் சும்மா அந்த மரத்தடிக்கு வந்து உபசாரமாக ஒரு வார்த்தை கூடச் சொல்லிவிட்டுப் போகவில்லையே? போராட்டம் நடத்துகிற நூற்றுக்கணக்கானவர்களின் பக்கம் தலையைக் காட்டினால் நிர்வாகத்தினரும் மார்க் போடுகிற ஐந்தாறு பேராசிரியர்களும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து அவன் ஒதுங்கி ஒளிந்தது மிக மிகக் கேவலமான காரியமாக அவளுக்குத் தோன்றியது. அவள் பார்வையில் அவனுடைய இமேஜ் ஒரு புழுவாகக் குறுகிச் சிறுத்தது.

     அந்த வாரம் வகுப்பில் ஒரு பேராசிரியரே பேச்சு வாக்கில் அவளைக் குறிப்பிட்டுத் தம்முடைய மனப்பூர்வமான பாராட்டுக்கக்ளத் தெரிவித்தபோது கனகராஜுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவள் அவனை வெற்றிப் புன்முறுவலோடு பார்த்தாள்.

     பொருளாதாரத்தில் முதல் தர மதிப்பெண் பெற்ற அவனைப் பாராட்டுவதற்குப் பதில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற அவளைப் பாராட்டினார் பேராசிரியர். “படிப்பில் கவனக்குறைவால் தான் இப்படிப் போராட்டங்கள் வரும் என்பதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். உரிமை உணர்வுள்ள யாரும் இப்படிப் போராடி நியாயம் பெறத்தான் முடிவு செய்வார்கள். இதில் தவறோ அத்து மீறலோ சிறிதும் இல்லை. இதை ‘ஆர்கனைஸ்’ செய்த நேர்த்திக்காக மிஸ் சுலட்சணாவுக்கு என் பாராட்டுக்கள்” என்றார் அந்தப் பேராசிரியர். கனகராஜும் வகுப்பில் இருந்தான். அப்போது அங்கு எல்லாரும் எதற்காகவோ தன்னையே பார்ப்பது போல் அவன் உடம்பு கூசியது.



சுலட்சணா காதலிக்கிறாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12